ஜனா, விஜியை அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைக்கவும்,
ஜனாவின் பெற்றோர் அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டனர்.
சிறிது நேரம் கடந்தது, அமர் மற்றும் ரெனி இருவருமே விசயம் கேள்விப்பட்டு வந்துச் சேர்ந்தனர்.
மாலைப்பொழுது ஆக, மருத்துவர் அழைப்பதாக செவிலியர் வந்துக் கூறினார்.
ஜனா, முத்தையா மற்றும் விஜி இருவரையுமே மருத்துவர் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“வாங்க ஜனா! சிட்” என்றார் டாக்டர்.
மூவரும் அமர, “டாக்டர்! அம்மாக்கு இப்ப எப்படி இருக்கு..?” என மனதாங்கலோடு கேட்டாள் விஜி.
“அத சொல்ல தான் வரச்சொன்னேன்மா.
அவங்க க்ரிடிக்கல் ஸ்டேஜை தாண்டிட்டாங்க” என்றார்.
அதைக் கேட்டதும் விஜி சந்தோஷத்தில் ஜனாவின் கையைப் பிடிக்க, முத்தையாவும் மகிழ்ச்சியில் ஜனாவின் தோளில் கை வைத்தார், இருவரின் உணர்வுகளையும் அவனால் உணர முடிந்தது.
“தேங்க்ஸ் டாக்டர்! அவங்களை ரெக்கெவர் பண்ணிக் கொடுத்ததுக்கு” என டாக்டரிடம் கூறினான் ஜனா.
“தட் இஸ் மை டியூட்டி ஜனா, மோர் ஓவர் கடவுளோட உதவியும் இருந்திருக்கு. அப்புறம் அவங்க மெடிக்கல் ஹிஸ்ட்ரி பார்த்தேன். சைக்லாஜிக்கலா ப்ராப்ளம் இருக்கோ..” எனக் கேட்டார்.
“ஆமா!” என்றான் விஜியைப் பார்த்தவாறு.
“ஹிஸ்டிரியை பார்த்தால் இடையில் வந்த மாதிரி தான் இருக்கு.. எப்டினு தெரிஞ்சா ஹெல்ப் பண்ணலாம்”
“சில வருசங்களுக்கு முன்னாடி தான் டாக்டர் அம்மா இப்டி மாறினது, நல்லா தான் இருந்தாங்க அப்பப்ப ஏதாவது பேசினதையே பேசும் போது நாங்க பெருசா எடுத்துக்கல அப்புறம் அது அதிகமாச்சு, டாக்டர் கிட்ட காட்டி மெடிசன்ஸ் கொடுத்தோம், ஆனா அது அவங்களுக்கு ஹார்டா தெரிஞ்சது, கிட்டதட்ட நோயாளி மாதிரி, அதான் இப்டியே இருக்கட்டுமுனு விட்டாச்சு”
“ம்ம்ம்! சரி அவங்க மனசைப் பாதிக்குற மாதிரி எதுவும் நடந்துச்சா இல்ல, தானாவே மாறிட்டாங்களா..?”
“அது வந்து…” என விஜி நிறுத்த, ஜனா தொடர்ந்தான், “டாக்டர்! பேமிலி இஷ்யு தான்” எனச் சுருக்கமாக கூறினான்.
எதனால மங்கைக்கு அந்த மனநிலை மாறியது தெரிந்தால் டாக்டர் எதுவும் அட்வைஸ் செய்ய முடியும் என நம்பினான் ஜனா.
“ம்ம்ம்! புரியுது ஜனா” என்ற டாக்டர், முத்தையாவிடம் பேசினார்.
“சார்! உங்க பெர்சனலில் நான் பேச முடியாது, ஜனா கூறியதில் பார்க்கும் போது நீங்க தான் மெயின் ரோல் போல, ஏனா! அவங்க மனநிலை மாறியதற்கு நீங்களும் முக்கிய காரணமா இருக்குறீங்க. சோ! அவங்களை பக்கத்துல வச்சுப் பாத்துக்கோங்க, ஒரு வேளை அவங்களும் உங்களை இழந்துட்டோம் என நினைத்து உடைந்த மனதை மறுபடியும் தெளிவாக மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கு, இது ஒரு முயற்சி தான்.” என்றார்.
“சரிங்க டாக்டர்!”
“அப்புறம் ஜனா, அவங்களுக்கு இன்னும் சுகர் லெவெல் நார்மல் ஆகல. சோ! ஒன் வீக் அப்சர்வேசனில் வச்சு தான் ஆகனும்.”
“ஓகே! டாக்டர், அவங்களை இப்ப பாக்கலாமா..?” எனக் கேட்டான் ஜனா.
“வெயிட் பண்ணுங்க, அவங்க கண் முழிக்க த்ரீ ஹவர்ஸ் ஆகும், அப்புறம் நார்மல் வார்டுக்கு மாத்தியதும் பாக்கலாம், ஃபீஸ் மத்த டீடெயில்ஸ் ரிசப்சனில் கேளுங்க சொல்லுவாங்க” என அவரது கடமையைக் கூறினார்.
மூவரும் எழுந்து வெளியில் சென்றனர்.
ஜனா”சரி! நீங்க போய் உட்காருங்க, நான் போய் பில் பத்தி கேட்டுட்டு வரேன்” என்றான்.
“மாப்பிள்ள! இருங்க” என தன் இடுப்பில் சொருகிருந்த பணம் கட்டினைக் கொடுத்தார் முத்தையா.
“எதுக்கு மாமா இது…? நான் பாத்துக்குறேன்”
“இல்லப்பா! அவசரத்தில் எடுத்துட்டு வந்தேன், வீட்டில் இருந்ததை, இப்பதைக்கு இதை கட்டுங்க, மீதி எவ்ளோனு பாத்துட்டு நான் ரெடிப் பண்ண சொல்றேன். நீங்க இருக்க நிலையும் தெரியும். அப்பா ஃபோனில் சொன்னார் எல்லாத்தையும். போங்க போய் இதைக் கட்டிட்டு வாங்க” என்றார்.
ஜனா விஜியைப் பார்த்தான், அவளோ வேறு வழியின்றி லேசாக தலையை அசைத்தாள்.
ஜனா ரிசப்சன் நோக்கி நடந்தான், விஜி ரெனியுடன் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அதுவரை ரெனியுடன் பேசிக் கொண்டு இருந்த ஜெய் விஜியைக் கண்டதும் அமைதியாக வாசித்தான்.
“டேய்! இவ்வளவு நேரம் அப்படி பேசின, இப்ப என்னடா ஏதோ பூதத்தைப் பார்த்த மாதிரி கம்முனு இருக்க” எனக் கேட்டான் அமர்.
“ஆமா அமர்! எல்லாம் விஜிப் பூதம் தான் காரணம்” எனச் சிரித்தாள்.
விஜி ரெனியைப் பார்த்து முறைக்கவும்,
அமர்”ஹஹஹ! உண்மையை உரக்க சொன்னப் பாரு.. ஐ அப்ரிசேட்” என்றான்.
ஜமுனா முத்தையாவிடம் டாக்டர் என்ன சொன்னார் என்பதனைப் பற்றி விசாரிக்கவும், விஜியிடம் அமர், ரெனி விசாரித்தனர்.
கேட்டவர்கள் மகிந்திட, ஜனாவும் வந்துச் சேர்ந்தான்.
“விஜி! எப்டியும் டைம் நிறைய இருக்கு, அத்தையை நார்மல் வார்டுக்கு மாற்றுவதற்குள் வீட்டிற்குப் போயிட்டு வந்துடலாம். அப்புறம் உடனே போகனும் என்றில்லை பாரு” எனக் கூறினான்.
விஜி கடுப்புடன் எழுந்து வெளியில் நடக்க, ஜனா”ரெனி! ஏன்மா நீ வேற” என லேசாக சிரித்துவிட்டு, “நீங்க வாங்க மாமா, ஜெய் எழுந்திரி.. வாங்க” என ஜமுனாவையும் அழைத்தான்.
அவர்கள் எழுந்து நடக்க, ஜனா முன்னே ஆட்டோ பிடிப்பதற்காக சென்றான்.
ஜெய் அப்படியே நின்று”அப்பா! எனக்கு அங்க வர பயமா இருக்கு, அக்கா திட்டினாங்கனா..” எனக் கேட்டான்.
“அது எல்லாம் திட்டாது நீ வா தம்பி” என்றாள் ஜமுனா.
“உன் அக்காக்கு என் மேலயும், அம்மா மேலயும் தான் கோபம். உன் மேல எந்த கோபமும் இல்லப்பா, நீ வா” என்றார் முத்தையா.
ஜெய் தலையை அசைத்துவிட்டுத் திரும்ப, அங்கு கைப்பையை எடுப்பதற்காக வந்த விஜி நின்றுக் கொண்டு இருந்தாள்.
அவர்களைக் கடந்து வந்து கைப்பையை எடுத்தவள், மறுபடியும் அவர்களைத் தாண்டிச் சென்றாள்.
அதுவரை அப்படியே நின்றார்கள் மூவரும், என்ன தான் ஜனா அவர்களை அழைத்திருந்தாலும், விஜி முகம் திருப்பிக் கொள்வது கடினமான சூழலாக தான் அமைந்தது.
சற்றே தொலைவில் நின்ற அமர் ரெனியிடம்”ஆனாலும் விஜி ரொம்ப பண்ற மாதிரி இருக்கு ரெனி, பெரியவங்க பிரச்சனையில் அந்த சின்னப் பையனையும் அவாய்டு பண்றாங்க” என்றான் குறையாக.
“எனக்கும் அப்படி தான் தோணுது அமர்” என்றாள் ரெனி.
அவர்களைக் கடந்து சென்ற விஜி சிறிது தூரம் சென்றதும், நின்று திரும்பினாள்.
ஜெய்யைப் பார்த்து”இங்க வா!” என அழைக்க, ஜெய் தன்னை தான் அழைக்கிறாளா எனச் சுற்றிப் பார்த்தான்.
“உன்ன தான் கூப்புடுறேன், வா” என்றாள் மீண்டும்.
முத்தையா”போ! அக்கா கூப்புடுதுல” என்றார்.
ஜெய் மெதுவாக விஜியின் அருகில் சென்று நின்றான்.
“வா!” என அவனின் கையைப் பிடித்தவள்,
“உன் பேரு என்ன..?” எனக் கேட்டப்படி நடந்தாள்.
முத்தையா ஜமுனாவிடம்”என் பொண்ணு அது, கோபம் என்ன மாதிரி இருக்கு ஆனா குணம் அதே பச்சப்புள்ளைல பாத்தது” எனப் பெருமையாகப் பேசியப்படி நடந்தார்.
“விஜயந்திரன் அக்கா!” என்றான் பட்டென்று.
அவளுக்கு ஒரு மாதிரி சுருக்கென்றது.
“எந்த கிளாஸ் படிக்குற..?”
“எய்த் அக்கா”
“நல்லா படிப்பீயா…?”
“ம்ம்ம்! உங்களை மாதிரி படிக்குறேனு அம்மா சொல்லும்”
“ஓ!” என பின்னோக்கிய நாட்களை எண்ணிப் பார்த்தாள்.
ஜமுனா தானே விஜியின் அம்மாவாக அனைத்தும் செய்தது, விஜியைப் பற்றி மங்கை புரிந்து வைத்திருக்க மாட்டார், எப்ப சாப்பிடுவா, எப்ப தூங்குவா, என்ன சாப்பிடுவா ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்த ஜமுனா அவளின் நினைவில் ஏறினாள்.
பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக அவன் கையைப் பிடித்தப் படி நடந்தாள்.
விஜி அவன் கூறியதைக் கேட்டு புருவத்தைச் சுளித்தாள்.
“ஏன் உன் அப்பா கோபப்படுறார்..? உன் அம்மா எதும் சொல்லுவாங்களா..?”
“தெரியலைக்கா! அது வந்து அப்பா நைட் ஆனா, தண்ணி அடிச்சுடுவாரு அப்புறம் காரணமே இல்லாமல் அம்மாவைத் திட்டுவாரு. அம்மா எதுவும் பேசாது பாவம். ஆனா அப்பாவும் பாவம் தான். என் மேல பாசமா இருப்பார்” என அவன் போக்கில் கூறினான்.
“ம்ம்ம்!” என வெளியில் வந்தவள், ஜனாவைத் தேடினாள்.
“எங்கடா மாமாவைக் காணும்..?”
“தெரியலக்கா! இருங்க பாக்குறேன், நீங்க இங்கயே பத்திரமா நில்லுங்க, நான் மாமாவைக் கூட்டிட்டு வரேன்” என அவளின் கையை விட்டுட்டு இருப் பக்கமும் பார்த்தவாறு நடந்தான்.
விஜி அவனை அதிசயமாகப் பார்த்தப் படி நின்றாள், ‘சின்ன வயசுல எப்டி பேசுறான். என்னைய விட சின்னவன் ஆனா நான் பத்திரமா நிக்கனுமாம்’ என மனதிற்குள் சிரித்தாள்.
அவள் அருகில் முத்தையா, ஜமுனா வந்து நின்றனர். சரியாக ஆட்டோவும் வந்து நின்றது. விஜி திரும்பி ஜெய்யை தேட, அவன் ஜனாவோடு வந்துக் கொண்டு இருந்தான்.
“அண்ணே! என்னை ஃபாலோ பண்ணுங்க” என்று ஆட்டோ ட்ரைவரிடம் கூறிய ஜனா, தன் பைக்கை சென்று எடுத்தான்.
“உட்காரு விஜி!” என பைக்கை நகர்த்தினான்.
விஜி ஏறி அமரவும், ஜனா முன்னே செல்ல, ஆட்டோ அவர்களைப் பின் தொடர்ந்தது.
ஜமுனா”மொத மொத விஜி வீட்டுக்குப் போறோம், ஏதாவது வாங்க வேணாம அத்தான்.” எனக் கேட்டாள்.
“ஆமால! நான் மறந்துட்டேன் பாரு, இப்ப எப்படி வாங்குறது…? மாப்பிள்ள முன்னாடி போயிட்டு இருக்காரே”
“சார்! என்ன வாங்கனும்..?” என ஆட்டோ ட்ரைவர் கேட்கவும், “ஒன்னுமில்ல தம்பி! பொண்ணு வீட்டுக்கு மொத மொதப் போறேன், அதான் ஏதாச்சும் பழவகை வாங்கனும்”
“அதுக்கென்ன சார் வாங்கிடலாம், அவர் சொன்ன ஏரியா டவுன் தான், பொண்ணு வீட்டுக்கிட்டயே போய் வாங்கிகலாம்” என்றான் அவன்.
ஜனா ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி,
“அண்ணே! இதுல ஆட்டோ போகாது, நடந்துப் போயிக்கலாம். இப்டியே நிறுத்துங்க” என்றான், அது ஒரு சந்து வழி.
“சரிங்க தம்பி!” என ஓரமாக நிறுத்தினான். அது நல்ல டவுன் என்பதால் கூட்டமும், பழக்கடை, மளிகை கடை என வரிசையாக இருந்தது.
ஜனா பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான், விஜி ஜெய்யை அழைத்துக் கொண்டு முன்னே நடந்தாள்.
“வீடு எங்க மாப்பிள்ள….?”
“இதோ இது வழியா போனா நாலாவது வீடு தான் மாமா”
“சரி நீங்க போங்க, நாங்க வரோம்” என்றார்.
“ஏன்..? எங்கப் போறீங்க…?”
“சார்! மொத மொத பொண்ணு வீட்டுக்கு வராங்க பழவகை வாங்கனுமுல..” எனக் கிண்டலாக சொல்லிய ஆட்டோ ட்ரைவர், ஜனா பணம் கொடுக்கவும் கிளம்பினான்.
ஜனா வீட்டை மட்டும் காட்டிவிட்டு முன்னே சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்த ஜனாவோடு யாரும் வராமல் இருக்க, முத்து”எங்கப்பா முத்தையா..?” எனக் கேட்டார்.
“வருவாங்கப்பா!” என அவன் அறைக்குள் நுழைந்தான்.
ஜெய் அங்கு அமர்ந்திருக்க, “என்னடா உன் அக்கா பேசிட்டாளா..?” எனச் சிரித்து கேலிச் செய்தான்.
“ஆமா மாமா!”
“அவ முதலில் அப்படி தான் பிகு பண்ணுவா அப்புறம் கவுந்துடுவா, மாமா எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பேன் நினைச்சிப் பாரு” என நக்கலாக கூறவும்,
“மிஸ்டர் கோல்ட்! ரொம்ப பேசாம போய் குளிங்க, ஹாஸ்பெட்டல் போகனும்” என வெளியில் எட்டிப் பார்த்தாள்.
இருவரையும் காணாததால், “எங்க காணும்..?” எனக் கேட்டாள்.
“யாரு..?”
“ம்ம்ம்! தெரியாதுல.. விடுங்க” என அவளின் உடையை எடுக்கத் தொடங்கினாள்.
“ஜெய்! போய் அந்த மாமா கூட உட்காந்துப் பேசிட்டு இரு அம்மா, அப்பா வந்துடுவாங்க” என அவனை வெளியில் அனுப்பினான்.
அவன் சென்றதும், “ஏன்டி இப்டி இருக்க..?” என அவளை பின்னால் இருந்து அணைத்தான்.
“எப்டி இருக்கேன்.?”
“அவங்க யாருக்காக இந்த வீட்டுக்கு வராங்க?”
“நான் கூப்புடல”
“ஜிமிக்கி!”
“ம்ம்ம்!” என திரும்பவே இல்லை.
“மாமாவை நான் கவனிச்சுப்பேன். ஆனா உன் சித்திக்குத் தேவையானதை அம்மா கிட்ட எதிர்பார்க்க முடியாது. சோ! நீ ஜெய் மூலமா செய்”
“ஜனா!” என திரும்பி முறைத்தாள்.
“சூழ்நிலை அப்டி இருக்கு ஜிமிக்கி, புரிஞ்சுக்கோ சில நேரங்களில் விட்டுக் கொடுக்கனும், மனிதாபிமானம் நமக்கு இருக்குல” என அவளின் விழிகளை ஆராய்ந்தப்படி கேட்டான்.
“மனிதாபிமானத்தோடு என்ன செய்யனும் நான்?”
“ஜஸ்ட் அவங்களுக்கு ஏதாவது ட்ரஸ் கொடுத்து மாத்திக்க சொல்லு”
ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டவள், “சரி போங்க” என்றாள்.
“பொண்ணு வீட்டுக்கு ஃபர்ஸ்ட் டைம் வராங்கனு ப்ரூட்ஸ் வாங்கப் போய் இருக்காங்க” எனக் கூறி, அவளின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு வெளியேறினான்.
விஜி அப்படியே நின்றுக் கொண்டு இருந்தாள், வெளியில் வரவேற்கும் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தாள்.
முத்தையா, ஜமுனா ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.
விஜி மனதில் அவர்கள் அமர்ந்திருந்தது ஏனோ மங்கை, முத்தையா போல காட்சி அளித்தது.