ஊசியை போட்டால் கூட பலமாய் கேட்டுவிடுமளவிற்கு அப்படி ஒரு நிசப்தம்.
“ஸ்லோவா ஸ்லோவா ஸ்மைல் பண்ணுங்க. இன்னும் கொஞ்சம் சிரிங்க. அப்படியே முகபாவனை மாறனும். முகத்துல மறைக்கப்பட்ட வலியும், சோகமும் தெரியனும். கண்ணு லேசா கலங்கனும். எஸ், எஸ், தட்ஸ் இட். ஷாட் ஓகே…” என்று மைக்கில் குருஆர்யன் இரைந்ததும் தான் லக்ஷ்மிக்கு மூச்சே வந்தது.
அவன் எதிர்பார்த்த மொத்த உணர்வுகளும் அவளின் முகபாவனையில் கொண்டுவந்துவிட அத்தனை திருப்தி குருஆர்யனுக்கு.
மீண்டும் அதனை காட்சியாய் புருவம் சுருக்கி பார்த்தவனுக்கு அதில் பெரிதாய் குறை எதுவும் தெரியவில்லை.
அத்தனை சொல்லியிருந்தான் அவ்விடத்தில் இன்னொரு நாளைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று.
அத்துடன் அங்கே காலநிலையும் சட்டென்று மாறியிருக்க அதைகொண்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தவியலாத சூழ்நிலை.
“இங்க ஷூட்டிங்கை கன்டினியூ பண்ண முடியாது. ஒரு சின்ன கேப் எடுத்துட்டு ஜெய்பூர் ஷூட்டை முடிச்சிட்டு வந்திடலாம்…” என்று சொல்லியிருந்தான் குருஆர்யன்.
எந்தளவுக்கு படமும், படப்பிடிப்பும் முக்கியமோ, அந்தளவுக்கு அதில் பணிபுரிபவர்களும் முக்கியம் என்பதனால் இந்த முடிவு.
அதனை தயாரிப்பாளரும் புரிந்துகொண்டார். அவனின் மேல் நம்பிக்கை வைத்து அனைத்திற்கும் அவர் தலையாட்ட, மறுநாள் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று ஒருமித்து முடிவெடுக்கப்பட்டது.
“திரும்ப ஹிமாச்சல் வரவேண்டியதிருக்கும். இன்னும் சில ஸீன்ஸ் இங்க தான் ஷூட் பண்ணனும். அதைபத்தின ஒரு டிஸ்கஷன் நைட்ல இருக்கும்…” என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு,
“பேக்கப்…” என்றுவிட்டு வந்து தன்னிருக்கையில் அமர்ந்தவன், சூடான வெந்நீரை எடுத்து அதனுடன் ஒரு மாத்திரையும் போட்டுக்கொண்டான்.
அதன்பின்னரே மனைவி அழைத்ததும், அவள் பேசும் முன் தான் பேசியதும் ஞாபகம் வந்தது.
“ஷிட்…” என்று தலையிலடிக்காத குறையாய் தன்னை நொந்துகொண்டவன் ஆனந்தை தேடினான் பார்வையால்.
நனியிதழ் அழைப்பை துண்டித்ததும் தனது கைபேசியை அணைத்து போட்டவன் ஆனந்திடம் தான் விசாரிக்க சொல்லியிருந்தான் அங்கே நிலவரம் என்னவென்று கேட்கும்படி.
அதற்குள் அடுத்த காட்சி எடுக்க வந்தமர்ந்துவிட்டவன் அதில் ஆழ்ந்து போக இப்போது இன்னும் நிம்மதி.
மறுநாள் ஊருக்கு சென்றுவிடலாம். அதன்பின் மூன்று நாட்கள் அவனுக்கு ஓய்வு தான்.
அந்த நினைவில், நிம்மதியில் இருந்தவன் முகமும் இப்போது தெளிந்திருந்தது. ஆனந்தை பார்த்துவிட்டவன்,
“ஆனந்த்…” என்று அழைக்க லக்ஷ்மியிடம் பேசிக்கொண்டிருந்த ஆனந்த்,
“கமான்…” என்று சொல்ல அங்கிருந்தவர்கள் அனைவருமே அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவனறிந்த விஷயத்தை லக்ஷ்மியிடம் தெரிவிக்க அவளருகில் நின்ற இன்னொருவர் மூலம் நிவாஸ், உதவி இயக்குனர்கள், கேமராமேன் இப்படி பரவ, முதலில் தெரிந்திருக்க வேண்டியவனுக்கு அந்த விஷயத்தை அனைவரும் வாழ்த்து கூறி தெரியப்படுத்தினார்கள்.
“வாட்?…” என்றான் குருஆர்யன் இரு கைகளையும் விரித்து ஒன்றும் புரியாமல்.
“ஸார் டைம் போகுது…” என்று வெளியிலிருந்து வந்த மேனேஜர் குருஆர்யனிடம் சொல்ல மற்றதை மறந்து,
“க்விக். எல்லாம் பேக்கப் பண்ணுங்க…” என்றான் இரு கைகளையும் தட்டி.
சட்டென அனைவரும் அவர்களின் பொருட்களை எல்லாம் எடுத்துவைக்க தயாராக ஆனந்த் அருகில் வந்தான்.
“ரொம்ப சந்தோஷம் ஸார். தமயந்தி மேம்கிட்ட தான் பேசினேன். நீங்க அப்பாவாக போறீங்கன்னு ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க…” என்று சொல்லி மகிழ, அதனை அசட்டையாக கேட்டுக்கொண்டிருந்தவன் உள்ளத்தில் பெரும்பள்ளம்.
“ஆனந்த்…” என்றவனுக்கு உயிரெல்லாம் பதறியது.
“என்ன சொன்ன?…” என்று மீண்டும் குருஆர்யன் கேட்க,
“ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டாங்க போல. எல்லாரும் அங்க தான் இருக்காங்க. உங்க நம்பருக்கு ட்ரை பண்ணினாங்களாம்….” என சொல்லிய ஆனந்திடம் எதையும் காண்பிக்கமுடியவில்லை.
“கேப் ரெடியா?…” என்றான் உணர்வற்ற குரலால்.
“எஸ் பாஸ், வெளில வெய்ட் பண்ணுது…”
ஆனந்திற்கு குருஆர்யனின் இந்த முகம் கூட என்னவோ சோர்வுடன் இருக்கிறான் என்பதையே காண்பித்தது.
ஆனாலும் முன்புமே மகிழ்ச்சியை கூட அவனிடம் அதிகளவு பார்த்ததில்லை என்பதனால் வித்தியாசமாக தோன்றவில்லை.
‘எப்படித்தான் இப்படி ஒரு நியூஸ் கேட்டும் மனுஷன் அதை முகத்துல காமிச்சுக்காம இருக்காரோ?’ என்று தான் உள்ளுக்குள் தோன்றியது.
இரண்டுநாட்களாக உடல்நிலையிலும் குருஆர்யனிடம் மாற்றம் இருந்ததனால் அதனால் கூட இப்படி இருக்கலாம் என்று நினைத்தான் ஆனந்த்.
“எல்லாம் க்ளியர் பண்ணிட்டு ரூம்க்கு வந்து சேரு மேன்….” என்றவன்,
“அன்ட் தேங்க்ஸ்…” என்றான் ஒருகணம் நின்று ஆனந்திடம் நன்றி கூறி.
அவன் சிலையாகிவிட்டான். ‘இதென்ன நன்றியெல்லாம்? அதுவும் குருஆர்யனா?’ என வியக்காமல் இருக்கமுடியவில்லை.
அதையெல்லாம் குருஆர்யன் கவனித்தால் தானே? லக்ஷ்மியிடமும் சொல்லி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தன்னுடை பேக் ஒன்றை மட்டும் கையில் எடுத்துக்கொண்டவன் காரில் ஏறி அமர்ந்ததும் போனை உயிர்ப்பித்தான்.
வரிசையாக அத்தனை அழைப்புகள் அவனிடம் வந்திருந்தது குருமூர்த்தி, தமயந்தி, பரத், ப்ரவன், மதுஸ்ரீ, விஷ்ணு என்று மாற்றி மாற்றி அழைத்திருந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேல் மனைவியின் குறுஞ்செய்தி. அதனை திறக்கவே அவனின் விரல்கள் நடுங்கியது.
தொண்டைக்குழியில் அவனின் அழுத்தங்கள் ஏறி இறங்க தவிப்பாய் அதற்குள்ளே சுழன்றது.
இதில் அதனை இப்போதே காரில் செல்லும் வழியிலேயே கேட்கலாம் என்றால் அதற்கும் மனதில்லை.
ஓட்டுனரை வைத்துக்கொண்டு அவன் உணர்வுகளை காண்பித்துவிட முடியாது.
உள்ளுக்குள் நிமிடத்திற்கு நிமிடம் அவன் உறைந்துகொண்டிருந்தான் தான் செய்த தவறின் அளவில்.
“வேகமா போ மேன்…” என ட்ரைவரிடம் தன் இயலாமையை கோபமாக வெளிப்படுத்த அவனுக்கு புரியவில்லை இவன் பேசிய தமிழ்.
வேகத்தை குறைத்து திரும்பி குருஆர்யனை என்னவென்று பார்க்க தலையில் அடித்துக்கொண்டான் இவன்.
“ஓஹ் காட்…” என்றவனுக்கு தலை வெடித்தது.
நனியிதழ் என்னவோ அனுப்பியிருக்கிறாள். ஆனால் அதை கேட்பதற்கு அத்தனை அச்சம்.
உண்மையில் இவ்வளவு தூரம் மனைவி அனுப்பிய ஒரு செய்திக்கு இத்தனை உணர்ச்சிவசப்படுவோம் என்று அவன் நினைத்ததே இல்லை.
எப்போதும் செய்தியாக வார்த்தைகளை கோர்ப்பவளின் எழுத்துக்களை வாசிக்கையில் அவளின் குரல் அவனுள் ஒலிக்கும்.
இப்போது குரலால் அவனுக்கு அனுப்பியிருக்க காத்திருக்கும் பொறுமை துளியும் இல்லை குருஆர்யனிடம்.
ஓட்டுனரிடம் ஹிந்தியில் வேகமாக செல்லும்படி பணித்தவன் விரல்கள் இதழ் என்றிருந்த அந்த பெயரின் உள்பெட்டியை நெருங்கவும் விலகவுமாக இருந்தது.
அதற்குள் மீண்டும் குருமூர்த்தியிடம் இருந்து அழைப்பு. ஏற்கவில்லை குருஆர்யன்.
‘அவர் சொல்லி கேட்கவேண்டிய விஷயமா?’ என்று நினைக்கையிலேயே தான் நனியிதழிடம் சொல்லியவை ஞாபகம் வந்தது.
“என்ன வாய்டா உன் வாய்? ராஸ்கல்…” என்று ஆவேசமாக தன்னையே முகத்தில் அடித்தபடி சொல்லிக்கொண்டான்.
ஆனந்திடம் எதுவாக இருந்தாலும் கூறு என்றவனுக்கு இப்போது அவன் மூலமாகவே அதனை தெரிந்துகொள்ளும் அவலம்.
இன்னும் ஐந்துநிமிடத்திற்குள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றுவிடலாம். எப்போதும் இதைவிட குறுகிய நேரத்தில் சென்றுவிடலாம்.
ஆனால் இன்றைகென்று பார்த்து பனிபொழிவு வேறு அதிகமாய் இருந்து அவனை சோதித்தது.
“எவ்வளோ ட்ராபிக்?…” என்று பார்த்தவனுக்கு உள்ளுக்குள் அடுத்த அதிர்வு.
“ஓஹ் ஷிட்…” என்றவன் ஆனந்திற்கு அழைத்தான்.
“பாஸ், ஆல்மோஸ்ட் ஓவர்…” என்று எடுத்ததும் அவன் சொல்ல,
“மண்ணாங்கட்டி, நான் எதுக்கு கூப்பிட்டேன்னு கேட்காம நீயா ஆரம்பிக்காத மேன். முதல்ல என்ன சொல்லவரேன்னு கேளு. எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கீங்க பாரு என்னை மாதிரியே…” என்று பல்லை கடிக்க,
“ஸாரி பாஸ்…” என்றான் ஆனந்த் பாவமாக.
“குப்பைல போடு. முதல்ல ட்ராவல்ஸ்க்கு பேசி நாளைக்கு எனக்கு டிக்கெட் கன்பார்ம் பண்ணு. இவ்வளோ பனி பெய்யுது. இதுல ஏர் சர்வீஸ் எப்படின்னு தெரியலை. விசாரி…” என்று உத்தரவிட,
“ஓகே பாஸ்…” என்றான் ஆனந்த்.
அழைப்பை துண்டித்தவன் நிமிர்ந்து பார்க்க, தங்குமிடம் வந்துவிட்டது. சட்டென இறங்கி அத்தனை வேகத்தில் அவனின் அறை நோக்கி ஓட்டமும் நடையுமாய் விரைந்து கதவை திறந்தவன் கையிலிருந்த பேக்கை வீசிவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.
அவனறியாமலே அன்று கையில் அனுஷாவின் குழந்தையுடன் அவள் நின்ற தோற்றம் மனவாசத்தில் எழும்பியது.
நனியிதழ் அனுப்பியிருந்த செய்தியில் முதல் குரல் செய்தியை அவன் தீண்ட அவனின் உயிர் தீண்டியது அவள் அழைப்பு.
கண்ணீருடன், காத்திருப்புடன், கலக்கத்துடன். இப்படி சொல்ல வேண்டியதாகியதே என மருகும் வேதனையுடன் அவனை அந்த ஒற்றை அழைப்பு துளைத்தது.
“இதழ்ம்மா…” என்றவன் உதடுகள் முணுமுணுக்க அவனுக்குமே அந்த குரலை கேட்டு விழிகள் கலக்கமுற்றது.
“ஷிட்…” கண்ணை துடைத்துக்கொண்டான்.
மீண்டும் மீண்டும் அவள் பேசியதை கேட்டவன் அந்த செய்திகளுக்கு அத்தனை முத்தங்கள் பதித்தான்.
“நீங்க அப்பாவாகிட்டீங்க. அம்மாவாகிட்டேன்னு சொல்லாம எப்படி சொல்லியிருக்கா பார். எல்லாத்துலையும் இவ வேற மாதிரி…” என்று சொல்லிக்கொண்டவன் மனது ஏகத்திற்கும் மனைவியின் மடி தேடியது.
சிலநிமிடங்கள் அவன் அந்த குரலுடனே கலந்துவிட்டவன் தன்னை நிதானித்துக்கொண்டு தான் நனியிதழ் எண்ணிற்கே அழைப்பு விடுத்தான்.
எதிர்பார்த்தது தான். அவள் எடுக்கவே இல்லை. அழைப்புகள் எல்லாம் ஏற்கபடாமல் இருக்க,
“கங்க்ராட்ஸ் இதழம்மா…” என்று முத்தங்களுடன் பொம்மைகளை சேர்த்து அனுப்பியவன்,
“கால் அட்டன் பண்ணு இதழ்…” என குரல்வழியாக அவனின் உள்ளத்தவிப்பை அவளுக்கு அனுப்ப செய்தி சேர்ந்துவிட்டது. பார்க்கப்படவில்லை.
“இதழ், இதழ். நான் எப்படி சொல்லி புரியவைக்க? தப்பு தான் நான் பண்ணினது. பெரிய தப்பு தான். ப்ளீஸ் பேசு….” என்று மீண்டும் அனுப்பி,
“ஸாரி கேட்கவாடி?…” என்று பொறுமையிழந்து அனுப்பியிருந்தான்.
எல்லாமே அவளுக்கு சேர்ந்துவிட்டதை காண்பித்தாலும் எதையுமே அவள் பார்க்கவில்லை.
மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தவனுக்கு கிடைத்த அலட்சியம் அவனை கூண்டுப்புலியாக மாற்றியிருந்தது.
அத்தனைமுறை விடாமல் அழைத்தான். இடையில் ஆனந்த் வேறு அவனுக்கு அழைத்து ‘இரண்டு நாட்களுக்கு விமான சேவை ரத்து’ என்று தெரிவிக்க ஆவென்று அறைக்குள் கத்தாத குறை தான்.