“நீதான் டா உன் கோகி கூப்பிட்டதுமே என்ன விஷயம்னு கேட்காம உடனே வந்துட்ட, ஈரோஜு தன பர்த்டே அன்னி நாக்கு தெலுசு ரா ஸ்டாலின்”(இன்னிக்கு அவ பர்த்டேன்னு எனக்குத் தெரியும்) என்று சூர்யா புன்னகை நிரம்பிய முகத்துடன் சொல்ல ஸ்டாலினிடம் கேள்வியாய் ஒரு பார்வை.
“ஹரே ஸ்டாலின்! யமுனா பூ வைக்கலடா, வைச்சா நல்லா இருக்கும்” என்ற சூர்யா அவனிடம் பணத்தைக் கொடுத்து
“நான் வாங்கிக் கொடுத்தா வாங்க மாட்டா, நீயே கோகிலா கிட்ட சொல்லி வாங்க சொல்லு, பூ வைச்சா யமுனாவுக்கு ரொம்ப நல்லா இருக்கும்” என்ற சூர்யாவை சுட்டெரித்தான் ஸ்டாலின்.
“இதெல்லாம் ரொம்ப அதிகம்டா. நானே கோகிலாவுக்குப் பூ வாங்கிக் கொடுத்ததில்லை, முதல்ல யமுனா கிட்ட விஷயத்தை சொல்லு, இப்படியே நீ மனசுல ஆசை வளர்க்கிறது எனக்கு பயமா இருக்குடா” என்று ஸ்டாலின் நிஜமாய்ப் பதறினான்.
“இப்பவே சொன்னா அவ எப்படி ஒத்துப்பா, இரண்டே தடவ பார்த்து பேசினது வைச்சு யமுனாவுக்கு எப்படி என்னைப் பிடிக்கும்டா? எனக்கே அவளை ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போதுதான் அதிகமாவே பிடிக்க ஆரம்பிக்குது. எனக்கு கான்ஃபிடன்ஸ் இருக்கு யமுனாவுக்கு என்னைப் பிடிக்கும்னு”
“நடந்தா சரிதான், நடக்கலன்னா?” என்று ஸ்டாலின் பார்க்க சூர்யா சற்றும் யோசிக்காது அவனின் காலை மிதித்தான்.
“ஆஆஆ..!” என்று ஸ்டாலின் அலற, பெண்கள் இருவரும் திரும்பிப் பார்க்க
“இடிச்சுக்கிட்டேன்” என்று ஸ்டாலின் சமாளித்தான்.
“இங்க பாரு, கோகி ப்ரண்ட்னா எனக்கு தங்கச்சி மாதிரி. அந்த பொண்ணுக்குப் பிடிக்கலன்னா பிரச்சனையாகிடும்” என்று மீண்டும் மீண்டும் அதை சொல்ல சில நொடிகள் சூர்யாவிடம் அமைதி.
“யமுனாவுக்கு என்னைப் பிடிக்கலன்னா நான் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனா பிடிக்கலனா மட்டும்தான் ஸ்டாலின்” என்ற சூர்யாவின் ஒரு உறுதி.
அந்த பேச்சில் உள்ள உறுதியும் நண்பனிடம் தெரிந்த கலக்கத்திலும் ஸ்டாலினுக்கும் மனம் என்னவோ செய்ய, நண்பனின் தோளோடு சேர்த்து அணைத்தவன்
“கண்டிப்பா உன்னை யமுனாவுக்குப் பிடிக்கும்டா. பிடிக்கனும்” என்று ஆறுதலாய் சொன்னான். கோவிலில் தரிசனம் முடித்து பெண்கள் வெளியே வர, “கோகி?” என்று மெல்ல அழைத்தான் ஸ்டாலின்.
“ஒரு நிமிஷம் டி” என்று யமுனாவிடம் சொல்லிவிட்டு ஸ்டாலினிடம் வந்தாள் கோகிலா.
“எதுக்குக் கூப்பிட்ட?” என்று கோகிலா கேட்க
“இந்தா பணம், நீயும் யமுனாவும் பூ வைச்சிக்கோங்க” என்று ஸ்டாலின் பணம் கொடுக்க, கோகிலா ஆட்சேபமாகப் பார்த்தாள்.
“ஸ்டாலின், யமுனாவுக்கு உன் ப்ரண்ட் மேல எந்த அபிப்ராயமும் இல்லை. நல்லா மேத்ஸ் சொல்லித்தரார்னு மட்டும்தான் சொன்னா. இந்த அண்ணா தேவையில்லாம ஆசை வளர்த்துக்கிறார். அவ்வளவுதான் நான் சொல்லுவேன்” சூர்யாவுக்குக் கேட்க கூடாதென ஒரு மெல்லிய குரலில் சொல்லி முடிக்க,
“ப்ளீஸ் கோகி! என் ப்ரண்ட் ரொம்ப நல்லவன் டி. நாங்க எல்லாம் சீக்கிரமே எக்ஸாம் பாஸ் பண்ணிடுவோம். மூணு வருஷம் என் கூடவே இருக்கான், அவனைத் தெரியாதா எனக்கு? எந்த பொண்ணையும் திரும்பிப் பார்த்ததில்லடி அவன். நீ ஹெல்ப் செய்யலனாலும் பரவாயில்ல இப்படி பேசி வைக்காத. இப்போதானே பேச ஆரம்பிச்சிருக்காங்க போக போக என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்?” என்றவன்
“இந்தா பூ வாங்கிக்கோங்க” என்று ஸ்டாலின் நீட்ட
“இது அவர் கொடுத்தது, எனக்கு நீ கொடு” என்று கேட்க, ஸ்டாலின் ஒரு ரசிக்கும் புன்னகையுடன் அவன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் கொடுத்தான். கோகிலாவும் வெட்கச்சாரல் வீசும் முகத்துடன் இருவருக்கும் பூ வாங்கினாள். தோழி வாங்கித் தரவும் யமுனாவிற்கு ஒன்றும் வேறுபாடாய்த் தெரியவில்லை.
“அப்புறம் என்னம்மா தங்கச்சி ப்ளான்?” என்று ஸ்டாலின் யமுனாவிடம் கேட்க
“என்ன ஒரு காஃபி குடிச்சிட்டு அப்படியே கிளம்ப வேண்டியதுதான். அப்புறம் வெயில் வந்திடும்” என்று கோகிலா பதில் சொல்ல
“நீங்களும் வாங்கண்ணா, இன்னிக்கு என் டீரிட்” என்று சொல்லி சூர்யாவையும் வாங்க என்று அழைத்து நால்வருமாக திருவல்லிக்கேணி ரத்னா கஃபே சென்றனர். சைக்கிளைத் தள்ளிக் கொண்டே நடந்த சூர்யாவிடம் ஸ்டாலின்,
“டேய்! இங்க ராஜா மேன்ஷன்ல ஒரு ரூம் காலியாகும்னு நம்ம எக்கனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் சுரேந்தர் சொன்னான் டா. அவனுங்க இங்கதான் தங்கியிருக்காங்க. வாடகை கூட கம்மி, ரத்னா கஃபே கூட இருக்கு. இங்க வந்திடுவோமா?” என்று கேட்டான்.
“எந்துக்கு ரா? இங்க பாரு எவ்வளவு கூட்டம், அங்க வாடகை கொஞ்சம் அதிகம்னாலும் அமைதியா படிக்கலாம், மாடியில நம்ம மட்டும்தான். இங்க பக்கத்துல கோவில் சத்தமெல்லாம் அங்க இருக்காது. இந்த வருஷம் மட்டும்தானே டா? சமாளிச்சுக்கலாம்” என்று சூர்யா சொல்ல
“சமாளிக்கிறதெல்லாம் பிரச்சனை இல்லடா. அங்க நம்ம மட்டும் தனியா இருக்கோம், இங்க நம்ம பசங்க இருக்காங்க, பக்கத்துலே பீச். சண்டேன்னா கிரிக்கெட் ஆடலாம்” என்ற ஸ்டாலினை சூர்யா நன்றாய் முறைத்தான்.
பேசிக்கொண்டே ரத்னா கஃபே வந்துவிட்டனர். காலை பத்து மணி போல்தான் இருக்கும், அப்போதே பயங்கர கூட்டம். ஃபில்டர் காஃபியின் வாசம் காற்றில் மிதந்து வந்தது. கூடவே மசால் வடைகளும் மணம் கூட்டின. சர்வர்கள் அங்குமிங்கும் உணவு தட்டுகளுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.
இரண்டு பேர் உட்காரும் வகையில் தனி தனி டேபிள்கள் இரண்டு மட்டும் காலியாக இருக்க, இவர்கள் அதில் உட்கார்ந்து கொண்டனர். கோகி தன்னுடன் உட்கார்ந்திருக்க, ஸ்டாலினின் பார்வை இங்கு இருப்பதைக் கண்ட யமுனாவிற்கு சூர்யாவின் பார்வைத் தெரியவில்லை.
அதனால் “கோகி! அண்ணா கூட போய் உட்கார்ந்துக்கோ டி. பாவம் அவங்க இங்கேயே பார்க்குறாங்க” என்று யமுனா சொல்ல,
“நீ தனியா இருப்பியே டி” என்ற கோகிலாவுக்கும் ஆசை இருக்க, யமுனா வற்புறுத்தி அனுப்பி வைக்க, சூர்யா இங்கே இடம் மாறினான். யமுனா அமைதியாக இருக்க ஸ்டாலின் இவர்களிடம்
“டேய் நாலு காஃபி சொல்லிடுறேன், தங்கச்சி இங்க ரசமலாய் நல்லா இருக்கும். சொல்லவா?” என்று கேட்க
“சரிங்கண்ணா” என்றாள்.
“எனக்கு வேண்டாம் ரா” என்று சூர்யா மறுக்க
“ஏன் வேண்டாம் சொல்றீங்க? இன்னிக்கு என் டிரீட்” என்று யமுனா சொல்ல
“ரசமலாய் வேண்டாம் சொன்னேன், நாக்கு ஸ்வீட்ஸ் ஒத்து. ஸ்டாலின் எனக்கு மிர்ச்சி பஜ்ஜி ரா” என்று சூர்யா சொல்ல
“அதானே பார்த்தேன்” என்றவன் ஆர்டர் சொல்ல டவரா செட்டில் சுட சுட ஃபில்டர் காபியும், ரத்னா கஃபேயின் ஸ்பெஷல் ரசமலாய்யும் வந்தது.
“உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும் நினைச்சிட்டே இருந்தேன். கடைசி டெஸ்ட்ல நல்லா பண்ணினேன். அப்புறம் இப்போ இங்கிலிஷ் கூட வேற காமிக்ஸ் புக் எடுத்து படிச்சிட்டு இருக்கேன், ரொம்ப தேங்க்ஸ்” என்று யமுனா நன்றியுணர்வை அவனிடம் சொல்ல
“அந்த்தே!(thats it) இங்கிலிஷ் ரொம்ப ஈசி, உனக்கு கான்ஃபிடன்ஸ் இருக்கு யமுனா. நீ ட்ரை பண்ணினா நல்லா வருவ” என்று சூர்யா பாராட்டினான். அவன் மிளகாய் பஜ்ஜியை ரசித்து சாப்பிட, யமுனாவின் பார்வை அவனைத் தீண்டியது.
“என்ன?” என்று அவன் பார்க்க
“இல்லை நீங்க ரொம்ப காரமா சாப்பிடுறீங்களே, உடம்புக்கு நல்லதில்ல. அன்னிக்கு பீச்ல கூட மிளகாய்ப் பஜ்ஜிதான் சாப்பிட்டீங்க” என்று யமுனா சொல்ல, தன்னை ஏதோ ஒருவகையில் கவனித்திருக்கிறாளே என்று அவனிடம் ஒரு உற்சாக உணர்வு .
“சரி இனிமே ரொம்ப காரம் சாப்பிடல. அது மாதிரி இங்க இருக்க மிளகாய் எல்லாம் காரமில்லை, நம்ம ஊர்ல மிளகாய்த் தோட்டம் இருக்கு. என் அண்ணய்யா பார்த்துட்டு இருக்காங்க” என்றான்.
யமுனா சூர்யா சொன்னதை ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டவள்
“அப்போ ஸ்வீட்ஸே சாப்பிட மாட்டீங்களா நீங்க?” என்று கேட்டாள்.
“இல்லை ரா. எங்கம்மா அரிஷலு (அதிரசம்) நல்லா செய்வாங்க. அது ரொம்ப பிடிக்கும் எனக்கு, அப்புறம் பூர்ணம் புரேலா பிடிக்கும். உனக்கு?” என்று கேட்க
“எனக்கு இனிப்புன்னா ரொம்ப பிடிக்கும், எங்க ஊர்ல எலந்த பழ மிட்டாய் விக்கும் அது ரொம்ப பிடிக்கும், கொடுக்காப்புளி பிடிக்கும். அப்புறம் எங்கம்மா அதிரசம், சுழியன், கொலுக்கட்டை எல்லாம் நல்லா செய்யும். எங்க ஊர்ல அஷோகா ரொம்ப ஃபேமஸ், அதுவும் எனக்குப் பிடிக்கும். இந்த ரசமலாய் நல்லா இருக்கே, உங்களுக்கும் ஒன்னு சொல்லவா?” என்று யமுனா கேட்க
“வேண்டாம் ரா, வேஸ்ட் ஆகிடும். எனக்கு திகட்டும்” என்று சூர்யா சொல்ல யமுனாவும் வலியுறுத்தவில்லை.
“அப்புறம் எப்போ எக்ஸாம் உங்களுக்கு?” என்று யமுனா கேட்க, இவனும் பதில் பேச அப்படியே படிப்பு சார்ந்தே பேச்சுகள் ஓடியது. உண்டு முடித்து வெளியே வர, சூர்யா தன்னிடம் இருந்த ஹீரோ பேனாவை எடுத்து யமுனாவிடம் நீட்டி,
“இது எங்க கிஃப்ட் யமுனா” என்று ஸ்டாலினைப் பார்க்க, அவனிடம் ஆச்சர்யம்.
“ஆமா, ஆமா எங்க கிஃப்ட், வாங்கிக்கோம்மா” என்று ஸ்டாலின் சொல்லவும்
“இதெல்லாம் எதுக்குண்ணா? உங்க வாழ்த்தே போதும்ணா” என்று யமுனா இவர்களின் பரிசை வாங்க மறுத்தாள்.
“எங்களை ப்ரண்டா நினைச்சா வாங்கிக்கோ யமுனா, ஜஸ்ட் ஒரு பென் தானே?” என்று சூர்யா வலியுறுத்தி வஞ்சியிடம் சொல்ல, கோகிலாவும்
“வாங்கிக்கோ” என்றதும் ஒருவழியாக யமுனா அந்த பச்சை நிற ஹீரோ பென்னை வாங்கிக்கொண்டாள்.
“தேங்க்ஸ் இரண்டு பேருக்கும்” என்று யமுனா சொல்ல, இருவருமே தலையசைத்துக் கேட்டுக்கொண்டனர். அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு, இவர்கள் சைக்கிளில் வீடு நோக்கிப் போனார்கள்.
“எனக்கே தெரியாம ஹீரோ ஸார் ஹீரோயினுக்கு ஹீரோ பென் வாங்கி வைச்சிருக்க, இருந்தாலும் வாட்ச் இல்லை வேற எதாவது பெருசா வாங்கிக் கொடுத்திருக்கலாம்” என்று ஸ்டாலின் சைக்கிளின் பின் பக்கம் உட்கார்ந்தவன் சொல்ல
“எதுக்கு? நம்ம இரண்டு பேரும் சேர்ந்து கொடுக்கிறோம்னு சொல்றதுக்கே யமுனா வாங்க எவ்வளவு யோசிச்சா பார்த்தல்ல டா. ஏதோ கோகிலா சொன்னான்னு வாங்கினா. அவ நல்ல படிக்கிற பொண்ணுடா, அதனால பென் கொடுத்தா வேண்டாம்னு சொல்லாம வாங்கிப்பா தோணுச்சுரா”
“என்னம்மா ப்ளான் பண்ணியிருக்கா டா நீ?” என்று ஸ்டாலின் சிலாகித்தபடியே வண்டியை மிதித்தான்.
வீட்டிற்கு சென்றதும் இரவு மாடியில் எல்லாரும் கூடியிருந்தனர். அன்று இரவு உணவு ராமுவும் ஸ்டாலினும் செய்ய, சூர்யா தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்க சென்றிருந்தான். குடிப்பதற்கு மட்டும் அங்கே பிடித்து வைத்துக்கொள்வார்கள்.
தண்ணீர் குடத்துடன் மேலே ஏறிய சூர்யாவின் முகம் அந்த இரவு வேளையிலும் அத்தனை பிரகாசமாய் இருந்தது, ப்ரியங்கள் தந்த பொலிவுடன் குரலிலும் குதூகலம் எட்டிப்பார்க்க,
“மேரீ சப்னோ கீ ராணி கப் ஆயேகி து(என் கனவுகளின் ராணியே, எப்போது வருவாய்?)
ஆயி ருத் மஸ்தானி கப் ஆயேகி து(சந்தோஷத்தின் காலம் வந்துவிட்டது, நீ எப்போது வருவாய்?)
——————-
சலி யா து சலி யா(வா தயவு செய்து வா)” என்று கீழ்வீட்டில் அன்று புதன் கிழமையாதலால் ‘சித்ர ஹார்’ ஓட கிஷோர் குமாரின் அந்த பாடலுடன் சேர்ந்து பாடியபடி மாடியேறிய சூர்யாவைக் கண்ட ராமு
“இவன் இருக்க குஷியில இப்படியே பாடிட்டு, இன்னும் நாலு குடம் தண்ணி எடுக்க சொன்னாலும் எடுப்பான் போலயே டா” என்று ஸ்டாலின் சொல்ல
“இந்தில பாட்டு பாடுறதைப் பார்த்தியா டா, இவனை?” என்று ராமுவிடம் சொன்னவன்
“அதுவும் சலி யா து சலி யா வா? வருவா வருவா உன் ராணி சீக்கிரமே” என்று சிரித்த ஸ்டாலினிடம்
“அடே! நீ மட்டும் இந்தி பேசுறன்னு இந்தி ஒழிப்பு போராட்டத்துக்குப் போன உங்கப்பாவுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் டா” என்று ராமு கிண்டல் செய்தான்.
இந்த கிண்டல் கேலி எதிலும் கலந்து கொள்ளாமல் காதல் வானில் திளைத்திருந்தான் சூர்யா. எல்லாரும் உண்டு முடித்து அந்த மொட்டை மாடியில் பாய் விரித்து உட்கார,
ஸ்டாலின் சூர்யாவின் தோளில் கைப்போட்டபடி “இந்த திருட்டு ராஸ்கல் என்ன பண்ணினான் தெரியுமா டா ராமு? நமக்கே தெரியாம யமுனாவுக்கு ஹீரோ பென் வாங்கி வைச்சிருக்கான். நம்ம பேனா கடன் கேட்டா இந்த கடங்காரன் என்னைக்காச்சும் கொடுத்திருக்கானா? நானும் கோகியும் பேசினோமே இல்லையோ இவன் யமுனா கிட்ட என்ன சீரியஸா பேசிட்டு இருந்தான் தெரியுமா?” என்றான்.
“அப்படி என்னடா பேசின? நீ பேசுனது முதல்ல அந்த புள்ளைக்குப் புரிஞ்சதா? இல்லை சும்மா தலையாட்டுச்சா?” என்று ஸ்டாலின் சூர்யாவிடம் கேட்க
“அடேங்கப்பா! குண்டூரில் மிளகாய்த் தோட்டம் வைச்சிருக்கவன்ட்ட அந்த பொண்ணு காரம் சாப்பிடாதனு சொல்லிச்சு” என்று ராமு கேட்க
“அது நான் எப்பவும் மிளகாய் பஜ்ஜியே சாப்பிடுறேன்னு சொன்னா. அப்புறம் எக்ஸாம்ஸ் எப்போன்னு கேட்டா, நானும் கேட்டேன். அடுத்த செமுக்கு என்ன புக்ஸ் வாங்கலாம்னு ஐடியா சொன்னேன். அவ சிலபஸ்ல சில டவுட்ஸ் கேட்டா” என்றதும்
“அட அறிவு விளக்கே! நீங்க சீரியஸா சிலபஸாடா டிஸ்கஸ் பண்ணீங்க? நான் கூட இவன் நம்மளை விட காதல்ல டெவெலப் ஆகிட்டான்னோ, உன்னைப் பார்த்து பொறாமைப் பட்டுட்டேனே டா, அவமானம்” என்று ஸ்டாலின் தன்னையே திட்டிக்கொண்டான்.
“நீயா நினைச்சிக்கிட்டா இவன் என்னடா பண்ணுவான்? அதுவும் புதுசா பேசும்போது எடுத்துவுடனேவா காதலின் தீபமொன்று ஏற்றினாளேன்னு பாடுவான் நம்ம பய, இவன் வேகமா பேசினா பேசுறது தமிழா தெலுங்கான்னே தெரியாது. அப்படியே கொஞ்சம் ஸ்லோவாத்தான் பிக் அப் ஆகும்”
“ஆனா இவன் முகத்தைப் பார்க்கனுமே டா, என்ன பரவசம்ன்ற? என்னவோ அந்த பொண்ணு இவனைக் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. அப்படி என்ன டா பேசுனீங்க?” என்றதும்
“நான் சொல்றது நிஜம் ரா, அதான் பேசினோம். பட் யமுனா கிட்ட பேசும்போது பேசிட்டே இருக்கனும்னு தோணிச்சு ரா. வரும்போது மனசே இல்ல” என்று உருகி பேசும் நண்பனை ரசித்துப் பார்த்தார்கள் மற்றவர்கள். அப்படியே படுத்த சூர்யா வானத்தைப் பார்த்தபடி,
“ப்ரஸ்ட் டைம் என் ப்ரியத்தம்மாவைப் பார்த்தப்போ ஒன்னுமே தோணல, ஆனா அன்னிக்குக் கேம்ப்ல அவளுக்கு வரலனாலும் பேச ட்ரை பண்ணின அந்த தைரியம் பிடிச்சது, அப்புறம் அவ அழுதப்போ கஷ்டமாகிடுச்சு, நமக்குத் தோணும்ல இவங்களோட பேசனும் பழகனும்னு. காலேஜ் வந்த புதுசுல ஸ்டாலினைப் பார்க்கவுமே பேசத் தோணிச்சு” என்றதும்
“அது ஸ்டாலினோட ஸ்டைலைப் பார்த்து இருக்கும், கோகி கூட சொல்லுவா நான் ரொம்ப ஸ்டைலா இருக்கேன்னு” என்று ஸ்டாலின் சுயபெருமைப் பேச அவன் தோளில் அடித்த சூர்யா
“அப்போ என்னோட பழகனும்னு தோணலயா?” என்று ராமு கோபமாய்க் கேட்க
“ஏன்ட் ரா ராமு நுவ்வு? நுவ்வு நான் ப்ராணமித்ருடு” என்று ராமச்சந்திரனை அணைத்துக்கொண்டான் சூர்யா.
“அது மாதிரி யமுனாவைப் பார்க்கும்போதும் பேசும்போதும் இன்னும் இன்னும் நிறைய நேரம் அப்படி இருக்கனும்னு தோணுதுடா” என்றான் சூர்யா.
_________________
‘வணக்கம் நேயர்களே..!’ என்று திரு. ஜெயங்கொண்டத்தின் கம்பீரக் குரலில் ஆல் இந்தியா ரேடியோவில், நேயர் விருப்பம் நிகழ்ச்சி தொடங்கியது.
நேயர்களின் விருப்ப பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பபட, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல் வரவும்
“சால பாகுந்தி” என்று சூர்யா சிலாகித்து பேச
“இத்தனை நாள் நம்ம ஒலியும் ஒளியும் பார்க்க கூப்பிட்டப்ப எல்லாம் வரமாட்டான். இப்ப இளையராஜா பாட்டு கேட்கிறதென, பாகுந்தி பாஸந்தின்னு புகழ்றெதென்ன? கிஷோர் குமார் பாட்டை முணுமுணுத்தவன் இன்னிக்கு மாக்குயிலே பூக்குயிலேன்றான்” என்று சிரித்தபடி ஸ்டாலின் ராமுவிடம் சொல்ல
“அதுவும் தெலுங்கு ரொம்ப அழகான மொழி, இளையராஜா மியுசிக் தமிழை விட தெலுங்குல நல்லாயிருக்கும்னு வேற சொன்னானே டா. இப்போ பாரு எப்போ ராஜா பாட்டு போட்டாலும் நின்னு கேட்குறான். நமக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை ராணியக்கா வீட்டுக்குப் போயிடுறான். சாருக்கு முன்னாடி ஆர்டி பர்மன்(RD BURMAN) தான் பிடிக்கும்” என்றான் ராமச்சந்திரன்.
“ஏன்ட்ரா? நா ப்ரியத்தம்மாக்கு இந்த சாங்க்னா சால இஷ்டம்ரா. இளையராஜாதான் அவளுக்குப் பிடிச்ச மியுசிக் டைரக்டராம். பிடிச்சதைப் பத்தி பேசினாதானே என்னைப் பிடிக்கும் யமுனாவுக்கு. இப்பவும் எனக்கு ஆர் டி பர்மன் பிடிக்கும் ரா. வேற என்ன இருக்கு எங்களுக்குள்ள பேச?” என்று சூர்யா கொஞ்சம் பாவமாய் சொல்ல
“என்ன இருக்கா? டிரிக்னாமெட்ரீ இருக்கு, இண்டக்ரல் கேல்குலஸ் இருக்கு” என்று கிண்டல் செய்தான். ஆனால் என்னதான் நண்பர்கள் கிண்டல் செய்தாலும் என்னவோ தமிழ் மங்கை மீது கொண்ட காதல் தமிழின் மீதும் வந்தது, கூடவே தமிழிசையின் மீதும்.
தமிழிசை மீதான காதலில் ராஜா இல்லையென்றால் எப்படி? ராஜாவின் பாடல்கள் கேட்கையில் எல்லாம் ப்ரியத்தம்மாவின் நினைவுகள் இன்னும் இனிமையாய் சூர்யாவைத் தாலாட்டியது. யமுனாவுடனே இருப்பது போன்ற உணர்வை இளையராஜாவின் இசை தந்தது.
அப்படியே நாட்கள் நகர, அந்த வருட பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற வந்த யமுனா கோகிலாவிடம்
“இதுல அதிரசம், முறுக்கு எல்லாம் இருக்குடி. உனக்கு ஒரு டப்பா, இன்னொன்னு நீ ஸ்டாலின் அண்ணாவுக்கும் அவர் ப்ரண்ட் சூர்யாவுக்கும் கொடுத்துடு” என்று சொல்ல கோகிலாவிடம் ஆச்சர்யம்.
அவளின் பிறந்த நாள் அன்று சூர்யாவும் யமுனாவும் தனியே பேசியதை வைத்துக் கோகிலா கிண்டல் செய்திருக்க,
“நீ ஸ்டாலின் அண்ணா கூட பேசினதாலதான் நான் அவரோட பேச வேண்டியதா போச்சு. எனக்கு பாடம் எல்லாம் சொல்லிக்கொடுத்தவர்ன்றதால் என்னாலையும் அவரை அவாய்ட் செய்ய முடியல. அதுக்காக இப்படி சேர்த்து வைச்சுப் பேசுற வேலையெல்லாம் வைச்சுக்காத கோகி” என்று யமுனா கோபத்துடன் பேசிச் சென்றிருக்க, அதன்பின் இப்படியான பேச்சுகள் கோகிலா பேசியதில்லை. சூர்யாவும் யமுனாவும் சந்திக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்க, இன்றையை யமுனாவின் செயல் கோகிலா எதிர்ப்பார்க்கவில்லை.
“சூர்யாவுக்கு அதிரசம் பிடிக்கும்னு சொன்னார்டி. பாவம் அவருக்கு அம்மா இல்லையாம், அது மாதிரி ஸ்டாலின் அண்ணா எல்லாம் வீட்டை விட்டு தனியா இருக்காங்க இல்லை. எங்க வீட்ல நிறைய செஞ்சாங்க என் அம்மா அதான் எல்லாருக்கும் கொடுக்கும்போது அவங்களுக்கும் கொடுக்கனும் தோணிச்சு” என்று யமுனா விளக்கி சொல்ல, அந்த விளக்கத்தை சொல்லியே சூர்யாவிடம் பலகாரங்கள் தரப்பட அவனோ
“எப்படியோ அவ என்னை நினைச்சிருக்கா இல்ல” என்று சந்தோஷப்பட்டுக்கொண்டான்.
என்னவாக எண்ணினாள் என்பதை விடவும் அவள் எண்ணத்தில் என்னவோ ஒன்றாய் நான் இருக்கிறேன் என்ற நினைவே இசைத்தது சூர்யாவினுள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.