முதல் நாள் மாலை டெல்லி சென்றிருந்த கிருபாகரனும் அவர் மனைவியும் வீடு வந்தனர். ரத்னவேல் பெரிய மகனை அழைத்து பேத்தி விஷயத்தை மறைக்காது சொல்லிவிட, கிருபாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதன் காரணம் ஊர்மிளாவை என்றுமே அவரால் வேறாக நினைக்க முடிந்ததில்லை. மகளில்லாத அவருக்கு பிரியமானவள். தம்பி சொல்லாத காரணமும் கூட அப்பாவாக புரிய, பிரபா மீது கோபம் வருத்தம் என்று எதுவுமில்லை.
“என்ன கிருபா ஒன்னும் பேசாம இருக்க?” ரத்னவேல் மகனை அறிய கேட்டார்.
“இதுல பேச என்ன இருக்குப்பா? ஊர்மி எப்பவும் நம்ம வீட்டுப்பொண்ணு” என்றதும் ரத்னவேல் மகனை மெச்சுதலாக பார்த்தார்.
“பசங்க கிட்ட சொல்லணுமா டா? சர்வேஷ் ஏதோ கோவத்துல பேசிட்டான், ஆனா லீலாவும் அவ புருஷனும் என்னைக்காச்சும் சொல்லி காட்டுவாங்களோ எனக்குப் பயமாயிருக்குடா கிருபா. நான் இருக்க வரைக்கும் பேசாம இருந்தாலும் எனக்கு அப்புறம் என் பேத்தியை எதாவது சொல்லிட்டா..” என்று ரத்னவேல் கவலைப்பட அப்பாவின் கைப்பற்றிய கிருபாகரன்
“அப்பா! எப்பவும் விஷ்ணுக்கும் விஷாலுக்கும் ஊர்மிளா தங்கச்சி, எதுவும் மாறலப்பா. பசங்களுக்கு வேற யாரும் சொல்லித் தெரியறது விட நம்ம சொல்லிடலாம்” என்றார்.
“சரிடா கிருபா, நீயும் பிரபா கிட்ட பேசிடு, உன் தம்பி பொண்ணை ஊருக்கு அனுப்பி வைச்சிட்டு ஃபீல் பண்ணிட்டு இருக்கான்.” என்றதும் கிருபாவும் பிரபாவிடம் ஆறுதலாக பேசினார்.
அடுத்த நாள் சர்வேஷ் தாத்தாவை பார்க்க வந்தான். கிருபாகரனிடம் பேசிவிட்டு பிரபாவை பார்க்க, அவர் இவனை பார்க்கவே இல்லை. சர்வாவின் முகம் சுருங்கிவிட்டது, அவனது ஆச்சி சிவகாமி இருந்தவரை அவனை ராஜாவாக உணரவைத்தார். கிருபாகரனுக்கு தங்கைக்கு முன்பே திருமணமாகி விஷ்ணு பிறந்திருக்க, பிரபாகரனுக்கு அப்போதெல்லாம் சர்வா என்றால் செல்லம். விடுமுறைக்குப் பாட்டி வீடு வருபவனை எல்லாரும் அப்படி தாங்குவார்கள். ஊர்மிளா வந்தபின் சர்வாவின் மீதிருந்த பாசம் கொஞ்சமும் குறையவில்லையென்றாலும், பிரபாவின் கவனம், அக்கறை, நேரமெல்லாம் ஊர்மிக்கே! அதுவும் கூட சர்வேஷின் கோபத்திற்குக் காரணம்.
சிறுவயதில் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவனை தூக்கி சுற்றும் பிரபா மாமாவின் முகத்திருப்பல் அவனுக்கு சுணக்கம் தர, கிருபாகரனுக்குத் தங்கை மகனின் வாட்டம் புரிந்தது.
“என்னடா மாப்ள! எங்க பொண்ணை கட்ட மாட்டேனு குதிச்சியாமே?” என்று அவனை சீண்ட
“மாமா! நீங்க வேற ஏன்?” என்றான் சலிப்பாக.
“ஹாஹா! பரவாயில்லை நாங்க எங்க வீட்டைப் பொண்ணை நல்ல பையனா பார்த்துக் கொடுத்துக்கிறோம். நீங்களும் வெளியில பொண்ணு எடுத்தாதான் எங்க அருமை புரியும்” என்றதும் அவன் முகம் இன்னும் சுணங்க
அவன் தோள் தட்டியவர், “டேய் சர்வேஷ்! மாமா சும்மா சொன்னேன்! கல்யாணமெல்லாம் விரும்பி செய்யணும். அதுக்காக உறவில்லைனு ஆகாது” என்றவரிடம்
“ஊர்மி எப்பவும் என் மாமா பொண்ணுதான் மாமா. அவளை நான் வேற மாதிரி பார்க்கல, அதை சொல்ல போய்..ப்ச் சாரி மாமா” என்று மனதார மன்னிப்புக் கேட்டாலும் பிரபா அவன் பக்கம் திரும்பவில்லை.
“மங்கை, சர்வா வந்திருக்கான் பாரு” என்று மனைவியை அழைத்தவர் தம்பியோடு அவர் அறைக்குச் சென்றார்.
“சர்வா மேல இன்னும் கோவம் போகலயா?” தம்பியோடு அவர் அறையில் இருக்கும் திவானில் உட்கார்ந்து கிருபா கேட்க, பிரபாகரன் அண்ணனை முறைத்தார்.
“எப்படி போகும்’ணா? அன்னிக்கு நான் அவ்வளவு சொல்லியும் சொல்றான் ராஸ்கல்! ஊர்மி எவ்வளவு அழுதா தெரியுமா? அவ அப்படி அழுது நான் பார்த்ததில்லை, அதுக்கு விட்டதுமில்லை” என்றார் கோபமாக.
ஆர்மியில் சேர வேண்டும் என்பது பிரபாகரனின் மிக பெரிய கனவு, காதல்! ரத்னவேலுக்கும் அவர் மனைவிக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. சண்டையிட்டு போனார். ஊர்மிளாவுக்கு மூன்று வயது, பிரபா விடுமுறை முடிந்து கிளம்பும்போது பயங்கர அழுகை. அந்த முறை சென்றவர் வேலையை ராஜினாமா செய்து வந்தார். அத்தனையும் மகளுக்காக! மகளின் அழுகை அவரை அவ்வளவு பாதிக்கும். கிருபாவுக்குத் தம்பியின் மனம் புரிந்தது. அதே நேரம் தங்கை மகனும் அவருக்கு முக்கியம்.
“பிரபா! ஊர்மி எனக்கு முக்கியம், அதுக்காக சர்வா முக்கியமில்லைனு ஆகாது. நீயே கொஞ்சம் நிதானமா யோசி, சர்வா விருப்பமில்லைனு சொன்னதை அப்பா பெரிய பிரச்சனை ஆக்கிட்டார். நம்ம பொண்ணு நமக்கு உசத்தி, எல்லாருக்கும் அப்படியிருக்க முடியாது. அவனுக்கு விருப்பமில்லன்னா அப்படியே விடாம, இவர் பேச போய்தானே அவனும் பேசினான். அதுவும் முன்னாடியே உண்மை தெரிஞ்சும் சொல்லாம தானே இருந்திருக்கான். அவனுக்கு ஊர்மிளாவை பிடிக்கலன்னா, குடும்பத்தை பிரிக்கணும்னா தெரிஞ்ச அன்னிக்கு சொல்லியிருப்பானே?” என்று தங்கை மகனுக்காக பேச
“அவன் செஞ்சது தப்புடா! அவன் கெட்டவன் இல்லை, நம்ம கூடப்பொறந்தவ புள்ள! உண்மையில அவன் சின்னப்புள்ளத்தனமா நடந்துட்டான். நீ இப்படி பேசாம முகம் காட்டி, அவனுக்கு வெறுப்பு வர வைக்காத!” என்றதும் பிரபா புரியாது பார்த்தார்.
“என்னடா பார்க்கிற? நீயே யோசி, ஊர்மி வர வரைக்கும் சர்வேஷ் நம்ம வீடு வந்தா அவன் உன்னோடவே சுத்துவான், அவனுக்கு நீ ரொம்ப இஷ்டம், ஊர்மி வந்த பின்னாடி நீ சர்வாவை வந்தா கவனிப்ப, ஆனால் அவனுக்குனு ஒரு முக்கியத்துவம் இருக்குமே, அது அவனை விட்டு போச்சுதானே?”
“பெரியவங்களுக்கு இது சின்ன விஷயமா இருக்கலாம், பத்து வயசு குழந்தையோட எட்டு வயசு குழந்தை சின்னதா இருக்கலாம். ஆனா ரெண்டுமே குழந்தைங்க தானே? விஷ்ணுவும் சர்வேஷும் மட்டும்தான் முதல்ல இந்த வீட்ல பேரப்பசங்க, அப்புறம் விஷால், ஊர்மி,சரண்யான்னு மத்த குழந்தைங்க வந்தாங்க. அப்போ சர்வாக்குக் கிடைச்ச அந்த அட்டென்ஷன், அவனுக்குக் கிடைக்காம மத்தவங்களுக்குப் போச்சு. நமக்குப் பிஸ்னஸ்ல ஒரு கான்ட்ராக்ட் போனா கூட கொஞ்சம் அப்செட் ஆகுறோம் தானே? சின்ன பையன் வேற..” என்று அண்ணன் சொல்ல
“இப்ப அவன் சின்ன பையனா? எப்படி கேள்வி கேட்டான் தெரியுமா? பிரபா இன்னமும் அந்த கொதிப்பு அடங்காமல பேசினார்.
“பிரபா” என்று பெருமூச்சு விட்டவர் “அவனுக்கு ஊர்மி மேல சின்ன வயசுல இருந்தே ஒரு கோவம் இருந்திருக்கு. தனக்கு மட்டுமே கிடைச்ச பிரபா மாமா பாசம் அவளுக்குப் போச்சுனு, அது அவனே பெருசா நினைச்சிருக்க மாட்டான். இருந்தும் ஒரு கோபமான சூழ்னிலையில, அவன் அப்படி பேசிட்டான். உனக்கு நான் சொல்றது புரிஞ்சிக்க கஷ்டம், ஏன்னா நீ இந்த வீட்டோட கடைக்குட்டி. சர்வேஷை என்னால புரிஞ்சிக்க முடியும்.” என்றதும் சட்டென்று அண்ணனை திரும்பி பார்த்தார்.
தம்பியின் பார்வைக்குக் கிண்டலாக தலையசைத்த கிருபா, “அப்பா அம்மாவுக்கு நான் மட்டும் செல்லம்னு, அதான் என் உலகம்னு நினைச்சிட்டு இருந்தப்ப லீலா பொறந்தா, அடுத்து சின்னவ, நீ. பத்து வயசுல நான் தம்பி, தங்கச்சிகளுக்கு பெரியண்ணன் ஆகிட்டேன்!” என்று சிரித்தார்.
“லீலா பொறந்தப்ப நான் அஞ்சு வயசு பையன் தானே? உனக்கு ஒரு உண்மை தெரியுமா இந்த பெரிய பசங்களுக்கு குழந்தையா இருக்கிற காலம் ரொம்ப குறைவு! சீக்கிரமே அவங்கள குடும்பம் பெரிய மனுஷனா ஆக்கிடும். என்னை மாதிரி, உங்களை எல்லாம் மேய்ச்சுட்டு ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போனேனே” என்று வாய் விட்டு சிரிக்க, அந்த சிரிப்பு பிரபாவையும் தொற்ற
தம்பி கொஞ்சம் நிதானமாகவும் கிருபாகரன் தான் பெரிய அண்ணன் என்று நிரூபித்தார்.
“இந்த சர்வா பய இன்னும் ஏக்கம் போகாம இருக்கான் போல, நம்ம அம்மா போன பின்னாடி அப்பாவுக்கு ஊர்மிதானே செல்லம். கூடவே அவருக்கு விஷ்ணு, விஷால், ஊர்மி மட்டும் அவர் வாரிசு, அவங்க எல்லாம் மக வீட்டு பேரப்பசங்கனு ஒரு பாகுபாடு. இதெல்லாம் நம்ம திட்டம் போட்டு பண்றது இல்லை, தானா நடக்குது என்ன குழந்தைங்க மனசை பாதிக்குது! இப்போ நீ உன் கோவத்தைப் பிடிச்சு வச்சா நாளைக்கு ஊர்மியைதான் அது பாதிக்கும். நமக்கு அப்புறமும் நம்ம பொண்ணுக்கு எல்லா உறவும் வேணும்னு நான் நினைக்கிறேன். உனக்கு அந்த எண்ணமிருந்தா நான் சொல்றதை கேளு, நீ ஒன்னும் அவனை கொஞ்ச வேண்டாம், கொஞ்சம் சாதாரணமா பேசு. எனக்கு என் தம்பி பொண்ணும் முக்கியம் தங்கச்சி பையனும் முக்கியம்” என்றவர் தம்பி யோசிக்கட்டும் என்று எழ
“சரிண்ணா, பார்க்கிறேன். இப்போ ஊர்மியை பிக் அப் பண்ண ஏர்ப்போர்ட் போறேண்ணா” என்று கிளம்பினார் பிரபாகரன். சர்வேஷ் கிருபாவிடம் ஊர்மி எங்கே என்று கேட்க
“டூர் போயிருக்கா” என்றார். அவள் வருகிறாள் என்றதும் அவளிடம் பேச காத்திருந்தான்.