தமயந்தி குழந்தை பற்றி ஆரம்பிக்கவும் அவளின் நினைவுகள் அவனிடம் சென்றுவிட்டனவே.
“நதி நினைப்பு இங்கயே இல்லை…” பரத் கிண்டல் பேச,
“நீ சும்மா இருடா…” என்ற தமயந்தி,
“ஏன் நதி, நீ வேணும்னா ஆரிகிட்ட போறியா?…” என்றார்.
“ச்சே, ச்சே. அதெல்லாம் இல்லை த்தை. நான் வேற யோசனையில இருந்தேன்…” என்றாள் நனியிதழ்.
“அவன் நிச்சயம் கூப்பிட்டிருக்கமாட்டான். நீயாவது கூட வரேன்னு சொல்லியிருக்கலாம்ல. நீ சொன்னா கூட்டிட்டு போயிருப்பானோ என்னவோ?…” என்றவரிடம் என்ன பதில் சொல்லமுடியும்?
“எனக்கு அவ்வளோ குளிர் தாங்காது த்தை…” என கூறி எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டவள் சின்ன புன்னகையுடன் எழுந்து சென்றாள்.
“ம்மா என்ன பேசறீங்க நீங்க? அவன் கூட்டிட்டு போயிருப்பான்னா நினைக்கறீங்க? நதி கேட்டிருந்தா மாட்டேன்னு தான் சொல்லியிருப்பான். அதுக்கு கேட்காமலேயே இருந்திருக்கலாம். ஹர்ட் ஆகாம இருப்பா…” என பரத் சொல்ல,
“இந்த பொண்ணு முகமே சரியில்லை பரத். அதான் சொன்னேன். பாரு இந்த ஒருவாரத்துல இன்னும் மெலிஞ்சுட்டா. கண்ணை சுத்தி கருவளையம் பாரு…” என்று சொல்ல கீதாவின் விழிகள் இடுங்கியது.
அப்போது தான் நனியிதழின் தோற்ற மாற்றத்தை அவளுமே கூர்ந்து கவனித்தாள்.
“கிளம்புவோமா க்கா?…” என கை கழுவிவிட்டு வந்தவளிடம் தலையசைத்த கீதா,
“கார்ல வெய்ட் பண்ணுடா. வாஷ் பண்ணிட்டு வரேன்…” என்று சொல்லவும் அவள் தங்கை நகர்ந்தாள்.
“இப்ப என்ன வீட்டுக்கு ஒரு குழந்தை தானே? இன்னும் ஒருவருஷமாகும் நாங்க பெத்துக்க. அதனால வெய்ட் பண்ணுங்கத்தை. இதைவிட பளிச்சின்னு சொல்லனுமா?…” என்று தமயந்தியிடம் கீதா கேட்க,
“அம்மாடியோ. நான் எங்க உன்னை கேட்டேன்?…” என்றார் வாயில் கை வைத்து.
“கேட்டாலும் கேட்கலைன்னாலும் பிரச்சனை இல்லை. ஆனா புலம்பாம இருக்கனும். அதுக்கு தான் சொல்றேன். சட்டுன்னு எல்லாம் குட்நியூஸ் சொல்லமுடியாது. கொஞ்சம் லேட்டா சொல்றேன். ஆனா வரவேண்டிய நேரம் குட்நியூஸ் வரும். புரியுதா?…” என்று அவரின் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றாள் கீதா.
“பரத் காரை கொஞ்சம் ஸ்லோவாவே ஓட்டுங்க…” என்று கணவனிடம் சொல்ல,
“ஏன் எப்பவும் போல தானே ஓட்டறேன்?…” என்று சொல்லியவனை முறைத்தவள்,
“எனக்கு தலை சுத்தும். அதுக்கு தான்…” அழுத்தமாய் சொல்லவும், பரத் பார்வை தன்னைபோல் நனியிதழை பார்த்தது.
“நான் பின்னாடி உக்கார்ந்துக்கறேன். நீங்க கிளம்புங்க…” என்று பின்பக்கம் நனியிதழ் அருகில் அமர,
அவள் கையிலிருந்த கைபேசியில் கணவனின் பிம்பம் அழகாய் புன்னகையுடன் அவளிடம் சிரித்துக்கொண்டிருந்தது.
“ஏன் நான் உக்கார்ந்தா பின்னாடி உனக்கு இடம் பத்தாதா?…” என்று கிண்டலாய் கேட்டவள் அமர்ந்ததும் நனியிதழிடம் பேசிக்கொண்டே வந்தாள்.
அனுஷா குழந்தை இருந்தவரையில் கூட நனியிதழின் இந்த சோர்வு தெரியவில்லை.
ஆனால் இந்த ஒருவாரமும் தன் கவனத்தில் எப்படி பதியாமல் போனது என்ற யோசனையில் தான் இருந்தாள் கீதா.
மருத்துவமனை செல்லும் வரையில் தங்கையிடம் பேசிக்கொண்டே சென்றவள் கவனம் தங்கையின் மீது அதிகமாகியது.
அங்கே சென்றதுமே நனியிதழ் அவளின் அறைக்கு சென்றுவிட கீதாவால் உடன் செல்லமுடியவில்லை.
“இன்னும் எத்தனை பேஷண்ட்ஸ்?…” என நர்ஸிடம் கேட்க,
“ரெண்டுபேர் தான் இருக்காங்க மேம்…” என்றாள் அவள்.
“ஓகே, அடுத்து வந்தா டாக்டர் நர்மதாவுக்கு மாத்திவிட்டுடு….” என்று அந்த இருவரையும் பார்த்து பரிசோதித்து பேசி அனுப்பிவிட்டு நனியிதழ் சிகிச்சையளிக்கும் பகுதிக்கு வர அங்கே நர்ஸை தவிர யாருமில்லை.
“நதி எங்கம்மா?…” என்று அவளிடம் கேட்க,
“மேம் கொஞ்சம் முன்ன தான் அவங்களோட பர்சனல் ரூம்க்கு போனாங்க டாக்டர். பேஷண்ட்ஸ் அவ்வளோ தான். அடுத்த அப்பாயிண்மென்ட் ஆஃப்டர்நூன் தான்…” என்றாள்.
“ஓகே, நான் பார்த்துக்கறேன்…” என்று மாடிக்கு சென்றாள் கீதா.
அறையின் கதவை தட்ட போனவள் பின் விரல்களை இழுத்துக்கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைய அங்கே மேஜையில் கண்களை மூடியபடி தலைசாய்ந்திருந்தாள் நனியிதழ்.
“நதி…” என்று மெல்லிய குரலில் அழைக்கவும் மெல்ல விழிகள் திறக்க முயன்றவள் முகத்தை கழுவிவிட்டு வந்திருப்பது தெரிந்தது.
“கீதாக்கா…” என்று சத்தமே வராமல் கூறியவள் சட்டென்று ஒன்றை கையிலிருந்து மறைக்க பார்க்க கீதா பிடித்துவிட்டாள்.
“என்ன இது நதி?…” என கண்களை விரித்து அதிர்வுடன் பார்த்த கீதாவிற்கு உண்டான சந்தோஷத்தை விட, இதை ஏன் அவள் மறைக்க முயல்கிறாள் என்ற அதிர்ச்சியே பெரிதாய்.
உடனே நதியின் அறையிலிருந்து மதுவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தவள் நனியிதழை பார்க்க, அவள் தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் தலைசாய்த்தாள்.
“அண்ணி உடனே நதி ரூம்க்கு வாங்க. டாப் ஃப்ளோர்…” என்று சொல்லி மது கேட்கும்முன் வைத்துவிட்டு நனியிதழ் அருகில் இன்னொரு இருக்கையை இழுத்துபோட்டு அமர்ந்தாள்.
“இன்னைக்கு மார்னிங் தான் டெஸ்ட் பண்ணுனியா நதி?…” என்று கேட்க,
“ம்ஹூம்…” என்றாள் நனியிதழ்.
“அப்போ எப்போ பண்ணின?…”
“ரெண்டுநாளைக்கு முன்னாடி…” என்று சொல்லி தலையை பிடித்துக்கொண்டாள்.
“முழுசா ரெண்டுநாள் எங்க யார்கிட்டயும் சொல்லலை. இப்பவும் நான் பார்க்கறதுக்குள்ள உள்ள வைக்கத்தான் பார்த்த. என்ன நினைக்கிற நதி?…” என்ற கீதா,
“ஆரிக்கு தெரியுமா?…” என்றாள்.
“ம்ஹூம்…”
“ஏன்? ஏன் இன்னும் ஆரிக்கும் சொல்லலை?…” என்று கேட்க நனியிதழ் வாயே திறக்கவில்லை.
“எழுந்து இப்படி வந்து ப்ரீயா உட்கார் நதி…” என்று அழைத்து வந்த கீதா அவளை சோபாவில் அமர வைத்து தானும் அமர்ந்துகொள்ள,
“வேற எதுவும் பிரச்சனையா நதி?…” என்றாள் கீதா.
“கீதாக்கா ப்ளீஸ், நீங்க ஏன் அந்த ஆங்கிள்ல யோசிக்கிறீங்க? அப்படியெல்லாம் எதுவுமில்லை. ரெண்டுமூணு நாள் கழிச்சு எல்லார்கிட்டயும் சொல்லலாம்ன்னு இருந்தேன்…” என்றவள் குரல் தடுமாற,
“ஆரிக்கிட்ட சொன்னதுக்கு அப்பறம் சொல்லலாம்ன்னு இருந்தியா நதி?…” என்று கேட்டாள் கீதா.
“கீதாக்கா…” என்றவள் கண்கள் ததும்பிவிட அவளின் தோளில் தலைசாய்ந்தாள் நனியிதழ்.
“இதுக்கு மேல எதுவும் கேட்கமாட்டன்னு நம்பறேன். ப்ளீஸ். நதி ப்ராமிஸ்…” என்று நனியிதழ் சொல்ல, அதற்குள் மது வந்துவிட்டாள்.
வந்ததுமே நனியிதழையும், கீதாவின் கையிலிருந்த கர்ப்ப உறுதி கருவியையும் பார்த்துவிட்டு,
“டேய் நதி….” என்று சந்தோஷத்துடன் அழைத்து அவளருகில் வந்தமர,
“முதல்ல செக் பண்ணுங்க அண்ணி. அப்பறம் விஷ் பண்ணி சந்தோஷப்படலாம்…” என்றாள் கீதா முகத்தை சாதாரணமாக வைத்து.
“எப்போ? எத்தனை நாள்?…” என்று ஒவ்வொன்றாய் கேட்டு மருத்துவராய் அவளை பரிசோதித்ததுடன் வீட்டிற்கும் அழைத்து சொல்லிவிட்டாள் மதுஸ்ரீ.
மதுஸ்ரீ வீட்டிற்கு அழைத்து ஒவ்வருவரிடமும் விஷயத்தை பகிர கீதா நனியிதழிடம்,
“இன்னைக்கு தான் டவுட்டா இருக்குன்னு செக் பண்ணினேன்னு சொல்லு. நீ உண்மை விளிம்பியா இங்க எதையும் சொல்ல தேவை இல்லை. புரியுதா?…” என்று கண்டிப்புடன் சொல்ல அங்கே பரத் வந்துவிட்டான்.
அவனும் வாழ்த்த மதுஸ்ரீ உடனே கீதாவையும் அழைத்துக்கொண்டு நனியிதழுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
செல்லும் வழியில் எல்லாம் கீதாவுடன் அவள் பேசிக்கொண்டே வர கண் மூடி சாய்ந்துகொண்டாள் நனியிதழ்.
அவ்வப்போது பார்வை தான் அனுப்பிய குறுஞ்செய்தியையாவது பார்த்துவிட்டானா அவள் கணவன் என்று அதில் பதிந்து மீண்டது.
கீதா அவளை தேடி வருவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்னர் தான் குருஆர்யன் அவளுக்கு அழைத்திருந்தான்.
“எத்தனைதடவை சொல்றேன். நேத்தும் கால் பண்ணியிருக்க. இப்பவும் காலைல இருந்து கூப்பிட்டுட்டே இருக்க? எனக்கென்ன இங்க வேலை இல்லையா இதழ்? இப்படி டார்ச்சர் பண்ணாதன்னு சொல்லி தான கிளம்பி வந்தேன். முப்பத்தாறுமணிநேரம் ஷூட்டிங் விடாம போய்ட்டிருக்கு. இதுல நீ வேற?…” என்றவன்,
“எனக்கு எப்போ பேச முடியுமோ அப்போ தான் பேசுவேன். திரும்ப கூப்பிட்ட கடுப்பாகிருவேன் பார்த்துக்கோ. தலைபோற விஷயமா இருந்தாலும் மெசேஜ் பண்ணு, இல்லையா ஆனந்த் கிட்ட சொல்லு. என்னை டிஸ்டர்ப் பண்ணாத. ப்ரீயாகிட்டு கூப்பிடுவேன். காட் இட். சும்மா இம்சை பண்ணிட்டு…” என்று அவனுக்கு அங்கே இருந்த நமைச்சலில் மனைவியை காய்ந்துவிட்டான்.
இரண்டு நாட்களாக அழைக்க முயன்று அவன் ஏற்காததால் அன்று காலை விடாமல் அவனின் எண்ணிற்கு முயற்சித்திருக்க அத்தனை கோபம்.
‘அஞ்சு நிமிஷம் பேச, சொல்றதை கேட்க நேரம் கிடைக்கலையா?’ என்று அவளின் மனது அவளுக்கு இடித்துரைக்க வெகுவாய் துவண்டு போனாள்.
மசக்கை வேறு அவளை வாட்டிக்கொண்டிருக்க வீட்டில் சொல்லும்முன் அவனுக்கு தெரிவிக்கவே அவள் உள்ளம் தத்தளித்தது.
குறுஞ்செய்தியில் சொல்லும் விஷயமா இது? தான் சொல்லவிருக்கும் விஷயத்தை அவன் குரலில் எப்படி உணர்கிறான் என்று கேட்க கொள்ளை ஆசையில் இருந்தவளை தூக்கி வீசிவிட்டதை போலிருந்தது.
ஆனால் குறுஞ்செய்தியில் தான் சொல்லவேண்டும் என்றிருந்தால் என்ன செய்வது என வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு குரல்வழி செய்தியாக பதிந்தாள்.
“பாவா…” என்ற அழைப்பு தான் கலங்கிய குரலில் அவள் முதலில் அவனுக்கு அனுப்பியது.
அடுத்த வார்த்தை வராமல் அவளின் கட்டைவிரல் மைக்கிலிருந்து விலக அந்த ஒற்றை அழைப்பு சென்றுவிட்டது.
ஆனால் அவனை அடையவில்லை. கைபேசியை அணைத்து வைத்துவிட்டான் என்று புரிந்து போனது.
‘இவன் என்ன சொல்லி, தான் என்ன ஆனந்திடம் சொல்ல?’ அப்படி ஒரு கோபம் பொங்க மீண்டும் மைக்கை அழுத்தினாள்.
“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால மெசேஜ் பண்ணமுடியாது. ஆனந்த் கிட்டயும் சொல்லமுடியாது. ஆனந்த் எனக்கு யாருமில்லை. இனி அங்க சொல்லு இங்க சொல்லுன்ற உத்தரவை எல்லாம் உங்களோட வச்சுக்கோங்க…” என்று வேகமாய் அழுத்தமாய் சொல்லியவள்,
“அப்பறம் இது உங்களுக்கு எப்படியான விஷயமோ? எனக்கு தலைபோற விஷயம் தான். உங்ககிட்ட தான் முதல்ல சொல்லனும்ன்னு நினைக்கிற அளவுக்கு. கேட்க இஷ்டம் இருந்தாலும் இல்லைன்னாலும் சொல்லனுமே. சொல்லுவேன். கேட்டுக்கோங்க…” என்று சொல்லி சிறிது மூச்செடுத்துக்கொண்டாள்.
“இதுதான் விஷயம், உங்க வீட்டுல குழந்தைங்களை எந்த ஸ்கூல்ல சேர்ப்பீங்கன்னு எனக்கு தெரியலை. எந்த ஸ்கூல்ன்னு சொன்னா அதை பத்தி நானும் விசாரிக்கனும். இப்பவே பேபிக்கு சீட் வாங்க ரெடியாகிக்கோங்க. இங்க தான் சீட் கிடைக்கிறது குதிரை கொம்பா இருக்கே? அதான் முன்னாடியே சொல்லி வைக்கறேன்…” என்று சொல்லும் பொழுதே அழுகை வர மூக்கை உறிஞ்சினாள் நனியிதழ்.
“என் குழந்தைக்கு என் அப்பா தான் பாடம் சொல்லி தருவார். நான் இப்பவே முடிவு பண்ணிட்டேன். இதை எல்லாம் போன்ல சொல்லனும்ன்னு நினைச்சேன். இப்ப நீங்க பாவா இல்லையே. டைரெக்டர் குருஆர்யன். ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல. பை…” என்று சொல்லி முடித்தவளுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
போனை தனியே வைத்துவிட்டு தான் தாய்மையாகியிருப்பதை உறுதி செய்த கருவியை கையில் வைத்துக்கொண்டவளுக்கு கண்ணீர் துடைக்க துடைக்க வழிந்தது.
“போடா, நீ வேணா…” என்றாள் குருஆர்யனை கைபேசி திரையில் பார்த்து.
மனதெல்லாம் பாரம் சூழ்ந்துவிட உடலின் மாற்றங்கள் வேறு அவளை பாடாய் படுத்த காரின் பின்னிருக்கையில் சுருண்டு படுத்துவிட்டாள் நனியிதழ்.