வெண்ணிற இரவென்றால் என்னவென்பதை அவ்விரவில் கண்டான் குரு. அன்று காலையில் காஷ்மீர் வந்திறங்கியவர்கள் இப்போதுதான் மெத்தை விட்டு எழுந்தனர். பனிக்காற்றாய் தென்றலை சூழ்ந்து புது உணர்வில் மிதந்து, கிறங்கி மயங்கி உறங்கி மீண்டும் கிறங்கி என்று பொழுது ஓடி, இப்போதுதான் குளித்து வந்தான். தென்றல் குளிக்க சென்றிருக்க, எதிரே இருந்த சாலையை தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்க எங்கும் வெண்பனி!
குரு புதிதாய் புலர்ந்து மலர்ந்து நின்றான். கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இலைகள் உதிர்ந்து, பனியால் சூழப்பட்டிருந்த நெடுமரங்களை கண்டான். ஊசியாய்த் தீண்டியது பனிக்காற்று. உள்ளே தென்றல் காற்று. உடல், உள்ளம் உற்சாகத்தில் மிதக்க, தென்றலின் ஸ்பரிசம் குளுமையாய் அவனை தீண்டியது. குளித்து முடித்து வந்த தென்றல் கணவனை பின்னிலிருந்து கட்டிக்கொள்ள, முன்னே இழுத்தவன் தென்றலின் ஈர முகத்தைப் பார்த்தான்.
“இங்க எவ்வளவு ஜில்லுனு இருக்கு தெரியுமா?” என்று கேட்டபடி அவன் இருகரத்தாலும் தென்றலின் இரு கன்னங்களைப் பற்றினான் குரு.
“குரு!” என்று குளிரில் பல்லைக்கடித்தவள் “நானே கஷ்டப்பட்டு குளிச்சிட்டு வந்திருக்கேன், நீங்க என்னடான்னா, உங்க கை எவ்வளவு கோல்டா இருக்கு தெரியுமா?” என்று கத்தினாள். குளிரில் உடலை குறுக்க, மனைவியை தன்னோடு இறுக்கிக் கொண்டான் குரு.
“பனியில இருக்க தென்றலை எனக்கு ரொம்ப பிடிக்குதே… அன்னிக்கு மழையில பிடிச்சது.. நீ ஜில்லுனு இருந்தாலே… நான் அவுட் ஆஃப் கன்ட்ரோல்!” என்றவனின் குரல் காதோரம் மெல்ல தீண்ட, தென்றலின் உணர்வோடு சீண்டியது அவன் குரல்.
திணறலாக, “குரு” என்றழைக்க, அந்த குரலில் குறுஞ்சிரிப்பு அவனிடம்.
“இது நல்லாயிருக்கே…” என்று இழுத்தவன் “சரி வா சாப்பாடு வந்தாச்சு. உனக்கு வெயிட் பண்ணேன்” என்றதும் இருவரும் ஒன்றாய் உண்டு முடித்து அப்படியே மெத்தையில் விழுந்தனர். காலையிலிருந்து கலைந்து போய் களைத்து இருந்தனர்.
தென்றல் பூரணமாக உணர்ந்தாள். பயமின்றி, தயக்கமின்றி, சுதந்திர காதல் மட்டுமே சூழ்ந்திருந்தது அவளை. குருவும் முகம் விகசிக்க அறையில் இருந்த ஓவியத்தைப் பார்த்தபடி இருக்க, குருவின் நெஞ்சில் சாய்ந்த தென்றல்
“எனக்கு இன்னும் நம்பவே முடியல குரு! நம்ம இப்படி.. நான் உங்க மேல சாஞ்சிட்டு உரிமையா இருப்பேனு.” இமை மீறிய கண்ணீருடன் சொன்னாள்.
அழுகிறாளோ என்று குரு பார்க்க முகம் புன்னகையில் பூரித்து இருந்தது. குரு பார்வை தென்றலைத் தொட்டது. அவள் பக்கம் பார்த்தவன் “இன்னுமா உன்னால நம்ப முடியல..? இப்படி சாஞ்சுட்டு மட்டுமில்ல… இப்படி முத்தம் கூட கொடுக்கிற அளவுக்கு இருக்கோம்” என்றவனின் சொல் செயலாகி, சில கணங்கள் முத்தத்தின் ராஜ்ஜியம் அங்கே!
குருவாகவே தென்றலை விட்டவன் மென்மையான குரலில், “என்ன தென்றல்? நிறைய யோசிக்கிறியா?” என்று கேட்க
“இல்லை, உங்களுக்கு என் மேல முன்னாடி ரொம்ப கோவமிருந்ததே, இப்போ… அது இல்லையா? எப்படி குரு பொய் சொன்ன என்னை இப்படி உங்களால நேசிக்க முடியுது?” தென்றல் பல நாள் மனதின் வாதையை இறக்கி வைத்தாள்.
குரு சில நிமிடங்கள் ஸ்தம்பித்து போனான். இன்னும் தென்றல் மனதில் தெளிவில்லையா? என்ற கேள்வி அவனிடம்.
“அன்னிக்கு அந்த கோபம் நிஜம்! இன்னிக்கு இந்த பாசம் நிஜம்! அது உன்னால ஃபீல் பண்ண முடியுதா இல்லையா?”
“எனக்கு ஃபீல் பண்ண முடியுது குரு. ஆனா கோவம் இல்லையா என் மேல?” மீண்டும் தென்றல் கேட்க
மறுப்பாக பார்த்தவன், “உனக்கு தெரியும்ல தென்றல்.. எல்லா விஷயத்துலயும் நான் என் அப்பா மாதிரி இருக்கணும் நினைப்பேன். இந்த விஷயத்தில் மட்டும் அம்மா பையன்” என்றான் சிறு புன்னகையுடன்.
தென்றல் விழிக்க, “அப்பா தன்னோடு முடிவை அவரே எடுத்தார். வளைஞ்சுக் கொடுக்க விருப்பமில்லாதவர், அந்த நேர்மையை நான் மதிக்கிறேன். பட் அம்மா அவங்க பாவமில்லையா? எவ்வளவு அவமானம்? பணக்கஷ்டம், மனக்கஷ்டம்.. தனிமை எல்லாம் தாண்டி இன்னிக்கு அப்பா வந்தததும் அந்த கோபத்தையே அவங்க பிடிச்சு தொங்கல.. அப்பாவோட இருக்கிற காலத்தை எப்படி சந்தோஷமா வாழணும்னு பார்க்கிறாங்க.. எதாவது பேச்சு வந்தாலும் அப்பா மனசு கஷ்டப்படும்னு தவிர்த்திடுறாங்க. அந்த பாசம், அந்த புரிதல்.. நிஜமா என் அம்மா கிட்ட கத்துக்கிட்டேன் தென்றல். அப்பா பக்கம் பார்த்த அவரோட செயல் நியாயம்! உன்னோடதும் அப்படியே!” என்று குரு உணர்ந்து சொல்ல, தென்றல் குருவின் இந்த பேச்சைக் கேட்டு விழியகலாது பார்த்தாள்.
“எனக்காக சொல்றீங்களா? நான் பொய் சொல்லியிருக்க கூடாது, உண்மையை சொல்லியிருந்தா அந்த நிமிஷ கஷ்டம், பொய்… அது உங்களை நிறைய ஹர்ட் பண்ணிடுச்சு தானே? சும்மா சமாளிக்காதீங்க” என்று தென்றல் சொல்ல
“எல்லா சந்தோஷத்தையும் துக்கத்தையும் கடக்க காலம் ரொம்ப உதவும் தென்றல்… இந்த சில மாசம் அப்படித்தான். அன்னிக்கு இருந்த அதே அளவு கோவம், வருத்தம் எங்கிட்ட இல்லை. என்னோட தென்றல் எங்கிட்ட பொய் சொல்லிட்டான்ற வருத்தமிருக்கு. ஆனா எப்பவும் இருக்கும் கிடையாது. இன்னும் பத்து வருஷம் கழிச்சு இதெல்லாம் மறக்கலாம். All is fair in love and war, அதுல நான் உடன்பட மாட்டேன். fairness(நியாயம்) is love! உன் அன்பு ரொம்ப உண்மையானதும்மா. எனக்கே சில சமயம் தோணும்.. உனக்கு இதெல்லாம் செய்யணும்னு என்ன விதி சொல்லு.? ஒருத்தருக்கு ஒரு கஷ்டம்னா ச்சு, பாவம் சொல்ற சிம்பதி எல்லார்கிட்டவும் இருக்கு. பட் அடுத்தவங்க கஷ்டத்தை உணருற எம்பதி எல்லாருக்கும் கிடையாது. என் தென்றல் கிட்ட நிறையா இருக்கு” என்றவன் இருகரத்தால் அவள் முகத்தினை ஏந்தி பெருமையாய்ப் பார்த்து நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
“இவ்வளவு வசதி இருக்கு உனக்கு. அங்க வந்து இருக்கணும்னு என்னம்மா உனக்கு? நம்ம கல்யாணம் பேசுறதுக்கு முன்னாடியே நீ அம்மாவை எப்படி பார்த்துக்கிட்ட.. உங்க சித்தப்பாங்க உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க எனக்குத் தெரியும். கண்டிப்பா தி பெஸ்ட், உன்னை யார் கட்டியிருந்தாலும் அவன் கொடுத்து வைச்சவன்” என்றதும் தென்றல் கோபத்தில் முறைக்க
அந்த கோபத்தில் வாய்விட்டு சிரித்தவன், அவள் நெற்றியில் முட்டி கொஞ்சியபடி “பட் குரு லக்கி!” என்றான் பெருமையாக. அதில் தெரிந்த காதலில், தன்னை புரிந்து கொள்ளும் அவன் பக்குவத்தில் மீண்டும் இமை மீறியது கண்ணீர். அவன் முத்தங்கள் உணர்த்திய ஈரம் விட சொற்களின் ஈரம் தென்றலை இதமாக நனைத்தது.
“இல்லை குரு, நான் எதுவும் பெருசா பண்ணல. அப்பாவோட தப்புக்காக செஞ்சேன். அதுல தியாகம் எல்லாம் இல்லை. இன்னிக்கு வரை மாமா, அத்த இரண்டு பேரும் என்னை எங்கப்பாவை வைச்சு பேசினதே இல்லை. அதுதான் கிரேட்! இவ்வளவு அன்பு எல்லாரும் கொடுக்கிறீங்க… அதுக்குப் பயந்துதான் என்னால உண்மையை சொல்ல முடியல” என்றவளின் ஈரவிழிகளில் முத்தமிட்டவன்
“தென்றலுக்கு அந்த மனசு இருக்கு இல்லையா? உன் அப்பாவுக்காகனாலும் நீ செஞ்சது பெருசு. நீ ஃபீல் பண்ணாத!” என்றான்.
சட்டென்று அவளிடம், “என்ன இருக்கு எங்கிட்டனு நீ என்னை விரும்புன?” என்று கேட்டான் குரு.
குருவை போலவே அவன் முகத்தைப் பிடித்த தென்றல், “ஏன் உங்களுக்கு என்ன? உங்க வார்த்தை கம்மினாலும் மனசு ரொம்ப பெருசு குரு” அவ்வளவு உணர்ந்து ஆழ்ந்து தென்றல் பேசினாள். இது நாள் அவளின் காதலை கண்ணீரோடு, கோபத்தோடு, ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறாள். இன்று காதலை காதலாக சொன்னாள்.
“அப்புறம் என்ன? என்னோட கோபம் எல்லாம் கொஞ்ச நாள்ல போயிடும். ஏன் நிறைய யோசனை? நீ தானே சொன்ன என்ன ப்ராபளம்னாலும் நான் சால்வ் பண்ணிடுவேனு” என்று கிண்டலாகக் கேட்டான். தென்றல் பேசாமல் இருந்தாள்.
“நீதாண்டா என் பிரச்சனையேன்றியா” என்று குரு சொன்ன விதத்தில் தென்றல் சத்தமாக சிரிக்க,
“வாழ்க்கையும் மேத்ஸும் ஒன்னு தென்றல். சில ப்ராப்ளம்ஸ் பார்த்தா பெருசா தெரியும், அதை சால்வ் பண்ணும்போது ஈசியா இருக்கும். மேத்ஸை பொருத்தவரை, சிலது பார்த்தே பதில் சொல்லலாம். சிலதை வொர்க் அவுட் பண்ணினாதான் ஆன்ஸர் கிடைக்கும். வாழ்க்கையும் அப்படித்தான் தென்றல், வாழ்ந்து பார்க்கணும்!”
“உன்னை பிரியறதை நான் விரும்பினதே இல்லை. அப்போ கோவத்துல ஆயிரம் பேசியிருப்பேன்.. ஆனா அது முடியாமத்தானே நம்ம கல்யாணம். எங்கப்பா சொன்னார், காதல் ஒன்னும் உலகமில்லைனு. எஸ்! பட் தென்றல் இருக்க என்னோட உலகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! கோவம், காதல் எதுனாலும் உன்னோடதான் என் வாழ்க்கை! இப்போ இந்த நிமிஷம் நீ கூட இருக்க, நான் சந்தோஷமா இருக்கேன். சந்தோஷமா இருப்போம் தென்றல்!” என்றான் அவளின் கரத்தை அழுத்திப் பிடித்து நம்பிக்கையுடன்.
“உனக்கு எங்கிட்ட உண்மையை சொல்ல முடியலன்னு தானே வருத்தம். இப்போ சொல்லு.. உன்னைப்பத்தி கேட்கிறேன்” என்றான்.
“நிஜமாவா?” என்று தென்றல் நம்பாது கேட்க,
“நிஜமாத்தான் கேட்கிறேன். சொல்லு” என்று ஒருகளித்து படுத்தபடி கன்னத்தில் கை வைத்து கதை கேட்க, தென்றலும் அவளின் அக்கா, அண்ணன், சித்தப்பா, சித்தி என்று சின்ன வயது கதையெல்லாம் சொன்னாள். அவளின் படிப்பு, வேலை என்று எல்லாம் சொல்ல, கொஞ்சம் கிண்டல் பாவனையுடன்,
“புளுகுமூட்டை!” என்றான்.
தென்றல் உடனே
“பின்ன உண்மையை சொல்லியிருந்தா போடினு சொல்லியிருப்பங்க தானே?” என்று கேட்டாள்.
குரு தலையாட்டவும், “குரு! நான் யாரோவா இருந்திருந்து உங்களுக்குப் ப்ரோபோஸ் பண்ணியிருந்தா, ஒருவேளை உங்க காலேஜ்மேட் இல்ல வொர்க் ப்ளேஸ்ல பார்த்து பிடிச்சிருந்தா என்னோட லவ் அக்செப்ட் பண்ணியிருப்பீங்களா?” ஒரு ஆர்வத்தில் தென்றல் கேட்டாள். இப்போது இருந்த சூழல் அவளுக்கு அந்த சுதந்திரம் வழங்கியிருக்க, பதில் தேடியது தென்றலின் காதல்.
“வாய்ப்பு இல்லை. ‘நோ’ தான்” என்றான் பட்டென்று.
“ஹலோ சர்! ப்ராபபிலிடி( நிகழ்தகவு) கூட இல்லையா?” தென்றல் முகம் சுருக்கி பாவமாகக் கேட்க
“ஸ்டிரிக்ட்லி ‘நோ’ தான். எனக்கு அப்போ படிக்கணும், அப்பா அது மட்டும்தான் மனசுல ஓடிச்சு. நான் வேலைக்குப் போய் கூட அதே நினைப்பு. அம்மா சொன்ன அப்புறம் தானே உன்னையே பார்த்தேன்” குரு உண்மையை சொல்ல
“துரத்தி துரத்தி லவ் சொல்லியிருந்தா”
“துரத்தி துரத்தி அடிச்சிருப்பேன்” தென்றல் போலவே குரு சொல்லிவிட்டு சிரித்தான்.
“அப்போ ஜீரோ ப்ராபபலிடிதான்னாலும் இப்போ என்னோட ஜீரோ நீதான் தென்றல்! என்னோட நீ இருக்கப்ப ஐ ஃபீல் வேல்யூட்!” குரு சொல்ல
“ஜீரோவா நான்?” தென்றல் முறைக்க
“மேத்ஸ்ல ஜீரோ இல்லாம ஒன்னுமே இல்லை. அது தெரியுமா?” என்று கேட்டு அவன் கணிதத்தில் பூஜியத்தின் ராஜ்ஜியத்தை விளக்கிட, தென்றல் இருந்த களைப்பில் உறங்கியே போனாள். அந்த ஒரு வாரமும் தென்றல் நிறைய பேசினாள், குரு வழக்கம்போல் கேட்டுக்கொண்டான். இருவருமே இப்படி ஒன்றாய் இருந்த கணங்கள் மிகவும் குறைவே, அதனால் கிடைத்த அருகாமையை ரசித்து கடந்தனர்.
அன்றிரவு அவர்கள் சென்னை கிளம்ப வேண்டும். மதியம் போல் அறைக்கு வந்தவர்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அப்படியே ஓய்வாக படுத்திருந்தனர்.
குரு தென்றலிடம், “நாளையிலிருந்து காலேஜ் போகணும்.. இப்படி ஃபீரியா இருக்க முடியாது. வீட்ல எல்லாம் இருப்பாங்க” என்று சொல்லி புலம்ப,
“யாரும் நம்மளை ஒன்னும் கேட்கமாட்டாங்க.. ஓவரா பண்ணாதீங்க” தென்றல் சொல்ல
“அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. எனக்கு சிவா, லாவண்யா எல்லாம் இருக்காங்க, கூச்சமா இருக்கும்” என்றதும் தென்றல் சத்தமாக சிரித்துவிட்டாள்.
“கூச்சமா? அப்படின்னா என்ன குரு” குறும்பாகக் கேட்டாள்.
“இந்த ஓரு வாரமா அப்படி உங்களை பார்க்கவே இல்லையே நான்” என்று கிண்டல் செய்ய
“உன்னை!” என்று அவனுக்கும் சிரிப்பு. தயக்கங்கள் எல்லாம் தாராளமாக விலகிப்போய்விட, இருவருக்கும் மிகுந்த நெருக்கம், உள்ளம் உடல் இரண்டுமே கலந்திருந்தது.
“மாமா கிட்ட நான் சொல்றேன்” என்றதும் குருவின் பார்வையில் கண்டிப்பு வந்தது.
“இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றான் அழுத்தமாக.
“ஓகே, ஓகே! உங்களுக்காகதான் சொன்னேன். நானும் யுனிவர்சிட்டி போகலாம் இருக்கேன், அதாச்சும் பிடிக்குமா இல்லையா? அண்ணா, குமார் சித்தப்பா யாரும் பெருசா அங்க இன்வால்வ் ஆக மாட்டாங்க. சித்தப்பா என்னை வர சொல்றாங்க. எப்படியும் நான் வேலைக்குப் போகணும், நீங்க என்ன சொல்றீங்க”
சில நிமிடங்கள் யோசித்த குரு, “உனக்கு சரின்னா போ தென்றல்” என்றான்.
“உங்களுக்கு சரியான்னு கேட்டேன் குரு” என்று தென்றல் மீண்டும் அழுத்திக் கேட்க
“ஓகே!” என்றான்.
அத்தோடு வேறு பேசினார்கள். மீண்டும் சென்னை வந்தனர்.