இப்படி இருவரும் சொல்ல தமயந்தி கவலையுடன் பார்த்தார் அவர்களை. குருமூர்த்தி ‘விட்டுவிடு’ என்பதை போல தலையசைத்தார்.
“நீ என் மாமனார்கிட்ட பேசு?…” என்று குருஆர்யன் பரத்திடம் சொல்ல,
“விடமாட்டானே…” என்று முனங்கினான் பரத்.
அவன் விளையாடுகிறான் என்று தெரிந்து குருமூர்த்தி புன்னகையுடன் அமர்ந்துவிட்டார்.
‘விட்டா இவன் குடும்பத்துக்குள்ளவே குழப்பம் பண்ணிருவான். எனக்குன்னு கூட வந்து பிறந்திருக்கான் பாரு?’ என நினைத்துக்கொண்டே,
“இப்ப கால் பன்றேன் ஆரி. அதுக்கெதுக்கு உன் மாமனார், என் மாமனார்ன்னு பிரிச்சு பேசனும்? எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு. எனக்கெதுக்கு இந்த பன்னு? இந்தா போட்டுட்டேன்…” என்று நரசிம்மனுக்கு அழைத்தவன்,
“ஹலோ மாமா…” என்றதும்,
“அடடே பெரிய மாப்பிள்ளையா?…” என்றார் நரசிம்மன்.
“ஆமாங்க மாமா. இப்பத்தான் இங்க இருந்து புறப்படறோம்…” என்று பரத் சொல்ல,
“அதை எத்தனபேரு சொல்லுவீங்க? இப்பத்தான் நதி கால் பண்ணி சொன்னா. ப்ரவனும் செய்தி அனுப்பிருக்கான். கீதாவும் சொல்லியாச்சு. இப்ப நீங்களா?…” என்றார் அவர் பரத்திடம்.
“ஓஹ் அப்படிங்களா?…” என்ற பரத் ஆர்யாவை பார்க்க,
“எல்லாம் வீட்டுல தான இருக்கீங்க? வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு கூடவா தெரியலை? என்னமோ போங்க. எப்பவும் ஹாஸ்பிட்டல் பத்தியே நினைப்போ? கொஞ்சம் பொண்டாட்டி, குடும்பம்ன்னு பாருங்க மாப்பிள்ளை. புரியுதுங்களா?…” என்று நரசிம்மன் பேச பேச பரத்தின் பிபி எகிறியது.
“இங்க தான வரீங்க? அப்பறம் என்ன? வந்து பேசிப்போம். வாங்க…” என்று சொல்லி நரசிம்மன் வைத்துவிட,
“பேசியாச்சு, போதுமா?…” என்று சொல்லி பரத் முன்னால் சென்றுவிட்டான்.
“கோவமா போறானோ?…” என்று தமயந்தி பார்க்க,
“அதெல்லாம் இல்லைத்தை. கிளம்பனும்ல. அதான்…” என்று கீதாவும் அவனோடு சென்றாள்.
“கிளம்பலாம்…” என்ற குருஆர்யன் நனியிதழை கண்ணமர்த்தி அழைக்க குருமூர்த்தி மகனுடன் செல்லும் மருமகளை தான் பார்த்தார்.
“நீங்க போங்க. நானும் அம்மாவும் வரோம்…” என்று சொல்லியவர் அவர்களை அனுப்பிவிட்டு யோசனையுடன் அமர்ந்திருக்க,
“எதுவும் முக்கியமான வேலைங்களா?…” என்றார் தமயந்தி.
“ஹ்ம்ம், உன்கிட்ட பேச தான்…” என்றவர்,
“இன்னைக்கு நடந்தது விளையாட்டா இருந்தாலும் நதி முகமே இன்னும் சரியாகலை…” என்றார் மனைவியிடம்.
“நான் எதுவும்…” என்று ஆரம்பித்த தமயந்தியை கையமர்த்தி நிறுத்தியவர்,
“நீன்னா நீ மட்டுமில்லை. எல்லாரையும் தான் சொல்றேன். விளையாட்டு இருக்கலாம். எல்லா விஷயத்துலையுமா? ஆரி நதி முதல்தடவை கோவில்ல வச்சு குடுத்ததால மறுக்கமுடியாம சாப்பிட்டிருக்கலாம். ஆனா உனக்கு தெரியுமே அவனுக்கு என்ன ஒத்துக்கும் ஒத்துக்காதுன்னு. புடிக்காதது சாப்பிடமாட்டான்னு…”
“ஆமா…”
“அப்ப நீ சொல்லியிருக்க வேண்டாமா தமயா? அவங்க புதுசா கல்யாணமான பசங்க. அவங்களுக்குள்ள என்னவும் செஞ்சுக்கட்டும். இப்படி எல்லார் முன்னாடியும், ஆரி ரொம்ப சங்கடப்பட்டுட்டான். கோவத்தை அடக்கமுடியாம, காமிக்கவும் முடியாம. நீங்க பண்ணினது எல்லாம் தப்பு…” என்றார்.
“ஹ்ம்ம், நானும் இந்த பக்கமா யோசிக்காம விட்டுட்டேன்…” வருத்தமாய் தமயந்தி.
“இனிமே பார்த்துக்கோ. இத்தனை வருஷம் அவன் இஷ்டப்படி விட்டுட்டு இப்ப என்ன செய்வான்னு பார்ப்போம்ன்னு பார்க்கறது எல்லாம் சரி கிடையாது. அவ்வளோ தான் சொல்லுவேன்…” என்று பேசியபடி அவரை அழைத்துக்கொண்டு கிளம்பினார் குருமூர்த்தி.
அவர்கள் செல்லும்பொழுது ஸ்ரீநிவாசன் வீட்டின் கூடத்தில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
“வாங்க வாங்க சம்மந்தி…” என்று ஸ்ரீநிவாசன் வரவேற்க, மனைவியின் அறையில் போனில் ஆனந்துடன் பேசிக்கொண்டிருந்த ஆர்யா வெளியே வந்து பார்த்தான்.
“நான் சொன்னதை ரெடி பண்ணிடு மேன். கிளம்பும் போது கால் பன்றேன்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு வந்தான் அவர்களிடம்.
சுஜாதாவும் வந்து அவர்களை அமர சொல்லி குடிக்க தண்ணீர் கொண்டுவர நனியிதழை காணவில்லை அங்கே.
“சரி இருக்கட்டும்…” என்று அவருடன் தமயந்தி அடுக்களைக்கு செல்ல,
“உட்காருங்க மாப்பிள்ளை…” என்று ஸ்ரீநிவாசன் குருஆர்யனிடம் கூற,
“நீங்க பேசிட்டிருங்க…” என்ற ஆர்யா மனைவியை தேடி சென்றான்.
“இவன் எப்பருந்துடா இப்படியானான்?…” விஷ்ணு சிரிக்க,
“அதுல என்ன ண்ணா தப்பு? சரியா தானே இருக்கார் ஆர்யன். ஃபேமிலிக்கு இம்பார்ட்டேன்ஸ் குடுக்கறது நல்லது தானே?…” என்ற ப்ரவன்,
“என்ன மாப்பிள்ளை நான் சொல்றது சரிதானே?…” என்று பரத்தை கலாய்த்தான்.
“நீ ஒருத்தன் தான்டா பாக்கி. போவியா…” என்றவன்,
“ஆனா ப்ரவன் சொல்றமாதிரி இதுக்கு தான் நாங்களும் ஆசைப்பட்டோம். எப்பவும் ஒரு ஆளுமை தோரணைலையே தான் சுத்தி வருவான். அவன் சொல்றதுக்கு தான் நம்மளை வளைப்பான். இப்ப அவன் வளைஞ்சு குடுக்கறதை பார்க்கும் போது சந்தோஷமாவும் இருக்கு, அதே நேரம் சிரிக்காமலும் இருக்கமுடியலை…” என்றான் பரத்.
“உன்னை பத்தி தான் ஆரி பேசிட்டிருக்கோம்…” என்று விஷ்ணு சொல்ல,
“என்ன…” என்று பரத் அதிர்ந்து திரும்பி பார்க்க அங்கே யாருமில்லை.
“திஸ் இஸ் ஹண்ட்ரட் மச்…” என்றான் பரத் அவர்களிடம் சொல்ல ஆர்ப்பார்ட்டமாய் சிரித்தனர்.
மாடிக்கு வந்த குருஆர்யன் நனியிதழ் எந்த அறையிலும் இல்லாமல், பக்கவாட்டில் இருந்த பால்கனியில் பேச்சுக்குரல்கள் கேட்க அங்கே சென்றான்.
“சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணினோம் நதி. ப்ளீஸ்…” என்று மது சொல்ல,
“நான் நீங்க செஞ்சது சரி, தப்புன்னு சொல்ல வரலை அண்ணி. ஆனா எனக்கு ரொம்ப எம்பேரிஸிங்கா போயிருச்சு. அவங்களுக்கு பிடிக்காது, சாப்பிட மாட்டாங்கன்னு நான் கேட்டப்பவே சொல்லியிருக்கலாம். அதை விட்டுட்டு டைனிங் வரை கொண்டுவந்தது என்னால ஏத்துக்க முடியலை…” என்றவள்,
“தெரியாம செஞ்சுட்டோமேன்ற ஒரு ஃபீல். அவங்களுக்கு அத்தனைபேர் முன்னாடியும் எவ்வளோ சங்கடம்? அதையெல்லாம் விட எங்களுக்குள்ள நடந்த விஷயம், கலாட்டாவா, கேலி பன்ற மாதிரி கொண்டுவந்துட்டோமோன்னு ரொம்ப ஒருமாதிரி ஆகிடுச்சு…” என்றாள்.
“தப்பு தான் நதி. நீங்க சாப்பிடாம எழுந்து போகவுமே புரிஞ்சது. பட் நடந்திருச்சு. ப்ளீஸ், லீவ் இட்….” என்றாள் கீதா.
“அட என்ன கீதாக்கா? நான் உங்களை எதுவுமே சொல்லலையே. இன்பெக்ட் யாரையுமே எதுவும் சொல்லலை நான். எனக்கு அந்த விஷயம் ஏற்புடையதா இல்லை. மேம்போக்கா பார்த்தா சும்மா ஒரு ஜாலி தானேன்னு இருக்கும். ஆனா கொஞ்சம் யோசிச்சா. ப்ச், ஓகே அதை விடுங்க…” என்று சொல்லிவிட்டாள் நனியிதழ்.
அவள் கடிந்து சொல்லியிருந்தால் கூட இத்தனை வருத்தமிருந்திருக்காது. ஆனால் அதையுமே பெருந்தன்மை போல பேசியதும் மதுஸ்ரீ, கீதா இருவருக்குமே என்னவோ போலானது.
“இனி இப்படி நடக்காது நதி…” என்றாள் மது அவளின் கை பிடித்து.
“விடுங்கண்ணி. உங்க தம்பி இத்தனை நாள் அப்படி இருந்திருக்காங்க. அதனால நீங்களும் பண்ணிட்டீங்க. ஆனா அந்த நிமிஷம் சாப்பிடவும் முடியாம எப்படி உக்கார்ந்துட்டாங்க. அதுக்கு நானும் ஒரு காரணம்ன்னு வேற ஒரு கில்ட் ஃபீல்…” என்றவள்,
“அச்சோ, விடுங்கண்ணி. ப்ளீஸ் எனக்கே ஒருமாதிரி இருக்கு. யாரையும் கஷ்டபடுத்த நினைக்கலை நான். இதையே பேசவேண்டாம்…” என்று சொல்லி கீதாவை பார்த்தாள்.
“அண்ணி, இதென்ன இவ்வளோ வருத்தப்படறீங்க? அவளும் சங்கடப்படறா. முடிஞ்சு போச்சு. அதை பேசி, வருத்தப்பட்டு அதுக்குள்ளயே ஏன் நிக்கனும்? வாங்க, வாங்க. விருந்துக்கு வந்துட்டு இப்படி இருக்கலாமா?…” என்று கீதா அழைத்து செல்ல அங்கே குருஆர்யன் நின்றிருந்தான்.
“என்னவாம், எதுக்கு இவ்வளோ பேச்சு உனக்கு?…” என்றான் மதுவின் வாடிய முகம் கண்டு.
“விளையாட்டா ரொம்ப பேசிட்டேன் ஆரி. அதான்…” என மதுவும் சொல்ல,
“பேசியாச்சுல. விடு. போய் வேற வேலையை பாரு. உன் பையன் என்ன பன்றான்னு கால் பண்ணி கேளு. மாமியார் கூட்டிட்டு போனா அப்படியே விட்டுடுவியா?…” என்று மதுவின் கவனத்தை திசை திருப்பி ஆர்யா அதட்டல் போட,
“ஆமா, நான் கேட்கவே இல்லை பாரு. தனியா இருக்கோம்ன்னு பிள்ளையை கூட்டிட்டு போனாங்க. அவங்களும் கால் பண்ணலை. என் மாமனார் என்ன செஞ்சாரோ? அதுவும் தெரியலை….” என்று மது வேகமாய் கீழே விரைய,