சிறிது நேரம் தனிமையில் அதன் அமைதியில், மனதில் மையம் கொண்ட அனுராகத்தில் ஆழ்ந்து குருவும் தென்றலும் அப்படியே நின்றனர். இருவரின் கையும் பிணைந்து இருக்க, அதனை அழுத்திய குரு
“போலாம் தென்றல்” என்றான். தென்றல் பதில் பேசாமல் அவனை ஒரு முறை அணைத்துக் கொண்டாள்.
“இந்த இடம், இந்த குரு எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன்” தென்றல் அவன் தோள் சாய்ந்தபடி, முகம் மட்டும் நிமிர்த்தி சொன்னாள். அவள் விழிகளில் பிரியத்தை தேடிடும் பாவனை குருவை அசைத்தது.
“எப்பவும் நீங்க குருவை மிஸ் பண்ண மாட்டீங்க தென்றல் மிஸ்” என்று செல்லமாய் சொல்லி குருவும் அவளை அணைத்துக் கொண்டான்.
இரண்டு நிமிடம் நின்றவன், “லேட்டாச்சு, வா போலாம்” என்று மீண்டும் சொல்ல, இருவரும் இறங்கி சென்றனர். நினைவுகளும் கூடவே அவர்களோடு இறங்கியது. தென்றல் குரு இருவரும் இறங்கி கருணாவின் வீடு செல்ல, மகேந்திரன் குடும்பத்தோடு வெளியே வந்தார்.
மகனையும் தென்றலையும் பார்த்தவருக்கு மனம் நிறைந்தது. அவர் குருவின் முகத்தில் இருந்த அந்த நிறைந்த புன்னகை, அது மகனை இன்னும் வசீகரமாக காட்டியது. ரசித்து பார்த்தார் அந்த காட்சியை. கண்கள் கலங்கி போனது மகேந்திரனுக்கு.
“என்னப்பா போலாமா? கேப் புக் பண்றேன்” என்று சொல்லியபடி போனை எடுக்க
“இரு குரு, ஒரு நிமிஷம்.” என்று மகனை நிறுத்தியவர் அவரின் போன் எடுத்து
“சேர்ந்து நில்லுங்க, நான் போட்டோ எடுக்கணும்” என்றார்.
“அப்பா” என்று குரு தயங்க, “நில்லுடா!” என்று மீண்டும் சொல்ல, குரு தென்றலின் கையைப் பிடித்தபடி நின்றான்.
மகேந்திரன் மிகுந்த ஆர்வமாக, மகனையும் மருமகளையும் படம் எடுத்தார். மகன் முகத்தில் இத்தனை நாள் இருந்த அந்த சோகம் நீங்கி அசோகனாய் நின்றிருந்தான். குருவின் காதல், அதன் காயம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அப்பா இல்லாத போது தலைவனாக குடும்பத்தை தாங்கியவன், அவர் வந்த பின் மீண்டும் அவர் கைப்பிடிக்கும் சிறுவனாக மாறிப்போனான். இன்று தென்றல் அருகே இருக்க, கூடுதல் அழகாய் தெரிந்தான் மகன்.
அவர் போட்டோ எடுத்து முடிக்கவும், “நீங்களும் அம்மாவும் சேர்ந்து நில்லுங்கப்பா” என்று குரு சொல்ல, மகேந்திரனோ
“நாங்க செல்ஃப் எடுத்துப்போம். நீ வண்டிக்கு சொல்லு” என்றதும் குரு விழிக்க, பார்த்த தென்றலுக்கு சிரிப்பு.
“மாமா கிட்ட இருந்து நீங்க கத்துக்கணும் குரு!” தென்றல் மெல்ல குருவிடம் சொல்ல,
“கத்துக்கணும் தான்!” என்றான் அப்பாவை ரசித்தபடி. அப்பாவை ரசிக்கும் குருவை தென்றல் ரசித்தாள். மகேந்திரன் மனைவியின் தோளில் கைப்போட்டபடி செல்ஃபி எடுத்தார். பின் லாவண்யாவோடு சேர்ந்து மூவரும் எடுத்தனர்.
“நீ எப்படி போற தென்றல்?” என்று குரு அவளிடம் கேட்க, “நானும் கேப் தான், கிளம்புறேன் குரு” என்று தென்றல் கூற, குரு அவளை கேப் ஏற்றிவிட்டு வந்தான்.
தென்றல் போகும் வழியெல்லாம் குருவையும், அவனை ரசித்த மகேந்திரனையும் தான் யோசித்தாள். அந்த மகிழ்ச்சியைப் பார்த்து நிறைந்த மனம், அதே நேரம் இத்தனை அன்பான அப்பா மகனை பிரிய உன் அப்பாவும் ஒரு காரணம் என்று இடித்துரைத்தது. அப்பாவின் தவறில் தனக்கு பொறுப்பில்லை என்று மனம் நினைத்தாலும் குருவை ஏமாற்றியதை நினைத்து மனம் மீண்டும் துவண்டது.
எண்ணங்கள் அப்படித்தானே, எங்கெங்கோ செல்லும், ஒரே நொடியில் உயர்வாய் உணர வைக்கும், ஒரு நொடியில் தாழ்வாய் நினைக்க வைக்கும்! தென்றல் அப்படிதான் உணர்ந்தாள், குருவின் காதல் அதன் மிகுதி எல்லாம் பிடித்தது, ரசித்தாள். அதே நேரம் இப்படியான காதலை நீ ஏமாற்றினாய். உன் சுய நலத்திற்காக உடைந்திருந்தவனை, மீண்டும் உடைத்தாய் என்று மனம் குத்திக்காட்டியது.
குரு திட்டியபோது, சண்டையிட்ட போது அது எப்போது சரியாகும் என்று நினைத்தாள், இப்போது அதெல்லாம் சரியாக, அடுத்த பிரச்சனையை யோசிக்க துவங்கியது மனது! இவனை என்னால் என்றுமே குற்றமில்லா மனதோடு நேசிக்க முடியாதா என்ற ஏக்கம் அவளிடம்!
குறையா காதல் ஆனால் அதில் குறை கண்டது மனது! அதுவும் குரு இன்று பழையபடி இருக்கா விட்டால் பரவாயில்லை என்று சொல்லியிருக்க, என்னை அவன் ஏற்றுக்கொண்டாலும் இந்த நெருடல் இல்லாமல் இருக்குமா என்று நிறைய யோசனை!
போனில் மெசெஜ் வந்த ஒலி வர, பார்த்தால் குரு இன்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் அனுப்பியிருந்தான். தென்றலுக்கு அந்த புகைப்படங்களை பார்க்க பார்க்க அவ்வளவு பிடித்தது. அவர்கள் நிச்சயத்தின் போதும் எடுத்தார்கள், அப்போது மனதில் இருந்த உறுத்தல், பயம் எல்லாம் நிம்மதியாக இருக்க விடவில்லை. இன்று இருவரின் கரமும் கோர்த்திருக்க, மகேந்திரன் நிற்க வைத்து எடுத்த புகைப்படம், தென்றலின் சந்தோஷத்துக்கு குறைவில்லை.
காதலை சொல்ல முடிகிறது, உண்மையை எல்லாம் பேச முடிகிறது. உவகை, ஆவல், கனவுகள் என்று எல்லாம் இருக்கிறது, ஆனாலும் பெண் மனது ஒரு பேரமைதிக்காக பேராவல் கொண்டது.
அதுவும் குரு இன்று பழையதை எல்லாம் விடு, பழையபடி உணர்வுகள் இருக்குமா தெரியவில்லை என்றெல்லாம் பேசியிருக்க, ‘யூ ப்ரோக் மீ!’ என்ற அவனின் வார்த்தைகள் நீங்காத எண்ணமாய் அவளுள் ஒலித்தது.
அது எல்லாம் விட குருவின் அன்பின் மிகுதி தென்றலை அசைத்தது, இவளுக்கும் அன்பு மிகுதியே, ஆனால் அதன் நியதி?! நேர்மையானதாக இருக்க வேண்டுமே அன்பு, காயப்படுத்தாமல். இவள் அதையல்லவா செய்தாள்.
குருவின் அன்பை மொத்தமாக கொண்டாட முடிந்தாலும் ஏதோவொரு இடர், அனுராகத்தில் ஒரு அபஸ்வரம்!
இப்படி எண்ணங்கள் கண்டபடி தாவிட, வீடும் வந்து விட்டது. போகும் போது இருந்ததுக்கு முற்றிலும் வேறு மன நிலை, அது முகத்திலும் பிரதிபலித்தது. பட்டுப்புடவை, பூ, நேர்த்தியான நகைகள் என்று இருந்தாலும் போகும்போது குருவைப் பார்க்க போகிறோம் என்ற ஆவல் இருந்தது. அந்த தேடலே கண்ணில் ஒரு பரவசத்தை தந்தது. அவனோடு இருந்த வரை பரவசம் இருந்தது. இப்போது சோர்வு, ஆனாலும் தனக்கான தண்டனை என்று நினைத்துக் கொண்டாள்.
வீட்டினுள் நுழைந்த தென்றலை பார்த்த கைலாஷ்,
“என்ன தென்றல்? ஃபங்கஷன் எப்படி போச்சு?” என்று கேட்டான். தங்கையின் முகம் வாடியிருப்பது தெரிந்தது.
“குட்’ணா” என்றவள் அறைக்குள் போக, அறை வாசலில் சென்று நின்ற கைலாஷ்,
“ஏன் டல்லா இருக்கடா? குரு எதாவது சொன்னாரா?” என்றவனின் குரலில் கோபமிருந்தது.
கைலாஷின் கோபம் தென்றலை பாதிக்க, “என்னோட சந்தோஷத்துக்கு மட்டும் குரு எப்பவும் காரணமா இருப்பார்’ணா, டல்லா இருக்கேன்னா? காலையில சீக்கீரம் எழுந்தது தலைவலி. அதுக்கு உடனே குருவை சொல்வீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள். என்னை பார்வையாலே தாங்குகிறான், அவனை போய் என்ற எரிச்சல்.
தென்றல் கோபமாகப் பேசிவிட்டு உள்ளே போக, கைலாஷுக்கு குருவின் மீதுதான் கோபம் வந்தது. இந்த காதல் கண்றாவி என்று பல்லைக் கடித்தான். அந்த கோபம் அடுத்த சந்திப்பில் வெளிப்பட்டது.
அன்று மகாதேவன் மனைவியுடன் மகேந்திரன் வீட்டிற்கு வந்திருந்தார். குரு தென்றல் திருமண விஷயங்கள் குறித்து பேசினர். குருவும் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான்.
“அண்ணா, கல்யாணம் நீங்க சொல்ற மாதிரி கோவில்ல வைச்சுக்கலாம். ஆனா ரிசப்ஷன் கிராண்டா பண்ணனும், ப்ளிஸ்” என்று மகாதேவன் மகேந்திரனிடம் முறையிட,
“அதுக்கென்னடா, பண்ணிக்கலாம்” என்றார் இன்முகமாக. அவருக்கு தேவராஜன் மூலமாக மகாதேவன் நல்ல பழக்கம் என்பதால் நல்லவிதமாகவே பழகினார். குரு வந்தவர்களை வரவேற்றான், அமைதியாக அப்பா பேசட்டும் என்றிருந்தவன் இப்போது இடையிட்டான்.
“இல்லப்பா, வேண்டாம்” என்றான்.
“என்ன குரு” என்று மகேந்திரன் பார்க்க
“ஏன் குரு வேண்டாம்னு சொல்றீங்க?” என்று மகாதேவனும் கேட்டார்.
இன்னமும் உரிமையான பேச்சு வரவில்லை. மரியாதையாக மட்டுமே பேசினான்.
“இல்ல குரு, சுகன்யாவுக்கு செஞ்ச மாதிரி அதைவிட பெருசா தென்றலுக்கு செய்யணும்னு நாங்க ஆசைப்படுறோம். உங்களுக்கே தெரியும், நம்ம யுனிவர்சிட்டில நிறைய பேர் கூப்பிடணும், அப்புறம் பில்டர்ஸ் சைட்லயும் எல்லாரையும் இன்வைட் பண்ணனும்” என்று பொறுமையாக விளக்கினார்.
“அதெல்லாம் நீங்க கைலாஷ் சாருக்குப் பண்ணுங்க சார், எனக்கு இதுல விருப்பமில்ல” என்று மறுத்துவிட்டான். மகாதேவன், ராதா முகம் சுருங்கியது.
“தென்றல் எங்க பொண்ணு குரு, என் அண்ணா அண்ணி இல்லைனு நாங்க விட முடியாது. சுகன்யா, கைலாஷுக்கு செய்றதவிட அதிகமாதான் நாங்க தென்றலுக்கு செய்வோம். அது எங்க கடமை, கல்யாணம் உங்க விருப்பப்படி செய்றோமே, கன்சீடர் பண்ணுங்க குரு” என்று மகாதேவன் பேச, மகேந்திரன் மகனை பார்வையால் அடக்கியவர்
“உன் இஷ்டப்படி செய்யலாம் மகா, நீ ரிசப்ஷன் வேலையைப் பார்த்துக்க” என்றார். அதன் பின் புடவை எடுப்பது பற்றி பேச, அந்த வாரம் செல்லலாம் என்று முடிவு செய்தனர்.