“ஜெய்!” என்று மகனை அதிருப்தியாகப் பார்த்தார் பாலச்சந்திரன்.
“என்னப்பா?” ஜெய் அவன் பாவனையை மாற்றாது கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்து, மிகவும் இயல்பாகக் கேட்டான்.
“உட்காருங்க டாடி” என்று வினயன் சொல்ல, மகன்களை முறைத்தபடி உட்கார்ந்தார்.
“ஃபோட்டோ மாறிடுச்சு சொல்றேனே ஜெய், அப்புறமும் இப்படி புரிஞ்சிக்காம பேசினா என்ன அர்த்தம்?” என்று ஆயாசமாகக் கேட்டார் பாலச்சந்திரன்.
“ஃபோட்டோ மாறிடுச்சுனு நீங்க சொல்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும்பா. அது கூட புரியாதவனா நான்? என்னை பொண்ணுக்குப் பிடிச்சிருக்குனு சொல்லி ஃபோட்டோ அனுப்பினீங்க, அந்த பொண்ணை நம்ம ஊர்ல நேர்ல பார்க்கிறப்ப, எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க! ஆனா ஊர்மிக்கு என்னை தெரியவே இல்லை. அதுக்கு அவ மேல கோவப்பட்டேன் நான்! நேத்து நீங்க ஊர்மிகிட்ட சொன்னீங்களே ராஜீவனுக்குப் பொண்ணு இருக்கிறதே இப்போதான் தெரியும்னு, அப்போ எப்படி அந்த பொண்ணை எனக்குப் பார்த்திருக்க முடியும்? ஸோ அப்பவே ஏதோ மிஸ்டேக்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்” என்றதும் வினயன் அண்ணனை மெச்சுதலாகப் பார்த்தான்.
அதே நேரம் பாலச்சந்திரனோ மகனின் முடிவை நினைத்து பதட்டத்தில் இருந்தார், ஊர்மிளாவிடம் அவன் எவ்வளவு உரிமையெடுத்தான். அதை நினைக்க நினைக்க இப்போது டென்ஷன் கூடியது.
“அப்புறம் ஏண்டா என்னை இம்சை பண்ற? இதெல்லாம் நடக்காது” கடுப்பாக சொன்னார் பாலச்சந்திரன்.
“ஏன் நடக்காது? விஜயனுக்காக அச்சச்சன் கிட்ட அவ்வளவு பெரிய பொய் சொல்றீங்க? எனக்காக செய்ய மாட்டீங்களா?” என்று அவன் கேட்ட தோரணையில் சின்ன மகனை முறைத்தார்.
“டேய்! உனக்குப் புரியலன்னா கூட பரவாயில்லை, தெரிஞ்சே என்னை ஏண்டா இப்படி பண்ற? அது ராஜீவனுக்குப் பொண்ணு இல்லைனு நினைச்சு சொன்னேன். ஊர்மிளாவுக்கு உன்னை பிடிக்கலடா, அது வேற பொண்ணு! அந்த பொண்ணை பாரு, உனக்கு நிச்சயம் பிடிக்கும்..” என்றதும் ஜெய் சட்டென்று
“பிடிக்காது!” என்றான் அழுத்தமாக.
“ஜெயேட்டா! அப்பா சொல்றார்ல, அவங்களுக்கே ராஜீவன் மாமா பொண்ணுனு இப்போதான் தெரிஞ்சிருக்கு, எப்படி அவங்க கிட்ட இதை பேச முடியும்? அதைவிட நீ ரொம்ப அவங்களை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி வேற நடந்துட்ட, அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்க?” என்றான் வினயன். ரூமிற்குள் தள்ளிவிட்டுட்டு பேச்சை பாரு.. என்று அண்ணனை பார்க்க,
“அப்பா! ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? ஊர்மிளா யாரோ இல்லை, நம்ம அச்சச்சன் பேத்திதானே? நீங்க இப்போ வீட்டுக்குப் போங்க, வீட்ல பேசலாம்” என்று ஜெய் கொஞ்சம் பொறுமையாக சொன்னான். அவன் பொறுமையாக சொன்னதை விட, சொன்ன விஷயம் பாலனை அலைக்கழித்தது. வீட்டில் பேசிக்கொள்ளலாம் என்று அவர்கள் கிளம்பினர்.
ஜெய்க்கு முதலில் ஊர்மிளாவை தனக்குப் பார்த்த பெண் என்ற கோணத்தில் பிடித்தது, நேரில் பார்க்க இன்னும் பிடித்தது. அச்சச்சன் பேத்தி அவளென்றதும் புதிதாய் ஒரு பிரியம்! பிந்து அச்சச்சன் பேத்தி என்ற போது அப்படி ஒரு பாசம் வரவில்லை, ராஜீவனின் மகளாக பார்த்தான். இப்போது ஊர்மிக்கு உண்மை தெரியாது என்றதோடு, அவனுக்குப் பிடித்த பெண், அவன் அச்சச்சனின் பேத்தி.
கூடுதலாக கூடியது பிரியம்!
ஊர்மி அவன் அச்சச்சன் பேத்தி மட்டுமில்லை, ரத்னவேலின் பேத்தி என்பது ஜெயனின் மனதில் பதியவில்லை.
************
“டேய் டேய் பார்த்து!” என்று தன்னிடம் தாவி வந்த ரோமியோவைப் பிடித்தாள் ஊர்மிளா.
“என்னை மிஸ் பண்ணியா நீ?” என்று பூனைக்குட்டியின் முகத்தோடு முகம் உரச, ஜமுனா மகள் பின் வந்தவர்
“தாத்தா வரார்! அவனை விட்டு வழி விடு ஊர்மி” என்றதும், ஊர்மிளா தாத்தாவின் அறையைத் திறந்து வைத்தாள். ரத்னவேலை பிரபாகரனும் சர்வேஷும் பிடித்து அழைத்து வர,
“நான் நல்லாயிருக்கேண்டா, முதல்ல கையை எடுங்க!” என்று அதட்டியபடி ரத்னவேல் இயல்பாக அவர் நடக்க, தாத்தாவை புன்னகையோடு ஏறிட்டாள் ஊர்மி. ரோமியோ அங்கேயே சுற்றிக்கொண்டு வர,
“அக்கா! இவனுக்கு பால் வைங்க” என்று குரல் கொடுத்த ஊர்மிளா தாத்தாவோடு அறைக்குள் போக, சர்வேஷ் மாமாவின் அருகே வந்து நின்று பிரபாகரன் கைப்பிடித்தான்.
“மாமா! ப்ளீஸ், சாரி. இப்படி அவாய்ட் பண்ணாதீங்க! நான் ஏதோ ஊர்மி மேல, தாத்தா மேல இருந்த கோவத்துல அவசரப்பட்டு பேசிட்டேன்” என்றவனின் கையைப் பட்டென்று உதறினார் பிரபாகரன்.
“உனக்கு என் மேல பாசமிருந்திருந்தா யோசிச்சு பேசிருப்ப சர்வா, என் பொண்ணை கஷ்டப்படுத்துறது யார்னாலும் எனக்குத் தேவையே இல்லை!” என்று கடினமான முகத்தோடு பிரபாகரன் சொல்ல, சர்வேஷ் கண்கள் கலங்கிவிட்டன.
அவனுக்குப் பிடித்த அவன் பிரபா மாமா அவனை தேவை இல்லை என்று சொல்ல, தாங்க முடியவில்லை. அக்கா மகன் என்று அவ்வளவு பாசம் காட்டிய மாமா இப்படி பேச, அவனுக்கு அவ்வளவு வருத்தம். லீலாவதி அப்பாவிடம் சொல்லிக்கொண்டு வர, இவனும் தாத்தாவிடம் சொல்லிவிட்டு சென்றான். மனம் முழுக்க அன்றிருந்த கோபமில்லை.! ஆனால் ஊர்மி, மாமா எல்லாம் பேசாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது, அதனோடு போனான்.
இரவு உணவு முடிந்து ஜமுனா அறைக்குள் வர, பிரபாகரன் கட்டிலில் கால்களை நீட்டி உட்கார்ந்தவர் கையில் அலைப்பேசி, முகம் யோசனையில் இருந்தது. ஜமுனா கணவரிடம்,
“என்னங்க யார் போன்ல?” என்று கேட்க
“ராஜீவன்!” என்றார்.
“அண்ணா என்ன சொல்றார்?” என்று கேட்க
“அவனுக்கு அங்க ஏதோ ப்ராப்ளம், இன்னும் இரண்டு நாள்ல தேவிகுளம் போய்டுவேன் சொன்னான். ஊர்மிளாவை பார்க்கிறது பத்தி பேசினான். நான் அவ இங்க வந்துட்டா, அப்பாவுக்கு முடியல சொல்லிட்டேன்!” என்றார்.
“அதுக்கு அவர் என்ன சொன்னார்?
“என்ன சொல்லுவான்? ஓகேனு சொல்லிட்டான்” என்றார் கொஞ்சம் கோபத்தை அடக்கி, ஏனென்றே தெரியாத கோபம், யார் மீது காட்ட வேண்டும் என்று தெரியாமல் தவித்தார் பிரபாகரன்.
“ஊர்மிகிட்ட பேசணும்னு நினைக்கலையா? இவ பேசணும்னு சொல்லி அடம்பிடிச்சு, அவரை வர சொல்லிட்டு இப்படி செஞ்சா அவர் மனசு கஷ்டப்படாதாங்க?” என்று ஜமுனா கேட்க,
பிரபாகரன் மனைவியைப் பார்த்தார். “அப்படி கஷ்டமா இருந்தா, அவன் பார்க்கணும் சொல்லியிருப்பானே?” என்று கேட்க, ஜமுனாவுக்கு கணவரின் கண்களைப் பார்க்கவும் அவர் கலக்கம் புரிந்தது.
“உங்களுக்கு ராஜீவன் அண்ணன் வரதோ ஊர்மியைப் பார்க்கிறதோ பிடிக்கல, இல்லையா?” என்று கேட்க, பிரபாகரனின் அமைதியே பதில் சொல்லியது.
“தப்புங்க! சொல்லாம இருக்கிறதால அவருக்குப் பார்க்க விருப்பமில்லைனு ஆகிடாது” என்று ஜமுனா பேச
“என்ன ஜமுனா? நான் என்ன செஞ்சேன்?” பிரபாகரன் கோபம் கொள்ள
“நம்ம பையனுக்கு வருஷ வருஷம் நம்ம இன்னும் திதி கொடுக்கிறோம், அரை மணி நேரம் கூட முழுசா பார்க்காத குழந்தையை இன்னும் நம்மளால மறக்க முடியல. அப்படியிருக்கப்போ ராஜீவன் அண்ணாவும் ப்ள்ஸியும் குழந்தையை எவ்வளவு எதிர்ப்பார்த்தாங்கனு நமக்குத் தெரியும்தானே? நமக்கு அவர் சந்தோஷத்தை, வாழ்க்கையைத் தூக்கிக் கொடுத்துட்டார்! இப்போ சர்வேஷ் உண்மையை சொல்லாம இருந்திருந்தா, என்னைக்குமே ஊர்மிக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்காது!”
பிரபாகரன் மனைவியை கூர்மையாகப் பார்க்க, “கடைசி வரைக்கும் ராஜீவண்ணா சொல்லியிருக்க மாட்டார். இப்போ உண்மை தெரிஞ்ச பின்னாடி, அதை பேசி புரிஞ்சிக்கிற வாய்ப்பை நம்ம ஊர்மிக்குக் கொடுக்கணும்!” என்றதும் மனைவியை முறைத்தார்.
“இப்போ என்ன வேணும் உனக்கு? ஊர்மியே எதுவும் பேசாதப்ப, நீ ஏன் இதை யோசிக்கிற ஜமுனா?” என்றார் கோபமாக. பிரபாகரன் ஊர்மிளா விஷயத்தில் சுய நலமாகவே யோசித்தார். மகள் மீது யார் உரிமை கொண்டாடுவதும் பிடிக்கவில்லை. கணவர் கோபமாகப் பேச,
“சரி, தூங்குங்க” என்ற ஜமுனா படுத்துவிட, பிரபாகரனுக்கு உறக்கமில்லை. எழுந்து அறையை விட்டு போனவர் மகளின் அறை வாசலில் நின்று எட்டிப்பார்க்க, ஊர்மிளாவுக்கு நல்ல உறக்கம்!
“என்னடா பண்ற?” என்று தோளில் விழுந்த அடியில் பிரபாகரன் திரும்ப, ரத்னவேல் நின்றார்.