சில நிமிட மௌனத்திற்குப் பின், குரு தென்றலை தட்டினான். தென்றல் விழியுயர்த்தி பார்க்க,
“தூங்குவோமா, டயர்டா இருக்கு” என்றான்.
“ஓகே” என்று தென்றல் சொல்லி நகர்ந்து படுக்க,
“உனக்கு ஓகே தானே தென்றல்?” என்றான் மீண்டும்.
“குரு! எனக்குப் புரியாதா?” என்றாள் புரிதலாக. இன்றைய இரவைப் பற்றி அவர்கள் ஏற்கனவே பேசியிருந்தது, நாளை இரவு இருவரும் காஷ்மீருக்குத் தேன் நிலவு செல்கின்றனர். ஷ்ரவன்-வருணின் திருமண பரிசு. அதனால் இன்று விலகல்.
“காலையில மறுவீடு போகணும் அம்மா சொன்னாங்க. நீ ரெடி ஆகிட்டு என்னை எழுப்பு, செம டயர்ட்” என்றவன் உறங்கி போக, களைப்பில் அவளும் தூங்கி போனாள். அடுத்த நாள் குருவும் தென்றலும் மறுவீடு சென்றனர். காலையிலேயே சென்றிருக்க, மகாதேவன் தென்றலிடம்,
“அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கடா” என்றுவிட்டார் . குருவும் தென்றல் ஒன்றாக நிற்க, அவர் பேசியது கேட்டு தென்றல் இயல்பாக ஒரடி எடுத்து வைத்தவள் பின் நிதானித்து கணவனை பார்த்தாள். குரு அப்படியே நின்றவன் பார்வை தென்றலிடம் ‘போ’ என்றது.
குரு அங்கே நிற்க, மகாதேவனுக்கு குருவை புரிய “வாங்க மாப்பிள்ளை, அங்க உட்காருங்க” என்றார். ஷ்ரவனும் வருணும் இருக்க, குருவுக்கு அவர்கள் அருகாமை இயல்பாக உணர வைத்தது. தென்றல் அப்பாவிற்கு பூ போட்டு அவர் படத்தின் முன் விழுந்து எழுந்தாள். உள்ளே கலங்கினாலும் காட்டவில்லை.
குருவின் அருகே வர, இருவரையும் உண்ண அழைத்தனர். சுகன்யா, ஷ்ரவன், வருண் எல்லாரும் ஒன்றாக சாப்பிட குருவுக்கும் தயக்கமில்லாமல் இருந்தது. இதில் வருண் வேறு,
“பார்த்தியா தென்றல், உன் சாக்குல ஷ்ரவனும் செகண்ட் டைம் விருந்து சாப்பிடுறான்” என்று கிண்டல் செய்ய
“நானாச்சும் வீட்டு மாப்பிள்ளை, நீயேன் டா சாப்பிடுற?” என்று ஷ்ரவன் தம்பியை சீண்ட
“ஹலோ! நான் தென்றல் ப்ரண்ட். உன் தம்பியா வரல” என்று அவனும் பதிலுக்குப் பேசினான்.
குருவை பார்த்த ஷ்ரவன், “குரு, நைட் ஃப்ளைட். உங்களை பிக் அப் பண்ண இவனை அனுப்பி வைக்கிறேன்” என்றான்.
“அதெல்லாம் எதுக்குண்ணா? நான் கேப் புக் பண்ணிக்கிறேன்” என மறுக்க,
“அண்ணா செய்றேன், நீ நோ சொல்லாத” என்றான் கட்டளையாக.
உணவு முடிய எல்லாரும் ஹாலில் உட்கார்ந்திருக்க, அந்த பெரிய ராஜ காலத்து சோஃபா முன்னே பெரிய சட்டத்துக்குள் தேவராஜன், வாணியின் புகைப்படம் இருக்க குருப்ரசாத்துக்கு அது குறுகுறுப்பாக இருந்தது. அந்த பக்கம் பார்க்கவே பிடிக்கவில்லை. இல்லை என்பதால் துரோகி எல்லாம் தியாகி ஆகிட முடியாது, என்ற அவன் எண்ணத்தில் திண்ணமாக இருந்தான். மறப்பது, மன்னிப்பது எல்லாம் தாண்டி ஏற்க முடியவில்லை. அந்த வீட்டில் இருப்பது அவஸ்தையாக இருந்தது. முயன்று ஷ்ரவன், வருணோடு பேச்சில் கலந்தான். தென்றல் குருவையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கணவனை புரிந்தது.
“குரு, ரெஸ்ட் எடுக்கலாம் வாங்க” என்று அழைக்க, பெருமூச்சுடன் எழுந்தான். அறைக்குள் சென்று உட்காரவும் கொஞ்சம் அமைதியாய் உணர்ந்தான். மதிய விருந்தும் பிரமாதமாக இருக்க, ஹால் பக்கம் இருக்கும் லிவிங் ஏரியாவில் குடும்பமாக உட்கார்ந்திருந்தனர். கைலாஷ் குருவின் பக்கம் வந்தவன், அவனிடம் ஒரு கார் சாவியை நீட்டினான்.
“உங்க மேரேஜுக்கு என்னோட பிரசண்ட் குரு, கார் கீ” என்று சொல்ல, குரு வாங்காமல் கைலாஷைப் பார்த்தான்.
“சாரி கைலாஷ்! எனக்கு வேண்டாம்” என்று மறுக்க, எல்லார் முகமும் மாறிவிட்டது. கிருஷ்ணகுமார் உடனே,
“ஏன் மாப்பிள்ளை? அவன் ஆசையா தங்கச்சிக்கு செய்யணும்னு நினைக்கிறான். நாங்க சுகனுக்கும் செஞ்சோம்” என்றார்.
“ப்ளீஸ் மாமா! என்னை கம்பெல் பண்ணாதீங்க. ஷ்ரவன் அண்ணா வாங்கினார்னா அது அவரோட விருப்பம். என்னையும் அவரையும் கம்பேர் பண்ணாதீங்க. எனக்கு விருப்பமில்லை” என்றான் அழுத்தமாக. மகாதேவன் மனம் வாடியது. கைலாஷ் தங்கையை முறைத்தான்.
“தென்றலுக்காக வாங்க மாட்டீங்களா குரு? இன்னும் நீங்க எங்க அண்ணாவை நினைச்சு” என்றவரிடம் மறுப்பாக தலையசைத்தவன்
“சாரி கைலாஷ்!” என்றான் மீண்டும். எல்லாரும் தென்றலை பார்க்க, அவனுக்கு தென்றல் போதுமென்றது தென்றலுக்கு போதுமானது! இருந்தும் வீட்டினரை பார்த்தாள்.
“அண்ணா! கிஃப்ட் என்ன மாப்பிள்ளைக்குத்தானா? எனக்கு புது கார் இல்லையா?” என்று கை நீட்ட, கைலாஷ் திருப்தியாக தங்கையைப் பார்த்தான்.
“உனக்குக் கொடுத்தா என்ன அவருக்குக் கொடுத்தா என்ன? சந்தோஷமா இருடா” என்று வாழ்த்தி தங்கை கையில் கொடுத்தான். குருவுக்கு அதில் விருப்பமில்லை, இருந்தும் தென்றலை பேசாமல் பொறுமையாக இருந்தான். மாலை ஆகிவிட வீட்டுக்குச் சென்று பேக் செய்ய வேண்டுமென இருவரும் கிளம்பி விட்டனர். தென்றல் பிறகு வந்து காரை எடுத்து போவதாக சொல்லிவிட்டு அவளுடைய காரை எடுத்தாள். காரில் ஏறியதும் குரு கோபமாக,
“இப்ப ஏன் இந்த காரை எடுத்த தென்றல்?” என்று கேட்டான்.
“இது என்னோட கார் குரு. நான் சம்பாரிச்சு ஸேவ் பண்ணி வாங்கினது, நீங்க புரிஞ்சிப்பீங்கனு நினைச்சு எடுத்தேன்.” என்றாள் பொறுமையாக.
“கைலாஷ் கொடுத்த கார்?” கோபத்துடன் பல்லைக் கடித்தான்.
“நீங்க லாவண்யாவுக்கு ஆசையா ஒரு விஷயம் செஞ்சா, இப்படி அவ மாப்பிள்ளை பேசினா உங்க மன நிலை எப்படி இருக்கும்?” தென்றல் அழுத்தமாக கேட்டபடி காரை செலுத்தினாள்.
“எனக்கு வரதட்சணை வாங்குறது எல்லாம் பிடிக்காது”
“நல்ல விஷயம் குரு, அதுல எனக்கு பெருமை! சுகனுக்கு சீர்வரிசையா அவ்வளவு செஞ்சாங்க. ஏன் ஷ்ரவன் மாமா வீட்ல இல்லையா? இல்லை அவரால வாங்க முடியாதா? எனக்கு செய்ய நினைச்சப்ப, நானே வேண்டாம் சொல்லிட்டேன். நம்ம வீட்ல எல்லாம் இருக்கே, இல்லைனாலும் நம்ம வாங்கிக்கலாம். இந்த கார் கூட என்னோட சுயசம்பாத்தியம், ஷ்ரவன் மாமாவுக்கு யுனிவர்சிட்டியில ஷேர் உண்டு, உங்களுக்குக் கொடுக்கணும்னு சித்தப்பா மாமா கிட்ட சொன்னப்ப அவர் வேண்டாம் சொல்லிட்டார். நானும் உங்களை வருத்தப்படுறதை செய்ய நினைக்கல குரு. அதே நேரம் என் குடும்பத்தையும் என்னால வருத்தப்பட வைக்க முடியாது. நான் அம்மா இல்லாத பொண்ணு, என்னை எதுக்கும் ஏங்க வைக்காம பார்த்தவங்க என் சித்தப்பாங்க, சித்திங்க… எனக்கு அவங்க வேணும்” என்று அழுகையைக் கட்டுப்படுத்தி உதடு கடித்தவள் கண்கள் சாலையில் கவனமாக இருந்தது.
குருவுக்கு தென்றலை ஏற்க முடிந்தாலும், இதெல்லாம் ஏற்க முடியாத தடுமாற்றம். அது கோபமாக வெளிப்பட்டது. உண்மையில் திருமணம் என்ற ஒன்றை முன்னர் முடிவு செய்த போது, அவனின் எதிர்கால கனவுகளில் எல்லாம் தென்றலும் சேர்ந்தே இருந்தாள். தென்றலுக்கு யாருமில்லை, நான்தான் அவளுக்கு என்ற எண்ணம் அப்போது ஆழமாய் பதிந்து விட்டது. அந்த அசையா உண்மையே இன்றைய நிதர்சனத்துக்கு இசைய மறுத்தது. அது உண்மை இல்லை என்று புரிந்தாலும் ஏற்க முடியவில்லை.
பிடித்தம், பிடிவாதம்! என் தென்றலுக்கு நான் செய்வேன் என்ற காதலின் அழுத்தம். அவன் கட்டமைத்த கற்பனை எல்லாம் பொய் என்று உணரும்போது வலியோடு கோபம், ஏமாற்றம்!
குரு பதில் பேசாமல் சிந்தனையில் இருக்க, தென்றலும் பேசவில்லை. இதையெல்லாம் எதிர்ப்பார்த்தவள் தானே? தேறிக்கொண்டாள். ஆனால் முகம் கலங்கி இருந்தது. குருவுக்கோ தென்றலை காயப்படுத்துகிறோம் என்று புரிய, வீட்டில் சென்று சமாதானம் செய்யலாம் என்று நினைத்தான். வீடு சென்றதும் தென்றல் மகேந்திரனிடமும் கீதாவிடமும் கைலாஷின் பரிசை சொல்லிவிட்டாள்.
அவர்கள் புரிந்து கொள்ள “என் காரை எடுத்துட்டு வந்தேன், அது நம்ம வீட்டுக்கு யூஸ் பண்ணிக்கலாமா மாமா?” என்று மகேந்திரனிடம் கேட்க அவரும் மகனை பார்த்தவர், அவன் தலையசைக்க ஒத்துக்கொண்டார்.