“நல்லது சொல்லனும்னு கூட்டிட்டு போனா என் மருமக. அவளை அடிச்சு சாய்ச்சுட்டானே?…” என்று காஞ்சனா அனைவரிடமும் புலம்பி தள்ள அதை கூட ஒருபக்கம் கணக்கில் எடுத்துகொள்பவனால் தன் வீட்டார் இருந்ததை தான் ஏற்கவே முடியவில்லை.
சிவசுந்தரம் நிமிர்ந்தும் பார்க்கவில்லை மகனை. அத்தனை கோபம் இருந்தது அவருக்கு. அப்படி என்ன வீட்டினர் பேச்சை கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருப்பது? கை நீட்டுவது? என்று அத்தனை கோபம் மகன் மீது.
அதிலும் மனதில் வேறொரு எண்ணமும் அரித்துக்கொண்டிருந்தது. அதுவரை இருபக்கமாகவே யோசித்துக்கொண்டு இருந்தவர் இப்போது இதயா வேண்டவே வேண்டாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.
எப்போதும் வீட்டில் அமைதியாகவும், அதிகம் பேசாமலும் இருக்கும் மகன் அன்று அத்தனை பேசியதும் இல்லாமல், இப்படி உடன் பிறந்த அக்காவையே அடிக்க கை ஓங்கியதும், இன்னும் மனைவியாகாத ஒருத்திக்காக இத்தனை எதிர்த்து நிற்பதும் அவருக்கு உவப்பாக இல்லை.
இப்போதே இப்படி என்றாள்? திருமணம் என்ற ஒன்று ஆன பின்பு எப்படி இருப்பான் என்று உத்ரா ஊற்றிய விஷம் வேலையை காட்டியது. அந்த வழியிலேயே யோசனை செல்ல செல்ல முடிவே செய்துவிட்டார் அவர்.
அதனால் மகனிடம் பேசுவதையும் தவிர்த்தவர் அவனை எதேர்ச்சையாக நிமிர்ந்து பார்த்தாலும் கூட குற்றம் செய்தவனை பார்ப்பதை போலவே பார்த்து வைத்தார்.
மகன் வளர்ந்துவிட்டான், தன்னிச்சையாக துணிந்து முடிவெடுக்கும் ஒரு பதவிக்கு செல்லவிருக்கிறான் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லவே இல்லை.
என் மகன், என் பேச்சை கேட்கவேண்டும். என்னை விட அவனுக்கு நல்லது யார் நினைத்துவிட முடியும்? இப்படித்தான் நினைத்தார்.
அந்த எண்ணங்களில் இன்னொரு குடும்பமும் தங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது, அந்த குடும்பத்திலும் ராஜகுமாரியாய் வளர்க்கப்பட்ட ஒரு பெண் இருக்கிறாள் என்ற நினைப்பு சுத்தமாக இல்லை.
இதற்கு மேலும் இதயாவை ஏற்றுக்கொள்ள அவர்கள் சுத்தமாய் தயாராய் இல்லை. இதை வைத்தே அந்த திருமண பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட உறுதியாக இருந்தார் சிவசுந்தரம்.
அதற்கு பெரும் பங்கு காஞ்சனா, உத்ரா என்றால் மிகையில்லை. அதிலும் உத்ராவின் பெண்ணை காட்டி,
“என் பேத்திய செத்த நேரத்துல அநாதையாக்க பார்த்தாளே?…” என அவ்விடத்திலேயே இல்லாத இதயாவை அத்தனை பேசினார் அவர்.
“வரதுக்கு முன்னாடியே என்னை இப்படி படுக்க வச்சுட்டாப்பா? அவ வந்தா என்னலாம் நடக்குமோ?…” என பயம் காட்டினாள் உத்ரா.
“இப்ப இதை பேசாதம்மா, கொஞ்சம் நேரம் கண்ணை மூடி தூங்கு. அப்பத்தான் வலி குறையும். தலையில தையல் போட்டிருக்கறது பிரிஞ்சிற போகுதும்மா…” என ருக்மணி அவளுக்கு நல்லதே சொன்னாலும்,
“ம்மா என்ன நீயும் உன் மகனோட சேர்த்தியா? என்னை எதுவும் பேச கூடாதுன்னு சொல்ற?…” என ருக்மணியை வசை பாடியவள் பேச்சு ஓயவே இல்லை.
வேலவன் வேறு இல்லாததால் சூழ்நிலை மோசமாகியது. அதில் குளிர்காய்ந்ததென்னவோ உத்ராவும், காஞ்சனாவும்.
இதை கொண்டே கண்ணனை எப்படியும் வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்பதில் அத்தனை உறுதியாக இருக்க சிவசுந்தரமும் இப்போது முழுவதுமாக அவர்கள் பக்கம் இருப்பதில் பெரும் தைரியம் தான்.
சுயநலம், அத்தனை சுயநலம். அங்கே கண்ணன் உறவுகளின் மத்தியில் வேறுவிதமாக பார்க்கப்பட்டான்.
இதுவரை அவனின் இயல்பான சுபாவங்கள் எல்லாம் அந்த ஒரே நாளில் பக்கம் பக்கமாக விமர்சனத்திற்குள்ளாகியது.
திருமணமே ஆகாத போதும் அப்பெண்ணுக்கான அவன் பேசுவதையும், கல்யாணத்தை நிறுத்த கூடாது என்ற அவனின் நியாயமான வாதத்தையும், அவனின் ஆழமான உணர்வுகளையும் பலதரப்பட்டு விமர்சனம் செய்தனர்.
அந்த விமர்சனத்தில் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ இதயா தான். அதிலேயே உடைந்து போனான் அவன்.
அத்தனை பேசினார்கள் அவர்கள். கண்ணன் அவள் பக்கம் என்பதிலேயே இதய அசுத்தமாய் பிடித்தமில்லாதவளாகி போனாள்.
அதுவரை உத்ரா, காஞ்சனா மட்டுமே பொருமிக்கொண்டிருக்க இன்றோ சிவசுந்தரம் தொடங்கி நெருங்கிய சில உறவினர்கள் வரை இதயாவையும், அவளின் குடும்பத்தையும் சேர்த்தே பேசினார்கள்.
“அந்த குடும்பம் எல்லாம் தெரிஞ்சு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்குது. இல்லன்னா ஒரு சாதாரண வேலையில இருக்கறவனுக்கு கவர்மென்ட் வேலை பார்க்கற பொண்ணை தருவேன்னு சொல்லுவானுங்களா? கரை வச்சு தூக்கிருக்கானுங்க….”
இப்படி சம்பந்தமில்லாமல் ‘என்ன நடந்தது? யார் முதலில் சம்பந்த பேச்சை துவங்கினார்கள்?’ என்றே தெரியாமல் இதயாவின் குடும்பத்தினரை பற்றி நாகரீகமின்றி பேசினார்கள் அந்த சொந்தங்களில் சிலர். ஒருசிலரோ,
“அவனும் பாவம் என்ன செய்வான்? அஞ்சு மாசமா எத்தனை பேசி பழகி இருப்பாங்க? யோசிக்கனும்ல…” என்றவர்களின் பேச்சுக்கள் கூட எம்.எல்.ஏ குடும்பத்தில் இருந்து அவரின் மனைவியும், உடன் ஒரு பெண்ணும் சேர்ந்து வந்து பார்த்துவிட்டு செல்ல,
“பரவாயில்லை, எந்த பந்தாவும் இல்லாம அடிபட்டதை வந்து பார்த்துட்டு போறாங்க பாருங்க…” என்ற பேசி கண்ணனிடம்,
“அதான் வேண்டாம்னு சொல்றாங்களே கண்ணா? அப்பா பேச்சை கேட்டு இப்ப சொல்ற பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கோ…” என்று அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
அவ்வளவையும் வேடிக்கையாளனாக பார்த்தபடி தான் நின்றான் கண்ணன். மனது அத்தனை ரணமாகியது.
ஆனால் அந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் அவளை அன்றி வேறொருத்தியை மணக்க முடியாதென்பதில் ஸ்திரமாக நின்றான்.
இன்று உறவுகளுக்காக அவர்களின் பேச்சுக்காக, வறட்டு பிடிவாதத்திற்காக சரி என்று சொன்னால் தான் ஒரு மனிதனே இல்லை என்று நினைத்தவனின் பிடிவாதமும் தளரவே இல்லை.
இதோ இரவாகி வீடு வந்தும் சேர்ந்தாகிற்று. வந்ததில் இருந்து அவ்வளவு பேச்சு மீண்டும் மீண்டும் உத்ராவும், காஞ்சனாவும் புலம்பிக்கொண்டே இருக்க அதை எல்லாம் கேட்டபடி உள்ளே அமர்ந்திருந்தான் கண்ணன்.
எத்தனை மகிழ்ச்சியுடன் இருந்தான் தன்னுடைய ஆசை நிறைவேறிவிட்டதில் அத்தனை இறுமாப்பும் கூட.
கேலி பேசியவர்கள் அத்தனை பேரின் முன்னும் ஜெயித்து காட்டிவிட்ட ஒரு கர்வமும், நிமிர்வும் ஒருங்கே தோன்ற பூரித்து இருந்தவனின் மேல் தணலை கொட்டியதை போல துடித்து போனான்.
இரவு உணவிற்கு கூட வெளியே செல்லாமல் உள்ளேயே முடங்கி இருந்தான் கண்ணன்.
அவனின் அந்த செயலும் கூட இதயாவை கொண்டே பேசப்பட்டது காஞ்சனாவால்.
“அதிகமா பேசாட்டியும் கூட நேரத்துக்கு சாப்பிட்டு நேரத்துக்கு உறங்கார பையன். இப்ப அவளால தான் ரூம விட்டு வெளில வரமாட்டாம இருக்கான்…” என்றும் பேச நொந்துபோனான்.
தன்னுடைய சின்ன சின்ன செயலும் கூட இதயாவை கொண்டே வடிவம் பெறுகிறது என்பதை முழுமையாக உணர்ந்தான். அதற்கென்று தன்னுணர்வை எல்லாம் மாற்றிக்கொள்ள முடியுமா?
ஆனால் மாற்றினானே? திருமணம் முடியவும் மற்றினானே? அதன் பலன் என்னவோ இதயாவின் இதயத்தை தான் குத்தி கிழித்தது.
“அண்ணா…” என்று நிஷா அழைக்கவும்,
“உள்ள வாம்மா…” என்றான்.
“நீங்க சாப்பிட வரலைன்னு…”
“ஹ்ம்ம், கேட்டுச்சு. பசி இல்லை. நீ போய் சாப்பிடு…” என்று சொல்ல அப்போதும் தயங்கி நின்றாள்.
“என்னம்மா?…” என தங்கையின் தயக்கத்தை பார்க்க,
“இல்ல அண்ணி கால் பண்ணியிருந்தாங்க சாயந்தரம். நீங்க அந்நேரம் ஹாஸ்பிட்டல்ல இருந்தீங்களா. அதான் வெளில போயிருக்காங்கன்னு சொல்லி வச்சுட்டேன்…” என சொல்ல அவளின் அண்ணி என்ற விழிப்பில் லேசாய் சிரித்தவன்,
“ஹ்ம்ம், நான் பார்த்துக்கறேன்…” என சொல்லி அனுப்பிவிட்டான்.
அவனிருந்த மனநிலையில் இதயாவிடம் நிச்சயம் பேச முடியாது. பேசினால் வீடியோ கால் வருவாள். தன் முகத்தை பார்த்ததும் கண்டுகொள்வாள்.
‘வேண்டாம். இது எதுவுமே அவளுக்கு தெரியாமலே சரியாகவேண்டும்’ என்று அவன் நினைத்து அவளிடம் பேசுவதையும் தவிர்த்தான்.
ஆனால் அவன் தெரியவே வேண்டாம், அதற்குள் தானே இதை சரி செய்யவேண்டும் என்று நினைத்திருக்க வீட்டிலோ உத்ரா,
“அப்பா, அவன்கிட்ட சொன்னா தானே முடியாதுன்னு சொல்லுவான். நீங்க அந்த வீட்டு ஆளுக்கு போன போட்டு பேசுங்க. லைட்டா மிரட்டுங்க. அவங்க நிப்பாட்டினா என்ன பண்ண முடியும் அவங்களால?…” என்று சொல்ல அதை அட்சுபிசகாமல் செய்தார் சிவசுந்தரம்.
“அதுங்க எல்லாம் அம்மாஞ்சிங்க அத்தை, நாலு நாள் அழுதுட்டு கம்முன்னு போயிருங்க. அதுவும் இப்ப நமக்கு எம்.எல்.ஏ சப்போர்ட் இருக்குது. பார்த்துக்கமாட்டோமா?…” என்று சொல்லிய உத்ராவின் அகம்பாவத்துடன் சொல்ல நிஷாவிற்கு திக்கென்றானது.
“அம்மா…” என்று தாயிடம் சொல்ல,
“இதெல்லாம் பாவங்க. நம்ம வீட்டுலையும் பொண்ணு இருக்குது. இப்படியெல்லாம் செய்யாதீங்க. கண்ணனுக்கு தெரிஞ்சா வேதனைப்படுவான்….” என்று ருக்மணி சிவசுந்தரத்தின் காலை பிடிக்க,
“இங்க என்ன வேலை உனக்கு? எனக்கு தெரியும் என்ன செய்யன்னு…” என்று ருக்மணியின் பேச்சை காதில் வாங்கவே இல்லை.
நிஷாவிடமும், ருக்மணியிடமும் இதை கண்ணனுக்கு தெரியப்படுத்த கூடாது என்று சொல்லியிருக்க இந்த பிரச்சனைகளிலேயே மூன்று நாளும் இதயாவை தவிர்த்து தனக்குள்ளேயே உழன்றுகொண்டு இருந்தவனுக்கு வந்து சேர்ந்தது இதயாவின் வாய்ஸ் மெசேஜ்.
சிவசுந்தரம் பேசியதை சொல்லி அவள் கேட்டிருக்க அதற்கு பதில் கூட அளிக்காதவன் உடனே அவரிடம் தான் வந்து நின்றான்.
“இத்தனை நான் சொல்லியும் நீங்க நினைச்சதை சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க இல்ல. நானும் சொல்றேன் கேட்டுக்கோங்க. இதயாவை தான் கல்யாணம் செஞ்சுப்பேன். உங்களால ஆனதை பார்த்துக்கோங்க. நான் பாஸ் பண்ணினதை வச்சு தானே இத்தனை பேசறீங்க? அதையே நான் வேண்டாம்னு சொன்னா?…” என்றதும்,
“என்ன விளையாட்டு இது கண்ணா? நீ கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணினா அதையும் எவளோ ஒருத்திக்காக தூக்கி போடுவியா?…” என்று துள்ளிக்கொண்டு வந்தார் சிவசுந்தரம்.
“ஆமா தூக்கி போடுவேன். அதான் பேசினீங்களே எல்லாரும் சேர்ந்து மயங்கிட்டேன், அவங்க பக்கம் சாய்ஞ்சிட்டேன்னு. அப்படியே வச்சுக்கோங்க. நீங்க யாரும் இல்லைனாலும் இந்த கல்யாணம் நடக்கும். இதயா இங்க வரமாட்டா. நான் அங்க போய்ருவேன். அங்க இருந்தே ட்ரெயினிங் போவேன். என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க…”
“கண்ணா…” என்று உத்ரா கத்த,
“ம்மா, இவங்க ட்ராமாவை எல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்க சொல்லுங்க. வேலவன் அத்தான் வரவும் அவர்க்கிட்டயே நான் பேசிப்பேன். தள்ளியே விடாம நான் தள்ளிவிட்ட மாதிரி எத்தனை பேசினாங்க. தள்ளி விட்டிருக்கனும் போலன்னு நினைக்க வைக்காம இருக்க சொல்லுங்க…”
அந்த ஷாக் அவர்களை யோசிக்க வைக்கும் என்றே கண்ணன் வேண்டுமென்றே அப்படி பேசியது.
வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கே சென்றுவிடுவேன் என்று சொன்னால் நிச்சயம் மனது மாற கூடும் என்றே அத்தனை கோபத்துடன் அவன் சொல்லியது.
முதலில் இதயாவிற்கு தெரிய கூடாது என்று பேசாமல் இருந்தவன் இப்போது அவளிடம் பேசினாலும் இதை சரி செய்துவிட்டேன் என்ற பேச்சுடன் தான் பேசவேண்டும் என்று அவன் உறுதியாய் பிடிவாதமாய் நினைத்திருக்க பிரச்சனை அவன் எண்ணம் போலல்லாது வேறு விதமாய் தான் மாறியது.
அவன் பேசிவிட்டு செல்லவும் அத்தனை பெரும் ஸ்தம்பித்து நிற்க அப்போதும் உத்ரா தான் தேற்றினாள்.
“அப்பா இவன் சொன்னா ஆச்சா? நீங்க பேசின பேச்சுக்கு அதுங்க இந்நேரம் மூலையில உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிருக்கும்ங்க. ரோசமிருந்தா இவனே போனாலும் அதுங்க வேண்டாம்னு தான் சொல்லுவாங்க…” என்று சொல்ல அப்படி இல்லை என்பதை போல வந்தாள் பூவிதயா.
வந்தவள் யாரின் பக்கத்தையும் கேட்க நினைக்கவில்லை. கண்ணனிடம் கூட பேச விரும்பவில்லை. கடைசியாய் அவள் அவனுக்கு அனுப்பியிருந்த மெசேஜ்.
“மனுஷனாடா நீ? பேசி தொலையேன். என்ன நடந்துச்சுன்னாச்சும் சொல்லு கண்ணா…” என்பது தான்.
அதை பார்த்தபடியே இருந்தவனின் மனதில் சொல்லொண்ணா வேதனை சுழன்றது.
முதலில் சொல்லாமல் சரி செய்யவேண்டும் என்றும், பின் அவளுக்கு தெரிந்துவிட்டதே? இதை எல்லாம் முழுதாய் சரி செய்து நல்ல செய்தியாய் சொல்லவேண்டும் என்று தவிர்த்தவனுக்கு அவளின் தவிப்புகளை எல்லாம் தன் தவிர்ப்பின் மூலம் உணர்த்தினாள் பூவிதயா.
எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி மனதில்லாமல், சிரிப்பில்லாமல், நிம்மதியில்லாமல் ஒரு திருமணம் அமைதியாகவே நடைபெற்றது.
இதயா இல்லாத நேரத்தில் அவளுக்காக தன் குடும்பத்தை எதிர்த்து நின்ற கண்ணன் அவனும் அருகிருக்கும் பொழுது அவளை அரவணைக்க வேண்டிய நேரத்தில் நிதானம் தவறி அனாதையாக்கி நிறுத்தினான் அதே அக்காவிற்காகவும், அந்த குடும்பத்திற்காகவும்.