ஆங்காங்கு மின்னிய நட்சத்திரத் தோரணைகளின் மத்தியில் சகல ஒப்பனைகளுடன் நிலாமகள் ஜொலித்துக் கொண்டிருக்க, கள்ளமற்றவளின் விரசமில்லா கண் சிமிட்டலை ரசித்தபடி தலைக்குக் கீழ் கை கோர்த்து மொட்டைமாடித் தரையில் உல்லாசமாகப் படுத்திருந்தான், மானவ்.
மொட்டை மாடியை ஒட்டினாற்போல் இருக்கும் அறையை தானே சுயமாக சுத்தப்படுத்தி, சற்றுநேரம் அங்குமிங்குமாய் அலைந்து திரிந்து விட்டு சிறு குளியலைப் போட்டுக் கொண்டு அறையினுள் நுழைகையில் பெட் சைட் டேபிளில் பல்லிளித்தது, இரவுணவு.
பல நாட்களாய் தன் கைப்பட சமைத்து உள்ளே தள்ளியதில் செத்துப் போயிருந்த நாவின் சுவை நரம்புகள், மணக்க மணக்க வாவென அழைத்த உணவுத்தட்டைப் பார்த்ததும் எச்சிலூறச் செய்தன.
மூடியிருந்த தட்டை விலக்கிப் பார்த்து சாம்பாரில் ஊறிய இட்லியை வாசம் பிடித்தவன், கண்களை சுழற்றும் போது அறைக் கதவினருகே நின்றிருந்த மந்த்ரா ஒட்டமெடுப்பது தெரிந்தது.
கடமுடாவென சத்தமெழுப்பிய வயிற்றுக்கு இன்றாவது அறுசுவை விருந்து போடலாம் என்றெண்ணித் தான் தட்டைக் கையில் எடுத்தான். ஆனால் ஏனோ மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரங்களை மீறி, சாம்பாரில் தோய்ந்திருந்த இட்லி தொண்டைக் குழி தாண்டி இறங்க மறுத்தது.
கடமைக்கே என இரண்டைக் கொறித்து விட்டு வந்து தரையில் முதுகு சாய்த்தவன் தான், வெகு நேரமாகியும் அதே நிலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான்.
அந்திப் பொழுதில் மொட்டை மாடியை அழகு படுத்திக் கொண்டிருந்த பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சி, வெயிலின் உஷ்ணத்தால் சூடேறிப் போயிருந்த தரையிலும் நீர் தெளிக்கப்பட்டு இருந்தது, நல்லதாய்ப் போயிற்று!
இல்லையெனில் உடலை வருடிக் கொண்டிருக்கும் இதமான சீதளத் தென்றலுக்குப் பதிலாக வெப்பக் காற்று இந்நேரம் உஷ்ணத்தை வாரி இறைத்திருக்கும்.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க இயலாமல், “ப்ச்!” என பெரிதாக சலித்துக் கொண்டான், மானவ்.
“இப்போ நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்ல போறியா இல்லையா?”
“ஏண்டா ஏன்.. கவனிப்பைப் பத்தி தான் கேட்கறியா என்ன? இங்க வரவேற்பு, கவனிப்பெல்லாம் அமோகம்! ஆனா என்ன, ஏன் என் பையன் வரலைனு உங்கம்மா தான் மனசு நொந்து போய்ட்டாங்க..” என நடந்ததை மறைத்து பொய் மழுப்பினான் மானவ்.
வரும் போதே, ‘நீ அங்க போறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல. போனோமா, விஷேசம் முடிஞ்சதும் வந்தோமானு இருக்கணும் மானவ். அவங்க உன்னை மதிக்காம கேவலமா பேசிட்டா, மம்மி ஜானுக்காக நீ போன வழியே திரும்பி வந்திடு!’ என அதட்டி, முக பாவனையிலே தன் அதிருப்தியைப் புலப்படுத்தியவனாயிற்றே!
‘சும்மாவே பொங்குவான்! இதை வேற சொல்லி எரியிற நெருப்புல நெய் வார்ப்பானேன்?’ என்று தான் வாயில் வந்ததை சொல்லிப் புளுகினான், மானவ். தானே சரி தான் போகட்டுமென பொறுத்துக் கொண்டாலும் பெரிய மனுஷனுக்கு மூக்கு சிவந்து விடுமென்று அறியாதவனா என்ன?
அவன் கூறியதை நம்பிக் கொண்டு, “பார்றா! பார்த்துடா. அப்படியே மம்மி ஜானையும், என்னையும் மறந்துட போற!” என கேலி செய்தான் சபரிஷ். அவனின் குரலில் லேசான வருத்தம் இழையோடியதோ..
“ஐயே! ஏன்டா லவ்வர் கிட்ட பேசுறாப்ல என் உசுரை வாங்குற?” என சலித்துக் கொண்டவன்,
“அந்த நர்ஸ் பொண்ண நீ ரொம்ப தான் படுத்துற சபரி! ஒருநாள் இல்ல ஒருநாள் அவ உன்னை வச்சு செய்யப் போறா. அன்னைக்கு நீ கதறுறதைப் பார்த்து நான் வயிறு வலிக்க சிரிக்க போறேன்..” என்க,
“ஓகே, நோடட்! நெக்ஸ்ட்?” என சீரான குரலில் சகோதரனைக் கிண்டலடித்தான், சபரிஷ்.
சிரிப்புடனே சற்று நேரம் உரையாடி விட்டு அழைப்பைத் துண்டித்தவன், இரவின் நிஷப்தத்தை அனுபவிப்பதற்காக ஒரு பாடலை ஒலிக்க விட்டுக் கண் மூடினான்.
‘நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்..
ஆஹா நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்..
போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்..
அவன் இவனே.. இவன் அவனே..’
காதருகே ஒலித்த தத்துவ வரிகள் மனதில் பதிந்தனவா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இரவின் நிஷப்தமும், தனிமையும் கொடுத்த இனிமையில் தன்னை அறியாமலே அனைத்து அழுத்தங்களும் வழி விட்டு ஒதுங்கிக் கொள்ள, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மெல்ல ரசனை நதியில் மூழ்கினான் ஆடவன்.
சில்லென்றடித்த காற்று வேறு ஜிவ்வென்ற உணர்வைக் கொடுத்தது.
எவ்வளவு நேரம் இனிமையிலே கழிந்து போனதோ, திடீரென்று இருள் கண்டு மொட்டவிழ்ந்த மலர்களின் நறுவாசத்தோடு ஒரு சுகந்த வாசனையும் மூக்கைத் துளைத்ததில் கண்களை சுருக்கினான்.
அருகே யாரோ நின்றிருப்பதாய் உள்ளுணர்வு உணர்த்தியது. வாசனையைப் பார்த்தால் வந்திருப்பது ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்! ‘மந்த்ராவா..’ – நினைக்கும் போதே சிறு முறுவல், அவன் முகத்தில்.
மெல்ல இமை திறந்தவன் பார்வையை சுழற்ற, தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி மார்புக்குக் குறுக்காக கைகளை கட்டியபடி நின்று கொண்டிருந்தாள், ஒரு மாது!
துப்பட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டு விரித்து விட்டிருந்த நீள் முடியும் காற்றில் கதை பேசுவது தெரிந்தது. ஆனால் முகம்? கருமை சூழ்ந்திருந்த அவ்விடத்தில் தனக்கு எதிரே நின்றிருப்பவளின் முகம் தெரியவில்லையே!
பார்க்க உயரமாக இருக்கிறாள். அப்படியானால் மாளவிகாவாகத் தான் இருக்க வேண்டுமென்று ஊகித்தவனாய் வெடுக்கென்று எழுந்தமர்ந்தவன், இயர்ஃபோனைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, ஒரு காலை மடக்கி, மடக்கிய காலை தன்னிரு கைகளால் அணைத்து முன்னும் பின்னுமாக ஆடியபடியே,
“நாளைக்கு நிச்சியத்தை வச்சிக்கிட்டு இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற மாளவிகா?” என்றான்.
மெல்ல அசைந்தவளிடமிருந்து மெலிதான ஒரு சிரிப்பு சத்தம். சதங்கை நாதமாய் ஒலித்த அந்த நகையொலி இரவுக்கு மேலும் இதமூட்டியது.
மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டபடி, “என்ன சிரிப்பு?” என்று கேட்கவும்,
“நான் மாளவிகா இல்ல..” என கூறியபடி அவ்வுருவம் அடிமேல் அடி வைத்து அவனை நெருங்கி வரவும் சரியாக இருந்தது.
மானவ்விற்கு மனம் திக்கென்றது.
மேற்கொண்டு அவனை சோதிக்காமல் அவளே நிலவொளி தன் முகத்தில் பட்டுத் தெறிக்குமாறு மறுபுறம் திரும்பி அமர்ந்திருந்தாள்.
“டாக்டர்!” – மானவ்வின் கண்களில் திடீர் திகைப்பு.
நம்ப முடியாமல் மீண்டுமொரு முறை கண்களை கசக்கிப் பார்த்தவன், “டாக்டர், நீங்களா?” என வியப்பு மாறாமல் படக்கென்று எழப் போக,
“அப்பாடா! என்னை அடையாளம் தெரிஞ்சதுல ரொம்ப சந்தோசம் மானவ்..” எனக் கூறியபடி அவனது கைப்பற்றி மீண்டும் அமரச் செய்தவளின் முகத்தில் புன்னகை!
“நீங்க எப்படி?” என அவளது முகம் பார்த்து வினவியவனின் பார்வை, சுண்டியிழுத்த அவளின் கன்னக்குழியில் பதிந்தது.
சம தரையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவன், நிலை தடுமாறி எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் விழுந்த கதை தான்! அனைத்தும் மறந்து அவளது முகத்தின் மேடுபள்ளத்தில் லயித்து விட்டான் மானவ்.
“என் வாய்ஸ் வைச்சாவது நான் தான்னு உங்களுக்கு தோணலையா மானவ்? அதுக்குள்ளவா கேட்டுப் பழகின இந்த வாய்ஸை மறந்துட்டிங்க..” அவள் சாதாரணமாகக் கேட்பது போல் காட்டிக் கொண்டாலும் கண்களில் எதிர்பார்ப்பு; குரலில் தவிப்பு.
“கெஸ் பண்ணுறதுக்கு நீங்க அவகாசம் கொடுக்கலையே டாக்டர்! அதுக்குள்ள நீங்க திரும்பி நின்னுட்டிங்க, உங்க முகத்தை நான் பார்த்துட்டேன்..” என அவளது வதனத்தை விட்டுப் பார்வையை விலக்காமலே கூறியவன்,
“அதுவுமில்லாம நான் உங்களை இங்க கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கல. பிறகு நான் அடையாளம் கண்டு பிடிக்காம விட்டேன்னு உங்களால எப்படி குறை சொல்ல முடியும்?” என்றான், கண் சிமிட்டி.
புன்னகையின் பரப்பளவை விரிவாக்கினாள், இதயநிலா.
“நீங்க எப்படி இங்க?” – மீண்டும் வினா எழுப்பினான்.
ஏனோ ‘என் வருகையை இவள் அறிந்திருக்கிறாள் என்றால் ஒருசில மணி நேரம் முன்பு நடந்தேறியவற்றையும் அறிந்திருப்பாளோ..’ என மனம் தவித்தது.
இதயநிலா, “மாளவிகா எனக்கு நல்ல ஃபிரெண்ட்டு! அவ விஷேசத்துக்கு நான் இல்லாம போயிட்டா எப்படி மானவ்..”
“எப்போ வந்திங்க?” என தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டு தலையைப் பக்கமாய் சரித்துக் கேட்டான், மானவ்.
“ரெண்டு நாள் முன்ன!”
“அ.. அப்படினா?”
“ம்ம்..”
மானவ் விழி மூடினான்.
கோதையின் வாய் வார்த்தைகள் கேட்டு அமைதியின்றி தத்தளித்த மனதை, கூனிக் குறுகி நின்றதெல்லாம் குடும்பத்தினர் முன்னிலையில் தானே எனப் போதித்துத் தான் ஓரளவு ஆறுதல்படுத்தி வைத்திருந்தான்.
எவ்வளவு தான் அமைதியானவன்; பொறுமைசாலி; குணவான் என்றாலும், ‘என் அம்மாவை தனிமைப்படுத்தி அவ புருஷனைப் பறிச்சுக்கிட்டவ வாயால எல்லாம் நான் பேச்சு கேட்கணுமா?’ என்ற ஆத்திரம் எழாமல் இருக்காதே!
அந்த நேரத்தில், அன்னையின் வளர்ப்பு தந்த பக்குவம் தான் அவனுக்குக் கை கொடுத்ததெனலாம்.
‘எப்போவும் நாம நிதானமா இருக்கணும் கண்ணா. நிதானம் தவறிட்டா அஞ்சு நிமிஷத்துல சாதிக்க வேண்டிய விஷயம் பல வருஷமானாலும் கை கூடாம போகலாம்.
நான் ஏதோவொரு புக்ல படிச்சிருக்கேன், மல்யுத்தத்தில் எதிரியை வீழ்த்துபவன் பலசாலி அல்லன்; கோபத்தில் தன்னை கட்டுப்படுத்தி, நிதானத்தைக் கடை பிடிப்பவனே உண்மையான பலசாலினு! நான் இதை நூத்துக்கு இருநூறு வீதம் ஆமோதிக்கிறேன்.
எப்போவும் நம்ம வார்த்தைகள் நிதானத்துல வெளி வரணுமே தவிர, கோபத்துல.. ஆத்திரத்துல வெளிவரக் கூடாது. தோத்துப் போய்டுவோம்!’ என அன்னை புகட்டிய பாடத்தை நினைவு கூர்ந்து, மனப் பாரத்தை என்றும் போல் ஒரு முறுவல் மூலம் கடந்து வந்து விட்டான்.
ஆனால் தகித்துக் கொண்டிருந்த நெஞ்சம் அவ்வளவு சீக்கிரத்தில் அணைந்து விடுமா என்ன? கோதை பேசப் பேச உள்ளுக்குள் அவன் எந்தளவு இறுகிப் போனான் என்பதை அவனையன்றி வேறாரும் அறிய வாய்ப்பில்லை தான்!
‘இதுவரை தவறே செய்யாதவங்க போல இல்லையா பேசுனாங்க? என்னைக் கை காட்டி யாருனு கேட்டா, மூத்த மகன்னு மார்தட்ட போறீங்களானு கேட்க எவ்ளோ எகத்தாளம் இருக்கணும்?’ என மனம் வெம்பித் தவித்தவன் சபரிஷிடம் பேசிய பிறகு தான் சற்று இயல்புக்கு மீண்டிருக்கிறான்.
இப்போது மீண்டும் மனம் முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டது; ‘இருந்தாலும் மூன்றாவது நபரின் பார்வைக்கு முன் நீங்கள் என்னை அவமானப்பட வைத்திருக்க வேண்டாம்!’ என கடவுளிடமும் கோபித்துக் கொண்டது.
‘எல்லாம் கடந்து போகும்..’ என மூச்சுக்கு முன்னூறு தடவை முணுமுணுத்து, விலகிச் செல்ல முயலும் புன்னகை என்னும் போலிக் கவசத்தை எந்நேரமும், எந்த சந்தர்ப்பத்திலும் அணிந்து கொள்ள முடிந்தவனால் ஏனோ இப்போது முறுவலிக்க முடியவில்லை. தன் மீதே கழிவிரக்கம் பிறந்தது.
இருவரிடையே மௌனம் நீடித்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.