“நீ ஏன் இவ்ளோ இழுக்குற…? கொஞ்சம் அடங்கு” என முறைத்தாள்.
“எனக்கு என்ன நான் போய் என் வேலையை பாக்குறேன்” என அறையை விட்டு வெளியில் சென்றாள் ரெனி.
அவர்கள் பேசியதில் போனின் ரிங் அடித்து நின்றது.
விஜி அதை எடுத்து முதலில் நம்பரை சேவ் செய்தாள், “கோல்ட்” என்ற பெயரில் சிரித்தப்படியே.
ஏன் சிரிக்கின்றோம் என்றே தெரியவில்லை. ஆனால் அந்த இறுகிய சூழ்நிலையில் ஜனாவின் நினைவு நிம்மதியை அளித்தது. அம்மாச்சி கூறியதில் அவள் மனம் விரக்தி அடைந்திருந்தது என்பதே உண்மை.
கையில் போனை வைத்திருந்த அந்த நொடியில் மீண்டும் அழைப்பு வந்தது ஜனாவிடமிருந்து. இந்த முறை இரண்டாவது ரிங்கிலே எடுத்தாள்.
“ஒன்னுமில்ல ஜனா, நீங்க சொல்லுங்க, என்ன இந்த நேரத்தில் கூப்புட்டு இருக்கீங்க, முக்கியமான விசயமா.?”
“ம்ம்ம்! ஆமா, சரி சாப்புட்டீயா..?”
“ம்ம்ம்!”
“உன் கிட்ட ஒரு விசயம் கேக்கனும்”
“கேளுங்க!”
“இல்ல! நீ வந்துட்டு போனதுக்கு அப்புறம் நான் பாஸ் கிட்ட பேசினேன், அவர் ஒரு தகவல் சொன்னாரு”
“என்ன சொன்னாரு..?”
“அந்த இடம் உன்னைய கல்யாணம் பண்ணிக்கப் போற உன் மாமாக்காக இருக்குனு சொன்னாரு, அது உண்மையா..?”
விஜி பதில் கூற முடியாமல் மருகினாள்.
“சொல்லு ஜிமிக்கி”
“உங்களுக்கு…. உங்க பாஸிற்கு எப்படி தெரியும்..?”
“ஆக்ஸ்வெலி! அந்த இடத்தை செக் பண்ணி யாரு உரிமையாளருனு பாக்கும் போது உன்னோட பெயர் இருந்திருக்கு, உன்னைய கான்டெக்ட் பண்ண உன் மாமா அட்ரெஸ் தான் இருந்திருக்கு, அவர் கிட்ட பேசியப் போது அது குடும்பச் சொத்து விக்க முடியாதுனு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கார்.
மறுபடியும் கேட்டப்ப தான் அவரோட தம்பி உன்னைய கல்யாணம் பண்ணிக்கப் போறார், அது அவருக்குரியது, அவர் ஃபாரினில் இருக்காருனு மறுத்து இருக்காங்க, எந்த வழியிலும் உன் மாமா அசையவில்லை.
அது மட்டுமில்லை, உன் மாமாவோட மச்சான் போலிஸில் இருக்காரு போல அவர் மூலமா உன்னை டிஸ்டர்ப் பண்றாங்கனு சும்மா ஒரு கேஸ் ஃபைல் பண்ணி வச்சுட்டார். அதனால தான் பாஸ் இந்த வழியை யோசிச்சது உன்னைய கல்யாணம் பண்ணினா அவங்க தானே அந்த இடத்திற்கு உரிமை ஆக முடியுமுனு.
அதோட விளைவு தான் என்னை அனுப்பியது, ஆனால் நான் உன் கிட்ட வேற மாதிரி பேச போய் இப்ப மொத்தத்தில் குழப்பமாகிட்டு”
“என்ன ஆச்சு ஜனா..?”
“பாஸை போலிஸ் கூப்புட்டு விசாரிச்சு இருக்காங்க, அந்த பொண்ணை டிஸ்டர்ப் பண்ணீங்களானு.. அவர் இல்லைனு சொல்லி சமாளிச்சு இருக்கார். இப்ப என்னனா அங்க இருக்க எல்லாருமே இடத்தை கொடுத்துட்டாங்க ஜிமிக்கி, மத்தவங்களுக்கு நல்ல விலையும் கொடுக்கப்பட்டிருக்கு.
ஏனா அந்த இடம் விற்பனைக்காக மட்டுமே உள்ளது, தனியா எதுவுமே செய்ய முடியாது, அப்ப பிரிச்சு பிளாட் போட்டாங்க, அதை பலர் வாங்கிட்டாங்க, இப்ப ஒரே ஆள் வாங்கி ஹோட்டல் வைக்கப் போறார், இது இயல்பான பிஸ்னெஸ் தானே.”
“புரியுது ஜனா, ஆனா…?” என நிறுத்தினாள்.
“நான் சொல்லிட்டேன் பாஸ் கிட்ட ஜிமிக்கி, என்னால முடியாது பாஸ் அந்த பொண்ணு சிட்டிவேசன் சரியில்லை கட்டாயப்படுத்த முடியாதுனு. ஏனா! அவரு சொல்றதை பார்த்தால் உன் மாமா கிட்ட நீ பேசுறது சிரமம் தான் போல”
“ம்ம்ம்! நான் அம்மாச்சி கிட்ட பேசினேன் ஜனா, அது சொல்லி தான் எனக்கே தெரியும் மாமாக்கும், எனக்கும் கல்யாணம் பத்தி எல்லாம் பேசியிருக்கு அந்த இடம் அதுக்காக தான் கொடுக்காம வச்சு இருக்காங்கனு”
“சரி ஜிமிக்கி! நான் பாஸ் கிட்ட முடியாதுனு சொல்லிட்டேன், உன்னோட வாய்ஸ் உன் வீட்டில் கேக்காதுனு எனக்கு புரியுது”
“அப்ப அப்பா ஆப்ரேசனுக்கு பணம்..?”
“தெரியல! ட்ரை பண்ணிப் பாக்குறேன் வேற எங்கயும்.. அது என்னோட கடமைல” என வருத்தமாக பேசினான்.
“சாரி ஜனா! எனக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணனுமுனு தான் ஆசை. பட் நான் இப்ப புரியாத நிலையில் இருக்கேன்”
“ஆனா ஒன்னு ஜிமிக்கி கண்டிப்பா பாஸ் அந்த இடத்தை வாங்க வேற வழியை யோசிப்பாங்க, டபுள் ரேட் கூட பேச வாய்ப்பிருக்கு, எனக்கு என்னமோ உங்க மாமா அதுக்கு தான் பிளான் பண்றாரோனு தோணுது”
“புரியலை ஜனா!”
“ஆமா! உன் மாமாக்கு போலிஸ் மச்சான் இருப்பதால, இந்த ஐடியா சொல்லி இருக்கலாம், உன் இடம் டிமேண்டில் இருக்கு, அதை டபுள் ரேட் பேசுற நேரம் ஃபர்ஸ்ட்டே வராதுல, அட்லாஸ்ட் வேற வழியே இல்லாதப்ப தானே அசெப்ட் பண்ணுவாங்க, அதுக்கு தான் உன் மாமா வெயிட்டிங் போல, என் கணக்கு சரினா அடுத்த டீல் அதான் தான் இருக்கனும்”
“எனக்கு அந்த இடத்தை விற்பதில் பிரச்சனையே இல்லை ஜனா, ஆனா உங்க மூலமா போனால் உங்களுக்கும் யூஸ் தானே..”
“ம்ம்ம்! பட் நோ வே, பாஸ் நினைச்சது என் மூலமா உன்னை கையெழுத்து போட வைக்க, ஆனா நான் பண்ணது….” என சிரித்தான்.
“எனக்கு லவ் பண்ணி … ஏமாத்தி… அப்படி சைன் வாங்கி… அந்த தாட் ப்ராசஸே புடிக்கலை, ஆனா உனக்கும் ஒரு பக்கம் இருக்குமுனு எனக்கு தெரியல, ஏனா பாஸ் என் கிட்ட சொன்னது நீயும், உன் அம்மா மட்டும் தானு.. அதுக்கு மேல எனக்கு எதுவுமே தெரியலை அப்ப.
மாமா மூன்னுப் பேருனு சொன்னா பயந்து ஒதுங்கிடுவேனு நினைச்சுட்டாரு பாஸ். பட் அட்லாஸ்ட் அவரு பிளான், என் ப்ரண்ட் ரெக்வெஸ்ட் அண்ட் சைன் வாங்குற பிளான் ஃபெயிலு… உன் மாமா பிளான் தான் சக்ஸஸ் ஆகப் போது”
“புரியுது! எல்லாமே, நான் என்ன செய்றதுனு தெரியல ஜனா..”
“எனக்கு ஹெல்ப் கேட்டு வந்து இப்ப உனக்கு கூட ஹெல்ப் பண்ண முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன் ஜிமிக்கி, சாரி, உன்னை வந்து சைன் போடுனு சொல்ல முடியாது ஏனா, உன்னோட அம்மா அவங்க வீட்டில் இருக்காங்க”
“ம்ம்ம்! என்னால இது தான் முடிவுனு எடுக்க முடியல” என கண் கலங்கினாள்.
பிறகு கண்களை துடைத்தவள், “சரி ஜனா! என் பிரச்சனையை உங்க கிட்ட போட விரும்பவில்லை, உங்களுக்கு ஏற்கனவே நிறைய இருக்கு. நான் போனை வைக்கவா..?”
“ம்ம்ம்! ஒரே ஒரு க்வெஸ்டின்”
“ம்ம்ம்!”
“உன் மனசுல உன்னோட மாமா தான் இருக்காரா..? அவரை கல்யாணம் செய்ய விருப்பமா ஜிமிக்கி”
“நான் அவங்க முன்னாடி வளர்ந்தவ ஜனா, எப்படி கல்யாணம் செய்ய தோணும்..? வளர்த்தவர்கள் தாய், தந்தைக்கு சமமாக தானே பாக்க முடியும்.”
“உன்னைய இந்தளவு சுதந்திரமா வேலை செய்ய விட்டு இருக்காங்க, அப்ப உன் விருப்பத்தை கேக்க மாட்டாங்களா…?”
“அவங்களை பத்தி உங்களுக்கு சரியா தெரியாது ஜனா, எனக்கு கொடுத்த. சுதந்திரம் தற்பெருமைக்காக, நாங்க வளர்த்த அக்கா பொண்ணு படிச்சு, வேலைப் பாக்குதுனு சொல்ல, ஆனால் என்னோட றெக்கை என் அம்மா தான் அந்த வீட்டில், இதான் என் லைஃப்” என்றாள் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியைக் கொடுத்து.
“இந்த நேரத்தில் எப்படி சொல்றதுனு எனக்கு தெரியலை, ஆனா உன்னோட மனசுக்கு உனக்கு எதும் தப்பா நடக்கக் கூடாதுன்னு நினைக்குறேன். என் மனசுல இதுவரை நான் எந்த பொண்ணையும் நினைச்சதில்லை.
எனக்குனு ஒரு ஆசைனா அது கல்யாணம் பண்ணி தான் காதலிக்கனுமுனு. இப்ப நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்குறேனு சொன்னால் அது பணத்துக்கானு தான் தோணும்.
ஆனால் அதில்லை உண்மை உன்னைய கல்யாணம் பண்ணி சந்தோஷமா பாத்துக்கனுமுனு ஏனோ என் மனசு விரும்புது.
பட் இப்ப இல்ல, நீ உன் மாமா கிட்ட பேசு அந்த இடத்தை வித்து பணத்தை அவங்களே வச்சுக்கட்டும் அப்புறம் நீ வா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் மனதார.
விஜியின் காதுகளில் அவனோட வார்த்தைகள் அப்படியே தேனாக இனித்தது, யாரோ தன்னை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மேலே இழுப்பது போன்ற உணர்வு, இத்தனை நேர மூச்சி முட்டுதலில் சீரான சுவாசம் கிடைத்த உணர்வு, இன்னும் இன்னும்…… சொல்லவோ, எண்ணவோ முடியவில்லை…
பதில் இல்லாமல் போக, ஜனா”ஜிமிக்கி!” என்றழைத்தான்.
“ம்ம்ம்!” என்று மட்டுமே கூறினாள்.
“ஏதாவது பதில் சொல்லு சரி! இல்லை! ஏதோ ஒன்றை..”
“சரினு சொன்னால் சுயநலவாதி ஆகிவிடுவேன் ஜனா, பணத்தை அங்க கொடுத்துட்டு உங்க அப்பாவின் எமனாக..
இல்லைனு சொன்னால் உண்மையான அன்பை கொன்ற கொலைக்காரி ஆகிடுவேன் உங்க மனசை கொன்று. ஆனால் இரண்டிலுமே எனக்கு லாபம் , இரண்டிலுமே நஷ்டம் உங்களுக்கு தான், அதுக்கு நீங்க என்னைய சந்திச்சதையே மறந்துடுங்க ஜனா..”
“ஜிமிக்கி!”
“ம்ம்ம்! உண்மை தான், வேணாம் என் பிரச்சனை என்னோட போகட்டும், உங்களோட அடுத்த நிலையை பாருங்க. அப்பாக்காக ஏதாவது முடியுமானு நானும் ட்ரை பண்றேன்… ப்ளீஸ்.. நான் வைக்குறேன்” என போனை கட் பண்ணியவள் அதே வேகத்தில் முகத்தில் அடித்து கதறி அழுதாள்.
அவளின் அழுகையின் சத்தத்தில் ரெனி ஓடி வந்தாள்.
“ஹேய்! விஜி என்னடி ஆச்சு..? ஏன்டி இப்டி அழுதுட்டு இருக்க..?” என தோழியின் எதிரில் அமர்ந்து பதறியப்படி கேட்டாள்.
அவளோ அழுகையின் மொத்தக் கடனையும் உடனே அடைக்க வேண்டும் என்பது போல் திருப்பிக் கொடுத்து கொண்டே இருந்தாள்.
“ஏய்! ஏய்! என்னடி ஆச்சு..? அம்மா நல்லா இருக்காங்களா..? என்னடி…? ஒன்னுமே புரியலையே” என கெஞ்சி கொஞ்சி கடைசியில் அதட்ட தொடங்கியிருந்தாள்.
“என்னைய விடு ரெனி, நான் அழுது தொலைக்குறேன் அதையாவது செய்ய விடு, எனக்கு எதுக்கு கிடைத்தது இந்த ஜென்மமோனு இருக்கு. ஆசையா ஜிமிக்குனு கொஞ்சிய அப்பா இல்லை, அவரை நினைவுப்படுத்தவே வந்தானோ என எண்ணம் மட்டும் தான் மனதில் வந்தது, அதையும் பொறுக்காமல் தூரமா போனு என் வாயாலே சொல்ல வச்சுட்டாரு அந்த கடவுள்.” என புலம்பி அழுதாள்.
“விஜி! யார பத்தி சொல்ற..? ஜனா!” என ஆரம்பித்தவளை தடுத்தவள்,
“ஆமா! அவனே தான், என்னைய கல்யாணம் பண்ணிக்குறீயானு கேக்குறான்டி அதுவும் இடத்தை வித்து மாமானுங்க கிட்ட கொடுத்துட்டு வா, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமுனு சொல்றான்”
“இதுக்கு ஏன்டி அழுதுட்டு இருக்க…? நிம்மதியா போய் தான் வாழ ஆரமியே”
“எப்படி ரெனி..? அம்மா! அவங்களை ஜனா வீட்டில் வச்சு அடுத்த அடிமை வாழ்க்கையா.? வேணாம்! வேணவே வேணாம், நானும், அம்மாவும் இப்படியே வாழ்ந்துட்டுப் போறோம், இதான் விதிச்ச வாழ்க்கை, சபிச்ச வாழ்க்கை, இதுவரை எப்படி தலை ஆட்டி வாழ்ந்தனோ அப்படியே போறேன்…” என தன்னை மீறி அழத் தொடங்கினாள்.
“நீ ஜனாவை லவ் பண்றீயா விஜி..?”
“ஆமானு சொன்னா எத்தனை நாள் பாத்திருப்ப அவனை, இது லவ்வானு கேப்ப, இல்லைனு சொன்னா பொய் சொல்லாதனு சொல்லுவ.. என்ன சொல்லட்டும்…?” என்றாள் கோபமாக.
ரெனி அமைதியானாள்…
ஜிமிக்கியின் ஜனனம் அடுத்து…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.