“புள்ளி வச்ச கோலத்தைக் கூட ஒழுங்கா போட மாட்டீயா மீனாட்சி?” பணியாளைக் கடிந்தார் சுமதி. வீட்டு வாயிலில் ஒரு இருக்கைப் போட்டு அமர்ந்திருந்தவர், புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பெண்ணை அவல் போல வாயில் போட்டு மென்று வசைபாடிக் கொண்டிருந்தார். சிறிய விஷயத்திற்குக் கூடப் பெரிதாக எதிர்வினையாற்றுவது தான் அவரது வழக்கம்.
“சரிங்க மா… இதோ மாத்திட்றேன் மா!” என சுமதியின் அத்தனை வசைவுகளுக்கும் வஞ்சனையின்றி மீனாட்சி தலையை அசைத்தவாறு கோலமிட்டாள். இருசக்கர வாகனம் வந்து நிற்கும் சத்தம் இருவரது செவியையும் தொட்டது.
நிமிர்ந்து பார்த்தார் சுமதி.
ஷெண்பா வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழையவும், “என்னடி காலேஜ் முடிஞ்சு வர இவ்வளோ நேரமா? ஏன் இன்னைக்கு லேட்டு?” என எழுந்து மகளின் பின்னே உள்ளே நுழைந்தார். அவர் கேள்விக்குப் பதிலளிக்காத ஷெண்பா அறைக்குள் சென்று கதவைப் பட்டென மூடினாள். மீண்டும் விழிகளில் குபுகுபுவென நீர் இறங்கியது. நீண்ட நெடிய நாட்கள் கழித்து குமரனைக் கண்டதும் உள்ளம் விம்மித் துடிக்க, படுக்கையில் பொத்தென விழுந்தாள்.
ஏனோ நினைவு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தக் கருமைப் பூசிய நிகழ்வை இப்போது வெளிச்சமிட்டு உமிழ்ந்து மனதை வாள்கொண்டு அறுக்கத் துணிந்தது. விழிகளை சிமிட்டி, மூளையைத் தட்டி விழிப்படையச் செய்தாலும் மீண்டும் கடந்து வந்தப் பாதை பின்னே மனம் தறிக்கெட்டு ஓடித் தொலைக்க, இஷ்டமின்றி செவியில் மோதிய வார்த்தைகளை உள்ளம் கிரகிக்கத் தொடங்கியது.
“ஷெண்பா மா… என் ஷெண்பா குட்டிக்கு என்ன வேணும்? எதுக்காக அழறா? உனக்கு அம்மா பனியாரம் சுட்டுத் தரவா?” எனக்கேட்டு தன்னைத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சும் கொஞ்சும் சிந்து நினைவை நிறைக்க, விழிகளை நீர் நிறைத்தன.
“அவ என் தங்கச்சி, நீ அவ கூடப் பேசக் கூடாது… போடா!” விவரமறியா அகவையில் விக்ரம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு குமரனிடம் சண்டையிட்டு, அவனை தள்ளிவிட்டதும், குமரன் கீழே விழுந்திருந்தான். இவள்தான் இடைபுகுந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தாள்.
இருந்தும் விக்ரம் முறுக்கிக்கொண்டு திரிய, குமரனும் சடைத்துக்கொண்டான். இவர்கள் இருவரையும் சமாளிப்பதற்குள் ஷெண்பா திணறிப் போவாள். ஒருவருக்காக மற்றவரை அவளால் விட்டுக்கொடுக்க முடியாதே. இருவருமே அவளது வாழ்வின் ஆணிவேர். அவளுக்கென்று வரும்போது இருவருடைய கைகளும் தன்னலமின்றி எப்போதுமே நீளும். அத்தனை நேசம் விக்ரமிற்கும் குமரனிற்கும். ஷெண்பா என்றால் இருவருக்குமே அத்தனை இஷ்டம். குட்டி குட்டி கைகளுடன் கால்களுடனும் அண்ணா, அண்ணா என அவர்கள் இருவரையும் சுற்றிவரும் ஷெண்பாவை பங்கு போட முடியாது, சண்டையிட்ட காலங்கள் ஏராளம்.
பின்னர் காலம் கனிந்து வயது முதிர்ந்து, பக்குவம் துளிர்த்து நிதர்சனம் உரைத்து விக்ரமும் குமரனும் ஒருவரை ஒருவர் சகோதரராய் ஏற்றுக்கொண்ட பொக்கிஷத் தருணத்தை ஷெண்பாவால் ஒருநாள் கூட நினைக்காமல் இருக்க முடியாது. அப்போது கூட விக்ரம்தான் இறங்கி வந்தான். குமரனைவிட இரண்டு வயது பெரியவன் என்ற காரணத்தை தவிர பெரிதாய் ஒன்றும் இல்லை. அதுவும் சிந்துவின் சித்து விளையாட்டுத்தான் அவர்கள் மூவரையும் இணைத்து பாலம் கட்டியது.
அன்று ஷெண்பா அடைந்த மகிழ்ச்சியை சொற்களால், வார்த்தைகளால் கோர்க்க முடியாது. அதொரு அலாதியான உணர்வு. மனதில் அப்படியொரு ஆசுவாசத்தைக் கொடுத்திருந்தது அவளுக்கு. எங்கே இருவரும் எப்போதும் சண்டையிட்டு முறைத்துக்கொண்டே இருந்துவிடுவார்களோ என அப்பிஞ்சு மனதில் எத்தனையோ முறை கவலை அரித்ததது. ஆனால், அதற்கெல்லாம் அவசியமில்லை எனப் பின்னாளில் இருவரின் பிணைப்பும் பாசமும் அவளையே சில சமயம் பொறாமைப் பட வைத்தது உண்டு. இருப்பினும் புன்னகையுடன் அதை கடந்துவிட்டாள். அவர்களுக்கு இடையிலான பிரியமும் நேசமும் உள்ளத்தையும் உடலையும் ஒரு சேர உவகைக் கடலில் தள்ளி, அவர்கள் மூவரையும் இறுகப் பிணைத்திருந்து. ஷெண்பகவல்லி, திருக்குமரன், விக்ரம் என மூவரும் இணைப்பிரியாது சுற்றித் திரிந்த நாட்கள் அவர்கள் வாழ்வின் வசந்தக் காலம்.
ஷெண்பாவிற்கு அரணாய் இருப்பார்கள். இரண்டு தமையன்களின் அன்பையும் ஒரு சேர அனுபவித்து மகிழ்ந்த காலங்கள் இப்போது பெண்ணின் உள்ளத்தை கனக்கச் செய்தன.
“குமரா, நான் சொல்றதை கேளுண்ணா. எங்களைவிட்டுப் போகாதண்ணா! நானும் விக்ரமும் உன்னையும் சிந்துமாவையும் பார்த்துக்கிறோம். நம்ம எல்லாரும் எப்பவும் போல ஒன்னாவே இருக்கலாம் குமரா!” என பன்னிரெண்டு வயது ஷெண்பா விழிகள் வழியும் நீருடன் தேம்பிக் கொண்டே கெஞ்ச, கெஞ்ச அவளது பிஞ்சு விரல்களைக் கனத்த இதயத்துடன் இறுகிய முகத்துடன் தட்டிவிட்டிருந்தான் குமரன்.
எங்கே நிமிர்ந்து பார்த்தால் அந்தப் பிஞ்சின் நேசத்தில், விழிநீரில், அக்கறை மிகுந்த வார்த்தையில் மனம் மாறிவிடுமோ என அஞ்சியவன் இதயத்தை பல கத்திகள் நொடியில் பதம் பார்த்தன. கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டே திரும்பியும் பாராது சென்ற குமரனை நினைத்தால் இப்போதும் ஷெண்பாவிற்கு அழுகை பொங்கி நெஞ்சம் விம்மும். நடந்து பத்து வருடங்கள் கடந்தும் அவளால் குமரனை மன்னிக்கவே முடியவில்லை. பிறந்ததிலிருந்து சாகும்வரை எப்போதும் உடனிருப்பேன் என சத்தியம் செய்து அதை உடைத்துவிட்டு சென்றவனை நினைத்து ஒவ்வொரு முறையும் அவளது விழிகள் பனிக்கும், மனம் கனக்கும். சூடான திரவம் கன்னத்தில் கோடாய் இறங்கிக் கொண்டிருந்தன.
“குமரன் இல்லாத வீட்ல நானும் ஷெண்பாவும் இருக்க மாட்டோம்!” மீசை அரும்பத் தொடங்யிருந்த பதினெட்டு வயதேயான விக்ரம் வீம்பாய் உரைத்து ஷெண்பா கரத்தைப் பிடித்துக்கொண்டு குமரனோடு வெளியேற முனைந்திருந்தான். அந்த வார்த்தையில் அவர்களின் செயலில் குமரன் மொத்தமும் உடைந்திருந்தான். இந்த அகோர நேசத்தின் பிடியில் வாழ தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணம் அவனை மேலும் இறுக வைத்திருந்தது.
“நீங்க என் கூட வரக்கூடாது. அங்கேயும் வந்து என் உயிரை எடுக்கப் போறீங்களா? வராதீங்க நீங்க. உங்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. நீங்க ரெண்டு பேரும்தான் இதுக்குக் காரணம்!” மனம் வலிக்க பெருங்குரலெடுத்து குமரன் கத்திய போது ஷெண்பாவின் பிஞ்சு இதயம் ஸ்தம்பித்துப் போனது. உடல் நடுங்கிப் போனாள். அவளறிந்த குமரன் அவளிடம் கடிந்து ஒரு வார்த்தை ஒரு நொடி பேசியதாய் எங்குமே நினைவில் இல்லை.
விக்ரமும் அதிர்ந்து போனான். அவர்கள் இருவரையும் கோபமாய்ப் பார்த்த குமரன் சிந்துவுடன் விறுவிறுவென வெளியேறினான். நடந்ததை மனம் மீட்ட, மீண்டும் விழிகள் நனைந்தன ஷெண்பாவுக்கு. புறத்தூண்டல் எதுவும் மூளைக்கு உரைக்காது சிலை போல அமர்ந்திருந்தாள்.
சில நிமிடத்தில் அவளது நீண்ட விரல்கள் கட்டிலுக்கு அருகே நீண்டன. மேஜை மீதிருந்த தங்கள் மூவரது புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். ஷெண்பா நடுவிலிருக்க, அவளுக்கு இருபுறமும் விக்ரமும் குமரனும் நின்றிருந்தனர். மூவர் முகமும் அகமும் மகிழ்ச்சியில் மின்னின. விவரம் அறியா வயது. யார், எவர், என்னவென பகுத்தறியா வயதில், மூவரின் உதட்டிலும் கள்ளமில்லா புன்னகை பூத்திருந்தது.
அந்தப் புகைப்படத்தைத் தொட்டு தடவிப் பார்த்தாள். இது போலொரு புகைப்படம் இனிமேல் எடுக்க வாய்ப்பில்லை என நினைத்ததும், மனம் வலித்தது.
அப்படியேபடுத்தவள், அந்தப் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்தியவாறு நெடுநேரம் கட்டிலில் கிடந்தாள். விழிகளை மூடியதும், தான் பேசிய சுடு சொல்லில் முகம் வாடி நின்ற குமரன் சமீபித்தான். அந்நிலையில் அந்த முகத்தில் அதிலிருந்த பாவனை சர்வ நிச்சயமாய் அவளை இன்று தூங்க விடாது, கொன்று தின்றுவிடும் என்பது திண்ணம். நடந்த நிகழ்வுக்குப் பின்னே எத்தனையோ முறை குமரன் ஷெண்பாவை சந்திக்க முயன்றிருக்கிறான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள்.
‘வேண்டாம் எனத் தூக்கியெறிந்துவிட்டுப் போனவனிடம் அன்பை, நேசத்தை யாசிக்க மனம் வரவில்லை. அந்த வாரத்தைகள் அளவு கடந்தக் காயத்தை அவளுள் தோற்றுவித்திருந்தது. குமரன் தங்களுக்காகத்தான் பேசினான் என்பது பின்னாளில் பக்குவப்பட்ட பின் மனம் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து தொலைத்தது.
அதற்குப் பின்னர் ஒருமுறை இவளாக அழைத்து மீண்டும் வீட்டிற்கு வருமாறு கெஞ்ச, குமரன் இறுகிப் போய் அழைப்பைத் துண்டித்திருக்க, ஷெண்பா வெறுத்துப் போனாள். கோபம், யார் மீது காட்டுவது எனத் தெரியாது ஒவ்வொரு முறை குமரனைக் காணும்போது வார்த்தையால் அவனை சுட்டுப் பொசிக்கினாள். ஆனால், அதற்கெல்லாம் ஒரு வார்த்தைக் கூட பதிலுக்கு குமரன் உரைத்ததில்லை. அதில் மீண்டும் காயம்பட்டது என்னவோ ஷெண்பாதான். அவன் முகம் வாடி, வதங்கும்போது இவளுக்கு மனதே வலிக்கும்.
இவள் இப்படியென்றால், விக்ரம் குமரனோடிருந்த தொடர்பை அன்றே முடித்திருந்தான். எத்தனைக் கெஞ்சியும் அழைத்தும் கூட வீட்டைவிட்டுச் சென்றவனை அவன் மன்னிக்கத் தயாராகவில்லை. அவன் மட்டும் சிந்துவுடன் தனியாளாய் கஷ்டப்படுவதை பார்க்கையில் இவனது உள்ளம் வெதும்பும். ஷெண்பாவும் விக்ரமும் படித்து முடித்துவிட்டு நல்ல வேலையிலிருக்க, குமரன் பள்ளியோடு படிப்பை நிறுத்தியதற்கு விக்ரம் தாங்களும் ஒரு வகையில் காரணம் என குற்ற உணர்வில் மறுகிய நாட்கள் ஏராளம். இன்னும் சொல்லப்படாத, சிந்தையில் எட்டாத நிகழ்வுகள் எல்லாம் இவர்கள் மூவரின் வாழ்க்கையும் ஒரு சுழற்று சுழற்றியிருந்தன.
பண்ணையிலிருந்து அலுவல் முடிந்து வந்த விக்ரம் மகிழுந்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைக் கண்ட சுமதி, “மினாட்சி, விக்ரமுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வா!” என கட்டளைப் பிறப்பித்தார்.
உள்ளே நுழைந்தவன் மின்விசிறியை உயிர்பித்தவாறு நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான். இன்று கோழிப் பண்ணையில் வேலை கொஞ்சம் அதிகம். அதனால் உடல் ஓய்விற்குக் கெஞ்சியது. சட்டையிலிருந்த இரண்டு பொத்தான்களை வலது கை அவிழ்த்து விட, இடது கையால் நெற்றியில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்தான்.
சுமதி மகனுக்கு தேநீரை எடுத்துவந்து கொடுத்தார். அதை வாங்கி விக்ரம் பருகவும், அவனருகே அமர்ந்தவர், “உன் தங்கச்சிக்கும் உனக்கும் ஏதும் சண்டையா டா?” என வினவினார்.
அவரது கேள்வியில் முகத்தைச் சுருக்கியவன், “இல்லையே மா!” எனத் தோளை குலுக்கினான்.
“அப்புறம் ஏன் டா அவ மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கா? வந்ததும் வராததுமா ரூம்க்குள்ள போய் அடைஞ்சவதான், இன்னும் வெளிய வரல. என்னென்னுத் தெரியலை. காலைல காலேஜ் போகும்போது நல்லாதான் போனா…” என்றவரின் பதிலில் விக்ரமின் விழிகள் யோசனையாய்த் தங்கை அறைக் கதவில் படிந்தன.
“நான் என்னென்னு கேக்குறேன் மா…” பதில் இயம்பியவன், குவளையைத் தாயின் கையில் கொடுத்துவிட்டு எழுந்து சென்று அவளது அறைக் கதவைத் தட்டினான்.
“ஷெண்பா… ஷெண்பா!” இவன் குரல் கேட்டதும் எழுந்தவள், “இதோ வரேன் ண்ணா!” என முகம் கழுவி உடை மாற்றி வெளியே வந்தாள்.
அழுது சிவந்திருந்த விழிகளும் வீங்கியிருந்த முகமும் அவளது நிலையை அப்பட்டமாய் எடுத்துரைத்தன. தங்கை முகத்தைப் பார்த்த விக்ரம், “என்னாச்சு ஷெண்பா, ஏன் அழுதிருக்க?” என வினவினான்.
“ஒன்னும் இல்லை விக்கி!” என்றவள் அவன் முகத்தைப் பார்க்காது குனிந்து கொண்டாள். குரல் லேசாய் தழுதழுத்து அகத்தை அப்படமாய் பறைச்சாற்றியது.
“ஏன்டி, எதுக்கு இப்படி அழுது வடிஞ்சிட்டு இருக்க, காலேஜ்ல வாத்தியாருங்க எதுவும் திட்டீட்டாங்களா டி?” சுமதி மகளின் அருகில் வந்தார். அவரது குரலில் அத்தனை படபடப்பு.
“ப்ம்ச்… ஒன்னும் இல்லை மா. உன் வேலையை மட்டும் பாரு நீ…” அவரைப் பார்த்து கோபமாய் இரைந்தாள். விக்ரம் ஷெண்பாவைப் பார்த்தான். இப்படியெல்லாம் அவள் யாரிடமும் எடுத்தெறிந்து பேசுபவள் இல்லையே. என்னவாகிற்று இவளுக்கு என புரியவில்லை அவனுக்கு.
கல்லூரியில் வேறு ஏதாவது பிரச்சனையாய் இருக்குமோ என ஊகித்தவன், “ம்மா, பசிக்குது. போய் சாப்பாடு எடுத்து வைங்க…” என சுமதியிடம் கூறி, அவரை அகற்ற முயன்றான்.
மகன் பசி என்றதும் சுமதி, “மீனாட்சி, மாவை எடுத்து வெளியே வை. நான் வந்து இட்லியை ஊத்துறேன்” என விரைவாய் சமையலறைக்குள் நுழைந்திருந்தார்.
ஷெண்பாவின் கையைப் பிடித்திழுத்து அறைக்குள் நுழைந்து கதவை அடைத்த விக்ரம், “இப்போ என்னாச்சுன்னு சொல்ற ஷெண்பா…” என அதட்டலாய்க் கேட்டான். விழிகள் பனிக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “குமரனைப் பார்த்தேன்…” எனத் தேம்பிக் கொண்டே நடந்த நிகழ்வை விளக்கினாள்.
அந்தப் பெயரில் ஷெண்பா பதிலில் விக்ரம் தாடை இறுகியது. “ரோட்ல ஆயிரம் பேர், போவாங்க, வருவாங்க. அதுக்கென்ன இப்போ?” என தான் தோன்றித் தனமாய் அலட்சியத்துடன் கேட்டான்.
விக்ரம் கையிலிருந்த தன் கரத்தை உருவிய ஷெண்பா அவனை முறைத்தாள். “வேணாம்னு சொன்னவனுக்காக உன்னோட கண்ணீரை வேஸ்ட் பண்ணாத. எமோஷனல் இடியட் ஆகாத!” என விக்ரம் கோபமாய் உரைத்ததும், ஷெண்பா அவன் முன்னே கையை நீட்டினாள் பேசாதே என்பது போல. நின்றிருந்த விழிகள் மீண்டும் உடைப்பெடுக்க, கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின.
“ஆமா, உனக்கு அவன் வேணாம். அவனுக்கு நம்ப யாருமே வேணாம். எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணாம். என் ரூமைவிட்டு வெளியே போ முதல்ல…” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் ஷெண்பா. குரலில் ஆற்றாமை பொங்கி வழிய, விக்ரமின் முகத்தை ஆதங்கத்துடன் பார்த்தாள்.
விழிகளில் சரசரவென கண்ணீர் வழிந்தது. மனம் வேதனையில் வெந்து தணிந்து போனது.
அவளது முகத்தைப் பார்த்த விக்ரம் எதுவும் சொல்லாது சில நிமிடங்கள் அங்கேயே நின்றவன், பின்னர் அறையைவிட்டு வெளியேறினான். அவன் முதுகையே வெறித்தாள் ஷெண்பா.
விக்ரம் குளித்து முடித்து அறையைவிட்டு வெளியே வர, “வா டா, இட்லி சுட்டுட்டேன். வந்து சாப்பிடு!” சுமதி மேஜைமீது உணவை எடுத்து வைத்தார்.
“வரேன் மா… அவளையும் கூப்ட்டு வரேன்…” என ஷெண்பா அறை நோக்கிச் சென்றான்.
“அவ எதுக்கு அழுதாளாம் டா. வேற எதுவும் பிரச்சனையா? உங்கப்பா வந்ததும் சொல்லணும் முத!” என்றவரின் பேச்சில் அவனது நடை நிதானப்பட்டது.
திரும்பி அவரைப் பார்த்தவன், “ச்சு… ம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க. அவ எக்ஸாம் சரியா எழுதலைன்னு அழுதிருக்கா. நான் சமாதானம் செஞ்சுட்டேன்…” என உரைக்கவும், சுமதி மகனை நம்பவில்லை என்பது போலொரு பார்வையைப் பதிலளித்தார்.
“நீங்க நம்புனாலும், நம்பலைனாலும் அதான் நிஜம்…” இப்போது அவன் குரல் சலிப்பாய் வந்தது. சிறு சிறு விஷயத்தைக் கூட தந்தை வரை எடுத்துச் சென்று பெரியதொரு பஞ்சாயத்தைக் கூட்டுவதுதான் சுமதியின் பிரதான வேலை.
“ஏன்டி சுமதி, பொம்பளை புள்ளை அழுதான்னா, என்ன சமாச்சாரம்னு மொத அதட்டி விசாரிக்கணும். நீ உன்பாட்டுக்கு இருக்காத… காலம் கெட்டுக் கிடக்கு, பொம்பளை புள்ளை படிச்சது போதும்னு சொன்னா, இவுக அப்பன் கேட்குறானில்லை. இப்போ கண்ணைக் கசக்கிட்டு வந்து நிக்கிறா. என்னவோ? ஏதோ?” என நீட்டி முழக்கிப் பேசினார் தங்கம்மாள். சொக்கநாதனின் தாய். எண்பது வயதைக் கடந்தும் காலனைச் சந்திக்காத பெண்மணி. பெயருக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் கூட எட்டாத அளவிற்கு தரம் தாழ்ந்த எண்ணம் கொண்டவர். இன்னுமே இந்த வீட்டில் நான் சொல்வதுதான் செயலாற்ற வேண்டும் என்றொரு முனைப்பும் தன்னகங்காரமும் அவரது பேச்சின் தொனியிலே எப்போதும் தெறிக்கும்.
அவரது பதிலில் விக்ரம் ஏகத்திற்கும் எரிச்சலானான். “அப்பத்தா, அதான் அவ எக்ஸாம் நல்லா எழுதலைன்னுதான் அழறான்னு சொன்னேன் இல்ல. அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு, விடுங்க!” என்று பேச்சைத் துண்டித்திருந்தான். முன்பானல் அவருக்கு சிறிதளவேனும் மரியாதை அளிப்பான். ஆனால், தங்கம்மாவின் பேச்சும் எண்ணமும் செயலும் அவரைப் போலவே தரம் தாழ்ந்ததாகவே எப்போதுமிருக்க, இவனும் அகத்திலிருக்கும் கோபத்தையும் எரிச்சலையும் வார்த்தைகளில் கொட்டிவிடுவான்.
ஷெண்பாவின் அறைக்குள் நுழைந்தவன், அவளை உணவுண்ண அழைத்தான்.
“எனக்குப் பசிக்கலை. நீ போய் சாப்பிடு!” விக்ரம் முகத்தைப் பார்க்காது பதிலுரைத்தாள். இவன் பேச்சிலும் கோபம் ஒரடுக்கு ஓங்கிஉயர்ந்திருந்தது. ஆண்கள் இருவரைப் போல இறுகிய மனம் இல்லையே அவளுக்கு.
“இப்போ சாப்பிட வரலைன்னா, நீ அழுததுக்கு கண்ணு காது மூக்கு வச்சு அம்மாவும், அப்பத்தாவும் பேச ஆரம்பிச்சுடுவாங்க. பரவாயில்லையா?” விக்ரம் வினவ, நிமிர்ந்து அவனை முறைத்தவள், சாப்பிட அமர்ந்தாள்.
***
“லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சது பா. டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு…” திவாகர் கூற, தலையை அசைத்துக் கேட்டார் ரங்கராஜன்.
அவரது தட்டில் இரண்டு சப்பாத்திகளை இட்ட ராதாமணி, “உங்க மவளுக்கு இன்னும் கோபம் குறையலை. சாப்பிட்டுப் போய் அவளை சமாதானம் செய்ங்க…” எனக் கூற, ரங்கராஜனுக்குப் புன்னகை பிறந்தது. மனோ சிறுவயதிலிருந்தே இப்படித்தான் அவ்வப்போது சண்டையிடுவாள், முறுக்கிக் கொள்வாள்.
ரங்கராஜன் மகளைக் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்வார். இது தொடர்கதையாகிப் போன ஒன்று.
உண்டுவிட்டு மனோவின் அறைக்குள் நுழைந்தார் ரங்கராஜன். தந்தையைக் கண்டதும் மறுபுறம் திரும்பிப் படுத்தாள் மனோஹரி. அவளுக்கு அருகே கட்டிலில் அமர்ந்தவர், மகள் தலையைப் பாசத்துடன் கோதிக் கொடுத்தார். அந்த மென்வருடலில் இவளுக்கு விழிகள் கலங்குவது போலொரு எண்ணம்.
அவரது கையை வெடுக்கென்று தட்டிவிட்டாள் மகள். “மனோ மா, அப்பாகிட்ட என்ன டா கோபம்?” என்றவரின் குரலில் மகளின் மீதான நேசம் கொட்டிக் கிடந்தது. மகளும் மகனும்தான் அவரது உலகமே. அதிலும் தன் தாயைப் போல பிறந்திருக்கும் மகள் மீது அத்தனைப் பிரியம் அவருக்கு. வெளியே விரைப்பாய் எல்லோரையும் அதட்டி, உருட்டி வேலை வாங்கினாலும், அரசியல்வாதியாய் வலம் வந்தாலும், மகளிடம் அது என்றுமே செல்லுபடியானதில்லை. அவளருகில் மட்டும் முகமூடியை முழுவதுமாக அகற்றிவிடுவார்.
அவரது பேச்சுக் கூட அவளை ஒரு நொடி கூடக் காயப்படுத்தாது. திவாகரை விட இவள்மீது பெற்றவருக்கு ஒரடுக்கு பாசம் அதிகமே. அதை அவனும் உணர்ந்திருக்கிறான். அறியாத வயதில் எப்போதாவது அதை வைத்து சண்டையிடுவான். ஆனால், வயது ஏற ஏற பக்குவமும் முதிர்ச்சியும் தங்கை மீது அக்கறையைக் கொட்ட வைத்தது. என்ன வேலை இருந்தாலும், அவள் மீதொரு கண்ணை வைத்திருப்பான். அவன் பார்வை வட்டத்தில் தான் இருப்பாள் மனோஹரி.
தந்தையின் பேச்சில் அதிலிருந்த அக்கறையில் தலையைக் கோதிய ஸ்பரிசத்தில் கண்கள் அவளறியாது கலங்கிப் போக, எழுந்தமர்ந்தாள் மனோ.
“ஏன்ப்பா அப்படி செஞ்சீங்க? அந்த மார்த்தாண்டத்துக்கும் ஒரு குடும்பம் இருக்கும் இல்ல. அவருக்கும் என்னை மாதிரி ஒரு பொண்ணு இருக்கலாம். அவங்களை அடிச்சுட்டோம்னு ஈஸியா சொல்றீங்களே! இதெல்லாம் எந்த விதத்துல நியாயம் பா? நாளைக்கு நமக்கும் அதே நிலைமை வராதுன்னு என்ன நிச்சயம்?” என ஆற்றாமையுடன் தந்தை முகத்தைப் பார்த்து வினவினாள். கோபமில்லை, ஆனால் ஏக வருத்தமிருந்தது. தந்தையுடன் சேர்ந்து குமரனும் இப்படி செய்கிறானே என உள்ளம் அவனுக்காகவும் தவித்து தொலைத்தது. அவனை ஏன் தனக்குப் பிடித்தது என சுயப்பரிசோதனை செய்து கேள்வி கேட்டு மனம் ஓய்ந்து போயிருந்தது சமீப காலமாக.
‘அவனுடனான வாழ்க்கை முழுவதும் இதே போலதான் இருக்குமோ? காலம் முழுவதும் அவனுடன் நான் சண்டையிடப் போகிறேனோ?’ என்ற எண்ணம் நிம்மதியை குலைத்திருந்தது. எது தவறு, சரியென சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் எப்போது குமரனுக்கு எப்போது உதிக்கும்? என்ற கவலை அவளை சோர்வுறச் செய்தது.
மனோவின் கையைப் பிடித்து அழுத்திய ரங்கராஜன், “மனோ, நான் இப்போ ஒரு கேள்வி கேட்குறேன். அதுக்குப் பதில் சொல்லு…” என்றார். அவள் நிமிர்ந்து தந்தை முகத்தைக் கேள்வியாக நோக்கினாள்.
“உன்னை யாராவது அடிச்சா என்ன பண்ணுவ? திருப்பி அடிப்பீயா, இல்ல இன்னொரு கன்னத்துலயும் அடிங்கன்னு ஏசுநாதர் மாதிரி சொல்லுவீயா?” என வினவினார். மனோவிடம் பதிலில்லை. அமைதியாக அவரை வெறித்தாள்.
“கண்டிப்பா திருப்பி அடிப்ப. அதுமாதிரி தான் இதுவும். யாரையும் நானா போய் அடிக்கணும்னு நினைக்கலை. நம்மளை தாக்குறவங்களுக்கு, பதிலுக்கு செய்றோம். அவ்வளோ தான். என்னால காந்தி மாதிரி அஹிம்சை வழியை எல்லாம் ஃபாலோ பண்ண முடியாது. நான் செய்றது என் நிலையில இருந்து பார்த்தா சரிதான். அவங்க அவங்களுக்கு அவங்கவங்க நியாயம். இதுக்கும் மேல இதைப் பத்தி யோசிக்காத மனோ. நிம்மதியா தூங்கு…” என்றவரை இயலாமையுடன் பார்த்தாள். மகள் கன்னத்தில் தட்டி அவர் நகர, எதுவும் பேசாது தலையணையில் முகம் புதைத்தவளின் மனம் முழுவதும் குமரன்தான். விழியோரம் ஈரம் கசிய, மனதோரம் பாரமேறியது.
சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.
மறுநாள் காலை பொழுது புலர்ந்ததிருந்தது. ராதாமணி அதிகாலையிலே எழுந்துவிட்டார். மகளின் பிறந்தநாளாகிற்றே. தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்தார். அடுத்த வருடம் அவள் வேறொரு வீட்டுப் பெண்ணாகி இருப்பாளே என்ற எண்ணம் மனதினோரம் துளிர்த்தது. சந்தோஷத்துனூடே சிறுபுள்ளியாய் மனம் அதில் பின்னடைந்தாலும், கைகள் அதன்பாட்டிற்கு வேலையை செவ்வென செய்து கொண்டிருந்தன.
“என்ன ராதா, அறுசுவையும் சமைச்சுடுவ போல?” எக்களிப்புடன் கேட்ட ரங்கராஜனின் வலது கையில் தொலைவியக்கியிருந்தது. தொலைக்காட்சியில் ஒரு கண்ணும் மனைவி மீதொரு கண்ணும் வைத்திருந்தார்.
அவரின் கேலியில் முறைத்த ராதாமணி, “போய் உங்கச் செல்ல மகளை எழுப்பிவிடுங்க. மகாராணி இன்னும் எழலை. பிறந்தநாள் அன்னைக்காவது வெள்ளென எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம் இல்ல!” சடைத்தவாறே சமையலை முடித்திருந்தார்.
ரங்கராஜன் எழுந்து மகளின் அறைக்குள் நுழைந்தார். அவள் உறங்கிக் கொண்டிருக்க, இவர் கட்டிலருகே அமரும் அரவத்தில் மனோவின் தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் துவங்கியது. லேசாய் கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள்.
“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா மனோ மா!” தலையைக் கோதி புன்னகையுடன் முதல் வாழ்த்தை தந்தை கூறவும், இரவு நடந்த அனைத்தும் பின்னகர்ந்து கொள்ள, கோபம் தற்காலிகமாக விடுப்பெடுத்துக் கொண்டது.
உதட்டிலேறிய சிரிப்புடன், “தேங்க் யூ பா!” என எழுந்தமர்ந்தவள், நீண்ட முடியைச் சுருட்டிக் கொண்டையிட்டாள்.
அன்று வாங்கி வந்த சேலையைத்தான் அணிவதற்கு எடுத்து வைத்திருந்தாள். குளித்து முடித்து உள்பாவாடையும் மேல் சட்டையும் உடுத்தியவள், “ம்மா…” என அறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்த, “ஏன் டி இப்படி கத்துற, என்ன வேணும்?” என மகளை முறைத்துக்கொண்டே ராதா அறைக்குள் நுழைந்தார்.
“சேலையைக் கட்டிவிடு மா… கட்ட ட்ரை பண்ணேன். முடியலை!” மனோ கூற, ராதாமணி ஆச்சர்யத்துடன் புடவையை மடிப்பெடுத்து மகளுக்கு அணிவித்துவிட துவங்கினார்.
“ஏன் டி, நான் புடவை கட்டுனா கட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கிறவ. நீயா இன்னைக்கு புடவை கட்ற?” ராதாமணியின் ஆராய்ச்சிப் பார்வைத் தன்னை ஊடுருவியதையெல்லாம் மனோ லட்சியம் செய்யவில்லை.
“ஒரு சேலை கட்டிவிட்றதுக்கு இத்தனை கேள்வியா மா?” மகள் உதட்டைச் சுழித்தாள்.
மனோவிற்கு புடவையைக் கட்டி முடித்த ராதாமணி முகத்தில் புன்னகை. “இன்னைக்குத்தான் பொண்ணு மாதிரி லட்சணமா இருக்க…” என்றவரை முறைந்தாள். அயிரை நிறமும் கபில நிறமும் கலந்தப் புடவை அவளை பாந்தமாய் தழுவியிருந்தது. அதற்கு தோதாய் இளம் பச்சை வண்ண சட்டையில் மனோஹரி அழகு கூடிப் போய் மிளிர்ந்தாள்.
“ரூம்க்குள்ள வந்ததுலருந்து, ஒரு பெர்த்டே விஷ் பண்ணீயா மா? அதை தவிர எல்லாம் பேசு…” தாயிடம் செல்லக் கோபம் கொண்டாள் மனோஹரி. குரலில் காரமில்லை. காரணமில்லாத அன்பும் பிரியமுமிருந்தது.
“நான் என்னத்தை விஷ் கிஷெல்லாம் பண்ண. உன் மனசு போல நிறைவா வாழ்க்கை அமைஞ்சு சந்தோஷமா வாழணும் டி. அதை தவிர பெருசா எங்களுக்கு என்ன இருக்கு?” மகள் முகத்தை நெட்டி முறித்து ராதா வெளியேற, அவரைப் புன்னகையுடன் பார்த்தவள், தலையைக் காய வைத்து பின்னலிட்டு, மேஜை மீது தாய் வைத்திருந்த பூவை தலையில் சூடினாள்.
கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்து திருப்திக் கொண்டவள், வெளியே வர, “ஹேப்பி பெர்த் டே மனோ!” என திவாகர் அவளிடம் ஒரு பெட்டியை நீட்டினான். உதட்டிலேறிய சிரிப்புடன் அதைப் பெற்றுக் கொண்டவள், தாய் தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள்.
“போதும், வாடி… வந்து சாப்பிடு!” என மற்ற மூவரை அமர வைத்து ராதா பரிமாற, அவரையும் இழுத்து அமரவைத்து உண்டு முடித்தாள் மகள்.
ரங்கராஜன் உண்டுவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்தார். அவரருகே அமர்ந்த மனோ தந்தை முகத்தைப் பார்க்கவும், “என்ன வேணும் என் பொண்ணுக்கு?” என வினவினார்.
“இந்த பெர்த் டேவுக்கு என்ன கிஃப்ட் வேணும்னு நீங்க இன்னும் கேட்கலையே பா!” அவள் வினவவும், ரங்கராஜன் சிரித்துவிட்டார்.
“உனக்கில்லாதது என்கிட்ட என்ன இருக்கு மனோ மா. சொல்லுடா, என்ன வேணும் என் பொண்ணுக்கு?” எனக் கேட்டவருக்குத் தெரியுமே. அவள் கடந்து சென்ற பிறந்தநாளுக்கு கேட்ட மகிழுந்து முதல் பூந்தோட்டம் வரை மனோ வாசம்தான் வீடு முழுவதும் வீசுமென.
“ப்பா, நான் எதுக்கேட்டாலும் சரி சொல்லணும். மாட்டேன்னு மறுக்க மாட்டீங்க இல்ல?” அழுத்தமாக காரியக்காரி மனோஹரி வினவ, ரங்கராஜன் மகளைக் கேள்வியாகப் பார்த்தார். அவரது முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன.
“ச்சு… அப்படியென்ன கேட்டுடப் போறா. இன்னொரு பூந்தோட்டமா?” திவாகர் கேலி செய்தான். அவனை நிமிர்ந்து முறைத்தாள் மனோ.
“என்ன வேணும் டி உனக்கு?” ராதாமணி கூட ஆர்வமாய் அருகில் வந்துவிட்டார். மூவர் பார்வையும் தன்னிடம் தான் என்பதை உணர்ந்தவளின் விழிகள் வாயிலைத் தொட்டு மீள, சரியாய் அந்நேரம் குமரன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
வெள்ளை சட்டையும் கருநீல கால்சராயும் அணிந்திருந்தவனின் பார்வைக் கூட அவளிடம்தான்.
புடவை உடுத்தியிருந்தவளை ஆராய்ச்சியாயப் பார்த்தவாறே வீட்டிற்குள்ளே வந்தான். அவனை சில நொடிகள் மனோவின் பார்வைத் தொட்டுத் தடவிப் போனது.
குமரன் வந்து நிற்க, “வா குமரா…” என்றான் திவாகர். அவன் தலையை அசைத்தான்.
“ப்பா, எனக்கு குமரனை பிடிச்சிருக்கு பா. அவரைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறேன்…” எந்த வித பிசிறுமின்றி தந்தையின் முகம் பார்த்து பேசியவளின் பேச்சில், உறுதியில் சுற்றியிருந்த மூவருக்கும் பேரதிர்ச்சிதான். குமரனுக்கு அவளது பேச்சு தெளிவாய்க் கேட்டும்
கேட்காத நிலைதான்.
‘என்ன சொல்கிறாள் இந்தப் பெண்?’ என திருக்குமரனின் புரியாத பார்வை மனோஹரியை மொய்க்க, இவளது பார்வையும் அவனிடம்தான்.