விடியற்காலை நான்கு மணியிருக்கும். ஜனாவின் ஃபோன் அடித்தது அதன் சத்தத்தில் இருவருமே முழித்தனர். ஃபோனை அட்டென்ட் செய்து எடுத்தவனிற்கு எதிர்முனையில் எதுவுமே கேட்கவில்லை.
“ஏதோ ராங் நம்பர் போல!” என கட் பண்ணியவனிடம்”நல்ல தூக்கம் ஜனா, மணி என்ன..?” எனக் கேட்டாள் விஜி.
மணி என்னவென்று பார்த்தவன், “நாலு மணி தான் ஜிமிக்கி, நீ தூங்கு” என தன் ஃபோனை எடுத்து சைலண்டில் போட்டுவிட்டு தன்னவளை அணைத்துக் கொண்டு மேலும் தூக்கத்தை தொடர்ந்தான் அவன்.
அன்று காலையில் பத்து மணியளவில் ஊரிற்கு கிளம்புவதாக ஜனாவும், விஜியும் அடுத்த நாள் தீபாவளியை முன்னிட்டுத் திட்டம் போட்டு இருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பின் ஜனாவிற்கு இயற்கை உபாதை செல்ல உணர்வு வரவும், விஜி முழித்துவிடாமல் மெல்ல எழுந்தான்.
எழுந்து நின்றவன் தன் உடையை சரிசெய்தவாறு திரும்ப அவன் ஃபோன் பிலிங் ஆனது.
“யாரு…?” என அதை எடுத்தவன், மெல்ல கதவைத் திறந்துக் கொண்டு மீண்டும் மெல்ல அதை சாத்திவிட்டு வெளியில் பின்பக்கம் பாத் ரூம் நோக்கி சென்றான்.
வசந்தா அடுப்படியில் வெந்நீர் போட்டுக் கொண்டு நின்றார்.
ஜனா வருவதைக் கண்டு”ஜனா! அப்பாக்கு வர டிகாசம் போடுறேன், உனக்கும் வேணுமா..?” எனக் கேட்டார்.
“ம்ம்ம்! போடுங்கம்மா, ஏதோ புது நம்பர் ஃபோன் வருது, யாருனு தெரியல” எனக் கூறியவாறு, அதுவரை அடித்து நின்ற எண்ணிற்கு திரும்பி அழைத்தான்.
“சொல்லுங்க! என்ன இந்த நேரத்தில் ஃபோன் பண்ணி இருக்கீங்க…?”
“அது வந்து….. சொல்ல சங்கடமா தான் இருக்கு, ஆனா என்ன செய்றது பாருங்க, உங்க மாமனார் தவறிட்டாருபா, நான் ஹாஸ்பிடலில் இருந்து தான் கூப்புடுறேன்” என்றார்.
“என்ன சொல்றீங்க….?” எனச் சற்று சத்தமாக அதிர்ச்சியடைந்தவன் அருகே ஓடிவந்தார் வசந்தா.
“ஜனா! என்ன ஆச்சு..? யாரு ஃபோனுல.?” எனப் பயந்தே கேட்டார்.
தன் அம்மாவை பார்த்தவன், ஃபோனில்
“எப்டி திடீருனு, என்ன நடந்துச்சு..?” எனக் கேட்டான்.
“தம்பி! அவருக்கு ஏற்கனவே இதயத்துல அடைப்பு இருந்து அதுக்காக மாத்திரைச் சாப்புட்டு இருந்திருக்காரு, ஆனா அது ஜமுனாவுக்கே தெரியாதாம், மனுசன் கடந்த சில நாளா மாத்திரை எடுத்துக்காம விட்டுட்டார். நைட்டு ரெண்டு மணியிருக்கும் நெஞ்சுவலி வந்துட்டு, அவசரமா ஆஸ்பத்திரிக் கூட்டியாந்தோம்.
ஆனா காப்பாத்த முடியல, நீங்க புள்ளையைக் கூட்டிட்டு வாங்க, நாங்க மத்ததைப் பாத்துக்குறோம், இந்தாங்க ஜமுனா கிட்ட பேசிடுங்க” என தொலைவில் இருந்த ஜமுனாவிடம் சென்று கொடுத்தார்.
“இந்தா உன் மாப்பிள்ளை பேசுறார்” என ஃபோனை அவளிடம் நீட்டினார்.
அப்பொழுது தான் ஜனாவிற்கு அழுதுப் புலம்பு ஓலம் கேட்டது.
“தம்பி! உங்க மாமா நம்மளை ஏமாத்திட்டுப் போயிட்டாரே, இனி எங்களுக்கு யார் இருக்கா…?” எனக் கதறினாள் ஜமுனா ஜனாவிடம்.
ஜனாவிற்கு அதுவரை தான் கேட்டது நிஜம் தானா என ஒரு உணர்வு இருந்தது, ஆனால் ஜமுனாவின் அலறலில் கண்களில் நீர்க் கோர்த்தது, அதைக் கவனித்த வசந்தா பட்டென்று ஃபோனை பிடுங்கி காதில் வைத்தார்.
ஜமுனாவின் புலம்பலில் அதிர்ச்சியான வசந்தா”ஜமுனா என்ன ஆச்சு…? ஏன் அழுவுறீங்க…?” எனக் கேட்டார்.
ஜனா அப்படியே அங்கிருந்த கட்டையில் அமர்ந்து ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்தான்.
“சம்பந்தி!” என ஜமுனா ஆரம்பிக்க, வசந்தாவிற்கும் அதை ஏற்க முடியவில்லை.
“நாங்க உடனே வரோம், நீங்க தைரியமா இருங்க” என ஃபோனை அணைத்தவர், ஜனா அருகில் அமர்ந்தார்.
தன் தாயை கட்டிப் பிடித்து அழுதான்.
“எப்டிம்மா! இத போய் விஜி கிட்ட சொல்லுவேன். சத்தியமா முடியாதும்மா. இப்ப தான் அந்தக் கடவுள் அவங்களை சேர்த்தார். அதுக்குள்ள பிரிக்கனுமா…?”
“ஜனா! நீ கொஞ்சம் தெளிவா இரு, இல்லனா விஜியும் பதறிடுவா… நீ முதலில் அவளை கிளப்பி கூட்டிட்டுப் போ, நானும், அப்பாவும், அப்புவும் அமரை அழைச்சுட்டு வரோம்….”
“என்னனு சொல்லிம்மா கிளப்புவேன்..”
“இங்க எதுவும் சொல்லாத, அங்கப்போய் சொல்லிக்கலாம் அதுவரை சமாளிச்சுக் கூட்டிட்டுப் போடா, இல்லைனா இங்க இருந்து கதறிடுவா…. சிரமமாகிடும்”
“சரிம்மா! அப்பா கிட்ட…”
“நான் போய் பொறுமையா சொல்றேன். நீ போய் விஜியைக் கிளப்பு… சீக்கிரம் போகலாமுனு ஏதாவது காரணம், ஆ! நான் சொன்னேனு சொல்லு நல்ல நேரம் காலையிலே இருக்கு அதுக்குள்ள கிளம்பனுமுனு” என்றார்.
ஜனா பாத் ரூம் சென்று முகம் கழுவி தான் அழுததை மறைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.
நிம்மதியாக உறங்கும் மனைவியைக் கண்டவனின் மனம் நொறுங்கியது.
ஆழ்ந்த மூச்சினை இழுத்துவிட்டவன்,
“விஜி!” என்றழைத்தான்.
“என்ன ஜனா…?”
“டைம் ஆச்சு, எழுந்திரிச்சு கிளம்பு. நம்ம சீக்கிரமா ஊருக்கு கிளம்பலாம். அம்மா சொன்னாங்க நல்ல நேரம் இப்பவாம் அதனால சீக்கிரமா கிளம்பி போக சொன்னாங்க”
“ஓ! நேத்து சொல்லி இருக்கலாமுல” என மெல்ல எழுந்தாள்.
“காலையில் தான் பாத்தாங்களாம். இட்ஸ் ஓகே! வேகமா கிளம்பு… நான் போய் அப்பா பாத் ரூமில் குளிச்சுட்டு வரேன், நீ போய் குளிச்சுட்டு இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பிடு” எனக் கூறிவிட்டு அவள் முகத்தைப் பார்க்காமல் வெளியில் சென்று விட்டான்.
விஜியும் தூக்க கலக்கத்தில் இருக்க, எழுந்து குளிப்பதற்காக சென்றாள்.
ஜனா உள்ளே நுழைவதைக் கண்ட முத்து
“என்னப்பா அம்மா சொன்னது…” என நிறுத்தி வருத்தமாக கலங்கி கேட்டார்.
“ஆமாப்பா! எனக்குமே ஒன்னுமே புரியல…” என்று கலங்கியவனிடம்,
“அப்பாக்கு ஒரு செக் அப் போட்டு மெடிசன்ஸ் வாங்கிட்டு வருவாங்க. நம்ம போகலாம்…” என அதற்கு மேல் அவளை பேச விடாமல் கிளப்பினான், அவனுக்கும் பொய் கூறி சமாளிக்க வரவில்லை.
இருவரும் கிளம்ப, முத்து வெளியில் வராமல் இருந்தார். விஜி”நான் போய் மாமா கிட்ட சொல்லிட்டு வரேன்” என்றாள்.
வசந்தா”அவர் தூங்கிட்டு இருக்கார் விஜி, நீங்க போங்க, நாங்க அங்க தானே வரோம்” என்றார்.
விஜியை விடுவித்த வசந்தா, “விஜி! கடவுள் ஒரு கணக்குப் போடுறார், அதுல இருந்து யாரும் தப்பிக்க முடியாது போல. ஆனா! நமக்கு மனதைரியம் ரொம்ப முக்கியமா வேணும், இல்லனா அவர் கணக்கை நம்மால் ஏத்துக்கவே முடியாது. உனக்காக ஜனா இருக்கான். அதை மட்டும் மறந்துடாத. நாங்க எல்லாம் அடுத்து தான்.” என்றார்.
விஜிக்கு எதற்கு சொல்கிறார் எனப் புரியவில்லை என்றாலும், தலையை அசைத்தாள்.
“விஜி! கிளம்பு” என்றான் ஜனா.
“ஜனா! இருங்க அப்பாக்கு வாங்கின பெல்ட் கவர் தனியா வச்சேன், எடுத்துட்டு வரேன்” என உள்ளே சென்றாள்.
“ம்மா! என்னால முடியலம்மா” என்றான் ஜனா.
“போற வரை பொறுத்து நடிடா… வேற வழியில்ல ஜனா..” என மெல்லக் கூறினார்.
அமர், நண்பனிடம் இருந்து ஒரு கார் எடுத்துவர இருவரும் கிளம்பினார்கள். ஜனாவே ட்ரைவ் செய்தான்.
“ஜனா! சீக்கிரம் நம்ம சொந்தமா ஒரு கார் வாங்கனும்..”
அவள் பக்கம் திரும்பி மனதில் வருந்தியவன், ‘சாரி ஜிமிக்கி! இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த சிரிப்பு காணாமல் போகப் போது’ என எண்ணி காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
நேரம் ஆக, விஜியே அதிகம் பேசினாள், ஜனா அனைத்துக்கும் ம்ம்ம்! மட்டுமே போட, “என்ன ஜனா, பேசவே மாட்டேங்குறீங்க…?” எனக் கோபமாக கேட்டாள்.
“இல்ல விஜி! ட்ரைவ் பண்ணி நாளாச்சுல அதான், பேசினா கான்சென்ட்ரேசன் மாறிடுமுனு பயம்..” என வாயில் வந்ததைக் கூறினான்.
“ஒன்னும் அவசரமில்லை ஜனா, ஆனா அப்பாவைப் பார்க்க போறது எக்சைட்டா இருக்கு….”
“ம்ம்ம்!”
அதன் பின் விஜி பாட்டுக் கேட்க, ஜனா கார் வேகத்தில் கவனத்தைச் செலுத்தினான்.
***
இளந்தகுளம் ஊர் எல்லைக்குள் நுழையும் முன் ஜனா பாட்டை ஆஃப் செய்தான்.
“ஏன் ஜனா…?”
“சும்மா தான், வேடிக்கைப் பாத்துட்டு வரலாமுல, ஊர் வரப்போதே…”
“ம்ம்ம்!”
“எனக்கு உன் மாமா வீடு தெரியும், அப்பா வீடு எந்தப் பக்கம்…?”
“அதுவும் பக்கத்து ஊர் தான். அடுத்த ரோடு, ஒரே தாலுக்கா தான்…” என வழிக் காட்டினாள்.
விஜிக்குமே ஒரு மாதிரி உணர்வு வந்தது, தான் பிறந்த ஊரிற்கு நீண்ட வருடங்கள் கழித்துச் செல்வதால் ஒரு விதமான ஏக்கம் பிறந்தது.
ஒரு சாலை வர, “ஜனா! இந்த ரோடு தான்” எனக் கையை காட்டியவள், அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்.
“ஜனா! ஸ்டாப்” எனக் கத்தினாள்.
“என்ன விஜி!” என பட்டென்று நிறுத்தியவன், அவள் பார்த்த திசையை நோக்கினான்.
முத்தையா புகைப்படத்தை ஒட்டி இரங்கல் அஞ்சலி தெரிவிக்கப்பட்டிருந்தது.
“ஜிமிக்கி!” என மெல்ல அவள் கையைப் பிடித்தான்.
“தெரிஞ்சு தான் கூட்டிட்டு வந்தீங்களா…?” எனக் கேட்டாள், அதிர்ச்சியில் அப்படியே உறைந்தவாறு.
“ம்ம்ம்!”
“எப்டி ஜனா..? அப்பாக்கு என்ன ஆச்சு…?” என அவன் சட்டைப் பிடித்துக் கண்ணீர் வழிய கேட்டாள்.
ஜனாவும் அதுவரை அடக்கி வைத்த கண்ணீரை வெளியிட்டவாறு கூறினான்.
“நோ! நான் தப்பு பண்ணிட்டேன். கவனிக்காம விட்டுட்டேன் என் அப்பாவை….” என அலறினாள்.
“ஜிமிக்கி! ரிலாக்ஸ் ஆகு…. ப்ளீஸ்..” என ஆறுதல் செய்ய முடியாமல், காரைக் கிளப்பினான்.
ஒற்றை சாலையில் வழித் தேட தேவையில்லாமல் கார் சென்றது.
ஆட்கள் கூட்டம் உள்ள இடத்தில் நிறுத்தினான். இறந்த வீடு அடையாளமாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
விஜி இறங்கவும், ஜமுனாவும், ஜெய்யும் ஓடி வந்துக் கட்டிப் பிடித்துக் கதறினர்.
விஜி அவர்களைக் கடந்து ஓடினாள், முத்தையாவின் சவப்பெட்டியின் அருகே.
கண்ணாடிப் பேழைக்குள் நெற்றியில் சந்தனம், குங்குமம், அதன் மேல் ஒற்றை ரூபாய் நாணயம் வைத்துக் காட்சியளித்தார்.
அவரின் ராணுவ உடையை அணிந்து, அடர்த்தியான நரைமுடிகள் தெரிய, கைகளும், கால்களும் கட்டப்பட்டு அடக்கி வைக்கப்பட்டிருந்தார்.
வாயில் வெள்ளைத் துணியும், மூங்கில் பஞ்சும் பொருத்தி தான் உயிரற்று கிடக்கிறேன் எனச் சொல்லாமல் படுத்திருந்தார்.
அக்கோலத்தில் தந்தையைக் கண்ட விஜி,
“அப்பா!” எனக் கதறினாள். வேகமாக கண்ணாடியைத் திறக்க முயற்சிக்க, அருகில் இருந்த பெண்கள் விஜியைத் தடுத்தனர்.
ஜனா ஓடிவந்து அவளைப் பிடித்து, “பவர் ஆஃப் பண்ணுங்க” எனக் கூறி, கண்ணாடி பேழையின் மூடியைத் திறக்கவும், விஜி முத்தையாவைக் கட்டிப் பிடித்துக் கதறினாள்.
“இப்டி பாக்கவா நான் வந்தேன்பா, ஏன்பா! ஏன், என் கூட இருக்க வேணானு போயிட்டீங்களா..? ஆசைக் காட்டி ஏமாத்துறதே வேலையா வச்சு இருக்கீங்க.
நான் என்ன பாவம் பண்ணேன்…? அப்பா! ஒரு தடவை என்னைய ஜிமிக்கினு கூப்புடுங்கபா, ப்ளீஸ்பா…. அப்பா! அப்பா! கூப்புடுங்க” எனக் கதறினாள்.
ஜனா மெதுவாக”ஜிமிக்கி! ப்ளீஸ்டி அமைதியாகு… அவருக்குமே இப்டி ஆகப்போதுனு தெரியாது. இது உடம்பு பிரச்சனை. நீ வர சந்தோஷத்துல தான் அவரும் இருந்திருப்பாரு..” என ஆறுதல் கூறினான்.
“ஜனா! எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்கனும்..? எனக்காக இத்தனை வருசம் ஏங்கினவர் நான் வரும் போது தான் சாகனுமா..? நான் பாவி ஆகிட்டேன்” எனத் தன் தலையில் அடித்துக் கொண்டாள் விஜி.
என்ன நினைத்தாளோ சட்டென்று முத்தையாவைக் கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தம் வைத்தவள், “அப்பா!” எனக் கதறினாள்.
தாரை தப்பட்டை அடித்து வரும் சத்தம் கேட்க, ஜனா திரும்பி பார்த்தான்.
தர்மா குடும்பத்தோடு கோடியுடன் வந்துக் கொண்டு இருந்தார்.
“ஏ, பாவிகளா! எதுக்கு வரீங்கடா…?” என ஜமுனா அலறிக் கொண்டுப் போய் அண்ணன் சட்டையைப் பிடித்துக் கதறினார்.
மற்ற இரு உடன்பிறப்பு நெஞ்சிலையும் அடித்துக் கத்தினார்.
“என்னதுக்கு வந்தீங்க…? கோடி போடவா… வேணா போங்கடா…. அந்த ஆளு அனாதையா போனாலும் போகட்டும் உங்க கோடி வேண்டாம்டா….” எனத் தட்டையும், மாலையும் தள்ளிவிட போக ஜமுனாவை பெண்கள் பிடித்து நிறுத்தினர்.
ஜனா சென்று ஜமுனாவிடம்”அக்கா! அமைதியா இருங்க. அவங்க பக்கமும் யோசிக்கனும். இது யாரு தப்பு, சரினு வாதாட முடியாத இடம், ஒரு இறப்பு நடந்திருக்கு அதுக்கு அவங்க வந்து இருக்காங்க, புடிக்குதோ புடிக்கலையோ வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்க” என்றான்.
“இல்ல தம்பி! இவங்க எல்லாம் என் மேலயும், அத்தான் மேலயும் உள்ள கோபத்தால அந்த அப்பா, மக உறவையே அறுதுட்டாங்க, நான் தப்பு பண்ணிட்டேன் என்னைய வெட்டிப் போட்டு இருக்கலாம், அத விட்டுட்டு அந்த பிஞ்சு மனசுல அப்பாங்குற உறவையே வளர விடாம அழிச்சுட்டானுங்க.
நீங்க மட்டும் விஜி வாழ்க்கையில் வரலைனா இந்த மனுசன் சாவு நிம்மதி இல்லாம போயிருக்கும் தம்பி, ஏதோ கடவுள் பாத்து உங்களை அனுப்பி இந்த அப்பா- மகளை சேர்த்து வச்சு சாவை அனுப்பி இருக்காரு, ஆனா இவனுங்க காத்துக் கூட அத்தான் மேல படக்கூடாது தம்பி, படவே கூடாது.
அதான் வளர்த்ததுக்கு வித்துட்டு மொத்தமா எடுத்துட்டு போனானுங்களே, அக்கா பொண்ணை வளர்த்து அதுக்கு காசு வாங்கி கிட்ட அற்பங்க இவனுங்க, நான் கூட எம் பொண்ணு கிட்ட சொன்னேன், தாய்மாமனுங்க உறவுடி காசுக் கொடுத்து தீர்க்க முடியாது நீ ஒரு தடவைப் போய் பேசு மாமா கேப்பாருனு… ஆனா இவனுங்க நாய் மாதிரி எலும்புத் துண்டுக்காக அவளை வளர்த்து இருக்கானுங்கனு நெனச்சி பாத்தாவே அருவருப்பா இருக்கு. போங்கடா..” என தர்மாவை நோக்கி விரித்த தலைமுடிகளோடு மண்ணை அள்ளி வீசினாள் ஜமுனா.
ஜமுனாவை தடுத்த ஜனா”நீங்க தம்பினு சொல்றதால தான், அக்கானு உரிமையா கூப்புடுறேன். இப்ப நீங்க பண்றது தப்பு அக்கா, இங்க வாங்க விஜி பக்கத்தில் போய் இருங்க” எனச் சற்று வேகமாக அவரை அதட்டினான்.
ஜமுனா ஜனாவின் பேச்சினை மதித்து விரிந்து கெடந்த முடிகளைச் சுருட்டிக் கொண்டு, விஜியின் அருகில் போய் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு நின்றாள்.
“நீங்க போங்க!” என வழிவிட்டான் ஜனா.
தர்மா, ராமு, சுந்தர் என மூவரும் முத்தையாவிற்கு மாலைப் போட்டுவிட்டு, கால் இருந்த பக்கம் வந்து தொட்டு வணங்கினர்.
தர்மா விஜியின் அருகில் சென்று, “விஜிமா! இவ சொல்ற மாதிரி உன் அப்பா மேல உள்ள கோபத்தால் தான் உன்னைய அவர் கிட்ட விடாம வச்சு இருந்தோம். அது பாவம் என்பது இப்ப புரியுது, ஆனா புரிஞ்சு பயனில்லை.
உன்னைய வளர்த்ததுக்கு நாங்க எப்பவும் காசுப் பத்தி யோசிக்கவே மாட்டோமுடா… உன் மாமிங்க அன்னைக்கு பேசி அக்காவை வெளியில் தள்ளினப்ப நாங்க அமைதியா நின்னது தப்பு தான்டா, அப்ப உள்ள கோபத்தில் அக்காவையும், உன்னையும் கண்டுக்கல.
ஆனா அக்காக்கு முடியலனதும் மனசு கேக்காம தான் வந்தோம். அன்னைக்கு நீ பேசினது என்னைய சாட்டையாய் அடிச்சுட்டு. அந்த இடத்தை பேசி அட்வான்ஸ் வாங்கியதால் வித்தே ஆகனுமுனு நெருக்கடி.
ஆனா சத்தியமா அந்தப் பணத்தை நாங்க அனுபவிக்க நெனக்கலடா கண்ணு, பணம் மொத்தமா வர காத்திருந்தேன். அதுக்கு தான் உன்னையும் மாப்பிள்ளையும் தீபாவளிக்கு கூப்புட்டேன். உனக்கு அதையும் குடுத்து தீபாவளிக்கு துணி எடுத்துக் குடுப்பமுனு நானும் தம்பிகளும் முடிவெடுத்திருந்தோம்.” என்றார்.
“ஆமா! விஜி, நானும், தம்பியும், அண்ணனும் உன்னைய அக்கா மகளா எங்க வீட்டுப் பொண்ணா தான் பாக்குறோம், ஏதோ கோபத்துல தப்பா பேசி இருந்தா மன்னிச்சுடுடா” என ராமு விஜியிடம் கெஞ்சினார்.
“விஜிமா! எங்களை மன்னிச்சுடுமா” என்றான் சுந்தர்.
விஜி”மாமா! என் அப்பாவையும், ஜமும்மாவையும் மன்னிச்சு ஏத்துக்கோங்க, அவங்க அனுபவிச்ச தண்டனை போதும்” என முத்தையாவே பார்த்துக் கண்ணீர் வழியக் கூறினாள்.
“இனி இவனுங்க ஏத்துக்கிட்டு என்ன ஆவப் போதுடி” என ஜமுனா புலம்பி முத்தையா மேல் கைவைத்தப்படி கண்ணீர் வடித்தாள்.
தர்மா”நாங்க பேசியதற்கு மன்னிப்புக் கேட்க அருகதை இல்லாம நிக்கிறோம் விஜிமா” என வாயில் துணி வைத்து அழுதார்.
அனைவருமே அழுது ஒருவரை ஒருவரை ஆறுதல் படுத்த முடியாமல் கண்ணீர் வடிக்க, அதுவரை மாத்திரையால் தூக்கத்தில் கிடந்த மங்கை ஓடிவந்தார்.
“விஜி! அப்பா தூங்கிட்டே இருக்கார். எழுப்புடி” என மகளிடம் வந்தவரை, தர்மா தாங்கினார்.
“அக்கா!” என்று…
“நீ என்னடா பண்ற, அங்க பாரு அத்தானை எழுப்புடா… அம்மா மாதிரியே தூங்கிட்டு இருக்கார். ஏய்! ஏட்டி! ஜமுனா அத்தான் அத்தானு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவீயே நீ தான் எழுப்பி தொலையே. எனக்கு முடியல” என அப்படியே அமர்ந்து என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியானார்.
தர்மா மனைவி, ராமு மனைவி, இளந்தகுளம் உறவுப்பெண்களை அந்த ஊர் பெண்களை கைக்கொடுத்து ஒப்பாரி வைத்தனர்.
ஜனாவிடமே அனைத்தும் கேட்கப்பட்டது. ஜெய் சிறுப்பிள்ளை என்பதால், ஜனா மாப்பிள்ளையாக எல்லாவற்றையும் கவனித்தான்.
முத்து, வசந்தா, அப்பு, அமர், ரெனி இன்னும் பலரோடு மாலை, முத்தையாவிற்கு பட்டு வேஷ்டி, துண்டு என எடுத்துக் கொண்டு நடந்து வந்தனர்.
பாவம் முத்துவிற்கு முத்தையாவின் இறப்பு ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது.
நடக்க முடியாமல் நடந்து வந்தவரை அமர் பிடித்து அழைத்து வந்தான்.
விஜி அவர்களைக் கண்டு”மாமா! எல்லாம் தெரிஞ்சு தான் அனுப்பி வச்சீங்களா…?” எனக் கதறினாள்.
முத்து”அழாதமா!” எனக் கூறியப்படி நண்பனையே பார்த்தார்.
வசந்தா வந்து மருமகளை கட்டி அணைக்க, “இதுக்கு தான் சொன்னீங்களா அத்தை, கடவுள் கணக்குல தப்பிக்க முடியாதுனு.” என அழுதவளைத் தேற்றிவிட்டு, ஜமுனாவையும், மங்கையும் கட்டி அணைத்து அழுதார்.
மங்கைக்கு யார் என்னவென்றே புரியவில்லை, அவர் அறிந்தது ஜமுனா, முத்தையா, ஜெய், தம்பிகள், தந்தை மட்டுமே இப்பொழுது.
தந்தை சிதம்பரம் படுக்கையாக இருக்க, வர இயலவில்லை.
அப்பு, ஜெய்யின் அருகில் இருந்ததால் ஆறுதலாக இருந்தான்.
ரெனி விஜியிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.
ஜனா அமருடன் அடுத்து ஆக வேண்டியதற்கு தயார் செய்தான்.
ஜனா கேட்டு இருந்ததால் அமர் வரும் போது பணம் கொண்டு வந்திருந்தான்.
முத்தையாவிற்கு இறுதிச் சடங்கு தொடங்கியது.
அவரை குளிப்பாட்டி, தலையில் சிகைகாய், நல்லெண்ணெய் வைக்க, குடும்பத்தினர் அனைவரும் வந்தனர்.
விஜி அவரை அக்கோலத்தில் காண முடியாமல் அருகில் போகவே மீண்டும் அலறினாள். பிடித்திருந்த ரெனியையும், வசந்தாவையும் உதறிவிட்டு பின்னோக்கி ஓடினாள்.
வசந்தா ஜனாவிடம் கண் காட்ட, அவன் சென்று கைகளைப் பிடித்து இழுத்து வந்தான்.
“வேணா ஜனா!” என்றாள்.
“தயவுச் செய்து அவருக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை மனசார செய் ஜிமிக்கி, இல்லைனா மாமா ஆன்மா ஏங்கும்”
“அவரை என்னால பாக்க முடியல ஜனா. நான் விட்டுட்டேன், என் அப்பாவைக் காபாத்தாம விட்டுட்டேன். கண்ணு முன்னாடி இருந்தவரை தவற விட்டுட்டேன்” எனக் கதறி அழுதாள்.
“நேரமாகுது, வா ஜிமிக்கி” என அவளை அழைத்துச் சென்று, சிகைக்காய், எண்ணெய் வைத்துவிட்டான்.
யார் கொள்ளி வைப்பது எனப் பேச்சு எழ, ஜெய்யை அழைத்தனர்.
ஜனா விஜியிடம் கேட்க, அவளும் மறுப்பு சொல்லவில்லை.
“நீ செய்ய விருப்பப்பட்டாலும் நான் கேக்குறேன் விஜி” என்றான் ஜனா.
“இல்ல ஜனா! அவனும் என் அப்பா ரத்தம் தானே, நானும் அவனும் ஒன்னு தான். தம்பியே வைக்கட்டும்” என்றாள்.
ஜனா கைகளையே பிடித்துக் கொண்டாள்.
“ஜனா! நம்ம அப்பாக்காக வாங்கினதை எடுத்து வரச்சொல்லுங்க அமர் கிட்ட”
“ம்ம்ம்!” என்றவன் அமர் கிட்ட சொல்லி விட்டான்.
ஜிமிக்கி அடுத்து..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.