“மாமா, இதை சொல்ல தோணலை. இது ஒரு விஷயமா நான் நினைக்கலை. அதான்…”
“இருக்கட்டும்மா, சரி நீ சொல்லு. நாங்க ஊருக்கு வரலாம்னு இருக்கோம். நீ என்ன நினைக்கிற?…” என கேட்டு அங்கேயே அவளை உடைத்தார் சுதாகரன்.
“மாமா, என்ன இது? என்கிட்டே போய் வரலாமா வேண்டாமான்னு கேட்கிற மாதிரி? கஷ்டப்படுத்தறீங்க…” என்றாள் கண்ணீரை உள்ளிழுத்தபடி.
அங்கே வைத்து முகம் மாறாமல் பேச வெகுவாய் சிரமப்பட்டாள் இதயா. போவோர் வருவோர் வேறு அவளை பார்த்துவிட்டே செல்ல அவர்களிடமும் புன்னகைத்து நிற்க வேண்டியதானது.
“என்னம்மா செய்ய சொல்ற? இப்ப சின்னவங்க நீங்க எடுக்கற முடிவு தானே செல்லுபடி ஆகுது? எங்க பேச்சு சபையேறுதா?…” என்றார்.
எப்போதும் யசோதா தான் இப்படி எல்லாம் பேசுவார். இன்றைக்கு சுதாகரன் பேசியதை தான் அவளால் தாளமுடியவில்லை.
“மாமா, அவர் இங்க தான வருவார்ன்னு தெரிஞ்சு சொல்லாம விட்டது பெரிய விசயமா? இங்க அவர் வேலை பார்க்க வந்திருக்கார். அவ்வளோ தான்…”
“அவ்வளோ தானாம்மா? எல்லாமே அவ்வளோ தான்னு உனக்கு சொல்றியா? இல்லை எங்களுக்கு எச்சரிக்க நினைச்சு அப்படி சொல்றியா?…” என கேட்க தொண்டைக்குழி வற்றிவிடும் போல் ஆனது.
“சரி விடும்மா, நான் உங்கப்பாவை பார்க்க வரலாம்னு இருக்கேன். கூட உன் அத்தையும் வருவா…”
“நான் டிக்கெட் புக் பண்றேன் மாமா. ட்ரெயினா? பஸ்ஸா? வரும் போது தீப்தியையும் கூட்டிட்டு வாங்க…”
“இல்லை நீ டிக்கெட் போட்டுட வேண்டாம். நான் நவீட்ட சொல்லிட்டேன். அவன் போட்டுடுவான்…”
“ஏன் மாமா? ஏன் இப்படி பன்றீங்க? என்னை நீங்களுமா புரிஞ்சுக்கலை?…”
“உன் மனசு புரியுது. ஆனா அதை விட உன் எதிர்காலம் முக்கியமா படுது. அதுக்கு எங்களுக்கு உரிமை இல்லை, என்னை பத்தி நினைக்காதீங்கன்னு சொல்லு, நான், நாங்க நினைக்கலை….” என்று மறைமுகமாக அவளை நகரவிடாமல் நிறுத்தினார் அவர்.
“நான் எப்போ அப்படி சொன்னேன்? நீங்களா நினைக்காதீங்க மாமா…” என்றவளின் குரலில் மன்றாடல்.
“சொன்னா தானா? செயல்ல காமிச்சு குடுக்கற தானே? போதாதாம்மா?…” என்று சொல்ல அந்த பேச்சை வளர்க்காமல்,
“வரும் போது தீப்தியை கூட்டிட்டு வாங்க மாமா…”
“தீப்தி வராளான்னு இன்னும் கேட்கலை. வந்தா அழைச்சுட்டு வர பார்க்கறேன். அவளும் அவ மாமாவை பார்க்கனும்ல. விஷயம் தெரிஞ்சதுல இருந்து அழுதுட்டே இருந்தா மாமாவை பார்க்கனும்னு. என்கிட்டே ஏன் சொல்லலைன்னு நவீன்கிட்ட ஒரே சண்டை…”
“நீங்க பதட்டப்படுவீங்கன்னு தான் முதல்லையே சொல்லலை. என்னன்னு முதல்ல நான் தெரிஞ்சுட்டு…”
“இருக்கட்டும்மா, நான் ஒன்னும் நினைக்கலை…” என்றார் அவளின் பேச்சை நிறுத்தி.
“அத்தைட்ட போனை குடுங்க மாமா. நான் பேசறேன்..”
“ஹ்ம்ம்…” என்றபடி அவர் நடந்து செல்வதை போல கேட்க,
“யசோ, பூவி…” என்று மனைவியிடம் அவர் சொல்வது கேட்டது.
“எதுனாலும் அங்க வந்து பேசிக்கறேன்னு சொல்லுங்க. இப்ப வேண்டாம்…” என்றுவிட்டார் அவர்.
“அவ லைன்ல இருக்கா யசோ…”
“இருந்தா? இருக்கட்டுமே, எனக்கென்ன? இன்னும் மூணு நாள் தான? நேர்ல போய் பார்த்துப்போம். நீங்க போங்க…” என்று சொல்லிவிட இங்கே இதயாவிற்கு புரிந்துபோனது.
“சரிம்மா வச்சுடறேன். பார்த்துக்கோ…” என்று சொல்லி சுதாகரனும் வைத்துவிட்டார்.
போனை பிடித்தபடி அந்த தூணில் சாய்ந்து நின்றவளின் மனதில் பேரலை ஒற்று மீண்டும் மீண்டும் எழும்பி அவளை சாய்த்தது.
ஓன்று மட்டும் தெளிவாய் புரிந்து போனது, அத்தனை பேரும் ஒரு முடிவுடன் தான் உள்ளனர் என்று. திக்கு திசை அறியாத கட்டில் தனித்து நிற்பதை போல பிரம்மை கொண்டது அவள் மனது.
‘தைரியமா இருக்கனும் பூவி. தைரியமா இருக்கனும். எதுவா இருந்தாலும்’ என தன்னையே தேற்றிக்கொண்டாள் மன தைரியத்துடன்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் கண்ணை திறந்தவள் அந்த ஆள் அரவமற்ற காரிடாரில் திரும்பி நடக்க எதிரே கண்ணபிரான் வந்துகொண்டிருந்தான்.
அவனை பார்த்ததுமே உள்ளம் பொங்கிக்கொண்டு வந்தது. முன்பானால் காதலில், ஆசையில். இப்போது மலையளவு கோபத்தில்.
அவனின் வருகையும், முதல்நாள் தன் பெற்றோர்களை பார்த்துவிட்டு சென்றதுமே அனைத்திற்கும் மூல காரணம் என்று தெளிவாய் புரிந்துபோக அவனை முறைக்க நினைத்தவள் அந்த கோபத்தை அப்படியே அடக்கி அந்நியபார்வை பார்த்தாள்.
“ரொம்ப ட்ரை பன்ற போல?…” என்று அருகே வந்ததும் எதிர் நின்று அவளிடம் கேட்க,
“என்ன கேட்கறீங்க ஸார்? புரியலை…” என்றாள் இதயா.
“வெல் ட்ரை. ஆனா உன் முகம் காட்டிக்குடுக்குதே ஹார்ட்பீட்…” என்றான் பேண்ட் பாக்கெட்டில் கைகளை மறைத்து நின்று அமர்த்தலாக.
அவனின் அந்த அழைப்பு அவளை இளக்குவதற்கு பதில் இறுக்கியது. வாளென ஒரு நொடி மனதை அறுத்து சென்றது. ஹார்ட்பீட். அது அவளுக்கு மட்டுமேயான அழைப்பு.
ஆனால் இன்று அது ருசிக்கவும் இல்லை. ரசிக்கும் படி அவளும் இல்லை. அவனை இன்னும் அதே போல பார்த்தவள்,
“என் முகம் எப்படியும் இருக்கட்டும் ஸார். அதை பார்க்க வேண்டியது உங்க வேலை இல்லை…” என்றாள்.
“ஆனா அதுவும் என் வேலை தான். நான் மட்டுமே பார்க்க கூடிய வேலை. ஒரு அக்கறைல தான் கேட்கறேன், நைட் தூங்கலையோ?…” என்றான் இன்னும் அதே உறுத்த விழியுடன்.
கிஞ்சித்தும் முகத்தில் சிரிப்போ, வேறு பாவமோ அவனிடம் இல்லை. பார்ப்பவர்களுக்கு ஏதோ வேலை சம்பந்தமாக தீவிரமாய் கேட்பதை போல தான் தோற்றமளிக்கும்.
“தெரிஞ்சு உங்களுக்கு ஒன்னும் ஆக போறதில்லை. லீவ் மீ அலோன்….” என்றவள் வெடித்துவிடுவோமோ என்ற வேகத்தில் அங்கிருந்து அவனை தாண்டி சென்றாள்.
“இனி நோ சான்ஸ்…” என்ற இதழசைவுடன் அவனும் நகர்ந்துவிட்டான்.
தன்னுடைய சீட்டிற்கு வந்தவள் அதுவரை இருந்த பரிதவிப்பு எல்லாம் பின்னே சென்று கண்ணனின் மேலான கோபமே பெரிதாய் வீற்றிருக்க தனது மொபைலில் வேகவேகமாய் டைப் செய்து அதை ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு தான் வேலையில் ஆழ்ந்தாள். சற்று நேரத்தில் மொபைல் சிணுங்க,
“திமிர்டி உனக்கு…” என்ற குறுஞ்செய்தியை தனகி வந்திருந்தது கண்ணனிடம் இருந்து.
‘இதான் எனக்கு வேணும். கதறு’ நினைத்தபடி அந்த ஸ்டேட்டசை மீண்டும் பார்த்தாள்.
‘ஈ லோகத்தில் யோக்கியன் என்று ஒன்று உண்டெங்கில் அது பாலக்காட்டு மாதவனான்னு’ என்ற படத்தின் கீழ் ‘இப்படி எல்லாம் அக்கறைன்னு சர்க்கரையை தூவறேன்னு வருவானுங்க. ஒருத்தனையும் நம்ப கூடாது. ஆல் பேட் பெல்லோஸ்’ என்ற கேப்ஷனுடன் ஒரு போட்டோவை ஸ்டேட்டசில் மீம்ஸாக வைத்துவிட்டாள்.
அதிலும் அவனுக்கு மட்டும் தெரியும் படி அதை வைத்திருக்க கண்ணனுக்கு அத்தனை கோபம்.
“இன்னும் இவ நக்கல் மட்டும் குறையலை…” என்றபடி கோபத்துடன் அமர்ந்திருந்தவன் அகிலன் யாரோயோ குறை என்று சொல்லிக்கொண்டு வர தாளித்துவிட்டான் அவரை.
“உங்க வேலையை மட்டும் பாருங்க ஸார். தேவை இல்லாம. இதென்ன ஸ்கூலா? அவன் பென்சிலை தூக்கிட்டான், ரப்பரை உடைச்சுட்டான்னு. இன்னைக்கு மீட்டிங்க்ல எடுத்த நோட்ஸ் எங்க? பைல் பண்ணியாச்சா நான் சொன்னதை எல்லாம்? கமிஷனரை வர சொல்லிருந்தேனே?…”
இப்படி வரிசையாக அகிலன் எழுந்து விடாதபடி கோபத்தை எல்லாம் அவரிடம் காண்பித்துவிட்டு அவரை வெளியேற்றினான்.
“பூவி, சிசி மூஞ்சியே சரியில்ல. கண்ணெல்லாம் கலங்கி இருக்குது. கலெக்டர் செம்ம குத்து போல. ஒரே ஊமைக்குத்தா இருக்குமோ? முகத்தை பாரேன்…” என்று மிருணா கூப்பிட்டு காண்பிக்க,
“ஆபீசருக்கு கோபம் வர வேண்டிய நேரத்துல வராது. இந்த மாதிரி உப்புக்கு சப்பாணி மேல எல்லாம் கொந்தளிக்கும்…” என்ற இதயாவின் பேச்சை புரியாமல் மிருணா பார்க்க,
“ப்ச், எதோ ஞாபகம். விடு. நான் சீக்கிரம் கிளம்பனும்…” என்று வேலையை பார்த்தாள்.
மாலை கிளம்பியதும் நேராக ஹாஸ்பிட்டல் வந்தவள் பில்லை செட்டில் செய்து ஒரு ஆட்டோவை அமர்த்தி தாயையும் தந்தையையும் ஏற்றிவிட்டவள்,
“ம்மா நான் வீட்டுக்கு காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு வரேன். நீ பார்த்து போ…” என சொல்லி அனுப்பினாள்.
அதே நேரம் கண்ணனும் அலுவலகம் விட்டு வீட்டிற்கு கிளம்பியவன் சாலையில் கவனம் பதிக்க எதிரே சிக்னலில் இதயா ஸ்கூட்டியில் கடந்து செல்வதை பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்.
அந்த புடவை அவளை முதன் முதலில் பார்க்க சென்ற அன்று கட்டியிருந்த புடவை.
“பொண்ணு பார்க்க இப்போலாம் வீட்டுக்கு வரதில்லை. நேரா ரோட்டுல தான் போல?…” என்று தன்னிடம் முகமெல்லாம் சிரிப்புடன் பேசியவள் முகத்தை கண்களுக்குள் கொண்டுவந்தவன் மனதோ அன்றைய நாளுக்கு தாவியது.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவனிடம் சிவசுந்தரம் இதயாவின் புகைப்படத்தை காட்டி அவனுக்கு பார்த்திருக்கும் பெண் என்று சொல்ல முதலில் மறுத்தான்.
தன்னுடைய லட்சியத்தை அடைந்த பின்னர் தான் திருமணம் என்று அவன் வேண்டாம் என மறுக்க,
“துரைக்கு இன்னும் கலெக்டர் ஆகனும்னு நினைப்போ? அதான் ஒருவாட்டி எழுதி தோத்தது பத்தாதா? நீ எழுது பாஸாகு, இல்லையா என்னவும் பண்ணு. பொண்ணு கவர்மன்ட் உத்தியோகம். நல்ல சம்பளம். நல்ல சம்பந்தம். நான் பேசி முடிச்சுட்டேன். அடுத்த வாரம் பார்க்க போறோம்…”
இப்படி சொல்லிவிட மறுக்கமுடியாமல் போனது கண்ணனுக்கு. ருக்மணியும் அவனின் மனதை கரைக்க அதன் பின்பே இதயாவின் புகைப்படத்தை பார்த்தான்.
பார்த்ததும் பிடிக்கும் போலத்தான் இருந்தது. ஆனாலும் நேரில் பார்க்கவேண்டும் என்னும் உந்துதலுடன் யாரிடமும் சொல்லாமல் தன் நண்பனை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
வந்த இடத்தில் அவள் தன்னை பார்த்துவிட கூடாது என்று அவன் இருக்க அவனை தாண்டி சென்றவள் மீண்டும் பாதையை சுற்றிக்கொண்டு வந்து அவனின் முன்னே நின்றாள் அவள்.
“என்னை தான பார்க்க வந்திருக்கீங்க?…” என வந்ததுமே கேட்க திகைத்து தான் நின்றான்.
“இல்லை, அது…” என்று தடுமாற,
“அட சொல்லுங்க. நான் உங்களை போட்டோல பார்த்துட்டேன். நீங்க யாருன்னும் தெரியும்…”
“பொண்ணு பார்க்க இப்போலாம் வீட்டுக்கு வரதில்லை. நேரா ரோட்டுல தான் போல?…” என்று பளிச்சென்று கேட்க கண்ணனுக்கு முகமெல்லாம் புன்னகை.
“நல்லா பேசறீங்க நீங்க…” என்றான் அவன் பாராட்டாக.
“நான் கூட இன்னைக்கே வந்துட்டாங்க போல உங்க வீட்டுலன்னு நினைச்சேன்…” என்றவளின் அந்த இயல்பான பேச்சு அத்தனை பிடித்தது.
முதல் முறை பார்த்தவர்களிடம் பேசுவதை போல இல்லாமல் அவள் சரளமாய் பேச அவளின் குணஇயல்பே அதுதான் என்று புரிந்துகொண்டான்.
‘நான் யாரோவா இருந்தப்போவே என்னை ஈஸியா, நார்மலா இருக்க வச்சுட்டு இப்ப ஏன்டி தள்ளி நின்னு வெறுப்பேத்தற?’ என்றவனின் மனதிற்குள் புலம்பினான் வழக்கம் போல.
——————————————-
அன்று ஞாயிறு விடுமுறை. காலையே நவீன் வந்துவிட்டிருந்தான். அதன் பின்னாலே சுதாகரன், யசோதா, தீப்தி மூவரும் வந்துவிட நவீன், தீப்தியை தவிர மற்றவர்கள் அவளிடம் இறுக்கத்துடனே தான் இருந்தார்கள்.
“அக்கா நீ போய் குளிச்சுட்டு சாமி கும்பிட்டு வா. சாப்பிட்டு பேசலா. நான் இருக்கேன்ல…” என்று நவீன் தான் அனுப்பி வைத்தான்.
குளித்துவிட்டு வந்தவள் பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு எழுந்து நின்று கண்ணை மூடி கை கூப்பி நின்றாள்.
நிதர்சனத்திற்கும், நினைவுகளுக்கும் மத்தியில் நின்று அவள் உணர்வுகள் அலைகழிக்கப்பட கண்ணை மூடி தெய்வத்திடம் சரணடைந்திருக்க அவள் எதிர்பார்த்திராத உடையப்பட்டவனின் உரிமையான வருகை வேறு.
அதை அறியாமல் மனமுருகி தனக்கு வேண்டிய மனவலிமையை கொடு என்று இறைவனிடம் சரணடைந்திருக்க நெற்றி வகிட்டில் விரல் தீண்டும் ஸ்பரிசம்.
கண்ணை திறந்து பார்க்க எதிரே கண்ணபிரான் அவளின் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தவன் கழுத்திற்குள் கிடந்த மாங்கல்யத்தை வெளியே எடுத்துவிட்டபடி அவளை பார்த்து நின்றான் அழுத்தமாக.