குருவின் கேள்விக்கு தென்றல் நினைத்திருந்தால் அப்போதே உண்மையை சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் எல்லாம் முடிந்திருக்கும். தென்றல் வார்த்தையின்றி நின்றாள்.
“என்னாச்சு தென்றல்? எதுவும் சொல்ல இல்லையா?” என்று குரு மீண்டும் கேட்டவன் தென்றலின் முக வாட்டம் பார்த்து
“இல்லை உங்களுக்கு யாருமில்லைனு அம்மா சொல்லி தெரியும். மத்தபடி ஒன்னுமே தெரியாது இல்லையா? அதனால் கேட்கிறேன்” என்றான்.
“சொல்றதுக்கு ஒன்னுமில்லை குரு” என்று தென்றல் சொல்ல அவளின் அந்த பாவனையின் அர்த்தத்தை குரு வேறு விதமாக நினைத்தான். யாருமில்லை என்ற நிலையில் இருப்பவள், அதனை பற்றி பேச விரும்பவில்லை என்று நினைத்து அந்த பேச்சை விட்டான்.
“எனக்கு என்னோட மனைவியா வரப்போறவங்க கிட்ட சொல்ல நிறையா இருக்கு. நான் எங்களைப் பத்தி எல்லாம் சொன்ன பின்னாடி, உங்களுக்கு நிச்சயம் பண்ண சம்மதமா சொல்லுங்க தென்றல். உங்களோட சிட்டிவேஷனை நான் யூஸ் பண்ணிக்கிட்டன்ற எண்ணம் உங்களுக்கு பின்னாடி வந்திடக் கூடாது” என்று அவளுக்காக பார்த்து, யோசித்து பேசுபவனை தென்றல் உள்ளம் ரசித்தது.
“அப்படியெல்லாம் நான் நினைக்க மாட்டேன் குரு” என்று தென்றல் உறுதியாக சொல்ல, மென்மையாக ஒரு புன்னகை அவனிடம். குரு மணலில் உட்கார, தென்றலும் அவனருகே உட்கார்ந்தாள். தென்றல் பார்வை குருவிடம் இருக்க, குருவோ அந்த பெரிய கடலை பார்த்தான். கடல் போல் அவன்! எல்லாம் அடக்கி ஒரு அசாத்திய அமைதி!
“என்னோட அப்பா பத்தி உங்களுக்கு தெரியுமா தென்றல்?” என்று கேட்க ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“என் அப்பா மகேந்திரன் இப்போ ஜெயில்ல இருக்கார், கொலைக் குற்றத்துக்காக!” என்றபோது குரு குரல் கமறியது. தென்றலிடம் பதில் எதிர்ப்பார்க்காமல் குரு அவன் அப்பாவை பற்றி எல்லாம் சொன்னான். அவர் வேலை, தேவராஜனின் துரோகம், ராஜரத்னத்தின் செயல் என்று முழுவதும் சொன்னான்.
“யாராச்சும் பல வருஷம் பழகின நட்புக்குத் துரோகம் செய்வாங்களா தென்றல்? அந்த ஆளு தேவராஜ் மனுஷனா அவன்… ராஜரத்னம் இந்த மினிஸ்டர் காளிதாஸன் இருக்காரே அவர் மாமனார். அவர் பொண்ணு அவங்களே சில வருஷம் முன்னாடி பேட்டி கொடுத்தாங்களே, அவங்க அப்பா அண்ணா பத்தி எல்லாம். அந்த ராஜரத்னம் ஒரு அயோக்கியன், அவன் செஞ்சதை விட இந்த தேவராஜ்… அந்த ஆளோட வைஃப் ஆக்சிடெண்ட்ல இறந்து போய்ட்டாங்க. அப்போ எல்லாம் என் அப்பா அந்த துரோகிக்காக அவ்வளவு ஃபீல் பண்ணுவார்.”
“பாவம் தேவா. இப்படி சின்ன குழந்தையை வைச்சிட்டு கஷ்டப்படுறான், இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்க மாட்டேங்கிறான்னு பல நாள் எங்ககிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கார். பல வருஷம் குழந்தை இல்லாம ஒரு பொண்ணு பொறந்தா, இப்ப பொண்டாட்டி செத்து தனிமரமா நிக்கிறான். ரொம்ப உழைச்சுக் கஷ்டப்பட்டவனுக்கு சந்தோஷமே இல்லைனு வருத்தப்படுவார். அந்த ஆள் தனிமரமா நிக்கிறான்னே கவலைப்பட்ட என் அப்பாவை குடும்பத்துக்கு கிட்ட இருந்து பிரிச்சு அவரை தனிமரமா ஆக்கிட்டான்.” என்ற குருவின் குரலில் அவ்வளவு கோபம்.
கண்கள் சிவந்திருக்க, பல வருடங்கள் ஆன போதிலும் பசுமையாய் கோபம்!
அவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியவன் சட்டென்று அமைதியானான். இன்னும் அந்த காயங்கள் ஆறவில்லை. யாரிடமும் இத்தனை வருடத்தில் மனதினை பேசியதில்லை. மனைவியாக போகிறாள் என்பதால் தென்றலிடம் மறைக்காது எல்லாம் சொன்னான். இன்னும் கூட அவன் மனதில் நிறைய இருந்தது, சொல்லுமளவு தென்றலிடம் நெருக்கம் வராததால் அமைதியாகிவிட்டான்.
“என்ன தென்றல் ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிறீங்க?” குரு கடலை விட்டு தென்றலிடம் பார்வையைத் திருப்பினான்.
“குற்றம் சுமத்தப்பட்டவங்க எல்லாம் குற்றவாளிகள் இல்லை குரு. எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியாது…சாரி” என்று தென்றல் மனதார மன்னிப்புக் கேட்டாள். அப்பாவின் செயல் தெரியாது என்ற அர்த்தத்தில் அவள் சொல்ல, குரு அதனை அறியவில்லை. குரு அப்பாவை அவள் தவறாக நினைக்கவில்லை என்று நிம்மதியாக நினைத்தான்.
“நீங்க ஏன் சாரி கேட்கிறீங்க. அப்பா சீக்கிரம் ரீலிஸ் ஆகிடுவார், அதுக்குப்புறம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா தென்றல்?” என்று அவள் விருப்பமும் கேட்டான்.
“மாமா வந்த அப்புறமே பண்ணிக்கலாம் குரு. நிச்சயம் கூட ஏன் அவசரமா?” என்று கேட்க
“அது நமக்காக! பக்கத்துலயே இருக்கோம், நம்ம பேசிப்போம். நிச்சயம் ஆச்சுன்னா இட்ஸ் டிஃப்ரண்ட் இல்லையா? தென்றலுக்கு இனிமே நான் செய்யணும்னா அதுக்கு ஒரு உரிமை எனக்கு வேணும் தானே?” என்று அவளையே கேட்டான்.
தென்றலுக்காகவே நிச்சய முடிவு!
தனக்காக யோசிக்கும் அவன் அக்கறை தென்றலுக்குப் பிடித்தது! முன்பை விட அதீதமாக பிடித்தது.. பிடித்தம் பெரிய பயத்தையும் கொடுத்தது. தேவராஜன் மகளென்றால் இவன் தன்னிடமிருந்து விலகிவிடுவானோ? விலகும் அளவு இன்னும் நெருங்கவில்லையே? என்றெல்லாம் எண்ணம் போனது.
இருவரும் மௌனத்தோடு கரையில் அமர்ந்திருந்தனர். குரு தென்றலிடம்
“எல்லாம் நம்ம சேர்ந்து செய்யலாம் குரு. எனக்கு நீங்க சொல்றது புரியுது” என்றாள்.
“உங்களுக்குன்னு ஆசை, கனவு ஒன்னுமே இல்லையா தென்றல்?” என்ன சொன்னாலும் ஏற்கிறாளே என்று குருவிடம் ஆச்சர்யம் கூடியதொரு கேள்வி இருந்தது.
“என்னோட ஆசை, கனவெல்லாம் நான் கேட்காமலே நடக்குதே குரு… ” என்று மனம் நிறைந்த உணர்வோடும் முகம் மலர்ந்த சிரிப்போடும் தென்றல் சொல்ல, குரு இமை மூடி தலையசைத்தான்.
அதற்கு மேல் என்ன பேச, குரு எழுந்துகொண்டான். இருவரும் பேருந்தில் மீண்டும் வீடு வந்தனர். அம்மாவிடம் விஷயம் சொல்ல, அவர் உடனே தென்றல் வீட்டுக்குப் போய் அவளிடம் பேசினார். லாவண்யா, சிவா எல்லாருக்கும் மகிழ்ச்சி. கீதா கருணாகரன் அம்மாவிடமும் சொல்ல, அவர் மகனிடம் சொன்னார்.
அடுத்த நாள் காலையில் தென்றல் வழக்கம்போல் தண்ணீர் பிடிக்க ஈரக்காற்றில் உடல் நடுங்க வரிசையில் நின்றாள். அவளுக்கு பின்னால் கருணாகரன், அவனுக்குப் பின் குருப்ரசாத்.
கருணாகரன் “என்னடா வாத்தீ? தென்றல் மிஸ் கூட கல்யாணம். சொல்லவே இல்லை பார்த்தியா? அம்மா சொல்லி தெரியுது. நீ கூட சொல்லல இல்லமா?” என்று முன்னால் நின்ற தென்றலையும் கேட்டான்.
“நைட் முடிவு பண்ணினோம். இப்பதான் பொழுது விடிஞ்சிருக்கு, அதுக்குள்ள சொல்லலனு கேட்பியா டா?” என்று குரு கருணாகரனை கேட்டான்.
“இல்லைனா மட்டும் நீ உடனே சொல்லிடுவ, போடா” என்றவன் தென்றலிடம்
“ஏம்மா, இந்த வாத்தீக்கு எப்படி ஓகே சொன்ன? அண்ணனை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமில்ல?” என்று வம்பு செய்தான்.
தென்றல் குளிரில் ஷாலை இறுக்கிப் போர்த்தியவள் புன்னகையுடன் நின்றாள். குரு தென்றல் பிடித்து வைத்திருந்த குடத்தை முன்னே வந்து சட்டென்று அவன் தூக்கிக் கொண்டான்.
“டேய்! என்னடா குறுக்க வர?” என்ற கருணாகரனையும் பொருட்படுத்தவில்லை.
“நான் எடுக்கிறேன் குரு..” என்று தென்றல் சொல்ல அவனோ வேகமாக தூக்கி சென்றுவிட்டான்.
அவன் இறங்கி வருவதற்குள் எல்லா குடங்களிலும் நீர் பிடித்து விட்டனர்.
“டேய்! என் தங்கச்சி குடத்தை நான் தூக்குவேன்ல… என்ன அக்கறை உனக்கு?” என்று கருணாகரன் திட்ட
“சரி தூக்கு” என்றவன் அவன் வீட்டு குடத்தை தோளில் வைத்து மாடியேறிவிட்டான்.
“இவன் என்ன பண்றான்?” என்று புரியாது கருணாகரன் கீழே அவன் குடம் வைக்க, தென்றல் “நான் பார்த்துப்பேன் ணா” என்று சொல்லி அவளே தூக்கி சென்றாள். குரு பாதி வழியில் இறங்கிக்கொண்டிருந்தான்,
குரு அதனை பார்த்தவன் , “கொடுங்க” என்று அவளிடம் கேட்க
“நான் ஒன்னும் அபிஷேகம் பண்ண மாட்டேன்” என்று தென்றல் சொல்ல
“அபிஷேகம் பண்ணினாலும் பிரச்சனை இல்லை. அதைவிட இன்னிக்கு காலேஜ் லீவ்” என்றான் குரு.
“அதான் எனக்கு ஹெல்ப்பா?” என்று தென்றலும் இயல்பாக அவனிடம் பேச
“இல்லை, இன்னும் நாலஞ்சு மாசம் அப்புறம் எப்படியும் இதெல்லாம் செய்ய வேண்டி இருக்கும். அப்போ செய்றத இப்பவே செஞ்சிட்டு போறேன்.” என்று குருவும் பதில் கொடுத்தான். தென்றலிடம் ரசனையாக ஒரு மென்னகை.
“தேங்க்ஸ் ப்ரோஃபஸர்!” என்று துள்ளலாக தென்றல் சிரித்துப்போக, குருவிடமும் புன்னகை.
*********************
அடுத்த வாரத்தில் அருகே இருந்த கோவிலில் தென்றலுக்கும் குருவுக்கும் வெற்றிலை பாக்கு மாற்றி மிக மிக சிறிய அளவில் நிச்சயம். வருணை சண்டையிட்டு அழைத்திருந்தாள் தென்றல்.
“எனக்கு யாருமில்லைனு ஃபீல் கொடுக்காத வருண், ப்ளீஸ் நீ வா” என்று கெஞ்ச
“ஏன் உன் வீட்ல சொல்லு, குடும்பமே வருவாங்க” என்று கோபம் கொண்ட போதும் அவளுக்காக வந்து நின்றான். தென்றலின் சொந்தங்களை அழைக்க கீதா கேட்க, யாரும் நெருக்கமில்லை என்றுவிட்டாள். பத்திரிக்கை வாசிக்கும்போது கூட ராஜன்-வாணி என்றே அப்பா, அம்மா பெயர் சொல்ல, அவர்களுக்கு சந்தேகமெல்லாம் இல்லை.
வருணுக்கு தென்றல் செயல் கோபத்தைத் தந்தது. இது தெரிந்தால் வீட்டில் எல்லாரும் என்ன நினைப்பார்கள்? என்று வருத்தம். பேசாமல் அண்ணனிடம் சொல்லிவிடுவோமா என்று நினைத்த போதிலும், தென்றலுக்குத் தந்த வாக்குக்காக அமைதியாக போனான்.
எளிமையாக நிச்சயம் முடிந்து எல்லாரும் ஹோட்டலில் உண்டு வீடு வந்தனர். மாலை மங்கிய நேரமது. தென்றல் குரு வீட்டில் எடுத்திருந்த பட்டுப்புடவையோடு மாடியேறினாள். குரு வீட்டில் சில நெருங்கிய உறவுகள் பேசிக்கொண்டிருக்க, குருப்ரசாத் பேச்சில் கலக்கவில்லை. தென்றல் வீடு சாற்றியிருக்க, மாடிக்கு அவனும் போனான்.
நினைப்பது எல்லாம் நடந்தால்? நடப்பது எல்லாம் பிடித்தால்? பிடித்தது எல்லாம் கிடைத்தால்?? மகிழ்வு வருமா? வரலாம்! ஆனால் கிடைத்ததெல்லாம் நிலைக்குமா என்ற பயமும் கூடவே வரும்!!
தென்றல் அப்படியொரு உணர்வில் தவித்தாள்! உண்மையை மறைப்பதால் உருவான உறுத்தல் அவளை முழுமையாக எதையும் மகிழவிடவில்லை. நினைத்தவனை நிச்சயித்த நிறைவில்லை.
மொட்டை மாடியில் இருள் கவ்வத் தொடங்கிய நேரத்தில் கண்கள் கலங்கி இருந்த தென்றலைத்தான் குரு பார்த்தான். குரு வந்தது கூட தெரியாமல் தென்றல் கண்டதையும் நினைத்து, நிகழ்காலத்தில் மகிழ முடியாமல் எதிர்காலத்தை எண்ணி அச்சத்துடனும் அழுகையுடனும் உட்கார்ந்து இருந்தாள்.
“என்னாச்சு தென்றல்?” என்று குரு அவள் முன்னே வந்து மண்டியிட்டு அமர்ந்து கேட்க
“எதுவும் கேட்காதீங்க குரு” என்றாள் அழுகையுடன். பொய் பேசுவதற்கு பேசாமல் இருக்க நினைத்தாள்.
“கேட்கல, பட் அழாத!” என்றான் வாஞ்சையாக.
“எனக்கு அழணும்” என்று சொல்லி அவள் மீண்டும் தேம்பினாள்.
“தென்றல்!!” குருவின் அதட்டலில் தலை நிமிர்த்தினாள் தென்றல்.
“எதுக்கு அழுகை?”
“இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு. எல்லாம் சீக்கிரம் நடக்குது, இந்த கனவு கலைஞ்சிருமோன்னு எனக்குப் பயமா இருக்கு” தவிப்போடு அவள் பேச, தென்றல் கண்களில் இருந்த அந்த பாவனை குருவை உருக்கியது. முட்டிப்போட்டிருந்தவன் அவள் கன்னத்தை ஒற்றைக்கையால் பற்றி
“இது கலையாத கனவு! என்னைக்குமே மாறாத நிஜம்! என் வைஃப் தென்றல் மட்டும்தான்!” என்று சொன்னான். தென்றலோ அவன் தொடுகையில் திணறி, வார்த்தையில் வசமிழந்து போனாள்.
குருவுக்கும் அவன் சொல், செயல் எதுவும் அக்கணம் அவன் வசமில்லை! . அவள் அழுகை அவனை பாதித்தது, யாருமில்லாதவளுக்கு யாதுமாகி இருக்க ஒரு பேராவல்! அனுராகம் அவனுக்குள் அகரம் தொட்டது!