தென்றல் கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கும் மேல் அழுது ஓய்ந்தாள். குரு அணைத்திருந்தானே தவிர பேசவே இல்லை. கேள்விகள் கேட்கப்படாமல் தரப்படும் ஆறுதல் அலாதியானது! அப்படித்தான் குருவின் ஆறுதல் இருந்தது. தென்றல் கண்களைத் துடைத்துக் கொண்டு விலகி உட்கார, குரு எழுந்து மீதமிருந்த டீயை சூடு செய்து கொடுத்தான்.
தென்றலுக்கு அவனிடம் என்ன சொல்வது என்ற யோசனை. தன்னிலை இழந்து அழுதிருக்க, இப்போது இவன் கேட்டால் என்ன சொல்வது என்று நினைக்க, அவளின் யோசனை நிறைந்த முகம் பார்த்த குருப்ரசாத்,
“ப்ர்ஸ்ட் டீ குடி தென்றல், ரிலாக்ஸ் ஆகிட்டு பேசு” என்றான். தென்றலும் டீயைப் பருகினாள். டீ குடித்து அவனை பார்க்க
“உன் ப்ரண்ட் அப்பா எப்படி இருக்கார்?” என்று கேட்டான்.
“நல்லாயிருக்கார்” என்றாள் குரல் கமற.
“அப்பான்னு அழுதியே, அவரை நினைச்சா இல்லை உன் அப்பா ஞாபகமா?” என்று அடுத்து கேள்வி வர, தென்றல் மனதில் அதிர்வு. உண்மையை சொல்ல உறுதி இல்லை, பொய் சொல்ல துணிவு இல்லை. எத்தனை பொய் என்று தன்னை நினைத்து பெருங்கோபம்! சுயத்தின்பால் தோன்றும் எந்த உணர்வானாலும் அதன் தாக்கம் அதிகம். சுயப்பச்சாதபம், சுயவெறுப்பு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதரை உருக்கிவிடும். தென்றல் அப்படியொரு நிலையில் இருந்தாள்.
மௌனமாக அவள் இருக்க, குருவோ தென்றலை தனக்கு தெரியும் என்று அதிகமாக நம்பினான்.
“உன் அப்பாவை மிஸ் பண்றியா?” என்றதும், அது உண்மைதானே ‘ஆம்’ என்று தலையசைக்க, அவள் தோளை அழுந்தப்பற்றியவன்
“ஒரு கணவன் அப்பாவா இருக்க முடியுமா எனக்கு தெரியல… ஆனா நீ என் லைஃப்ல வந்த நேரம் அப்பாவும் வரப்போறார். அப்பான்னா எல்லாருக்கும் அப்பாதானே? என் அப்பா அப்படித்தான்! விட்டா நான் அவரைப் பத்தி ஆயுசுக்கும் பேசுவேன். நீயே அவர் வரப்ப தெரிஞ்சுப்ப, இதுல அவருக்கு பொண்ணு வேணும்னு ஆசை. லாவண்யான்னா அவருக்கு ரொம்ப செல்லம். சொல்ல முடியாது, என்னை விட உன்னை நல்லா பார்த்துப்பார் பாரு! உன் அப்பாவை என் அப்பாகிட்ட நீ பார்ப்ப, மிஸ் பண்ணவே மாட்ட்டீங்க மிஸ். தென்றல்” என்றான் புன்னகையுடன்.
குருவின் புன்னகை தென்றலை பற்றியது. அவள் முகம் மென்னகையை சுமக்க,
“நீ இப்படியே இரு! முடிஞ்சா இதை விட சந்தோஷமா!! அழுமூஞ்சியை எனக்குப் பார்க்க முடியல.. மனசு கஷ்டமா இருக்கு தென்றல்” என்றான் குருப்ரசாத். தென்றலுக்கு முதலில் காதல் பிறந்திருக்கலாம், ஆனால் காதல் முதலில் வருவது முக்கியமில்லையே முழுவதுமாக வர வேண்டும், காதலிப்பவர் முதன்மையாக வேண்டும். குரு அப்படியொரு நிலையில் இருந்தான்.
தென்றல் அவன் காற்றாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வந்தாள்.
“நீங்க கூட இருங்க, இதை விட சந்தோஷமா இருப்பேன்” என்று தென்றல் அவனை விழியகலாது பார்த்தாள். இப்போதெல்லாம் தென்றலிடம் அடிக்கடி இந்த பார்வை பார்க்கிறான் குரு. அதை அவளிடம் கேட்க,
“ஏன் பார்க்கக்கூடாதா?” என்று எதிர்க்கேள்வி அவளிடம்.
“பார்க்க கூடாது இல்லை, ஏன் பார்க்கிறன்னுதானே கேட்கிறேன். அதுவும் இப்படி விடாம…? என்னமோ எப்படி சொல்றது? எஸ்…எதையாவது தொலைச்சிடுவோமோனு அடிக்கடி கண்காணிப்புலயே வைப்போமே, அப்படி பார்க்கிற நீ” என்றதும் தென்றல் முகத்தில் மீண்டும் கலக்கம்.
“அப்படி சொல்லாதீங்க! நான் உங்களை தொலைக்க மாட்டேன், ஏன் உங்களுக்கு அப்படி தோணுது?” என்றாள் கோபமாக, ஆதங்கமாக.
“அட! என்ன தென்றல்?” என்று ஆரம்பித்த குரு அவள் இன்று டென்ஷனாக இருக்கிறாள் என்றுணர்ந்து
“எவ்வளவு வேணும்னாலும் சைட் அடி” என்று சொல்லி அவள் முன் கைகளை கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.
“கிண்டலா? எழுந்து போங்க குரு. வந்து ரொம்ப நேரம் ஆச்சு” என்று தென்றல் அவனை விரட்ட
“மிஸ் மிரட்டுறாங்க” என்று சிரித்தவன்
“டயர்டா இருக்க, நைட் நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன். இப்போ தூங்கு” என்று சொல்லி போனான்.
வீட்டுக்குப் போக, கீதாஞ்சலி அவரிடம்
“டேய் இரண்டு நாள்ல லாவண்யா பெரியப்பா பையன் கல்யாணம்.. அவளை அழைச்சிட்டுப் போகணும். வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைச்சாங்க, இவளுக்கு அவங்களும் வேணும். நீயும் லீவ் போட்டு எங்க கூட வா” என்று சொல்ல
“அம்மா, ட்ரயின்ல டிக்கெட் போடுறேன். நீங்க போய்ட்டு வாங்க, எனக்கு லீவ் இல்லை. சிவாவைதானே உங்ககூட வர சொன்னேன்.. எங்க அவன்?” என்று குரு அம்மாவை பார்த்தான்.
“இப்போதான் அவனுக்கு மெயில் வந்தது. போன வாரம் டெஸ்ட் எழுதினான்ல, பெங்களூர்ல இண்டர்வியூனு சொன்னான், மெயில் திரும்பி அனுப்பணும்னு அதுல வேலையா இருக்கான் டா” என்றார்.
“உன்னை தனியா விட்டு போகணுமா?” கீதா சோகமாகக் கேட்க
“அதெல்லாம் இருந்துப்பேன்மா. ” என்றான் குரு. சிவா வேலைகள் முடிந்து அறையை விட்டு வெளியே வந்தவன் அண்ணனிடம் விஷயம் சொல்ல,
“ஆல் தி பெஸ்ட்! நல்லா பண்ணுடா சிவா” என்றான்.
“தேங்க்ஸ்ணா” என்றவன் “அண்ணிகிட்ட சொல்லிட்டு டிப்ஸ் கேட்டு வரேன்” என்று சொல்ல
“தென்றல் டயர்டா இருக்கா, நாளைக்கு நைட்தானே கிளம்பணும். காலையில கேளு” என்றான். மறு நாள் சிவா முதலில் பெங்களூர் செல்ல, மாலையில் அம்மாவையும் லாவண்யாவையும் திருச்சிக்கு இரயிலில் ஏற்றிவிட்டு வந்தான் குருப்ர்சாத்.
குரு வரும்போது தென்றல் தாழ்வாரத்தில் நின்றிருந்தாள்.
“ட்ரயின் வந்துடுச்சா?” குருவிடம் கேட்க
“உள்ள உட்கார வைச்சிட்டேன், ட்ரெயின் இன்னேரம் கிளம்பியிருக்கும்” என்றவன் கதவை திறந்து உள்ளே போய்விட்டான்.
அவன் பேசாமல் போக, தென்றலும் உள்ளே போய்விட்டாள். பத்து மணிக்கு மேல் பாத்ரூம் செல்லலாம் என வெளியே வர, குரு அங்கேதான் கருணாகரனுடன் நின்றிருந்தான். நண்பர்கள் பேச, தென்றல் அமைதியாக பாத்ரூம் சென்று மீண்டும் வீட்டுக்குள் போனாள்.
“ஓஹ், தங்கச்சிக்காக தான் நீ ஊருக்குப் போகலயா?” கருணா கிண்டலாக இழுக்க
“ஆமா, என்ன இப்போ? அவ தனியா இருப்பா” என்று குரு ஒத்துக்கொண்டான்.
“ஏண்டா அம்மா பாவமில்லையா?”
“அம்மா ஊருக்குத் தனியா போயிருக்காங்க, அங்க லாவண்யா ரிலேட்டிவ் வந்து பிக் அப் பண்ணிப்பாங்க. பயமில்லை” என்றான் உடனே.
“இங்க என்ன பயம். இந்த மாடியில மட்டும்தான் வீடு இல்லை. கீழ நாங்க இருக்கோம்” என்றான் கருணாகரன்.
“நான் இருந்தா அவளுக்கு தனி தைரியம். நான் தென்றலோட இருக்கேன், உனக்கென்னடா? முதல்ல போய் தூங்கு” என்றான். கருணாகரன் உடனே வாய்விட்டு சிரித்தவன்
“டேய், அம்மா உன்னை நல்லவன்னு நம்பி விட்டுபோயிருக்குடா…” என்று சொல்ல
“எனக்குத் தெரியும். நீ போ” என்று அவனை விரட்டினான். கருணாகரன் படிகளில் இறங்கி செல்லவும் குரு அவன் வீட்டுக்குள் போக திரும்ப, கருணா சென்றதால் தென்றல் கதவை திறந்து வெளியே வந்தாள்.
“இன்னும் தூங்கலையா நீ?” குருவின் குரல் அதட்டலாக வர
“ஏன் நீங்க தூங்கல? ப்ரண்ட்கிட்ட பேச மட்டும் டைம் இருக்கும். தத்தி வாத்தி!” என்று திட்டி மீண்டும் உள்ளே போக பார்க்க, தென்றலின் கை பற்றினான் குருப்ர்சாத்.
“தத்தியா?” என்று முறைத்தவன் “நீ நான் வந்ததும் கதவ சாத்திட்ட, அதான் நான் தூங்க போறன்னு டிஸ்டர்ப் பண்ணல” என்றான்.
“நீங்கதான் பேசல. வந்ததும் உள்ளே போய்ட்டீங்க” தென்றல் அவனை குறை சொல்ல
“பசிச்சது சாப்பிட போனது தப்பா மிஸ்?”என்று அவன் கேட்ட பாவனையில் தென்றல் வாய்விட்டு சிரிக்க, சட்டென்று குருவின் கரம் தென்றலின் வாய் மூடியது.