சிறிது நேரம் தனிமையில் அதன் அமைதியில், மனதில் மையம் கொண்ட அனுராகத்தில் ஆழ்ந்து குருவும் தென்றலும் அப்படியே நின்றனர். இருவரின் கையும் பிணைந்து இருக்க, அதனை அழுத்திய குரு
“போலாம் தென்றல்” என்றான்.
தென்றல் பதில் பேசாமல் அவனை ஒரு முறை அணைத்துக் கொண்டாள்.
“இந்த இடம், இந்த குரு எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன்” தென்றல் அவன் தோள் சாய்ந்தபடி முகம் மட்டும் நிமிர்த்தி சொன்னாள்.
அவள் விழிகளில் பிரியத்தை தேடிடும் பாவனை குருவை அசைத்தது.
“எப்பவும் நீ குருவை மிஸ் பண்ண மாட்டீங்க தென்றல் மிஸ்” என்று செல்லமாய் சொலி குருவும் அவளை அணைத்துக் கொண்டான்.
இரண்டு நிமிடம் நின்றவன், “லேட்டாச்சு, வா போலாம்” என்று மீண்டும் சொல்ல, இருவரும் இறங்கி சென்றனர். நினைவுகளும் கூடவே அவர்களோடு இறங்கியது. தென்றல் குரு இருவரும் இறங்கி கருணாவின் வீடு செல்ல, மகேந்திரன் குடும்பத்தோடு வெளியே வந்தார்.
மகனையும் தென்றலையும் பார்த்தவருக்கு மனம் நிறைந்தது. அவர் குருவின் முகத்தில் இருந்த அந்த நிறைந்த புன்னகை, அது மகனை இன்னும் வசீகரமாக காட்டியது. ரசித்து பார்த்தார் அந்த காட்சியை. கண்கள் கலங்கி போனது மகேந்திரனுக்கு.
“என்னப்பா போலாமா? கேப் புக் பண்றேன்” என்று சொல்லியபடி போனை எடுக்க
“இரு குரு, ஒரு நிமிஷம்.” என்று மகனை நிறுத்தியவர் அவரின் போன் எடுத்து
“சேர்ந்து நில்லுங்க, நான் போட்டோ எடுக்கணும்” என்றார்.
“அப்பா” என்று குரு தயங்க, “நில்லுடா!” என்று மீண்டும் சொல்ல, குரு தென்றலின் கையைப் பிடித்தபடி நின்றான்.
மகேந்திரன் மிகுந்த ஆர்வமாக, மகனையும் மருமகளையும் படம் எடுத்தார். மகன் முகத்தில் இத்தனை நாள் இருந்த அந்த சோகம் நீங்கி அசோகனாய் நின்றிருந்தான். குருவின் காதல், அதன் காயம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அப்பா இல்லாத போது தலைவனாக குடும்பத்தை தாங்கியவன், அவர் வந்த பின் மீண்டும் அவர் கைப்பிடிக்கும் சிறுவனாக மாறிப்போனான். இன்று தென்றல் அருகே இருக்க, கூடுதல் அழகாய் தெரிந்தான் மகன்.
அவர் போட்டோ எடுத்து முடிக்கவும், “நீங்களும் அம்மாவும் சேர்ந்து நில்லுங்கப்பா” என்று குரு சொல்ல, மகேந்திரனோ
“நாங்க செல்ஃப் எடுத்துப்போம். நீ வண்டிக்கு சொல்லு” என்றதும் குரு விழிக்க, பார்த்த தென்றலுக்கு சிரிப்பு.
“மாமா கிட்ட இருந்து நீங்க கத்துக்கணும் குரு!” தென்றல் மெல்ல குருவிடம் சொல்ல,
“கத்துக்கணும் தான்!” என்றான் அப்பாவை ரசித்தபடி. அப்பாவை ரசிக்கும் குருவை தென்றல் ரசித்தாள். மகேந்திரன் மனைவியின் தோளில் கைப்போட்டபடி செல்ஃபி எடுத்தார். பின் லாவண்யாவோடு சேர்ந்து மூவரும் எடுத்தனர்.
“நீ எப்படி போற தென்றல்?” என்று குரு அவளிடம் கேட்க, “நானும் கேப் தான், கிளம்புறேன் குரு” என்று தென்றல் கூற, குரு அவளை கேப் ஏற்றிவிட்டு வந்தான்.
தென்றல் போகும் வழியெல்லாம் குருவையும், அவனை ரசித்த மகேந்திரனையும் தான் யோசித்தாள். அந்த மகிழ்ச்சியைப் பார்த்து நிறைந்த மனம், அதே நேரம் இத்தனை அன்பான அப்பா மகனை பிரிய உன் அப்பாவும் ஒரு காரணம் என்று இடித்துரைத்தது.
அப்பாவின் தவறில் தனக்கு பொறுப்பில்லை என்று மனம் நினைத்தாலும் குருவை ஏமாற்றியதை நினைத்து மனம் மீண்டும் துவண்டது.
எண்ணங்கள் அப்படித்தானே, எங்கெங்கோ செல்லும், ஒரே நொடியில் உயர்வாய் உணர வைக்கும், ஒரு நொடியில் தாழ்வாய் நினைக்க வைக்கும்! தென்றல் அப்படிதான் உணர்ந்தாள், குருவின் காதல் அதன் மிகுதி எல்லாம் பிடித்தது, ரசித்தாள். அதே நேரம் இப்படியான காதலை நீ ஏமாற்றினாய். உன் சுய நலத்திற்காக உடைந்திருந்தவனை மீண்டும் உடைத்தாய் என்று மனம் குத்திக்காட்டியது.
குரு திட்டியபோது, சண்டையிட்ட போது அது எப்போது சரியாகும் என்று நினைத்தாள், இப்போது அதெல்லாம் சரியாக, அடுத்த பிரச்சனையை யோசிக்க துவங்கியது மனது! இவனை என்னால் என்றுமே குற்றமில்லா மனதோடு நேசிக்க முடியாதா என்ற ஏக்கம் அவளிடம்! குறையா காதல் ஆனால் அது குறை கண்டது மனது! அதுவும் குரு இன்று பழையபடி இருக்கா விட்டால் பரவாயில்லை என்று சொல்லியிருக்க, என்னை அவன் ஏற்றுக்கொண்டாலும் இந்த நெருடல் இல்லாமல் இருக்குமா என்று நிறைய யோசனை!