முக்கிய அறுவை சிகிச்சையை முடித்தவிட்டு மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஏகாம்பரம் வீட்டினுள் நுழையும் போதே பார்வதி என்று மனைவியை ஏலம் போட்டுக்கொண்டே வந்தார்.
“பார்வதி” என்று குரலை கேட்டு செய்து சமையலறையில் இருந்தவர் உடனே ஹாலிற்கு வரவும் “இதோ இதுல நம்ம நாராயணி ஹாஸ்பிட்டல் சீஃப் கலிவரதன் பொண்ணு கல்யாண பத்திரிகை இருக்கு பூஜையறையில வச்சிடு” என்று பத்திரிக்கையை கொடுக்க அதை வைத்து விட்டு மற்றொரு பத்திரிக்கையோடு வந்த பார்வதி.
“என்னங்க வர புதன்கிழமை சகுந்தலா அண்ணி வீட்டு கிரகபிரவேசம் இருக்குங்க… நேத்து அவங்க பெரிய பையனும் அண்ணியும் வந்து பத்திரிகை வச்சுட்டு கண்டிப்பா நம்மளை குடும்பத்தோட வர சொல்லி இருக்காங்க” என்று பத்திரிக்கையை நீட்டினார்.
“எந்த சகுந்தலா..?” என்ற ஏகாம்பரம் நெற்றியை நீவிட,
“என்னங்க இப்படி கேட்குறீங்க..? உங்க பெரிம்மா பொண்ணு டீச்சரா இருக்காங்களே அவங்க. நான் தான் நேத்தே உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்”
“என்னங்க இப்படி சொல்றீங்க சின்ன வயசுல அவங்க தானே உங்களை தூக்கி வளர்த்தாங்க..”
“அப்படின்னு யாருடி சொன்னா..?”
“அண்ணி தான் சொன்னாங்க”
“சரி அதுகென்ன இப்போ..?”
“இல்லைங்க அவங்க வீட்டு கிரகபிரவேசம்.. நிச்சயம் நாம வரணும் சொன்னாங்க” என்று பத்திரிக்கையை அவர் கையில் திணித்தார் பார்வதி.
“ஏன்டி என் ஸ்டேடஸ் என்ன அவங்க ஸ்டேடஸ் என்ன..? இருக்க இடம் கொடுத்தா மடத்தை பிடிக்கிற ஆட்கள் அவங்க.., நாம தள்ளி இருக்கிறது தான் நல்லது.. யாரை எங்க வைக்கணும்னு எனக்கு தெரியும் நீ போய் வேலையை பாரு “
“என்னங்க பேசுறீங்க? மனுஷங்கன்னா நாலு விதமா இருக்க தான் செய்வாங்க அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா..? அதுவும் இராமநாதன் அண்ணன் எங்க பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும் அவருக்காகவாவது பார்க்க வேண்டாமா..? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைங்க..”
“இதோபார் நீ எவ்ளோ பேசினாலும் என்னால அங்க எல்லாம் வர முடியாது நம்ம தகுதி வேறடி அங்க எல்லாம் போய் நம்மலே அதை குறைச்சுக்க கூடாது, நாம யாரும் போறது இல்லை புரிஞ்சதா..?” என்று பத்திரிக்கையை விசிறி இருந்தார்.
“என்ன பேசுறீங்க அவங்க நம்ம சொந்தம், உங்களுக்கு நியாபகம் இருக்கா இராமநாதன் அண்ணன் கல்யாணத்துல என்னை பார்த்துட்டு தான் அத்தை என்னை உங்களுக்கு பெண் கேட்டாங்க..”
“இப்போ எதுக்குடி பழசை எல்லாம் கிளறிட்டு இருக்க..?”
“நீங்க பேசுறதுக்கு வேற என்ன பண்ண சொல்றீங்க..?”
“ப்ச் பாரு இப்போ இந்த பேச்சு தேவையா..?”
“ஏற்கனவே நீங்க அவங்ககிட்ட சரியா பேச்சு வார்த்தை இல்லாம இருக்கிறதுக்கு என்னமோ நான் தான் காரணம் மாதிரி அவங்க பேசிட்டு போனாங்க இப்போ விசேஷத்துக்கு போகலைன்னா அதுக்கும் என்னை தான் குத்தம் சொல்லுவாங்க”
“இதோபார் பார்வதி முதல்ல இப்படி யார் யாருக்காகவோ பயப்படறதை நிறுத்து அவங்க ஒன்னு விட்ட சொந்தம் தான்.. ஏதோ சின்ன வயசுல அவங்க வீட்ல தங்கி இருந்தப்போ ஏதோ செய்தாங்கன்னா அதையே இத்தனை வருஷமும் பேசுறது அர்த்தமில்லாத பேச்சு அதை எல்லாம் காதுல வாங்காத..”
“சரிங்க ஆனா ப்ரியா வளைகாப்புக்கு அவங்களை கூப்பிடலைன்னு குறை பட்டுட்டு போயிருக்கவங்க இப்போ என்ன பண்ணுவாங்களோன்னு இருக்கு..” என்று பார்வதி கண்ணை கசக்க,
‘ப்ச் பாரு கண்ணை துடை’ என்று தானே மனைவியின் கண்ணீரை துடைத்தவருக்கு எப்போதும் பார்வதியின் கண்ணீரை தாங்கும் சக்தி இருந்ததில்லை.
பின்னே பெரிதாக படிப்பு இல்லையென்றாலும் இத்தனை வருடங்களாக வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளிலும் அவரோடு தோள் கொடுத்து நின்ற மனைவி அல்லவா..? குடும்பத்தை அவர் சிக்கலின்றி நிர்வகித்ததால் தானே அவரால் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்ற முடிந்தது.
பார்வதி அமைதியாக நிற்பதை கண்டு, “இப்போ என்ன பண்ணனும் சொல்லு..?” என்றார் சிறு சலிப்போடு.
“நீங்க கிரகபிரவேசத்துக்கு வரணும்”
“என்னால முடியாது அதை தவிர வேற ஏதாவது சொல்லு, ஏற்கனவே இங்க வரப்போ எல்லாம் சொந்தம்னு சொல்லி ஹாஸ்பிட்டல்ல ஓசில மருந்து மாத்திரை வாங்கிட்டு போறவங்க இப்போ விசேஷத்துக்கு வீட்டுக்கு போனா இன்னும் சுரண்ட தான் பார்ப்பாங்க..”
“புரியுதுங்க ப்ரியா வளைகாப்புக்கு சொல்லலாம்னு சொன்னதுக்கும் நீங்கதான் வேண்டாம் சொல்லிட்டீங்க ஆனா இவ்ளோ தூரம் வீடு தேடி வந்து பத்திரிகை வச்ச அப்புறமும் போகலைன்னா நல்லா இருக்காதுங்க”
“பாரு யாரை எங்க வைக்கனுமோ அங்க வைக்கிறது தான் நமக்கு நல்லது புரிஞ்சிக்கடி”
“ப்ளீஸ் எனக்காகங்க..!! நீங்க வரலைன்னா என்னமோ அதுவும் நான் சொல்லி தான் வரலைன்னு பேசுவாங்க..”
“சரி வரேன் ஆனா அரை மணி நேரத்துக்கு மேல அங்க இருக்க மாட்டேன்… நீயும் என்னை இருக்க சொல்லகூடாது சரியா..?”
“சரிங்க நீங்க வந்து தலை காட்டினா போதும்” என்றவர் மலர்ச்சியோடு கணவனுக்கு காஃபி கலக்க சமையலறைக்கு விரைந்தார்.
***********************************
“ப்பா நாளை என் ஃப்ரெண்டோட பர்த்டே பார்டி இருக்கு ப்பா அம்மாவை கூட்டிட்டு நாளை ஈவினிங் போயிட்டு வரட்டுமா..?”
“என்ன பேசுற மது? இன்னும் எக்ஸாம்க்கு ரெண்டு நாள் கூட இல்லை இப்போ என்ன உங்களுக்கு பார்ட்டி கேட்குது..? யார் இந்த மாதிரி நான்சென்ஸ் க்ரியேட் பண்றது”
“ப்பா என் ஃப்ரெண்டோட அப்பா தான்ப்பா அரேன்ஜ் பண்ணி இருக்கார். இங்க பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தான் சீக்கிரம் போயிட்டு கேக் கட் பண்ணினதும் வந்துடறேனே ப்ளீஸ்ப்பா..”
“லிசன் மது யு ஹவ் லிமிடெட் டைம் ஃபார் யுவர் எக்ஸாம்ஸ் ஸோ பி ஃபோகஸ்ட் ஆன் யுவர் ஸ்டடீஸ்..”
“ப்பா பிரெண்ட்ஸ் எல்லாருமே வருவாங்கப்பா.. கொஞ்ச நேரம் மட்டும் தான் வந்ததும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்”
“ஸோ வ்ஹாட் யார் எப்படி இருந்தாலும் இப்போ இந்த நேரத்துல உனக்கு எந்த டைவர்ஷனும் இருக்ககூடாது போய் படி”
“சரிப்பா” என்று கண்களில் வழியவிருந்த கண்ணீரை கட்டுப்படுத்தியவாறு மௌனமாய் தலை ஆட்டிவிட்டு தன் அறைக்கு திரும்பினாள்.
அதற்குள் அவளை அழைத்த சவிதா குழந்தையை பார்த்து கொள்ள சொல்லிட குழந்தையை தூக்கி கொண்டு பால்கனிக்கு வந்தவள் அவனுக்கு ராகி கூழை ஊட்டிவிட்டவாறே கீழே பார்க்க அங்கே ரகு மற்ற வேலை ஆட்களுடன் பேசிக்கொண்டே கார்களை துடைத்து கொண்டிருந்தான்.
அவனிடம் செல்ல துடித்த கால்களை கட்டுபடுத்தி கொண்டு நின்றவள் குழந்தைக்கு ஊட்டி முடித்து சவிதாவிடம் கொடுத்திட மருமகளுக்கு பரிமாறி கொண்டு இருந்த பார்வதி மகளை உணவிற்கு அழைத்த போதும் வேண்டாம் என்று மறுத்து சென்று விட்டாள்.
மதுவர்த்தினிக்கு அடுத்த இருநாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடங்குவதால் தனதறையில் அமர்ந்து தீவிரமாக படித்து கொண்டிருந்தவள் பரீட்சை அன்று அதிகாலை முதலே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாள்.
அவள் சாப்பிட அமரவும் “படிச்சதெல்லாம் நியாபகம் இருக்கு தானே.. நம்பர் சரியா போடணும் எந்த கேள்விக்கும் பதிலளிக்காம வரகூடாது. டிராயிங் ஒழுங்கா வரைஞ்சு கரெக்டா பார்ட்ஸ் மார்க் பண்ணனும், பென்சில் ஷார்ப்னஸ் இருக்கணும், ஒரு முறைக்கு இரண்டு முறை செக் பண்ணிட்டு பேப்பரை கொடுக்கணும்” என்று அப்பாவில் தொடங்கி அண்ணன்கள் வரை ஒவ்வொருவராக அவளுக்கு அறிவுரை வழங்க அவர்களை வெறுமையாக பார்த்திருந்தாள் மது.
படிப்பை தவிர பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என்பது போல அவளை கடந்து செல்பவர்களை ஏக்கமாக பார்த்து நின்றவள் பின் பார்வதியிடம் சொல்லி கொண்டு பூஜையறையில் வணங்கி விட்டு பள்ளிக்கு கிளம்பினாள்.
ரகு அவளுக்கு பின்புற கதவை திறந்து விட அதை அறைந்து சாற்றியவள் ஏனோ மனம் நிலை கொள்ளாமல் தவித்ததில் அவனை முறைத்தவாறே முன்னே வந்து அமர்ந்தாள்.
“என்ன என் வனிம்மாக்கு இன்னைக்கு கோபம் அதிகமா இருக்கு போலவே, இது நல்லது இல்லையே” என்று இரு தெருக்கள் தாண்டியதும் ஒற்றை கரத்தால் ஸ்டேரிங்கை பிடித்தவாறு கியர் மாற்றிக்கொண்டே தலை சரித்து கேட்டான் ரகு. அவளோ எதிரே இருந்த கண்ணாடியினூடே சாலையை வெறித்தவாறு இன்னும் கோபம் குறையாமல் அமர்ந்திருந்தாள்.
“வனிம்மா இன்னைக்கு பரீட்சைக்கு படிச்சிடீங்களா..? நேத்து கூட ஐயா சொல்லிட்டே இருந்தாரு வனிம்மா கண்டிப்பா நீங்க டாக்டர் ஆகிடுவீங்க தானே ..? அது தான் ஐயாவோட ரொம்ப நாள் கனவு” என்று மீண்டும் கேட்க,
மதுவோ மெல்லிய குரலில் கையில் இருந்த புத்தகத்தை வருடியவாறே, “இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம் முடிஞ்சிடும் ரகு அதுக்கு அப்புறம் ஸ்கூல் போக முடியாது உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. வீட்ல இருக்கிறப்போ உன்னை நினைச்சபோது வந்து பார்க்க முடியாது மத்தவங்க முன்னாடி உன்கூட பேச முடியாதுன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீ என்னடான்னா என்னை பத்தின கவலையே இல்லாம உங்க ஐயாவோட கனவை பேசுற..” என்று ஆதங்கமாக பார்க்கவும்,
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இருகரங்களாலும் தன் காதை பிடித்து கொண்டு, “தப்பு தான் ஸாரி..! ஸாரிடா வனிபாப்பா இனி இப்படி பேச மாட்டேன்.. எனக்குமே உன்னை பார்க்காம உன்கூட நேரம் செலவிடாம எப்படி இருக்க போறேன்னு இருக்கு..” என்றதில் தன் மீதான அவன் அன்பும் கரிசனமும் அவளுக்குள் ஒருவித கர்வத்தை ஏற்படுத்த அவன் மன்னிப்பை ரசித்தவள் ரகுவை நெருங்கி தலைமுடியை கலைத்து விட்டுக்கொண்டே,
“சரி.. சரி.. போதும் நான் மனசு விட்டு பேசுறது உங்கிட்டதான், அதுவும் இப்படி ஸ்கூல் போற, வர டைம்ல தான் இனி அதுவும் இல்லைன்னு ஆகவும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு.., நீயும் திரும்ப திரும்ப படிப்பு, டாக்டர்ன்னு பேசாத எனக்கு பிடிக்கலை” என்றவள் தாடி அடர்ந்த அவன் கன்னத்தை தன் கரங்களில் ஏந்தி “புரிஞ்சிக்கோ ரகு!” என்றாள்.
இதழில் உதித்த வெற்றி புன்னகையோடு, “உன்னை விட்டா எனக்கு மட்டும் யாருடி இருக்கா..? என்னை மனுஷனா மதிக்கவும் இவ்ளோ ஏன் என்னை சாப்பிட்டியானு கேட்கவும் கூட யாரும் இல்ல…, நீ இல்லைன்னா இந்த ரகு இல்லை நீயும் புரிஞ்சிக்கோ வனிம்மா !!” என்றவாறே, அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.
மறுப்பு ஏதும் சொல்லாமல் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் தலை கோதியவன் ஒரு கட்டத்தில் அவள் விழிகளின் ஈரம் உணர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தி தன் கைக்குட்டை கொண்டு துடைத்து விட்டவாறே, “வனிம்மா என்ன இது வர வர சின்ன விஷயத்துக்கு கூட நீ ரொம்ப அழ ஆரம்பிச்சுட்ட..?” என்ற போதும் அவள் அழுகை நிற்காமல் இருப்பதை கண்டவன்,
“பரிட்சைக்கு நேரமாச்சு இப்படியே அழுதுட்டு இருந்தா எப்படி எழுத முடியும் அப்புறம் அம்மா அப்பா எல்லாரும் ஆசைபட்ட மாதிரி நீ எப்படி டாக்டராக முடியும்..?” என்றதும் “வேண்டாம்” என்றாள் உறுதியான குரலில்.
“என்ன வனிம்மா பேசுற …?”
“ஆமா எனக்கு டாக்டர் ஆக வேண்டாம் நீ தான் வேணும் ரகு..!! டாக்டரானா சந்தோஷமா இருக்கமாட்டேன் உன்கூட இருந்தா மட்டுமே எனக்கு சந்தோஷம், என்னை உன் கூடவே கூட்டிட்டு போயிடுறியா ரகு..?” என்று கண்களை துடைத்துக்கொண்டே நிமிர்ந்து அமர்ந்தவள் ஏக்கத்துடன் கேட்க,
“என்ன பேசுறன்னு புரிஞ்சிதான் பேசுறியா வனி..?”
‘ஹும்’ என்று முனங்கியவள், “எனக்கு வீட்ல இருக்கவே பிடிக்கலைடா எப்ப பார்த்தாலும் படி படின்னு படிப்பை பத்தியே எல்லாரும் பேசுறாங்க.. யாருக்குமே என்னை பற்றின கவலை இல்ல உடம்புக்கு முடியலைன்னா கூட எங்கம்மா என் பக்கத்துல இல்லாம அண்ணிகளுக்கு வேலை செய்ய போயிடுவாங்க” என்றவளுக்கு மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.
“அண்ணன் எல்லாம் இப்போ சரியாவே மூஞ்சி கொடுத்து பேசுறது இல்லை…. அப்பா பேசுறதே அபூர்வம் அப்பவும் நல்ல படிக்கணும் டாக்டர் ஆகணும்னு இதையே தான் சொல்லிட்டு இருக்காங்க ஆனா நீ மட்டும் தான் எனக்கு என்ன பிடிக்கும் என்ன வேணும்னு பார்த்து பார்த்து செய்யற எனக்கு உன்கூட இருக்க நிமிஷம் தான் சந்தோஷமா இருக்கு தெரியுமா..??”
“அதுக்காக..?” என்ற ரகு புருவம் தூக்கி பார்க்க, இதழ்களை அழுந்த பற்றி கண்ணீரை அடக்கி அவனை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் போனது.
“வனிக்குட்டிக்கு இன்னைக்கு என்ன ஆச்சு..? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க போல இப்போ எதையும் யோசிக்க வேண்டாம்…, நல்ல படியா எக்ஸாம் எழுதுங்க எதுவா இருந்தாலும் நாம அப்புறம் பேசிக்கலாம்” என்றவன் இன்னும் அவள் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு,
“வனிம்மா” என்று அழைக்க அவளிடம் அசைவில்லை,
“வனிக்குட்டி” என்று அவளை நெருங்கி முகம் நோக்கி குனிந்திட அப்போதும் அவனை பார்த்தவளிடம் அசைவில்லை உடனே அவள் கண்களை ஒரு கரம் கொண்டு பொத்தியவன், காரின் டேஷ்போர்டில் இருந்து நூறு ரூபாய் மதிப்புள்ள சாக்லெட்டை எடுத்து அவள்முன் நீட்டி இப்போது கண்களை திறந்தான்.
சாக்லெட்டை கண்டவளின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம் தோன்ற குழந்தையாய் ஆர்பரித்து கொண்டு சாக்லெட்டை ருசிக்க தொடங்கியவளின் முகத்தில் புன்னகை நிறைந்து போனது அதில் திருப்தியுற்றவனாய் காரை எடுத்திருந்தான் ரகு.
அவளோ பின்புறமிருந்து தன் பையை எடுத்து அதிலிருந்து பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“என்னடி இது! எதுக்கு?”
“இது எனக்கு அம்மா அப்பப்போ கேண்டீன்க்கு கொடுத்தது ரகு சேர்த்து வச்சிருந்தேன் “
“அதை எதுக்கு என்கிட்ட கொடுக்குற…??”
“ஏன் நான் கொடுக்ககூடாதா ..? என்கிட்ட வாங்கிக்க மாட்டியா..? வாங்கு டா!!” என்று அதட்டினாள்.
பணத்தை தொடாமல் அவளையே பார்த்தவன் “எதுக்குன்னு சொல்லு” என்றான் கரகரத்த குரலில்.
“ஏற்கனவே உன்னோட அம்மாக்கு உடம்பு முடியலை, வீட்டு செலவுல இருந்து எல்லாமே உன் ஒருத்தனோட சம்பாத்தியம் தானே..? இதுல எனக்கு வேற அப்பப்போ சாக்லேட், கிஃப்ட்னு கொடுக்குற உனக்கு செலவு இருக்கும் தானே வச்சிக்கோ..?”
அதுநேரம் வரை அழுத்தமாய் படிந்திருந்த அவன் பார்வையில் மெல்ல கடுமை ஏற, “இந்த மாதிரி இன்னொரு முறை என்னை அசிங்கப்படுத்துன இழுத்து வச்சு அறைஞ்சிடுவேன்.. உள்ள வைடி!” என்று சீறி இருந்தான்.
“ரகு” என்று மது அதிர்ச்சியுடன் அவனை பார்க்க..,
“உள்ள வைன்னு சொன்னேன் மதுவர்த்தினி” என்றவனின் குரலில் இருந்த கர்ஜனை அவளை மேலும் பேசவிடாமல் செய்ய கலங்கிய விழிகளுடன் அவனை பார்த்தவள் தன் பையை எடுத்துக்கொண்டு காரை விட்டு இறங்கினாள். ரகுவோ ஸ்டேரிங்கை இறுக பற்றிக்கொண்டு இருக்க மது அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றாள்.
பள்ளியினுள் நடந்து சென்றவளையே பார்த்துக்கொண்டிருந்தவனின் இதழ்களோ எள்ளலாய் வளைந்தது.
***************************
பரீட்சை அறையில் அமர்ந்திருந்த மதுவின் மனம் பரீட்சை எழுதுவதில் செல்லாமல், ரகுவின் உரிமையான அழைப்பிலும், கண்டிப்பிலும், சுழன்று கொண்டிருந்தது.
கடந்த ஆறு மாதங்களாய், இருவரும் ஒருவரோடு ஒருவர் நன்றாக பேசி புரிதல் கொண்டிருந்தாலும் அவர்களின் காதல் எல்லைக்குள்ளேயே பயணித்தது. அந்நிய ஆடவரை தொட்டுப் பேசி பழக்கம் இல்லாதவள், ஏனோ இன்று திடீரென உணர்ச்சிவசப்பட்டு அவன் கன்னம் தாங்கியதையும் அவன் நெஞ்சில் சாய்ந்ததையும் நம்பமுடியாமல் அமர்ந்திருந்தாள்.
அதை எண்ணி ஒருபுறம் வெட்கமும் மறுபுறம் பயமும் கொண்டவளுக்கு எங்கே தானாக அவனை நெருங்கியதால் தன்னை தவறாக எண்ணிக் கொள்வானோ!! என்று மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது. ஆசிரியர் வந்து மேஜையை தட்டி அவளை நினைவுலகுக்கு அழைத்து வந்திருந்த பின்னரே தான் அமர்ந்திருப்பது தேர்வு அறை என்றும் தேர்வு எழுத அமர்ந்துள்ளோம் என்பதும் புரிய வினாத்தாளை கையில் எடுத்து படிக்க தொடங்கினாள்.
ஒருவழியாய் தேர்வை எழுதி முடித்தவள் விடைத்தாளை ஆசிரியரிடம் சேர்த்துவிட்டு, தேர்வு அறையை விட்டு வெளியில் வந்தாள். புத்தகப்பையை வைத்திருந்த அறையை நோக்கி சென்றவளை தோழிகள் சூழ்ந்து கொண்டனர்.
அவள் பிறந்த நாள் பார்டிக்கு வராததை குறித்து கேள்வி கேட்டு அதற்கு தண்டனையாக அனைவருக்கும் இன்று அவள் தான் வாங்கி தர வேண்டும் என்று அவளை இழுத்து கொண்டு கேண்டீன் சென்றனர். அங்கு அனைவருக்கும் வேண்டிய குளிர்பானமும் நொறுக்கு தீனிகளையும் வரவழைத்து அரட்டை அடித்தவாறே அனைத்தையும் உண்டு முடித்து கிளம்பி இருந்தாள் மது.
பின்புறத்தில் புத்தகப்பையை வைத்துவிட்டு தன்னருகில் அமர்ந்திருந்தவளை பார்த்துக்கொண்டே வண்டியை எடுத்தான் ரகு. அவன் புறம் திரும்பி அமர்ந்தவள், அவன் பார்வையின் மாற்றம் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டாள்.
பின் தலை குனிந்து அமர்ந்தவள்… தன் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக்கொண்டு அதைப் பார்த்தவாறே அவனிடம், “ஸாரி ரகு நான் அப்படி செய்திருக்க கூடாது… தெரியாம செஞ்சுட்டேன்” என்றாள்.
அவன் சிரிப்பில் பதிலளிக்க முடியாமல் வெட்கத்தோடு மறுபுறம் திரும்பி அமர்ந்து ஜன்னல் வழியே பார்த்திருந்தவள், “ஒன்னுமில்ல அது, அதுவந்து… காலையில உன் கன்னத்தை பி..பிடிச்… ச்சு அது நான் உன்னை கோபபடுத்திட்டேன் இல்ல… அதுக்குத்தான் ச… ச… ஸாரி சொன்னேன்” என்று முற்றுப்புள்ளி வைக்க முயல அவனோ அதை காற்புள்ளியாக்கி தொடர எண்ணி வண்டியை ஓரம் கட்டியவன் அவள் புறம் திரும்பி அவள் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு… அவள் விழிகளை உற்று பார்த்து,
“ஏன்டா வனிம்மா.. நீயாகவே ஒரு விஷயத்தை தப்பு அதை நான் பண்ணி இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணுற..? என் மேல உனக்கு இல்லாத உரிமையா? நீ என்னை, என்ன வேணும்னாலும் பேசலாம், என்ன தோணுதோ செய்யலாம் அதுக்கு முழு உரிமை பட்டவ நீதான்டி..! ஏன் நீ தொட்டா நான் என்ன கரைஞ்சா போயிட போறேன் லவ்வர்ஸ்க்கு நடுவுல இதெல்லாம் சகஜம் வனிக்குட்டி நீ தான் எதுவும் தெரியாத பாப்பாவா இருக்க..’ என்று அவள் நெற்றிமுட்டி சிரித்தவன்,
“இனிமேல் கண்டதையும் யோசிச்சு சும்மா இந்த மாதிரி பேசுறது விட்டுடு… இது இந்த பயம் தேவையில்லாதது..!!” எனவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“ஆனால் இது? இப்படி உன்னை.. நான்.. இது தப்பில்லையா..?” என்று மெல்லிய குரலில் கேட்கவும் வெடித்து சிரித்தவன் அவள் கன்னத்தை கிள்ளி தன் உதட்டில் ஒற்றியவாறே, “எது.. எது தப்பில்லையா?” என்று குறையாத சிரிப்போடு கேட்கவும் மதுவிற்கு என்ன பதிலளிப்பது என்று புரியவில்லை.
“ஏன் வனிக்குட்டி அவனவன் காதலிக்கும் போது என்னென்னமோ பண்றான் நீ என்னடான்னா முதல்முறை என் கன்னத்தைப் பிடிச்சு நெஞ்சில் சாய்ந்ததுக்கு கொடுக்குற பில்டப் இருக்கே அப்பப்பா ரொம்ப ஜாஸ்தி சொல்லிட்டேன்” என்று அடக்க மாட்டாமல் சிரித்தான்.
‘ரகு’ என்றவளின் முகத்திலும் சந்தோஷ கீற்று தென்பட என்றும் போல் அவன் சிரிப்பில் இன்றும் தொலைந்து போனாள் பாவை. அவளை மீண்டும் தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவன், “காதலிலும் போரிலும் எதுவுமே தப்பில்லைன்னு சொல்லுவாங்க வனிம்மா நீ கேள்வி பட்டதில்லையா..?” என்று கேட்டு அவளுக்கு காதல் பாடம் நடத்த தொடங்கி இருந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.