மறு நாள் தண்ணீர் எடுத்துக் கொண்டு யோசனையிலே படி ஏறினாள் தென்றல். தடுமாற்றத்தில் கொஞ்சம் தண்ணீர் சிந்திக் கொண்டே இருக்க, குருப்ரசாத் கல்லூரிக்கு தயாராகி படியில் இறங்கினான். தென்றல் கவனமில்லாமல் குடம் தூக்கி வர, குருப்ரசாத் இன்று இயல்பாக வாய் திறந்தான்.
“என் மேல ஊத்திறாதீங்க” என்ற குருவின் குரலில் சட்டென்று பதறினாள் தென்றல். அதில் குடம் நழுவ பார்க்க, குரு பிடித்துவிட்டான்.
“சாரி, சாரி” தென்றல் டென்ஷனாக பேச,
“கொடுங்க” என்று குடத்தை கேட்க
தென்றல் உடனே. “இல்லை, குரு! நீங்க ரெடியா இருக்கீங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
“நீங்க என் மேல ஊத்தி திரும்ப டிரஸ் மாத்த நேரமில்ல தென்றல், கொடுங்க” என்று அவன் மீண்டும் கேட்க
“நீங்க கிளம்புங்க, நான் தள்ளி நிக்கிறேன்” என்று தென்றல் ஓரமாக நிற்க,
“ஓகே!” என்று குருவும் தலையசைத்து கிளம்பினான். இப்போது அவனுக்கு தென்றலிடம் ஒரு இலகுத்தன்மை வந்திருந்தது.
காலை வேலையை எல்லாம் முடித்த தென்றல் வருணுக்கு அழைத்து பேசிவிட்டு மால் சென்றாள். ஃபுட் கோர்ட்டில் காத்திருந்த வருண் தென்றல் அவனுக்கு எதிரே உட்காரவும் முறைத்தான்.
“சாப்பிட்டியா? இல்லை ஆர்டர் பண்ணவா?”
“சாப்பிட்டேன்” என்ற தென்றல் எங்கே ஆரம்பிப்பது என்று தயக்கத்துடன் வருணை பார்த்தாள். அக்காவின் உறவினன் என்பதை தாண்டி அவளும் வருணும் நண்பர்கள்.
“நேத்து நடந்ததுக்கு சாரி” தென்றல் சொல்ல
“உன் சாரி வேண்டாம், நீ என்ன பண்ணிட்டு இருக்க சொல்லு?” என்றான் கண்டிப்புடன்.
“அக்கா, மாமா கிட்ட சொல்லிட்டியா வருண்?”
“சொல்லலாம் நினைச்சேன், என்ன இருந்தாலும் என் ப்ரண்டா போய்ட்ட, உன்னோட பேசிட்டு டிசைட் பண்ணலாம் நினைச்சேன்” என்றதும்
“தேங்க்ஸ் வருண்” என்ற தென்றல் எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள்.
தென்றலின் தந்தை தேவராஜனும் குருப்ர்சாத்தின் தந்தை மகேந்திரனும் ராஜரத்னம் என்ற அரசியல்வாதியிடம் ஒன்றாக வேலைப்பார்த்தனர். இருபது வயதிலிருந்தே அவரிடம் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு. தேவராஜன் சிறிய அளவில் தனியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்தாலும், ராஜரத்னத்துக்குத் தேவையான உதவிகள் செய்து வந்தார். மகேந்திரன் ராஜரத்னத்தின் ஃபாக்டரியில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். இடையே அரசியல் கூட்டங்களுக்கு பாக்டரி ஆட்கள் அனுப்பி வைப்பது, மற்ற உதவிகள் செய்வது என்று இருந்தார்.
ராஜரத்னம் நேர்மையான அரசியல்வாதி இல்லை. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என்று அத்தனையும் செய்யும் ஆள். ஒரு முறை எம்.எல்.ஏ தேர்தலுக்கு நின்ற ராஜரத்னம் அவருக்கு எதிராக இருந்த அவர் கட்சி ஆளையே கொன்றுவிட்டார். அதனை மகேந்திரனும், தேவராஜனும் பார்த்துவிட்டனர். ராஜரத்னம் ‘என் ஆளுங்கதானே?’ என்று பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் மகேந்திரனால் அப்படி இருக்க முடியவில்லை. கண்முன்னே ஒரு கொலை, பணத்திற்காக ரத்னம் எல்லாம் செய்வார் என்று தெரிந்தாலும் கொலை அதுவே முதல்முறை. அது முதல் முறை அல்ல! இவர்களுக்கு தெரியவில்லை, அவ்வளவுதான்!
மகேந்திரனுக்கு கண்முன்னே கொலையைக் கண்ட பின் உறங்க முடியவில்லை. கண்கள் சொருக அந்த ஆள் இறந்தது அவரை தொந்தரவு செய்தது. கடைசியாக இறந்த ஆள் ரத்னத்தின் ஃபாக்டரிக்கு வந்தது தெரிந்து போலீஸ் விசாரிக்க, மகேந்திரன் உண்மையை சொல்லிவிட்டார். ரத்னம் இது தெரிந்து மகேந்திரனை மிரட்ட, தேவராஜன் கூட சொல்லி பார்த்தார்.
“மகி! நீ ஐயாவுக்கு எதிரா சாட்சி சொன்னா என்னாவாகும்னு யோசி. என்ன இருந்தாலும் அவர்தான் நமக்கு முதலாளி. அரசியல்னா அப்படி இப்படி இருக்கும்” என்றதற்கு
மகேந்திரனோ நண்பனிடம், “விசுவாசத்துக்கும் எல்லை இருக்குடா தேவா! கொலை’ன்றது சாதாரண விஷயம் கிடையாது. அந்த சுந்தரம் இவர் கூடவே இருந்தவன், அவனையே எதிர்த்து நின்னார்னு போட்டுத்தள்ளிட்டான் இந்த ஆள். கண்முன்னாடி ஒருத்தன் செத்துப்போய்ட்டான், உண்மையை மறைச்சு என்னால நிம்மதியா இருக்க முடியலடா. இந்த வேலை இல்லைன்னா இன்னொன்னு.” என்றார்.
தேவராஜனை மீண்டும் அழைத்து ரத்னம் பேசியவர், மகேந்திரனின் முடிவை தெரிந்து கொண்டார். தேவராஜன் மனைவி வாணி ஆக்சிடெண்டில் அடிப்பட்டு இருந்தபோது லட்சங்களில் பணத்தை அள்ளிக்கொடுத்திருந்தார் ரத்னம். அந்த விஸ்வாசம் தேவராஜனுக்கு. ரத்னம் தன்னிடம் வேலை பார்ப்பவன் என்றெல்லாம் மகேந்திரனிடம் கருணை காட்டவில்லை. ரத்னத்திற்கு எதிராக சாட்சி சொல்ல, மகேந்திரன் நினைக்க, அரசியல் பலம் இருந்த காரணத்தால் அந்த கொலைப்பழியை மகேந்திரன் மீதே போட்டார் ரத்னம்.
அதுவே மகேந்திரனுக்கு அதிர்ச்சி என்றால், சாட்சியம் சொன்னது தேவராஜன்.! தேவராஜனின் விசுவாசத்தையும் பணத்தேவையையும் ரத்னம் பயன்படுத்திக்கொண்டார். தேவராஜனுக்கு நட்பை விட குடும்பம் பெரிதாக போனது. இரண்டு தம்பிகள், மகாதேவன் பள்ளி ஒன்றை வைத்து நடத்தினாலும் பெரிய வருமானம் இல்லை. கிருஷ்ணகுமார் இவருக்கு உதவியாக ரியல் எஸ்டேட்டில் இருந்தார். பெரிய குடும்பம், வருமானம், வசதி வாய்ப்பெல்லாம் குறைவு. பணம் கண்ணை மறைக்க, நண்பனுக்கு துரோகியாகிவிட்டார் தேவராஜன்.
சொல்லி முடித்து தென்றல் வருணை பார்க்க, “பணம் மனுசங்களை மாத்திடுது இல்ல?” என்று கேட்டான்.
“எதுவும் மனுஷங்களை மாத்துறது இல்லை, நாமதான் மாறிட்டு மத்தது மேல பழி போடுறோம். எப்போ எது தேவைனு நம்ம முடிவு செய்றது வருண். மகேந்திரன் மாமா எந்த நிலைமையிலும் அவரோட நேர்மையை விடலையே, என் அப்பா.. கோவமா வருது. என்ன அந்த கோவத்தை காட்டுற நிலமையில கூட அவர் இல்லை” என்றாள் தென்றல் தொண்டை அடைக்க.
“எப்படி தெரியும் உனக்கு இதெல்லாம்?”
“அப்பா பல வருஷமா மகேந்திரன் மாமா ஃபேமிலிக்கு ஹெல்ப் பண்ண ட்ரை பண்றார் போல… பணம் தற்காலிக தீர்வுதானே? நிம்மதி அது வேற இல்லையா? ஆனா அவங்க வீட்ல ஒத்துக்கல போல. என் அப்பாவை ஜெயில் அனுப்பிட்டு அவரை வைச்சு வர எந்த உதவியும் வேண்டாம்னு அவங்க உறுதியா இருக்காங்க. கேன்சர் வந்த பின்னாடி சித்தப்பா கிட்ட சொல்லி அப்பா ஃபீல் பண்ணிட்டு இருந்தார். சாகுறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவ மன்னிப்பை எதிர்ப்பார்த்தார். அதுவே தப்பு வருண்! செய்றதை செஞ்சிட்டு மன்னிப்பு வேற…” என்றாள் கசப்பாக. தென்றல் சண்டையிட்டு இங்கு வந்தது, வேலை பார்ப்பது எல்லாம் சொன்னாள்.
“மகேந்திரன் இப்போ என்ன ஆனார்?”
“ஜெயில்ல இருக்கார், ஆயுள் தண்டனை. ஒரு மனுஷனுக்கு செய்யக் கூடிய அதிகபட்ச பாவம் நம்பிக்கை துரோகம் வருண். என்னோட அப்பா அதை செய்வார்னு நான் நினைச்சதே இல்லை. அதுவும் பழகின நண்பனுக்கே… என்னால கூட அவர் செயலை மன்னிக்க முடியல. மகேந்திரன் மாமா நேர்மையா இருந்திருக்கார், செய்யாத குற்றத்துக்கு வாழ்க்கையை இழந்து நிக்கிறார். அந்த ராஜரத்னம் செஞ்சதை விட இது எவ்வளவு மோசமான செயல்?”
தென்றல் தாளாமல் பேச, வருண், “இதுல நீ என்ன பண்ண முடியும் தென்றல்?” என்று கேட்க
“என் அப்பா அப்படி ஒரு காரியம் செய்யலன்னா மகேந்திரன் மாமா நல்லாயிருந்திருப்பார். அவர் குடும்பம் நல்லாயிருந்திருக்கும். வாழ்ந்த ஊரை விட்டு வேற இடத்துல கஷ்டப்பட மாட்டாங்க. குரு பிடிச்சதை படிச்சிருப்பார். இப்போ நாங்க வாழ்ற இந்த வாழ்க்கை, பணம் எல்லாம் ஒரு குறுக்கு வழியில வந்ததுதானே? அஃப்கோர்ஸ் சித்தப்பாவோட காலேஜ் எல்லாம் அவர் உழைப்பு, இருந்தாலும் அதை ஆரம்பிக்க பணம்? முதல்ல அப்பாவோட கடைசி ஆசைனு இப்படி என் ஐடெண்டிட்டி மறைச்சு வந்தேன். அவங்களோட பழகும்போது எங்க வாழ்க்கை அவங்க வாழ்க்கையைப் பறிச்சு வந்ததுனு கில்ட் இருந்துட்டே இருக்கு. எனக்கு நிம்மதியே இல்லை வருண்” என்ற தென்றலுக்கு நண்பனிடம் எல்லாம் சொன்னதில் அழுகை வந்தது. கண்ணீரோடு இருந்தவளை எழுந்து வந்து தோளோடு அணைத்தான் வருண்.
“விடு தென்றல். தனி மனுஷங்க தவறுக்கு எல்லாரும் பொறுப்பாக முடியாது” தென்றலை தேற்ற வருண் சொல்ல
“ஐ காண்ட் ஆக்ரி வித் இட்! அப்பாவோட பெயர், புகழ், பணம் எல்லாம் அனுபவிக்க உரிமை இருக்கும்போது இதுவும் இருக்குதானே? இதை வீட்ல சொன்னா யார் புரிஞ்சிப்பா?” என்று கேட்டாள் தென்றல்.
“எனக்கு ஒரு டவுட்? நீ யார்னு குருக்கு தெரிஞ்சிடுச்சின்னா? உன்னால இந்த வேலை கிடைச்சதுனு குருவுக்கு தெரிஞ்சா?”
“வாயை மூடு வருண்! நானே எப்பவும் டென்ஷன்ல இருக்கேன். எப்படி தெரியும்? குருவுக்கு என் குடும்பத்துல அப்பாவை மட்டும்தான் தெரியும். நாங்க ஃபேமிலியா சென்னையில இருந்தோம். குரு குடும்பம் அப்போ செங்கல்பட்டுல இருந்தாங்க. யாரையும் தெரிய சான்ஸ் இல்லை. யுனிவர்சிட்டில அப்பா பெயர் எங்கேயும் கிடையாது.”
“உனக்கும் க்ஷேர் இருக்கு தென்றல்” வருண் நினைவூட்ட
“அவர் டீச் பண்ணத்தானே அங்க வரார். இது எல்லாம் அவருக்கு தெரிய சான்ஸ் இல்லை. அதைவிட இப்போ பி.எச்.டி பண்ண போறார். முடியறவரைக்கும் வேலையை விட மாட்டார், என்னோட இந்த ப்ளான நான் விட முடிவு பண்ணிட்டேன் வருண்” என்றாள் தென்றல்.
“என்னால ஒவ்வொரு நிமிஷமும் நடிச்சிட்டே இருக்க முடியல. உண்மை தெரிஞ்சா அவங்க வெறுப்பா பார்த்துட்டா தாங்க முடியும் தோணல. அங்க போறதுக்கு முன்னாடி கூட தெரியல, ஆனா அவங்களோட பழகினப்ப அப்புறம் எனக்கு ஒரு ஒட்டுதல் இருக்கு. தெரியாதவங்க கிட்ட வெறுப்பை வாங்குறது ஈசி, அன்பா பழகிட்டு அதை இழக்கிறது கஷ்டம். அவங்களுக்கும் நான் யார்னு தெரியாம இருக்கிறதுதான் நிம்மதி!” என்றாள் கண்களை துடைத்துக் கொண்டு பெருமூச்சுடன்.
“குருவுக்கு பிரச்சனை இல்லை. சிவாவுக்கு நீ உனக்குத் தெரிஞ்ச கன்சர்ன்ல வேலை சொல்லேன், என் பெயர் வேண்டாம். லாவண்யா அவ நல்லா படிக்கிறா, ‘நீட்’ க்ளாஸ்ல சேர்த்துட்டா போதும். நேத்து உன்னை பார்த்ததுல இருந்து எனக்கு பதட்டமாவே இருக்கு. அதுவும் அந்த குரு, அவர் பார்த்தாலே எனக்கு நடுங்குது” என்றாள் இப்போதும்.
“மேனேஜ்மெண்ட் படிச்ச உனக்கு இதை மேனேஜ் பண்ண கஷ்டமா?”
“money மேனேஜ்மேண்ட் வேற, மைண்ட் மேனேஜ்மேண்ட் வேற வருண். ஃப்ர்ஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் எனக்கு அப்பா செஞ்சது மனசுல ஓடி கஷ்டம் கொடுத்தது. அவங்க பக்கத்துல இருந்து பார்த்தாலும் எங்கிட்ட அவ்வளவா பேச மாட்டாங்க. குரு ரொம்ப ஸ்டிரிக்ட்! பழக பழக தான் பேசினாங்க. இப்போ ரொம்ப அன்பா அக்கறையா இருக்காங்க. அதுவே குத்துது என்னை. உண்மையா இருந்தா நான் ஈசியா ஃபேஸ் பண்ணுவேன். பொய் சொல்றதால தானா ஜெர்க் ஆகிடுது” தென்றல் பாவமாக சொல்ல
“விடுங்க ஏஜெண்ட் தென்றல்! எனக்கு புரியுது.”
“தேங்க்ஸ் வருண்.” என்றாள் தென்றல்.
வருண் மதியம் வரை அவளுடன் இருந்தான். “நீ கவலைப்படாத, நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.” என்று உறுதி கொடுத்தான். தென்றல் மெட்ரோவீல் வீடு வர, வழியெல்லாம் யோசனை.
‘விட்டு விலகுதல்’ என்பது கவிதையின் ‘கடைசி சொல்’ போல் இருக்க வேண்டும் என்று எஸ்.ரா சொல்லுவார். அது எத்தனை உண்மை என்று தென்றலால் உணர முடிந்தது. உறவினை ஆரம்பிப்பதை விட அதனை மரியாதையாக, அன்பாக விட்டு விலகுதல் என்பது மிகவும் கடினமானது.
தென்றலுக்கு முன்பு அவர்களிடம் அக்கறை இருந்தது. இப்போது எட்டு மாத பழக்கத்தில் அன்பும் சேர்ந்துவிட, அது பயம் கொடுத்தது.
ஆரம்பம் நம் கையில் இருந்தாலும், சில முடிவுகள் தொடுவானம்! சில முடிவுகள் தொட முடியா தொலை தூரம்!
பயணம் தொடங்குவது மட்டும் நம் கையில், பாதை எப்படி மாறும், நீளும், அதன் தூரம் எல்லாம் போனால்தான் தெரியும்.!! தென்றலுக்கும் அப்படியே!!