மகனின் தழுவலில் உடலும் மனதும் தடுமாற நின்றார் மகேந்திரன். அவன் கண்ணீர் வேறு அவரை கலங்க வைத்தது. இந்த சில நாட்களில் மனைவி தவிர மகன்கள் இருவரும் அவரை தேடவில்லை. அது அவருக்கு வருத்தமாக இருந்தாலும் நிதர்சனம் புரிந்துகொண்டார். மகன்கள் அவரிடம் அன்பாக, மரியாதையாக நடந்தாலும் இடைவெளியை நிரப்ப முடியவில்லை.
இப்போது குரு அவரைக் கட்டிக்கொண்டு அழ, என்றென்றும் அவர் மகன் என்று உணரவைத்தான் குருப்ர்சாத். அதில் மகேந்திரனுக்கு சந்தோஷத்தோடு சஞ்சலமும் உண்டானது. அப்பாவை சுற்றியே சுழலும் அந்த குருப்ர்சாத் மாறிடவில்லை என்று காட்டினான் மகன்!
மகன் நல்ல நிலையில் இருப்பது நிறைவை, பெருமையைத் தந்திருக்க, தன்னை உரிமையாகத் தேடுவது உவகை என்றாலும், குருவின் அழுகை அவரை வருத்தியது.
“குரு! என்னடா?” என்று வாத்சல்யத்துடன் கேட்க
“ஐ மிஸ்ட் யூப்ப்பா! ஐ பேட்லி மிஸ்ட் யூ!!” என்று மீண்டும் மீண்டும் சொன்னவன் அவரை விடாமல் இறுக்கி அணைத்திருந்தான். மகன் முதுகை மகேந்திரன் வருட, குரு மனம் திறந்தான்.
“பல சமயம் இப்படி உங்களை கட்டிட்டு என் கஷ்டம் சொல்ல முடியாம தவிச்சிருக்கேன்பா. நீங்க மட்டும் ரீலிஸ் ஆகாம… என்னால அதை நினைக்கவே முடியல! ஐ மிஸ் யூ ஸோ மச்” என்றான் மீண்டும்.
“நானும் தான்” புன்னகையுடன் சொன்னவர்
“என்ன உன் மனசுல இருக்கோ சொல்லு குரு, அப்பா இருக்கேன். பார்த்துக்கலாம்!” எப்போதும் குரு கேட்க விரும்பும் வார்த்தைகள், இத்தனை ஆண்டுகள் ஏங்கியிருக்க, மகேந்திரன் சொல்லவும் உணர்ச்சிப்பெருக்கில் அவர் தோளில் இன்னும் நன்றாக சாய்ந்தவன் அவரை விட்டு விலகவில்லை.
இத்தனை வருடம் அவன் உணர்ந்த அந்த பாதுகாப்பின்மை, பயம், ஏக்கம் எல்லாம் கரைய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தோளில் ஆறுதலுக்காக சாய்ந்திருந்தான். மகன் பாசத்தில் நெகிழ்ந்தாலும், இவனை தவிக்க விட்டு வயதுக்கு மீறி அவன் பாரம் சுமக்க விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி மகேந்திரனிடம்.
அவருக்கும் கண்கள் கலங்க, “டேய்! உட்கார்ந்தாச்சும் பேசலாம், அப்பாவுக்குக் கால் வலிக்குது” என்றதும் சட்டென்று அவரை விட்டு விலகி, கண்கள் துடைத்தவன் எச்சில் விழுங்கி இருட்டை வெறித்தான். இன்னும் கூட அழுகை வந்தது. தென்றலின் நினைவு மோசமாக தாக்கியது! வீடு மாறினால் மனம் மாறிடும் என்று கணக்கிட்டான், அந்த வீட்டில்தானே அவளின் நினைவுகள் தஞ்சமாகியிருக்கின்றன என்று நினைத்தான். ஆனால் தென்றல் குருவினுள், அவன் உள்ளத்தில் நிறைந்திருந்தாள்! அதுதான் அவனை தோற்க வைத்தது!
அப்பா வந்தால் தான் சரியாகி விடுவோம் என்று நினைத்திருக்க, அதுவும் முடியாமல் போனது, அப்பாவை விட அவளை தேடுகிறேனா என்ற தவிப்பு, கோபம் எல்லாம் அவனை இன்னும் வாட்டியது. அதன் தாக்கமே அப்பாவை இன்னும் தேட வைத்தது.
குருவும் மகேந்திரன் அருகே தள்ளி உட்கார, அவன் அருகே நகர்ந்தவர் தோளில் கைப்போட்டு,
“சொல்லுங்க ப்ரோபஸர்! என்ன சொல்லணும் அப்பாகிட்ட?” மகேந்திரன் மகனை வருத்தப்பட வைக்காமல் பேச நினைத்தார்.
குரு அமைதியாக இருக்க, “சொல்லு காலேஜ்லாம் எப்படி போகுது? நீ டீச்சிங் லைன் போவன்னு நான் நினைச்சதில்லை, ஆனா அது நடந்ததுல பெருமையா சந்தோஷமா இருக்குடா” என்றார்.
“எனக்கும்பா, ஆரம்பத்துல பெருசா இன்ட்ரஸ்ட் இல்லை! இப்போ அப்படி இல்லை! ரொம்ப சந்தோஷமா செய்றேன். என்ன இது மகாதேவன் ஸர் சம்மந்தி காலேஜ். இன்னும் ஆறு மாசம் போயிடுச்சுன்னா வேற காலேஜ் சேரலாம் இருக்கேன்” என்ற மகனின் தோளைத் தட்டிக்கொடுத்தவர்
“இப்படி நீ யோசிச்சன்னா அது சரி கிடையாது குரு! அன்னிக்கு எனக்குத் தெரிஞ்சு கள்ளச்சாராயம் காய்ச்சனவனுங்க இன்னிக்குக் காலேஜ் வைச்சிருக்கானுங்க! அப்படி பார்த்தா நீ எந்த காலேஜ்லயும் வேலைக்கு சேர முடியாது. ஏன்னா காலேஜுக்குக் கல்வியைப் பேக்ரவுண்டா வைச்சிருக்கவங்களை விட மத்த தொழில் பண்ணிட்டு வரவங்கதான் அதிகம்! அந்த தொழில்’ல என்ன தப்பு செஞ்சாங்க உனக்குத் தெரியுமா? இது அறிவான பேச்சு இல்லை! ப்ராக்டில்லா இரு!” என்றார்.
குருவுக்கும் அப்பா சொன்னதும் ‘இப்படியும் இருக்கிறதே!’ என்ற தெளிவு. அவன் தலையசைக்க
“அப்புறம் தென்றலை மிஸ் பண்றியா?” என்றதற்கு
“அப்பா! அதெல்லாமில்ல” பட்டென்று சொன்னான்.
“உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை செய் குரு! தேவராஜனை வைச்சு தென்றலை ஜட்ஜ் பண்ணாத!”
“உங்களுக்கு எப்படிப்பா இப்படி பேச முடியுது? அந்தாள் செஞ்சதை மறந்துட்டீங்களா? இல்லை மன்னிச்சீட்டீங்களா?” ஆதங்கமாக குரு கேட்க
“இரண்டுமே இல்லை! எனக்கு முக்கியம் என் குடும்பம், அதோட சந்தோசம்! இந்த விஷயம் தென்றல் சம்மந்தப்பட்டது, தேவராஜன் பொண்ணுன்றதுதான் நீ அவளை வேண்டாம் சொல்ல காரணமா?” மகேந்திரன் கேட்டு மகனை பார்த்தார்.
“யாருக்கு என்ன வேணுமோ அதை தேர்ந்தெடுத்தோம் குரு, தேவராஜனுக்கு பணம் பெருசா இருந்தது, அதைவிட ராஜரத்னத்துக்கு ஒன்னு விசுவாசியா இருக்கணும் இல்லை துரோகியா இருக்கணும். அவரை மீறி ஒன்னுமே செய்ய முடியாது! ராஜரத்னத்துக்கு தேவராஜன் விசுவாசி, நான் துரோகி அவ்வளவுதான்! நான் மனசாட்சிக்குப் பயந்து சாட்சி சொல்லிட்டேன். இப்ப இத்தனை வருஷம் கழிச்சு எனக்கே சுய நலமா இருந்திருக்கலாம்னு தோணுது குரு! ராஜன் புத்திசாலி! எனக்கு இத்தன வருஷம் கழிச்சு தோணுறதை அவன் அன்னிக்கே செஞ்சுட்டான்.” என்றார் மகேந்திரன்.
“ராஜரத்னம் மாறி ஒரு அரசியல்வாதிக்கிட்ட வேலைக்கு இருக்கவங்க மனசாட்சி, நேர்மை எல்லாம் பார்க்க கூடாது, மீறி பார்த்தா என் நிலைமைதான்! அப்போ எனக்கு தேவராஜன் மேல ரொம்ப கோவம். இப்போ யோசிச்சா அவனும் என்னை மாதிரி இருந்திருந்தா எல்லாத்தையும் இழந்திருப்பான். எனக்காச்சும் பசங்க, அவன் பொண்டாட்டி இல்லாம பொண்ணை வைச்சுட்டு என்ன கஷ்டப்பட்டிருப்பான்? அவன் எடுத்த முடிவு சரி!” என்ற தந்தையிடம்
“நீங்க எதையும் இழக்கலப்பா! நீங்க நேர்மையாயிருக்கிறது எனக்கு பெருமை! சும்மா என்னை கன்வீன்ஸ் பண்ண பேசாதீங்க. இன்னும் உங்க ப்ரண்ட் மேல பாசம் ஒட்டிட்டு இருக்கோ?” என்று குரு காட்டமாகக் கேட்டான்.
“டேய்! செத்தவனை ஏண்டா இவ்வளவு பேசுற? விடு குரு” என்று ஆயாசமாக பேச
“செத்திட்டா மட்டும் துரோகியெல்லாம் தியாகி ஆகிடுவாங்களா?” குரு கோபம் குறையாமல் கேட்டான்.
“எல்லாத்தையும் இழந்துட்டு நேர்மையை மட்டும் வைச்சு என்ன பண்ண முடியும் குரு? எந்த முடிவா இருந்தாலும் நாங்க சுய நினைவோடு சுய நலமா எடுத்ததுதான்! எனக்கு என் மன நிம்மதி முக்கியம்னு முடிவு செஞ்சு உண்மையை சொன்னேன். அவன் அவனுக்குத் தேவையானதை செஞ்சான். தேவைகள்தான் நியாயங்கள் குரு! என் வயசு வரப்ப புரிஞ்சிப்ப.” என்ற மகேந்திரனிடம்
“அடுத்தவங்களை காயப்படுத்தி என்ன தேவைப்பா? அப்படியொரு தேவையே தேவையில்லை! அப்படி ஒரு மோசமான சுய நலவதியா நான் இருக்கமாட்டேன்” என்றான் குரு பட்டென்று.
சின்னதாய் எரிந்த அந்த விளக்கின் ஒளியில் மகேந்திரனின் புன்னகை விரிவதை குருவால் பார்க்க முடிந்தது.
“என்னை பல வருஷம் முன்னாடி பார்த்த மாதிரி இருக்குடா!” மகேந்திரனுக்கு மகனின் பேச்சில் பெருமிதம்!
“அப்பா! நான் உங்க பையன், உங்களை மாதிரிதான் இருப்பேன்” குருவும் பெருமையாகவே சொன்னான்.
“குரு! தயவு செஞ்சு பழைய கதை பேச வேண்டாம். இன்னிக்கு ராஜரத்னமும் இல்லை, தேவராஜனும் இல்லை! ராஜரத்னம் செஞ்சதுக்கு அவன் பையனாலே செத்துப்போய்ட்டான். பல பேரை அரசியல் ஆதாயத்துக்காக கொன்னு, பழியை மத்தவங்க மேல தூக்கிப்போட்டதுக்கு அவன் பையனே இன்னிக்கு ஜெயில்’ல இருக்கான். ராஜரத்னம் பொண்ணு கார்த்தியாயினி அந்த பொண்ணுக்குக் கூட அவன் வீட்ல பாதுகாப்பு இல்லை, பணம் பதவி இருந்து என்ன? ஒரு அப்பாவா அவன் என்னைக்கோ தோத்துட்டான்! செத்துட்டான்! என்னையும் கொஞ்சம் நார்மலா ஃபீல் பண்ண விடு, அந்த விஷயமெல்லாம் நான் நினைக்க நினைக்கல” என்று மகேந்திரன் அவர் மன நிலையை மிக மிக நேர்மையாக சொன்னார்.
“ஒகேப்பா!” என்று குரு ஒத்துக்கொள்ள,
“சொல்லு தென்றல் பத்தி” என்று மீண்டும் கேட்க
“அப்பா!! தேவராஜன் பேச்சு வேண்டாம்னா, தேவராஜன் பொண்ணு பேச்சும் வேண்டாம்!!!” என்றான் அழுத்தமாக.
“அந்த பொண்ணு பேச்சு வேண்டாமா இல்லை பொண்ணே வேண்டாமா?” மகன் முகத்தை ஆராய்ந்து மகேந்திரன் கேட்க
“நீங்க சொன்ன மாதிரி என் மனசுல இன்னும் அவ இருக்காப்பா, ஆனா நான் நேசிச்ச எனக்குப் பிடிச்ச பொண்ணா அப்படி இல்லை! என்னை ஏமாத்தி, என் நம்பிக்கையை உடைச்சவளா இருக்கா. ஐ ஹேட் ஹெர்’ப்பா! ஐ ஹேட்ட்ட்ட்ட் ஹெர்!!!” என்று இருளை வெறித்து கைகளை மடக்கி மிகவும் இறுக்கமாக பேசிய மகனை கண்டு மகேந்திரனுக்கு வேதனையானது.
“குரு, அந்த பொண்ணை நான் இப்போ பார்த்ததில்லை! எனக்கு அவளை தெரியாது, உனக்குத்தான் தெரியும்! ஆனா தேவராஜன் பொண்ணுன்ற காரணம் மட்டும் போதுமா, அவளை வெறுக்கவும் வேண்டாம்னு சொல்லவும்?” மகேந்திரனுக்கு இன்னும் மகன் மனம் தெளிவாய் தெரியவில்லை.
“அதுக்காக மட்டும் நான் வேண்டாம்னு சொல்றேன் நினைக்கிறீங்களாப்பா?” என்று அப்பாவை நேருக்கு நேர் கண்டு கேட்டான் குரு.
அவன் கண்களில் பெயர் சொல்ல முடியா பெருந்தவிப்பு! தான் சிறைக்கு சென்ற போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து, தவித்து நின்ற காட்சி இன்னும் மகேந்திரனுக்கு மறையவில்லை. இப்போதும் அதே போல் தவித்தான் மகன்! தந்தையாய் அவருக்கும் அந்த தவிப்பு ஒட்டியது.
தென்றலை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும் மகனுக்காக ஏற்க நினைத்தார் மகேந்திரன். ஆனால் அந்த பெண்ணால் மகன் இப்படி வருந்தும்போது?? அவருக்கு அவன் சந்தோஷமாக இருந்தால் போதுமென்றே தோன்றியது.
“ஏன்னு நீயே சொல்லுடா, எதுனாலும் சொல்லு! எத்தனை வயசானாலும் என் குருவுக்கு பிரச்சனைன்னா அப்பா கூட நிப்பேன்” என்று மகன் கரம் பற்றி அவர் அழுத்தம் கொடுக்க
“ஒரு தடவ நம்பிக்கை உடைஞ்சா மீண்டு வந்துடலாம்ப்பா, ஆனா இரண்டாவது தடவையும் உடையறப்ப அதை என்னால தாங்க முடியல.. அவ அப்பா செஞ்சத விட அவ எனக்கு செஞ்சது கஷ்டமா இருக்குப்பா! என் மனசை முழுசா அவ கிட்ட கொடுத்தேன்ப்பா. ஐ.. ஐ லவ்ட் ஹெர் அ லாட்!! பட் அவ தேவராஜன் பொண்ணுன்னு ப்ரூவ் பண்ணிட்டா!!”
“உண்மையை மறைச்சதுக்கு அவளுக்கு காரணம் இருக்கேடா?!”
“சொல்லப்படாத உண்மைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொய்கள்! இது கேள்விப்பட்டிருக்கீங்களா? இப்போ யோசிச்சா அவ்வளவு முட்டாளா, ஏமாளியா இருந்திருக்கேனு எனக்கே என் மேல கோவமா வருதுப்பா! எனக்குத் தெரியும் இது கஷ்டம், ஆனாலும் வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும், நான் மறந்திடுவேன்ப்பா. எனக்கு நீங்க கூட இருக்கீங்களே அது போதும்ப்பா!” என்று அவர் கையைப் பற்றிக்கொண்டான்.
“உன் சந்தோஷம் எதுவோ அதை செய்டா!” என்றவர் பொதுவாக பேச அப்படியே அப்பாவின் மடியில் சாய்ந்து குரு உறங்கிப்போனான். இந்த ஏமாற்றம் கூட பிடித்தவர்கள் தந்தால் பல மடங்காக வலிக்கிறது என்று நினைத்தார் மகேந்திரன். அவரால் மகனை புரிந்து கொள்ள முடிந்தது.
குருவுக்கு அப்பாவிடம் மனதை சொல்லிய பின் கொஞ்சம் பாரம் இறங்கிய உணர்வு, மனதில் அமைதி! அந்த அமைதியெல்லாம் தென்றலை காணும் வரை மட்டும்!! தன் வீட்டில் தென்றலை பார்த்தவன் புயலாக மாறினான்!!