ஜெய்ச்சந்திரனின் கறுப்பு ஜீப் அந்த பெரிய கேரளா ‘தரவாடு’ வீட்டின் முன் நின்றது. வீட்டின் முன்னே மிகப்பெரிய இடம் வெறுமையாக இருக்க, ஒரு பக்கம் நீண்டு வளர்ந்திருந்தது தென்னை மரம். ஜெய்ச்சந்திரனின் வீடு நாலு கெட்டு வீடு என்றால், ‘அரக்கபறம்பில்’ இல்லம் எட்டுக்கெட்டு வீடு. எட்டு தனி தனி பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். வீட்டின் முன்புற பகுதியான ‘பூமுகத்தில்’ மொத்தம் குடும்பமும் குழுமியிருந்தனர். ஜெய்ச்சந்திரன் அன்று சந்தன நிறத்தில் வேஷ்டி அணிந்திருந்தான், அதனை மடித்து கட்டி வீட்டை ஒரு முறை பார்த்தான்.
அச்சுதனை பல வருடமாக, குறிப்பிட்டு சொல்லப்போனால் அவன் பிறந்தது முதலே பார்க்கிறான். அவனின் இளமைக்காலம் எல்லாம் ‘அரக்க பறம்பில்’ இல்லத்தில்தான் கழிந்தன. இப்படி அச்சுதன் பிரச்சனை என்று எதற்குமே அவனை அழைத்தது இல்லை, எஸ்டேட்டில் மட்டும் அவன் உதவி அவருக்குத் தேவை. குடும்ப விவகாரங்களில் தலையிட்டதே இல்லை.
பூமுகத்தில் இருக்கும் அந்த தேக்கு சாய்வு நாற்காலியில், சாயாமல் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார் ‘அரக்க பறம்பில்’ அச்சுதன். தலை முழுவதுமாக நரைத்து, வெள்ளை வேஷ்டியோடு மேலாடையின்றி பெரிய வெண்ணிற துண்டு போர்த்தியிருந்தார் அச்சுதன். அந்த வீட்டின் பெரிய மனிதர். அவர் அருகே ‘அச்சம்மா’ என்று பேரப்பிள்ளைகளால் பாசமாக அழைக்கப்படும் அவரின் மனைவி பத்மினி நின்றார். அவரின் பார்வை பாலச்சந்திரன் அருகே நின்ற தன் பேத்தி மீதே இருந்தது. விஜயனோ மாமன் மகளைப் பார்க்காமல் அசட்டையாக நின்றான். வினய்யும் பாலச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். அவர் அருகில் நின்ற ‘பிந்து’வோ தாத்தாவின் முகத்தையே பார்த்திருந்தாள். அந்த பார்வை பிடிக்காத அச்சுதன் முகத்தைத் திருப்ப, அவர் கண்ணில் விழுந்தான் அவரின் செல்ல பேரக்குட்டி ‘ஜெய்ச்சந்திரன்’.
குரலை செருமிய அச்சுதன், “இது யார் தெரியுமா?” என்று கேட்க, ஜெய் தெரியாது என்றான்.
“அந்த ராஸ்கல் ராஜீவன் பொண்ணு” என்றார் ஆத்திரமாக.
ராஜீவன் அச்சுதனின் மகன், காதலித்து ஓடிப்போனவர் அதன் பின் வீடு வரவே இல்லை. இன்று அவரின் மகள் வந்திருக்க அது அச்சுதனுக்குப் பிடிக்கவில்லை. ஜெய்ச்சந்திரனின் பார்வையோ அச்சுதனையே ஆழமாக நோட்டமிட்டது. அவரின் பேத்தி வந்திருப்பது பிடிக்கவில்லை என்றால் போ என்று விரட்டியிருக்கலாமே, தன்னை ஏன் அழைத்தார் என்ற யோசனை அவனிடம். அச்சச்சன், அச்சம்மா முகங்களையே பார்த்தான். அச்சம்மாவின் பார்வை பேத்தியிடம் இருக்க, அப்போதுதான் அங்கு நின்ற பெண்ணை உற்று பார்த்தான் ஜெய்.
அவன் பார்க்கவும் பாலச்சந்திரன் மகனிடம் பேசினார்.
“இது பிந்துடா, ராஜீவ் பொண்ணு! தாத்தா, பாட்டியைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டு வந்திருக்கா, உன் அச்சச்சன் ரொம்பத்தான் பண்றார்” என்றார் அச்சுதனை முறைத்தபடி. ராஜீவனும் பாலச்சந்திரனும் தேவிகுளத்தில் சுற்றாத இடங்களே இல்லை. ராஜீவன் காதலித்து ஊரை விட்டு ஓடும் வரை அவர்களின் நட்பு தடைபடாது இருந்தது. அவர் ஊரை விட்டு சென்ற பின், இயல்பாகவே ஒரு பிரிவு. ராஜீவன் அதன் பின் ஊர் பக்கம் வரவே இல்லை, அச்சுதனின் மகனல்லவா? அதனால் ஜெய்ச்சந்திரன் ராஜீவனை விவரம் தெரிந்து பார்த்ததில்லை. இப்போது மகளை ஏன் அனுப்பியிருக்கிறார்? என்ற கேள்வி.
அப்பாவை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோமே, அப்படியென்ன பெரிய ரோஷம்? அச்சச்சனும் அச்சம்மாவையும் விட்டு இருக்குமளவு? காதல் பெரிதென்றால் சரி! இத்தனை வருடத்தில் சமாதானம் செய்திருக்க வேண்டாமா என்ற கோபம் அவனுக்கு உண்டு. பெரிதாக அடுத்தவர் விஷயத்தில் தலையீட மாட்டான் என்பதால் அவன் மனதின் எண்ணம் யாருக்கும் தெரியாது. ஆனால் பத்மினி அவ்வப்போது மகனை நினைத்து புலம்புவார். அப்போதெல்லாம் ராஜீவனை நினைத்துக் கோபம் வரும். எப்போதாவது அப்பா அவருடன் பேசுவார் என்று தெரியும். இப்படி அவர் மகள் வந்து நிற்பாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
“அவன் நாங்க வேண்டாம்னு போய்ட்டான்ல, இப்போ எதுக்கு அவன் பொண்ணை அனுப்பி வைச்சிருக்கான்? தெம்மாடி(ராஸ்கல்)! என்றார் பெருமூச்சோடு. மறந்தும் பிந்துவின் பக்கம் பார்க்கவில்லை.
“உங்க வீடு அச்சச்சா, யாரை சேர்க்கணும் கூடாது உங்க இஷ்டம் . என்னை ஏன் கூப்பிட்டீங்க?” என்று ஜெய்ச்சந்திரன் கேட்க
“உன் அப்பா தானே அழைச்சிட்டு வந்து ப்ரஷன பண்றான்” என்றார் கடுப்பாக. ஆக, நண்பரின் மகளை ஏற்க சொல்லி அப்பா பேசியதால் தாத்தா கோபமாக இருக்கிறார்.
“அவன் ப்ரண்டுக்கு இவன் சப்போர்ட் பண்றான். நீ நியாயம் பறையும்டா ஜெய்” என்று அவனை நியாயம் கேட்க அழைத்திருந்தார்.
இதனை பார்த்து, “இப்பவும் உங்க பையன் இவளை அனுப்பல, உங்களை எல்லாம் பார்க்கணும்னு இந்த பொண்ணா விருப்பப்பட்டு வந்திருக்கு. அம்மா இல்லாத பொண்ணு, சொந்த பந்தத்தோட இருக்க விருப்பப்பட்டு வந்திருக்கா. இங்க அது கிடைக்கும்னு நினைச்சேன், விடுங்க. நீ வாம்மா, நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று பாலச்சந்திரன் பிந்துவிடம் சொல்ல, அவளோ அவரை கலக்கமாக பார்த்தாள்.
பத்மினி ஜெய்ச்சந்திரனை பாவமாக பார்த்தார்.
“அச்சச்சா! நீங்க கோவப்பட வேண்டாம். உங்களுக்குப் பிடிக்கலனா அனுப்பிடலாம்” என்றான் ஜெய்ச்சந்திரன். பத்மினி முறைக்க, லேசாய் தோள் சாய்த்து அவரை பார்த்து கண்சிமிட்டினான்.
அச்சுதன் எதுவும் பேசாமல் உள்ளே போக பார்க்க, அவர் பின்னால் சென்ற ஜெய்,
“அம்மா இல்லாத பொண்ணு அச்சச்சா! நாங்க உங்களுக்கு யாரோ..” என்றதும் அவர் முறைக்க, அவரின் கைப்பற்றியவன்
“நாங்க சின்னதா இருக்கும்போதே எங்க தாத்தா, பாட்டி எல்லாம் போய்ட்டாங்க. நீங்கதான் அவங்க இடத்துல இருந்து எங்களை வளர்த்தீங்க. ‘அரக்கபறம்பில்’ வீடு எங்களுக்கு அவ்வளவு அன்பு கொடுத்திட்டிருக்கு, உங்க தெம்மாடி ராஜீவன் வந்தா உங்க கோவத்தை அவர்கிட்ட காட்டுங்க. அந்த பொண்ணு என்ன தப்பு பண்ணிச்சு? அச்சம்மாவுக்காக பாருங்க” என்றான் உருக்கமாக.
அச்சுதனை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது, உள்ளே வரவும் பிந்துவையே பாராமல் பார்த்தார். தன் வம்சம் என்று ஒரு உணர்வு, அதே நேரம் இத்தனை வருட பிடிவாதம் விட மனமில்லை. அதனை தகர்க்க ஒரு ஆள் தேவைப்பட, ஜெய்ச்சந்திரன் சொன்னதும் ஒத்துக்கொள்ளும் பாவனை அவரிடம்.
“உங்க இஷ்டம் போங்கடா” என்றவர் அவரின் அறைக்குள் புகுந்து கொண்டார். வெளியே வந்தவன் அச்சம்மாவின் தோளில் ஒற்றைக் கைப்போட்டு,
அவன் கத்தை மீசையைத் தடவி, “எண்ட சக்தி கண்டோ?(என் பவர் பார்த்தீங்களா?)” என்று சத்தமின்றி புன்னகைக்க,
“கள்ளன் டா நீ!” என்று அவன் கன்னத்தைக் கிள்ளியவர் வேகமாக பிந்துவை நோக்கி நடந்தார்.
“எண்ட குருவாயூரப்பா!” என்று கண்கள் கலங்க சொன்னவர் “பிந்து மோளே” என்று பேத்தியின் கன்னத்தை வாஞ்சையாக வருடினார். பிந்துவுக்கு இந்த பாசம், பரிவு எல்லாம் புதிதாக இருக்க அவளின் கண்களும் கலங்கின.
“அச்சம்மா” என்று பிந்து சொல்ல
“உங்க பேத்தியை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன் மா, பத்திரமா பார்த்துக்கோங்க” என்ற பாலா கிளம்ப, வினயும் ஜெய்யும் அப்பாவோடு போனார்கள். பூமுகத்தை தாண்டுகையில் அவர்களை அச்சம்மாவின் குரல் தடுத்தது.
“ஏடா பாலா! நீ எண்டே மகனை கொண்டு வருமோ?” என்று கேட்க, பாலச்சந்திரன்
“சீக்கிரம் வருவான்மா” என்றார். அவர்கள் சென்றதும், விஜயனின் அம்மாவும் ராஜீவனின் தங்கையுமான ஷோபனா அண்ணன் மகளை நெருங்கி அவளிடம் பேச, விஜயனோ கண்டுகொள்ளாது அவன் அறைக்குப் போய்விட்டான்.
அப்பாவை முறைத்தபடி வெளியே வந்த ஜெய்,
“வீட்டுக்கு வாங்கப்பா, பேசணும்” என்றான்.
“எனக்கு வேலையிருக்குடா” என்றவர் “அடே வினயா! காரை ஸ்டார்ட் பண்ணு” என்று உத்தரவிட அவன் அண்ணனை பார்க்க, ஜெய் மெதுவே அப்பாவின் கார் அருகே போனவன் கார் சாவியை கையில் எடுத்து ஜீப் நோக்கி நடந்தான்.
“டேய் ஜெய்! ஜெய்” என்று அவர் கத்த
“பக்கத்துல தானே வீடு நடந்து வாங்க, கார் அப்புறம் எடுத்துக்கலாம்” என்று சொல்லி முன்னால் சென்றுவிட்டான். அவனின் வீடு நாலுகெட்டு வீட்டின் நடுமுற்றத்தில் நின்றான் ஜெய். பாலாவும், வினய்யும் நடந்து வந்தனர்.
“ரொம்ப பண்றடா ஜெய்” என்று பாலச்சந்திரன் வந்ததும் மகனிடம் பாய, அவனோ
“ஒரு நாள் பேச்சைக் கேட்கலன்னா கோவம் வருதே, அப்போ அச்சச்சனுக்கு இருக்க கோவம் நியாயம்தானேப்பா?” என்று கேட்டான்.
“பிந்து என்னடா பண்ணுவா? அம்மா இல்லாத பொண்ணு. சொந்த பந்தத்தோட இருக்க ஆசைப்படுறா” பாலச்சந்திரன் தணிந்து பேச
“அதுக்கு உங்க ப்ரண்டு வந்து மன்னிப்புக் கேட்டிருக்கலாமே, இப்பவும் அவருக்கு ரோஷம். அவருக்கு அச்சச்சன், அச்சம்மா யாரும் வேண்டாம்?” என்றான் புருவம் உயர்த்தி.
ஜெய் தலையை விரல் கொண்டு தேய்த்தபடி, “எங்க இருந்து பிடிச்சீங்க அந்த பொண்ணை? உங்க ப்ர்ண்ட் வந்து விட்டுப்போனாரா? இல்லை உங்க ப்ரண்ட் வல்லிய ரோஷக்காரர் ஆச்சே, அதான் அவர் பொண்ணு அமைதியா இருக்காளேனு கேட்கிறேன்” என்றதும்
“போதும்டா ஜெய்! இப்போ என்ன நடந்துச்சு தெரியணும் அதானே? ராஜீவன் மிலிட்டரில இருக்கான் சொன்னேன்ல, அவனுக்கு இப்போ காஷ்மீர்ல போஸ்டிங்காம், பொண்ணு தனியா இருக்கானு சொன்னா, இவளுக்கு தாத்தா பாட்டி கூட இருக்க ஆசை. அதனால அவளே கிளம்பி எர்ணாக்குளம் வந்துட்டா, அங்க இருந்து நாங்க அழைச்சிட்டு வந்தோம்” என்றார்.
“டேய் அண்ணா, அதான் அச்சச்சனே ஒன்னும் சொல்லாம அமைதியா ஏத்துக்கிட்டாரே, நீ ஏன் டென்ஷன் ஆகுற?” என்று வினயச்சந்திரன் அண்ணனைக் கேட்டான்.
“டேய் வினயா! அடி வாங்காத, காலையில இரண்டு பேரும் எர்ணாகுளம் போய்ட்டு எங்கிட்ட பொய் சொல்லியிருக்கீங்க? ஏன் இதெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு செஞ்சா என்ன?” என்று அப்பாவை முறைக்க, அவரும் வினயனும் பார்வை பரிமாறிக்கொண்டனர்.
“என்ன சங்கேத பாஷையா?” ஜெய் அதட்டல் போட
“அடே! இல்லைடா! சொன்னா நீ உடனே அச்சச்சனுக்கு சப்போர்ட் பண்ணுவ, அதான் அழைச்சிட்டு வந்திட்டு உண்மையை சொல்லிக்கலாம்னு” என்று பாலச்சந்திரன் இழுத்தார்.
“சரி விடுங்கப்பா, உங்களால அச்சம்மா ஹாப்பி. அச்சச்சனுக்கும் அந்த பொண்ணைப் பார்த்து சந்தோஷம், ஆனாலும் கொஞ்சம் வருத்தம். அட்லீஸ்ட் உங்க ப்ரண்ட் மாதிரி இல்லாம இருந்தா சரி” என்றவன் வேலையைப் பார்க்க போனான்.
அன்று ‘அரக்கபறம்பில்’ வீடு மிகுந்த உற்சாகமாக இருந்தது. புதிதாய் வந்த பேத்திக்கு கேரள விருந்து சமைத்திருந்தார் அச்சம்மா. அவர் பக்கம் இருந்து பேத்திக்கு ஊட்டிவிட, இதனை பார்த்தாலும் அச்சுதன் எதுவும் கேட்கவில்லை. இந்த பெண்ணை மனைவி இல்லாது இத்தனை நாள் மகன் தனியாக வளர்த்திருக்கிறான் என்ற பரிவு தோன்றிய அதே கணம் கோபமும் வந்தது. இன்னமும் அவன் இறங்கிவரவில்லையே, இப்போதும் பேத்தியாக தங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் என்ற கோபம்.
அச்சம்மா பிந்துவை விடவே இல்லை. “இது மோர்குழம்பு, உன் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார் மலையாளத்தில். பிந்துவின் கண்களில் ஜீவன் வந்தது. அந்த கண்களின் வீச்சு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்த விஜயனை ஈர்த்தது. புதிதாய் வந்த உறவினால் அரக்கபறம்பில் வீட்டில் ஒளி கூடியது!!
************************
“டேய் ரோமியோ! நில்லுடா” என்று கத்தியபடியே ஓடினாள் ஊர்மிளா. அவளுக்குப் போக்குக் காட்டிய ரோமியோவோ அந்த பெரிய வீட்டையே சுற்றி ஓடியது. அந்த வீட்டு பெரியவர் ரத்னவேல் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் மேல் ரோமியோ தாவி ஓட, அவரின் முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த மாவட்ட செயலாளர் என்ன இது என்பது போல் பார்த்தார்.
ரத்னவேல் ஐயா! காஞ்சிபுரத்தின் முன்னாள் எம்.எல்.ஏ, ஆளுங்கட்சி உறுப்பினர். இப்போது தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கிறார். காஞ்சிபுரத்தில் அவர் பகுதியில் அவருக்கான செல்வாக்கு இன்றும் அதிகம். அவர் எல்லாரிடமும் அளவாகவே பேசுவார், ஒரு எல்லையில் நிறுத்துவார். அப்படியிருக்க பூனைக் குட்டியிடம் இப்படி பேசுகிறாரே என்று பார்த்தார்.
ரத்னவேலோ தன் மேல் தாவியை ரோமியோவைப் பிடித்தவர், “என்ன டா இன்னும் சாப்பிடலையா?” என்று வாஞ்சையாகக் கேட்டார். ஊர்மிளா மூச்சு வாங்க ஓடி வந்தவள்,
“இங்க வந்துட்டானா தாத்தா? எங்கிட்ட கொடுங்க” என்று வாங்கிக் கொண்டாள். ரோமியோ வெள்ளையும் சாம்பாலும் கலந்த நிறத்தில் இருந்த பூனைக்குட்டி. ஊர்மிளா வாங்கிக்கொள்ளும் அவளை போட்டுக் கொஞ்சியது அந்த நாலு கால் குட்டி.
“இங்க பாரு..” என்று மாவட்ட செயலாளரை ரத்னவேல் ஐயா அழைக்க, அந்த குரலில் பூனைக்குட்டியிடம் காட்டிய கரிசனம் இல்லை, மாறாக கம்பீரம் இருந்தது.
“ஐயா, உங்க பேத்தியா?” என்று கேட்க
“எங்க வீட்டு காமாட்சி! என் பேத்தி ஊர்மிளா” என்றார் பெருமையாக.