தென்றல் ஒன்றும் நடுங்கியபடி எல்லாம் வரவில்லை. திடமாகத்தான் இருந்தாள். வருணோ
“என்னை மாட்டி விடுறதுக்குனு கால் பண்றா, என்னமோ நான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாதிரி இவனுங்க என்னை லுக் விடுறாங்க” என்று முணுமுணுத்தான்.
மகாதேவனிடம் கைலாஷ் அழைத்தவுடனே தென்றல் சொல்லிவிட்டாள். அவரும்
“சரிடா, வா சொல்லிக்கலாம்” என்று விட்டார்.
மகாதேவன் மகன் சொன்ன விஷயத்தில் ஆடி போய் இருந்தார். தென்றல் உள்ளே நுழையவுமே
“கைலாஷ் சொல்றதெல்லாம் உண்மையா தென்றல்?” என்று கேட்க
“சித்தப்பா, நாந்தான்” என்று தென்றல் ஆரம்பிக்க
“உன் லவ் விஷயம் சொல்லிட்டேன்” என்றான் வருண். இப்போது தென்றலுக்கு சித்தப்பா ஏன் இப்படி அதிர்ந்து பார்க்கிறார் என்று புரிந்தது. தென்றல் அதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சொன்னால் எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்தாள். சித்தப்பாவின் அருகே போய் நின்றவள்,
“எந்த விஷயமும் எங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா இரண்டு பேரும்” என்று கத்தினான்.
“ஷ்! ஏன் கத்துற” என்று மகாதேவன் மகனை அதட்ட, அவன் கேட்கவில்லை.
“உங்க பொண்ணு கல்யாணத்துக்கு நம்ம கிட்ட சொல்லுவாளா, இல்லை அதுவும் மேடம் இஷ்டமா?” என்று தென்றலை முறைத்தான்.
“கைலாஷ்’ணா, சொல்லக் கூடாதுனு இல்லை. உங்ககிட்ட சொல்லாம எப்படி இருப்பேன்” என்று தென்றல் கேட்க
“ஓஹ், அப்போ இவ்வளவும் சொல்லிட்டு செஞ்சியா?” என்று சோஃபாவை இழுத்துப் போட்டு தங்கை அருகே உட்கார்ந்தான்.
“தென்றல்! இதெல்லாம் சரி வராது”
மகாதேவனுக்கு மனது கேட்கவே இல்லை. தென்றல் அமைதியாக எல்லாரும் பேசுவதைக் கேட்டாள்.
“சித்தப்பா! ஏன் குருவை வேண்டாம் சொல்றீங்க? அவர்கிட்ட நீங்க எதிர்ப்பார்க்கிற ஸ்டேட்டஸ், வசதி இல்லைன்னா?” என்று அவரிடம் கேட்டாள்.
“என்ன பேசுற நீ? நான் அதெல்லாம் பார்க்கிறவனா? முதல்ல நீ யார் பொண்ணுன்னு சொல்லிட்டியா அந்த பையன் கிட்ட?” என்று மகாதேவன் முறைத்தபடி கேட்க
“வாவ்! அப்படி கேளுங்க மாமா” என்று வருண் ஒரு ஆர்வத்தில் பேச, மற்ற மூவரும் அவனை முறைத்தனர்.
“அவருக்கு நான் யார்னு தெரியாது சித்தப்பா, இன்னும் நான் சொல்லல” என்றதும் மகாதேவனுக்கு தென்றல் செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை.
“நீ யார்னு சொல்லாம அவனை விரும்புறியா? அப்போ கைலாஷ் சொல்ற மாதிரி எங்களை எல்லாம் உதறிட்டு பொய்யோடவே அவனோட வாழ முடிவு பண்ணிட்டியா?” என்று மகாதேவன் சூடாகக் கேட்க, தென்றலின் கண்கள் கலங்கின.
“அப்படியெல்லாம் நான் செய்ய மாட்டேன்” தென்றல் ரோஷமாக சொல்ல
“இப்படியெல்லாம் கூட செய்வன்னு நான் நினைக்கவே இல்லை. இங்கயே இருந்துட்டு எத்தனை எத்தனை பொய்?? எல்லாத்துக்கும் நீங்கதான்பா காரணம். அந்த ஃபேமிலிக்கு இவ போய் செய்யணும்னு என்ன? நீங்களே செய்ய வேண்டியதுதானே? நீங்க இவளை அனுப்பியிருக்கவே கூடாது” என்றான் கைலாஷ் அழுத்தமான குரலில்.
இப்போது மகாதேவனுக்கே அப்படியொரு எண்ணம் வந்தது. தென்றலுக்கும் உடனே கோபம் வர,
“என்ன அனுப்பியிருக்கக் கூடாது? நம்ம ஹெல்ப் பண்ணினா வாங்கிக்கிற ஆளா அவங்களாம்? உனக்கு குரு பத்தி என்ன தெரியும்ணா?”
“எனக்கு ஏன் அவனை பத்தி தெரியணும்?” கைலாஷ் கடுப்பாகக் கேட்டான். தங்கை முட்டாளாக இருப்பதில் விளைந்த ஆத்திரம், தன் தந்தையை வெறுக்கும் ஒருத்தனிடம் காதல், அதுவும் அவனுக்கு இவள் பற்றி ஒன்றுமே தெரியாதாம்.
“உனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம்தான், ஏன்னா தப்பு செஞ்சது என் அப்பாதானே?” என்று தென்றல் அழுகையும் கோபமும் கலந்த குரலில் ஆற்றாமையுடன் பேச
“என்ன தென்றல் இப்படி பேசுற?” என்று அதுவரை அவர்கள் பேசட்டும் என்று அமைதியாக இருந்த ஷ்ரவன் பேசினான்.
“மாமா! ப்ளீஸ் இதை மத்தவங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு எனக்கு அறிவு இருக்கா தெரியல. என்னால என் அப்பா செஞ்சதை ஏத்துக்க முடியல, ஒருத்தங்க கஷ்டத்துக்கு நம்ம காரணம் தெரிஞ்ச பின்னாடி சிரிச்சிட்டு இயல்பா எப்படி வாழ முடியும்? அப்பா நல்லா இருந்தவரைக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணியிருக்கார், அதை உதவினு சொல்லவே கூடாது முதல்ல! அதுக்கு என்ன பெயர்னு கூட எனக்கு தெரியல. அப்படி இருக்கப்ப நான் தேவராஜன் பொண்ணுன்னு சொன்னா என் முகத்துல கூட முழிக்க மாட்டாங்க.” என்ற தென்றலின் பேச்சை அமைதியாக கேட்ட ஷ்ரவன்
“நீ சொல்றதெல்லாம் சரி தென்றல். உன்னை நீ புரியவைக்கணும் அவசியமில்லை. உன் அப்பாவுக்காக செஞ்ச ஒகே. அதை பத்தி பேச வேண்டாம். இப்ப இந்த லவ் விஷயம் மட்டும் பேசுவோம்” என்றான். கைலாஷ் ஏதோ பேச வர அவனை கை நீட்டி தடுத்தான் ஷ்ரவன்.
“மாமாவுக்குத் தெரியாம அவர் அனுப்பல. தென்றலும் சின்ன பொண்ணு இல்லை கைலாஷ், இது தென்றல் அவ மனசுக்காக செஞ்சது. செய்றது கடமையும் கூட! ஏன் நானா இருந்தாலும் கண்டிப்பா செய்வேன். ஆனா இந்த லவ்?” என்று தென்றலை பார்க்க
“குரு இஸ் எ ஜெண்டில்மேன் மாமா! நீங்களே அவரை பத்தி விசாரிங்க” என்றதும் ஷ்ரவன் சிரித்தான்.
“உனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்குனு சொல்லிட்டா உன் சித்தப்பாவுல ஆரம்பிச்சு வீட்ல இருக்கே சில்வண்டு ஹர்ஷா வரைக்கும் டாப் டூ பாட்டம் டேட்டா கலெக்ட் பண்ணிடுவாங்க தென்றல். என்னையெல்லாம் சுகனுக்குப் பார்க்கணும் டிசைட் பண்ண அப்புறம் ஒரு வருஷம் ஆள் வைச்சு ஃபாலோ பண்ணினாங்க.” என்றதும் வருணும் சிரித்தான்.
“இப்போ அது விஷயமே இல்லை. நீ அந்த பையன்.. குரு கிட்ட உன்னை பத்தி சொல்லாம இருக்கிறது தப்பில்லையா? நீ சொன்ன அப்புறமும் உங்க காதல் அப்படியே இருக்குமா?” என்று நடக்கவிருப்பதை மட்டுமே ஷ்ரவன் பேசினான்.
அந்த கேள்விக்கான பதில் தென்றலை எப்போதும் பதைப்புடனே வைக்கும். எதிர்ப்பார்ப்பும் நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் மட்டும் இப்போதைக்கு அவளிடம். தென்றல் அமைதியாக இருக்க
“நல்லா கேளு ஷ்ரவன், இவளே எங்கிட்ட அந்த பையனைப் பத்தி அவ்வளவு சொல்லியிருக்கா. இவ மட்டும் அப்பா பெயரை சொன்னா அவ்வளவுதான்! வேண்டாம் தென்றல்! குரு உண்மை தெரிஞ்சா உன்னை ஏத்துக்கமாட்டான் டா தென்றல். நீ கஷ்டப்படுறதை எங்களால பார்க்க முடியாது. எல்லாம் போதும், வந்திருடா” என்று தென்றல் கை பிடித்து மகாதேவன் கெஞ்சலாகக் கேட்டார். சித்தப்பா பேசிய விதத்தில் தென்றலுக்கும் கண்ணீர்.
“நானும் எத்தனையோ தடவ சொல்லிட்டேன், குரு கிட்ட உண்மையை சொல்லு. இதெல்லாம் செட் ஆகாதுனு” என்று வருணும் பேச
“எல்லாம் உன்னை சொல்லணும்” என்று கைலாஷ் வருணை திட்டினான்.
தென்றல் அழுதாலும் கூட அவளிடம் தயக்கம் இருப்பது போல் தெரியவில்லை. மிகவும் வசதியாக வாழ்ந்த பெண், அப்பாவிற்காக ஒரு சாதாரண வீட்டில் தங்கியிருக்கிறாள். ஐஐஎம்’மில் படித்தவள் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள் என்றெல்லாம் வருண் சொல்லி கேட்டதிலிருந்து கைலாஷுக்கு மனம் ஆறவில்லை. ஷ்ரவனும் அதையே நினைத்தான், ஆனால் அதிலெல்லாம் தென்றலின் மனவுறுதியே தெரிந்தது. இந்த காதலிலும் அவள் உறுதி அப்படித்தானோ என்று ஷ்ரவன் சரியாகக் கணித்தான்.