கல்கியின் அமைதியில் இன்னும் பேசினான் சிரஞ்சீவி. அவனால் கல்கி பொய் சொன்னதை ஏற்கவே முடியவில்லை, இங்கு போகிறேன் என்று முன்பே சொல்லியிருந்தாலாவது அமைதியாக இருந்திருப்பான். இல்லையா இங்கு வந்திருக்கிறேன் என்று இவன் அழைத்த போதாவது அவள் சொல்லியிருக்கலாம்.
அவள் சொல்லவில்லை, அதுவே அவளுக்கு எதிராய் திரும்பியது. கல்கி சொன்ன பொய் சிரஞ்சீவியின் பார்வையில் அவளை கீழறங்கச் செய்ய, அவனின் ரௌத்திரம் மெல்ல மெல்ல மேலேறியது.
கல்கியோ அவன் வார்த்தைகளில் சுருண்டு மனம் வெதும்பி அழத்துவங்க “அழுகைக்கு எல்லாம் அசையுற ஆள் நான் கிடையாது, முதல்ல பொய் சொன்ன, இப்போ அழற. லெட் மீ நோ தி ட்ரூத்” மிரட்டலாய் சொல்லியவன் டேபிளைக் கோபத்தில் தட்டினான்.
“வந்து ஒரு வாரம் ஆகல, அதுக்குள்ள ஊர் சுத்தப் போயாச்சு, அதுவும் சொல்லாம கொள்ளாம”
“உன்னை இங்க கண்காணிக்க ஆள் இல்லைனதும் இஷ்டத்துக்கு நடக்கிற அப்படித்தானே? படிக்கிறேன்னு காரணம் சொல்லி இதுல ஒரு வருஷம் வேஸ்ட் வேற..” என்றான் இகழ்ச்சியாக.
அதுவரையில் அவன் சுமத்திய குற்றச்சாட்டுகளில் கலங்கியிருந்த கல்கிக்கு அவன் அவளை இழிவாய்ப் பேச, அவனின் இகழ்ச்சிப் பாவம் அவளைக் கொதிக்க வைக்க
“இதுக்குத்தான் போனேன் போதுமா?” என்று தோளில் மாட்டியிருந்த தனது பையைத் திறந்து வேக வேகமாய் இரு தாள்களை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“பேக்கிங் க்ளாஸ்(baking), ட்ரைவிங் ஸ்கூல் ப்ரவுச்சர்ஸ்? ஜாய்ன் பண்ணப் போறியா?” என்றான் கேள்வியாக.
“ஆமா, அதுக்கு விசாரிக்கலாம்னு போனேன்” கோபத்தை அடக்கி அவள் பேச
“இதை எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கலாமே, கேட்டப்பவும் ஏன் பொய் சொன்ன நீ?” என்று அவன் அதிலே நிற்க
“உண்மையை சொன்னா மட்டும் என்னவாகப்போகுது? அப்பவும் நீங்க என்னை இப்படித்தான் பேசுவீங்க” என்றாள் நேருக்கு நேராக அவன் முகம் பார்த்து நின்று. அழுகை கூட நின்று விட்டது.
உண்மையைத்தானே பேசுகிறேன் என்ற உண்மைத் தந்த நிமிர்வுடன் அவனை எதிர்க்கொண்டாள் கல்கி.
“நான் எப்படி பேசுவேன்னு நீயா முடிவு செய்யக் கூடாது, ஓகே?” என்று அதட்டியவன்
“எங்கிட்ட இன்ஃபார்ம் செய்யாம ஏன் போன?” என்றான் விடாப்படியாக.
“வாட்? வீட்ல சொல்லாம டெய்லி நீ க்ளாஸ்க்குப் போகலாம் நினைச்சிட்டியா? வீட்ல விடு, என்னை ஏமாத்திட்டு டெய்லி நீ போய்ட முடியுமா?” என்று சிரஞ்சீவி கேட்க ‘ஏமாற்றி செல்வாயா’ என்ற வார்த்தை அவளின் கோபத்தை இன்னும் ஏற்றிவிட
அதுவரை அவன் மீதான பயத்திலும் பொய் சொல்லி மாட்டிய பதட்டத்திலும் மெதுவாய்ப் பேசியவளுக்கு அவன் தன்னிடம் கேள்வி கேட்பதும், அந்த முறையும் சுத்தமாய் பிடித்தமில்லை. அதனால் குரல் உயர
“என்ன ஏமாத்துறேன்னு அதையே சொல்றீங்க? வீட்ல சொன்னா ஒத்துக்க மாட்டாங்க, அதான் தெரியாம செய்ய நினைச்சேன். போதுமா?” என்று கத்தினாள்.
ஆட்காட்டி விரலை நீட்டி
“டோண்ட் ஷவுட்!” என்று அதட்டினான்.
“ஏன் ஒத்துக்க மாட்டாங்க சொல்ற நீ?” அவன் விடுவதாய் இல்லை.
“எப்படி விடுவாங்க? உங்கம்மா செஞ்ச வேலைக்கு எப்படி விடுவாங்க”
கன்னிவெடி தருணமது!!
அவள் வெடித்திருக்க, அம்மாவைப் பற்றிய பேச்சென்பதால் அவன் வெடிக்கத் தயாரானான்.
“ஏன் இழுக்கக் கூடாது? அவங்களாலதான் நீங்க என்னை நிக்க வைச்சுக் கேள்வி கேட்குறீங்க? அப்போ நான் அவங்களை இழுப்பேன்” கல்கியும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.
“வாட் டூ யூ மீன்?” என்று அவன் அவளைப் பார்க்க
“அவங்க காலேஜ்ல செர்டிஃபிகெட் வாங்கப்போறேன் சொல்லிட்டு கல்யாணம் செஞ்சுட்டு வந்து நின்னாங்க, அவங்க பொய் சொல்லிட்டுப் போனதால எங்க வீட்ல நாங்க உண்மை சொன்னாக் கூட நம்ப மாட்டாங்க”
“கல்கி, அது முடிஞ்சுப் போனது. அப்படியே இருந்தாலும் அம்மா செஞ்சதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க, உன்னோட அப்பா, அம்மா உங்களுக்கு சப்போர்ட்டா இல்லைன்னா நீ எங்கம்மாவை குறை சொல்லுவியா? உனக்குப் பிடிச்ச படிப்பு வேணும்னு ஒரு வருஷம் வெயிட் செஞ்சு படிக்க வந்திருக்க, அப்படியிருக்கும்போது எங்கம்மா அவங்களுக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தேர்ந்த்தெடுத்தா தப்பா?”
“நான் என்னோட விருப்பத்தை சொல்லி வெயிட் பண்ணினேன், ஏமாத்திட்டு உங்கம்மா மாதிரி ஓடி வரல” என்றாள் பட்டென்று.
இத்தனை நேரம் தன்னை ஏமாற்றினாய் என்று சொல்லியிருக்க அதற்கு வார்த்தைகளால் பழி தீர்த்தாள் வஞ்சி. அம்மாவைப் பற்றி பேசவும் சிரஞ்சீவியின் முகம் கோபத்தில் சிவந்து போனது. குரல் உயர
“கல்கி! அம்மாவைப் பத்தி பேசாத. உன்னோட விஷயம் மட்டும் பேசு, இன்னிக்கு நீ இஷ்டப்படி படிக்க வந்திருக்கன்னா அம்மாதான் காரணம், உனக்காக அம்மா செஞ்சதலாம் மறந்துட்டுப் பேசக் கூடாது” என்றான் காரமாய்.
“இத்தனை வருஷம் இஷ்டப்பட்டபடி இருக்காத காரணமும் அத்தைதான், அவங்க என்னோட அப்பாவுக்கு செஞ்சது நம்பிக்கைத் துரோகம். அத்தை எனக்காக செஞ்சது எல்லாம் ஓகே, அதை நான் எப்பவும் மறக்க மாட்டேன். அது மாதிரி அவங்களும் எங்களோட கஷ்டத்துக்குக் காரணம்”
“அப்படி என்ன கஷ்டம் சொல்லேன், சொல்லாம வெளியே போய்ட்டு எவ்வளவு பேசுற நீ” என்றான் எரிச்சல் மீகிய குரலில்.
சின்னப்பெண்ணிற்குள் இத்தனை கோபமா? இவ்வளவு பேச்சா என்ற எண்ணம் அவனுக்குள். நல்லதுக்கு சொன்னால் என்னை எதிர்த்துப் பேசுகிறாள் என்றபடி அவளைப் பார்க்க
“எஸ், சொல்லாம போனேன். என்ன இப்போ? சொல்ல இஷ்டமில்லை. இஷ்டப்பட்டதை செய்ய எல்லார்கிட்டவும் கெஞ்சி பெர்மிஷன் வாங்கியிருக்கீங்களா நீங்க? கண்டிப்பா இருக்காது” என்ற கல்கி மனதில் உள்ளதை அப்படியே கொட்டினாள்.
யாரிடமும் சொல்லாமல் அடக்கி வைத்திருந்தவை எல்லாம் அகம் விட்டு வெளியே வந்தன அவன் கேள்விகளால், அவன் அதைக் கேட்ட விதத்தினால். பெரும் உளைச்சலை அவன் வார்த்தைகள் அவளின் உள்ளத்திற்கு தந்திருக்க அப்படியே வெடித்துவிட்டாள்.
“டென்த் ரிவிஷன் எக்ஸாமுக்கு முன்னாடி என்னோட ப்ரண்டுக்கு உடம்பு சரியில்லை, பாவம் சப்ஜெக்ட் புரியலன்னு என்னை சொல்லித் தர சொன்னா, வீட்ல கேட்டேன் அதெல்லாம் அவ வீட்ல அவளுக்கு அண்ணன் இருக்கான். நீ போகக் கூடாது சொல்லிட்டாங்க, வேணும்னா அவளை நம்ம வீட்ல வந்து படிக்க சொல்லுன்னாங்க. உடம்பு சரியில்லாத பொண்ணு எப்படி வர முடியும்?”
“வீட்ல விடலனதும் அவளுக்காக ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குன்னு பொய் சொல்லிட்டு அவ வீட்டுக்குப் போனதுக்கு நல்லா கொடுத்தாங்க அடி எனக்கு. உண்மையை சொன்னா ஒத்துக்கல, பொய் சொன்னப்போ அடிச்சாங்க, ப்ரண்ட்ஸுங்களுக்கு அண்ணா இருந்தா அவங்க ப்ரண்ட்ஷிப்பே இருக்கக் கூடாது, அப்புறம் எப்படி அவங்க கிட்ட உண்மையைச் சொல்ல முடியும்?”
“காலேஜ் கூட லேடீஸ் காலேஜ்ன்றதால வீட்ல ஒத்துக்கிட்டு இருக்காங்க, இப்போ நான் வெளியே இப்படி க்ளாஸுக்குப் போறது தெரிஞ்சா என்னை விடவே மாட்டாங்க. அங்க போய் நான் யாரையாச்சும் லவ் பண்ணிட்டா?” என்றதும் அவன் கேள்வியாய்ப் பார்க்க
“பஸ்ல தனியா விடமாட்டாங்க, சத்தமா சிரிக்கக் கூடாது, கத்தி அழக் கூடாது. எங்க பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணு காலேஜ் டூர் போனபோது அவ லவ்வர் கூட போய்ட்டாளாம், அதனால என்னோட அக்காவை காலேஜ் டூர் கூட அனுப்பினதில்லை தெரியுமா? “
“ஒரு நாள் என்னோட அக்கா அவ ப்ரண்ட் கூட பேசிட்டு அவ சொன்னான்னு ஷார்ட் ரூட்ல வீட்டுக்கு வந்துட்டா, எப்பவும் வர வழியில வராம ஏன் அந்த வழியில வந்தன்னு வீட்ல உள்ளவங்க அவளை என்ன பாடு படுத்தினாங்க தெரியுமா? என்னமோ கண்காணிக்க யாருமில்லைன்னு இஷ்டத்துக்கு இருக்குறியா கேட்குறீங்க? எப்பவும் யாராவது கண்காணிச்சுட்டு இருந்தா அப்போ தெரியும் உங்களுக்கு என்னோட கஷ்டம்”
கல்கி மனதிலுள்ளதை எல்லாம் மடைத் திறந்துவிட, இப்படியெல்லாம் கூட செய்வார்களா என்றுதான் நினைத்தான் சிரஞ்சீவி. அப்படி காதலித்தால் என்னவாகிடும்? எதற்கு இத்தனைக் கட்டுப்பாடு என்று எண்ணம் போனாலும்
“ஆல்ரைட்! உன்னோட வீட்டைப் பத்தி உனக்குத் தெரியும், சொல்லாம விட்ட ஓகே, ஆனா என்னை உனக்குத் தெரியாது கல்கி. நீ எங்கிட்ட சொல்லி இருக்கனும்” என்றான் அழுத்தமாக.
“எத்தனை தடவ கேட்டாலும் எப்படி திரும்ப திரும்பக் கேட்டாலும் அதே பதில்தான், உங்க கிட்ட சொன்னா ஊர்ல சொல்லிடுவீங்க நினைச்சேன், இப்ப என்ன சொல்லனும்னா சொல்லிக்கோங்க. இவ்வளவு தூரம் வந்துட்டேன் என்னனாலும் பார்த்துக்கிறேன்” என்றாள் ரோஷமாக.
“நான் உன்னைக் கேள்வி கேட்கிறது உன்னோட நல்லதுக்கு கல்கி, அதைப் புரிஞ்சிக்கோ. நீ சின்னப்பொண்ணு தெரியாத ஊர்ல..” என்றவனை நிறுத்தியவள்
“சின்னப்பொண்ணுன்னு சொல்லியே ஒன்னும் தெரியாம ஆக்கிடுவீங்க இல்லை, நான் போய்ட்டு பத்திரமா வந்துட்டேன் தானே?” என்றவள்
“சுதந்திரம் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும், அதை நான் எப்பவும் மிஸ் யூஸ் செய்ய மாட்டேன்” என்று நிமிர்வுடன் மொழிந்தவள் அவளுக்கென ஒதுக்கிய அறைக்குள் வேகமாய் போய்விட்டாள்.
கல்கியின் பேச்சில் இருந்த உண்மை உரைக்க, சிரஞ்சீவி அமைதியாகிவிட்டான். இருந்தும் சொல்லாமல் போய் எதிலாவது சிக்கியிருந்தால் நினைக்கவே பயமாய் இருந்தது, இப்போது சொன்னால் கேட்க மாட்டாள் என்று நினைத்தவன் பிறகு பொறுமையாய் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.
யுனிஃபார்ம் மாற்றி அறையை விட்டு அவன் வெளியே வர அவனைக் கண்ட தையல் நாயகியோ நடந்த ஒன்றும் தெரியாமல்
“அய்யா, சிரஞ்சீவி எனக்கு இந்த டீவியில கொஞ்சம் சத்தம் வைச்சிக்கொடேன், அந்த சின்னவ எங்க? எங்கேயோ போனா என்கிட்ட பேசாம உள்ள போய் கதவை சாத்திக்கிட்டா” என்று பேரனிடம் விசாரிக்க சிரஞ்சீவி இவர்களை நம்பி எப்படி கல்கியை அனுப்பினார்கள் என்று யோசித்தான்.
‘மூணு மணி நேரம் அவளைக் காணல, டீவி சவுண்ட் கம்மின்றாங்க’ என்று நினைத்தவன் சத்தம் வைத்துக் கொடுத்து
“நீங்க சாப்பிட வாங்க அம்மம்மா” என்று அவரை அழைத்தபடி டைனிங் டேபிள் சென்று உட்கார, தையல் நாயகி கல்கியை அழைக்க அவளோ அறைக்குள் இருந்து
“எனக்குப் பசிக்கல அப்பத்தா, நீ சாப்பிடு” என்றவளின் குரலே கரகரத்து ஒலித்தது. அழுகிறாள் என்று தெரிந்தது.
அவள் தவறு செய்தாள் என்று கண்டித்தால் உண்ணாவிரதம் இருப்பாளா என்று சிரஞ்சீவி நினைத்தவன் அவளை சாப்பிடுமாறு அழைக்கவே இல்லை. அதனை கல்கி எதிர்ப்பார்க்கவுமில்லை என்பது வேறு விஷயம்.
அவளுக்கோ பெரும் கலக்கமாக இருந்தது. சிரஞ்சீவி எப்படியும் காலையில் போனால் இரவுதானே வருகிறான், அதைவிட தையல் நாயகி சீரியலுக்குள் மூழ்கிவிட்டால் கரெண்ட் போனால் மட்டுமே வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பார். அவரிடம் கல்லூரிக்குப் போகிறேன் என்று சொல்லியே பேக்கிங் க்ளாஸ் எல்லாம் போய்விடலாம் என கணக்கிட்டு இருந்தாள்.
அவளுக்கு நிறைய நிறைய கற்றுக்கொள்ள ஆர்வம். சென்ற வருடம் வீட்டில் இருந்த போதே டிரைவிங் கற்றுக்கொள்கிறேன் என்று சொன்னவளிடம்
“இப்போ நம்ம கிட்ட கார் எங்க இருக்கு? அப்படியே கார் இருந்தாலும் அதை நீ ஓட்ட வேண்டாம். நாளைக்கு உன்னைக் கட்டிக்கப் போறவன் கார்ல வைச்சு அழைச்சிட்டுப் போவான். உன்னை க்ளாஸூக்கு அனுப்பிட்டு டெய்லி என்னால காவலுக்கு வரமுடியாது” என்று அவளின் அப்பா சொல்லிவிட்டார்.
தாத்தாவோ “பொம்பள புள்ள என்ன கார் ஓட்டுறேன், லாரி ஓட்டுறேன்னு கிளம்புறது. அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது” என்று தடை சொல்லி விட இந்த முறை அவர்களிடம் சொல்லாமல் செல்ல முடிவெடுத்து இருந்தாள். பணம் கூட அவள் சேர்த்து வைத்திருந்தது இருந்தது.
கடைசியில் சிரஞ்சீவி அவளை விசாரணைக் கைதியாக்கி அவன் விசாரணையை நடத்திவிட்டான். தன்னை அவன் பேசிய பேச்சுகள் பெண்ணுக்கு மிகவும் வலித்தது, பதிலுக்குப் பதில் பேசிவிட்டாலும் காயம் ஆறவில்லை.
‘இவன் வேற திமிர்பிடிச்சவன், என்னை கண்டிப்பா வீட்ல சொல்லிக்கொடுத்துடுவான். அதுவும் அத்தையைத் திட்டின காண்டுல என்னைக் கண்டிப்பா மாட்டிவிடுவான்’ என்று நினைத்தவள் மறந்தும் இப்படி பேசியிருக்க வேண்டாமென நினைக்கவில்லை. அவளுக்கு நடந்ததை தானே சொன்னாள்?
என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று பாவைக்கு ஒரு திடம் பிறக்க அது கொடுத்த தைரியத்தில் உறங்கிப்போனாள். தையல் நாயகி அவளை உண்ண அழைக்க, அவள் மறுத்துவிட அவரும் சரி பசிக்கவில்லை என்று விட்டுவிட்டார்.
காலையில் டியுட்டிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சிரஞ்சீவியிடம் வந்த தையல் நாயகி
“ராசா, சின்னவளுக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது” என்று பதட்டமாய் சொல்லவும் உடனே அறைக்குள் ஓடினான்.
“என்னாச்சு கல்கி?” என்று அவள் நெற்றியில் கைவைத்துப் பார்க்க உடம்பு அப்படி சுட்டது.
இரவெல்லாம் மன உளைச்சலில் இருந்தவளுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. சிரஞ்சீவி உடனே வசந்தி அக்காவிடம்
“நான் வரவரைக்கும் நீங்க பாட்டி கூட இருங்க” என்றவன் கல்கியிடம்
“டிரஸ் மாத்திட்டு வா, ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று சொல்ல
“இல்லை, மாத்திரைப் போட்டா சரியாகிடும்” என்று சொன்னாள் கல்கி.
“கல்கி, இவ்வளவு ஃபீவர் இருக்கு, ரா” சிரஞ்சீவி அழைக்க அவள் வரவில்லை என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.
“சரி அம்மம்மா, நீங்க பாருங்க. ரொம்ப முடியலன்னா எனக்குக் கால் பண்ணுங்க” என்றவன் வசந்தியிடம் திரும்பி
“நீங்க இன்னிக்கு மட்டும் ஒரு டூ அவர்ஸ் கூட இருங்க, ப்ளீஸ். ஃபீவர் குறையலன்னா எனக்குக் கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அவன் உண்டு கிளம்பிவிட்டான்.
பதினொரு மணி போல் அவனுக்கு வசந்தி அக்கா போன் செய்தவர் கல்கிக்கு இன்னும் ஜூரம் விடவில்லை என்று சொல்ல, சிரஞ்சீவி வீட்டிற்கு விரைந்தான்.
கல்கிக்கு முடியவே இல்லை. உடல் துவண்டு போனது. நேற்று அலைந்தது, சிரஞ்சீவி பேசியது, வீட்டிற்கு சொன்னால் பார்த்துக்கொள்ளலாம் என்னும் திடம் ஒரு புறமிருந்தாலும் சொல்லிவிடுவானோ என்ற பயம், இரவு உண்ணாமல் இருந்தது எல்லாம் சேர்ந்து பாவையை மொத்தமாய் பதம் பார்த்துவிட்டிருந்தது.
இதே அவள் வீடென்றால் அவளை உண்ணாமல் விட்டிருக்க மாட்டார்கள், அகம் அம்மாவை அக்காவை அப்பாவைத் தேடியது. ஆனால் வெளிக்காட்டவில்லை.
கல்கியைப் பார்த்த சிரஞ்சீவிக்குப் பாவமாய்ப் போய்விட்டது, அப்படி நெருப்பாய் உடல் சுட்டது. அவளை உடைமாற்ற சொல்லி வசந்தியக்காவிடம் தையல் நாயகியைப் பார்த்துக்கொள்ள சொன்னவன் ஹாஸ்பிட்டல் அழைத்துப் போக, டாக்டர் இஞ்செக்ஷன் போட்டு மருந்து மாத்திரைகள் எழுதி தந்து ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுப்பினார்.
கல்கி அமைதியாகவே இருந்தாள், நேற்று அவ்வளவு பேசிய பெண்ணா என்று சிரஞ்சீவிக்கே ஆச்சரியம். ஒரு பக்கம் பாவமாய் இருந்தது அம்மா அப்பா எல்லாம் ஊரில் இருக்க தனியாக இருக்கிறாளே என்று. இரவு அவளை சாப்பிட வைக்காமல் போனதற்கு இப்போது வருந்தினான்.
அவன் கண்களுக்கு அவன் சின்னப்பெண்ணாகவே தெரிய இதுவரை இல்லாத ஒரு பாவனையில்
“இங்க பாரு கல்கி, நான் வீட்ல எல்லாம் சொல்ல மாட்டேன். உனக்கு என்ன க்ளாஸ் போகனும்னாலும் எங்கிட்ட சொல்லு நான் சேர்த்து விடுறேன். தேவையில்லாம அதை நினைச்சு டென்ஷன் ஆகி உடம்பைக் கெடுத்துக்காத, காலேஜுக்கு வேற போகனும் என்ன?” என்று அவளிடம் பொறுமையாய்ப் பேச
கல்கிக்கோ இவனால்தான் எல்லாம். என்னைப் பேசி அழ வைத்து எனக்குக் காய்ச்சலே வரவைத்துவிட்டானே என்ற கோபம் வர
“ஏன்ட்டி மா இதி? சொல்றதைக் கேட்க கூட உனக்குப் பொறுமை இல்லைன்னா எப்படி கல்கி?” என்று சலித்துக்கொண்டவன்
“ஒழுங்கா வீட்ல ரெஸ்ட் எடு” என்று காரை எடுத்தான். வழியிலே அவனுக்கு போன் வர எடுத்துப் பேசிவிட்டு இவளைப் பார்த்தான்.
“என்னாச்சு?” கல்கி சோர்வாய்க் கேட்க
“ஒரு மர்டர், என்னை வர சொல்றாங்க. நான் போகனும்” என்று அவன் யோசிக்க
“நானே தனியா போய்ப்பேன், எனக்கு ஆட்டோ பிடிச்சுக் கொடுங்க” என்றாள்.
‘பரவாயில்லையே, உடம்பு முடியவில்லையென்றாலும் இவளின் துணிச்சலுக்குக் குறையில்லை’ என்று மனதில் அவளைப் பாராட்டியவன்
“அதெல்லாம் வேண்டாம், உன்னை என்னால தனியா அனுப்ப முடியாது. நான் பார்த்துக்கிறேன்” என்றவன் கொலை நடந்த பில்டிங் இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் வண்டியைப் பார்க் செய்தான்.
“ஒரு டென் மினிட்ஸ்ல நான் வரேன், இல்லையா யாராச்சும் அனுப்புறேன். நீயா காரைத் திறக்காத, கீ கார்ல இருக்கட்டும்” என்று சொல்லியவன் மிடுக்குடன் நடந்து போக அவள் காரில் தலைசாய்த்து கண்மூடிவிட்டாள்.
பத்து நிமிடம் போயிருக்கும், அவளுக்கு அழைத்தவன் “இப்போ பரத்வாஜ்னு ஒருத்தர் வருவார், அவர் ஏசிபி. அவர் கூட நம்ம வீட்டுக்குப் போ கல்கி. இங்க எனக்கு வேலை இருக்கு, சாப்பிட்டு ஒழுங்கா டேப்லெட்ஸ் போடு ஓகே” என்று சொல்ல சரியாக காக்கி உடையில் பரத்வாஜ் வந்து நின்றான்.
“மேடம், ஸர் உங்களை வீட்ல விட சொன்னார்” என்று சொல்ல அவளும் கார் டோரை திறந்து விட பரத்வாஜ் காரை எடுத்தான்.
பரத்வாஜைப் பார்த்தவள்
“மேடம் எல்லாம் சொல்லாதீங்கண்ணா, நான் இப்போதான் காலேஜ் ப்ரஸ்ட் இயர்” என்று சொல்லி புன்னகை செய்ய
“ஓஹ், அப்படியா சூப்பர். ஸாருக்கு நீங்க என்ன வேணும்?” என்றான். சிரஞ்சீவி போல் விராப்பாய் நான்தாண்டா போலீஸ் என்ற பாவனை இல்லாது, போலிஸ் உங்கள் நண்பன் என்பது போல் இருந்த பரத்வாஜிடம் கல்கிக்கு இயல்பிலேயே பேச வந்தது.
“ஏன் உங்க ஸார் சொல்லலையா?” என்று இவள் கேட்க
“எங்க ஸாராவது வாயைத் திறக்கறதாவது, எனக்கே ஷாக் எப்படி இன்னிக்கு அவரோட பெர்சனல் விஷயத்துக்கு என்னைக் கூப்பிட்டார்னு. என்னோட ரிலேடிவ் கார்ல இருக்காங்க, வீட்ல ட்ராப் பண்ணிட முடியுமான்னு ரிக்வெஸ்டா கேட்டாருங்க நீங்க வேற” என்று அவன் சிரஞ்சீவியைப் பற்றிச் சொல்ல
“உங்க ஸாருக்கு ரிக்வெஸ்ட் பண்ணவெல்லாம் தெரியுமா?” கல்கி அதிசயம் போல் கேட்க
“என்னம்மா நீங்க? அவரைப் பத்தி உங்க கிட்ட கேட்கலாம்னு நினைச்சா நீங்க எங்கிட்ட கேட்கிறீங்க?” என்று பரத்வாஜ் திருப்பிக் கேட்டான்.
“ஏன்? அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியாதண்ணா? எப்போ இருந்து அவங்களைத் தெரியும்?” என்று கல்கி ஆர்வமாய்ப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த குஷியில் கேட்டாள்.
“ஒன் இயரா தெரியும். செம ஸ்ட்ரிக்ட்! அவர் கிட்ட கேஸ் தாண்டி ஒருவார்த்தை நான் பேசினதில்லை, பேசுற மாதிரி நடந்துக்க மாட்டார். அவரோட அம்மா தமிழ், அப்பா தெலுங்கு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும், அதுவும் அவர் போன் பேசுறதை வைச்சு நானா கண்டுபிடிச்சது” என்றவன்
“அவர் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பிட மாட்டார், நம்புவாரான்னே டவுட் எனக்கு. என் மேல் நம்பிக்கை இல்லை நினைக்கிறேன், அதான் அவரைப் பத்தி ஒன்னுமே சொல்லாம இருக்கார் போல” என்றான் பரத்வாஜ்.
கல்கியோ “ஏன் அண்ணா அப்படி சொல்றீங்க? உங்க மேல நம்பிக்கை இருந்தவாசித்தான் என்னை உங்களை நம்பி அனுப்புறார்” என்றதும்
சிரித்த பரத்வாஜ் “நீங்க வேற ம்மா, அவருக்கு எதுனாலும் அவரே கண்டுபிடிக்கனும், அவ்வளவு டியுட்டி கான்ஷியஸ். என்னை க்ரைம் சீன்ல விட்டா நான் எதையாச்சும் மிஸ் பண்ணிடுவேன், உங்களுக்கு வேற முடியல. அதனால் என்னை அனுப்பினார்” என்றான்.
கல்கியோ பரத்வாஜிடம்
“அடக்கடவுளே, அப்படியாண்ணா சொல்றீங்க? உங்க ஸார் பயங்கர போலீஸா இருக்காரே” என்றாள். நேற்று அவன் பேசியது எல்லாம் மறக்குமா என்ன? திரும்ப திரும்ப எப்படி தன்னைக் கேள்வியாய்க் கேட்டு டார்ச்சர் செய்தான் என்று நினைத்துக் கொண்டாள்.
பரத்வாஜ் சினேகமாய் புன்னகை செய்ய “உங்க ஸார் இந்த கிம்பளம் எல்லாம் வாங்குவாரா அண்ணா?” என்று அடுத்து கல்கி கேட்டுவிட பரத்வாஜ் அவள் கேட்ட கேள்வியில் ஷாக் அடிக்க ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான்.