தென்றல் “நான் போய் பேக் பண்றேன் அத்த” என்று சொல்லி அறைக்குள் போக, குருவும் சென்றான்.
“தென்றல்!” குரு மென்மையாக அவளை அழைக்க, மெத்தை மீதிருந்த ட்ராலியில் உடைகளை குனிந்தபடி அடுக்கிக் கொண்டிருந்த தென்றல்
“ப்ளீஸ் குரு, கிளம்புறப்ப சண்டை வேண்டாம்” என்றாள். பிறந்த வீட்டினை பிரிந்த ஏக்கம், அப்பா… அம்மா.. குருவோடான வாழ்க்கை என்று கலவையான கவலைகள்!
“எஸ், சண்டை வேண்டாம்” என்றபடி தென்றலின் தோளைப்பற்றி நிமிர்த்தினான் குரு. தென்றல் முகம் தவிப்பில் தத்தளித்தது.
“என்னாச்சும்மா?” குருவின் வாஞ்சையான குரலில், அப்படியே முகத்தை அவன் தோளில் அழுத்திக் கொண்டாள். குருவின் அன்புக்கரங்கள் தென்றலை சுற்றிவளைக்க,
மெல்லிய குரலில், “சாரி” என்றான்.
“இல்லை, நீங்க பேசினதுக்கு இல்லை. இது வேற… என்னமோ ஐ ஃபீல் லைக்.. எனக்கு சொல்லத் தெரியல.. ” என்று சொன்னவள் அவன் தோளில் ஆறுதலுக்காக சாய்ந்து கொண்டாள்.
“எனக்கும் வேற கோபம்..அது என் தென்றலுக்கு நானே எல்லாம் செய்யணும்ன்ற எண்ணம். அது மனசுல பதிஞ்சு போச்சா… சில உண்மையை ஒத்துக்க முடியல. உனக்கு நான் மட்டும்தான் எல்லாமேனு ஒரு பிம்பம் இருந்தது எனக்கு. இப்போ அது இல்லை, உன் மேல பாசம் காட்ட சித்தப்பா, சித்தி, அக்கா, அண்ணா, தம்பினு எல்லாரும் இருக்க..” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் கொஞ்சம் வெட்கமான குரலில்
“பொசஸிவ்நெஸ்!” என்றான். அந்த வெட்கக் குரலில் பாவனையில் தென்றலுக்கும் மெல்லிய புன்னகை. அவன் தோளில் சாய்ந்திருந்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிவதை உணர்ந்தவன்
“கொஞ்சம் முகத்தைப் பார்த்து சிரிச்சா நானும் சிரிப்பேன்” என்றவன் இதழ்கள் தென்றல் காதோரம் உரசியது. குருவின் பேச்சிலும் செயலிலும் தென்றல் சிரித்தாள், சிலிர்த்தாள். தென்றல் நேரமாவதை உணர்ந்து, “உங்க பேச்சு கரெக்ட், நான் உங்க தென்றல் பட் உங்களுக்கு மட்டுமே தென்றல் கிடையாது இல்லையா குரு?” என்று தென்றல் நியாயம் பேச குரு முறைத்தான்.
“என்ன குறு குறுனு பார்க்கிறீங்க?” அவனை தள்ளி விட்டு தென்றல் கேட்க,
“இன்னும் நிறைய பார்ப்ப!” என்றான் விஷமமாக. பேசிக்கொண்டே இருவரும் எல்லாம் எடுத்து வைக்க, வருண் வந்துவிட்டான். சிவாவிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லி விடைப்பெற்றனர். இருவரையும் விமான நிலையத்தில் இறக்கி விட்டவன் தென்றலை புன்னகையுடன் பார்த்து,
“இவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் குரு, சொல்லாமலே இருந்தா.. நல்லா பார்த்துக்கங்க. ஹேய் நீயும் எங்கண்ணனை நல்லா பார்த்துக்கோ” என்றான். குரு தென்றல் இருவரும் புன்னகையுடன் தலையசைத்தனர்.
பயணம் முடிந்து அவர்கள் காஷ்மீர் சென்று சேர நள்ளிரவுக்கும் மேல் ஆகியது. அறைக்குச் சென்றவர்கள் அப்படியே சிறிது நேரம் உறங்கிவிட்டனர். இரண்டு மணி நேரத்தில் தென்றல் விழித்துவிட்டாள். பால்கனியை திறக்க, சாலையெங்கும் வெண்பனி. கைகளைத் தேய்த்தபடி அந்த அழகை ரசித்து நின்றாள். ஜில்லென்ற குளிர், அணிந்திருந்த அத்தனை ஆடையையும் மீறி உணர முடிந்தது.
பூ பூவாய்க் கொட்டிய பனியை கண்கள் ரசித்து அப்படியே நிற்க, குருவும் எழுந்துவிட்டான். தென்றலை உரசி நின்றபடி அவனும் வெளியே பார்த்தான்.
இந்த பனிமழை, தென்றல் எல்லாமே குருவுக்குப் புதிது! இதுவரை இங்கே வந்ததில்லை. அவனும் கொஞ்சம் ஆர்வமாக பார்த்தான். அவர்கள் நின்ற இடத்தில் இருந்து தூரமாக பனி போர்த்திய மலை. எல்லா இடத்திலும் பனி, அன்று மிகுதியான பனி பொழிவும் கூட! இன்னும் இருள் விலகவில்லை. குல்மார்க்கின் குளிரில் தென்றல் விரல்கள் நடுங்க, குரு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“முழிச்சிட்டீங்களா?” என்று குருவிடம் கேட்டாலும் பாவை பார்வை வெளியே. அந்த பனி தூறலை தென்றல் ரசித்து ரசித்து பார்த்தாள். இயற்கை எல்லாவற்றையும் மறக்க செய்தது. அவளின் பிரிய பிரபஞ்சத்தில் குருவும், அவளும்! நினைவில் நிஜத்தில் புன்னகை மலர
“எனக்கு ஸ்ணோ அவ்வளவு பிடிக்கும் குரு, நான் எல்லாம் ப்ளான் பண்ணிட்டேன், இன்னிக்கு இங்க சுத்துறோம். நாளைக்கு ஸ்னோ ஸ்கேட்டிங் போறோம், அப்புறம் காலையில டால் லேக். அந்த சில் க்ளைமேட்ல, போட்ல.. இட்ஸ் அவுட் ஆஃப் தி வொர்ல்ட்!” என்று ஆவலாய்ப் பேசிய மனைவியின் கண்களை ஆவலாக பார்த்தான் குரு.
“உங்களுக்கு மவுண்டன்ஸ் பிடிக்குமா இல்லை பீச்.. பனி பிடிக்குமா?” இன்னும் அதே உற்சாகத்தோடு தென்றல் கேட்டிட,
“எனக்கு மழை, வெயில், குளிர் எல்லாம் விட தென்றல்தான் பிடிக்கும்!” என்றவன் அவளை தன்னை பார்த்து திருப்பினான். தென்றலின் கன்னம் தொட, ஜில்லென்று இருந்தது. இருகரத்தாலும் அவள் முகம் பற்ற, குருவின் விரல்களும் சில்லென்று இருக்க,
“குளிருது, குளிருது! கையை எடுங்க குரு” என்றாள் உடல் சிலிர்த்து.
“நோ வே.. உனக்கு பிடிச்ச பனியை நீ ரசி, எனக்குப் பிடிச்ச தென்றலை நான் ரசிக்கிறேன்” என்று குருவின் குரல் தென்றல் காதோரம் உரச, உள்ளும் புறமும் பெயர் தெரியா குளுமை. நடுக்கத்தோடு ஒரு பேராவல்.
ரகசியம் தேடிடும் ரசிகனாய் குருவின் வார்த்தைகள் வர, அவனிடம் பேச்சில்லை. தென்றலின் காதில் தொடங்கி சின்ன சின்னதாய் மென் முத்தங்கள் இட்டான். குருவின் வார்த்தைகளிலும் முத்தங்களிலும் ஈரம்! தென்றல் கூச்சத்தோடு கண்மூடி
“குரு.. இது மார்னிங்!” என்றாள் காற்றான குரலில். தென்றலின் அந்த குரல் குரு இதுவரை கேட்டிராதது.
“காலையில எந்த விசயம் செஞ்சாலும் மனசுல பதியும்” என்ற குருவின் வார்த்தைகளோடு தென்றல் கழுத்தில் அழுத்தமாய் பதிந்தது அவன் முத்தம். ஒற்றையாய் தொடங்கினாலும் கணக்கிடாமல் தொடர்ந்தான் கணக்கு படித்தவன். “குரு” என்ற தென்றலின் கரங்களும் அவனை பற்றிக்கொள்ள குளிருடன் இருவருக்கும் நடுக்கம், கூடவே இன்னும் கூடியது நெருக்கம்.
தென்றலை இழுத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தவன்,
“ஹனிமூன் வந்துட்டு பனியில நனையனுமா உனக்கு?” என்று கேட்டு கேட்டு அவளை திணறடித்தான்.
குரு இச்சைக்காதலை இஷ்டம் போல் காட்டினான். தென்றலும் இறுக்கமாகக் குருவை அணைத்துக்கொண்டாள். இருவரும் அத்தனை நாள் ஆவலை காதல் தடங்களாக காட்டினர். தூரங்கள், கவலைகள், தயக்கங்கள் எல்லாம் அக்கணம் விலகிட அனுராகத்தின் அரங்கேற்றம்!
குரு பேசாத பேச்செல்லாம் பேசினான். தென்றல் அவனை இழுத்துக் கட்டிக்கொண்டவள் அவன் பேச்சில் முறைத்தாள். தென்றலிடம் அவனுக்கு தடையேது?! சந்தோஷமாக உணர்ந்து அவளையும் உணர வைத்தான்.
“ஆனா என்ன தென்றல் எல்லாரையும் தொடும், தென்றலை என்னால மட்டும் தான் தொட முடியும்… இப்படி முத்தம் கொடுக்க முடியும்” என்று ரசனையாக சொல்லி, குருவின் விரல்கள் தென்றல் கன்னம் பற்றின.
“எப்போ கவிதை எல்லாம் சொல்ல ஆரம்பீச்சிங்க ஃப்ரோபஸர்?” தென்றல் சிவந்த முகத்தோடு கேட்க,
“இயற்கையை ரசிச்சா தானா வரும் தென்றல்ல்…” என்று அவளை காட்டி ரசித்து இழுக்க,
“அன்ரோமாண்டிக்னு நினைச்சு உங்களை அண்டரெஸ்டிமேட் பண்ணிட்டேன்” தென்றல் மெல்ல முணுமுணுக்க
“இஸீட்?” என்று கேட்டவன் “அப்போ உன் தியரி தப்புனு ப்ரூவ் பண்ணிடனும்…” என்று தென்றலை பனியாய் நனைத்தான் குரு.