சூர்யா ஐபிஎஸ் பயிற்சி முடித்து இப்போது ஹைதரபாத்தில் பணியில் இருக்கிறான். அவன் தனியாக குவார்ட்டர்ஸில் தங்கியிருக்க இங்கு யமுனா சிரிபுரத்தில் இருக்கிறாள்.
அதுதான் பிரச்சனையே, யமுனாவிற்கு கணவனுடன் இருக்க வேண்டும், சூர்யாவுக்கோ அங்கு தெரியாத ஊரில் யமுனா மகனுடன் தனியே கஷ்டப்படுவாளே என்ற எண்ணம். இங்கானால் குடும்பம் இருக்க மகனும் உறவுகளுடன் வளர்வான், யமுனாவுக்கும் துணையாக சுபாஷினி இருக்கிறாள் என்று நினைத்தான். யமுனாவுக்காக யோசித்தவன், யமுனா என்ன யோசிப்பாள் என்று நினைக்காமல் போனான்.
தன்னை நம்பி வந்தவள் தனியாக தவிக்கக் கூடாதென அவன் நினைக்க, தனிமையில் தவிக்க விட்டோமென தெரியவில்லை.
இரண்டு நாள் முன் விடுமுறைக்கு வந்தவனுடன் இது குறித்து யமுனா பேச, சண்டையாகிவிட்டது இருவருக்கும். இதோ இரு நாட்களில் சண்டை போட்டது கூட மறந்து அவனை மனதில் தேடத்துவங்கிவிட்டாள். காதலுடன் காத்திருப்பது ஒருவகை சுகம்தானே? அவன் கிளம்பும்போது அந்த பேச்சை எடுத்தது குறித்து இப்போது வருந்தினாள். அவனும் கோபத்தில் பேசி சென்றிருக்க, இதோ இப்போது சமாதானம் செய்ய வழியில்லாமல் தவிக்கிறார்கள்.
காதல் பொழுதுகளில் கூட அடிக்கடி சந்தித்தவர்களால் இப்போது முடியவில்லை. குடும்பம், வேலை, குழந்தை என்று நேரம் போனது. இருந்தும் ப்ரியங்களுக்குக் குறைவில்லை.
‘ஓ! வானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
ஓ! வானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு!’
அறைக்குள் இருந்த டேப் ரெகார்டரில் பாடல் ஓட பாவை மனம் அதில் லயித்தது. வீட்டில் டிடி8 மட்டுமே சூர்யாவின் அப்பா பார்ப்பார். யமுனாவிற்கு டிவி பார்க்கும் அளவு இன்னும் தெலுங்கு அவ்வளவு சரளமாக வராது, ஆனாலும் பேசுவது ஓரளவு புரியும். சூர்யா வேலைக்குப் போனதுமே அவளுக்கென ஒரு டேப்ரெகார்டர், நிறைய இளையராஜா பாடல்கள் அடங்கிய கேஸட்டுகள் எல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டான்.
பேச வேண்டும் என்றாலும் காத்திருக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்றாலும் காத்திருக்க வேண்டும். நினைத்தால் பார்க்க பேச முடியாது, அதற்கான வசதிகளும் இல்லையே. அது இன்னும் எண்ணத்தில் தன்னவன் நினைவை அதிகமாக்கியது.
வேகமின்றி ஒரு நிதானத்தில் இயல்பாக இயங்கியது அவர்களின் வாழ்வு.
அவனுடன் பேச முடியாவிட்டாலும் யமுனாவிற்குத் தெரியும் சூர்யாவும் இப்போது தன்னைத் தேடுவான் என, எப்படியெல்லாம் அவனை உன் பின்னே சுற்றவிட்டாய், அதனால்தான் இப்போது தூரமிருந்து உன்னை தினமும் நினைக்க வைக்கிறான் என்று மனம் சொல்லும்.
“மா, நானா எப்புடு வஸ்தாடுமா?” மூன்றரை வயது மகன் சிரஞ்சீவி யமுனாவின் கவனம் கலைத்தான்.
“ப்ரசாத்! அம்மா கிட்ட தமிழ்ல பேசலன்னா அடி வாங்குவடா” யமுனா மகனைக் கையில் பிடித்து மிரட்ட,
“நேனு தெலுகுலோனே மாட்லாடுத்தானு, நாக்கு தமிழ் ராதும்மா” என்று அப்போதும் தெலுங்கில் பேச யமுனாவிற்குக் கோபம்.
அவன் வாயில் பட்டென்று வைத்து
“அப்பா கிட்ட சொல்லனுமா ப்ரசாத்?” என்று திட்ட
“நானும் நானாகிட்ட சொல்தேன்” என்று கோபமாகச் சொன்னான்.
‘தெலுங்குப் பேசுறதுல அப்படியே தாத்தா மாதிரி, அவர் வாய்ஸ் கூட இவனுக்கு’ மகனை மாமனாருடன் ஒப்பிட்டு மனதில் திட்டியவள்
மகனைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி
“உன் நானா ஸ்டாலின் மாமா கல்யாணத்துக்கு நம்மை மெட்ராஸ் அழைச்சிட்டுப் போக வருவார். ப்ரசாத், அம்மா, நானா எல்லாம் டிரெயின்ல போகப் போறோம்” என்று யமுனா மகனின் கவனம் திருப்பினாள்.
“அவுனாம்மா? மெட்ராசூ எக்கட உந்திம்மா?”
“அது தமிழ்நாட்ல இருக்குடா”
“மா, தாத்தா, அக்கா, பெத்த நானா.. பெத்தம்மா” என்று வீட்டில் உள்ள மற்றவர்களையும் கேட்க
“அவங்க எல்லாம் அப்புறம் வருவாங்க” என்றாள் யமுனா. ப்ரசாதோ
“லேதம்மா! தாத்தாவும் டிரெயின்ல..” என்று அவள் இடுப்பில் இருந்து இறங்க முயற்சி செய்தான். தாத்தாவும் பேரனும் பயங்கர நெருக்கம். அதுவும் முதல் பேரன் என்பதால் இன்னும் செல்லம் அதிகம் அவனுக்கு. நரசிம்மனுடன் சிரிபுரம் எல்லாம் சுற்றி அவ்வளவு அருமையாகத் தெலுங்குப் பேசுவான். அதனால் அவனுக்குத் தமிழ் வராது போக யமுனாவிற்கு வருத்தமே..
சிறிது நேரம் அம்மாவுடன் கதைப்பேசியவன்
“நேனு அக்காத்தோ டீவிலோ சக்திமான் சுடதானிக்கி வெல்துனானும்மா” என்று ஓடிப்போனான்.
கொஞ்சம் அதிகமாக அதட்டினாலும் அழுதுகொண்டு தாத்தாவிடம் சென்று நிற்பான் என்பதால் யமுனா இந்த விஷயத்தில் மகனிடம் கண்டிப்புக் காட்ட முடியாது. ஸ்டாலின் கோகிலாவின் திருமணம் மெட்ராஸில் நடக்கவிருக்க சூர்யா விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டு நாள் முன்பே வந்துவிட்டான்.
“நானா!” என்று மகன் ஓடிவர சூர்யாவின் முகம் அப்படியே ப்ரகாசமாகிவிட்டது. மகனைத் தூக்கி சுற்றியவன்
“நா பங்காரம் “ என்று முத்தமிட
“அம்மா அடிச்சாங்க நானா” என்று அப்பாவின் காதில் சொன்னான் வரப்ரசாத்.
“அம்மாவை நானா கேட்கிறேன் டா பாபு” என்று சூர்யாவும் மகனுடன் ரகசியம் பேச நரசிம்மன் அப்போதுதான் மகனைக் கண்டவர்
“லீவ் எத்தன நாள்..?” என்று கேட்டார். அவரிடம் பேசிக்கொண்டிருக்க ஹனுமந்தனும் வந்துவிட, மூவரும் பேசினாலும் சூர்யாவின் மனம் மனைவியைத் தேட அவள் டீயுடன் வந்தாள்.
ஒரே நொடி ஓரப்பார்வை பார்த்தவன் அப்பாவுடன் பேச்சில் கவனமாகிவிட்டான். சண்டையிட்டு சென்றவன் தான், ஆனாலும் இழுத்துப் பிடிக்கவில்லை கோபத்தை. அது இத்தனை நாளில் ஆறி காணாமல் வருத்தமாகிப் போய்விட்டது.
அறைக்குள் அவன் நுழையவும் பார்த்த யமுனா அவளும் பின்னால் போய்விட, மனைவியை முழுவதுமாக கண்களில் நிறைத்தவன் மகனைப் பார்க்க அவனோ அப்பாவின் யுனிஃபார்மைத் தடவிக்கொண்டு இருந்தான்.
“அப்பாவை விட்டு இறங்கு ப்ரசாத்” என்று யமுனா அதட்ட
“நா நானா..” என்று கட்டிக்கொண்டவன் அம்மாவைப் பார்க்காமல் அப்பாவின் தோளில் முகம் புதைக்க
“மீரு அதனி எந்துக்கு கொட்டாரு டா யமுனா?” என்று மனைவியிடம் கேட்டான் சூர்யா.
“ஏன்ட்டீ?” என்ற சூர்யாவுக்கு சிரிப்பு வந்துவிட யமுனாவும் சிரித்துவிட்டாள்.
“ஏன் யமுனா? சின்ன பையன் தானே? எல்லாரும் பேசவும் அவனுக்கும் தெலுங்கு வருது” என்று சூர்யா சொல்ல
“இவனுக்குத் தெரிஞ்சும் பேசமாட்டேங்கிறான், கேட்டா தமிழ் பிடிக்கல சொல்றாங்க, அதை விட மாமா மாதிரி வேகவேகமா தெலுங்குல பேசுறான்.. எனக்குப் புரியல” என்றதும் சூர்யாவிடம் கிண்டலாய் ஒரு பார்வை, கண்ணோரம் ஒரு குறுஞ்சிரிப்பு.
இவர்களின் ரகசிய சம்பாஷணைப் பொறுக்காத மகனோ
“நானா” என்று சூர்யாவை உலுக்க
“ஹரே பாபு, இருடா. தமிழ் பிடிக்காது சொல்லக்கூடாது. அம்மாவுக்குத் தெலுங்கு தெளிதுடா, நீ அம்மாவுக்குச் சொல்லிக்கொடு பங்காரம்” என்று சூர்யா சொல்லவும் சமத்தாகத் தலையசைத்தவன் இறங்கி ஓடிவிட்டான்.
மகன் விளையாட ஓடி விட
“இளைச்சுப் போயிட்டீங்க சூர்யா” யமுனா கணவனைப் பார்த்து சொல்ல
“நீதான் எனக்கு அப்படி தெரியற…” என்றவன் மனைவியை அருகே இழுத்துக்கொண்டான். யமுனா கதவைப் பார்க்க பெருமூச்சுடன் அவளை வேகமாக அணைத்து விடுவித்தவன்
“கொஞ்சம் அங்க வேலை அதிகம்மா, அதான்” என்றான்.
யமுனாவிற்குத் தன் கணவனுடன் ஹைதரபாத் சென்றுவிட்டால் அவனை நேரத்திற்குக் கவனிக்கலாமே என்று தோன்றினாலும் அதனை பேசவில்லை.
“கல்யாணத்துக்குக் கட்ட ஸாரி எல்லாம் இருக்கா யமுனா? இல்லை புதுசு வாங்குவோமா?” சூர்யா கேட்க
“நிறைய இருக்கு சூர்யா” என்றாள் யமுனா. பிறந்த வீட்டின் உறவு என்பது யமுனாவிற்கு இல்லாது போய்விட, அதனால் சூர்யா மனைவிக்குக் கொஞ்சமும் மனக்குறை இல்லாதவண்ணம் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வான்.
“சிருக்கு டிரஸ் வாங்கனுமா?”
“இருக்கிறதே போதும் சூர்யா” யமுனா சொல்ல
“இரண்டு வருஷம் ஆகுது ஸ்டாலினைப் பார்த்து, ராமு இன்னும் கல்யாணம் செய்யாம சுத்துறான்.. நம்மலாம் இப்போதான் காலேஜ் படிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள நம்ம பங்காரம் ஸ்கூல் போகப் போறான், டைம் இஸ் ஃப்ளையிங் யமுனா” என்றான்
“நம்ம சீக்கிரம் பண்ணிட்டோம்ங்க, ராமு அண்ணாவுக்கும் நல்ல பொண்ணா கிடைக்கும். நானே கோகியைப் பார்த்து மூணு வருஷம் ஆகப்போகுது.. உங்களுக்கும் பழைய ஞாபகமா?” என்று யமுனா கேட்க
“ம்ம், அப்போ உங்கூட நிறைய டைம் இருக்க முடிஞ்சது. இப்போ வைஃப் ஆகிட்ட, ஆனா பார்க்க பேச எவ்வளவு கஷ்டம்?” என்றான் பெருமூச்சுடன்.
ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் பேசும்போது மனைவியிடம் பேச ஆவல் இருந்தாலும் வீட்டு மனிதர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் பேச இயலாத இயலாமையில் பேசினான்.
“அங்க வந்தா என்னால எப்பவும் உங்களைப் பார்க்க முடியாது யமுனா, இங்கன்னா நானா, அண்ணா எல்லாம் இருக்காங்க. நானாவும் சிரு கூட ரொம்ப க்ளோஸா இருக்கும்போது தனியா போய்ட்டா அவர் ஃபீல் பண்ணுவார்” என்றான்.
யமுனாவிற்கோ இவனை நம்பி இவனோடு கொண்ட காதலால் வந்திருக்க, அவன் தனியே விட்டு சென்றது உண்மையில் மிகப்பெரிய ஏமாற்றமே. சூர்யாவுக்கோ அப்பாவை திருமண விஷயத்தில் மீறியிருக்க, இப்போது தனியே சென்றால் தவறாக நினைப்பாரோ என்று நினைத்தான்.
சூர்யா இப்படி பேசவும் யமுனா உடனே “உங்க இஷ்டம்” என்றுவிட்டாள்.
அதில் அவள் கோபம் புரிந்தாலும் அவளுடன் இல்லாது இருப்பது அவனுக்குமே கஷ்டமாக இருந்தாலும் அப்போதைக்கு எந்த முடிவும் உறுதியாக எடுக்கவில்லை அவன்.
“சிருவை எல்கேஜி சேர்க்கனுமில்லையா, நான் சீக்கிரமே நானா கிட்ட பேசுறேன்மா, எனக்கும் என் ப்ரியத்தம்மாவையும் பையனையும் விட்டு தனியா இருக்க கஷ்டம்தான்” என்றான்.
யமுனா அமைதியாக இருக்க
“அப்பா கொஞ்சம் நார்மல் ஆகட்டும் நினைச்சேன் ரா” என்று சொல்லி மனைவி முகம் பார்க்க லேசாக சிரித்த யமுனா,
“நம்ம விரும்பும்போது இவங்களை எல்லாம் யோசிச்சாலும் நம்ம விருப்பம் பெருசுனு நினைச்சோமில்லையா? அது மாதிரி என் அப்பா அம்மாவுக்கு அவங்க பேச்சைக் கேட்கனும்ன்றதுதான் பெருசு. அப்படி என்ன பெருசா உங்களை விட எனக்கு நல்ல மாப்பிள்ள பார்த்திட போறாங்க? முன்னாடி நான் தெரியாம கல்யாணம் பண்ணிட்டேன் கோவம், அப்புறம் நீங்க நல்லவர், என்னை நல்லா வைச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சும் ஏத்துக்க அவங்களுக்கு மனசு இல்லைதானே?” என்றவளுக்கு ஒரு வீம்பு, ஆதங்கம்.
வரப்ரசாத் பிறந்து சில மாதங்களில் அவனையும் தூக்கிக்கொண்டு சூர்யாவுடன் யமுனா கும்பகோணம் சென்றிருக்க, தையல்நாயகி கூட பேரனை எட்டிப் பார்த்தார். ஆனால் சற்குணமோ
“ஓடிப்போனவ எதுக்கு இப்போ ஒட்ட வந்திருக்கா? இவ திரும்பி வந்து நான் சேர்த்துக்கிட்டா என்னை மானங்கெட்ட பையனு ஊர்ல பேச மாட்டாங்களா? எவனோ ஆந்திரக்காரன் முக்கியம்னு உன் மக போனதானே, அப்படியே போக சொல்லு” என்று கத்திவிட்டார்.
மனைவியின் மனம் உணர்ந்து “விடும்மா” என்று சூர்யா சொல்ல
“ம்ம், விட்டாச்சு சூர்யா. அதான் சொல்றேன் அப்பா அம்மாவுக்கு நான் நல்ல பொண்ணா இல்லை, அண்ணனுக்குத் தங்கச்சியா இல்லை. அது மாதிரி மாமாவுக்கும் நான் எப்பவும் வேண்டாத மருமகதான்” என்ற யமுனாவின் குரலில் அடக்கப்பட்ட வருத்தம் வெளிப்பட்டது. அதனை உணர்ந்த சூர்யா,
“ப்ரியத்தம்மா ஏன்ட்ரா? நான் இருக்கேன் உனக்கு?” என்று ஆறுதலாக சொல்ல,
“எனக்கும் நீங்க போதும் சூர்யா” என்ற யமுனாவை சூர்யா தோளோடு அணைத்துக்கொண்டான். யமுனாவின் கண்களில் கண்ணீர். அவளின் கன்னத்தைத் துடைத்து