“ஆமா! நாங்க ரெண்டுப் பேரும் அதிர்ச்சியானதில் ஒரு நியாயம் இருக்கு, நீங்க ஏன் அதிர்ச்சியாகிருக்கீங்க…?” என நக்கலாக கேட்டான் அமர்.
ரெனி”ம்ம்ம்! நீங்க எதை கேட்டு அதிர்ச்சி ஆனிங்களோ, அதுக்காக தான்” என்றாள்.
“ஓ! கூடவே சுத்துறீயே ரேனிகுண்டா, இந்த விசயம் உனக்கு தெரியாதா..?” என இழுத்தான் மீண்டும் அமர்.
அவளும் கடுப்பாகி”லூசா நீ! தெரிஞ்சா நான் ஏன் அதிர்ச்சியாகப் போறேன், நானும், அம்மாவும் மாமா வீட்டில் இருக்கோம், அப்பா இல்லை என்றாள், சரினு நானும் நம்பினேன், அவ எனக்கு என்ன ஸ்கூல் மெட்டா எல்லாம் தெரிஞ்சுக்க, எப் எம் ஸ்டேசனில் தான் அறிமுகம் ஆனோம்”
அவளோ அம்மாச்சி பிணத்தின் முன் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.
“அம்மா! ஏ…..ம்மா!” என அழுத பெண்ணைக் கண்டு, ரெனி அருகில் நின்ற ஒரு அம்மா
“இப்ப என்னதுக்கு ஒப்பாரி வச்சுட்டு வந்துருக்கா, அக்கா வாழ்க்கையை பறிச்சுட்டு போய் வாழுறா, இதுல அம்மா செத்துப் போன துக்கமா, எல்லாம் ஊருப் பாக்கனுமுனு நடிக்குறா..” என திட்டித் தீர்த்தார்.
திட்டிய அம்மா அருகில் நின்ற மற்றொரு அம்மா”ஏய்! சும்மா அக்கா புருசனை அழைச்சுட்டு ஓடிப் போயிட்டானு அதையே சொல்லாத, இந்த மங்கை ஒழுங்கா போய் புருசன் வீட்டில் வாழ்ந்திருக்கனும், அம்மா வீடே கதினு கெடந்தா, அவ புருசனும் மாமியார் வீடே சொர்க்கமுனு சுத்தினார், அது கொழுந்தியாவை கட்டிக்கனு பின்னாடி தானே தெரிஞ்சது….” என இழுத்து முடித்தார்.
அவர்கள் பேசியதை கேட்ட மூவருக்கும் ஏதோ சிறிது விளங்கியது.
“விஜி இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து வந்ததால் தான் பெருசா யார் கூடவும் கனெக்ட் ஆகல போல” என பாவமாக தோழியை நோக்கினாள் ரெனி.
அவர்கள் அருகே அந்த பக்கம் நின்ற ஒரு பெரியவர், “நீங்க மூன்னுப் பேரும் யாருப்பா..?” எனக் கேட்டார்.
“விஜி ப்ரண்ட்ஸ்ங்க, அவங்க அம்மாச்சி இறந்த விசயத்தைக் கேட்டு மயங்கிட்டாங்க, அதான் கூட்டிட்டு வந்தோம்” என்றான் ஜனா.
“இருக்காத பின்ன கூடவே இருந்தப் புள்ள அது” என ‘உச்’ கொட்டினார்.
“ஏங்க! எந்த ஊரு நீங்க…? இந்த ஊரா..? இல்ல விஜி அப்பா ஊரா..?”
“நான் முத்தையா நண்பன் தான் தம்பி”
“ஓ! எங்களுக்கு விஜியோட அப்பா இருப்பதே இப்ப தான் தெரியும், என்ன பிரச்சனை..?”
“அது பெரியக் கதை தம்பி, வருச கணக்கா பிரிஞ்சு கெடக்குறானுங்க, அந்த புள்ளையை விடாம வச்சுக்கிட்டு கூத்து தான் அடிக்குறானுங்க”
“எப்படிங்க விட முடியும்..? விஜி அப்பா செஞ்சது தப்பில்லையா..?”
“தப்பு தான் ஆனா அதை செய்ய வச்சது யாரு…?”
“புரியலை!”
“தம்பி!” என ஆரம்பித்தார்.
அந்த பக்கம் இறந்த வீட்டில் இரு வீட்டு பஞ்சாயத்து போய்க் கொண்டிருந்தது.
ஆர்வத்தின் பெயரில் இளம்வயதிலே மிலிட்டரிப் பக்கம் சென்றவர் முத்தையா, கல்யாண வயது வரும் போது கல்யாணம் செய்துக் கொண்டு ஒதுங்கி விட்டார் ராணுவதில் இருந்து.
கல்யாணத்தின் பின்னே வெளிநாடு பணி மோகமாக அதை நோக்கிப் பயணித்தார். விஜி பிறந்த பின் தான் அவர் வெளிநாடு சென்றது.
மகளின் நினைவு அவரை பாடாய்படுத்தியது, அதனால் வெளிநாட்டு வாழ்க்கையை உதறிவிட்டு ஊர்ப் பக்கம் வந்துவிட்டார்.
அதுவரை அவரின் வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக நகர்ந்தது, எதையும் கடினம் என யோசிக்காதவர், நினைத்த நேரத்தில் நினைத்த வேலை என எதிலும் புகுந்து வரவேண்டும் என்ற எண்ணம் படைத்தவர், அவரோட வயதும் உருவமும் கம்பீரமாக இருந்தமையால் அவரை நாயகனாக உருமாற்றியிருந்தது ஊராரிடம்.
அவரின் ஊரில் முத்தையாவிற்கு தனி மரியாதை உண்டு. மிலிட்டரி சென்று வந்த புதிதில் அவரை காணவே போய் வருவர் இளம் படையினர். வெளிநாடு போய் வந்த புதிதில் வேற பரிமாணத்தில் காட்சி அளித்தார்.
மங்கையை மணம் முடித்து விஜி பிறக்கவும், முத்தையா வெளிநாடு செல்வதற்காக மனைவியை அவள் அம்மா வீட்டில் விட்டுச் சென்றார்.
அது தான் ஆரம்பம், முத்தையா திரும்பி வந்தும் மங்கை அம்மா வீட்டில் இருந்து அசையவில்லை. மனைவி, மகளை காண மாமியார் இல்லம் வரத் தொடங்கினார் முத்தையா.
மங்கை இயற்கையாகவே சோம்பேறித்தனம் கொண்டவர், அம்மா வீட்டில் விஜியை பார்த்துக் கொண்டது ஜமுனா தான். அவரின் தங்கை, சுந்தருக்கு முன் பிறந்தவர்.
கணவர் இல்லத்திற்கு போனால் இந்த சௌகரியம் கிடைக்காது என மங்கை சொகுசாக அம்மா வீட்டில் தங்க எண்ணியது, அது அவருக்கே பாதகமாக முடிந்தது.
விஜி பள்ளிக்கு செல்ல இங்கு தான் பக்கம், அங்க நான் தனியாக கஷ்டப்படனும் இங்க உதவிக்கு ஜமுனா இருக்காள் என ஏததோ கூறி முத்தையா மனதை மாற்றினாள் மங்கை, அம்மா வீட்டில் தங்குவதற்காக.
அவர் கூறியதில் உண்மையானது விஜியின் பள்ளி இளந்தகுளம் பக்கமாக இருந்தது, அதோடு முத்தையாவின் தாயிற்கும், மங்கை இருவருக்கும் போர் தான் நிகழும். மங்கையின் சோம்பேறித்தனத்திற்கு மாமியாரிடம் பேச்சு சாட்டையடியாக கிடைக்கும்.
அதனால் முத்தையா விட்டுக் கொடுத்தார் மனைவிற்காக.
அது தான் முதல் தவறு…
அதன் பின் தினமும் முத்தையா மனைவி மகளை பார்க்க வரத் தொடங்கினார்.
சிதம்பரம்- கமலாம்மா வயல் வேலைக்கு சென்று விடுவர். மச்சான்களும் இளம் வயது அவரவர் வேலைகளில் மூழ்கிட, மங்கை, ஜமுனா மட்டுமே வீட்டில் இருப்பர்.
முத்தையா இளந்தகுளம் பக்கத்து ஊர்களுக்கு போனால் அப்படியே மாமியார் வீடு செல்வார் பகல் பொழுதுகளில். அந்த நேரங்களில் மங்கை தூக்கத்தில் இருந்தால் ஜமுனா தான் சாப்பாடு எடுத்து வைப்பது, தண்ணீர் கொடுப்பது என நடக்கும்.
முதலில் இருவருமே தவறான எண்ணத்தில் பழகவில்லை, ஆனால் மங்கை முழித்திருந்தாலும் சோம்பேறித்தனத்தில் கணவன் வரும் நேரங்களில் தங்கையே சாப்பாடு போட சொல்வார்.
விஜி இருக்கும் நேரங்களில் முத்தையா வந்தால் ஜமுனா தான் விஜியை கவனித்து எல்லாம் செய்வது, ஜமுனா அடிப்படைக் கல்வி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தவள்.
விஜியை குளிப்பாட்டி, சாப்பாடுக் கொடுப்பது முதல் தூங்க வைப்பது வரை ஜமுனா வேலை தான்.
மங்கை பக்கத்து வீடுகளில் கதை அடிப்பது, சில நேரங்களில் டிவி இருக்க வீடுகளுக்கு செல்வது என பொழுதைப்போக்கினார்.
ஜமுனா வயதின் பருவம் என்பதால் தன் அக்கா கணவரின் அழகு, ஆளுமை அனைத்திலும் விழத் தொடங்கியிருந்தாள்.
முதலில் முத்தையா வரும் போது அக்காவுக்காக பணிவிடைகள் செய்யத் தொடங்கியவள், இப்பொழுது அதை அவளோட ஆசைக்காக என மாற்றியிருந்தாள்.
முத்தையாவிற்கு ஒரு கட்டத்தில் புரியத் தொடங்கியது, ஜமுனாவின் மனம் தன்னை நினைக்கிறதென்று.
அதை உணர்ந்த முத்தையா வருகையை குறைக்கத் தொடங்கினார், மகளை நேரடியாக பள்ளிக்கே சென்று பார்த்துக் கொண்டார்.
ஆனால் மங்கையோ கணவனை திட்டத் தொடங்கியிருந்தார் வருவதில்லை என்று.
முத்தையா மாமனார், மாமியார் இருக்கும் போது வந்த செல்ல தொடங்கினார்.
அந்த நேரங்களில் ஜமுனாவை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்.
மாமனாரிடம் ஒரு முறை மங்கையை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினார் முத்தையா. ஆனால் அவர்களோ இங்கு நடப்பது புரியாமல் நாங்க வேலைக்குப் போனால் ஜமுனாவிற்கு துணையாக மங்கை தான் இருக்கிறாள், விஜியும் கொஞ்சம் பெருசாகட்டுமே மாப்பிள்ளை என்றார்கள்.
முத்தையாவின் நிலையை யாருமே உணரவில்லை, மங்கை வீடு ஒத்த அறையும், சமையல் அறையும் கொண்டது.
பின்னால் இருந்த கொட்டகையில் ஆண் பிள்ளைகள் படுத்துக் கொள்ள, சிதம்பரமும், கமலாம்மாவும் வெளி வராண்டாவில் படுத்துக் கொள்வர்.
மங்கை, ஜமுனா, விஜி இருந்த ஒற்றை அறையில் தூங்குவர்.
இங்கு வந்து முத்தையா தங்கவும் முடியாது, மங்கையோ ஒற்றைப் பிள்ளை பொறந்ததும் எல்லாம் முடிந்ததுப் போல் அம்மா வீட்டிலே அடைக்கலம் ஆக, பிறகு அடிக்கடி முத்தையா மங்கையை தன் வீட்டிற்கு அழைக்கத் தொடங்கினார்.
ஆனால் அது முடியவில்லை, ஜமுனா சின்னப்பொண்ணு அவளை பற்றி சொன்னால் பாவம் என்ற எண்ணமே வந்தது அவருக்கு.
அதன் வழிமுறையாய் ஜமுனாவிற்கு ஒரு வரனைக் கொண்டு வந்தார் முத்தையா.
பெண் பார்த்து நிச்சயத் தேதியும் வைக்கப்பட்டது.
ஆனால் ஜமுனா மனம் முத்தையாவை தவிர யாரையும் நினைக்க மறுத்தது.
விஜியோ ஜமுனாவை தான் தன் தாயாக பார்த்தாள், ஜமும்மா என்று தான் அழைப்பாள் சித்தியை.
ஜமுனாவின் வயது முத்தையாவை அக்கா கணவனாக பார்த்ததை தாண்டி தன் காதலனாக பார்க்கத் தூண்டியது.
ஜமுனா நேரம் பார்த்து முதன் முறையாக முத்தையாவிடம் நேரடியாகப் பேசி விட்டாள்.
கல்யாணமுனு பண்ணினால் உங்களை தான் அத்தான் பண்ணுவேன் இல்லைனா இப்படியே வீட்டில் இருந்துடுறேன் என சொல்ல, முத்தையா அவளின் கன்னத்தில் அறைந்துவிட்டான்.
“நீங்க அடிச்சாலும் என் மனசுல நீங்க தான் இருக்கீங்க, விஜியை நான் பெக்கலைனாலும் நான் தான் பாத்துக்குறேன், உங்களையும் நல்லா கவனிச்சுக்குறேன் அத்தான், நீங்க இங்க வரவேண்டாம், நான் உங்க கூட வந்துடுறேன்” என பேசினாள், அவளோட ஆசையில்.
“இங்க பாரு ஜமுனா, இது தப்பு உனக்குனு ஒரு வாழ்க்கை வருது, அத வாழப்பாரு” என அறிவுரையோடு விட்டு விலகினான்.
முத்தையாவிற்கு புரியவே இல்லை, மனைவியிடம் இதை எப்படி சொல்வது என யோசித்தான். அவளோ இது பற்றி எதையும் அறியாமல் அவளோட தினசரி பொழுதுப்போக்கில் இருந்தாள்.
ஒரு நாள் மங்கையை வெளியில் அழைத்துச் சென்ற முத்தையா மெல்ல விசயத்தைக் கூறினார்.
ஆனால் அவளோ அதை எப்படி கையாளுவதென்ற பாதையை அறியாமல், வீட்டில் வந்து தாம் தூம் எனக் குதிக்க, வீட்டில் உள்ளவர்கள் புரியாமல் பார்த்தனர்.
சிதம்பரம் விசாரிக்க, “என் புருசன் மேல ஆசைப்படுறா இந்த வீணாப்போனவ, ஊர்ல எவனுமே இல்லையனா என் புருசனை பாத்தடி” என மங்கை கத்திக் கூச்சலிட்டார்.
அடுத்தவர் வீட்டிற்கு கேட்க போகுதென்று கமலாம்மா அவள் வாயை அடக்க முயற்சிக்க, சிதம்பரம் சின்ன மகளைப் போட்டு வெளுத்து வாங்கினார்.
முத்தையா யார் பக்கம் பேசுவதென்று தெரியாமல் நடுவில் நின்றார்.
முத்தையா”சரி மங்கை! நீ வா நம்ம வீட்டுக்கு போயிடலாம், அது ஏதோ சின்னப்பொண்ணு தெரியாம யோசிக்குது” என்றார்.
தர்மா, ராமு, முதலில் வேடிக்கையாளராக இருந்தார்கள் சிதம்பரம் பேசியதால். சுந்தரும், விஜியும் வீட்டில் இல்லை, விஜி பள்ளி சென்றிருந்தாள்.
பிறகு தர்மா தங்கையிடம் எகிறிக் குதித்தான்.
ஜமுனாவிற்கு எங்கிருந்து தான் அந்த கோபம் வந்ததோ, “நான் ஏன் போகனுமுடி, நீ ஒழுங்கா உன் புருசன் வீட்டில் இருந்திருந்தால் நான் ஏன் இவரை பாக்கப் போறேன், உன் வீட்டுக்கா வந்தேன் இவரை பாக்க, எனக்கு தெரியாது நான் அத்தானை தான் கட்டிப்பேன், இவளுக்கு தான் அங்க போக புடிக்கலையே நான் போறேன், இவ வேணா இங்கயே இருக்கட்டும்” என்றாள்.
அப்பொழுது தான் புரிந்தது தாய், தந்தையருக்கு, வயது வந்த பெண் இருக்க வீட்டில் மாப்பிள்ளை வருகையின் பாதகம்.
சிதம்பரம் திரும்பி மங்கையை நாலுப் போட்டார், அது ஏன் என்று புரியாத தர்மா
“அப்பா! அக்காவை ஏன் அடிக்குறீங்க..? எல்லாத்துக்கும் காரணம் இவளும், இவரும்.. அவ தான் சின்னப் பொண்ணுல இவர் ஏன் நீங்க இல்லாதப்ப வீட்டுக்கு வந்தார், அவ மனசை களைச்சுட்டு இப்ப நல்லவர் மாதிரி வேசம் போடுறார்” என புரியாமல் பேச, முத்தையா அந்த இடத்தை விட்டு வேகமாக எழுந்தார் கோபமாக.
“டேய்! என்ன சொன்ன, நானா தப்பு செஞ்சேன். உன் அக்கா அங்க வந்திருந்தா நான் ஏன்டா இங்க வரப்போறேன். அந்த பொண்ணு வாழ்க்கை பாழாகிட கூடாதுனு இவ கிட்ட எடுத்துச் சொன்னா,மூடிட்டு என்னோட கிளம்பிடுவானு பாத்தேன், இவ என்னனா எனக்கு எதிரா எல்லாத்தையும் மாத்தி விட்டுட்டா” என மனைவியை அடிக்கப் பாய்ந்தார்.
“ஓ! அவன் சொன்ன மாதிரி என்னைய பாக்க வரலை, இவளை பாக்க தான் வந்தீங்களா..? அப்ப மாப்பிள்ளை பாத்தது எல்லாம் சும்மா நடிப்பா.. வெட்கமா இல்லை ஒரு பொண்ணை வச்சுக்கிட்டு செய்ற காரியமா இது..” என துள்ளினாள் கணவன் முன்.
“ஏய்! ஏய்! அறிவு இல்லாம பேசாத, என் மனசுல எதுவுமில்லாததால் தான் உன் கிட்ட வந்து சொன்னேன். இல்லைனா உன் தங்கச்சியை அழைச்சுட்டுப் போக தெரியாதா..?” என வார்த்தையை விட்டார் முத்தையா.
“எங்க அழைச்சுட்டு போயா..” என ராமு முத்தையாவை எதிர்த்து நின்றான்.
“டேய்! அமைதியா இருங்கடா, அவர் நம்ம மாப்பிள்ளை” என கமலாம்மா மகன்களை அதட்டினார்.
“என்னம்மா மாப்பிள்ளை, ஒன்னுக்கு ரெண்டு கேக்குது. மாப்பிள்ளை மாப்பிள்ளையாம்.. இவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு” என தர்மா வார்த்தையை விட்டார்.
ஆளாளுக்கு பேச, முத்தையாவிற்கு கோபம் சூடேறியது.
“ஆமான்டா! ஒன்னு என்னா.. எத்தனை வேணாலும் கட்டுவேன். என் இஷ்டம்” என ஜமுனாவின் கையைப் பிடித்தார்.
அவரை தடுக்க வந்த மச்சான்களை அடித்து தள்ளி விட்டவர், அவளை அழைச்சுட்டுப் போய் பைக்கில் ஏற சொல்ல, அவளும் ஏறி அமர்ந்தாள்.
வேகமாக சென்று விட்டார்கள் இருவரும். மங்கை கத்திய கத்தில் ஊரே வேடிக்கைப் பார்த்தது, அனைவரையும் பொறுத்தவரை அக்கா புருசனோடு ஜமுனா ஓடிவிட்டாள்.
அதன்பிறகு நடந்தது பெரியக் கதை, அது ஊர்ப் பிரச்சனையாக மாறியது.
முத்தையா ஊர் மக்கள் அவரிற்கு துணை நின்றார்கள், சிதம்பரத்திற்கு ஊர்த் துணை நின்றாலும் அவர்கள் ஓடிப்போக நீங்க தானே காரணம் என தூற்றவும் செய்தார்கள்.
இதில் சிறுமியாய் பாதிக்கப்பட்டது விஜி தான்.
முத்தையா ஏதோ ஆத்திரத்தில் ஜமுனாவை அழைத்து வந்துவிட்டோம் என உணர, பஞ்சாயத்து மூலம் விளக்கினார். ஆனால் ஜமுனா நான் இவரை தான் கட்டுவேனு சொல்ல, மங்கையோ எனக்கு அவன் வேணாம் என உதறினார் கோபத்தில்.
முத்தையாவின் உறவினர்களோ ஜமுனாவை ஏற்க அவர் மனதை மாற்றினார்கள். ‘ஊரறிய அழைச்சுட்டு வந்துட்ட எப்படி திருப்பி அனுப்புவ, இனி எவன் கட்டிக்க வருவான், அவ தான் வேணானு அங்கயே இருக்காள, இது என்ன ஊரில் நடக்காததா என்ன.?’ என தூபம் வீசினார்கள்.
முத்தையா ஊர்ப் பஞ்சாயத்து வைத்து விஜியை கேட்க, மங்கை மகளை கொடுக்க முடியாது என்றார். அப்பொழுது தர்மா, ராமு, சுந்தர் அக்கா பக்கம் நிற்க முத்தையா எதிரியாக மாறினார்.
முத்தையா விஜியை பள்ளியில் பார்க்கக் கூட முடியாமல் தடைப் போட்டார்கள்.
நாட்கள் நகர்ந்தது, ஜமுனாவும், முத்தையாவும் திருமணத்தை முடித்து வாழவே தொடங்கினார்கள்.
மங்கையும், விஜியும் அடிமைகளாக மாறினர் தாய் வீட்டில். அதன்பின் மங்கை உணர்ந்தது, அனுபவித்தது அதிகம்.
இதில் விஜிக்கு மனதில் பதிந்தது இது தான், அப்பா தன்னை விட்டுப் போயிட்டார், அவ்ளோ தான். இனிமே வர மாட்டார்.
விஜியிடம் அந்த வயதில் பிறர் கூறியவை தான் மனதில் ஏறியது. ‘உன் அப்பா சித்தியை அழைச்சுட்டுப் போயிட்டார், இனி உனக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் தான்’
ஆனால் முத்தையாவிற்கு மகள் என்ற ஏக்கத்தோடு தான் நகர்கிறது, முதலில் விஜியை பார்க்க பல வகைகளில் முயற்சித்தார் பிறகு அவளுக்கு தொந்தரவு வேண்டாமென்று ஒதுங்கியிருந்தார்.
ஏன்னென்றால் மாமன்கள் விஜியை வைத்து முத்தையாவை எதிர்ப்பதாக நினைத்து சின்னப் பெண் மனதை களைத்திருந்தார்கள், மங்கையும் சகோதரர்களோடு இணைந்து முத்தையாவை எதிரியாக காட்டினார் மகளிற்கு.
முத்தையா- ஜமுனா இன்றளவும் ஒன்றாக வாழ்கின்றனர், ஒரு மகனுடன்.
யார் மீது குற்றம் என்பதை பிரித்தறிய முடியாத சூழ்நிலையில் அனைவரின் பங்கும் இருந்தது,
இதில் பாதிப்பிற்குண்டானது முத்தையா – விஜியின் தந்தை, மகள் பாசமே…
ஜிமிக்கியின் ஜனனம் அடுத்து.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.