“உன்னை திட்ட அப்போ டைம் இல்ல, ஈவினிங் டயர்டா இருந்தேன்” என்ற குரு தென்றலை முறைத்தான்.
“காலையில நான் செய்றேனு சொல்றேன் அவ்வளவு நேரம் ஆர்க்யூ பண்ற, ஏன் தென்றல்? எல்லாரும் வேடிக்கை பார்த்து நம்மளை பத்தி பேசுறது எனக்குப் பிடிக்காது.” என்றான் குரு.
“நீங்க கஷ்டப்படக் கூடாது சொன்னேன்”
“அதை நான் நினைக்கக் கூடாதா? இத்தனை வருஷம் நீ தனியா எப்படி இருந்திருப்பியோ? என்ன கஷ்டம் அனுபவிச்சியோ? நீ ஏன் உன்னை பத்தி எதுவும் பேச மாட்டேங்கிற தெரியல…” என்றதும் தென்றல் இடையிட்டாள். ஆனால் பேச முடியவில்லை.
“குரு…அது.. நான்!..” என்று திணற
அவள் கையைப் பிடித்து தட்டிக்கொடுத்த குரு “சொல்ல வேண்டாம்னு நினைக்கிறதை சொல்ல வேண்டாம் தென்றல். நீ சொல்லாத காரணம் உன்னோட பழைய கஷ்டத்தை நினைவு படுத்துறதா இருக்கலாம்… உன்னை கஷ்டப்படுத்துற எதுவும் எனக்கு தெரிய வேண்டாம். யாருமில்லை, எதுவுமில்லை இது எதுவும் நீ நினைக்கக் கூடாது! நான் இருக்கேன், நம்ம குடும்பம் இருக்கு உனக்கு. உன்னை என்னால பயங்கர வசதியா வாழ வைக்க முடியாது, மே பீ இன் ஃபுயுச்சர் நடக்கலாம். என்னால முடிஞ்சளவு உன்னை நல்லா பார்த்துக்கணும் நினைக்கிறேன் தென்றல். ” என்றதும் தென்றல் கண்கலங்கினாள்.
“ஏன் குரு..? நான் யாரு, என்னோட பேக்ரவுண்ட் எதுவும் உங்களுக்கு… அம்மாவுக்கு தெரியாதே. அப்படி இருக்கும்போது எப்படி என்னை கல்யாணம்..?” என்று கண்ணீரை உள்ளே இழுத்தவள்
“நான் கொலைகாரியா கூட இருக்கலாம், தீவிரவாதியா இருக்கலாம்.. இல்லை… என் குடும்பம் ரொம்ப மோசமானதா இருக்கலாம்” என்ற தென்றலை பார்த்து சிரித்தான் குரு.
“சிரிக்காம எனக்கு உண்மையான பதில் வேணும் குரு!” என்று தென்றல் தீவிரமாக கேட்டாள்.
“தென்றல்! தென்றல்…!” என்று அழைத்த குரு “கிட்டத்தட்ட ஒரு வருஷமா உன்னை பார்க்கிறோம். உன் மேல ஒரு நம்பிக்கை வைச்சுக்கோயேன். உன் குடும்பம் எப்படி இருந்தாலும், உன் பாஸ்ட்ல என்ன நடந்திருந்தாலும்… ஐ மீன் என்ன நடந்திருந்தாலும் எனக்கு அது தேவையில்லை தென்றல். கடைசிவரைக்கு எதுவும் தெரியலன்னா கூட ஒன்னுமில்லை. ஏன்னா நீ இப்போ எப்படி இருக்கன்றதான் முக்கியம். தென்றல்…” என்று தன்னையே பார்த்திருந்த பெண்ணை அழைத்தான்.
தென்றலுக்கு அழுகை, சிரிப்பு எல்லாம் ஒன்றாய் சங்கமித்தது. எதையும் சொல்லாமலே என்னை ஏற்கிறேன் என்கிறானே என்ற எண்ணம் கண்ணீர் வரவைத்தது. பிரியம் தரும் தைரியம் அலாதி! என்று குருவின் வார்த்தைகளில் உணர்ந்தாள் தென்றல். உணர வைத்தான் குருப்ரசாத்.
“இந்த வார்த்தை என்னைக்கும் மாறாது இல்லையா குரு?” தென்றல் ஆவலாக கேட்க, எத்தனையோ மோசமாக கற்பனை செய்திருந்த குருப்ரசாத் நிச்சயம் அவள் தேவராஜன் மகளாக இருப்பாள் என்று நினைக்கவில்லை. அதனால்,
“என்னைக்கும் மாறாது!” என்று வாக்கு கொடுத்தான்.
எல்லாம் மாறுவது இயல்பு, மனிதரும் அவரின் குணமும் மாறும்! காலத்தால், காதலால், கோபத்தால், துரோகத்தால் மாறுவது இயல்பே, சில நேரம் அழகே!
மாற்றங்களை எதிர்ப்பார்க்கும் மனிதர் எதிர்கொண்டு விட, எதிர்ப்பாராதவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்! இன்றைக்கு மாறாத எதுவும் என்றைக்கும் மாறாது என்று நம்புவது மிகப்பெரிய முட்டாள்த்தனம்!!! அக்கணம் இருவருமே அப்படித்தான் இருந்தனர். உடையும் என்று தெரிந்தே தென்றல் கோட்டை கட்டினாள் என்றால் குருவோ தெரியாமல் கட்டினான்.
குரு தன் மீது வைக்கும் நம்பிக்கை தென்றலுக்கு உவப்பானதாக இருந்தது, அது உண்மை தெரியும்போது குருவை சுக்குநூறாக உடைக்கும் என்று தென்றலுக்கு தெரியவில்லை!!
“தென்றல் அழாத… ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுற நீ?” என்று தோளில் தட்டிக்கொடுத்தான்.
குருவின் அருகே அவள், பிரபஞ்சம் தந்த பிரியம் அவன். இப்போது இன்னும் அது கூடி போக, பிரியவே கூடாது என்ற எண்ணம் நீங்கி பிரியவே முடியாது என்ற நிலையில் நின்றாள் தென்றல். அவன் தோளில் சாய்ந்து இறுக்கமாக கை கோர்த்துக் கொண்டாள்.
“சம்டைம்ஸ் நான் ஓவரா யோச்சிருவேன்..! இப்போ ஓகே” என்றாள்.
“தென்றல்…”
“ம்..”
“உன் ரெஸ்யூம் எனக்கு வாட்ஸப் பண்ணு.” என்றதும்
‘கொஞ்ச நேரம் இவன் என்னை நிம்மதியா லவ் பண்ண விடமாட்டான்’ என்று மனதில் நினைத்தபடி அவனை பார்த்தாள்.
“நம்ம இப்படியே இருக்க முடியாது இல்லையா? நமக்குனு ஒரு வண்டி கூட இல்லை, சொந்தமா வீடு வாங்கணும். சிவா வேலைக்குப் போய்ட்டா இன்னும் ஈசியா இருக்கும், நீயும் வேற வேலைக்கு ட்ரை பண்ணனும் தென்றல். பிடிச்சிருக்குனு நீ இதையே செய்யக் கூடாது, பிடிச்ச வேலையா இருந்தாலும் உன் உழைப்புக்கு அங்க சம்பளம் கம்மி இல்லையா? இது சுய நலமா உனக்குத் தெரியலாம், ஆனா இதான் எதார்த்தம். நம்ம ஒரு குடும்பமா ஆகப்போறோம், அதுக்கு என்ன செய்யணும்னு ஒண்ணா தானே யோசிக்கணும். அடுத்து நமக்கு குழந்தை வரும், செலவும் வரும். இந்த அன்பு, பாசம், நேசம் எல்லாம் நிம்மதியா ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்துக்க குறைஞ்சபட்சளவு பணம் வேணும் தென்றல். money is important!” என்றான்.
“நீங்க சொல்றது எனக்குப் புரியுது குரு. நம்ம கல்யாணம் வரைக்கும் இங்க பார்க்கிறேன், அப்புறம் வேற பார்க்கலாம்” என்ற தென்றலின் பதிலுக்கு தலையசைத்த குரு
“ரைட்! உன்னிஷ்டம். இப்பவே தேடி அப்ளை பண்ணினா நம்ம கல்யாணம் முடிஞ்சு ஜாய்ன் பண்ணினா ஈசிதானேம்மா?” என்று கேட்டான்.
“வருண் கிட்ட சொல்லியிருக்கேன் குரு. அவன் பார்த்து தரேன் சொன்னான்” என்றதும்
“சரிம்மா! நீ சாப்பிட்டியா?” சிறிது நேரம் பேசிவிட்டு கீழே சென்றனர்.
குரு தென்றலுடனான வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களை யோசித்து நடக்க, தென்றலோ எதையும் யோசிக்கவில்லை. யோசித்தால் பயம் வருகிறதே…! சீக்கிரம் குருவிடம் எல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலே தவிர, சீக்கிரம் என்பது சீக்கிரத்தில் வரவில்லை!
அதற்கடுத்து பத்து நாட்கள் கடந்துவிட்டன. லாவண்யா தீவிரமாக படிக்க, சிவா இன்னும் கடைசி செமெஸ்டர் எழுதவில்லை, ஆனால் ப்ராஜ்க்ட் நேர்முகத் தேர்வு என்று அவனும் வேலையாக இருந்தான். குருப்ரசாத்திற்கு இன்னும் பொறுப்புகள் கூடியிருக்க, அவன் பி.எச்.டி படிக்க அப்ளை செய்துவிட்டான். அவன் வேலை பார்க்கும் கல்லூரி முதல்வரே அவனுக்கு ‘கைட்’ செய்ய ஒத்துக்கொண்டார். இப்படி எல்லாரும் வேலையாக இருக்க, தென்றலிடம் அதிக ஒட்டுதலோடு இருந்தது கீதாஞ்சலி மட்டுமே. அவருக்கு மட்டுமே நேரமிருந்தது. குருப்ரசாத் காலையில் தென்றலுக்காக தண்ணீர் தூக்கி தருவான், வழியில் பார்த்தால் பேசுவான், வழியே போய் பேச அவன் நேரம் எடுக்கவில்லை.
தென்றல் வெளியே கிளம்பி வர, கீதாஞ்சலி துணி எடுத்தபடி அவளிடம் பேசினார். தென்றல் அன்று மகாதேவனை பார்க்க வருவதாக சொல்லியிருந்தாள். அவரிடம் மட்டும் சொல்லிவிடு என்று வருண் அழுத்தி சொல்லியிருக்க, தென்றலுக்கும் எப்படியிருந்தாலும் சொல்ல வேண்டுமே என்ற எண்ணம்.
“வெளியே போய்ட்டு வரேன்மா” என்று சொல்ல
“தனியாவா போற?” என்று கீதா கேட்கும்போதே குரு தண்ணீர் குடிக்க வந்தவன் காதில் இந்த பேச்சு விழுந்தது.
“எங்க தென்றல்?” என்று அவனும் நிலைப்படியில் நின்று கேட்க
“அது..சித்…சின்னதா ஷாப்பிங்!” என்று உளறிவைத்தாள்.
“நானும் கூட வரேன்” என்றவன் அம்மாவை பார்க்க,
“போய்ட்டு வாடா” என்றார் கீதா. குரு உடைமாற்றி வந்தான்.
“தனியா போற மாதிரி இருந்தா வீட்ல யாராச்சும் கூப்பிட வேண்டியதுதானே?” அவன் நடந்தபடி தென்றலிடம் கேட்க
“கேட்காமலே ஒரு நாள் நிறையா வாங்கி கட்டினேனே. அதான் கேட்கல” என்றாள் தென்றல். அவனிடம் பேசியபடி மகாதேவனுக்கு வரவில்லை என்று மெசெஜ் அனுப்பிவிட்டாள்.
“அது பக்கத்து வீட்டு பொண்ணுக்குனு சொல்லியாச்சு” என்றான் குரு. இருவரும் பேருந்து பிடித்து தி. நகர் சென்றனர்.
“எந்த கடை தென்றல்?” என்ற குரு அவளுடன் பேசியபடி நடந்தான். பெயருக்கு ஒரு புடவை எடுத்த தென்றல்
“குரு, நான் ஷர்ட் வாங்கி கொடுத்தா வாங்கிப்பீங்களா?” என்று கேட்க, அவன் புன்னகைத்தான். உடனே துள்ளலாக ஆண்கள் உடை இருந்த பக்கம் போனவள் ப்ராண்டட் சட்டைகளை கேட்டு வாங்க, குரு ‘என்ன இது?’ என்று பார்த்தான்.
“தென்றல், அது காஸ்ட்லி. நீ இங்க வா, நம்ம வேற பார்க்கலாம்” என்று மெல்ல சொல்ல
“ஆயிரம் ரூபா ஜஸ்ட்டா. ?நீ வைச்சுருக்க ஷர்ட் இரண்டாயிரம். ஜஸ்ட் தவுஸண்ட்?” என்று தென்றலை மீண்டும் கேட்க, அப்போதுதான் தெளிவே வந்தது தென்றலுக்கு. விலை பார்த்தெல்லாம் அவள் எடுத்ததே இல்லை, பிடித்தால் போதும்!
“அது.. முதல் தடவ உங்களுக்கு எடுக்கிறேன். ப்ராண்டட்’னா லாங் லாஸ்ட்டிங். ப்ளீஸ் குரு” என்று சமாளித்தாள். ஒருவழியாக இரண்டாயிரத்துக்கே சட்டை மட்டும் எடுத்து வெளியே வந்தனர்.
குரு அங்கிருந்த உணவு பண்டங்கள் விற்கும் கடைகள் பார்த்தபடி,
“உனக்கு என்ன பிடிக்கும் தென்றல்?” என்று கேட்க
“உங்களைத்தான் பிடிக்கும்” என்று தென்றல் பைகளை அடுக்கியவாரே அவன் சாப்பிட கேட்கிறான் என்று தெரியாது இயல்பாக சொல்லிவிட, குருவோ அடக்க முடியாது சிரித்தான்.
“என்னாச்சு?” என்று தென்றல் தீடீரென சிரிக்கிறானே என்று புரியாது கேட்க, குரு தென்றலை பார்த்த பார்வையில் ரசனை மிகுந்திருந்தது.
‘சாப்பிட கேட்டா, என்னை சாப்பிடுவாளாமா?’ என்று நினைக்க நினைக்க சிரிப்பு வந்தது.
“சொல்லுங்க குரு” தென்றல் மீண்டும் கேட்க
“நான் சாப்பிட என்ன பிடிக்கும் கேட்டேன்” என்றதும், தென்றலால் குருவின் முகம் பார்க்க முடியவில்லை. வெட்கமாகி போனது!
தென்றல் முகம் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. குருவிற்கோ அந்த நேரம் காற்றெல்லாம் காதலால் தென்றலாகி போனது!