குரு இத்தனை மாதங்கள் கழித்து தென்றலை பார்த்தவன் கொஞ்சம் இயல்பாகவே இருந்தான். அப்பா பேசியது எல்லாம் மனதில் உலா போக, தென்றலிடம் சாதாரணமாக பேசிட ஒரு இணக்கத்தை எதிர்ப்பார்த்தான்.
சில நொடிகள் ரசித்து, அந்த நிமிடங்களை அனுபவித்தவன் தென்றலிடமிருந்து பார்வையை திருப்பவில்லை. மனதில் கோபம் வருத்தமிருந்தாலும் பிரியமே பிரதானம்!
தென்றல் குருவிடம் பேசவே இல்லை. அவன் பக்கம் பார்வை கூட திருப்பாது, நேரே வண்டியை செலுத்தினாள். ‘வீடு வரைக்கும்’ என்ற குருவின் வார்த்தைகள் அவளை கட்டுப்படுத்தியது. வாழ்க்கைப்பயணத்தில் நான் வேண்டாமா என்ற கேள்வி அவளை மௌனமாக்கியது.
குருப்ர்சாத் தென்றலிடம் பேச நினைத்தாலும், அவள் பாராமல் பேசாமல் இருக்க, நான் இவ்வளவு இறங்கி வந்தும் இவளாக பேச மாட்டாளா? என்ற ஆற்றாமை. சிறிது நேரம் இதமாக இருந்த சூழலில் இணக்கமில்லாததால் இறுக்கம்! பல மாதங்கள் கழித்து தென்றலுடன் ஒரு தனிமை! அதில் அவளின் பேச்சை குரு எதிர்ப்பார்க்க, தென்றல் எண்ணம் இவனுக்கு புரியவில்லை.
குருவுக்கு தென்றல் அன்றே “பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்” என்று சொல்லியிருக்க, அதை செயல்படுத்துகிறாளே என்ற சினம்! சிறிது நேரத்தில் குருவின் வீடும் வந்துவிட, தென்றல் காரை நிறுத்தினாள். குரு இறங்கும் முன், பணத்தை எடுத்து ‘டாஷ்போர்ட்’ மேல் வைத்தான். தென்றல் அதிர்ந்து பார்த்து,
“குரு! என்ன இது?” என்றாள்.
“கேப்’ல வந்தா அவங்களுக்கு கொடுத்திருப்பேன், நீதானே என்னை ட்ராப் பண்ணின? அதான்!” என்று குரு திமிராக சொல்ல
“அப்போ கேப்’லயே போக வேண்டியதுதானே?” தென்றல் தாங்க முடியாது கத்த
குருவோ நிதானமான குரலில், “போயிருக்கலாம்! ஆனா நீ இவ்வளவு தூரம் சிட்டி அவுட்டர்’ல இருந்து தனியா வரணும். உனக்கு துணையா இருக்கலாம்னு” என்றான்.
“நான் உங்களை கேட்டேனா? அதான் தேவராஜன் பொண்ணை வெறுக்கிறேன்னு சொல்லிட்டீங்களே? அப்புறம் எதுக்கு இப்படி செய்றீங்க? நானா ஒதுங்கி போனாலும்… ” என்றவளுக்கு வார்த்தைகள் அடைத்தன.
“எஸ், பட் மகேந்திரன் பையனா போய்ட்டேனே, உன்னை அப்படியே விட முடியல” என்றவன் காரை விட்டு இறங்கி சென்றுவிட, தென்றல் இப்போது அழுதே விட்டாள்.
அழுகையோடு அவனிடமிருந்து விலகினால் போதுமென காரை செலுத்தியவளுக்கு, தெரு முனைக்கு மேல் போக முடியவில்லை. மனது மொத்தமும் குருவின் வசமாகியிருக்க, அவன் வார்த்தைகள் மோசமாக தாக்கின. தென்றலிடமிருந்து பெரும் கேவல் ஒன்று வெளிப்பட்டது. கண்கள் கண்ணீரால் நனைய, வண்டியை செலுத்த முடியாது ஸ்டீயரிங்’ மேல அப்படியே சாய்ந்தவளுக்கு தாளாமல் அழுகை.
குரு தென்றலை பார்க்காமல் மாடியேறி போய்விட்டான். மகேந்திரன் கதவை திறக்க, அறைக்குள் சென்றவன் உடைமாற்றி பால்கனி வழியே பார்க்க, தென்றலின் கார் இன்னும் நின்றது. பத்து நிமிடமாக என்ன செய்கிறாள்? நேரம் வேறு ஆகிவிட்டதே என்று நினைத்தவன், கதவை திறக்க, மகேந்திரன் அந்த சத்தத்தில் வெளியே வந்தார்.
“என்ன குரு? இப்பதான் வந்த? எங்கடா போற?” என்று கேட்க
“தென்றலோட வந்தேன்பா, என்னாச்சு தெரியல இன்னும் கிளம்பாம நிக்கிறா” என்று யோசனையாக சொன்னவன்
“நான் பார்த்துட்டு வரேன்ப்பா” என்றதும் மகேந்திரனும் உடன் வருகிறேன் என்றார். அவரை மறுத்தவன் சின்ன குரலில்,
“என்னமோ பண்ணித் தொல!” என்று திட்டியவர் குரு செல்லவும் கதவை பூட்டினார்.
குரு தென்றல் பக்கமாக காரின் அருகே வந்து நின்றான். வெளியே நின்றவன் கார் கண்ணாடியைத் தட்ட, தென்றலுக்கு அதெல்லாம் கேட்கவில்லை. மீண்டும் குரு வேகமாகத் தட்டியவன் “தென்றல்” என்றழைக்க அப்போதுதான் தென்றல் நிமிர்ந்தாள். கார் ஜன்னலை இறக்க, தென்றலை பார்த்த குருவுக்கு தன் மீதே கோபம்.
“தென்றல், கதவை திற” என்றான்.
“ப்ளிஸ் குரு போங்க. எனக்கு தனியா இருக்கணும்” என்று கண்ணீர் வழியே தென்றல் சொல்ல, அந்த கண்ணீரின் ஈரம் குருவை நனைத்தது. அவன் தென்றலின் மீதிருக்கும் அலாதியான காதலுக்கும் அதிகமான கோபத்திற்கும் இடையே சிக்கித் தவித்து, தென்றலையும் தவிக்க விட்டான். தென்றலிடம் நல்ல விதமாய் நடக்க நினைத்தாலும், சட்டென்று வரும் அந்த கோபம், அவள் மனதை நோகச்செய்யும் வார்த்தைகள் அதனை தடுக்க முடியவில்லை.
முழுதான நேசத்தையும் தர முடியாது, முழுமையாக வெறுத்து ஒதுங்கவும் முடியா நிலையில் ஓய்ந்து போனான் குரு. தென்றல் குருவை தடுமாற செய்தாள். தடுமாற்றம் தானே மாற்றத்தின் முதல்படி! கதவின் பக்கம் தடுமாறி தளர்வாய் சாய்ந்தான்.
“தென்றல், நீ லாக் ஓபன் பண்ணாம நான் போக மாட்டேன்” என்றான் பிடிவாதமாக. முன்பெல்லாம் ஏனென்று காரணம் தெரியாமல் அவள் அழுத போதெல்லாம் சமாதானம் செய்தவன், இப்போது காரணம் அவன் என்று தெரிய, அப்படியே விடுவானா என்ன?
தென்றல் மறுப்பாக தலையசைத்தாள். குருவும் பிடிவாதமாக நின்றான். தென்றல் அவன் நிற்கவும் லாக் ஓபன் செய்தாள். குரு அவளை பார்த்தபடியே நின்றவன், மறுபக்கம் வந்து ஏறினான்.
“ஏன் தென்றல் இப்படி அழற? எனக்குக் கஷ்டமா இருக்கு! சாரி!” என்று மன்னிப்பு கேட்க, தென்றலுக்குப் பேச முடியவில்லை. பல நாள் தவிப்பெல்லாம் அழுகையாக வந்தது, அவன் முன் அழவும் முடியவில்லை. கண்ணீரை உள்ளிழுக்க முயன்ற தென்றல்,
அவளை நேரே பார்த்த குரு “நீ பார்த்தும் எங்கிட்ட பேசாம இருந்ததுதான் கோவம்” என்றான் பளிச்சென்று.
தென்றல் விழிக்க,
“என்னால முடியல தென்றல், உன்னையும் கஷ்டப்படுத்தி நானும் கஷ்டப்பட்டு ஐ ஹேட் திஸ்” என்றான் கோபமாக. அப்படியே கண்களை மூடி சீட்டில் சாய்ந்தான்.
அந்த குரலில் கோபம் என்பதை விட, இந்த சூழலை கையாள முடியாத ஆற்றாமை அதிகமிருக்க, தென்றலுக்கு அவள் காதல் அவனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறது என்று கண்கூடாக கண்டாள். இருவருக்குமிடையில் சில நிமிடங்கள் அமைதி. வெறும் மூச்சுக்காற்றின் சத்தம் மட்டுமே கேட்டது. காரின் ஜன்னல்கள் இறக்கப்பட்டு இருக்க, காற்று மட்டுமே இருளோடு பேசியது.
பேசினால் அடுத்தவர் மனது காயப்படுமோ என்ற பெரும்பயம் இருவரையும் ஆட்டியது. பேசாத கோபம் என்று குரு சொல்ல, தென்றல் பேசிவிட முடிவெடுத்தாள். கன்னத்தை அழுத்தி கண்ணீரைத் துடைத்த தென்றல் குருவிடம்,
“இப்போ நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணும்போது, எனக்கு நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்புனு உறைக்குது! உங்க அப்பா மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கங்கனு தெரிஞ்சும் நான் உண்மையை மறைச்சிருக்கக் கூடாது! வருண் சொல்லுவான் நீ முட்டாளா நடந்துக்கிற, எனக்கு அது முட்டாள்த்தனமா தெரியல, ஆனா நான் ரொம்ப சுய நலமா இருந்துட்டேன் குரு!” என்றவள் குரலில் மிதமிஞ்சிய வருத்தம்.
“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சதால அது நிறைவேறிட்டா போதும் நினைச்சிட்டேன். உண்மை தெரிஞ்சா என்னை வெறுப்பீங்களோனு பயந்தேன் தவிர, உங்களை இந்தளவுக்கு காயப்படுத்துவேன் நினைக்கல! ஆனா நான் எதையும் ப்ளான் பண்ணி செய்யல குரு! என்னால நீங்க கஷ்டப்பட வேண்டாம், என்னை பார்க்கிறப்ப என் அப்பா ஞாபக வர வேண்டாம். உங்க சந்தோஷம்தான் எனக்கு முக்கியம், லெட்ஸ் ப்ரேக் அப்!” என்றாள் இறுதியாக.
அவன் தன்னை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறுவதை தென்றல் பார்க்கிறாள் தானே? கோபமாக பேசி சென்றவன் மனம் கேளாமல் தன்னை சமாதானம் செய்கிறான். மனம் முழுக்க வலித்தது, இந்த அன்பினை இழக்க போகிறேனே என்று. ஆனாலும் இந்த முறை சுய நலம் பாராது குருவின் மனதினை யோசித்தாள்.