குருஆர்யன், நனியிதழ் இருவரும் சென்னை வந்து சேர்ந்து ஒருவாரமாகியிருந்தது.
வரவேற்பு திருமணத்தை விட மிக பிரமாண்டம். அத்தனையும் குருஆர்யனின் வடிவமைப்பில்.
ப்ரவனுக்கு தான் அவனின் ஒவ்வொன்றையும் பார்க்க அத்தனை ஆச்சர்யம் எப்படி இத்தனை யோசிக்க முடிக்கிறது என்று.
“ஆர்யன், நதி கல்யாணம், ரிசப்ஷன் மாதிரி இனி யாருக்காச்சும் நடந்தா தான் உண்டு. எல்லாருக்கும் ஒரு பெஞ்ச் மார்க் குடுத்திட்டார் உங்க மாப்பிள்ளை. இப்படியும் நடத்த முடியுமான்னு செஞ்சிட்டார்…” என்றான் ஸ்ரீநிவாசன், நரசிம்மனிடம்.
அவ்வளவு பூரிப்பு அவர்களுக்கு. நெஞ்சம் நிறைந்துவிட்டது இதைவிட என்ன வேண்டும் என்று.
தணிகாச்சலத்துடன் நிதீஷ் கிளம்புவதாக இருந்தது தள்ளி போய்க்கொண்டே இருந்து வரவேற்பு முடிந்து இருநாட்கள் கழித்தே வரமுடிந்தது.
அன்று ஸ்ரீநிவாசனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கீதாவின் மூலம் விஷயம் தெரியவர தமயந்தியுடன் பார்க்க கிளம்பினாள் நனியிதழ்.
“அவங்களுக்கு கால் பண்ணி சொல்லிருவோம் த்தை…” என்று நனியிதழ் சொல்ல,
“ஆரிக்கிட்டயா? அவன் வேலையா இருந்தா?…” என்றார் தமயந்தி.
அன்றொரு நாள் மகன் கூறியவை ஞாபகம் வர அவளை அழைக்க வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை.
“சரிம்மா, இப்ப என்ன? நாம கிளம்புவோம். திரும்ப கூப்பிட்டா சொல்லுவோம்…” என தமயந்தி யோசிக்க மீண்டும் நனியிதழ் அழைத்துவிட்டாள் கணவனுக்கு.
இங்கே வந்துசேர்ந்த இந்த ஒருவாரத்தில் அவனின் அனுதின நடவடிக்கைகள் அவளுக்கு அத்துப்படியாகியிருந்தது.
அதில் அவள் அறிந்துகொண்ட முதல் விஷயம் அவன் அலுவலக அறையில் இருந்தால் கண்டிப்பாக அழைக்கக்கூடாது என்பது.
அதனை முதலிலேயே சொல்லிவிட்டான் குருஆர்யன். இருவருக்குமான இந்த சுமூக சூழ்நிலையை குலைக்க அவன் விரும்பவில்லை.
“அடுத்த கண்டிஷனா?…” என்று கேலியாக கேட்டாலும் மீறும் சமயம் எதுவும் வரவில்லை.
இதோ இப்போது இத்தனைமுறை அழைப்பது இதுவே முதல்முறை. அடுத்தடுத்து அழைக்க அவன் எடுக்காததில் மீண்டும் கூப்பிட தயக்கம்.
“நதி என்னாச்சு? பேசிட்டியா?…” என்று கிளம்பி வந்துவிட்டார் தமயந்தி.
“அவங்க எடுக்கலை த்தை…” மீண்டும் சொல்ல,
“சரி வா. நாம புறப்படுவோம். அவனா கூப்பிடுவானான்னு தெரியாது. உனக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவான். இல்லைனா அனுஷா இருக்காளே? சொல்லிடுவா…” என்று சொல்லி அழைத்து சென்றார் தமயந்தி.
தாயாய் அவருக்கு அத்தனை சந்தோஷம் மகன் ஓரளவு மருமகளை அனுசரித்து அவளுக்கு பிடித்தவிதமாய் வளைந்து கொடுத்து வாழ்கிறான் என்று.
அதனால் அவள் அழைத்தாள் நிச்சயம் பேசுவான் என நினைத்திருக்க தகவல் கூட சொல்லாமல் எப்படி செல்வது என்று யோசித்தவள் அவனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு கிளம்பினாள்.
அங்கே கீதாவும் ஸ்ரீநிவாசனை பார்க்க வந்திருந்தாள் மருத்துவமனையில் இருந்து பரத்துடன்.
“வாம்மா நதி?…” என்று சுஜாதா அவளை வரவேற்க,
“நீயும் இங்க தான் இருக்கியா?…” என்றார் தமயந்தி மூத்த மகனிடம்.
“மாப்பிள்ளை எப்படி இருக்கார் நதி?…” என்று அவரும் கேட்க,
“நல்லாயிருக்காங்கம்மா. என்னவோ ரொம்பநாள் ஆகிட்ட மாதிரி சொல்றீங்க? பார்த்து நாலஞ்சுநாள் கூட ஆகலை. அதுக்குள்ளவா?…” என்று சிரிக்க அவளின் புன்னகையில் தான் இருவருக்கும் நிம்மதி.
“எங்க ப்ரவன் அண்ணாவை?…” என்றாள் அவரிடம்.
“இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங். அதுக்கு அவன் இருக்கனும். என்னால தான் போகமுடியலை…” என்றார் ஸ்ரீநிவாசன்.
“ஒன்னும் போகவேண்டாம். ரெஸ்ட் எடுங்க பெரிப்பா…” என கூறிவிட்டு தந்தையை தேடினாள்.
“அப்பா வந்திடறேன்னு சொன்னாங்களே? இன்னும் காணுமே?…”
“அதான் நேத்து நைட் உன்கிட்ட சொன்னாங்களே நதி. ப்ளஸ் டூ பசங்களுக்கு கோச்சிங் கிளாஸ் எடுக்கறதுக்கு ஒரு இன்ஸ்ட்யூட்ல கேட்டிருக்காங்கன்னு. பேசிட்டு வர நேரமாகும் போல?…” சுஜாதா கூற,
“வீட்டுல இருங்கன்னாலும் கேட்கலை. சரி நம்ம டிவி ஆபீஸ்க்கு வாங்கன்னாலும் மாட்டேன்றார். நீயாவது சொல்ல கூடாதா நதி?…” ஸ்ரீநிவாசன் குரலில் அப்பட்டமான கவலை.
“இருக்கட்டும் பெரிப்பா, அப்பாவுக்கு அவங்களுக்கு புடிச்ச வேலையை பார்க்கட்டும். உங்களுக்கே தெரியும் யார் சொன்னாலும் கேட்கமாட்டாங்கன்னு. விடுங்க. அவங்களுக்கு டீச்சிங் பீல்ட் தான் சரி…” என்றாள் தந்தையை புரிந்தவளாக.
“சரி நீங்க தூங்குங்க. நாங்க ஹால்ல இருக்கோம்…” சுஜாதா நனியிதழை அழைத்துக்கொண்டு வெளியே வர தமயந்தி கீதாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“பார்த்தாச்சா? என்ன சொன்னாங்க அப்பா? ஒண்ணுமே இல்லை. லேசா இருக்குன்னா?…” கீதா கேட்கும் பொழுதே அவளின் கண்கள் சிவந்திருந்தது.
தைரியமானவள், தந்தைக்கென்றதும் கலங்கி போனாள். காண்பித்துக்கொள்ளாமல் இருக்கவேண்டி மனதை திடப்படுத்திக்கொண்டாள்.
வயதாகிறதே? மூப்பில் தான் இன்னும் அதிகம் தேடுகிறது பெற்றவர்களை. இனி அவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் இப்படித்தானே கடக்கவேண்டும்?
அன்றைக்கு காலையே மருத்துவமனையில் தன் தந்தை வயதிருக்கும் ஒருவரின் இறப்பை பார்த்தவள் அவர்களின் கண்ணீரில் மனம் கனக்க நின்றிருக்க சுஜாதாவிடமிருந்து இப்படி ஒரு தகவல்.
மற்றவர்களின் வாழ்க்கை என்னும் பொழுது வேறு செய்தியாக இருப்பவை தங்களுக்கென்றாகும் வருகையில் எத்தனை வேதனை.
எப்போதும் படபடவென்று பேசுபவள் பேச்சுக்கள் குறைந்திருக்க அவளின் அருகில் அமர்ந்துகொண்டாள் நனியிதழ்.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையை அவளும் அனுபவித்து துடித்திருந்ததனால் கீதாவின் நிலையை புரிந்துகொள்ள முடிந்தது.
சிறிதுநேரத்தில் பரத் மட்டும் கிளம்பிவிட வீட்டிற்கு அழைத்து அனுஷாவிடம் பேசிய தமயந்தி ஆர்யா வந்துவிட்டானா என்றார் அவளிடம்.
“இன்னும் இல்லைம்மா. அண்ணா வரவும் சொல்றேன்…” என சொல்ல சரி என்று அழைப்பை துண்டித்தவருக்கு மருமகளை அப்போதே அழைத்துக்கொண்டு கிளம்ப முடியவில்லை.
சுஜாதாவும் அவரை பேச்சில் பிடித்துக்கொள்ள கீதாவும் நனியிதழும் தனியே பேசிக்கொண்டிருந்தனர்.
“நீ என்னைக்கு ஹாஸ்பிட்டல் வர ஆரம்பிக்க போற நதி? ஆரி என்ன சொல்றார்?…” என்றாள் கீதா.
“இன்னும் பேசலை கீதாக்கா. நீங்க தான் பார்க்கறீங்களே? அவங்க வரவே லேட்டாகுது. வந்தாலும் அவங்க வொர்க்கிங் ரூம்க்கு போயிடறாங்க…” என்றவள் அதற்கு மேல் சொல்லவில்லை.
அவன் வரும் நேரம் உறக்கத்தில் இருப்பவள், அவன் வந்ததும் அருகாமையில் எங்கே பேச முடிகிறது?
அவனே பேச, கேட்க என்று இருப்பான். பதில் சொல்லுபவளுக்கு இவை எல்லாம் சுத்தமாக மறந்திருக்கும்.
பேசவேண்டும் என்ற நினைத்து நினைத்தே இத்தனை நாட்கள் கடந்திருக்க இன்றேனும் பேசிவிடவேண்டும் என்று நினைத்திருந்தாள்.
“ஓகே அவசரமில்லை. நீ என்ன யோசிச்சு வச்சிருக்கன்னு கேட்டேன். அவ்வளோ தான்…” என ஹாஸ்பிட்டல் சம்பந்தமாக பொதுவான பேச்சுக்கள் துவங்கியது.
இதுவரை மருத்துவமனை பரத், மதுஸ்ரீ, கீதா இவர்களுக்கு பாத்தியப்பட்டதாக இருக்க அதில் நனியிதழையும் பங்குதாரராக சேர்க்கும் பணியை குருமூர்த்தி துவங்கிவிட்டதாக கீதா சொல்ல,
“இதெல்லாம் எதுக்கு கீதாக்கா? என்கிட்டே யாருமே எதுவும் சொல்லலை…”