“சொல்லுடி! இதோ கிளம்ப போறேன், நீ குடுத்துவிட்ட ட்ரஸ் எல்லாம் வந்துட்டு” என ரெனியுடன் பேசியப்படி டிரஸ் பையில் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தாள் விஜி.
“விஜி! குரூப் மெசேஜ் பாக்கலையா..? மீட்டிங் போட்டு இருக்கான்டி அந்த மண்டகசாயம்”
“இல்லையே! அது மியூட்டுல இருக்கு கவனிக்கலடி” என மெசேஜை ஆராய்ந்தாள்.
இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது, அதுவும் வேகமாக கிளம்பினால் கூட நேரம் போதாது விஜி புறப்படுவதற்கு.
“ஹேய்! என்ன ரெனி நான் எப்படி இவ்வளவு சீக்கிரம் வர முடியும்..? நாட் பாசிபிள்..”
“அடியேய்! வந்து தான் ஆகனும், நேத்தே மெயில் அனுப்பி இருக்காங்க, இப்ப குரூப்ல அலார்ட் மெசேஜ்.. நம்ம கவனிக்கல பட் அதை அங்க சொல்ல முடியாது, நீ ஒன்னு பண்ணு ஜனா பைக்கில் வா, நான் கிளம்பிட்டேன்.”
“எரும! நீ கிளம்பிட்டு எனக்கு சொல்றீயா..? முன்னாடியே இன்பார்ம் பண்ண வேண்டியது தானே..?”
“ம்ம்ம்! நான் கிளம்பிட்டேன் அவ்ளோ தான், வாசனை திரவியம் எதுக்கு இருக்கு..? ட்ரஸ் போட்டமா அடிச்சமானு கிளம்புடி..”
“ச்சீ! உன்னைய… எப்படியோ போய் தொலை.. நான் கேப் புக் பண்ணி வரேன். நான் வர வரை சமாளிடி”
“அடிங்கு, அது எல்லாம் லேட் ஆகும் அந்த மண்டகசாயம் என்னைய போட்டு படுத்துவான்.. அதுவும் நீ இல்லைனா ரொம்ப கடுப்பாவான்.. நான் ஜனா கிட்ட சொல்லிடுறேன் நீ கிளம்பி வா” என ஃபோனை கட் செய்தாள்.
விஜி அதற்கு மேல் தாமதம் செய்யாமல் குளிக்க சென்றாள். புது இடம் என்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் செல்ல வேண்டிய அவசரத்தை கருத்தில் கொண்டு கிளம்பினாள்.
மணி மாலை ஆறு ஆகியதால், வசந்தா எழுந்து கணவருக்கான டீ தயார் செய்ய தொடங்கியிருந்தார்.
ஜனாவிற்கு ரெனியின் மூலம் தகவல் வர, அப்பு அறையிலே கிளம்பி ஹாலில் காத்திருந்தான்.
முத்துவிடம் விஜியை கொண்ட விட்டுட்டு வரேன் என கூறிக் கொண்டிருக்க, வசந்தா மூவருக்கும் டீ தட்டில் எடுத்து வந்தார்.
ஜனா, அப்பு, முத்து எடுத்துக் கொள்ள தாய் மகனை நோக்கவில்லை, ஆனால் ஜனா தாயை பார்த்துக் கொண்டு இருந்தான்.
“அம்மா!” என்றழைக்க அதை கேளாதவர் போல் அப்புவிடம்”டீயை குடிச்சுட்டுப் போய் படிடா, நீ என்ன பண்ணப் போறீயோ அடுத்து..?” என்ற கேள்வியோடு அடுப்படிற்குள் நுழைந்தார்.
முத்து”ஜனா! கவலைப்படாத அம்மா ஏதோ கோபத்துல இருக்கா” என்றார் சமாதானமாக.
மூவரும் டீ குடித்துக் கொண்டு இருக்க, விஜி மாடிப்படிகளில் இறங்கி வந்தாள்.
சரியாக வசந்தா அவருக்கான டீயை எடுத்துக் கொண்டு வந்து ஷோபாவில் அமர்ந்தார்.
விஜி கடைசிப் படியில் அப்படியே நிற்க, ஜனா டீயையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.
முத்து”வசந்தா! விஜிக்கு டீ உள்ள இருக்கா..? அப்பு நீ போய் எடுத்து வந்து அண்ணிக்கு குடு, வாம்மா விஜி” என அழைத்தார் மருமகளை.
அப்பு எழுந்திரிக்க போக, வசந்தா “விருந்தாளியா என்ன..? நான் போட்டுக் குடுக்க. எல்லாம் உரிமையில் தானே வந்து இறங்கிருக்கு, தேவைனா போய் போட்டுக் குடிச்சுக்கட்டும். நான் உங்களுக்கும், பெத்த இது ரெண்டுக்கும் தான் வேலைக்காரி..” என சிடுசிடுத்தார்.
ஜனா டீ டம்பளரை அப்படியே வைத்துவிட்டு அடுப்படிற்குள் சென்று வேகமாக ஒரு டீ போட்டு எடுத்து வந்து விஜியிடம் நீட்டினான்.
அவளோ அவனை ஒரு பார்வை பார்த்தாள், பையில் எதையோ தேடியவள் தேடியது கிடைத்தவுடன், அதை ஜனாவின் மறுகையில் திணித்துவிட்டு, டீ டம்பளரை வாங்கி கொண்டாள்.
ஜனா கேள்வியாக அவளை பார்த்தான்.
“என்னம்மா இது…?” என முத்து புரியாமல் கேட்டதும்,
“நான் இங்க வந்தது என்னோட சொந்த விருப்பத்தில் இல்லை, உங்க பையனோட அவசரமான புத்தியால், இந்த டீ எனக்காக போட்டு வந்ததால் வேஸ்ட் பண்ண தோணலை.. அதான் டீ விலையை கொடுத்துட்டேன்.
அப்புறம் உங்க பையனுக்கான உரிமை இந்த வீட்டில் என்னால தடைப்படாது, எனக்காக நீங்க யாரும் எதையும் மாத்திக்க வேண்டாம். எனக்கு இது ஒரு ஹாஸ்டல் மாதிரி தான். அதுக்கான வாடகையை மாச மாசம் தந்துடுறேன்.” என கூறிவிட்டு டீயை குடித்தவள், கிச்சன் உள்ளே சென்று டம்பளரை கழுவி முடித்து வெளியில் வந்தாள்.
முத்து”விஜி! நீ ஜனா மேல் கோபமா இருக்கனு தெரியும். அதே மாதிரி தான் ஜனா அம்மாவும் மகன் மீது கோபத்தில் இருக்கா, அவ பேசியதை நீ பெருசா எடுத்துக்காதம்மா, இது உன் குடும்பம் நம்ம குடும்பம்” என்றார்.
வசந்தா”ஏங்க! நீங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா.? நானும் இந்த குடும்பத்துக்காக தான் பேசுறேன், நம்ம இருக்க நிலையில் இவன் செஞ்சுட்டு வந்தது நியாயமா..?” என்றார் ஆதங்கமாக.
“சரி வசந்தா நடந்ததை இனி மாற்ற முடியுமா..? பொறுமையா யோசி, அவனும் எனக்காக எவ்ளோ தான் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை பாலைவனமா வாழுவான்..” என மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்தார் முத்து.
“நீங்க என்ன சொன்னாலும் இவன் செஞ்சது தப்பு, கடவுளே! இனி இந்த வீடும் இல்லைனு ஆச்சு. இதுல இன்னொரு எக்ஸ்ட்ரா டிக்கெட்.” என்றவர் மேல், விஜிக்கு கோபம் பொறுமையை மீறி வந்தது.
“அம்மா! ஏன்மா இப்படி பேசுறீங்க..? அவளா வரல நான் தான் தாலியை மாட்டி கூப்புட்டு வந்தேன். எதுவா இருந்தாலும் என்னைய திட்டுங்க, எல்லாத்துக்கும் கரணம் நான் தான்” என்றான் ஜனா.
“ஓ! மன்னிச்சுடுப்பா, நான் ஏன் மத்தவங்கள பத்தி பேசப் போறேன், நான் பெத்த நீ சரியில்லாத போது. இனிமே உன்னைய பத்தியும் நான் பேச மாட்டேன். நீங்க யாரு பெரிய ஆளாகிட்டீங்க, எங்க வார்த்தை எல்லாம் புடிக்காம தான் இருக்கும்” எனக் குத்திக் காட்டி பேசினார்.
“இங்க பாருங்க நான் எக்ஸ்ட்ரா டிக்கெட் தான், நான் வந்ததால் உங்களுக்கு கண்டிப்பா செலவு வந்துடாது, இனி என்னைய டார்கெட் பண்ணி பேசுறதை விடுங்க, ஒத்துக்குறேன் உங்களுக்கு என்னைய புடிக்கனுமுனு அவசியமில்லையே! ஒரு அம்மாவா உங்க பாயிண்ட் சரி தான்.” என அடுத்துப் பேசாமல் வெளியேறினாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த மகனிடம், முத்து”டேய்! என்னடா வேடிக்கைப் பாத்துட்டு நிக்குற..? போ! போய் விட்டுட்டு வா விஜியை” என அதட்டினார்.
ஜனா வெளியேறவும், முத்து”வசந்தா! இனிமே அந்த பொண்ணை பத்தி பேசுறதை நிறுத்து, தப்பு உன் மகன் மேல் தான், அவனும் பாவம் ஏதோ ஒரு சூழ்நிலையில் செஞ்சுட்டான் மனசுல இருந்த ஆசையில், உன் ஆதங்கம் புரியுது, அதுக்காக நீ இப்படி குத்திக் காட்டி பேசுறதால எதுவும் மாறாது, பதிலா சங்கடங்கள் தான் அதிகமாகும். புரிஞ்சுக்கோ சொல்லிட்டேன்” என எழுந்து மெதுவாக நடக்கச் சென்றார் வீட்டிற்கு பின்னால் சுற்றுவதற்கு.
விஜி வெளியில் வந்து மூச்சு வாங்க நின்றாள், அவளால் அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியவில்லை அதே நேரம் தன் தன்மானத்தை அவர்கள் முன் விடவும் மனம் வரவில்லை. தானாக வந்திருந்தால் அமைதியாக இருந்திருப்பாள்.
மாமா வீட்டில் மாமிங்க அவளோ பேசும் போது அமைதியாக இருந்தது, அவளும், அவளின் அம்மாவும் அந்த வீட்டில் தெரிந்தே பாரமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இங்க விஜி விரும்பி வரவில்லையே!
அனைத்தையும் யோசித்து நின்றவளை கடந்தவன், பைக்கை எடுத்து திருப்பிக் கொண்டு அவள் முன் நின்று,
‘ஓ காட்! அதை மறந்துட்டேன்’ என மனதில் பதறியவள், அவனிடம் மறுப்பு சொல்லாமல் பின்னால் சென்று ஏறினாள்.
மிதமான வேகத்தில் சென்றவன், பைக் மிரர் வழியாக தன் மனைவியை நோக்கினான்.
நெற்றியின் முன் முடிகள் காற்றில் ஆட, அதை ஒதுக்கியவாறு அமர்ந்திருந்தாள்.
சிறிது தூரம் சென்றதும்”விஜி! உன் கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றான்.
அவளோ பதில் பேசவில்லை.
“நீ பதில் சொல்லலைனாலும் காதுல விழுமுனு தெரியும். நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன். இப்ப நம்ம இருக்க வீடு ஏலத்திற்கு வந்துட்டு” என்றான்.
பதில் சொல்லவில்லை என்றாலும் அவளின் புருவம் நெளிந்ததை நோக்கினான் ஜனா, அவன் கூறியதும் கண்ணாடியே பார்த்துக் கொண்டிருந்தபடியால்.
“ஆமா! லோன் வாங்கியது வட்டிக் கட்ட முடியாமல் ஏலத்திற்கு வந்தது, நானும் சரினு சொல்லிட்டேன் ஏனா! இந்த வீட்டை வித்தா கடன் போக அஞ்சு லட்சமாச்சும் வரும், அதை அப்பாக்கு யூஸ் பண்ணலாமேனு.
சீக்கிரம் வீடு மாறிடுவோம், சின்னதா ஒரு வீடு பாத்து இருக்கேன் விஜி, இந்த வீடு மாதிரி இருக்காது, வாடகை கம்மி தான்” என அவன் முடிக்கவும் எப் எம் ஸ்டேசன் வந்தது.
பைக்கை நிறுத்தியதும் விஜி இறங்கி எதுவும் பதில் பேசாமல் சென்றாள்.
“விஜி!” என்றான் சற்று வேகமாக.
நின்று திரும்பிப் பார்த்தாள்.
“எதுவுமே சொல்லாம போற, வீடுப் பத்தி..” என தடுமாறினான்.
“எனக்கு சம்பளத்தில் பணம் மிச்சம் தான், சின்ன வீடா இருந்தால் என்னோட மன்த்லி ஷேர் குறையுமே” என கூறிவிட்டு அவனை திரும்பி பார்க்காமல் நடந்தாள்.
“விஜயதாரணி எங்க…?” எனக் கேட்டான் ரெனியால் மண்டகசாயம் என அழைக்கப்பட்ட ராம்கி.
“வந்துட்டு இருக்காங்க சார்” என்றாள் ரெனி.
ராம்கி அந்த எப் எம் ஸ்டேசனின் ஜி எம்.
“ஓ! எப்ப மீட்டிங் முடிந்ததும் வந்துடுவாங்களா…?” எனக் கேட்டான் நக்கலாக.
‘ஆமா’ என மனதில் நினைத்த ரெனி, மறந்து வெளியில் சொல்லி விட்டாள்.
உடனே “இல்ல சார்!” எனக் கூறி சமாளித்தாள்.
அவளை ஒரு மாதிரி முறைத்தான், அருகில் இருப்பவனோ”சார்! விஜிக்கு மேரெஜ் ஆகிட்டு, அதான் லேட் போல.. புது இடத்தில் இருந்து வரனுமுல” எனக் கூறியதும் அதிர்ச்சியாக பார்த்தான் ராம்கி.
“வாட்!” என்றவாறு…
“ஆமா சார்! ரெனி சொல்லு” என ரெனியை கோர்த்துவிட, அவளோ அருகில் இருப்பவனை முறைத்துக் கொண்டே”எஸ் சார்!” என்றார்.
“ஒய் சடன்லி!’
“அது…. லவ் மேரெஜ் சார்” என தொடங்கியபோது விஜி
“எக்ஸ்க்யூஸ் மி சார், மே ஐ கம் இன்..?” என கதவு அருகே நின்றாள்.
“ஹப்பாடா!” என ரெனி நிம்மதியானாள்.
“எஸ் கம் இன்.. வாட் டைம் நவ்.. டிட் யு ஸி மீட்டிங் ஷெடியூல்…?” என எக்ஸ்ட்ரா பத்து வார்த்தைகளை அள்ளி விட்டவன், பிறகே “சிட் டவுன்” என்றான்.
அங்கு இருந்த இருபது ஆர் ஜே வும் விஜியை காட்சிப் பொருளாகப் பார்த்தனர்.
புதுப்பெண்ணுக்கே உரிய எந்த ஒளிவட்டமும் தெரியவில்லை அவள் முகத்தில்.
கேப் ட்ரைவரிடம் விஜியின் புது அட்ரஸை ரெனி கொடுக்க அவனோ யார் வீடு என்று கேட்டான், அவளோட புருசன் வீடென்று கூறியதால், ட்ரைவர் மூலமாக ஆபிஸிற்கே தெரிந்தது.
மீட்டிங் முடிய ஒரு மணி நேரம் சென்றது.
முடியவும் அனைவரும் எழுந்து சென்றனர்.
“ஒரு நாளைக்கு இந்த மண்டகசாயத்தை மர்டர் பண்ணப் போறேன் பாருடி” என ரெனி புலம்பிக் கொண்டே தோழியோடு நகர்ந்தாள்.
“பேசாம வா லூசு!” என விஜியும் வாயினுள் சிரிப்பை அடக்கியவாறு நடந்தாள்.
“விஜி!” என அழைத்தான் ராம்கி.
திரும்பி”எஸ் சார்!” என்றாள்.
“யு வெயிட் ஹியர், அதர்ஸ் வில் லிவீங்” என்றான்.
“சரிடி! நீ வா, நாங்க போறோம்” என ரெனி மற்றும் அனைவரும் வெளியேறினர்.
“உட்காரு விஜி!”
“இட்ஸ் ஓகே சார்! எனிதிங் இம்பார்டென்ட்”
“நீயே இம்பார்டென்ட் தான் விஜி” என ஒரு மாதிரி சிரித்து பற்களை காட்டினான் அவன்.
அவனின் செய்கையில் முகம் சுளித்தப்படி
“சார்! முக்கியமான விசயமுனா சொல்லுங்க, இல்லைனா நான் போய் நைட் ஷோக்கு ப்ரிபேர் பண்றேன்” என்றாள்.
“ஓ! நைட் ஷோ…? ஆமா! உனக்கு கல்யாணம் ஆகிட்டாமே..?” என அவளின் கழுத்தை ஆராய்ந்தான், அதுவோ கழுத்து வரை மூடப்பட்ட டாப்ஸ் என்பதால் மறைக்கப்பட்டிருந்தது தாலியும் சேர்த்து.
விஜிக்கு ஆபிஸில் அவளை யாரும் கழுத்தில் அது என்னதுனு கேட்டுட கூடாதென்று தான் அப்படி மறைத்து வந்திருந்தாள்.
“ம்ம்ம்! ஆர் யு மேரிட்…?”
“ம்ம்ம்! எஸ் சார்” என்றாள் மெல்ல.
“அவசர திருமணம் போல, என்ன லவ்வா..?”
இவனிடம் எதற்கு விளக்க வேண்டும் என்று “ஆம்!” என்றாள்.
“ஓ! அவசரமா பண்ற அளவுக்கு லவ்வோ..? ரொம்ப நாள் லவ்வா..? இல்ல ரெடிமேட் லவ்வா..? ஆள் வசதியோ..? என்னைய விட..” என்றான் நக்கலாக.
“அவர் சிவில் இன்ஞ்சினியர் சார், வொர்கிங் அஸ் சைட் இன்ஞ்சினியர். எனக்கு தெரிஞ்ச லவ் மனசும் மனசும் பிடித்து காதலிப்பது, அது மட்டும் தான் எங்க காதலில் இருக்கு” என்றாள் கொஞ்சம் கர்வமாக.
“ம்ம்ம்! என்னத்த மனசும் மனசும் காதலிச்சதுனு தெரியல.. கல்யாணம் ஆன புதுப்பொண்டாட்டியை இப்படி நைட் டியூட்டிக்கு அனுப்பிட்டான்.. சாரி! சாரி! அனுப்பிட்டாரு” என புருவத்தை உயர்த்தி சிரித்தான்.
“என்னோட பெர்சனல் பேச தான் வெயிட் பண்ண சொன்னீங்களா சார்..?” என்றாள் சற்று காட்டமாக.
“நம்ம பெர்சனல் விஜி, எனக்கு ஓகே பண்ணி இருந்தால் இன்னேரம் மகாராணியா வாழ்ந்திருக்கலாம், அதுவும் இந்த டைம் இரவுப் பொழுதை அப்படியே……” என கற்பனையில் கண் மூடியவனை அடிக்க முடியாமல் அவள் முன் இருந்த டேபிளில் ஓங்கி தட்டினாள்.
“ஏன்..? ரியல் இல்லையே கனவு தானே விஜி, நான் சொல்றதை இமேஜின் பண்ணி பாரு சூப்பரா இருக்கும்” என பற்களை காட்டினான்.
“ஐ ஆம் மிஸஸ் விஜயதாரணி, டிட் யு அண்டர்சேன்ட்.. நீங்க வேணா அடுத்தவன் பொண்டாட்டியோடு இமேஜின் மோட் போவீங்க, பட் ஐ கான்ட் திஸ்.. அடுத்தவங்க புருசன் கூட கேவலமா இமேஜினேசன் செய்வது எல்லாம் கேடுகெட்ட செயல்.. அல்ரேடி நான் சொல்லி இருக்கேன் எனக்கு உங்களோட பிகேவியர் பிடிக்கலைனு. சுஜா மேடம் கிட்ட சொன்னா என்ன ஆகுமுனு தெரியுமா..? உங்களுக்கு பசங்க இருக்காங்க மைண்ட் இட்.. இனி வேலை விசயமா பேசுறதா இருந்தால் என் கிட்ட பேசுங்க இல்ல இந்த ஆபிசில் உங்களுக்கு இருக்க ரெக்ஸ்பெட் காணாமல் போயிடும்.” எனக் கூறி எச்சரித்து விட்டு வெளியேறினாள்.
ராம்கி முகம் கன்றியது…
விஜி மனதில்’ச்சே! என்ன மனுசன் இவன்.. பொண்டாட்டி, பிள்ளை இருக்கும் போது எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது.. ? என்னைய சுத்தி மட்டும் ஏன் தானோ இப்படி கேரக்டர்ஸ் வராங்களோ’ என தன் தந்தையை சேர்த்து அருவருத்தாள்.
ரெனியிடம் இதைப் பற்றி விஜி கூறவில்லை. அவன் விஜியிடம் வழிந்துப் பேசுவது ரெனியும் அறிந்தது தான். ஆனால் ஆபிஸில் இது எல்லாம் புறக்கணிக்க முடியாத ஒன்று என பெரிதாக அவனை நினைவில் ஏற்ற மாட்டார்கள்.
இரவு டியூட்டி முடிந்து வெளியில் வந்தனர் விஜி, ரெனி இருவரும்.