“அங்க போய் நான் என்ன விவசாயமா பண்ண போறேன் அம்மாச்சி, எப்டியும் விக்க போறது தானே”
“சரி! இப்ப விக்கனுமுனு என்ன அவசியம் வேண்டிக் கெடக்கு..?”
“எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு ஒரு பிரச்சனை அதான்…” என அவள் முடிக்கும் முன்னே,
“ஆத்தாடி! யாருக்கோ பிரச்சனைனு உன் இடத்தை வித்துட்டு பணம் குடுக்கப் போறீயா..? இதுக்கு எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்” என அதிர்ச்சியாக பேசினார் சற்றுக் குரலை உயர்த்தி.
“அய்யோ ஏ கமலம்! எதுக்கு இப்டி கத்துற..? நீயே உன் புள்ளையை கூப்புட்டுறவ போல..” என அம்மாச்சியை அடக்கினாள்.
“அப்புறம் நீ பேசுறது எனக்கு சரியா படல” என்றார் அவர்.
“நீ நினைக்குற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை….” என ஜனா தேவை பற்றியும், அவன் தந்தை பற்றியும் கூறினாள்.
“ஓ! கேக்க பாவமா தான் இருக்கு, ஆனா அந்த பையன் யாரோ, அவனுக்காக நம்ம விக்க முடியுமா..?”
“என்ன அம்மாச்சி இப்டி பேசுற..? யாரோ தான், ஆனா அவரோட நிலையை கேள்விப்பட்டு அவரு அப்பாவை நேரில் பார்த்ததும் மனசு கஷ்டமா போச்சு, அது மட்டுமில்லை” என தந்தையின் கூடப் பணிப்புரிந்தவர் என விளக்கினாள்.
“ம்ம்ம்! அது சரி, நான் என்ன செய்ய முடியும் ஆயா…?”
“மாமா கிட்ட பேசிப்பாரு அம்மாச்சி” எனக் கெஞ்சினாள்.
“இங்க பாரு, உனக்கு தெரியாத ஒரு விசயத்தை சொல்றேன் கேளு, நம்ம சுந்தருக்கு தான் உன்னை கட்டி வைக்க முடிவுப் பண்ணியிருக்கு, அதனால தான் பெரியவன் அந்த இடத்தை விக்காம தடுத்து வச்சு இருக்கான், சுந்தர் வெளிநாட்டில் இருந்து வரனும், வந்தால் தான் அடுத்தப் பேச்சு”
“என்ன அம்மாச்சி சொல்ற..? சுந்தர் மாமாவா..? யாரு முடிவு இது…? எனக்கு விருப்பம் இருக்கனுமுல..”
“ஏன் ஆயா, எம் புள்ளைக்கு என்ன கொறைச்சல்..? ராசாவாட்டம் இருப்பான், என்ன நீ சின்ன வயசுல பாத்து இருப்ப, அவனும் போய் வருச கணக்கு ஆகுதுல” என தன் கடைசி மகனை எண்ணி பூரிப்போடுப் பேசினார்.
தர்மலிங்கம், ராமலிங்கம், சுந்தரலிங்கம் முறையே அம்மாச்சிக்கு மூன்று மகன்கள்.
“அம்மாச்சி! நான் மாமாவை பத்தி எதுவும் தப்பா சொல்லல, மாமாக்கு வேறப் பொண்ணை பாருங்க அம்மாச்சி, அதோட மாமாவை நான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சதே இல்லை, மாமா பார்க்க அங்கயே வளர்ந்தவ நான், அவரை போய் எப்படி..?”
“இது என்ன ஊரு உலகத்தில் நடக்காததா ஆயா, முறை மாமனை கட்டிக்குறது, அது எல்லாம் சரியா வரும், உன்னை வேற இடத்தில் கட்டிக்கொடுத்துட்டு உன் அம்மாவை எங்க போய் விடுறது, இதுவே சுந்தருக்கான இங்கயே காலம் பூராவும் உரிமையா கெடக்கலாமுல, அப்பப்ப நான் சொல்வேன்ல சுந்தர் மாமாவை கட்டிக்கோனு” என கமலம் எடுத்துக் கூறினார்.
“அய்யோ! அது நீ விளையாட்டா கேப்ப, அதுக்கே நான் முடியாதுனு தானே சொல்வேன். அம்மாவை நான் பாத்துக்குறேன், எனக்கு கல்யாணமே வேணாம், கல்யாணத்து மேல எல்லாம் விருப்பமில்லை, நீ அதை பத்தி யோசிக்காத, எப்படியாச்சும் இடத்தை விக்க பேசிப்பாரு, அதே மாதிரி மாமாக்கு வேற பொண்ணைப் பாக்க நீயே ஆரம்பி”
“என்ன ஆயா பேசுற..? தர்மாக்கு தெரிஞ்சா வெட்டிப் போட்டுறுவான், நீ சாதரணமா சொல்ற பேச சொல்லி.. அது எல்லாம் முடியாது, நீ சுந்தரை கல்யாணம் பண்ணா தான் என் உயிர் நிம்மதியா போகும், இல்லைனா உன் பெரிய மாமன், நடுளவன், உன் தாத்தா எல்லாம் உன்னையும், மங்கையும் பாத்துக்குறது கஷ்டம் ஆயா, சொன்னா புரிஞ்சுக்கோ, இத்தனை வருசங்களும் நான் குடும்பத்தை பாத்தேன். இப்ப உன் மாமிகாரிங்க வந்துட்டாள்க, அவள்க ஆட்சி தான் நடக்குது. நீ இளையவனை கட்டிக்கிட்டா இங்கயே உரிமையா இருக்கலாம்” என மனதார கூறினார்.
கமலாம்மாவின் கணவர் சிதம்பரம், அவர் ஓய்வுப் பெற்ற குடும்பஸ்தர், மகன்கள் குடும்பத்தை கவனிக்க தொடங்கியதும்.
“நான் சந்தோஷமா இருக்கனுமுனு நீ உண்மையில் ஆசைப்படுறீயா அம்மாச்சி..?” என நொந்துக் கேட்டாள் விஜி.
“இது என்ன ஆயா கேள்வி…? நீ சின்ன வயசில இருந்தே கஷ்டத்தை தானே பாக்குற, நீ சந்தோஷமா இருக்கனும்”
“அப்பனா, எனக்கு சுந்தர் மாமா வேணாம், நீயாச்சும் புரிஞ்சுக்கோ, அந்த வீட்டிலே மறுபடியும் காலம் தள்ள எனக்குப் புடிக்கலை, நான் கடைசிவரை அடிமையாகவே வாழனுமா அம்மாச்சி…?” என விஜி கேட்டது அவர் மனதை சுட்டது.
“அப்படி இல்லடா, உனக்கும், அம்மாக்கும்…” என ஆரம்பித்தவரை தடுத்தவள்,
“நான் படிச்சிருக்கேன், வேலைப் பாக்குறேன், அம்மாவை காப்பாத்திடுவேன் அம்மாச்சி, நீ எனக்காக நல்லதுக்குனு யோசிச்சா, போய் உன் மூத்த மகனிடம் பேசு, அந்த இடத்தை விக்க சரி சொல்ல சொல்லு, என்னால பேச முடியாது அம்மாச்சி மாமா கிட்ட எல்லாம், என்னைய வளர்த்து படிக்க வச்சாங்க, அதுக்காக பலியாடு மாதிரி அவங்களே கல்யாணத்தை முடிவுப் பண்ணா எப்படி…? எனக்குனு மனசு இருக்குல, அதுல ஆசை இருக்குமுல அம்மாச்சி..” என மருகிப் பேசினாள் விஜி.
“நீ யாராச்சும் விரும்புறீயா ஆயா…?” என அம்மாச்சி கேட்டதும், விஜி முன் ஜனா தான் வந்து சென்றான்.
தலையைக் குலுக்கியவள், “அப்டி எல்லாம் எதுவுமில்லை அம்மாச்சி, நான் தனியா நிம்மதியா வாழனும், அவ்ளோ தான், எப்பயுமே ஒவ்வொரு விசயத்திற்கும் பர்மிசன் கேட்டு கேட்டு, எனக்கு வெறுத்து வருது, நீயே சொல்லு முன்னாடி பரவாயில்லை இப்ப மாமிங்க மத்தியில் என்னால அம்மாக்காக வாய் திறக்க முடியல, நான் அங்கயே கல்யாணம் பண்ணி அம்மாவை கூட வச்சிக்கிட்டா மட்டும் மாமி ரெண்டுப் பேரும் அமைதியா இருப்பாங்களா…?
இப்பவே தினமும் காய்ச்சாத பாலை எடுத்துக் குடிக்குறாங்க, சின்னப் பசங்க சாக்லேட் எடுத்து சாப்பிடுறாங்க, அத பண்றாங்க, இதை பண்றாங்கனு ரிப்போர்ட் சொல்றாங்க, எனக்கும் புரியுது அம்மாவை சமாளிக்குறது கஷ்டமுனு. இன்னும் அங்கயே இருந்தால் நானும் அம்மா மாதிரி எதிர்க்காலத்தில் ஆகிடுவேன் அம்மாச்சி” என்றாள் இறுதியாக மிகுந்த வருத்தத்தோடு.
“ஆயா! அப்படி எல்லாம் பேசாத, உன் கஷ்டத்துக்கு நீ ராஜாத்தியா வாழுவ, நான் பேசுறேன் தர்மா கிட்ட. என்ன அவன் தாம் தூமுனு குதிப்பான், இருந்தாலும் பேசுறேன், உன் மனசையும் பாக்கனுமே, அப்பனா மாமாகிட்ட சொல்லி வெளியில் மாப்பிள்ளை பாக்க சொல்லவா..?” என ஆசையாகக் கேட்டார்.
“மொதல அந்த இடத்தை விக்கப் பேசு அம்மாச்சி, அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்” என்றாள்.
“சரி ஆயா… நீ உடம்பை பாத்துக்கோ” என கமலம்மா போனை வைத்தார்.
வீட்டிற்குள் நுழையவும், அப்பொழுது தான் வெளியில் போக வந்த தர்மா”யாரு கிட்ட போன் பேசிட்டு இருந்த…?” என அதட்டியவாறு கேட்டார் தாயிடம்.
வெள்ளை வேஷ்டி, சட்டை நெற்றியில் குங்குமம், பார்க்க விரைப்பான ஆளாக சற்றே பூசிய உடல்வாகில் தெரிந்தார். வெளியில் போக பைக்கை எடுக்க வந்தவர் தாய் போனும் கையுமாக நுழைவதை பார்க்க அந்த கேள்வியைக் கேட்டார்.
கமலத்திற்கே மூத்த மகன் என்றால் கொஞ்சம் பயம் தான்.
“இல்லப்பா! விஜி ஆயா தான் பேசுனுச்சு”
“அப்டியா..? இங்க குடு போனை.” என போனை வாங்கி நம்பரை ஆராய்ந்தார்.
“அச்சச்சோ! இல்லப்பா நான் பேசுறதே இல்லை, உன் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி சொல்றதை எல்லாம் நம்பாத” என சற்று நடுங்கினார், சற்றே தூரத்தில் நின்ற மருமகள்களை பார்த்து.
“ம்ம்ம்! என்னவாம் விஜிக்கு..?”
“அது வந்து, அந்த இடம் இருக்கே அதை யாரோ வந்து விக்க கேட்டாங்களாம் அதான் அதை பத்தி சொன்னுச்சு..” என வாயில் வந்ததை உளரினார்.
“அதான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல, விக்க இல்ல அப்படி மீறி வந்தால் போலிஸ் கிட்ட சொல்லுனு.. நான் போறேன் சென்னை அடுத்த வாரம் பேசிக்குறேன் விடும்மா”
“இல்லப்பா! அந்த இடத்தை வித்துட்டா என்னனு புள்ள கேக்குறா..?” என தயங்கியே சொன்னார்.
“என்ன….? ஏன் உனக்கு தெரியாதா..? அந்த இடம் சுந்தர் பங்கு, அவனுக்கு பொண்டாட்டி ஆனா அவ இடம் அவனுக்கு தானே. அவன் இப்ப விக்க வேண்டாமுனு சொல்லிட்டான், நீயே சொல்லிடு உன் பேத்திக் கிட்ட, அதோட சுந்தரும் இப்ப இங்க வர சூழ்நிலையில் இருக்கான், கல்யாணத்தை வச்சுடலாம் விஜி கிட்ட சொல்லி வை”
“சின்னப் பிள்ளையா இங்க வளர்ந்ததால அது மனசுல மாமனை புருசனா நினைக்க முடியலையாம்”
“என்னது…? ஓஹோ! படிச்சு வேலைக்குப் போயிட்டா மனசு நினைக்காது தான், ஏனா! அங்க பலரை பார்த்து இருக்குமே அந்த மனசு. படிக்க வச்சு வளர்த்து விடுவோமாம், படிக்க வச்சவனை புருசனா நினைக்க முடியாதாம், அதானே” என்றான் கோபமாக தர்மா.
“அது தெரிஞ்ச கதை தானேங்க” என தர்மாவின் மனைவி சாந்தி ஏற்றிவிட்டாள்.
“ஆமாக்கா! படிச்சு முடிச்சாச்சு, இனி எதுக்கு மாமன் வீடு” என்றாள் அடுத்தவள் ராமு மனைவி விஜயா.
“என்ன அண்ணா ஆச்சு…?” எனக் கேட்டப்படி வந்தான் ராமு.
அனைத்தையும் கேட்டவாறு அமர்ந்திருந்தார் சிதம்பரம்.
“நம்ம அக்கா பொண்ணுக்கு மாமனை கட்டிக்க விருப்பமில்லையாம், இந்த வீட்டிலே வளர்ந்ததால் அது மனசுல பிடிக்கலையாம்” என்றான் தர்மா..
சாந்தி ஏதோ சொல்ல வர, அதட்டிய தர்மா”உஷ்ஷ்! நாங்க பேசும் போது நீங்க என்ன இடையில். வாயை மூடிட்டு நில்லுங்க” என மனைவியை அதட்டினான்.
கமலம்மா நக்கலான பார்வை பார்த்தார் மருமகளை.
“விஜியா..? அப்படி பேசாத அது..” என்றான் ராமு.
“நம்ம அம்மா கிட்ட தான் பேசியிருக்குடா”
“என்னம்மா..?”
“புள்ள ரொம்ப வருத்தமா சொன்னுச்சுப்பா, அது மனசையும் நம்ம பாக்கனுமுல”
“அது இருக்கட்டும், அந்த இடத்தை எதுக்கு விக்க நிக்குது உன் பேத்தி..?”
“அது யாரோ..” என ஆரம்பித்தவர் நிறுத்தி , ‘இப்ப சொன்னா இவள்க ஏதாவது கதை கட்டி விட்டுவிடுவாள்க’ என யோசித்தவர்,
“ஒன்னுமில்லப்பா! அடிக்கடி வந்து விலைப் பேசுறாங்களே, அதை வித்துட்டா தான் என்னனு கேட்டுச்சு..”
“ம்ம்ம்! அதை நான் பாத்துக்குறேன், நீ உன் பேத்தி கிட்ட சொல்லி வை, சுந்தரை தான் கல்யாணம் பண்ணனுமுனு, சரியா..?” என்றான் தர்மா.
“ம்ம்ம்!” என தலையை அசைத்தார்.
****
விஜி ஒரேடியாக குழம்பி இருந்தாள்.
“என்ன விஜி ஆச்சு…?”
“ரெனி! அம்மாச்சி சொன்ன விசயம் மண்டைய வெடிக்குது”
“என்ன சொன்னாங்க…?”
சுந்தர் பற்றிக் கூறினாள்.
“ஓ மை காட்! இன்னுமா இந்த முறை மாமன் ஃபார்மாலிட்டிஸ் இருக்கு”
“அப்படியில்லைடி, மாமாங்க தான் என்னைய படிக்க வச்சது, அதனால அப்படி யோசிக்குறாங்க”
“அதுக்காக..? அப்ப போய் கல்யாணம் பண்ணிக்கோ”
“ச்சே! என் மனசுல அப்டி எந்த ஐடியாவும் இல்லைடி”
“அப்புறம் என்ன.? விருப்பமில்லைனு சொல்லிடு”
“அவ்ளோ ஈஸியா எல்லாம் முடியாதுனு சொன்னாலும் விட மாட்டாங்கடி, வளர்த்தேன், படிக்க வச்சேனு பேசுவாங்க, இன்னேரம் அம்மாச்சி என்ன உளரி வச்சு இருக்கோனு தெரியல, ஜனா பத்தி எதுவும் சொல்லி தப்பா நினைக்காம இருந்தா சரி”
“ஏன் தப்பா நினைக்க என்ன இருக்கு..?”
“என்னடி இப்டி கேக்குற..? நான் ஏன் ஜனாக்காக வித்து குடுக்கனுமுனு கேக்க மாட்டாங்களா…? அம்மாச்சி எப்படி சொல்லி ஆரம்பிக்குதுனு தெரியல வேற”
“அதான் சொல்லிட்டீயே, அப்புறம் தப்பா நினைச்சாதான் என்ன..? பேசாம ஜனாவை காதலிக்குறேனு போட்டுவிடு வீட்டில், உன் மாமாக் கூட கல்யாணத்தை பத்தி பேச மாட்டாங்கள”
“அடிப்பாவி! தேவையில்லாமல் ஜனாவை கோத்து விட்டு, என் மாமானுங்க எல்லாம் அவரை ரவுண்ட் கட்டனுமா..? அவரே அப்பாக்கு ட்ரீட்மென்ட்டுக்கு அலையுறார்.”
“ஹேய்! அதான் அல்ரெடி, ஜனாக்காக தான் விக்க சொல்றேனு உன் அம்மாச்சி கிட்ட சொல்லிட்ட, அதை உன் மாமா கிட்ட அவங்க சொன்னா, ஜனாவை ரவுண்ட் கட்ட மாட்டாங்களா..?”
“ஓ! ஆமால, வெயிட்” என உடனே அம்மாச்சிக்கு போன் செய்தாள்.
பல ரிங்க்டோன் போக எடுத்தவரிடம்,
“அம்மாச்சி!” என்றழைத்தாள்.
“சொல்லு ஆயா!”
“நீ மாமா கிட்ட சொல்லிட்டீயா நான் பேசியது எல்லாம்”
“ம்ம்ம்! ஆமா ஆயா”
“அச்சச்சோ! ஜனா பத்தி சொன்னீயா..?”
“இல்லை! இல்ல! உன் மாமிங்க நின்னாளுங்க அதான் சொல்லலை, தனியா இருக்கும் போது சொல்றேன்”
“ஏன் ஆயா..? உன் மாமா ஒரே திட்டு, நீ சின்னவனை தான் கல்யாணம் செய்யனுமுனு” என தர்மா பேசியதைக் கூறினார்.
“இது தெரிஞ்ச கதை தானே விட, இப்டி கல்யாணம் முடிச்சுட்டு உன் சின்ன பையனும் பேசப் போறார், எங்க காசில் படிச்சனு. பேசாம என் இடத்தை வித்து உன் மகன்களை வச்சுக்க சொல்லு, எனக்கு வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்” என்றாள் கோபமாக.
“அப்படி சொல்லாத ஆயா, அது உன் இடம். இவனுங்க பேசுறதை மனசுல வச்சுக்காத, நீ அந்த பையனை விரும்புறீயா.?”
“எந்த பையனை..?”
“அதான் ஜைனாவா.. ஜனாவா..?”
“ஏன் கேக்குற..?”
“இல்லை அந்த பையன் பெயரை சொன்னீயானு பதறி போன் பண்றீயேனு கேட்டேன்”
“அப்டியில்லை அம்மாச்சி, ஆனா அவர் நல்லவர்”
“புடிச்சிருந்தா சொல்லு நான் பேசுறேன், நீ சந்தோஷமா இருக்கனும், சுந்தருக்கு பொண்ணா கிடைக்காது” என்றார் அம்மாச்சி.
கமலாம்மா வெகுளியானவர், மகனும் வேணும், மகளும் வேணும், இருப் பக்கமும் சாயாமல் நடுவில் திண்டாடுவார், சட்டென்று மனம் இளகிவிடுவார் மற்றவருக்காக, அது தான் அவரோட குணமே. அதுவும் பேத்தி என்றால் உயிர், மங்கையின் உடல்நிலையால் விஜியை வளர்த்த முழுப்பொறுப்பும் அவரின் கையில் தான் இருந்தது. அவருக்கு தெரிந்த வழியில் வளர்த்து ஆளாக்கி விட்டார்.
“நீ போனை வை, எதையாவது உளராம..” என போனை கட் செய்தாள்.
“என்னடி..?” என்ற ரெனியிடம்,
“நல்ல வேளை ஜனா பெயரை அம்மாச்சி சொல்லலை, ஆனா அம்மாச்சிக்கு சந்தேகத்தை பாருடி” என சிரித்தாள் விஜி.
“என்ன…?”
“ஜனாவை நான் விரும்புறேனானு தான்.”
“ஓ! பாரு அந்த அம்மாச்சிக்கே சந்தேகம் வந்துட்டு, எனக்குமே தான் வருது. யாரோ ஒருத்தருக்காக இவ்வளோ பேசுறீயே ஏனு..”
“ஹேய்! லூசு, அவங்க வீட்டுக்கு நீயும் தானே வந்த.. ஜனா அப்பாவை பார்த்ததும் இப்டி யோசிச்சேன், இதுல தப்பு என்ன இருக்கு..?”
“ம்ம்ம்! இல்லை ஆனா இருக்கு” என நக்கலாக சிரித்தாள் ரெனி.
விஜி முறைக்கவும், ஜனா போன் செய்யவும் சரியா இருந்தது.