காய்ச்சல் கண்டவனை கருணாகரன் அழைக்க, குரு ஓய்ந்து போயிருந்தாலும் கதவினை திறக்கவில்லை. அவனுக்கு தென்றலை பார்க்க விருப்பமில்லை, அதையே மீண்டும் மீண்டும் சொல்ல, தென்றலுக்கு அவனை எப்படி சமாதானம் செய்ய என்று தெரியவில்லை. அந்த நேரம் அவன் உடல் நிலை முக்கியமாகப் பட, அவன் விரும்பியபடி போய்விட்டாள். கருணாகரன் நடப்பது புரியாமல் நின்றான், தென்றல் அழுகையுடன் கிளம்பிப் போய்விட, அதன்பின்னே குரு வெளியே வந்தான்.
குரு ‘போ’ என்றதும் அந்த காலை வேளையிலே தென்றல் வீடு வந்துவிட்டாள். கண்களும் கன்னமும் சிவந்து, உடைந்து போய் இருந்த தென்றலை வீட்டினர் அதிர்ச்சியோடு பார்த்தனர். கைலாஷ் வாக்கிங் செல்ல கிளம்பியவன் தங்கை முகம் பார்த்து அருகே போக,
“குரு..குரு என்னை போக சொல்லிட்டார்’ணா” என்று குரலடைக்க சொன்னவள்
“ஏன் தென்றல்? தீடீர்னு?” கைலாஷுக்கு தங்கையின் வாடிய முகம் பொறுக்கவில்லை.
“ஏன்? ஏன்னா நான் தேவராஜன் பொண்ணு!” என்று பெருமூச்சுடன் சொன்னவள்
“என்னை தனியா விடுங்க! ப்ளீஸ்” என்று சொல்லி வேறு யாரையும் பார்க்காமல் அவள் அறைக்குள் போய்விட்டாள்.
ராதாவும் மஹிமாவும் கைலாஷிடம், “என்னடா சொல்றா இவ? காலேஜ்ல இருக்க வேண்டியவ இப்படி அழுதுட்டு வந்து நிக்கிறா?” ” என்று மகனை கேட்க, கைலாஷ் எல்லாமே சொல்லிவிட்டான்.
“இவ ஏன் இதெல்லாம் செய்யணும்?” என்று மஹிமா சத்தம் போட, கிருஷ்ணகுமார் அண்ணனை சத்தம் போட்டார்.
“சின்ன பொண்ணுன்னா அவ, அவளை ஏன் அனுப்பினீங்க? யார் அவன் என் பொண்ணை அழ வைக்கிறவன்?” என்று கோபமாகக் கேட்க
“சித்தப்பா! அப்பா எவ்வளவு சொல்லியும் தென்றல் கேட்கல, அதை விடுங்க. இப்ப அவ அப்செட்டா இருப்பா. நீங்க யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றான். அன்று யாரும் எந்த வேலைக்கும் போகவில்லை. தென்றல் எப்போது கதவை திறப்பாள் என்று காத்திருக்க, காலையில் போனவள் இரவு போல வெளியே வந்தாள். குளித்து முடித்து வந்தவள் எல்லாரும் அவளை பார்ப்பது உணர்ந்து,
“சாரி, பொய் சொன்னது தப்பு! செஞ்ச விஷயம் தப்பில்லைனு நினைக்கிறேன். அண்ட் குரு, என் லவ்.. அது நான் தெரியாம செய்யல ! இப்படி நடக்கும் தெரியும், கஷ்டமா இருக்கு! பட் எனக்கு நம்பிக்கை இருக்கு!”
“குருவை காதலிச்சது தப்புன்னா அந்த தப்பை எத்தனைவாட்டி வேணும்னாலும் செய்வேன் சித்தப்பா! நீங்க ப்ர்ஸ்ட் என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க, அப்புறம் குருவை நான் கன்வீன்ஸ் பண்ணிக்கிறேன்” என்று அழுத்தி சொன்னவள் பசியெடுக்க சாப்பாடு எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். தென்றல் அப்படி பேச, மகாதேவன் மற்றவர்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டார்.
இரவு கருணாகரனுக்கு அழைத்து குருவின் நலம் கேட்க, “அவன் நல்லாயிருக்கான்மா, டாக்டர் ட்ரிப்ஸ் போட்டாங்க. இப்போ ஒகே!” என்ற கருணா
“என்ன இருந்தாலும் நீ உண்மையை சொல்லியிருக்கணும்” என்றிட
“உங்க பாசம் கூட உண்மை சொன்னாதான் கிடைக்குமாண்ணா? எனக்கு புரியல, தென்றல் உங்களுக்கு உண்மையாத்தான் இருந்தா. அவளோட பேக்ரவுண்ட் தெரியாததால் அவளே பொய்னு கிடையாது” என்ற தென்றல்
“அவரை பார்த்துக்கோங்க” என்று வைத்துவிட்டாள்.
மருத்துவமனை சென்று வந்த பின், கருணாகரன் கேட்டதற்கு குரு எல்லாம் சொல்லிவிட்டான். கருணாகரனுக்கு அதிர்ச்சி, அவனுக்கு முன்பே ஏன் இந்த பெண்ணுக்கு இவர்கள் குடும்பத்தின் மீது அதிகப்படி அக்கறை என்ற கேள்வி இருந்ததுதானே?
அவனால் நண்பனை புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தென்றல் பற்றி பேசவே இல்லை. அன்றே சிவா வந்துவிட்டான், அடுத்த நாள் லாவண்யாவும் கீதாவும் வந்தனர். கருணாகரனே எல்லாம் சொல்ல, வீட்டினருக்கு அதிர்ச்சி, கீதாவுக்கும் வருத்தம்! தென்றல் மீது அதிருப்தி, தேவராஜன் மகள் என்பது அவருக்கும் பிடித்தமில்லை.
குருவுக்கு உடலும் மனதும் சரியில்லை, அதனால் விடுமுறையில் இருந்தான். ஓய்வில் இருந்தாலும் ஓயாத யோசனைகள்! தென்றல் ஆழியாக அவனை சூழ்ந்திருந்தாள்.
தென்றலோடு தொடர்புடையை எதையும் குரு விரும்பவில்லை. வேலையும் சேர்த்தே! கருணாகரனிடம் இதனை சொல்ல, அவன்
“கோவத்துல எடுக்கிற முடிவு சரி கிடையாது” என்றான்.
குருப்ரசாத்திற்கு யோசிக்க முடியவில்லை என்பதை விட பிடிக்கவில்லை. தென்றலின் நினைவின்றி, எத்தனை தூரம் செல்ல முடியுமோ அதை செய்ய நினைத்தவன், உடல் தேறியதும் கல்லூரி முதல்வர் ராஜசேகரிடம் சென்றான். வேலையை விட போகிறேன் என்று சொல்ல,
“வாட் இஸ் திஸ் குரு, இன்னும் ஒன் இயர் கூட ஆகல. அதுக்குள்ள ஏன் ரிசைன் பண்ற? இங்கதான் பி.எச்.டி பண்ற. மறந்திட்டியா நீ?” என்று அதட்டினார்.
“அதையும் விட்டுடுறேன் சர்” என்றவனை முறைத்தார். எத்தனை கனவோடு இங்கு வந்தவன், ஏன் இப்படி செய்கிறான் என்ற அதிருப்தியுடன் அவனை விசாரித்தார். அன்று தென்றல் பற்றி கேட்டதும் தானே அவன் பதில் பேசாமல் சென்றது, அதையெல்லாம் யோசித்து குருவிடம் காரணம் கேட்டார். குரு முதலில் அமைதியாக இருந்தவன், அவர் மிகவும் வற்புறுத்திக் கேட்கவும் எல்லாம் சொல்லிவிட்டான்.
ராஜசேகருக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. அவருக்குத் தென்றலையும் குறை சொல்ல முடியவில்லை, குருவின் நிலையும் புரிந்தது.
“தென்றல் நல்ல பொண்ணு குரு. இது உன்னோட கைடா சொல்லல, ஒரு வெல் விஷரா, உன் அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன்” என்றதும்
“இந்த காரணத்துக்காகத்தான் சர் நான் ரிசைன் பண்றேன். என்னோட மனசு, அதோட ஃபிலிங்க்ஸ் எல்லாம் யாருக்கும் புரியாது. தேவையில்லை! பட் எனக்கு வேண்டாதவங்க சம்மந்தப்பட்ட இடத்துல நான் இருக்க விரும்பல” என்றான் உறுதியாக.
“இந்த ஜாப் விடுறது முட்டாள்த்தனம் குரு!”
“இட்ஸ் ஒகே ஸர்” என்றான் அதற்கும்.
ராஜசேகர் சலிப்பாக குருவைப் பார்த்தார். “ஓகே! நான் பார்த்து சொல்றேன், அடுத்த ஸ்டாஃப் வரவரைக்கும் கண்டினியு பண்ணு குரு” என்றார்.
மகாதேவன் சொல்லித்தானே குரு வேலைக்கு சேர்ந்தது, அதனால் ராஜசேகர் அவன் வேலையை விடப்போகிறேன் என்றதுமே மகாதேவனிடம் சொல்ல,
“ராஜா ப்ளீஸ்! நீங்க அந்த பையனுக்கு வேற ஜாப் ரெஃபர் பண்றேன் சொல்லுங்க. நான் ஷ்ரவ்ன் கிட்ட பேசி வேகன்சி இருக்க மாதிரி பண்றேன்.” என்றார்.
“குரு நல்ல பையன் தேவன்! நீங்க சொல்லலனாலும் நானே இதை செய்றதா இருந்தேன்.” என்றார். மகாதேவன் தலையசைத்தார்.
“எனக்கு எல்லாம் தெரியும். தென்றலை பத்தி அன்னிக்கு குரு கிட்ட கேட்டதே நாந்தான்” என்றதும் மகாதேவன் அதிர்ந்து பார்க்க, மகாதேவனிடம் ராஜசேகர் எல்லாவற்றையும் சொன்னார்.
“இந்த விஷயம் எதுவும் தெரியாது தேவன், தெரிஞ்சிருந்தா நான் கேட்டிருக்க மாட்டேன். ஐ அம் ரியலி சாரி!” என்றார்.
“என்ன நீங்க? நீங்க ஏன் சாரி கேட்கிறீங்க? விடுங்க. தென்றலுக்கு அந்த பையனை பிடிக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை” என்றதும்
“குரு நல்ல பையன் தேவன், ஷ்ரவன் அளவு அவனை தெரியாதுனாலும் குரு நிச்சயம் நல்ல சாய்ஸ்” என்றார் ராஜசேகர்.
“எனக்கும் தெரியும் ராஜா, பட் அந்த பையனுக்கு இப்போ விருப்பமில்லையே. பார்ப்போம்!” என்றுவிட்டார்.
பத்து நாட்கள் வேண்டாவெறுப்பாக வேலைக்குப் போனான் குரு. ஒரு நாள் ராஜசேகர் அவனை அழைத்தவர்,
“நான் உன்னை வேற காலேஜ்ல ரெஃபர் பண்றேன் குரு. இந்தளவு ‘பே’ இல்லைனாலும் இட் இஸ் எ குட் ஒன்! அப்புறம் பி.எச்.டி கண்டினியு பண்ணு. யார் ரெகமெண்டேஷனும் இல்லாம நீ இன்னும் பெரிய இடம் போகலாம். நாந்தானே உன் கைட், என் மேல என்ன கோவம்?” என்று கேட்டார் ராஜசேகர்.
“இங்க இருந்து NOC வாங்கணும், இன்னொரு யுனிவர்சிட்டில ட்ரான்ஸ்ஃபர் பெர்மிஷன் வாங்கணும்? இதெல்லாம் தேவையா? ஒழுங்கா எனக்குக் கீழ பி.எச்.டி முடிக்கிற வழியைப் பாரு” என்று அதட்டலாக சொன்னார்.
பி.எச்.டி என்பது சொந்த முயற்சி தானே? மனதை தேற்றி ஒத்துக்கொண்டான். அதைவிட அனுபவமும் ஆற்றலும் நிறைந்த நல்ல ‘கைட்’ கிடைப்பது வரம்! ராஜசேகர் அப்படியான மனிதர்! ராஜசேகர் ரெஃபர் செய்யவும் ஒத்துக்கொண்டான். குருவுக்கு பழைய கல்லூரிக்கும் செல்ல விருப்பமில்லை, இங்கிருந்து போவதென்றால் உரிய காரணங்கள் வேண்டும். மனமிருக்கும் நிலையில் வேலை தேட வேகமும் இல்லை. ராஜசேகர் சொன்ன கல்லூரியில் சேர சிக்கல் இருந்தது. ஷ்ரவனின் அப்பா கல்லூரி அது!
இப்போது மொத்தமாக தேவராஜனின் தொழில், மகாதேவன், கிருஷ்ணகுமார் என்று எல்லாரையும் தெரிந்து வைத்திருந்தான்.
அது தெரிந்து, “மகாதேவன் ஸர் சம்மந்தப்பட்ட எந்த இடத்துலையும் எனக்கு ஜாப் வேண்டாம் ஸர்” என்று மறுத்தான் குரு.
“தாமோதரன் மகாதேவனுக்கு முன்னாடி எனக்கு ப்ரண்ட். அவனும் நானும் ஒன்னா படிச்சவங்க, சொல்லப்போனா என்னாலதான் அவங்க பழக்கமே! உன்னோட பழைய காலேஜ் ஓனர் கூட மகாதேவன் ப்ரண்ட், சென்னையில இருக்க முக்கால்வாசி காலேஜ் ஓனர்ஸ் மகாதேவனுக்குத் தெரிஞ்சவங்க. நீ என்னால அங்க போற, மகாதேவன் சார்னால இல்லை! அதுக்கு மேல உன்னிஷ்டம்!” என்றுவிட்டார்.
யோசித்து பார்த்த குருவுக்கும் அவர் சொல்வது நியாயமாக இருந்தது. அதைவிட அப்பா இன்னும் சில நாட்களில் வரப்போகிறார், வேலை வேண்டும்! செய்யும் வேலைக்குத்தானே ஊதியம் என்று மனதை தேற்றிக்கொண்டான்.
குரு அதற்கு சம்மதம் சொல்ல, அன்று குருவுக்கு கல்லூரியில் கடைசி நாள்! நிச்சயம் இவ்வளவு சீக்கிரம் ஒரு பிரிவு வருமென அவன் எதிர்ப்பார்க்கவில்லை. மாணவர்களிடம் நல்ல முறையில் விடைப்பெற்றவன், சக ஆசிரியர்களிடமும் பேசிவிட்டு ராஜசேகரைப் பார்க்க போனான்.
“ஆல் தி பெஸ்ட் குரு! உன்னை விட ஸ்டிரிக்ட் டீச்சர் நான்! கரெக்டா தீசஸ் சப்மிட் பண்ணனும், ரிவியுக்கு வரணும்” என்று கட்டளையிட,
“கண்டிப்பா சர், நீங்க எனக்கு ‘கைடா’ இருக்கிறது என்னோட அதிர்ஷ்டம்! இட்ஸ் எ ஹானர்!” என்றான்.
“உன்னோட அறிவுக்கு என்னோட சின்ன உதவி, ஐ அம் டூ ப்ரவுட் ஆஃப் யூ!” என்றவர் அவனை புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார், அறைக்கு வெளியே வர தென்றல் காத்திருந்தாள். காயப்படுவோம் என்று தெரிந்தே வந்தாள்.
குரு முகமே தென்றலை பார்த்த கணம் கோபத்தை அப்பட்டமாக காட்டியது.
“உன்னை பார்க்கவே விருப்பமில்லாம தானே நான் போறேன், ஏன் நீ என் உயிரை வாங்குற?” என்று பல்லை கடித்து பேச
“நான் செஞ்சது பிடிக்கலனாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமில்லையா? ஒருவேளை நான் தேவராஜன் பொண்ணுன்னு உண்மை சொல்லி, உங்களை விரும்பியிருந்தா என்னை அக்செப்ட் பண்ணியிருப்பீங்களா? அதுக்கு பதில் சொல்லுங்க குரு!” என்று தென்றல் கேட்டாள்.
“உனக்கு பதில் சொல்ற பொறுமை எங்கிட்ட இல்லை, என்னை கேள்வி கேட்கிற உரிமையும் உனக்கில்லை! இன்னிக்கு நான் உலகத்துல வெறுக்கிற ஆள் யார்னா அது நீதான்! நீ மட்டும்தான்!!! தேவராஜனை விட தேவராஜனை பொண்ணை நான் அதிகமா வெறுக்கிறேன்!” என்று முகத்திற்கு நேரே குருப்ர்சாத் சொல்ல, தென்றலிடம் பேச்சில்லை. வெறுக்கிறானா? என்ற வார்த்தையில் அவள் அசைவு நின்றது.
தென்றல் நிற்க, குரு அவளை கடந்து சென்றான். கூடவே அவன் காதலும் கடந்து போனது!
இப்படி ஒரு பிரிவினை நிச்சயம் தென்றல் எதிர்ப்பார்க்கவே இல்லை.
ஏன் இந்த பிரிவுகள் இத்தனை கொடுமையானதாக இருக்கின்றன, புன்சிரிப்போடு கைகுலுக்கலோடு ஒரு அடிப்படை அன்போடு ஏன் விடைபெறவே முடிவதில்லை.?? விடைபெறுதல் என்பது கண்ணீராலே எழுதபடுகின்ற கவிதையாகவே இருக்கிறது!
‘காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம்!! ‘