தென்றலுக்கு குருவின் பேச்சில் சிரிப்பு, வெட்கம் என்று சில்லிட வைக்கும் உணர்வுகள். குருவின் பார்வை மொத்தமாக தென்றலை சூழ்ந்திருந்தது. விழியகற்றாமல் பார்த்தான், அவள் பேசியதை நினைத்து நினைத்து சிரித்தான்.
“குரு, ஸ்டாப்” தென்றல் முறைக்க
“சரி, என்ன சாப்பிடுற?” என்றான் மீண்டும்.
“இப்படி தெளிவா கேக்கணும்” என்ற தென்றலின் காதருகே நெருங்கியவன், பின்பு தலையை மறுப்பாக ஆட்டி
“இதுக்கு பதில் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன் தென்றல்” என்றான் அவளை ரசித்தவண்ணம். குருவின் இந்த பார்வை, பேச்சு எல்லாம் புதிது! தென்றலும் அவனை ரசித்து நோக்க,
“என்ன பார்த்துட்டே இருக்க?” என்று குரு கேட்டான்.
“இன்னிக்கு சாருக்கு அதிகமா பேச்சு வருதேனு பார்க்கிறேன்..” தென்றல் கிண்டலுடன் வார்த்தைகளை இழுக்க
அந்த வார்த்தை தென்றலை தென்றலாக தீண்டியது. வெகு மாதங்கள் கழித்து மனதோரம் தேன்காற்று! தேவராஜன், மகேந்திரன் யாரும் அக்கணம் நினைவில் இல்லை. அந்த நொடி அவன், அவள், அவர்கள் இடையே அனுராகம் இதுதான் மனதை நிறைத்தது! குருவின் மீது இவள் காட்டும் அன்பு எதிர்ப்பார்ப்பில்லாதது, இருந்தும் குரு அந்த அன்பை திரும்ப காட்டும்போது தித்தித்தது. காதல் நம்பிக்கை தந்தது. இன்னும் காதல் கூட ஒரு ஆவல் பிறந்தது.
இருவரும் மீண்டும் பேருந்தில் ஏறினர். வழியெல்லாம் குரு தென்றலிடம் பேசிக் கொண்டே வந்தான். இதுவரை இந்த சாதாரண பேச்சு கூட குருவிடமிருந்து வந்ததில்லை. இப்போது மனைவியாக போகிறவள் என்ற உரிமை, பிடிப்பால் அது தந்த பிணைப்பால் தென்றலிடம் நன்றாக பேசினான் குரு.
ஆனால் அது எல்லாம் சில நிமிடங்களே, தென்றலுக்கு தொடர்ந்து போனில் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. சைலெண்ட்டில் போட்டிருந்தவள் பார்க்கவுமில்லை. வீடு வந்த பின்னே அவரவர் வீட்டினுள் சென்றனர். தென்றல் அப்போதுதான் போனை பார்க்க, மகாதேவனிடமிருந்து அவளுக்கு ஐந்தாறு அழைப்புகள், கூடவே ‘எமெர்ஜென்சி, ஹாஸ்பிட்டல் வாடா’ என்று குறுஞ்செய்தியும். அதனை பார்க்கவும் தென்றலுக்கு சட்டென்று வியர்த்து போனது.
உடலில் நடுக்கம் பரவ, கண்களில் கண்ணீர் தேங்கியது. அப்பாவுக்கு எதாவது என்று நினைக்கவே மிகப்பெரிய அச்சம்! போக வேண்டும் என்று அறிவு சொன்னாலும் எழ முடியவில்லை. சித்தப்பாவுக்கு அழைக்க கூட முடியாதளவு பயம். முயன்று மனதை தேற்றி கதவை பூட்டி வெளியே வர, குருப்ரசாத் படிகளில் நின்றான்.
“என்னாச்சு தென்றல்? வெளியே கிளம்பிட்டியா?” என்று குரு கேட்க
“ஒரு எமெர்ஜென்சி குரு, நான் அப்புறம் பேசுறேன். வரேன்” என்று சொல்லி வேகமாக படிகளில் இறங்கினாள். தென்றலின் கலங்கிய முகம் பார்த்த குருவுக்கு டென்ஷன் ஆனது. அவனும் அவள் பின்னாடி வேகமாக சென்றான்.
“தென்றல், என்னாச்சு? நானும் கூட வரேன்” என்று சொல்ல இன்னும் அந்த சூழல் அவளுக்கு அழுத்தம் தர
“குரு! என் ப்ரண்ட் அப்பாவுக்கு முடியல… ஐ கேன் மேனேஜ். நான் போய்ட்டு உங்களுக்கு கால் பண்றேன்.” என்று சொல்லி குருவின் பதில் கூட கேட்காது வேகமாக தென்றல் ஆட்டோ ஒன்றை பிடித்து மருத்துவமனைக்கு விரைந்தாள்.
குருவோ தென்றலின் நடவடிக்கையில் குழம்பி போய் இருந்தான். அவள் போனுக்கு அழைக்க, அவள் எடுக்கவில்லை. எங்கே போனாள் என்றும் தெரியவில்லை, யார் அவள் தோழி என்றும் தெரியவில்லை. துணைக்கு வரேன் என்று சொல்லியும் கேட்காமல் ஏன் போகிறாள் என்று குரு கோபத்துடன் இருந்தான்.
வேக வேகமாக மருத்துவமனையில் தேவராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிவுக்கு செல்ல, அங்கே மகாதேவன் நின்றிருந்தார்.
“அவசரம்னு கால் பண்ணினா நீ எடுக்க மாட்டியா?” என்றார் கோபத்துடன்.
“சாரி சித்தப்பா, சைலெண்ட்ல போன் இருந்தது… அப்ப்…அப்பா இப்போ எப்படி இருக்கார்?” என்று கண்ணீருடன் கேட்க, தென்றலை அப்படி பார்க்க மகாதேவனுக்கு வருத்தமாக இருக்க, மகளின் கையைப் பற்றி தட்டிக் கொடுத்தவர்
“டாக்டர்ஸ் பார்த்துட்டு போனாங்க.. தீடீர்னு பல்ஸ் குறைஞ்சிடுச்சு போல, இப்ப ஓகே! கொஞ்ச நேரத்தில நம்ம பார்க்கலாம்” என்று சொல்லி அவளை உட்கார வைத்தார். தென்றல் அப்படியே கண்மூடி சாய்ந்துவிட்டாள். சிறிது நேரத்தில் தேவராஜனை பார்க்க அனுமதி வழங்கப்பட, தென்றலை பார்த்த மகாதேவன்
“நீ போடா, பார்த்துட்டு வா” என்றதும் கண்களை துடைத்துக் கொண்டு சென்றாள். அப்பாவின் அருகில் செல்ல, தேவராஜன் மிக மிக மெலிந்து இருந்தார். அவர் நாட்கள் அதிகமில்லையோ என்று தென்றலுக்குத்தோன்றியது. அந்தளவு உடல் நிலை சீராக இல்லை. இருந்தும் அவரருகே உட்கார்ந்தவள்
“அப்பா” என்றழைக்க
அவரால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது. தென்றல் அப்பாவின் கண்ணீர் துடைத்தவள்
“அழாதீங்கப்பா, சரியாகிடும்!” என்றாள். இருவருக்குமே தெரியும் இது சரியாகாது என்று, ஆனால் மருத்துவமனைகளில் கடவுளின் வார்த்தை இது!
அவர் கையைப் பற்றிக்கொள்ள, “செஞ்ச பாவத்துக்கு இன்னும் வலியெடுத்து சாகணும் போல…” என்றார் மூச்சு விடவே சிரமப்பட்டு. தென்றல் அப்பா முன் அழக்கூடாது என்று நினைத்தாலும் கண்கள் கலங்கின.
அவளின் மனதின் குணத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. குரு வீட்டினருடன் இருக்கையில் அப்பாவினால் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அவர் மீது கோபம் வந்தது. எப்படி இப்படி நண்பனுக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று.. பணம் மட்டும் போதுமா? என்று நினைப்பாள். இப்போதோ அப்பாவை கடிய முடியவில்லை. அப்பா என்ற பாசம் தடுத்தது. அப்பா நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலே!
தென்றல் அப்பாவை பார்த்தபடி அவரை பற்றி நினைத்தாள். உண்மையில் தென்றலின் அப்பாவாக தேவராஜன் நல்லவர். நல்ல அப்பா, நல்ல அண்ணன், நல்ல கணவன் ஆனால் நல்ல நண்பனாக இல்லாது போனதால் நல்ல மனிதர் இல்லை. பல வருடம் குழந்தை இல்லாது போதும் மனைவியை அன்போடு பார்த்தவர், மனைவி இறந்த பின்னும் வேறு திருமணம் செய்யாதவர், நிறைய பணமிருந்தும் ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர். தம்பிகளை பார்க்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சுக வாழ்வுக்காகவே ஓயாது உழைத்தார். தன்னை போல் அவர்கள் கஷ்டப்படக் கூடாதென்று அயராது பாடுபட்டவர் அடுத்தவர் குடும்பத்தை யோசிக்கவே இல்லை.
இந்த சுய நலம் எப்படியெல்லாம் மனிதரை ஆட்டுவிக்கிறது, ஒருத்தன் வாழ்க்கையைக் கெடுத்து என்ன வாழ்க்கை என்று தென்றலின் அறிவு எப்போதும் சொல்லும். அது அப்பாவின் மீது தீராத கோபத்தைக் கொடுக்கும். ஆனால் இந்த நொடி அப்பாவை வெறுக்க முடியவில்லை. அவருடனே பத்து நிமிடம் உட்கார்ந்திருக்க, தேவராஜன் மருந்தின் வீரியத்தில் உறங்கிப்போனார்.
“இங்க இருந்து என்ன செய்ய போற தென்றல்? அண்ணனுக்கு கான்ஷியஸ் வந்து வந்து போகும்.. இப்ப நார்மல்னு டாக்டர் சொன்னது கேட்ட தானே? வீட்டுக்குப் போகலாம் வா” என்று கூப்பிட
“வீட்டுக்கு வந்தா… ப்ச்.. நான் இப்போ வரல சித்தப்பா” என்றாள் தென்றல்.
“ஆறு மாசம் இன்னும் முடியல சித்தப்பா” என்று தென்றல் சொல்ல
“அதுக்கு? இந்த மாதிரி நேரத்துல நீ இங்க எங்க கூட இருக்கிறதுதான் நல்லது தென்றல்… இன்னும் என்ன செய்யணும் நினைக்கிற? அந்த குரு வேலையில இருக்கான், சிவாவுக்கு ஜாப் கிடைச்சிரும்.. நீ அங்க செய்ய ஒன்னுமே இல்லையே?” என்று மகாதேவன் எரிச்சலுடன் கேட்டார்.
“என்னால… இப்போ வர முடியாது சித்தப்பா” என்றாள் தென்றல் உறுதியாக. அந்த உறுதி மகாதேவனை உறுத்தியது. அப்பாவுக்கு முடியவில்லை, உடன் இருக்க முடியாதுதான், ஆனாலும் வீட்டினரை தேடாமல் அப்படியென்ன அவர்களுக்கு பார்க்க வேண்டும் இவள்? என்ற யோசனை அவரிடம்.
தேவராஜனுக்கு கேன்சர் என்று தெரிந்த அன்று தென்றல் தன் மனைவியைக் கட்டிக்கொண்டு அழுதது நினைத்துப் பார்த்தவருக்கு இன்று இவள் திடமாகிவிட்டாளா இல்லை ஆறுதலை தங்களிடம் தேடவில்லையா என்ற குழப்பம்.
“ஏன் முடியாது?” என்று அழுத்தமாகக் கேட்டார். அவரும் ஆசிரியர்தானே? பதில் சொல்லு என்ற கட்டாயமான தொனியில் கேட்டார். மகாதேவனிடம் இன்று குருவை பற்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தென்றலுக்கு மறந்தே போனது. தென்றல் அந்த நேரம் இருந்த மன நிலைக்கு எதையும் சொல்ல பிடிக்கவில்லை. குருப்ர்சாத்தை காதலிக்கிறேன் என்றால் அதற்கு மகாதேவன் எதாவது சொல்லுவார். பதில் பேசவோ, தன் காதலை புரியவைக்கும் மன பக்குவமோ தனக்கு இப்போது இல்லை என்றுணர்ந்தவள்
“என்னால இப்போ பேச முடியல சித்தப்பா… ஆறு மாசம் கழிச்சு நான் வரலன்னா கேளுங்க” என்று அப்போதைக்குப் பேச்சை முடித்தாள். மகாதேவனுக்கு தென்றல் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது. அப்பாவுக்காக பார்க்கிறாள் என்று நினைத்தார் அவர்.
அடுத்த நாள் மாலை வரை தென்றல் அங்கேதான் இருந்தாள். மகாதேவன் வீட்டினரிடம் சொல்லவே இல்லை. அண்ணனுக்கு முடியவில்லை என்றதும் தென்றல் மட்டுமே அவர் நினைவில் நிற்க, அவள் வந்ததும் மற்றதை மறந்தார். இப்போது தேவராஜனும் திடமாக இருக்க வீட்டில் சொல்லவில்லை. தென்றல் மாலை போல் கிளம்பி வீடு வந்தாள்.
குருப்ரசாத் வீட்டில் அவன் அறையில் இருந்தான். தென்றல் வந்தது தெரியவில்லை. ஹாலில் நின்றிருந்த கீதா பக்கத்து வீடு திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.
“வந்துட்டியா தென்றல்? உன் ப்ரண்ட் அப்பா எப்படி இருக்கார்?” என்று கீதா விசாரிக்க, இரவெல்லாம் உறங்காமல் இருந்தது, அப்பாவின் நினைவு எல்லாம் தென்றலை மிகுந்த சோர்வாக்கியிருக்க,
“நல்லாயிருக்கார்மா” என்று மெல்ல சொல்லி வீட்டினுள் புகுந்தாள். கீதா அவள் சட்டென்று உள்ளே போனதை தவறாக எடுக்கவில்லை. மாறாக அவள் முகத்தில் இருந்த சோர்வினை பார்த்து டீ கொடுக்கலாம் என்று கிச்சனுக்குப் போனார். டீ போட்டவர் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் மூவருக்கும் கொடுத்தார். குரு அவன் பி.எச்.டிக்காக படித்துக் கொண்டிருக்க டீயை அவனிடம் நீட்டியவர்
“தென்றல் வந்துட்டா டா” என்றதும் தலையசைத்தவன் பதில் பேசவில்லை. காலையிலும் அவளுக்கு அழைக்க, போன் எடுக்கவே இல்லை. அந்த கோபம் குருவிடம்.
“அம்மா, நான் போய் கொடுத்துட்டு பேசிட்டு வரவா?” என்று கேட்க கீதாஞ்சலியும் புன்னகையுடன் சரியென்றார். அவன் டீயை வேகமாக பருகிவிட்டு வெளியே சென்றான்.
குரு தென்றல் வீட்டு கதவினை தட்ட, தென்றலுக்கு முடியவில்லை. எங்காவது காணாமல் போய்விடலாமா என்ற எண்ணம். யாரையும் பார்க்க பிடிக்கவில்லை, அப்பா, குரு என்று தென்றல் மனதில் பெரும் புயல்!
தொடர்ந்து கதவு தட்டப்பட, கண்களைத் துடைத்துக் கொண்டு கதவினை திறந்தாள் தென்றல். குருவை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
குரு டீ டம்ளரை நீட்டினான். வாங்கியவள் “தேங்க்ஸ்” என்றிட
“ஏன் இவ்வளவு டல்லா இருக்க?” என்றபடி குரு உள்ளே வந்தான். கீழே தரையில் அமர்ந்து கொண்டான். அவன் சகஜமாக உட்கார்ந்து கொள்ள, தென்றலும் அவன் அருகே தள்ளி உட்கார்ந்தாள்.
“டீ குடி” என்று குரு சொல்ல தென்றல் அமைதியாக குடித்தாள்.
“உனக்கு ரொம்ப க்ளோஸ் ப்ரண்டா என்ன? எங்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லை. அக்சுவலி உன் மேல ரொம்ப கோவமா இருந்தேன். மிஸ் டல்லா இருக்கீங்கனு அம்மா சொன்னாங்க. அதான் வந்தேன்” என்றதும் தென்றலின் கண்கள் மீண்டும் கலங்கின.
அப்பாவுக்கு முடியாமல் போனதிலிருந்து அவள் இன்னும் மீளவில்லை. தென்றல் துவண்டு போயிருந்தாள். குரு உடனே
“அய்யோ! என்ன தென்றல் நீ?” என்று அவள் தோள்மீது கைப்போட்டு அணைத்ததும் போதும், மகாதேவன் நினைத்தது போல் ஆறுதலை அவள் குருவிடம் தேடினாள். எப்போதும் தென்றலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குருவிடம் ஆழமாக ஊறியிருக்க, இப்போது அவள் அழுகை பாதித்தது.
“தென்றல், அழாதம்மா!” என்று அவன் சொல்ல அவளோ டீயை வைத்தவள் தேம்பி தேம்பி அழுதாள். அப்பா அப்பா என்ற வார்த்தை மட்டும் இடையிடையே வர, குரு புரியாமல் பார்த்தான்.
“அப்பாவா??” என்று குரு கேட்டது கூட காதில் விழாமல் தென்றல் குருவை பற்றிக்கொண்டு அழுது தீர்த்தாள். குரு மனதிலோ தென்றல் ‘அப்பா’ என்றதே ஓடியது.