ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 00
வீடு அப்போதுதான் பெயிண்டிங் வேலைகள் முடித்து மீண்டும் அதனதன் இடத்தில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் எடுத்து அடுக்கப்படவில்லை.
அந்த கல்யாண வீடே மயான அமைதி. கல்யாண வீடு தான், ஆனால் நடக்குமா என்பதே தெரியாமல் ஆளுக்கொரு பக்கமாய் கவலையோடு இருக்க உள்ளே படுக்கை அறையில் மஞ்சு கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.
“அழாதீங்கம்மா, அதான் அக்கா சொன்னா இல்லையா? உடம்புக்கு எதாச்சும் வந்திட போகுது. இப்ப தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்கோம்…” என்று நவீன் சொல்லிக்கொண்டு இருந்தான்.
“எப்படிடா அழாம இருக்க முடியும்? வெளியூர் சொந்தம் எல்லாருக்கும் பத்திரிக்கை குடுத்தாச்சு. உள்ளூருக்குள்ளையும் பாதிபேருக்கு குடுத்துட்டோம். இன்னும் இருவது நாள்ல கல்யாணம். வீடே வெள்ளை அடிச்சு எல்லாமே ரெடி ஆனா பின்னால கல்யாணத்த நிறுத்துங்கன்னு சொல்லிட்டாங்களே?…”
மஞ்சுவின் அழுகை ஹால் வரைக்கும் கேட்டது. ஹாலில் அமர்ந்திருந்தவர்களுக்கும் கண்கள் கலங்கி செய்வதறியாமல் அமர்ந்திருந்தனர்.
“மாமா டீ எடுத்துக்கோங்க…” என்று வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்தார் சுதாகரன்.
“எடுங்க மாமா, சாப்பாடு செய்ய லேட் ஆகும். இப்பதான் அத்தை உலை வச்சிருக்காங்க…” என்று சற்று கோவத்தோடு சொன்னாள் பூவிதயா.
“பூவிம்மா…” என்றவரின் தழுதழுத்த குரலில்,
“ப்ச், இப்ப ஒன்னும் ஆகலை. அப்பாவை நீங்க தான் சமாதானம் செய்யனும். போங்க….” என்று சொல்ல பின்பக்கம் தோளில் துண்டுடன் அமர்ந்திருந்த அய்யாசாமியை தேடி சென்றார் சுதாகரன்.
“மாமா, இந்த டீ…” என்று அவர் செல்லும் பொழுதே அதையும் கொடுத்தே அனுப்பினாள்.
தான் சென்றால் நிச்சயம் தன்னை பார்த்தே உடைந்துவிடுவார் என்று தெரியும். அதனால் முடிந்தளவு தந்தையின் முன்னால் வருவதையே தவிர்த்து வந்தாள் இந்த இரு நாட்களும்.
“பூவி, இங்க வா…” என்று அழைத்த அத்தையின் குரலில் அடுக்களைக்குள் சென்றாள்.
“இதை உன் அம்மாவுக்கு கொண்டு போய் குடு. கொஞ்சமாச்சும் சாப்பிட்டா தான் தெம்பு இருக்கும். என்னதான் அழுது புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும். மாட்டேன்னவங்கள நினச்சுட்டு அழுது அவ உடம்ப கெடுத்துக்க போறா…” என்றார் சுதாகரனின் மனைவி யசோதா.
“நான் பேசிட்டு வரேன் அத்தை…” என்று அவர் கொடுத்த கஞ்சியை வாங்கிக்கொண்டு சென்றாள் அவள்.
அவரின் அறைக்குள் நுழையும் பொழுதே நவீனிடம் புலம்பிக்கொண்டு அவர் இருக்க மகளை பார்த்ததும் வாயை மூடிக்கொண்டார்.
“போய் முகத்தை கழுவிட்டு வா…” என்று இறுக்கமான குரலுடன் அவள் சொல்லவும் தட்டாமல் எழுந்து சென்றவர் அழுகையை அடக்கிக்கொண்டு முகத்தில் தண்ணீரை வாரி அடித்துக்கொண்டார்.
அவர் வந்ததும் டவலால் தானே தாயின் முகத்தை கழுத்தை துடைத்தவள் கஞ்சியை எடுத்து ஊட்டினாள்.
வாயை திறந்தாலோ? வேண்டாமா என்று சொன்னாலோ திட்டிவிடுவாள் என்று விழுங்க முடியாமல் விழுங்கினார் அவர்.
“ரொம்ப கஷ்டமா இருந்தா விடும்மா. தண்ணியை குடிச்சுட்டு மாத்திரை போடு…” என்றவள்,
“நவீன் போய் சுடுதண்ணி கொண்டுவா…” என்று சொல்ல அவனும் எழுந்து சென்றான்.
“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி இருக்கம்மா? எதுவும் மாறலை. எதுவும் மாறாது…” என்று அவள் அத்தனை திடமாய் சொல்லவும் மீண்டும் மஞ்சுவின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.
அவருக்கு தெரியுமே மகள் எத்தனை ஆசையாய் காத்திருந்தாள் என்று. இந்த திருமணம் என்பது இரு குடும்பங்கள் சேர்ந்து எடுத்த முடிவாக இருந்தாலும் கணவனாக காட்டப்பட்டவன் மேல் அத்தனை அன்பை வைத்துவிட்டாளே.
“ம்மா, இதான் அவருக்கு சூட் ஆகும். இந்த ட்ரெஸ் சூப்பர்ல. ப்ச், பட்டு வேஷ்டி இன்னும் கொஞ்சம் மைல்டா இருக்கட்டும். ரொம்ப பளபளன்னு இல்லாம. அப்ப தான் அவருக்கு பொருத்தமா இருக்கும். மோதிரம் ரொம்ப சிம்ப்ளாவும் இருக்க கூடாது. டாம்பீகமாவும் இருக்க கூடாது. இந்த செயின் என்ன சைக்கிள் செயின் மாதிரி பட்டையா? கழுத்துல அந்த செயினை பார்க்க அழகா இருக்கறது தான் முக்கியம்…”
இப்படி அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து ரசித்து தானே தேர்ந்தெடுத்தாள். மணப்பெண் என்ற அந்த வெட்கங்கள் எல்லாம் அவன் மீதான அபரிமிதமான நேசத்தால் பின்னால் சென்றது.
அவனிடம் கேட்டு கேட்டு என்ன பிடிக்கும் என தெரிந்துகொண்டு ஒவ்வொன்றாய் அவள் செய்யும் பொழுதெல்லாம் முகத்தில் கல்யாண கனவுகளின் சுவடுகள் அப்பட்டமாய் தெரியும்.
“ஹனிமூனுக்கு எங்க போலாம்ன்னா அதையும் சொல்ல தெரியலை அவருக்கு. நீயே பாருன்னு சொல்றார். நான் தான் செலெக்ட் பண்ணனும். ஆனா வெடிங் முடியற வரை எந்த பிளேஸ்ன்னு சொல்லமாட்டேனே. வந்து ஹெல்ப் பண்ணுங்க…” என தம்பியையும், தீப்தியையும் அதற்கு கூட்டிக்கொண்டாள் தன்னுடன்.
இப்படி எத்தனை எத்தனை ஆசைகள். ஒவ்வவொரு அவனிடம் தொடங்கி அவனின் இரவு வணக்கம் வரை வணகிக்கொண்டு தான் அவள் நாட்கள் நிறையும். அந்தளவிற்கு அவன் மீது பிரியம் வைத்திருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டும் அந்த போன் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் வீட்டில் இப்படி முடங்கி இருந்திருக்க மாட்டோமே என நினைக்கும் போதே மஞ்சுவிற்கு தொண்டை அடைத்தது.
“ம்மா, இந்த தண்ணி. குடிச்சுட்டு படு. நான் இப்போ வந்திடறேன்…” என்றவள் மஞ்சுவை படுக்க வைத்துவிட்டு தான் அறையை விட்டு சென்றாள்.
“என்ன பூவி, மஞ்சு சாப்பிட்டாளா?…” என கேட்க,
“குடுத்துட்டேன் அத்தை…”
“இப்ப நீ ஏன் இவ்வளவு யோசனைல இருக்க? இந்த காயை வெட்டி குடு. தீப்தி காலேஜ்ல இருந்து நேரா இங்க தான வருவா. சொல்லிட்ட தான?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், சொல்லியாச்சு அத்தை. வந்திருவா…”
“ஏன்டி நீயும் இப்படி நிக்கிற? அவனுங்களா வந்தானுங்க. அவனுங்களா வேண்டாம்னு சொல்லிட்டானுங்க. இப்பவே இப்படி ஒரு யோகம்ன்னு வந்ததும் கல்யாணத்தை நிறுத்தறானுங்களே. அவனுங்க எப்டியாக்கந்தவங்களா இருப்பாங்கன்னு பார்த்துக்கோ…” என்றவர்,
“எந்த சீமையில அவனுங்களுக்கு பொண்ணு கிடைக்குதுன்னு பாப்போமே. பேய்ங்க. பேய்ங்க…” என்று மாப்பிள்ளை வீட்டினரை வசைபாடிக்கொண்டே சமையலை முடித்தவர் இன்னும் தீவிர சிந்தனையுடன் இருந்த பூவிதயாவை பார்த்தவர்,
“இன்னும் அதையே நினைச்சுட்டு இல்லாம தூக்கி போடு பூவிம்மா. தப்பிச்சோம்ன்னு நினைச்சுக்கோ…” என்றவர்,
“ஆனாலும் மனசு ஆறமாட்டிக்குதே. கடனவுடன வாங்கி இம்புட்டு செலவு பண்ணி கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி, பத்திரிக்கை எல்லாம் குடுத்துவச்சா இவனுங்க நோகாம வந்து வேண்டாம்னு சொல்லுவாங்களா?…” என்று போகிற போக்கில் திட்டிக்கொண்டே இருக்க,
“அத்தை, இந்த கல்யாணத்துக்கு என்னென்னலாம் பண்ணினோம்?…” என்று யசோதாவிடம் கேட்டவள்,
“சமையல் முடிஞ்சது தானே?…” என்றதும் ஆனது என யசோதா தலையசைக்க,
“அப்போ என் கூட வாங்க…” என்றவள் தன் மாமாவை தேடி செல்ல,
“பூவிக்கா அப்பா…” என்று வந்த நவீனிடம்,
“அப்பாவுக்கு நான் வாங்கி குடுத்த புது போன் எடுத்துட்டு வா நவீ…” என்று சொல்லியவள் தன்னறைக்கு அழைத்து சென்றாள்.
இன்னும் கட்டிலில் சில பைகள் இருக்க அனைத்தையும் எடுத்து மூலையில் வைக்க,
“இதை எல்லாம் எப்போ எடுத்து அடுக்க?…” என்று மலைத்து போனார் யசோதா.
“அலமாரி காய்ஞ்சிட்டா எடுத்து அடுக்கனும்த்தை. ஒரு நாள் தான். செட் பண்ணிடலாம்…” என்றவள் சுதாகரனும் நவீனும் வந்துவிட,
“மாமா உக்காருங்க பேசனும்…” என சொல்லியவள் நவீனிடம் இருந்து அந்த மொபைலை வாங்கிக்கொண்டு,
“அப்பா எங்க?…” என்றாள்.
“அம்மாவோட உட்கார்ந்திருக்காங்க. அம்மா தூங்கிட்டாங்க. ஆனாலும் பக்கத்துல இருக்காங்க…” என்றான்.
“சரி, ஒரு நோட், பேனா எடு…” என்று சொல்லியவளை புரியாமல் புதிர் போல பார்க்க,
“என்னடி பண்ணிட்டு இருக்க? சொல்லமாட்டியா நீ?…” என்றார் யசோதா.
“யசோ, பேசாம இரு. அவ எதோ முடிவு பண்ணிட்டா. சொல்லட்டும்…” என்றார் சுதாகரன்.
“ஆமா மாமா, இன்னும் இந்த விஷயத்தை நம்ம சொந்தத்துல யாருக்கும் சொல்லலையே?…”
“இல்லடா பூவிம்மா, சொல்லுற நிலைமை இல்லையே. அவங்க போன் பண்ணினதும் விஷயத்தை கேட்டு மஞ்சு மயங்கி விழுந்துட்டா. நாங்களே நவீன் சொல்லி தான் ஹாஸ்பிட்டல் வந்தோம்….”
“அப்போ அப்படியே சொல்லாம விட்டுடுங்க…” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் மூவரும்.
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்குது? இதை சொல்லாம எப்படி?…” என்று யசோதா திட்ட,
“அத்த, கொஞ்சம் மெதுவா பேசுங்க…” என்றவளின் முறைப்பில் வாயை மூடினார் யசோதா.
“இந்த கல்யாணம் நிக்க போறதில்லை. நடக்கும். நடக்கனும்…” என்றவளின் முகத்தில் இருந்த தீவிரத்தில் அரண்டு தான் போயினர்.
“என்ன பேச்சு பூவி இது? இதுக்கு நாங்க யாரும் சம்மதிக்கமாட்டோம்…” என்று சுதாகரன் சொல்ல அவள் அமைதியாய் இருந்தாள்.
“பூவிக்கா நீ யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தியா? உன்னை வேண்டாம்னு சொன்னவங்க. அவங்களை கல்யாணம் செஞ்சே ஆகனுமா?…” என்றான் நவீன்.
அத்தனை சீக்கிரம் அவள் முடிவெடுத்துவிட மாட்டாள். ஒரு விஷயம் செய்வதாக இருந்தாள் அலசி ஆராய்ந்து தான் அந்த தீர்வின் பக்கமே செல்வாள்.
இப்போது இப்படி சொல்ல நவீன் உள்ளுக்குள் கவலையானான். ஆனாலும் தன் அக்காவிற்கு துணையாக நிற்பதாக முடிவு செய்துவிட்டான்.
“மாமா, அவ வெறுமனே இந்த டிஸிஷனுக்கு வந்திருக்கமாட்டா. என்ன சொல்றான்னு கேளுங்க முதல்ல…” என்றான் அவன்.
“என்ன பேசற நவீ? அவங்க பேசினதை நீயும் கேட்ட தானே? அப்படி ஒரு குடும்பத்தில நம்ம பூவியை…” என்ற சுதாகரன்,
“இங்க பாருடா. நீ எதையும் யோசிக்காத. யாருக்கும் பதில் சொல்லனுமான்னு நினைக்கிறியா? பேசறவங்க ஆயிரம் பேசத்தான் செய்வாங்க. உன் வாழ்க்கையா, சொந்தக்காரங்க அவப்பேச்சான்னு பார்த்தா எங்களுக்கு உன்னோட வாழ்க்கை தான் முக்கியம்…” என்று சொல்ல,
“ஆமாடி பூவி, இந்த கல்யாணம் ஏற்பாடு செஞ்சதையே மறந்துடு. ஒரு வருஷம் போகட்டும். வேற நல்ல மாப்பிள்ளையா பார்த்துக்கலாம்…” என்று யசோதா சொல்லவுமே இதயாவின் உள்ளம் ஊமையாய் அழுதது.
‘இன்னொரு மாப்பிள்ளையா? அதுவும் ரத்தமும் சதையுமா நான் புருஷனா நினைச்சவன் உயிரோட இருக்கும் போதே எனக்கு வேற ஒருத்தனோட கல்யாணமா?’ என்று கதறியது.
ஒரு நொடி உணர்வின் பிடிக்குள் அகப்பட்டவள் சட்டென கோழையாகிப்போன பிம்பம் தோன்ற தலையை உலுக்கிக்கொண்டாள்.
“அத்த நான் முடிவு பண்ணிட்டேன்…” என்றவள்,
“நவீ நான் சொல்ல சொல்ல எழுது…” என்று ஒவ்வொன்றாய் திருமணத்தின் செலவுகளை, நிச்சயத்திற்கு செய்த செலவுகளை எல்லாம் பட்டியலிட்டாள்.
சுதாகரனிடம் கேட்டு யார் யாருக்கு என்னென்ன பணம் கொடுத்திருக்கார்கள் என்று லிஸ்ட் போட்டு முடிக்க கொடுக்கப்பட்ட பணம் மூன்று லட்சத்தை தாண்டியிருக்க கொடுக்கவேண்டிய பணம் அதுவும் லட்சங்களில் தான் இருந்தது.
திருமணம் பெண் வீட்டினர் முறை என்பதால் செலவுகளும் அதிகமாகவே இருந்தது அவர்களுக்கு. நிச்சயத்தன்று மாப்பிள்ளை வீட்டிற்கு ரொக்கம் என ஒரு லட்சம் கை மாறி இருந்தது.
“இப்போ எதுக்குடி இந்த கணக்கு எல்லாம்?…” என்று யசோதா கேட்க,
“இப்போ குடுத்த அட்வான்ஸ் எதாச்சும் திரும்ப வாங்க முடியுமா?…” என்றாள் இதயா.
“அதுக்காக கல்யாணம் செஞ்சுப்பியா நீ? அதுவும் வேண்டாம்னு சொல்றவங்கட்ட போய் வாழ போறியா? உன்னால அங்க சந்தோஷமா இருக்க முடியுமா?…” என்று கேட்கும் போதே யசோதாவின் முகம் கலங்கி போனது.
“மாமா, நீங்க ஒரு போலீஸா இருந்துட்டு இப்படி அநியாயத்துக்கு எல்லாத்துக்கும் தலையாட்டறது சரியா?…” என்று இதயா கேட்க,
“வேற யாருக்கும்னாவே நான் இப்படி கல்யாணம் செஞ்சு வைக்க யோசிப்பேன். என் தங்கச்சி பொண்ணுக்கு செய்வேனா? எனக்கு ஒத்துக்க முடியலைம்மா…” என்றார் சுதாகரன்.
அந்த ஊரில் கான்ஸ்டபிளாக வேலையில் இருப்பவர் அவர். மருமகளின் முடிவில் நொந்து போய் இருந்தார்.
“எனக்காக கூட நீங்க வரனும் மாமா. வருவீங்களா?…” என அவள் கேட்க,
“எங்க? எங்க போகனும்? அந்த வீட்டுக்கா?…” என்று யசோதா சீற,
“ஆமா, கடலூர் போறோம். கூட வருவீங்களா இல்லையா?…” என்று அவள் பிடிவாதமாய் இருக்க,
“நல்லா யோசிச்சியா பூவி?…” என்றார் தளர்ந்து போய்.
“யோசனை எல்லாம் எப்பவோ தாண்டியாச்சு. முடிவும் எடுத்துட்டேன்…” என சொல்லியவளை ஆற்றாமையுடன் பார்த்தார்.
நன்கு படித்து அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அழகிய பெண் அவள். இப்படி ஒரு வாழ்க்கையை தாங்கள் தான் அவளுக்கு காண்பித்தோம். இப்போது முகத்தில் சிரிப்பின்றி இறுகி போய் அவள் இருக்க எல்லாம் கை மீறியதை போல தோன்றியது.
“மறக்க முடியாதுன்னு நினைக்கிறியாடா?…” என்று சுதாகரன் கேட்க ஏதோ பேருக்கு ஒரு புன்னகை அவளின் முகத்தில். பதிலில்லை.
“இல்ல சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க பேசுவாங்கன்னு நினைக்கிறயா? அப்படின்னா வேண்டாம்டா. பேசறவங்க கொஞ்சம் நாள் பேசிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்ருவாங்க. இப்ப இந்த கஷ்டம் உனக்கு தேவை இல்லைடா….”
“நவீ நீ வருவியா அக்காவோட?…” என்று இதயா எழுந்து நிற்க,
“போய்ட்டு வாங்க. இவ யார் பேச்சையும் கேட்க மாட்டா. நீங்களே போய்ட்டு வாங்க. அங்க போய் என்னத்த பேசுவாளோ? எனக்கு இது சுத்தமா பிடிக்கலை. ஆனா இவ காது குடுக்க மாட்டேன்றாளே?…” என்று புலம்பியபடி கோவமாய் எழுந்து சென்றார் யசோதா.
“இப்போ வரைக்கும் அந்த பையன்கிட்ட இருந்து என்ன ஏதுன்னு ஒரு போன் வரலை. இவ என்னன்னா?…” என சொல்லி சென்றார்.
சுதாகரனும் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இதயாவின் முகத்தை ஆராய்ந்தார். அதில் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.
“சரிம்மா, நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன். சாப்பிட்டு கிளம்புவோம்…” என சொல்லிவிட்டு செல்லவும்,
“அக்கா நானும் வரவா?…” என்றான் நவீன்.
“ம்ஹூம், நீ இங்க அம்மா கூட இரு நவீ. பார்த்துக்கோ…” என்று சொல்லவும் அவனும் வெளியேற தந்தையின் மொபைலில் இருந்த அந்த ரெக்கார்டரை மீண்டும் ஓடவிட்டாள்.
“சொல்லுங்க சம்பந்தி, இப்பதான் வீட்டுல பெயிண்டிங் வேலை எல்லாம் முடிஞ்சது. நீங்க என்னைக்கு வெள்ளையடிக்க போறீங்க? இப்பவே முடிச்சா தான நெருக்கி வரும் போது நமக்கும் சிரமம் இல்லாம இருக்கும்…” என்று தந்தையின் பேச்சை தொடர்ந்து,
“இங்க பாருங்க, இந்த சம்பந்தின்ற பேச்சை இதோட நிறுத்துங்க. சிவசுந்தரம் தான் நான். இந்த கல்யாணத்துல எங்களுக்கு சுத்தமா விருப்பம் இல்லை. சரிவராதுன்னு தோணுது. அதனால இதை இப்படியே முடிச்சுக்குவோம். பத்திரிக்கை குடுக்கறதை நிப்பாட்டிருங்க…” என்றவரின் குரலில் கலங்கி போன அய்யாசாமி,
“என்ன சொல்றீங்க சம்பந்தி, இப்ப வந்து இப்படி பேசறீங்க? ஊரை கூட்டி நிச்சயம் எல்லாம் பண்ணிட்டு கல்யாணம் வேண்டாம்னு சொன்னா? இதென்னங்க பேச்சு? என் பொண்ணு….” என்று அவர் பதற,
“எத்தனை கல்யாணம் மேடை வரைக்கும் வந்து நின்னுருக்கு. இதையும் அப்படி நினைச்சுக்கோங்க. நான் சொன்ன சொன்னது தான். நீங்களே யோசிச்சு பாருங்க. என் புள்ளயோட அந்தஸ்துக்கு அவனுக்கு நாங்க சாதாரண பொண்ணு எடுத்தா எப்படி ஒத்துவரும். இப்ப எங்க அந்தஸ்து வேறங்க…” என்று திமிராய் சிவசுந்தரம் பேச,
“இது அநியாயமில்லையா? எங்க பொண்ணை நிச்சயம் பண்ணிட்டு இப்போ இப்படி பேசறீங்களே? மனசாட்சி வேண்டாமா?…” என்று அய்யாசாமியும் கோபமாக பேச,