சில நாட்கள் கடக்க, மகேந்திரன் வந்த செய்தி மகாதேவன் மூலம் தெரிந்திருக்க அவரை பார்க்க நினைத்தாள் தென்றல். குரு இல்லாத போது வர நினைத்து ஒரு நாள் காலையில் அவர்கள் இப்போது இருக்கும் வீடு வந்துவிட்டாள் தென்றல். யாரிடமும் சொல்லவில்லை, குருவை பார்க்க ஆவல் இல்லை. சில விஷயங்கள் மகேந்திரனிடம் மட்டும் பேச நினைத்து வந்தாள். வீட்டு வாசலில் பெல் அழுத்தி நின்றவளுக்கு பரபரப்பு.
மகேந்திரனும் கீதாஞ்சலியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். சிவாவும் குருவும் வேலைக்கு சென்றுவிட, லாவண்யா க்ளாஸ் சென்றிருந்தாள்.
மகேந்திரன் கதவு திறக்க, “நான் தென்றல் மாமா, உள்ள வரலாமா?” தென்றல் மெல்ல புன்னகைத்து கேட்க, அவரிடம் ஆச்சரியம்.
“வாம்மா!” என்றார். உள்ளே அழைத்து அவரை உட்கார சொல்லி, மகேந்திரனும் இன்னொரு சோஃபாவில் உட்கார்ந்தார்.
“கீதாஞ்சலி!” என்று மனைவியை கூப்பிட, கீதா தென்றலை எதிர்ப்பார்க்கவில்லை. மகன் எப்போதும் இறுக்கமாகவே இருக்க, எல்லாம் இவளால் என்ற கோபம்.
“நீ ஏன் வந்த?” என்றார். தென்றல் முகம் சுருங்க, மகேந்திரன் மனைவியை முறைத்தார்.
“சொல்லாம போனதுதான் கோவமா கீதாம்மா?” என்று கேட்டாள்.
கீதா பதில் சொல்ல வர, மகேந்திரன் அவரை அமைதியாக இருக்க சொல்லி தென்றலிடம் பேசினார்.
“எப்படிம்மா இருக்க?” என்று கேட்க
“நல்லாயிருக்கேன் மாமா, நீங்க நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“சந்தோஷமா இருக்கேன்மா. அப்புறம் தேவராஜன் இல்லைனு கேள்விப்பட்டேன், அப்போ இருந்தே உடம்பை கவனிக்க மாட்டான். பணம்னு அது பின்னாடியே ஓடுவான்” என்றார் வருத்தமாக.
“அப்பாவுக்கு ட்ரக்ஸ்னால ரொம்ப மெமெரி லாஸ் மாமா, கடைசிவரைக்கும் உங்கள அவர் மறக்கல. இருந்திருந்தா உங்களை வந்து பார்த்திருப்பார். அவரால நீங்க ஜெயில் போக வேண்டியதாகிச்சுனு வருத்தப்பட்டார்.”
“வருத்தப்பட்டு என்ன? நண்பனுக்கே துரோகம் பண்ணிட்டு என்ன வருத்தம் வேண்டியிருக்கு” கீதா தாங்காமல் கேட்க, தென்றல் மனம் சுணங்கியது.
“அப்பா தெரியாம எதையும் செய்யல மாமா. அவரோட தேவைக்கு சூழ் நிலையை யூஸ் பண்ணிக்கிட்டார். அவரோட தப்புக்கு நான் எப்படி மன்னிப்புக் கேட்க முடியும்? அதை விட அவர் செஞ்சது துரோகம், இதே விஷயம் எனக்கு யாராச்சும் செஞ்சிருந்தா என்னால மன்னிக்க முடியாது. அப்படியிருக்கப்ப அதைநான் உங்ககிட்ட கேட்க மாட்டேன்.” என்றதும் மகேந்திரனிடம் மெச்சுதலான பார்வை.
தென்றலின் கண்களில் இருந்த உண்மையான வருத்தம் மகேந்திரனுக்குப் புரிந்தது. தென்றலின் வருத்தம் வருத்தியது, அவள் அம்மா இறந்தபோது நடப்பது புரியாமல் அழுது கொண்டிருந்த அந்த பத்து வயது கலங்கிய முகம் அவர் கண்ணில் நிற்க, அவள் அப்பாவின் செயலுக்கு இவள் என்ன செய்வாள் என்ற எண்ணமே.
“இப்போ அதெல்லாம் எதுக்கு? நீ என்னைப் பார்க்க வந்தது சந்தோஷம் தென்றல். நீ பொறந்தப்ப உன்னைப் பார்த்தது இன்னும் ஞாபகமிருக்கு, நீ ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்தியா, உங்கப்பா பயந்துட்டே இருந்தான். ஹாஸ்பிட்டல் வந்து உன்னை கையில வாங்கினப்போ கண்ணுல தண்ணீயோட நின்னான், அவனுக்கு அவ்வளவு சந்தோஷம் . எனக்கும் அடுத்து பொண்ணு வேணும்னு ஆசை. குழந்தை’ங்க எல்லாம் சீக்கிரம் வளர்ந்திடுறீங்க. தவமிருந்து பெத்த பொண்ணு நீ, நீ கண்டதை யோசிக்காம சந்தோஷமா இரும்மா” என்றார் வாஞ்சையோடு.
“உன் அப்பா ஒன்னும் அவ்வளவு மோசமானவன் இல்லை. சூழ் நிலைக்கு வளைஞ்சுக் கொடுத்தான், நான் எதிர்த்து நின்னேன் அவ்வளவுதான்! நான் எடுத்த முடிவு என்னோட சுய நினைவோட எடுத்தது. உன் அப்பா உனக்கு ரொம்ப நல்ல அப்பா, அவன் தம்பிங்களுக்கு நல்ல அண்ணன். அவன் அவனுக்குன்னு ஒன்னும் செய்யலயே, எப்பவும் அவனுக்கு குடும்பம் முக்கியம், தம்பிங்க நல்லாயிருக்கணும்னு நினைச்சான். நானே விளையாட்டா அவங்கிட்ட சொல்லுவேன், உன் தம்பியா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு. எனக்கு அப்படியொரு அண்ணன் இல்லையேனு நினைச்சிருக்கேன். சும்மா நீ கண்ணை கசக்க கூடாது. அவன் செஞ்ச தப்புக்கு நீ பொறுப்பில்லைனு உனக்குத் தெரியுதுல, விடு” என்று மகேந்திரன் தென்றலின் தோளில் தட்டிக்கொடுத்தார்.
அப்பாவை பற்றி இந்த வார்த்தைகள் தென்றலை அழ வைத்தது. அதுவும் மகேந்திரன் சொல்ல, இப்படி ஒரு நண்பரை அப்பா இழந்துவிட்டார் என்றே தோன்றியது.
தென்றல் அழவும் கீதாவுக்கும் உருகியது. அருகே வந்தவர் அவளை அணைத்துக்கொண்டு,
“அதான் உங்க மாமா சொல்லிட்டாரே, ஏன் அழற?” என்று அதட்ட, தென்றலுக்கு எப்போதும் போல் கீதாவின் அரவணைப்பு மனதினை தொட, அழுகை இன்னும் கூடியது. இத்தனை நாள் மனதில் தேக்கிய உணர்வுகள், பல நாட்கள் இவர்களிடம் உண்மையை சொல்ல முடியாத அழுத்தம் எல்லாம் இன்று விடுதலை கொள்ள பெறும் ஆறுதல். அது கண்ணீராய் விடைப்பெற்றது.
மனைவி தென்றலை அணைத்துக்கொள்ள, மகேந்திரன் முகத்தில் கிண்டல் பாவனை. இத்தனை நாள் பேசியது என்ன, இப்போது இப்படி என்று பார்க்க, கீதா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
“எனக்கு உங்களை ஏமாத்தணும்னு எல்லாம் இண்டென்ஷன் இல்ல, எனக்கு நீங்க கஷ்டப்படுறது பார்த்து கஷ்டமா இருந்தது. எனக்கு குருவுக்கு முன்னாடி உங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும். நான் உண்மையை சொல்லணும் நினைப்பேன், எங்கப்பா பத்தி சொன்னா நீங்க வெறுத்துடுவீங்களோனு பயம். அந்த பயம் என்னை சொல்லவிடல, உங்க மேல வைச்ச பாசமெல்லாம் பொய் இல்லை கீதாம்மா!” என்று அவர் இடையைக் கட்டிக்கொண்டு தென்றல் அழுதபடி பேச, கீதா தென்றலின் முதுகை வருடினார்.
“தென்றல்! அழாதம்மா” என்று மகேந்திரன் சத்தமாக சொல்லவும் அதில் கீதாவிடமிருந்து விலகியவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“சாரி மாமா! எனக்கு இதெல்லாம் சொல்லணும் ரொம்ப நாளா தாட், பட் என்னால குருவை ஃபேஸ் பண்ண முடியல . அப்பாவோட இறப்பு, இதுல எனக்கு உங்ககிட்ட பேச முடியல. எனக்கு இது ரொம்ப கஷ்டமா இருந்தது, கீதாம்மா பக்கத்து வீட்டு பொண்ணுகிட்டவே அவ்வளவு பாசமா இருக்கவங்க, ஆனா உண்மை தெரிஞ்சதும் என்னை மொத்தமா ஒதுக்கிட்டாங்க. என்னை தேடவே இல்லை” என்ன முயன்றும் மீண்டும் கண்ணீர் வர, அவளுக்கே கோபமாக வந்தது.
“நீயும்தான் என்னை தேடலை” கீதா சரிக்கு சரியாக பேசினார்.
“குரு கிட்ட உண்மையை சொன்னியே, எங்கிட்ட சொன்னியா? நான் என்ன நினைக்கிறது, இத்தனை நாள் பேசின பொண்ணு, இப்ப பெரிய இடம். அதான் என்னை கண்டுக்கல நினைச்சேன்” என்றார்.
“அப்படியெல்லாம் இல்ல. குரு மாதிரி நீங்களும் பேசிட்டா என்னால தாங்க முடியும்னு தோணல. ” என்றாள் அவசரமாக.
“அவன் என்ன சும்மா கத்திட்டு இருப்பான்” கீதா மகனை பேச, மகேந்திரன் பார்வை ‘அடிப்பாவி’ என்பதாக மனைவியைப் பார்க்க, அடக்க முடியாத சிரிப்பு அவரிடம்.
கீதாவுக்கும் கணவர் மனம் விட்டு சிரிப்பதில் புன்னகை விரிந்தது, தென்றலுக்கும் அப்படியே!
“என் பையன் வரட்டும்! உன்னை சொல்றேன் இரு!” என்று அவர் மனைவியை மிரட்ட, தென்றலுக்கு இந்த சந்தோஷம் எல்லாம் தன் அப்பாவால் கெட்டதே என்ற நினைவு தாக்க, அவள் முகம் வாடியது. மகேந்திரன் அதை பார்த்தவர் குருவை பற்றி பேசியதும் தென்றல் வாடுகிறாள் என்று நினைத்தார்.
“உன் மேல உன் அப்பா விஷயத்துல கோவமில்லை தென்றல், என் மகன் விஷயத்துல தான் கோவம்” என்றதும் தென்றல் உடனே பேச வர
“மத்த எல்லா விஷயத்துலயும் உன் நல்லெண்ணம், நியாயம் எனக்குப் புரியுது. குரு உலகத்தை பார்க்க ஆரம்பிச்சதே துரோகத்தோட வாசல்’ல நின்னுதான். அந்த வயசுல அப்பாவோட பழகினவரே ஏமாத்தினார்னா அது என் பையன் மனசை ரொம்ப பாதிச்சிடுச்சு. சில நேரம் என்னோட நேர்மை என் பசங்களோட நியாயமான ஆசைகளை பறிச்சிடுச்சோனு தோணுது. மறுபடியும் நீயும் அதே செஞ்சா அவனுக்கு வலிக்கும்தானேம்மா?” என்று மகேந்திரன் கேட்டார்.