குருவின் மனது தென்றலை விட அதிகமாய் நொறுங்கியிருந்தது. அதை யாரிடமும் காட்ட முடியாத காரணம் வேறு அவனை போட்டு படுத்த, தென்றலை பார்த்ததும் அவளிடம் ஆத்திரத்தைக் கொட்டினான். இருந்தும் மனது ஆறவில்லை, வீடு சென்ற போது இன்னும் இன்னும் தென்றலின் நினைவு வர, அதான் தாக்கம் தாங்க முடியவில்லை.
தென்றலை ‘போ’ என்றவனால் தென்றலின் நினைவுகளை சட்டென்று உதற முடியவில்லை. அந்த தாழ்வாரம், நிலைப்படி, படிக்கட்டு என்று பார்க்குமிடமெல்லாம் அவள் நிறைந்திருந்தாள். மனிதர்களை மறக்க முடிந்தாலும், அவர்களின் நினைவுகளை மறக்க முடிவதில்லை!
சக மனிதனுக்கு நாம் தருவது நினைவுகளை மட்டும்தானே!! மனிதன் என்பவனே நினைவுகளின் உருவம்தானோ? பொருளை தூக்கியெறியலாம், ஒருவர் கொடுத்து சென்ற உணர்வினை, நினைவினை எப்படி எறிய முடியும்??
எரித்தது காதல் நினைவுகள்!! அதுவும் அவர்கள் மட்டும் இருந்த அந்த நாட்கள், அதை நினைக்க நினைக்க குருப்ரசாத்திற்கு தென்றலை மன்னிக்க முடியவில்லை. எத்தனை நம்பினான்! ஒரு நொடியெனும் உண்மை சொல்லியிருக்க கூடாதா? என்று எண்ணம் வந்த நொடி, சொல்லியிருந்தாலும் தேவராஜன் மகளை நிச்சயம் தன்னால் ஏற்கவே முடியாது என்று திண்ணமாக நினைத்தான். தென்றல் கேட்டது போல், அவள் உண்மையை சொல்லி காதல் சொல்லியிருந்தால், அப்போதும் அதே முடிவே!! தென்றல் தன்னை பாதிப்பது அவ்வளவு வேதனை கொடுத்தது.
தென்றலை மருமகளாக்கிக் கொள்ளலாம் என்ற அம்மா கூட தேவராஜன் மகள் என்றதும் அந்த பேச்சை விட்டார். சிவா, லாவண்யா எல்லாம் தென்றல் பற்றி பேசவில்லை.
தூரம் சென்றாலும் ஈரம் காயா தென்றலுடனான நினைவுகள் குருவை உறங்கவிடவில்லை. அந்த கோபம் கூட தென்றல் மீதே வந்தது. என் நிம்மதி பறித்தாளே என்ற எரிச்சல்.
இந்த வாசலில் நின்று அவளை அணைத்து நின்றது சட்டென்று தோன்ற, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். கண்ணீருடன் அவள் நினைவையும் சேர்த்து கரைக்க முயன்றான்.
‘நீ என்னை ஏமாத்திட்ட தென்றல்!’
இந்த உணர்வினை மட்டும் அவனால் கடக்க முடியவில்லை. அப்பாவிற்கு அடுத்து மொத்தமாக தன்னை அவளிடம் வெளிக்காட்டியிருக்க, என் காதலை ஏன் உடைத்தாள்?? அதைவிட நம்பிக்கையை ஏன் நொறுக்கினாள்?? என்று அவளை உலுக்க தோன்றினாலும் அவளை பார்க்கவே பிடிக்கவில்லை.
‘இன்றைய துக்கத்தின் மிகக் கசப்பான பகுதி நேற்றையை மகிழ்ச்சியின் ஞாபகம்தான்! என்ற ‘கலில் ஜிப்ரான்’ கவிதைக்கு அப்படியே பொருந்தினார்கள் குருவும் தென்றலும்!!
நேற்றையை ஞாபகங்கள்தான் இன்றைய வலியை இன்னும் அதிகப்படுத்தின, வெறுப்பதும் எளிது, விரும்புவதும் எளிது! ஆனால் விரும்புவரை வெறுப்பதும் வெறுப்பவரை விரும்புவதும் கொடிதல்லவா???
குரு முதல் ரகம் என்றால், தென்றல் இரண்டாம் ரகம்.!!
தென்றலால் குரு தகித்திருக்க, தென்றல் குருவினால் தவித்திருந்தாள். குரு பேசிவிட்டு சென்றதும் நின்றவளை மகாதேவனின் அழைப்பு கலைத்தது. அலுவலகத்திலிருந்து இவளுக்கு போனில் அழைக்க, “வரேன் சித்தப்பா” என்றவள் அவரிடம் போனாள். அவரை பார்க்க, அவரின் பார்வையோ
“ஷ்ரவன் காலேஜ்லதான் குருவுக்கு வேலை” என்றார். தென்றல் கேட்காமலே செய்திருந்தார், தன் அண்ணனுக்காக செய்தார். தென்றல் அமைதியாக இருக்க, பக்கத்தில் வந்து நின்று
“உன்னை பேசிட்டானா?” என்று கேட்க சட்டென்று கண்மூடியவள் அப்படியே அவரின் இடையைக் கட்டிக்கொண்டு அழுதாள். மகாதேவனுக்கும் மகளின் நிலை கண்டு வலித்தது. அவள் அம்மா இறந்த போது ‘சித்தப்பா!’ என்று இதே போல் அழுதது நினைவில் வந்தது.
“விடு தென்றல், இப்படி அழக் கூடாதுன்னுதானே அத்தனைவாட்டி உன்னை கூப்பிட்டேன். அந்த பையனை நம்ம என்ன சொல்ல முடியும்? பொறுமையா இருடா! இப்படி உடைஞ்சு அழாத!” என்று ஆறுதல் சொல்ல,
“என்னை வெறுக்கிறேன் சொல்லிட்டார் சித்தப்பா!” என்றாள் கண்கள் கலங்க.
“ஏதோ கோவத்துல சொல்லியிருப்பான் விடு. கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சா உன்னை புரிஞ்சிப்பான்மா” என்று அப்போதும் அவளை தேற்றினார்.
தென்றலும் கோபத்தில் பேசியிருப்பான் என்று தன்னை தேற்றினாள். அதன்பின் குருவிடம் பேச நினைக்கவில்லை. மகாதேவன் சொன்னது போல் அவனுக்கு அதிர்ச்சிதானே? கொஞ்சம் நிதானமாக யோசித்தால், என்னை நேசித்தால் புரிந்து கொள்வான் என்று நம்பினாள். தென்றலுக்கும் பேசும் சூழல் இல்லை.
அடுத்த சில நாட்களில் தேவராஜன் மறைந்துவிட்டார். தென்றலின் மனமெல்லாம் அப்பாவின் நினைவுகளில் தேங்கிப்போனது. அவர் மரணம் வெகுவாய்ப் பாதிக்க, வீட்டினர் அவளுக்கு ஆறுதலாக இருந்தனர். குருப்ர்சாத்திற்கும் விஷயம் தெரிந்தது, பத்திரிக்கைகளில் எல்லாம் ‘இரங்கல் செய்தி’ வந்திருந்தது. இருந்தும் வருத்தமோ சந்தோசமோ எந்த உணர்வுமில்லை, யாரோ என்பது போல் கடந்துவிட்டான்.
************
ஆறு மாதங்கள் ஓடிவிட்டன, நிறைய மாற்றங்கள்! குரு ஷ்ரவனின் கல்லூரியில் வேலையில் இருந்தான். சிவா சென்னையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான். லாவண்யா நீட் தேர்வுக்காக கோச்சிங் க்ளாஸ் போகிறாள். குருவின் குடும்பம் திருவான்மியூர் பக்கத்தில் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்டில் வாடகைக்குப் போய்விட்டனர். முன்பை விட வாழ்க்கை தரம் உயர்ந்து இருந்தது. அப்பா வரும் முன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற குருவின் ஆவல் நிறைவேறியிருந்தது, அதை விட அப்பாவின் வருகை. அது இன்னும் நிம்மதி கொடுத்தது.
மகேந்திரன் அன்று விடுதலையானார். குரு, கீதாஞ்சலி, சிவா ஏன் லாவண்யா கூட பெரியப்பாவின் வருகையை ஆவலாக எதிர்ப்பார்த்தாள். மகேந்திரன் அவராகவே வருவதாக சொல்ல, கருணாகரனை குரு அனுப்பியிருந்தான். ஆட்டோவில் வந்திறங்கியவர் முதலாம் தளத்தில் இருக்கும் அவர்கள் வீடு வர, பதினான்கு நீண்ட வருடங்கள் கழித்து மொத்த குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கண்டார் மகேந்திரன்.
மகன்கள் இருவரும் இளைஞர்களாக வளர்ந்து நின்றனர். பிள்ளைகள் சிறைக்கு வருவதை அவர் விரும்பதியதில்லை, சிவா சில முறை மட்டுமே அப்பாவை பார்க்க போயிருக்கிறான். கண்கள் கலங்கினாலும் முகத்தில் புன்னகை இருந்தது. சிவா அப்பாவைக் கட்டிக்கொண்டான். மகேந்திரனும் அவனை இறுக்கமாக அணைத்தார், எட்டு வயதில் அவனை பிரிந்தது. குருப்ர்சாத் அப்பாவை அடிக்கடி பார்ப்பவன் என்பதால் தம்பிக்கான நேரம் தந்து தள்ளி நின்றான். அப்பாவை வீட்டில் பார்க்க, ஒரு புதிய உணர்வு. கண்கள் கலங்க நின்றான், அம்மாவை பார்க்க அவரும் கணவரை இமைக்காமல் பார்த்திருந்தார்.
மகேந்திரன் நன்றாகவே இருந்தார். நரைமுடி தவிர பெரிய மாற்றங்கள் இல்லை, குருவின் பெரிய அண்ணன் போல் தோற்றம்! கணவர் வெகு நேரம் நிற்பதால்,
“சிவா, அப்பா முதல்ல குளிச்சிட்டு சாப்பிடட்டும். அப்புறம் பேசலாம்” என்றார். சிவாவும் கண்களைத் துடைத்துக் கொண்டு தள்ளி நிற்க,
“பெரியப்பா” என்று புன்னகையோடு அவரருகே சென்றாள் லாவண்யா. அன்று மூவருமே விடுமுறை எடுத்திருந்தனர்.
“அம்முக்குட்டி!” என்று அவளின் கன்னம் தட்டியவருக்குப் பிள்ளைகளை பார்க்க பார்க்க, ஏக்கம் வந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டார். இவர்களை அருகே இருந்து வளர்க்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. கணவரை கீதாஞ்சலி அறைக்கு அழைத்து செல்ல, கதவை சாற்றிய மகேந்திரன்.
“அஞ்சலி!” என்றதுதான் போதும். அவரை கட்டிக்கொண்டு பெரும் அழுகை!
மகேந்திரன் கண்கலங்கிய போதும், தன்னை தேற்றியவர், “அதான் வந்துட்டேன்ல, அழாத ப்ளீஸ்!” என்றார். அன்று உணர்வு போராட்டமான ஒரு நாள்.
ஒருவாரம் வேகமாக ஓடிவிட்டது. இழந்த நாட்கள் வராது என்ற தெளிவு மகேந்திரனிடம் இருந்தது, சிறையில் இருந்த போதே இதையெல்லாம் யோசித்து இருந்தாலும் வீட்டினர் அடிக்கடி வருந்த, அவர் தனது இயல்பான நடவடிக்கையால் அதையெல்லாம் கடந்தார், அவர்களையும் கடக்க வைத்தார்.
சிவா அண்ணனிடம் கேட்டு அம்மாவையும் அப்பாவையும் ‘கூர்க்’ செல்ல டூர் ஏற்பாடு செய்தான்.
“நாங்க அவளை பார்த்துப்போம்மா, நீங்க போய்ட்டு வாங்க.” என்றான். எல்லாரையும் விட கணவரின் பிரிவு அவரை அதிகம் பாதித்ததை மகன்கள் உணர்ந்து நடந்தனர். லாவண்யாவும்
“பெரியம்மா, நீங்க போய்ட்டு வாங்க. நான் ஒழுங்கா படிப்பேன்” என்றாள்.
அவர்கள் பத்து நாள் பயணமாக ‘கூர்க்’ சென்று வந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. இரவு நேரம் எல்லாரும் உறங்கியிருக்க, குருப்ர்சாத் அறையில் வெளிச்சம். சிவா அன்று வேலை விஷயமாக அலுவலகத்திலேயே இருந்தான். மகேந்திரன் மகனை தேடி வந்தார்.
“என்ன சார் உள்ள வரலாமா?” குருவிடம் கேட்க, அப்பாவின் குரலில் புத்தகத்திலிருந்து தலையை திருப்பினான்.
“வாங்கப்பா” என்றதும் மகன் அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா டா?” மகனின் குறிப்புகள் அடங்கிய நோட்டைப் பார்த்தபடியே கேட்டார்.
“இல்லைப்பா, சொல்லுங்க!” என்றான். அவன் நோட்டை வருடியவர்
“டேய்! காலையில இருந்து நானும் அவளும்தானே இருக்கோம். நான் என் பொண்டாட்டியை மட்டுமில்லை, பசங்களையும் தான் மிஸ் பண்றேன்” என்றார்.
“ஒகே ஒகேப்பா! டிரிப் எப்படி இருந்தது? ஊர் நல்லாயிருக்கா?”
“அழகா இருந்தது குரு, நீயும் சிவாவும் சேர்ந்து லீவ் போடுங்க. லாவண்யா எக்ஸாம் முடிஞ்சதும் நம்ம எல்லாம் ஒன்னா போலாம்”
“போகலாம்பா”
குருப்ர்சாத்தின் முகத்தையே பார்த்தார் மகேந்திரன். குரு அவரின் பிரியமான மகன். தன்னுடன் மிகவும் நெருக்கம், தான் இல்லாத போதும் குடும்பத்தை நன்றாகப் பார்த்திருக்கிறான் என்று மனைவி சொல்ல, பெருமையாக இருந்தபோதும் தன் நேர்மைக்கான விலை அதிகமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
“என்னப்பா பார்க்கிறீங்க? உங்க ரூம் ஓகேவா? இங்க பால்கனி இருக்கு, நல்லாயிருக்கும். வாங்க” என்று அழைத்து சென்றான். இருவரும் பால்கனியில் நிற்க, இருளை வெறித்து,
“என் நேர்மைக்காக நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம் தோணுது குரு, சிவாவை குட்டி பையனா பார்த்தது. இப்போ பெரிய பையனா இருக்கான். உங்களுக்கு ஒன்னுமே செய்யலனு கஷ்டமா இருக்குடா!” என்ற மகேந்திரன் குரலில் மிதமிஞ்சிய வருத்தமிருந்தது.
“நேர்மையா இருக்கிறதெல்லாம் தனி மனுஷ முடிவு இல்லை போல! அதெல்லாம் குடும்பஸ்தனுக்கு இருக்க கூடாதோனு தோணுது.”
“அப்பா, நீங்க இப்படி இருக்கிறது எங்களுக்குப் பெருமைதான்! ஒரு நாள் கூட உங்களை குறைவா நாங்க நினைச்சதே இல்லைப்பா” குரு அப்பாவின் கைப்பிடித்து அழுத்தி அழுத்தமாகவே சொன்னான்.
“Cheap people cannot afford honesty and truth! நீங்க தேவையில்லாம யோசிக்காதீங்கப்பா” என்றவனின் தோளில் கைப்போட்டு கொண்ட மகேந்திரன்
“இப்படி என்னை விட்டுக்கொடுக்காத மகனைப் பார்க்கிறப்பதான், எனக்கு அந்த வருத்தம் அதிகமாயிருக்கு குரு! நேர்மையும் நிதர்சனமும் வேற வேறயா இருக்குல” என்று மகனை கேட்க
“எல்லாம் செஞ்சாதான் அப்பா கிடையாது, எப்பவும் என்னோட ஹீரோ நீங்கதான்ப்பா, பெஸ்ட் அப்பா நீங்கதான்!” என்று சொல்ல அவரிடம் பெரிய புன்னகை.
“ஆனாலும் என் குருவை நான் மிஸ் பண்றேன்” ஏக்கமாக அவர் சொல்ல
“என்ன மிஸ் பண்றீங்க சொல்லுங்க..? செமெஸ்டர் லீவ் வரும், நம்ம இரண்டு பேர் மட்டும் டீரிப் போலாம், என்னப்பா?” ஆவலாக குரு கேட்க மறுப்பாக தலையசைத்த மகேந்திரன்
“எப்பவும் மனசுவிட்டு பேசுற என் குருவை மிஸ் பண்றேன் சொல்றேன். ஒருவேளை உன் மனசு உங்கிட்ட இல்லையோ?” என்று மகன் முகம் பார்த்து ஆழ்ந்த குரலில் கேட்க குரு அப்பாவை அதிர்ச்சியோடு பார்த்தான்.
மகேந்திரனிடம் ஏற்கனவே பெண் பார்த்திருக்கிறது என்று குரு சொல்லியிருக்க, விடுதலை ஆன பின் அந்த பெண் பற்றிய பேச்சே இல்லையே என்று யோசித்தவர், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் அந்த யோசனை தள்ளி போனது. இப்போது மனைவியிடம் கேட்கவும்தான் எல்லாம் சொன்னார் கீதா. தேவராஜன் பெண் என்றாலும் மகனுக்கு பிடித்திருந்தால் மகேந்திரனுக்கு மறுப்பில்லை.
“சொல்லு குரு! இத்தனை நாள் ஆச்சு, ஏன் எங்கிட்ட பேசல?” மகேந்திரன் மீண்டும் கேட்க பதில் பேசாத குரு, தவிப்போடு அப்பாவை அணைத்துக்கொண்டான்.
அவன் யாரிடமும் தேடா ஆறுதலை, வாஞ்சையை அப்பாவிடம் தேடினான்! அவனின் சரணாகதி என்றுமே அவர்தான்!! இரவு நேர தென்றல் காற்று அப்பா, மகனை தழுவி சென்றது. குருவின் கண்களின் ஈரம் அவனை மீறி மகேந்திரன் தோள் தொட்டது!