“எல்லாரும் தூங்கியிருப்பாங்க, மெதுவா சிரி” என்றவனுக்கும் சிரிப்பு வர, இப்போது தென்றலின் கரம் அவன் வாய் மூடியது. அவர்களின் செயலில் இருவருக்குமே புன்னகை பெரிதாக விரிந்தது. தென்றல் புன்னகையுடன் அப்படியே கீழே உட்கார, குருவும் அவள் வாயை மூடிய கையை எடுத்தான். இருவரும் கால் நீட்டி அந்த தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தனர்.
தென்றல் குருவின் முகத்தை ரசித்து,
“இப்படியே நீங்க இருக்கணும் குரு.. சிரிச்சு சந்தோஷமா.” என்று ஆத்மார்த்தமாக சொல்ல, குருவின் முகத்தில் மென்மை. தென்றலின் கையைப் பற்றியவன் ஆழமான குரலில்
“தேங்க்ஸ் தென்றல், என்னை சந்தோஷமா ஃபீல் பண்ண வைச்சதுக்கு” என்றான். தென்றலுக்கு அவன் பேச்சில் நிறைந்து போனது மனம்.
குருவோ இன்று அமைதியான மன நிலையில் இருந்தான். தென்றலுடனான தனிமை, இரவின் குளுமை எல்லாம் அவனை பேச வைத்தன.
“அப்பா எனக்கு ரொம்ப க்ளோஸ் தென்றல். எல்லார் மேலயும் பாசம் உண்டு. ஆனா மனசை சொல்ற அளவுக்கான நெருக்கம் அது வேற இல்லையா? அப்பா தவிர என்னால எப்பவும் யார்கிட்டயும் ஒன்னு ஷேர் பண்ண முடிஞ்சதில்லை. எனக்கு மனுஷங்களை பிடிக்கவே இல்லை தென்றல், அப்பாவுக்கு அந்தாள் பண்ணின துரோகம்…. எனக்கு மனுஷங்க இப்படியெல்லாம் முதுகுல குத்துவாங்களானு இருந்தது.. நீயே யோசிச்சு பாரு. ஸ்கூல் முடிச்சு காலேஜ் போகணும்னு பல கனவோட இருந்தேன்… எல்லாம்..” என்றவனுக்கு நினைவுகள் நெஞ்சடைக்க வைக்க, சில நொடிகள் அமைதியானான்.
“அந்த வயசு உலகத்தை, மனுஷங்களை இவ்வளவு ஏன் நம்மளை நாம தெரிஞ்சுக்கிற வயசு. அதுவரைக்கும் ரொம்ப பாதுகாப்பா இருந்துட்டு புதுசா ஒரு உலகம் பார்க்க போற ஆர்வம், பயம் எல்லாம் இருந்தது. ஆனா எல்லாமே கலைஞ்சு போச்சு! அப்பாவை சுத்தி இயங்கிட்டு இருந்த என்னோட உலகம் மொத்தமா நின்னு போச்சு. நிறைய நாள் எனக்குப் பயமா இருக்கும், அழ கூட முடியாது. அம்மாவுக்கு முன்னாடி நான் தைரியமா இருக்கணுமே, சிவா அவன் சின்ன பையன். எல்லாம் யோசிச்சு யோசிச்சு… இப்ப நினைச்சா கூட… ஹ்ம்ம்” என்று தலையசைத்து பெருமூச்சு விட்டான்.
“நடுரோட்டுல நிக்கிறது சொல்வாங்களே தென்றல், நான் அப்படி உண்மையா நின்னிருக்கேன். அப்பாவை எப்படியாச்சும் வெளியே கொண்டு வரணும்னு கோர்ட், கேஸ்.. அந்த வயசுல போலீஸ், கோர்ட் எல்லாம் எனக்கு அவ்வளவு பயம் கொடுத்தது, அதைவிட அப்பா… அப்பா நல்லா இருக்கணும்னு அந்த நினைப்பு. இங்க நீதி, நேர்மை கூட விலை கொடுத்து வாங்கிடலாமே! அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நல்லவன் மாதிரி அந்த தேவராஜன் என்னை படிக்க வைக்கிறேன்னு வீட்டுக்கு வந்தான்.. அவ்வளவு கோவம். எதிரியை மன்னிக்கலாம், ஆனா துரோகியை! செத்தாலும் முடியாது!! சொல்லலாம் மறக்கலாம், மன்னிக்கலாம்.. காலம் மாத்தும்னு. காலத்தால ஆறாத காயம் இருக்கத்தானே செய்யுது, என்னோட அந்த வயசு, அதுக்கே உரிய சந்தோஷம், சிவாவோட சைல்ட்ஹூட் எல்லாம் திரும்ப வரவே வராதே… ” என்றவனின் கையை ஆறுதலாக இறுக்கமாக பற்றிக்கொண்டாள் தென்றல். தென்றலின் கரம் மீது கரம் வைத்தவன்
“இப்படி.. இப்படி அந்த நேரத்துல துணையா கை பிடிக்க கூட ஆள் இல்லை. யாரையும் எனக்குப் பிடிக்கல, நம்ப முடியல. உனக்குத் தெரியுமா? இந்த உலகத்துல வாழ ரொம்ப முக்கியம் நம்பிக்கை தென்றல்! நம்ம மேல வைக்கிற நம்பிக்கை, நம்ம அடுத்தவங்க மேல வைக்கிற நம்பிக்கை. இன்னிக்குத் தூங்கி நாளைக்கு எழுவோம்ன்ற நம்பிக்கையில வைக்கிற அலார்ம், ப்ளான்ஸ்… இப்படி இந்த வாழ்க்கை நம்பிக்கையில இயங்கிட்டு இருக்கும்போது என்னால யாரையும் நம்ப முடியல… யாரையும் நம்ப மாட்டேன் சிலர் சொல்றது வறட்டு பிடிவாதம் இல்லை, வலியினால!”
குருப்ரசாத் பேச பேச தென்றலுக்கு சொல்ல முடியாத உணர்வுகள். அப்பாவின் செயல் கொடுமையாக தாக்கியது. ஏற்கனவே குருவுக்காக பார்க்கும் நியாய மனதோடு காதல் மனமும் சேர இன்னும் கலக்கம். அது தென்றல் முகத்தில் தெரிய, குரு உடனே
“ஹே! நான் இதெல்லாம் இப்ப ஓரளவு ஓவர்கம் பண்ணிட்டேன். பல வருஷமா மனசுல வைச்சிருந்தது, யார்கிட்டவும் சொல்ல முடியல, இல்லை பிடிக்கல. அப்பாவுக்கு அப்புறம் எனக்கு தென்றல் கிட்ட மனசு விட்டு பேச பிடிச்சிருக்கு. நம்ம வெற்றியை தெரியாதவங்க கிட்ட சொல்லிடுவோம், ஆனா சில விசயங்கள் சிலர்ட்ட மட்டும் ஷேர் பண்ண முடியும்… அம்மா, சிவா மேல பாசம் நிறைய இருக்கு. பாசம் வேற இண்டிமசி வேற தென்றல். உண்மையை சொல்ற இண்டிமசி உங்கிட்ட எனக்கு இருக்கு. அப்பாவுக்கு அப்புறம் நீ எனக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்க… தேங்க்ஸ்மா. ” என்றான் மனமார.
“அப்பா வர நாளுக்காக ரொம்ப ஏங்கிட்டு இருக்கேன் தென்றல். அவர் வந்தப்புறம் நீயும் உரிமையா என்னோடவே இருப்ப.. அவர் என்னோட இருந்தா எனக்கு எல்லாமே இருக்க ஃபீல்! ஐ மிஸ் ஹிம் எ லாட். எப்போடா அவரை பார்த்து அப்பானு கட்டிப்பேன்னு இருக்கு. அவர் கூட இருந்தா எந்த பிரச்சனையும் சமாளிக்கலாம்னு தோணும்.”
குரு அப்பாவை மட்டுமே அந்த நேரத்திலும் பேசினான். தென்றலுக்கு அதில் சுணக்கமில்லை, அப்பாவிடம் உணரும் அந்த நெருக்கத்தை என்னிடம் உணர்கிறானே என்று சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷம் தன் மீது இத்தனை நம்பிக்கை வைப்பவன் அது உடையும்போது தாங்குவானா? இல்லை தான் தாங்குவோமா? என்ற எண்ணத்தை மறக்க வைத்தது!
கிட்டதட்ட ஒரு மணி வரை பேசியவன் உறக்கம் வரவும் எழுந்தான்.
“தூங்குங்க குரு, ரொம்ப டயர்டா தெரியறீங்க” தென்றல் சொல்ல
“எனக்கு உன்னோட பேசிட்டே இருக்கணும் தோணுது.” என்றவனுக்கு தென்றல் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற பேராவல், பெருங்காதல்! அவள் அருகாமையை மிக மிக அதிகமாய் விரும்பினான், தேடினான்.
“நாளைக்குப் பேசுவோம்” என்று தென்றல் சொல்ல இருவரும் உறங்க போயினர்.
அடுத்த நாள் இரவு தென்றல் ஒன்பது மணிக்கே குரு வீட்டு கதவினை தட்டினாள். படித்துக் கொண்டிருந்தவன் கதவை திறக்க தென்றல் கையில் துணிகளுடன் நின்றாள்.
“மழை பெய்யுது, உள்ளே வைங்க” என்று அவன் வீட்டு உடைகளை நீட்டினாள். குரு வாங்கி உள்ளே வைத்தவன்
“சாப்பிட்டியா?” என்று கேட்க
“இனிதான், உப்புமா செஞ்சேன்” என்றாள்.
“எனக்கும் கொடு, நான் ஒன்னும் செய்யல. பசிக்குது” என்றதும் தென்றல் சந்தோஷமாக எடுத்து வந்தாள். வாசலில் நின்றே அப்போதும் கொடுக்க
“ஏன் மேடம் உள்ள வர மாட்டீங்களா?” குரு புருவம் தூக்கி கேட்க
“சார் உள்ள கூப்பிட மாட்டீங்களோ?” தென்றலும் பதிலுக்குக் கேட்டாள்.
முன்பெல்லாம் அவன் இதை அனுமதிக்க மாட்டானே, நிச்சயத்துக்குப் பின்னும் தென்றல் உரிமையாய் வீட்டுக்குள் நுழைந்ததில்லை.
“உள்ள வா தென்றல்” குரு அவள் கைப்பிடித்து அழைத்தான். தென்றல் ஹாலில் உட்கார, குரு கிச்சன் சென்று தட்டு எடுத்து வந்தான். இருவரும் கீழே உட்கார்ந்து உண்டு முடிக்க, தென்றலுக்கு குருவுடனான தனிமை பிடித்தாலும் தயக்கமிருந்தது.
உண்டவள் “வெளியே காத்து நல்லா வருது” என்று சொல்லி தாழ்வாரத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றாள். தென்றல் காற்றாய் தொடங்கிய மழை பெருந்தூறலாக மாறி பலத்த மழையாக வலுத்தது. மின்சாரம் துண்டிக்கப்பட, காற்று புயலாக வீசியது.
“சில்லுனு இருக்கு. தென்றலுக்கு மழைன்னா பிடிக்கும்!” குதூகலத்துடன் வந்தது தென்றல் குரல்.
மண்வாசம் மிகுந்திருக்க, கடலின் காற்றும் அங்கு அதிகமிருக்க ஈரத்தை காற்றில் உணர முடிந்தது, இரவிலும் அந்த அழகை உணர முடிய குருவோ
“எனக்கு மழை விட தென்றல் பிடிக்கும்” என்றான் ரசனையுடன். தென்றலுக்குள் இப்போது பிரியமழை! அகம் புறம் எல்லா இடத்திலும் பிரியத்தின் சாரல்!
நேற்றைய இரவெல்லாம் பேசியவன் இப்போது பேசாமல் அருகே நின்றான். அரை மணி நேரம் இருளிலும் குளிரிலும் நின்றாலும் இருவருக்கும் சூழல் பிடித்தது, அருகே சூழ்ந்திருந்த துணையைப் பிடித்தது!
ஒரு கட்டத்தில் மழை பலமாக வெளுத்த வாங்க, தென்றலுக்கும் குளிரெடுக்க வீட்டினுள் போக நினைத்தாள்.
“என்னோட இரு தென்றல்” என்றான் குரு.
“குளிருது குரு” நடுக்கத்தோடு தென்றல் பேச அவள் தோள் மீது கைப்போட்டு இறுக்கி அணைத்தவன்
“இன்னிக்கு குரு சரியில்ல” அவன் அணைப்பின் இறுக்கத்தில் தென்றல் சொல்ல
“தத்தி வாத்தீனு நேத்து சொன்னது யாரு?” என்று கேட்க
“குரு!” தென்றல் அவன் நெருக்கமுணர்ந்து விலக நினைக்க, அவன் விடவே இல்லை.
இத்தனை அருகில் தென்றல், குருவின் மனதில் புயல் அடித்தது! தென்றலை தீண்டிட ஆவல் அலை மோத, தென்றல் கன்னத்தில் முத்தமாக விழுந்தது காதல்!
அந்தகாரத்தில் தென்றலின் முகம் பார்க்க முடியாவிட்டாலும் அவளை உணர்ந்தான் குரு. இருவருமே மயங்கியிருக்க, குருவுக்கு அத்தனை நாள் இல்லாமல் இளமை விழித்து இனிமை உணர சொல்ல, தென்றல் முகம் வருடியவன் இதழ் உணர்ந்து முத்தமிட்டான்.
குருவின் மனது நனைந்து இருந்தது. தென்றல், மழை, முத்தம் என குளிர்ந்து போனான். பின் அவனாகவே விலகி நிற்க, தென்றல் அவன் தோள் சாய்ந்து கொள்ள
“ஒழுங்கா உள்ள ஓடிடு! நான் பாவம்” என்று சொல்ல, தென்றலுக்கு மீண்டும் சிரிப்பு வர நேற்று போல் இல்லாது இன்று சிரிப்பை அவன் சிரிப்பாலே நிறுத்தினான். ஆனால் நிறுத்த முடியாது அது நீண்டுதான் போனது!