“இதெல்லாம் ஒரு பேச்சா? அதுவும் எங்கப்பாம்மாவை வச்சுட்டே இப்படி பேசறீங்க? அவங்க எம்புட்டுக்கு சங்கட படுவாங்க?…”
“வீட்டுக்கு வந்த மருமக போனதுக்கே சங்கட்டப்படலை. இதுக்கு படறாங்க. இங்காரு ஒருக்கா தான் சொல்லுவேன். போகனும்னு நினைச்சா அப்படியே போயிரு. திரும்ப வந்தா எங்கம்மா வீட்டுக்கு வந்து சேரு. இன்னொருக்க எல்லாம் தனியா குடித்தனத்துக்கு நான் வரமாட்டேன்…” என்று சொல்ல,
“என்னங்க நீங்க?…” என்ற உத்ரா செய்வதறியாமல் நிற்க,
“என்ன என்னங்க? எங்கம்மாவும் நீயும் சேர்ந்து இல்லாத வேலை எல்லாம் பண்ண தெரியுதுல. இனி ஒரே வீட்டுல இருந்து அதை செய்ய கசக்குதோ? ஒண்ணா இருங்க. அப்பத்தான் உங்க பாட்டை தீக்கவே சரியா இருக்கும். மத்த குடும்பம் பிழைக்கும்…” என்று கோபமாய் சொல்லிவிட்டு,
“அத்தை நீங்க தனியா போக வேண்டாம். நிஷாவையும் கூட கூட்டிட்டு போங்க. உத்ரா மாமாவை பார்த்துப்பா….” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் வேலவன்.
“பார்த்தீங்களாப்பா?…” என்று தந்தை பக்கம் பார்த்தாள் அவள்.
“என்னை என்ன செய்ய சொல்ற? அவர் சொல்றதை கேளு…” என்ற சிவசுந்தரம்,
“ருக்கு, மாப்பிள்ளை சொன்ன மாதிரி தனியா போக வேண்டாம். நிஷாவோட நாளைக்கு பஸ்ல டிக்கெட் போடறேன்…” என்று சொல்லிவிட்டு தளர்ந்து அமர்ந்தார்.
“என்னை அந்த மனுஷன் என்ன பேச்சு பேசிட்டு போறாரு. யாராச்சும் கேட்கனும்னு நினைக்கறீங்களா?…” என்று நடு வீட்டில் அழுது கூட்ட,
“இப்ப என்ன? அவர் இருக்கும் போது இதை சொல்லிருந்தா கேட்டிருபோம்ல. போன பின்னாடி கேட்கலை, வைக்கலைன்னுட்டு இருக்க. போம்மா, போயி அவர் பேச்சை கேட்டு நடந்துக்கோ…” என்றவ அந்த சாய்வு நாற்காலியில் தலை சாய்ந்துகொண்டார்.
“ம்மா, வாங்க ட்ரெஸ் எடுத்து வைப்போம்…” என நிஷா ருக்மணியை உள்ளே அழைத்து சென்றுவிட உத்ரா சிறிது நேரம் அமர்ந்து அழுது புலம்பிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.
“எப்படி என் ப்ளான்?…” என நிஷா மெல்லிய குரலில் ருக்மணியிடம் சொல்லி சிரிக்க,
“என்ன பிளானு? எனக்கு புரியல?…” என்றார் அவர்.
“ம்மா, அண்ணா கால் பன்றேன்னு சொல்லிருந்தார். அவர் தான் அத்தானுக்கு போன் போட்டு இந்தமாதிரி விஷயம்ன்னு சொல்லி வர சொல்ல சொல்லி சொன்னாரு. அது மாதிரியே அத்தான் வந்து அக்காவை கிளம்ப விடாம செஞ்சாச்சு…” என சொல்லி சிரிக்க,
“ம்க்கும், உங்கண்ணனுக்கு இதுல உள்ள விவரம் பொண்டாட்டிய பாத்துக்கறதுல இல்லாம போச்சே…” என்றார் அவர்.
“ம்மா, என்னவோ போங்க. இப்போவாச்சும் அண்ணாவுக்கு இது தோணுதே…” என்றாள் நிஷா.
இப்படி அவர்கள் கிளம்பி வந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்க கண்ணனுக்கு நினைவு அங்கேயே இல்லை.
இதயாவின் வார்த்தைகளிலேயே எண்ணங்கள் எல்லாம் சுற்றிக்கொண்டு வந்தது.
‘எத்தனை பேசிவிட்டாள்? நம்பிக்கை இல்லையாமே? ஒரு விஷயத்தில் சருக்கினால் மொத்தத்தில் நம்பிக்கை இழந்துவிடுமா என்ன?’ என நினைத்தான் கண்ணன்.
சறுக்கிய விஷயம் எப்படியானது என்ற ஒன்றை அவனின் மனம் உணரவில்லை. தன்னையும் அவள் அந்த நேரம் புரியவில்லையே என்று தான் நினைத்தான்.
தன் தவறு என்று நினைத்தவனுக்கு அதன் வீரியம் உரைக்கவில்லை. குடும்பம் என்றால் இப்படி இருக்கும் தானே? அனைத்தையும் தாண்டி தானே வரவேண்டும். தனக்கு மட்டும் உவப்பானதா என்று நினைத்தான்.
ஆனால் எந்தவிதத்திலும் அவளை விட்டுவிட அவன் நினைக்கவில்லை. இதயா இதயா என்று இதயம் முழுவதும் அவள் வாசமே நேசத்தால் நிறைந்திருந்தது.
கண்ணை மூடியபடி அமர்ந்திருந்தவனை பார்த்த நிஷாந்தி மெல்ல தோளில் தட்ட,
“என்னம்மா?…” என்றான் அவளை பார்த்து.
“தூக்கம் வந்தா போய் தூங்குங்க. இங்கயே சாய்ஞ்சுட்டீங்க?…” என்று அவள் சொல்ல,
“இல்லம்மா, கொஞ்சம் நேரம். வேலை இருக்குது. நீங்க வேணா போய் ரெஸ்ட் எடுங்க…” என்றான்.
மனதில் கிஞ்சித்தும் உற்சாகம் இல்லை. அதை திசைதிருப்பவும் முடியாமல் தள்ளாடி நின்றான்.
“எல்லாம் சரியாகிடும் அண்ணா. அண்ணி வந்துருவாங்க. இப்படி நீங்க இருக்கறது தான் கஷ்டமா இருக்குது…” என்றாள் நிஷா.
ருக்மணி இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். மகனின் மனதை அறியாதவரா? அவனின் மனது இதயாவின் அருகாமைக்காக ஏங்குவதை புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் தான் மட்டுமே எடுக்க கூடிய முடிவல்லவே? இதை எப்படி கணவரிடம் சொல்ல என்ற யோசனை அவரின் மனதில் பெரிய கேள்வியாய் உருவெடுத்து இருந்தது.
அதனைக்கொண்டு அமைதியாகவே இருக்க நிஷா தான் கண்ணனை கெஞ்சி பேசி அவனறைக்கு அனுப்பி வைத்தாள்.
பின் இருவருமாக சேர்ந்து வீட்டில் என்னென்ன வேண்டும் என பார்த்து லிஸ்ட் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஓரளவு தேவையானவற்றை வாங்கி வைத்துவிட வேண்டும் என்று பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.
கண்ணன் திருச்சிக்கு வரவுமே அவனுக்கு சமைக்க ஓரளவு தெரிந்திருந்தாலுமே உணவு வெளியே தான். தெரிந்தவர்கள் மூலம் வீட்டில் சமைக்கும் சாப்பாட்டிற்கு சொல்லிருக்க மூன்று வேளையும் அங்கே இருந்து வந்துவிடும்.
இப்போது தாயும் மகளும் வரவும் எப்படியும் இதயாவை வரவழைத்துவிடலாம் என்னும் எண்ணத்தில் பரபரப்புடன் வேலையில் ஆழ்ந்தனர்.
அரைமணி நேரம் சென்று சிவசுந்தரம் அழைத்தார் மனைவியின் மொபைலுக்கு. வீடியோகாலாக வர நிஷா தான் அட்டன் செய்தாள்.
“சொல்லுங்கப்பா, சாப்பிட்டாச்சா?…” என்று கேட்க அவளின் பின்னே இருந்த வீட்டை ஆசையுடன் பார்த்தது அவரின் கண்கள்.
“ஹ்ம்ம், இப்பத்தான்ம்மா…” என்றவர்,
“நிஷாக்குட்டி அந்த வீட்டை அப்படியே சுத்தி காமியேன்…” என்றார் சிவசுந்தரம்.
“இதோப்பா. பாருங்க…” என்று மகள் வெளியே வந்து கேட்டில் இருந்து தோட்டம், வாசல், அடுக்களை. படுக்கை அறைகள் என்று ஒவ்வொன்றாய் காண்பித்தாள்.
“வீடு ரொம்ப நல்லா இருக்குப்பா. மூணு பெட்ரூம். நல்லா பெருசு பெருசா. பெரிய கிட்சன். தனியா ஆபீஸ் ரூம் கூட. பின்னால வாக்கிங் போக இடமெல்லாம் இருக்குது. ஃபுல் செக்யூரிட்டி…” என்று காண்பிக்க பெற்றவருக்கு அத்தனை பெருமிதம்.
“ஆமா கண்ணன் எங்க?…” என்றார் மெதுவாய்.
“அண்ணா தூங்குது. இப்ப கொஞ்சம் முன்னாடி தான் போனாங்க. எழுப்பவா?…”
“இல்ல, இல்ல. வேண்டாம்…” என்றவர்,
“அம்மாக்கிட்ட போனை குடுத்துட்டு நீ போ…” என்றார்.
“ம்மா, அப்பா…” என்று போனை கொண்டுவந்து குடுத்துவிட்டு வெளியேறி விட்டாள்.
“என்ன உன் மகன் நல்லா இருக்கானா?…” என அவர் கேட்கவும்,
“ஏதோ இருக்கான். நல்லாவான்னு சொல்ல தெரியலை…” என்றார் ருக்மணி.
இருவருக்குமே நெஞ்சை அடைத்தது மகனின் அந்த நிலை. அதற்கு தான் மிகப்பெரிய காரணம் என்பதை இந்த இடைப்பட்ட நாளில் மகனின் பாராமுகத்தில் உணர்ந்திருந்தார் சிவசுந்தரம்.
“ஹ்ம்ம், சரி அங்க போனயே அந்த பொண்ணை போய் பார்க்க வேண்டியது தான?…” என்றார் அவர்.
ருக்மணிக்கு கணவரின் உள்ளக்கிடங்கு இன்னும் தெரியாதென்பதால் அவர் தெரிந்து கேட்கிறாரா? இல்லை நோட்டம் விடுகிறாரா? என தெரியாமல் மௌனமாக இருக்க,
“போய் வேணா பார்த்து பேசு நீ. என்ன ஓட்டத்துல இருக்காங்கன்னு பார்த்துட்டு வா…” என்று சொல்ல நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார் ருக்மணி.
“என்னடா இப்படி சொல்றானேன்னு நினைக்கிறியோ? என்ன செய்ய? வயசாகுதுல. செஞ்சது தப்பு. அவங்களும் அப்படி இருந்தா விட்டுட முடியாதுல…” என்று சொல்ல ருக்மணி வாயே திறக்கவில்லை.
அப்படியே அவர் பேச பேச கேட்டுக்கொண்டே அமர்ந்திருதார். போய் வந்ததை பற்றி சொன்னாள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால்? அதனால் கமுக்கமாக இருந்துகொண்டார்.
“என்ன பேசிட்டே இருக்கேன் கம்முன்னு இருக்க?…” என்று சிவசுந்தரம் கேட்டதும்,
“இல்ல என்ன சொல்லன்னு தெரியலை. அதான் பார்த்துட்டே இருக்கேன்…”
“என்னத்த என்ன சொல்ல தெரியலை? மூணு பிள்ள பெத்து பேத்தியை பார்த்தாச்சு. மகனுக்கு நல்லது எதுன்னு யோசிக்க மாட்டியோ?…” என்று அவர் சத்தம் போட,
“நான் வாய திறந்தா மூத்த மக வந்து என்னைய பேச மாட்டாளா? ஊருக்கு வரதுக்கே அத்தனை பேசினா. இப்ப நீங்க சொல்லி அங்க போன கோவிக்கமாட்டாளா? அதன் பேசாம இருந்துட்டேன்…”
“அவ என்னத்துக்கு கோவிக்க? நானே சொல்லுதேன்ல. போய் பாருன்னு….” என்றவர்,
“கண்ணன்கிட்ட சொல்ல அவனையும் கூட கூட்டிட்டு போ. அந்த புள்ள இங்கதான் வராது. அங்கையாச்சும் சேர்ந்து வாழட்டும்…” என சொல்ல,
“இங்கையாச்சும்ன்னா? வான்னா வந்துடுமா? கொஞ்சமாவா பேசினா உங்க பொண்ணு. கூட நின்னோம்ல. மூஞ்சில முழுகிற மாட்டாளா எந்த முகத்தை வச்சுட்டு வந்தீங்கன்னு? நான் போகல. அவனும் போவானான்னு தெரியல…”
“என்ன என்ன பேசிரும்? அதெல்லாம் ஒன்னும் பேசாது. அவங்கம்மாப்பா இருக்காங்கல்ல…”
“அதான் வேண்டாங்கறேன். வாய்க்கு வந்தபடி பேசினது உங்க மக, கூட நின்னு எம்மவ என்ன பெருசா பேசிட்டான்னு கேட்டது நீங்க. எல்லாத்துக்கும் வாய திறக்காம அந்த புள்ளைய பிரச்சனை வேண்டாம்னு உள்ள போன்னு சொன்னது உங்க மவன். கூப்பிட நான் போனா மதிப்பாங்களா?…”
ருக்மணி கேட்க கேட்க அன்றைய நாளில் தான செய்த தவறின் அளவு சிவசுந்தரத்தை வெட்கம் கொள்ள செய்தது.
வீட்டின் தலைவராய் பெரிய மனிதனாய் அன்று எத்தனை சின்ன புத்தியுடன் நடந்துகொண்டேன் என நினைத்து அப்படியே இருக்க,
“பேசினவங்களே போய் பேசினா தான் சரியா வரும்னு தோணுது. அந்த பொண்ணு ஆபீஸ்ல கூட ஏறெடுத்து பாக்கலையாம் கண்ணனை. தெரிஞ்சவன் மாதிரி கூட பாக்கலைன்னு இங்க இவன் உண்ணாமதிண்ணாம புலம்பிட்டு கிடக்கான்…” என்று சொல்ல,
“என்ன கண்டுக்காம இருந்துச்சா? என்ன ருக்கு? இதெல்லாம் எப்படி சரி பன்றது? எனக்கு ஒண்ணுமே தெரியலையே?…”
“நானு ஒன்னு சொன்னா கோவிக்கமட்டேங்களே?…”
“இல்ல சொல்லு…”
“நீங்க வந்து பேசினா எதாச்சும் நல்லது நடக்கும். நம்ம புள்ளைக்கு நாம இறங்காம யாரு இறங்கி வருவா? அதுவும் தப்பு நம்ம பக்கத்துலன்னும் போது…” என்று சொல்ல யோசனையுடன் அவர் இருக்க,
“இதுக்கு மேல என்னத்த சொல்லன்னு எனக்கு தெரியலை. நமக்கும் நிஷா இருக்கா. நாளைப்பின்ன அவளை கட்டிக்குடுக்கும் போது இந்த பிரச்சனை எல்லாம் பெருசா கேள்வியா வரும்…”
மகளின் வாழ்க்கையை காண்பித்து ருக்மணி பயம் காட்டுவதை போலத்தான் சொல்லிவைத்தார் சிவசுந்தரத்திடம். அவருக்குள்ளும் அந்த எண்ணமும் ஒரு ஓரத்தில் தான் இருந்து வந்தது.
முன்பே இதை பேசியிருக்க வேண்டும் என்று தான் நினைத்தார். ஆனால் மகனும் இங்கில்லாமல் எங்கோ இருக்க தான் போய் என்ன பேச என்று தயங்கியே இருந்துகொண்டார்.
முதல் இரண்டு வருடம் அப்படி என்ன வீராப்பு இந்த பெண்ணிற்கு? ஆண்பிள்ளையை பெற்றிருக்கும் தாங்கள் இறங்கி செல்வதா? அதிலும் என் மகனின் அந்தஸ்திற்கு? என்று இறுமாப்புடன் இருந்தவருக்கு பெரும் சாட்டையாக நீயுமாச்சு, உன் பிள்ளையுமாச்சு என்று அவர்கள் இருந்தது அதிர்ச்சி தான்.
எப்படியும் பெண்ணை சமாதானம் செய்து கொண்டு வந்து விடுவார்கள். தங்களிடம் சமரசம் பேசுவார்கள் என்றே அவர் நினைத்திருக்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
காலம் தான் கடந்தது. மகனும் இந்த பக்கம் வருவதை நிறுத்தினான். பேச்சை குறைத்தான். ஆனால் அவனின் கடமையை அவன் தவிர்க்கவில்லை.
கேபிள் டிவி வைத்து நடத்தி அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பம் நடந்துகொண்டிருக்க மகனின் பணிக்கு பின்னான வருவாய்க்கு பின் கூட அவர்களின் வாழ்க்கை முறை எந்த விதத்திலும் மாறவில்லை.
எந்த சந்தோஷத்தை வைத்து கொண்டாடுவது? மகளையும் கடிய முடியவில்லை. மூத்தவள் மேல் அத்தனை பிரியம். அவளை என்ன சொல்ல? எப்பக்கமும் அவரால் நகரமுடியவில்லை.
முன்பு விறைப்பாய் என் பேச்சு தான் கடைசி என்று இருந்து வந்தவர் மகன் பேசாமலே போகவும், அதனோடு அக்கம்பக்கத்தினரின் பேச்சுக்களும் தான் அவரை நிறைய யோசிக்க வைத்தது.
அப்படி என்ன கௌரவம் என்று முதலில் இதயா வீட்டினரை பற்றி நினைத்தவர் கால போக்கில் அதில் தப்பொன்றும் இல்லை என்ற அளவில் நினைக்க ஆரம்பித்தார்.
இப்போது மனைவியும் அதைக்கொண்டே பேச பேச இன்னுமே பெரிதாய் தெரிந்தது மகனின் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்.
“ருக்கு, அவன் கூப்பிடாம நானா எப்படி வர? உன்னை வர சொல்லும் போதும் கூட உன்னை மட்டும் தான கூப்பிட்டான். நான் நல்லா இருக்கேனான்னு கூட கேட்கலை…” என்று முதன்முறையாக மனம் விட்டு அவரிடம் ஒன்றை பகிர்ந்துகொள்கிறார் சிவசுந்தரம்.
“என்னங்க இது?…” என பார்த்தவருக்கும் பரிதாபமாகி போக அவர் மேலும் பேசும் முன்,
“ருக்கு கண்ணன் தான் கூப்பிடறான். போன் பன்றான். அப்பறமா பேசறேன்…” என்று வேகமாய் சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் சிவசுந்தரம் உத்ரா, வேலவனோடு திருச்சி வந்து இறங்கினார் மகனின் அழைப்பின் பெயரில்.