ஜெய் பேசாமல் ஊர்மிளாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க, ஊர்மி தற்செயலாக திரும்பினால் அவன் பார்வையில் ரசனை மிகுந்திருந்தது.
‘என்ன’ என்று ஊர்மிளா புருவமுயர்த்த ஜெய்யும் ‘என்ன?’ என்றான் விழிகளால்.
அந்த இரவின் தொடக்கத்தை, தேவிகுளத்தின் தூவலை மனம் மிகவும் ரசித்தது. தேவிகுளத்தில் தூவல் காலம் ஒன்றும் புதிதல்ல! ஏன் அந்த சாரல் நாட்டிற்கு இன்னும் லாளிதம் தரும். முற்றத்தின் வழியே மழைத்தூற, ஊஞ்சலில் அவன் அருகே உள்ளம் கொண்ட ஊர்மி. மழைச்சாரல் உடல் தொட்டு செல்ல, உள்ளும் புறமும் குளுமை, இனிமை. அந்த குளிர் தேவிகுளத்துக்காரனுக்குப் புதிதில்லையே. இந்த முறை மழை, இரவு எல்லாம் இன்னும் பிரியமாகிப்போனது, ஏற்கனவே அவன் இயற்கை பிரியன். பெண்ணும் இயற்கைதானே? பிரியம் கொண்ட பெண்ணை ரசிப்பதும் இயற்கை தானே? அதுவும் இயற்கையோடு இதனை ரசிப்பது அது வேறு உணர்வு! உணர்வுதான், சொல்லிவிட முடியாதே!
காஞ்சியின் ஊர்மிளாவுக்கு அந்த ஊரின் மிதமான குளிரே கொஞ்சம் கூடுதல் குளிராக இருக்க, இருகைகளையும் சூடு பறக்கத் தேய்த்தவள் ஜெய்யிடம் பதில் வராது போக,
“என்னாச்சு?” என்று கேட்டாள்.
“என்ன ஊர்மி? நீ தானே பேசிட்டு இருந்த?” என்று கேட்டான்.
ஜெய் முதலில் இருந்து அவள் பேச்சைக் கேட்டான் தான், ஆனால் அந்த பார்வையில் கூடியிருந்த ரசனை. முகத்தை முழுமையாக நிறைத்திருக்கும் புன்னகை, அதனால் ஒளிரும் அவன் கண்கள். ஊர்மிக்கு அவனால் புது உணர்வு புலர்ந்தது.
என்னை ஏன் பார்க்கிறாய் என்று கேட்கலாம், ஏன் ரசிக்கிறாய் என்று எப்படி கேட்பது? முதலில் அது ரசனையா? ஊர்மிளாவை நிறைய யோசிக்க வைத்தான் ஜெய்.
“ஒன்னுமில்ல” என்றபோதும் அவன் புன்னகை குறையவில்லை. ஊர்மிளாவும் அவனை ஓரவிழியால் பார்த்தாள், அவனோ நேர்விழியால் அவளை மட்டுமே பார்த்தான். ஊர்மிளா மழையைப் பார்த்தாள். ரத்னவேல் தாத்தா பற்றி பேசியிருக்க, அவள் விட்ட இடத்தில் கேட்டான் ஜெய்.
“அப்புறம் உங்க பெரியண்ணா லவ் பத்தி சொல்லிட்டு இருந்த..” என்று ஜெய் தொடங்க, ஊர்மிளாவும் தொடர்ந்தாள்.
“எங்க பெரியண்ணா அவர் க்ளாஸ்மேட்டை லவ் பண்ணினாங்க. காலேஜ் லவ், அண்ணியை அடிக்கடி வீட்டுக்குப் ப்ரண்ட்ஸோட அழைச்சிட்டு வருவார். அண்ணியை எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும், அவங்களுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சதும் அண்ணா என் அப்பா கிட்ட சொன்னார், என் அப்பா ரொம்ப ப்ரண்ட்லி. அவர் பெரியப்பா கிட்ட சொல்லி, அவர் தாத்தா கிட்ட சொல்லி எங்க தாத்தாவுக்கு லவ் எல்லாம் பிடிக்காது, ஆனாலும் அண்ணாவுக்காக ஒத்துக்கிட்டாங்க. அண்ணியும் நல்ல மாதிரி!” என்றாள் புன்னகையோடு. பேச்சின் ஒவ்வொரு நேரத்திலும் ரத்னவேல் பேத்தி என்ற பெருமை தெரிந்தது.
“அப்போ நம்ம லவ் விஷயமும் இப்படி உன் அப்பா, பெரியப்பா, தாத்தா’ன்னு போகுமா? உன்னை இங்க வர சொன்னதுக்குப் பதில உங்க அண்ணி மாதிரி நான் அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்துடணும் போலயே” ஜெய் தீவிரமாக யோசித்து சொல்ல, ஊர்மிளா அவன் சொல்லவும் திகைத்தாள். பின் சிரிப்பு வர,
“முதல்ல நான் இன்னும் உங்களை லவ் பண்ணல, அப்புறம் நான் விஜயன் கல்யாணத்துக்கு வந்திருக்கேன் ஜெய்” என்று கிண்டலாக சொல்ல, ஜெய் அலட்டிக்கொள்ளவில்லை.
“இப்போ பண்ணல, பட் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான்.
“எப்படி?”
“நீ லவ் பண்றேனு சொல்றப்போ ஏன் நான் நம்பினேன் சொல்றேன்” என்றான் ஜெயனும் கிண்டலாக.
ஊர்மி அதற்குப் பதில் சொல்லாது மழையை வேடிக்கை பார்த்தாள். தூரல் மட்டும் சத்தமிட,
“லவ்வுக்கு முன்னாடி பேசணும், பழகணும் சொன்னீங்க, ரெண்டு நாளா ஆளையே காணும், உங்களுக்கு என்னை பிடிக்க காரணம் தந்தேனு சொன்னீங்க. எனக்கு ஒன்னுமே தரலையே” என்று ஊர்மிளா மெல்ல கேட்டாள்.
“காரணம் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறது கூட ஒரு நல்ல காரணம் அல்லே?” என்று கிண்டலாகக் கேட்டவன்
“எனக்கு நீயா காரணம் கொடுத்த? நானா தேடினேன். ஒருத்தரைப் பிடிச்சிட்டா மனசு தானாவே காரணம் தேட ஆரம்பிச்சிடும் ஊர்மி” என்றான்.
ஊர்மிளா கிண்டலாக பார்க்கவும்
“உண்மையில எனக்கு டைம் இல்லை, நாளைன்னைக்கு விஜயன் மேரேஜ் முடிஞ்சாதான் ஃப்ரீ ஆகலாம்” என்றான் ஜெய்.
“விஜயனும் எனக்கு வினய் மாதிரி, அவனுங்க இரண்டு பேரும் ரொம்ப க்ளோஸ், ஸேம் ஏஜ் க்ரூப். சின்ன வயசுல லீவுக்கு அச்சச்சன் வீடு வருவான், அதுக்கு அப்புறம் ஒரு ஏழெட்டு வருஷம் முன்னாடி அவன் அப்பா இறந்துட்டார். அப்போ இருந்து இங்கதான் இருக்கான். அச்சச்சன் பேரப்பசங்களை விட நானும் வினயனும் தான் அவங்க வீட்ல அதிகம் விளையாடியிருக்கோம்” என்றபோது அவன் பார்வை ஊர்மியைக் காரணமாக பார்க்க, அவளோ அதை கவனிக்கவில்லை.
“அச்சச்சனா எனக்கு ரொம்ப இஷ்டம்! நம்ம சில பேரை பார்த்து வளருவோம் இல்லையா? எனக்கு அச்சச்சன் தான் ஹீரோ! அவர் செண்டா வாசிப்பார் பாரு, இந்த வயசுல கூட அவ்வளவு ஆர்வமா செய்வார்.” என்று ஜெய் பேச, ஊர்மிளாவோ மிகவும் இயல்பாகவே அவன் சொன்னதை கேட்டாள். ஜெய் ஊர்மிளா ரத்னவேல் பற்றி சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தையாக, அவள் பார்வையையும் சேர்த்தே உள்வாங்கினான். அவனுக்கு அவள் மீது பிரியமிருக்க, பிரியத்தின் வழியில் விழியில் அவள் மொழியினை பார்த்தான். ஊர்மிக்கு கொஞ்சமாக பிடித்தமிருக்க செய்தி கேட்கும் தோரணை.
சிறிது நேரத்துக்குப் பின் “சூடா ஒரு சாய் குடிச்சா நல்லாயிருக்கும். நான் போட்டு வரேன்” என்று ஜெய் எழுந்தான்.
ஜெய் கட்டாஞ்சாய் செய்து எடுத்து வந்தவன், ஊர்மிளாவுக்கு ஃபில்டர் காஃபி கொண்டு வந்தான். ராஜீவனுக்கும் பாலாவுக்கும் கொடுத்தபடி அவன் டைனிங் டேபிளில் உட்கார, ஊர்மிளாவும் அவர்களோடு உட்கார்ந்தாள்.
பாலா சிரித்தபடி, “சத்யக்கு(sadhya) மளிகை சாமான், மெனு எல்லாம் ரெடி பண்ணி கொடுத்திட்டியா? ஓணம் அன்னிக்கு பூக்களம் போட பூ சொல்லிட்டியா ஜெய்?” என்று விசாரிக்க
“இப்போ அச்சச்சன் வீட்டுக்குப் பூ கொடுக்கிறவங்களையே கொடுக்க சொல்லிட்டேன் பா, வினயன் மெனு கொடுத்துட்டான். நாளைக்கு வாங்கிட்டு வந்துடுவேன், ரிசார்ட்லயும் ஷஜியைப் பார்க்க சொல்லிட்டேன்” என்றான் ஜெய்.
“உனக்கு முதல் ஓணம் இல்ல ஊர்மி? நாலு நாளும் நம்ம வீட்ல விருந்துதான்” பாலா ஊர்மிளாவிடம் சொல்ல
“அங்கிள்! நீங்க சொல்லுங்க நம்ம காஞ்சிபுரம் இட்லி எவ்வளவு நல்லாயிருக்கும். நம்ம ஊர் இட்லி சாம்பார் டேஸ்ட் இங்க வருதா சொல்லுங்க” என்று அவரிடம் கேட்டார். ஊர்மிளாவுக்குப் பிறந்தது முதல் அவரை அப்படி அழைத்துதானே பழக்கம்? சில நாட்களாக அதனை தவிர்த்து இருந்தாலும் இன்று இயல்பாக பேச, அங்கிள் என்று வந்துவிட்டது. யாரும் அதை பெரிதாக எடுக்கவில்லை, பாலச்சந்திரனை தவிர!
நண்பனை முறைத்தார். மனதுக்குள் திட்டினார், ‘பெத்த பொண்ணு அப்பனை அங்கிள்னு சொல்றா, இந்த கொடுமையை எல்லாம்’ என்று நொந்தார். ராஜீவனுக்கு அதெல்லாம் இயல்பு போல, மகளின் பேச்சில் லயித்திருந்தவர் அவளுக்குப் பதில் சொல்ல வாய்த்திறக்க, ஜெய் குறுக்கீட்டான்.
“ஹலோ ஊர்மி! என்ன நம்ம ஊர்? மாமாவும் தேவிகுளத்துக்காரர். அல்லே மாமா?” என்றதும்
“நிஜமா இட்லி சாம்பார்னா தமிழ் நாடு பெஸ்ட் ஜெய்! காஞ்சிபுரம் இட்லி டிஃப்ரன்டா நல்லா இருக்கும்” என்றதும் பாலாவும் ஜெயனும் அவரை முறைத்தனர்.
“சூப்பர்” என்று ஊர்மிளா ஜெயனை கிண்டலாக பார்த்தாள்.
“மாமா உங்களுக்குப் பத்திரி பிடிக்குமா இல்லை இட்லி பிடிக்குமா, உண்மையை சொல்லுங்க”
“பார்டர்ல இருக்க பாகிஸ்தான் இந்தியன் ஸோல்ஜர்ஸ் கூட இப்படி சண்டை போட மாட்டாங்க, நீங்க இட்லி பத்திரினு சண்டை போடுறீங்க, எந்தாடா மோனே இது?” என்று ராஜீவன் அவனை கேட்க
“ஏடா! நீ உண்மையை சொல்லு” என்றார் பாலா.
“எனக்குப் பத்திரி பிடிக்கும், ஆனா இட்லி இஸ் பெஸ்ட்” என்று ராஜீவன் சொல்ல
“ஊர்மி தாத்தா அவளை அப்படித்தான் சொல்லுவார்” என்றதும் ஊர்மிளாவிடம் இன்னும் புன்னகை விரிந்தது. அப்படியே இயல்பான பேச்சோடும் உணவோடும் மகிழ்வாய் பொழுதுகள் நகர்ந்தன.