கர்ணாவின் கைபேசி ஒலிக்கவும், “மச்சி இந்த லிஸ்ட் கொடுடா அக்கா கூப்பிடுறாங்க நான் பேசிட்டு வரேன்” என்றவன் கையில் இருந்த நான்கு பட்டியலில் குறிப்பிட்ட ஒன்றை எடுத்து பிரேமிடம் கொடுத்து விட்டு நகர்ந்து வந்து அழைப்பை ஏற்றான்.
“சாப்ட்டியா கர்ணா..?”
“இன்னும் இல்லக்கா..” என்றவனுக்கு வேலை மும்முரத்தில் பசி எல்லாம் தூர பறந்திருந்தது. பின்னே நாளை கிரகபிரவேசம் நடக்கவிருக்கும் நிலையில் வேலன் பணத்தை மட்டும் கறாராக எண்ணி கொடுத்து விட்டு அதற்கு சரியான கணக்கு கொடுக்க வேண்டும் என்றுவிட்டு ஒதுங்கி கொள்ள ஒற்றை ஆளாய் பம்பரமாய் சுழன்று அத்தனை ஏற்பாடுகளையும் பிரேமின் துணையுடன் செய்து கொண்டிருக்கிறான்.
“ஏன்டா காலைல டிஃபன் பண்ணிட்டு போன்னு சொல்லியும் அவசரமா கிளம்பிட்ட மணி மூணு ஆக போகுது கர்ணா இப்பவும் சாப்பிடாம சுத்தினா உடம்பு என்னத்துக்கு ஆகுறது..?”
“க்கா இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன் வேற ஏதாவது வாங்கனுமா சொல்லுங்க கையோட வாங்கிட்டு வந்துடுறேன்..” என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே பாரதியிடம் இருந்து ஃபோனை வாங்கிய ஜெயா,
“ஏய் ஜெயா என்ன உன் இஷ்டத்துக்கு லிஸ்ட் போட்டுட்டே போற..? ஏற்கனவே உன் தம்பி ஒவ்வொனுத்துக்கும் பைசா எண்ணி கொடுத்திருக்கான் அதுக்குள்ளே செலவை முடிக்க சொல்லி”
“ஏன் இவன் என்ன சொந்த பணத்துலயா வாங்க போறான் எல்லாம் எங்க அப்பா பென்ஷன் காசுதானே ..?” என்று ஜெயா தங்கையிடம் மல்லுக்கு நிற்கவும்,
“ஏன் இதையே போய் உன் தொம்பி கிட்ட சொல்லி அவனை வாங்கிட்டு வர சொல்ல வேண்டியது தானே..?”
“ஏன் என் தம்பி என்ன வேலை வெட்டி இல்லாத வெட்டி பயலா..? அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்”
“உனக்கு எதுவும் வேணும்னா உன் தொம்பியை கேளு சாப்பிடாம கூட எல்லாத்தையும் செய்திட்டிருக்க இவனை உங்களுக்கு நடுவுல இழுக்காதன்னு தான் சொல்றேன்”
“ஏன் இவன் எனக்கு தம்பி இல்லையா..? அக்காகாக செலவு பண்ணமாட்டானா..?”
“அவன் சம்பாதிக்கும் போது நீ கேட்காமயே செய்வான் ஆனா இப்போ காசு..” என்று பேசிக்கொண்டு சென்ற பாரதியை தடுத்த கர்ணா,
“ஜெயாக்கா நீங்க சொன்னதெல்லாம் வாங்கிட்டு வரேன் வேற எதுவும் வேணுமா..??’
‘ஆமா எனக்கு வெயில் பாடா படுத்துறது பிரெஷ் ஜூஸ் வாங்கிக்கோ பசங்களுக்கு பாதாம் பால் , ஐஸ்க்ரீம் அப்புறம் வேற எதுவும் வேணும்னா சொல்றேன்’ என்றவர் பாரதியை முறைத்து விட்டு உள்ளே சென்றார்.
‘டேய் அவ சொல்றதை எல்லாம் வாங்காத அப்புறம் அந்த கணக்கு தேவை இல்லாம பிரச்னையை கிளப்புவான்.. உன் கைல காசு ..’ என்ற பாரதியிடம்
‘அதெல்லாம் இருக்குக்கா அங்க பந்தல் சேர் டேபிள் வந்துடுச்சா, சமையல் சாமான் எல்லாம் வந்துடுச்சா பாருக்கா.. நான் சீக்கிரம் வரேன்’ என்ற கர்ணா தன் பேச்சை முடிக்கும் வேளையில் அங்கு வந்து சேர்ந்தான் பிரேம்.
“மச்சி நீ சொன்னதெல்லாம் வாங்கிட்டேன் சரியா இருக்கா பாருடா” என்று கொடுக்க அதை சரி பார்த்து இருவரும் பையோடு நடக்க அவர்கள் எதிரே வந்து கொண்டிருந்த மைதிலி “என்னங்க” என்று அழைத்திருந்தாள்.
அதை கண்டு கொள்ளாமல் கர்ணா நடக்கவும், “மச்சி மைதிலிடா..” என்று பிரேம் அவன் காதை கடித்தான்.
“எல்லாம் எனக்கு தெரியும்டா வெண்ணை நீ அமைதியா வா” என்று கர்ணா முன்னால் நடக்க அவனை பின் தொடர்ந்த மைதிலி “என்னங்க உங்களை தான் ஒரு நிமிஷம் நில்லுங்க முக்கியமான விஷயம் பேசணும்” என்றவாறு கிட்டத்தட்ட ஓடி வந்தாள்.
“ப்ச் இவளெல்லாம் திருந்தவே மாட்டாளா? என்ன நெனச்சிட்டு இருக்கா மனசுல! விலகி போனா விட்டு தொலைய வேண்டியது தானே, பின்னாடியே வந்தா மட்டும் நெனச்சதை நடத்திடலாம்னு நெனைக்குறாளா? என்று கோபத்தோடு தலையை அழுத்தமாய் கோதியவாறே வேகமாய் செல்ல ஆரம்பித்தான்.
“என்னங்க ஒரு நிமிஷம்”
“என்ன வேணும் உனக்கு..?” என்று ஒரு நொடி தன் நடையை நிறுத்தியவன் மார்கெட்டில் இருப்பவர்களில் சிலரின் பார்வை இவர்கள் மீது படிவதை கண்டு, “பக்கத்துல இருக்க கோவில்ல இருக்கேன் அங்க வா பேசிக்கலாம்” என்று வண்டியை கிளப்ப அவன் பின்னே அமர்ந்த பிரேம்,
“மச்சி அந்த பிள்ளை சொன்ன புரிஞ்சிக்கும்டா நீ ஏன் இவ்ளோ கோபமா இருக்க பொறுமையா பேசுடா..”
“டேய் எத்தனை முறைடா சொல்றது அப்பவும் தான் நினைச்சது மட்டுமே நடக்கணும்னு இருக்கவ கிட்ட என்ன பேச சொல்ற..? பாவம்டா அவங்க அம்மா ஒரு ஆளா இருந்து இவளை வளர்த்துட்டு இருக்காங்க ஆனா இந்த பொண்ணு கொஞ்சமும் அதை புரிஞ்சிக்காம… ப்ச் அவங்களை பத்தின கவலை கூட இருக்காதா..?” என்று கேட்டவாறே வண்டியை கோவிலை நோக்கி செலுத்தினான்.
அவன் ஊரை சேர்ந்த தையல்காரரின் மகளான மைதிலி கர்ணாவை கடந்த ஒரு வருடமாக காதலிக்கிறாள். பள்ளி படிப்பின் இறுதியில் இருந்த மைதிலி முதலில் ஈர்ப்பாக இருந்ததை கடந்த ஒரு வருடத்திருக்கு முன் காதல் என்ற புள்ளியில் கொண்டு நிறுத்தி இருந்தாள்.
பலமுறை மைதிலியை அவள் வீட்டிலும் வெளி இடங்களிலும் சந்தித்ததில் அவள் பார்வையின் செய்தி புரிந்தாலும் அதை என்றுமே ஊக்குவிக்கும் விதமாக அவன் நடந்து கொண்டது இல்லை.
கரை சேராது படகு இது என்பதால் கர்ணா அவளை கண்டுகொள்ளாமல் சென்று விடுவான். ஆனால் நாட்கள் மாதங்களான போதும் கர்ணாவிடம் எதிர்வினை இல்லாமல் போகவும் ஒரு நாள் அவனை தடுத்து நிறுத்தியவள்,
“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்துப்பிங்கனும் புரியல !! ஆனா எனக்கு ரொம்ப நாளா இதை மனசுக்குள்ள வெச்சுட்டு இருக்குறது ரொம்பவே பாரமா அழுத்திட்டு இருக்கு” என்று தாவணியின் முந்தானையை பிடித்து சுழற்றி கொண்டே பேச்சை தொடங்கிவிட்டாள்.
“சொல்லுங்க” என்றவன் சுவரில் கால் பதித்து சாய்ந்து நின்று கொண்டான்.
“இப்படி நான் வந்து உங்ககிட்ட பேசுறது சரியா தப்பா? இதனால என்னை தப்பா நெனச்சிடுவீங்களான்னு கூட எனக்கு தெரியல, இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே போயிட்டு இருக்கும்னு ஒரு பயம், ஆனாலும் இத சொல்லாம இருந்து கஷ்டபடறதுக்கு சொல்லிட்டா நல்லா இருக்கும்னு ஒரு எண்ணம், ஆனா.. ” என்று சுற்றி வளைக்க,
“எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு, உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்” என்று ஒருவழியாய் தன் மனம் திறந்து காதலை அவனிடம் கூறிவிட்டாள். மைதிலி பேசி முடிக்கவும் வரை அவளை தீர்க்கமான பார்த்து கொண்டிருந்த கர்ணா, மிக மிக அழுத்தமான குரலில், “இது சரிப்பட்டு வராது விட்டுடுங்க” என்றான்.
“ஏன்..? நீங…” என்று ஆரம்பித்தவளுக்கு அந்த கேள்வியையே கேட்க பிடிக்கவில்லை இருப்பினும் கேட்டால் தானே பதில் தெரியும் அதனால் எச்சில் கூட்டி விழுங்கியவள், “நீங்க வேற யாரையாவது காதலிக்கறீங்களா..??” என்று கேட்க,
“ஒருத்தரை மறுக்க இன்னொருத்தரை விரும்பனும்னு எந்த அவசியமும் இல்லை., இது சரி படாது இத்தோடு விட்டுடுங்க இது தான் ரெண்டு பேருக்கும் நல்லது” என்று அவள் மனம் காயபடாதவாறு தன்மையாய் சொல்லி பார்த்துவிட்டான்.
ஆனால் இன்று வரையிலும் அவன் மீதான பார்வையை மைதிலி மாற்றாது தான் கொண்ட நிலையிலேயே இருப்பேன் என்று தன்னை பின் தொடர்வதில் இறுதியாக அழைத்து கண்டித்தவன் பிறகு “எக்கேடோ கேட்டு போ!” என்னும் நிலைக்கு வந்துவிட்டான்.
எதிரில் இருந்த கோவில் குளத்தில் பார்வை பதித்து நினைவுகளில் மூழ்கி இருந்தவனை “என்னங்க” என்ற மைதிலியின் குரல் மீட்டது. அவள் எதை பற்றி பேச போகிறாள் என்பதை அறிந்தவனாய், இன்று இதற்கு ஒரு முடிவு காட்டியே ஆகவேண்டும் என்று எண்ணி, “சொல்லுங்க” என்றான்.
“இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டார் வராங்க எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை உங்க கிட்ட சொன்னதுக்கு நீங்க சரியான பதில் சொல்லல அதான்..” என்று இழுக்கவும்
“என்ன பதில் சொல்லணும்”
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா..? ரெண்டில் ஒன்னு சொல்லுங்க நான் இப்பவே கிளம்பறேன்”
“இதோ பாருங்க அன்னைக்கே தெளிவா என்னோட முடிவை சொன்ன பிறகும் இப்படி கேட்கிறது முட்டாள் தனமா தோணலையா..? மாப்பிள்ளை பார்த்திருக்காங்கன்னா கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருங்க அதை விட்டுட்டு எந்த நம்பிக்கையில என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்கன்னு புரியலை” என்றவன் கோபத்தோடு திரும்பி நடக்க,
“ஏங்க ஒரு நிமிஷம் நில்லுங்க! ப்ளீஸ் உங்களுக்கும் என்னை பிடிக்கும்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன் அட்லீஸ்ட் நீங்க வேண்டாம் சொல்றதுக்கு காரணம் சொல்லுங்க எதுவும் தெரியாம என்னால இங்க இருந்து போக முடியாது” என்று பிடிவாதம் பிடிக்க,
“இங்க பாருங்க நான் என்னைக்கும் உங்க பின்னாடி வந்தது இல்லை காதலிக்கிறேன்னு சொன்னது இல்லை நீங்களா மனசுக்குள்ள ஆசையை வளர்த்துகிட்டதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்..?” என்றவன் பேச்சு முடிந்தது போல திரும்பி நடந்தான்.
“ஏன் அப்படி சொல்றீங்க இப்போ உங்களுக்கு வேலை இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க கண்டிப்பா பெரிய ஆளா வருவீங்க’ என்று தன் காதல் நிராகரிக்கப்பட்டதை தாங்க இயலாத மைதிலியோ விடாது அவனை பின்தொடர்ந்து கேட்க,
அதில் சலிப்புற்றவன் தன் நடையை நிறுத்தி அவளிடம், ‘நீ’ என ஆரம்பித்து பின்னர் எதையோ நினைத்தவனாய் ‘நீங்க’ என்று அதை மாற்றியவன்,
“நிறைய படம் பார்ப்பீங்களா..?? அதான் இப்படி உளறிட்டு இருக்கீங்க..? மைதிலி நீங்க இப்படி என் பின்னாடி வருவது உங்களுக்கு நல்லது இல்ல யாராவது பார்த்தா உங்களுக்கு தான் கஷ்டம் வேண்டாம் கிளம்புங்க, இதையும் மீறி வந்தீங்கன்னா நான் அடுத்து உங்க அம்மா கிட்ட பேச வேண்டி இருக்கும்” என்றவன் அவனை தடுக்க முயன்ற நண்பனையும் முறைத்துவிட்டு மறுநொடியே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
*******************************
“நாளைக்கு என்ன எக்ஸாம் மதும்மா..?”
“மேத்ஸ் ப்பா”
“ரிவிஷன் பண்ணிட்டியா..?”
“பண்ணிட்டு இருக்கேன்பா”
“குட் !! என்ன தான் மெடிசன் உன்னோட எய்மா இருந்தாலும் அதுக்காக மத்த சப்ஜெக்ட்ல கேர்லஸ்ஸா இருக்க கூடாது இந்த ஏகாம்பரம் பொண்ணு எல்லாத்துலயும் டாப்பரா இருக்கணும் புரிஞ்சதா..?” என்று பேச எதிரே இருந்த சவிதாவோ,
“நீங்க கவலையே படாதீங்க மாமா நான் எதுக்கு இருக்கேன்.. லாஸ்ட் மன்த்தே மதுக்கு ரிவிஷன் கொடுத்துட்டேன் நீங்க வேணும்னா பாருங்க கண்டிப்பா சென்டம் எடுப்பா..” என்று கூற மது கசந்த புன்னகையுடன் அவளை பார்த்திருந்தாள்.
“அட மறந்தே போயிட்டேன்ம்மா நீயும் ப்ரியாவும் வந்த பிறகு தான் மதுவோட ஸ்கோர் எப்பவும் இல்லாத அளவு அதிகமாச்சு நானும் அவளோட படிப்பு பத்தின கவலை இல்லாம இருக்கேன் உங்களை மாதிரி அண்ணி கிடைச்சதுல மது இஸ் சோ லக்கி”
“அப்படி எல்லாம் இல்ல மாமா புலிக்கு பிறந்தது எப்படி பூனையாகும் எல்லாம் உங்களோட ஞானம் தான் !! அப்படியே உங்களை கொண்டு இருக்கா உங்க பொண்ணு.., நீங்க வேணும்னா பாருங்க கண்டிப்பா மது ஸ்டேட் லெவல் ரேன்க் எடுப்பா… என்ன மது எடுப்ப தானே..?”
அவளோ தொண்டையில் சிக்கிகொண்ட உணவோடு ‘ஹ்ம்ம்’ என்று தலையசைத்து வைத்தாள்.
“அப்பா நம்ம மதுக்கு நீட் கோச்சிங்க்கு அட்மிஷம் வாங்கிட்டேன் காலையிலேயே உங்ககிட்ட சொல்ல நெனச்சேன் மறந்தே போயிட்டேன்..” என்ற செந்தில் கேட்கும் முன்னமே ஓடி சென்று மதுவின் அட்மிஷன் கார்ட்டோடு திரும்பினாள் சவீதா.
“இது சென்னையில நம்பர் ஒன் கோச்சிங் செண்டர்ப்பா, பல டாக்டர்ஸ சக்சஸ்புல்லா வருஷா வருஷம் கொடுத்திருக்காங்க இங்க அட்மிஷன் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்..”
“அப்படியா..?”
“ஆமாப்பா இதுவும் சவியோட ஏற்பாடு தான் அவளோட ஒண்ணுவிட்ட அண்ணன்கிட்ட சொல்லி அவர் இன்ப்ளியுன்ஸ்ல நம்ம மதுக்காக ஏற்பாடு பண்ணி இருக்கா”
“வெல் டன் சவிம்மா! பாருக்கு அடுத்து மதுக்கு என்ன தேவைன்னு சரியா புரிஞ்சு வச்சிருக்க குட்..!” என்று மருமகளை பெருமிதமாக பார்த்தார்.
சவிதாவோ சிறு புன்னகையுடன் அவருக்கு தலையசைத்தவள் சமையலறை சென்று அவருக்கான பாலை மிதமான சூட்டில் ஆற்றி எடுத்து கொண்டு வந்து ‘மாமா உங்களுக்கு பால்’ என்று நீட்ட வாங்கிகொண்டவர்,
“ஆமாப்பா மது எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாளில் இருந்தே ஆரம்பிக்குது நாம நல்லநாள் பார்த்து அவளை சேர்த்துட்டு வந்துடலாம்”
“சவிம்மா கொஞ்சம் சிரமம் பார்க்காம எக்ஸாம் முடியற வரை மதுகூட இரும்மா”
“என்ன மாமா இதெல்லாம் நீங்க சொல்லனுமா..? இதைவிட வேற என்ன பெரிய வேலை எனக்கு இருக்கு மது என் பொறுப்பு அவளை நான் பார்த்துக்குறேன் நீங்க கவலையை விடுங்க”
“ரொம்ப சந்தோஷம்.. அந்த வாரம் நல்லநாள் எப்போன்னு பாரும்மா”
“நல்ல விஷயம் செய்ய முடிவு பண்ணின பிறகு எல்லா நாளுமே நல்லநாள் தான் மாமா… ஒருநாள் கிளாஸ் கட் ஆனாலும் நம்ம மதுக்கு கன்டினியுட்டி மிஸ் ஆகும் அதனால எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கே சென்னை கிளம்பிடலாம் மாமா”
நீ சொல்றதும் சரி தான்மா என்றவர் மனைவியிடம் “நீ என்ன சொல்ற பார்வதி..?”
“எனக்கு என்னங்க தெரியும்..? உங்களுக்கு தெரியாததா மருமக இவ்ளோ அக்கறையா செய்திருக்கப்போ நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம்.., நான் பிள்ளைக்கு கொடுத்தனுப்ப பலகாரம் எல்லாம் செய்து வச்சிடுறேன்”
“சரி, அப்படியே அவளுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் லிஸ்ட் போட்டு வாங்கி வச்சிடுங்க நமக்கு நாள் கம்மியா இருக்கு”
“நீங்க கவலை படாதீங்க மாமா மதுவை சென்னைக்கு அனுப்பி வைக்கிற டென்ஷன் உங்களுக்கு வேண்டாம் அத்தை பலகாரம் வேலையை பார்க்கட்டும் நான் அவளுக்கு பேக்கிங், புக்ஸ், மத்த திங்க்ஸ் எல்லாம் பார்த்துக்குறேன்”
‘சரிம்மா’ என்றவர் சின்ன மகனிடம், “சதீஷ் அன்னைக்கு எனக்கு எதுவும் சர்ஜரி இருக்கான்னு ராதிகாகிட்ட கேட்டுடு எமெர்ஜென்சி எதுவும் இல்லைனா அதை போஸ்ட்போன் பண்ண சொல்லு”
சரிப்பா இதோ நான் பேசுறேன் என்றவன் ஃபோனோடு வெளியேற மூத்த மகனிடம், “அன்னைக்கு நீயும் ஃப்ரீயா இருக்க மாதிரி பார்த்துக்கோ நாம எல்லாரும் மதுவை விட்டுட்டு வந்துடலாம்” என்றவர் இறுதியாக,
“மதும்மா ஊருக்கு கிளம்புற ஞாபகத்துல உன் கான்சன்ட்ரேஷன் மிஸ் ஆகவே கூடாது நீ ஃபோகஸ்ட்டா இரு, உன்னோட பேக்கிங்க எல்லாம் அம்மாவும் அண்ணியும் பார்த்துப்பாங்க என்ன சரிதானே” என்று கேட்க யாரும் அவள் விருப்பத்தை அறிய முற்படாமல் இதை நீ செய்து தான் ஆகவேண்டும் என்று அவர்களாகவே முடிவெடுத்து கட்டளையிட மதுவுக்கு நெஞ்சம் கனத்து நீர் துளிர்த்தது.
கண்களில் திரண்டுவிட்ட நீரை தந்தை அறியாமல் உள்ளிழுத்தவள் ‘சரிப்பா’ என்றாள்.
“தட்ஸ் மை கேர்ள் போடா சீக்கிரம் போய் படி.., டைம் இஸ் ப்ரஷியஸ் டோன்ட் வேஸ்ட்” என்றவர் பார்வதியிடம் மகளுக்கான பாலை ரூமில் கொடுக்க சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மதுவின் அறையில் இருந்த சவிதாவின் பார்வை மதுவை எடை போட்டு கொண்டிருந்தது. மதுவுக்கோ வாய்விட்டு அழதால் மட்டுமே அடுத்த வார்த்தை பேச முடியும் என்ற நிலை. உடனே வாஷ்ரூமினுள் சென்றவள் தண்ணீரை திறந்து விட்டு சத்தம் வராத வகையில் வாய் பொத்தி ஒரு மூச்சு அழுதிட அவள் மனமோ ரகுவை வெகுவாக தேடியது.
ஆனால் அவளிடம் கைபேசி இல்லாத நிலையில் நினைத்த பொழுது அவனிடம் பேச கூட முடியாமல் போனதை நினைத்து முதல்முறை நொந்து போனாள். அவனை பார்க்க அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டுமே என்ற எண்ணமே மீண்டும் அழுகையை கூட்டியது.
பொறுமை இழந்த சவிதா கதவை தட்டவும் மெல்ல தன்னை நிதானபடுத்தி முகத்தை நன்கு அடித்து கழுவிய பின்பே வெளியில் வந்தாள்.
“என்ன கண் கலங்கி இருக்க மாதிரி தெரியுது, அழுதியா..?”
“இல்லல்ல அண்ணி சோப் கண்ணுல பட்டுடுச்சி அதை துடைக்கும் போது விரலும் கண்ணை குத்திடுச்சி தண்ணி நிற்க்காம வந்துட்டே இருந்தது”
“கண்ணு வேற சிவந்திருக்கு” என்று மீண்டும் மதுவை ஆராய,
“அதான் சொன்னேனே சோப் பட்டுடிச்சு அதனால சிவந்திருக்கும் போல” என்றவள் டவல் எடுத்து முகத்தை அழுந்த துடைத்து கொண்டு “ஸ்டார்ட் பண்ணலாம் அண்ணி” என்று அமர்ந்த மதுவின் அழுத்தம் சவிதாவை மேலும் யோசனையில் ஆழ்த்தியது.
*******************
ஏகாம்பரமும் பார்வதியும் சகுந்தலாவின் கிரகபிரவேசத்திற்கு கிளம்பி கொண்டிருந்தனர்.
வீட்டின் அருகிலேயே மருத்துவமனை என்பதால் எப்போதும் காலையில் ஒரு விசிட் கிளம்பிவிடும் தந்தை இன்று அதிசயமாக வீட்டில் இருப்பதை கண்டவள் ‘அப்பா’ என்று பேச வரும் முன் அவளை கண்டதும்,
“கம் கம்! மது மேத்ஸ் எக்ஸாம்க்கு ரெடியா திங்க்ஸ் எல்லாம் கரெக்டா எடுத்து வச்சிட்டியா..? அம்மாவும் நானும் ஒரு கிரகப்ரவேசத்துக்கு கிளம்பிட்டு இருக்கோம் உன் அண்ணி சமைச்சிருக்காங்க மறக்காம சாப்ட்டுட்டு தான் கிளம்பனும்” என்றிட,
“இருக்கட்டும்பா இன்னைக்கு மேம் பார்க்க வேண்டி இருக்கு சின்ன டவுட் அதான் கொஞ்சம் சீக்கிரம் போகணும் நான் கிளம்புறேன்”
“எக்ஸாம் போகும் முன்ன எந்த டவுட்டும் இருக்க கூடாது என்றவர் பாரு மதுக்கு டிபன் பேக் பண்ணி எடுத்துட்டு வா” என்ற மகளோடு கீழே இறங்கினார்.
அவரை கண்டதும் ரகு வணக்கம் வைத்து கார் கதவை திறந்து விட்டான்.
வழக்கம் போல சில நிமிடங்களில் முன் சீட்டிற்கு சென்றவள் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
கண்களில் சத்தமில்லாமல் அணை உடுப்பெடுக்க அதை துடைக்க மறந்தவளாய் அமர்ந்திருந்த மதுவை கண்டதும் ஆள் அரவமற்ற இடத்தில வாகனத்தை நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி கண்ணீரை துடைத்தவாறே
“என்னாச்சு வனிம்மா எதுக்கு இப்படி அழறீங்க..?” என்று கேட்க மதுவர்த்தினியோ வற்றாத கண்ணீருடன் ஹ்ம்ம் என்றவள் கண்களை திறக்காமல் இருக்கவும்,
“ஏன்டா என்ன ஆச்சு எதுக்கு திடிர்னு இப்படி இருக்க எனக்கு கஷ்டமா இருக்கு என்னன்னு வாயை திறந்து சொல்லு..?” என்ற ரகு அவள் முகத்தை கரங்களில் ஏந்தி கனிவாக கேட்டிருந்தான்.
அதற்கு மேல் முடியாமல் கண்களை திறந்து அவனை பார்த்தவள் மெல்லிய கேவலுடன் நீட் கோச்சிங்காக சென்னை செல்வதை பற்றி கூற ரகு எந்த பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான்.
“நிச்சயமா என்னால உன்னை பிரிஞ்சிருக்க முடியாது ரகு நேத்து உன்கூட பேச முடியாம எவ்ளோ தவிச்சு போயிட்டேன் தெரியுமா? கிட்ட தட்ட பைத்தியம் பிடிக்காத குறை தான்” என்றவள் நேற்று இரவு நடந்ததை கூறி கதறி விட்டாள்.
“பக்கத்துல இருக்கப்பவே உன்கூட பேச முடியாம இருக்கு இப்போ அவ்ளோ தூரம் போனா நான் எப்படி இருப்பேன்” என்று தேம்பி தேம்பி அழ அவளை இறுக அணைத்தவாறு,
“எனக்கும் தான் டா உன்னை பார்க்காமல் என் நாட்கள் விடியாது” என்று தலைகோதி அவளை ஆறுதல் படுத்தியவன்,
“ஆனா எல்லாமே உன்னோட எதிர்காலத்துக்காக தானே ஐயா செய்யறாரு, கவலைபடாதீங்க வனிம்மா கண்டிப்பா இந்த பிரிவு இன்னும் நம்ம காதலை உறுதிப்படுத்தும் யாராலும் நம்மளை பிரிக்க முடியாது தயவுசெய்து இப்படி அழறதை விட்டுட்டு நல்லா படிங்க எனக்கு அதுதான் வேண்டும்” என்று அவளை ஆறுதல்படுத்தி மெல்ல அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
மனம் நிலை கொள்ளாமல் தவித்தவளுக்கு அவனின் செய்கை மூளையில் சுத்தமாக பதியவில்லை, ஏதேதோ எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு கழிவிரக்கத்தில் உழன்றவளாய் கரைந்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள்.
ரகுவோ அவளிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாததால் மேலும் முன்னேறி அவள் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்தவன் அடுத்து இதழ்களை உரசவும் தான் தன்னிலை மீண்ட மது உடனே அவனை தன்னிடம் இருந்து பிரித்து உதறி ஓங்கி அறைந்திருந்தாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.