அம்மா அழைத்ததால் உள்ளே சென்ற ஊர்மிளாவை பிடித்த ஜமுனா,
“தலைக்கு எண்ணெய் வைக்க சொன்னா என்ன அழிச்சாட்டியம் பண்றடி நீ?” என்று திட்டினார்.
“அதான் வந்துட்டேனே மா” என்றபடி ஜமுனாவின் முன் ஊர்மிளா உட்கார,
“முதல்ல பூனைக்குட்டியைத் தூக்கி அந்த பக்கம் போடு, எப்ப பாரு இதோட விளையாட்டு. உன்னை சொன்னா உன் தாத்தாவுக்குக் கோவம் வந்திடுது” என்று திட்டியவர், மகளை முன்னே உட்கார வைத்து அவளின் சுருளான நீள கேசத்தை மெல்ல வருடி கொடுத்தார். இடைவரை தொட்ட கார்கூந்தலில் நல்லெண்ணய்யை வைத்து தேய்த்துவிட்டவர்
“இன்னிக்கு என்னடி ப்ளான்?” என்று கேட்டார்.
“பூரணி படம் பார்க்க கூப்பிட்டா, அவளோட படம் பார்த்துட்டு வந்துடுவேன். அதுக்கு ரிவ்யூ போடணும்” என்றாள் ஊர்மிளா.
“சரி, சாப்பாடு?”
“அது என் தாய் ஜமுனா கையால மட்டும்தான்!” என்றதும் அவள் தலையில் செல்லமாகக் கொட்டினார் ஜமுனா.
“எல்லா புள்ளைங்களும் வெளியே சாப்பிட பறப்பாங்க, நீ மட்டும்தான் நான் கஞ்சி வைச்சாலும் நல்லாயிருக்குனு குடிக்கிற” என்ற ஜமுனாவின் வார்த்தைகளில் மகளுக்கான நேசம் மிகுந்திருந்தது.
“வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடுதான்மா, அதெல்லாம் எப்போவாச்சும் ட்ரை பண்ணலாம். எனக்கு உன் கையால சாப்பிட்டாதான் சாப்பிட்ட ஃபீல் தெரியுமா?” என்றவள்
“சரி, சீக்கிரம் தேய்ச்சு விடு. கட் பண்றேனு சொன்னாலும் கேட்கிறதில்லை, இதுக்கே பாதி நாள் போகுது” என்றாள் கடுப்பாக.
“ஏன் நீ கட் பண்ணிக்கோ, உன் கையைப் பிடிச்சா தடுத்தேன்?” என்று ஜமுனா கிண்டலாகக் கேட்க, சட்டென்று திரும்பி அம்மாவை முறைத்தாள் ஊர்மிளா.
“உன் மனசால சொல்ல மாட்ட, தாத்தாவுக்கும் பிடிக்காது” என்று முணுமுணுத்தவள்
“மா, சீக்கிரம்” என்றதும் ஜமுனா சிரித்தபடி வேகமாக எண்ணெய் வைத்தார்.
அவர் மகள் ஊர்மிளா அப்படித்தான்! அவளுக்கு விருப்பமிருந்தாலும் தாத்தாவையும் அம்மாவையும் மீறி எதையும் செய்யமாட்டாள். அவள் அப்பா பிரபாகரன் மகளின் விருப்பம் என்று விட்டுவிடுவார், ஆனால் ரத்னவேலுக்குப் பிடிக்காத எதையும் செய்யமாட்டாள். அதனாலயே அவருக்கு இன்னும் தன் ‘காமாட்சி’யை மிகவும் பிடிக்கும், தன்னை எதிர்த்துப் பேசும் மற்ற பேரப்பிள்ளைகளுக்கு மத்தியில் எப்போதும் அவரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்கும் ஊர்மிளா மீதுதான் அதிக பாசம்.
ஊர்மிளா தலைக்குக் குளித்து சுடிதாரை அணிந்தபடி வெளியே வந்தாள். தாத்தாவிடம் சொல்லலாம் என்று நினைக்க, அவர் அலுவலக அறையில் இருந்து வராமல் இருக்க அம்மாவிடம் மட்டும் சொன்னாள். வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் மெயின் ரோடில் இருக்கும் அந்த திரையரங்கம் சென்றாள். இவளுக்காக தோழிகள் பூரணி, யோகா காத்திருக்க, படம் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. வேகமாக ரெஸ்ட் ரூம் சென்றவள் சுடிதார் டாப்ஸைக் கழட்டினாள். உள்ளே ஒரு கறுப்பு டீஷர்ட் போட்டிருந்தாள், இப்போது பலாஸோ பேண்ட் டீஷர்ட் என்று தோழிகளின் உடையோடு பொருந்தி போனாள்.
“இதை வீட்லயே போட்டு வந்தா?” என்று யோகா முறைக்க
“தாத்தாவுக்குப் பிடிக்காது” என்று தோள் குலுக்கினாள்.
“ரொம்ப பண்றடி, நீதான் உன் தாத்தாவோட செல்லப்பேத்தினு ஊருக்கே தெரியும். நீ கேட்டா அவர் நோ சொல்லுவாரா?” என்று யோகா கேட்க
“அவருக்குப் பிடிக்காதுனு தெரிஞ்சும் நான் கேட்கமாட்டேன்டி. அதே டிரஸோட இருந்தாலும் எனக்குப் ப்ரச்சனை இல்லை, உங்களுக்காகதான் மாத்தினேன்.” என்றாள்.
“ஓவரா பண்ணாத!” என்று பூரணியின் கழுத்தை செல்லமாகக் கட்டிக்கொண்டாள் ஊர்மிளா.
“ஏதோ தியேட்டர்ல உன்னை யாரும் நோட் பண்ண மாட்டாங்கனு மாத்திருக்க. இது மட்டும் உங்க தாத்தாவை ஏமாத்துறது இல்லையா?” என்று பூரணியும் ஊர்மிளாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
“என்ன பண்றது? அவர் அப்படியே பழகிட்டார், மத்தவங்க மொத்தமா அவர் பேச்சைக் கேட்கமாட்டாங்க. அவருக்கு நான் அவர் பேச்சைக் கேட்கிறேனு சந்தோஷம், நமக்குப் பிடிச்சவங்க சந்தோஷத்துக்காக பொய் சொன்னா தப்பில்லை” என்று பூரணி சொல்ல
“ப்ச், பாத்ரூம்ல கூட்டம் போடாம தள்ளி போங்கம்மா” என்று ஒரு பெண் இவர்களை திட்ட, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள்
“சரிங்க ஆன்ட்டி” என்றனர் கோரஸாக. அதில் அவர் முறைத்துவிட்டு செல்ல, மூவரும் சிரித்தபடி படம் பார்க்க போனார்கள். ஊர்மிளா கொஞ்சம் படத்தை உன்னிப்பாகவே கவனித்தாள், அவள் சினிமா விமர்சகர் என்னும் movie critic. ஒரு பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விமர்சனம் எழுதுகிறாள். அவள் தாத்தாவுக்குப் பேத்தி வேலைக்கு செல்வது பிடிக்காது, இருந்தாலும் பெரும்பாலும் வீட்டிலே இருந்து செய்யும் வேலை என்பதால் விட்டுவிட்டார்.
இங்கு ஊர்மிளா நிழல் திரையில் மூழ்கியிருக்க, அங்கே அவள் வாழ்க்கைப் பற்றிய முடிவினை எடுக்கும் யோசனையில் இருந்தார் ரத்னவேல். சுந்தரம் சென்றதும் ரத்னவேல் மகன் பிரபாகரனை அழைத்தார்.
“ஊர்மிளாவுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் பிரபா, நீ என்ன நினைக்கிற?” என்று கேட்க
“அப்பா, அவ சின்ன பொண்ணு. என்ன அவசரம்?” என்றதும் ரத்னவேல் மறுப்பாக தலையசைத்தவர் முகத்தில் சின்னதாக சிரிப்பு. அவரின் விரிந்த சிரிப்பெல்லாம் அவரின் செல்லப்பேத்திக்கு மட்டுமே.
“உங்க அக்காவை பொண்ணு கேட்டு வந்தப்போ, நானும் இப்படித்தான் நினைச்சேன். அவளுக்கு இது சரியான வயசுதான் பிரபா” என்றார்.
பிரபாகரனும் தலையசைத்தவர், “அவளுக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியும்பா, நீங்க என்ன பேசுறதுனாலும் அவளை கேட்கணும். உங்க முடிவு என்னவோ செய்யுங்கப்பா” என்றதும் மகனை மெச்சுதலாகப் பார்த்தார்.
அவரின் காமாட்சியை காஞ்சியை விட்டு அனுப்ப அவருக்கு மனமில்லை, அதே நேரம் அவளை நன்றாக பார்த்துக்கொள்ளும் ஒருவன், இவரின் பேச்சைக் கேட்கும் ஒருவன் என்று அவரின் சிந்தனைகள் ஓடி, ஒருவனிடம் சங்கமித்தன!!! அவர் மகளின் மகன், அவரின் பேரன்! அவன் இவர் பேச்சைக் கேட்கமாட்டான் என்று தெரியவில்லை.
தெரியாமல் தவறாக ஒரு கணக்கினை போட்டார்.
************************
பிந்து அரக்கபறம்பில் வந்து ஒருவாரம் ஓடிவிட்டது, எப்போதும் அச்சம்மாவின் பின்னே சுற்றும் பூனைக்குட்டியானாள் பிந்து.
“பிந்துக்குட்டி! பிந்துமோளே! எண்ட குஞ்சுமோளே!” என்ற அச்சம்மாவின் அன்பு நிறைந்த வார்த்தைகளால் நிறைந்தது அரக்கபறம்பில் இல்லம். ஷோபனாவோடும் அச்சம்மாவும் இயல்பாக பிந்து ஒட்டிக்கொண்டாள். அதுவரை உணரா அன்பினை மொத்தமாக உணர்ந்தாள், அவளை சுற்றியே அவர்களின் பேச்சு, செயல் எல்லாம் இருக்க பிந்துவின் மனது நிறைந்து போனது.
அச்சுதன் பேத்தியிடம் பெரிதாக பேசவில்லை. பிந்துவுக்கும் அச்சச்சனைக் கண்டு பயம், அதனால் பேசாமல் இருக்க, அச்சம்மா அவளை அடிக்கடி அச்சுதனிடம் பேச வைத்தார். பிந்துவைப் பார்த்தாலே பாசத்துக்கும் ஏங்கும் பாவையாகத் தெரிய, அச்சுதனுக்கு மகன் மேல் அவ்வளவு ஆத்திரம். இப்போதும் வராமல் இருக்கிறானே, வரட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று நினைத்தார்.
‘தெம்மாடி!’ என்று பல்லைக் கடித்தார்.
அச்சுதன் அன்று கணக்கு ஒப்படைக்க வந்த ஜெய்ச்சந்திரனை பிடித்துக் கொண்டார்.
“அச்சச்சா! வொர்க்கர்ஸுக்கு ஷம்பளம் போட்டாச்சு” என்று சொல்லி அதற்கான கோப்புகளை நீட்டினான். அதனை வாங்கி பார்த்தவர், தன் வெண்ணிற துண்டைப் போர்த்தியபடி எழுந்து, வீட்டின் பூமுகத்திலிருந்து நாலாபுறமும் பிரிந்து செல்லும் வராந்தாவில் நடந்தார். அவர் பக்கமாக நடந்த ஜெய்ச்சந்திரன்,
“எந்தா அச்சச்சா?” என்று கேட்டான்.
ஜெய்யைப் பார்த்து, “மோனே! அச்சம்மா பிந்துவுக்கு எஸ்டேட் சுத்தி காட்டணும் சொன்னா, நீ எப்போ ஃப்ரீயோ அழைச்சிட்டு போறியா?” என்றதும் ஜெய்ச்சந்திரன் உடனே
“ஓகே அச்சச்சா!” என்றான்.
“நீயே உன் அச்சம்மா கிட்ட சொல்லிட்டு போ” என்றதும் பாசத்துக்கும் பிடிவாதத்துக்குமான அவரின் போராட்டம் புரிந்தவன், அச்சம்மாவிடம் சென்று சொன்னான். உடனே அங்கு டீவி பார்த்துக் கொண்டிருந்த விஜயனும்,
“டென் மினிட்ஸ், நீ ரெடியா இரு” என்று விஜயனிடம் சொல்லி வினய் அண்ணன் பின்னால் போனான்.
“என்னடா? உனக்கு பிந்து மேல இன்னும் கோவமா? ராஜீவன் மாமா மேல இருக்க கோவத்தை அவ மேல காட்டுறியா? இல்லை விஜய் வரது பிடிக்கலையா?” என்றதும் ஜெய்ச்சந்திரன் கடுப்பாக பார்த்தான்.
“முதல்ல எனக்கு ராஜீவன், அவர் பொண்ணு எல்லாம் யாரு? அவங்க மேல நான் ஏன் கோவப்படணும்? எனக்கு சம்மந்தமில்லாதவங்க மேல எனக்கு கோவமெல்லாம் வராது, வந்தாலும் காட்ட மாட்டேன்.”
“அப்போ அன்னிக்கு அப்படி கத்துன?
“அது அச்சச்சனுக்காக! அவரை கஷ்டப்படுத்தினா கேட்பேன், என்னோடவங்களுக்காக நான் நிப்பேன்! இப்ப என்னடா பிரச்சனை? விஜயனை நாலு மணிக்கு வர சொன்னதா?”
“ஆமா, பின்னே! அவ்வளவு சீக்கிரம் போய் அவன் என்ன சன்ரைஸ் பார்க்க போறானா? எஸ்டேட்டை பொறுமையா சுத்தினா என்ன?” என்று வினயனும் அண்ணனை முறைக்க
“எந்தடா வினயா இது? ப்ராந்தண்டா நீ?” என்று அவன் முதுகில் சுள்ளென்று அடி வைத்தான்.
“ஜெயேட்டா!!” என்று வினய் முறைக்க
“பின்னே? சன்ரைஸ் பார்த்திட்டு வர வண்டியெல்லாம் ஏழு மணிக்கு மேல இறங்க ஆரம்பிச்சிரும். ஆப்போசிட் டைரக்ஷன்ல போறது கஷ்டம். சீக்கிரம் போய்ட்டா அந்த பொண்ணு பிந்து கூட சன்ரைஸ் பார்க்கலாம் இல்லையா? எட்டு மணி மேல போனா வர லேட்டாகும், எனக்கு வேற வேலை இல்லை போடா” என்று ஜெய் சென்றுவிட,
வினய்க்கு அண்ணன் சொன்னது புரிய, அவன் பேச்சு தவறு என்று தெரிய
“ஜெயேட்டா! சாரி” என்று கத்தினான். ஜெய் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான். அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு ஜெய்யின் ஜீப் அரக்க பறம்பில் இல்லத்தில் நிற்க, விஜயனும் பிந்தும் ஜீப்பில் ஏற, ஜீப் அவர்கள் தெருவை கடக்கும் முன்னே வினய் வேகமாக ஏறினான். ஜெய் தம்பியை முறைத்தபடி ஏற்றிக்கொண்டான்.
பின்னால் விஜயனும் பிந்தும் எதிர் எதிராக உட்கார்ந்து கொள்ள, அண்ணன் அருகே உட்கார்ந்தான் வினய். போகும்போது விஜயனும் வினயனும் கண்ணயர்ந்துவிட, பிந்து உறங்காது இருளில் வெளிச்சம் தேடினாள். எதிரே இருந்த விஜயனின் முகம் அவளை ஈர்த்தது, உறங்கும் அவனை சிறிது நேரம் பார்த்தாள். அந்த அமைதி பிடிக்காமல் போக ஜெய்யிடம்,
“ஜெயேட்டா!” என்றழைத்தாள். விஜயனும் வினயனும் அழைப்பது கண்டு அழைக்க, ஜெயேட்டனோ
“வண்டி ஓட்டுறப்ப பேசாத பிந்து” என்றான். பிந்து அமைதியாகிவிட, இரண்டு மணி நேரத்தில் எஸ்டேட் சென்றுவிட்டான் ஜெய்.
வரும்போதே எடுத்து வந்திருந்த கட்டஞ்சாயாவை எல்லாரிடமும் ஜெய் நீட்ட,
“ஜெயேட்டன் ப்ளட் எல்லாம் ப்ளக் டீதான் ஓடும்” என்று விஜயன் கிண்டல் செய்ய, பிந்து மெலிதாக சிரித்தாள்.
“ஜெயேட்டா ஏன் என்னை அவாய்ட் பண்றாங்க விஜய்?” என்று அருகே நின்றவனிடம் கேட்க. வினய் உடனே
“உன்னைனு இல்லை பிந்து, அவன் பொண்ணுங்க கிட்ட ரொம்ப பேசமாட்டான், உண்மை சொல்லணும்னா அவனுக்குப் பேச கஷ்டம். பசங்க கூட நல்லா பேசுவான், பொண்ணுங்க எல்லாம் இவன் திமிர் பிடிச்சவன் நினைச்சுப்பாங்க.” என்றான்.
“ஒரு ப்ளாஷ்பேக் உண்டு, ஜெயேட்டா டென்த் வரை பாய்ஸ் ஸ்கூல், லெவெந்த்ல வேற ஸ்கூல் மாறினப்போ ஒரு பொண்ணோட ப்ர்ண்ட் ஆகிட்டார். அந்த பொண்ணு அதை லவ்னு நினைச்சு ப்ரச்சனை ஆனதும், ஜெயேட்டா பொண்ணுங்க பக்கமே போறதில்லை. காலேஜ் கூட மென்ஸ் காலேஜ்தான் படிப்பேனு சொல்லிட்டார். அவர் லைஃப்’ல பொண்ணுனா இனி வைஃப்தான்” என்ற விஜய்
“உன் மேல தனியா கோவம் இருக்காது. பச்ஷே அச்சச்சனுக்குப் பிடிக்காது இல்லையா, ஸோ அந்த கோவம் கொஞ்சம் இருக்கும்” என்றதும் பிந்து தலையசைத்தாள்.
பிடித்த மாதிரி மூவரும் செல்ஃபி எல்லாம் எடுத்தனர். இவர்களை மீண்டும் தேவிக்குளத்தில் ஜெய் இறக்கி விட்டு வேலையைப் பார்க்க போனான். அன்று மாலை, அச்சம்மா கேட்ட ஆயுர்வேதத் தைலம் ஒன்று கொல்லத்தில் இருந்து வந்திருக்க, அதனை எடுத்துக்கொண்டு அரக்க பறம்பில் இல்லம் போனான்.
அங்கே ‘காவியிடல்'(ரெட் ஆக்ஸைட் ஃப்ளோர்) எனப்படும் அந்த அடர் அரக்கு நிறத் தரையில், அச்சம்மா பிந்துவை மடியில் படுக்க வைத்திருந்தார்.
“காலையில சீக்கிரம் எழுந்தது தல வலிக்கும் குஞ்சுமோளே, தூங்கினா ஷரியா போவும்” என்றவர் அவளின் தலையை வருடிக்கொடுத்தார். மகனிடம் காட்டிய அன்பினை, காட்ட முடியாத அன்பினை என்று இருமடங்காக பேத்தியிடம் கொட்டினார் அச்சம்மா. மெல்ல அந்த அரக்கு தரையில் தாளமிட்டவர், இரவிவர்மன் தம்பி ‘ஸ்வாதி திருநாள்’ மகாராஜாவுக்கு பாடிய தாலாட்டினை பாடினார்.
என்று தாலாட்டு பாடிய அச்சம்மாவின் குரலின் இசையில் அந்த அரக்க பறம்பில் இல்லம் நிரம்பியிருந்தது. வாசலில் வந்த ஜெய்ச்சந்திரனை பாடல் கட்டிப்போட்ட, அப்படியே வீட்டின் நுழைவுவாசலில் இருக்கும் பெரிய தூணான ‘படிப்புரா’வில் சாய்ந்து நின்றான்.
பூமகத்தில் தன் தேக்கு நாற்காலியில் அமர்ந்திருந்த அச்சுதன், வெள்ளை புடவை, அரக்கு நிற ரவிக்கை, இன்னும் கூட முழுதாக நரைக்காத சுருள் கேசம், நெற்றியில் சந்தன கீற்று என்று இருந்த அச்சம்மாவின் அழகினை ரசித்தார். மனைவியின் தாலாட்டைக் கேட்ட அச்சுதன் முகம் புன்னகையில் விரிந்தது. ஜெய்ச்சந்திரன் அன்று ஒரு திருமணத்திற்குச் சென்று, பட்டு வேஷ்டி சட்டையில் அப்படியே வந்திருக்க, அவனை அந்த கோலத்தில் பார்த்த அச்சுதனின் மனதில் ஆசை முளைத்தது. மெல்ல அவர் பார்வை பேத்தியின் மேல் படிந்தது.