உள்ளம் – 8 ❤️
குமரன் வீட்டிற்குள் நுழையவும், ராதாமணியும் ரங்கராஜனும் ஒரு நொடி அதிர்ந்து போயினர். வேலையைவிட்டுச் சென்ற அன்று அவனைக் கண்டதோடு, அடுத்து இன்றுதான் பார்க்கின்றனர்.
ராதாமணி குமரனை எரித்து விடுவது போலொரு பார்வைப் பார்த்தார். அவரது முகம் கோபத்தில் தகிக்க, ‘இவன் எதுக்கு இப்போ இங்க வந்தான்?’ வார்த்தையால் கேட்க முடியாது பல்லைக் கடித்து சினம் பொங்கும் விழிகளால் நோக்கினார். சரியாய் இந்நேரத்தில் இவன் வந்ததற்கான காரணம் என்னவென மனம் ஆராய, யோசிக்க அவகாசம் கொடுக்காது மகள் உருவம் கண்முன்னே தோன்றி மறைந்தது. கண்டிப்பாக இவளது செயலாகத்தான் இருக்கும் என ஊகித்தவரின் எண்ணத்தைப் பொய்யாக்கவில்லை மனோ.
அவனைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போலொரு பாவனை அவளின் முகமெங்கும் விரவியிருந்தது. இனி இவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல் விடை பெற்றிருக்க, ஆறுதலாய் அவனைப் பார்த்து உதட்டை லேசாய் விரித்துப் புன்னகைக்க முயன்றாள். குமரனின் பார்வையும் அவளிடம்தான். அத்தனை ஒப்பனை செய்திருந்தும் அவள் முகத்தில், விழிகளில், அந்தப் புன்னகையில், உடல் மொழியில் ஏதோ உயிர்ப்பு குறைந்திருந்ததை இவனால் கணிக்க முடிந்தது. ஆதரவற்று நிற்கும் இந்தப் பெண்ணைக் காண்கையில் மனதில் நொடி நேரச்சலனம். திமிராய், அலட்சியமாய்ப் பார்க்கும் விழிகள் இன்று அவனைத் தவிப்பாய் நோக்குவதை உணர்ந்து, நொடியில் விழிகளைத் நகர்த்தி எதிலிருந்தோ தப்பிப்பதைப் போல ரங்கராஜனின்புறம் திரும்பினான்.
வந்திருந்த மாப்பிள்ளை வீட்டினரும் குமரனைத்தான் கேள்வியாய் நோக்கினர். ஒரு நிமிடத்தில் தன்னை மீட்ட ரங்கா, “வா குமரா, என்ன இந்த நேரம் வந்திருக்க?” என இயல்பாய் வினவினார். அவர்கள் முன்னிலையில் எதையும் கேட்க விருப்பமில்லை. குமரன் வந்திருந்தால், ஏதோ காரணமாகத்தான் இருக்கும் என அவன் மீதுள்ள நம்பிக்கையில் மற்ற எண்ணங்களைக் கிடப்பில் போட்டார். இப்போது இந்தப் பையனை இங்கிருந்து அகற்றுவதே பிரதானக் கடமை என மனம் கூறியது.
குமரன் பதிலேதும் அளிக்கவில்லை. அப்போதுதான் புறத்தூண்டல் உறைத்ததைப் போல, அவனின் பார்வை மெதுவாய் வந்திருப்பவர்களைத் தொட்டு மீள, நடப்பது என்னவென மூளை சடுதியில் ஊகித்திருந்தது. ஒரு நொடி கண்ணை மூடித் திறந்தான். மனோஹரியின் மீது அப்படியொரு கோபம் வந்தது. எந்த எண்ணத்தில் இந்தப் பெண் தன்னை அழைத்திருக்கக் கூடும் என எண்ணியவனின் மனம் உலை கலனாக மாறியிருந்தது. ஏற்கனவே நடக்கும் பிரச்சனைகள் போதாதென்று இப்போது இவனையும் சேர்த்துக் குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டாள். ராதாமணியின் பார்வையில் குமரன் மீதுதான் பிரதானக் குற்றம். எந்தவித முகாந்திரமும் இன்றி அவனை ஆழம் பார்த்துப் பார்வையில் பொசுக்கினார் பெண்மணி.
“என்ன குமரா, ஏன் பதில் சொல்ல மாட்ற!” திவாகர் அவனருகே விரைந்திருந்தான். அவன் மனதில் மெலிதாய் பதட்டம். எல்லாம் நன்றாகச் சென்று பேசி முடியும் தருவாயில் இவன் வந்துவிட்டானே என மனம் அடித்துக் கொண்டது.
“இல்லை திவாகர், சாரைப் பார்க்கலாம்னு வந்தேன். முக்கியமான விஷயம் எதுவுமில்லை. அப்புறம் வரேன்!” என்றவனின் பார்வை முழுவதும் மனோவிடம்தான். அவனைத்தான் அவளும் அழுத்தமாய்ப் பார்த்தாள். நடக்கும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்தாலும், தனக்காகவென ஒரு வார்த்தைக் கூட இவன் உதிர்க்கப் போவதில்லை என்ற நிதர்சனம் உறைத்ததில், உள்ளே ஏதோ ஒன்று உடைந்திருக்க, இவள் நொறுங்கிப் போனாள். இமையோரம் துளிர்த்த மைக்ரோ சொட்டு நீர், வெளியே வரவில்லை.
கோபம் கொண்ட மனம், ‘போகட்டும் விடு. அவன் வேண்டாம்!’ எனக் கதற, காதல் கொண்ட மனது இந்நொடி தன்மானத்தை காதல் சிறையில் பிணைக்கைதியாக்கியிருந்தது.
“இந்தப் பையன், எங்க வீட்ல வேலை பார்த்தப் பையன். எதாவது வேலை விஷயமா அவரைப் பார்க்க வந்திருப்பான்…” ராதாமணி சூழ்நிலையை இயல்பாக்கி வந்திருந்த அனைவரின் பார்வைக்கும் பதிலளிக்க விழைந்தார். காரியம் கெட்டுவிடக் கூடாது எனப் பெற்ற மனம் தவித்தது.
“ஆமா கா, உங்களுக்குக் கூடக் குமரனைத் தெரியுமே! சின்ன வயசுல இருந்தே இங்கதான் வேலை பார்க்குறான்!” என்ற ரங்கராஜன் அவனைப் காணவும், அவரைப் பார்த்துத் தலையை அசைத்தவன் விடைபெற யத்தனித்த நொடி, மனோஹரி அவனருகே சென்றிருந்தாள்.
‘இந்தப் பெண் என்ன செய்கிறாள்?’ ராதாமணி பதறிப் போய் மகளருகே விரையும் முன், வெளியேறிக் கொண்டிருந்த குமரனின் கரங்களைப் பிடித்திழுத்து, அதில் தன் கரத்தை நொடியில் கோர்த்திருந்தாள் மனோஹரி.
நடந்து கொண்டிருந்தவன் நடை நிதானப்படவில்லை; மொத்தமாய் நின்று ஸ்தம்பித்துப் போனது. வியர்வையில் குளித்துப் பிசுபிசுத்துப் போன மனோ கரத்தின் வெம்மை அவனது கரங்களுடன் தணிந்து போய், மனதின் அலைப்புறதலை, அதன் வேதனையையும் வாதையும் தவிப்பையும் கடத்தியிருந்தன.
அவனது விரல்களோடு அழுத்தமாய்த் தன் விரல்களைப் புதைத்தாள். மெலிதாய் பெண்ணின் கைகளில் நடுக்கம்.
‘உன்னை விட மாட்டேன்!’ என்றொரு உணர்வு அந்தக் கரத்தோடு உறைந்து போயிருந்ததை உணர்ந்தவனின் முகம் கோபத்தில் சிவந்தது.
குமரன் ஒரு நொடி சலனப்பட்ட மனதிலிருந்து விடுபட்டவன், “மனோ!” எனப் பல்லைக் கடித்தவாறே அவள்புறம் திரும்பினான். அவளைக் கன்னத்தோடு அறைந்துவிடும் ஆத்திரம் அவனுள்ளே பிரவாகமாகப் பொங்கியது.
அவனைத்தான் மனோஹரியும் நோக்கினாள். ‘கரத்தை மட்டுமல்ல, அதோடு என்னையும் உதறிவிடாதே! தாங்கமாட்டேன்!’ பதபதைக்கும் மனதும் துடிதுடித்துப் போன உள்ளத்துடன் குமரனைப் பார்த்தாள். இறைஞ்சும் விழிகளும் ஏக்கமான முகமுமாய், தாயைக் கண்ட சேயின் தவிப்புடன் அவனைப் பார்த்தவளின் விழிகளில் கீழிமைத் தொட்டு மேழிமை வரை மெதுமெதுவாக நீர் தளும்பத் துவங்கியது.
அந்த முகத்தில், அந்தப் பாவனையில், ஏனோ நிராதரவாக நின்றிருந்தவளுக்கு பற்றுக்கோல் கிடைத்த திருப்தியில் விழியோரம் துளிர்த்த சிறுகீற்று நம்பிக்கையில், உவர் நீரில் குமரன் நிதானித்தான்.
மனோஹரி அவனை நிதானிக்க வைத்திருந்தாள். மனம் ஒரு நொடி இந்தப் பெண்ணின் கண்ணீரில் நனைந்து, கனிந்து போனது. அவனது வாழ்வில் பொறுமை என்னும் அத்தியாயத்தை விருப்பும் வெறுப்புமாய் இணைத்தான்.
பத்து வருடங்களுக்கு முன்பு நடுவீதியில் தானிருந்த நிலையில்தான் இவள் இருக்கிறாள். தனக்கென யாருமில்லாத தனித்து நிற்பது போலொரு நிராதரவான நிலை கொடுமையிலும் உச்சக் கட்டக் கொடுமை. மனோ கரத்தின் வெம்மையும் பிசுபிசுப்பும், அந்தப் பார்வையில் அவன் கண்ட தவிப்பும் குமரனை, அவன் கோபத்தை மொத்தமாய் அமிழ்த்தியிருந்தது.
ஒரு நொடி விழிகளை மூடித் திறந்த குமரனின் செய்கையில், அது தந்த நம்பிக்கையில் அவனோடு நன்றாய் ஒட்டி நின்றவளின் உடல், அவனது அருகாமையில் மெதுவாய் தளர்ந்தது. இன்னுமே அவன் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். இறுமாப்பு, கோபம், தன்னகங்காரம் என அந்நொடி எதையுமே அவளால் இழுத்துப் பிடிக்க முடியவில்லை. நேசம் கொண்டவனிடமே அந்த நேசத்தை தக்க வைக்கப் போராடும் கொடுமை நெஞ்சுக்குழி வரை வாதையைப் பரப்பி, உள்ளத்தைக் கூர் கத்தியால் குத்திக் கிழித்தது.
“மனோ, என்னடி பண்ற? முதல்ல அவன் கையை விடு!” ராதாமணி கோபத்தில் என்ன செய்வது எனத் தெரியாது மகளிடம் இரைந்தார்.
“மனோ, என்ன பண்ற நீ?” திவாகர் தங்கையைப் பிடித்திழுக்க முயல,
“திவா… அமைதியா இரு!” என அவனிடமிருந்து நகர்ந்திருந்தாள்.
ரங்கராஜன் மகளின் செயலில் அதிருப்தியாக, அவரது முகம் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனது.
“உங்கப் பொண்ணு எதுக்காக அந்தப் பையன் கையைப் பிடிச்சிட்டு நிக்கிறா?” நிர்மலாவின் கணவர் வினவ, வந்திருந்த மூவரும் இருக்கையிலிருந்து எழுந்திருந்தனர். அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாத ராதா கணவர் முகத்தைப் பார்க்க, ரங்கராஜன் மகளை அனல் கக்கும் விழிகளால் எரித்திருந்தார்.
“அது… அது வந்து அண்ணா!” ராதாமணி பதில் கூற இயலாது திக்கித் திணறி, மனோஹரியை நினைத்து மனதிற்குள் குமைந்தார். ‘இவளைப் பெற்றதற்குப் பெறாமலே இருந்திருக்கலாம்!’ என மனம் முழுவதும் கோபம் கனன்றத் தொடங்கியது.
யாரும் பதிலளிக்காது நொடிகள் பல கடக்க, “நிர்மலா ஆன்ட்டி, அங்கிள், இவர் பேர் திருக்குமரன். இவரைதான் எனக்கு கல்யாணம் பண்ண இஷ்டம். அம்மா, அப்பா திடீர்னு உங்களை வரச் சொல்லிட்டாங்க. நீங்க வர்றது எனக்குத் தெரியாது.
நடந்த மிஸ்ஸண்டர்ஸ்ண்டான்டிங்க்கு நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன்!” லேசாய் தடுமாறினாலும், உறுதியாய் உரைத்திருந்தாள் மனோஹரி. அந்தப் பேச்சில் வந்திருந்தவர்களின் முகத்தில் அதிருப்தி தெறித்தது. மாப்பிள்ளையின் முகம் ஏமாற்றத்தில் வாடிப் போனது.
“மனோ, என்னடி பேசுற?” ராதாமணி கோபத்தில் மகளது தோளில் அடிக்க, அசையாது நின்றாள். கை மட்டும் இன்னும் குமரனைத்தான் சமீபித்திருந்தது. அவனைவிடவே இல்லை. ரங்கராஜனுக்கு மகளின் செய்கையில் , அது கொடுத்த அவமானக் குன்றலில் முகம் கன்றி மேலும் சிவந்தது.
நிர்மலாவின் பார்வை ஒருவித அசூசையுடன் குமரனின் மீது படர, அதை உணர்ந்தவனின் உடல் இறுகியது. மனோவால் அதை உணர முடிந்தது. இவளது உள்ளம் தவித்து துடித்துப் போனது.
“என்ன ரங்கா, உன் பொண்ணை ஒழுங்கா வளர்க்க மாட்டீயா? ஒரு வேலைக்காரனைப் போய் பிடிச்சிருக்குன்னு சொல்றா?” என்றவரின் குரலில் தங்களை அவமானப்படுத்திவிட்ட கோபமும் காழ்ப்புணர்ச்சியும் தெரிந்தது.
“ஆன்ட்டி, வார்த்தையை அடக்கிப் பேசுங்க. அவர் வேலைதானே பார்த்தாரு. அதுக்கு ஏன் உங்க முகம் இப்படிப் போகுது. நீங்க கிளம்பலாம். எங்களோட ஃபேமிலி பிரச்சனையை நாங்கப் பார்த்துக்குறோம்!” என்றவளின் பற்கள் சினத்தில் நரநரக்கும் சத்தம் அனைவருக்குமே கேட்டது. அவரது பார்வையும் குரலும் குமரனை இறக்கித் தாழ்த்திப் பேசுவதைக் கண்டு, இத்தனை நேரம் பெரியவர்கள் என்ற மரியாதையில் அமைதி காத்தவளின் பொறுமை காற்றில் கரைந்திருந்தது.
“ஏன் ராதா, ஒத்தைப் பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியலை உங்களுக்கு? இவளுக்கெல்லாம் இருக்க வாய்க்கு, உங்க வீட்டு மானத்தைக் கப்பலேத்தப் போறா!” நிர்மலா கோபமாய்ப் பேச,
“ம்மா… போதும் வாங்க நம்ப போகலாம்!” என மாப்பிள்ளை தாயின் கரத்தை இழுத்துக்கொண்டு போனான். அவனது தந்தையும் ரங்கராஜனை அதிருப்தியாய்ப் பார்த்துவிட்டு வெளியேற, வீடே ஒரு நிமிடம் நிசப்தமாக இருந்தது.
“ஏங்க, நான்தான் சொன்னே இல்லங்க, உங்க மக ஊரைக் கூட்டி நம்பளை அசிங்கப்படுத்தப் போறான்னு. கேட்டீங்களா? மக, மகன்னு அவளைத் தலையில தூக்கி வச்சு ஆடுனீங்க. அதுக்கு தக்க சன்மானம் கொடுத்துட்டா இவ!” கை வலிக்க வலிக்க மனோவின் முதுகில் ஓங்கி அடித்தார். அது தந்த வலியிலும் வேதனையிலும் விழிகளில் நீர் தளும்பி நின்றாலும், ஒரு சொட்டு நீரைக் கூட வெளியேற்றாது அழுத்தமாய்ப் பெற்றவரைப் பார்த்தாள். அவரும் மகளைத்தான் பார்த்தார். இத்தனை வருடம் பாசத்தை பொழிந்து வளர்த்த மகள், தன்னை, தன் பேச்சை மீறியிருக்கிறாள். தன்னை அவமானப்படுத்தியிருக்கிறாள் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நெஞ்சு கோபத்தில் துடி துடித்துப் போக, அது கண்களில் விரவியது.
திவாகர், “ம்மா… அவளை அடிக்கிறதை நிப்பாட்டுங்க மா!” என ராதாமணியை மனோவிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தான். தந்தையின் பார்வை அவனது அடிவயிறு வரை பயந்தை உருளச் செய்தது. ஆனால், அதற்கு காரணக்கர்த்தாவோ அசையாது நின்றாள். அவளது பார்வை பெற்றவர்களைக் குற்றம் சாட்டியது. தன் அனுமதியின்றி அவர்களை வரக்கூறியது உங்களுடையத் தவறு என விழிகளில் திரையிடும் நீருடன் பார்த்தாள்.
ரங்கராஜனின் பார்வை குமரனைச் சந்திக்கவும், அவனும் அவரைப் பார்த்தான். ‘நீயுமா?’ என அவர் உடைந்து போய்ப் பார்க்க, அவன் எதுவுமே பேசவில்லை.
‘ஆமாம்’ என்றோ ‘இல்லை!’ என்றோ எந்தவித முகமாற்றமும் இல்லாது அழுத்தமாய் இறுகிப் போய் நின்றான். அவரது பார்வை இருவரது கோர்த்திருந்த கரத்தில் நிலைக்க, மனோவிடமிருந்து தன் கையை உருவினான்.
தந்தை பார்வை உமிழ்ந்தக் கேள்வியை உள்வாங்கியவள், “அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பா. நான் தான் அவரைப் ஃபோன் பண்ணி வரச் சொன்னேன். இப்போ வரை அவர் உங்களுக்கு உண்மையாதான் இருக்காரு!” கோபமாய் ஆங்காரமாய் அவளிடமிருந்து வார்த்தைகள் வந்துவிழ,
“செய்றதையும் செஞ்சுட்டு எவ்வளோ திமிறா பேசுறா பாருங்கங்க!” ராதா மகளின் இரண்டு கன்னத்திலும் மாற்றி மாற்றி அடிக்க, அப்போதும் வலிக்கிறது என முகத்தைச் சுளிக்காது சிலை போல நின்றாள். குமரன் விழிகள் அவளைத்தான் மொய்த்தன. அவள் தாங்கும் ஒவ்வொரு அடியிலும் இவனுக்குள்ளே ஏதோ ஒன்று துடித்து அடங்கிப் போனது. அந்த உறுதியில், அழுத்தத்தில் ஏனோ தன் சாயல் இருப்பதாய் மனம் கத்தி இரைச்சலிட்டது.
“ராதா, போதும் நிறுத்து!” இத்தனை நேரம் அமைதியாயிருந்த ரங்கராஜன், மனைவியை அதட்டி அடக்கியிருந்தார்.
“எவ்வளோ நம்பிக்கை வச்சிருந்தேன். என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டான்னு. ஒரு நிமிஷத்துல அத்தனையும் உடைச்சிட்ட இல்ல?” உடைந்துப் போய் கோபமாய் உரைத்தவரைப் பார்த்தவளுக்கும் மனம் முழுவதும் பாரம்தான். ஆனால், அதை வெளியே காண்பிக்கவில்லை.
“என் பேச்சை, என் விருப்பத்தை நீங்க மதிக்கலையே பா. மனசுல ஒருத்தரை வச்சிட்டு, எப்படிப்பா இன்னொருத்தர் முன்னாடி வந்து பொம்மை மாதிரி நிக்க முடியும். முடியாது பா! ஒன்னு குமரனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா, நான் உங்கப் பொண்ணாவே கடைசிவரை இருந்திட்றேன்!” மெல்லிய உடல் அதிர கோபமாய்க் கத்தினாள் மனோஹரி. தன்னைத் தந்தை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறாரே எனக் கோபம் வார்த்தைகளில் தெறித்தது.
“இதுதான் உன்னோட முடிவா?” ரங்கராஜன் தீவிரக் குரலில் வினவ, “ஆமா பா. இப்போ இல்லை, இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், என் முடிவு இதான்!” என இவள் சீறலாய் உரைக்கவும், தந்தையின் கரங்கள் மகளது கன்னத்தில் இடியாய் இறங்கியிருந்தது. ஒரு நொடி அனைவருமே ஸ்தம்பித்துப் போயினர்.
மனோஹரி உறைந்து போனாள். அவரது அடியின் வீரியத்தைத் தாங்காது உடல் தரையில் சரியப் பார்க்க, குமரன் நொடியில் அவளைத் தாங்கியிருந்தான். இறுமாப்பாயிருந்த உடலும் மனதும் தந்தையின் செய்கையில், தளர்ந்துப் போக, உதட்டோரம் குருதி வழியத் தொடங்கியது. வெளியே வராது விழிகளில் தேங்கி தஞ்சமிருந்த சூடான திரவம், குமரனை நனைத்தது. மனோஹரியின் முகம் இப்போது இவனது நெஞ்சில் புதைந்திருப்பதைக் கூட, அவளால் உணர முடியாது போனது. தந்தை அடித்த அடியைவிட, அவர் தன்னை அடித்துவிட்டாரா? என்ற அதிர்ச்சியிலே பெண் மனம் உறைந்துவிட்டது.
“அப்பா, என்ன பண்றீங்க?” திவாகர் பாய்ந்து வந்து, மனோஹரியை மறுபுறம் பிடித்து நிற்கவைத்திருந்தான். இருவரது கைப்பிடியிலிருந்தும் விலகி தன்னை நிதானப்படுத்தியவள், “பெத்தப் புள்ளையைவிட அப்படியென்னப்பா உங்களுக்கு வைராக்கியம் பெருசா போச்சு?” மனதெங்கும் பரவிய ஏமாற்றத்தையும் தந்தை அடித்துவிட்டாரே என்ற கோபத்தையும் ஆதங்கமாய்க் கொட்டிய மனோவின் முகம் மட்டும் இன்னுமே அழுத்தத்தை பிரதிபலித்தது.
“ஆமா, எனக்கு என்னோட மரியாதையும் அந்தஸ்தும், ஜாதியும்தான் முக்கியம்!” மகள் பேசப் பேச கோபத்தில் வெகுண்டெழுந்த ரங்கா மீண்டும் அவளை அடிக்கக் கரத்தைத் தூக்க, குமரன் இடையில் நுழைந்து, மனோவைத் தன் பின்னே இருத்தினான்.
“வேணாம் சார்!” என்றவனின் குரல், அவளை அடிக்கக் கூடாது என அந்தப் பெரிய மனிதருக்குக் கட்டளையிட்டது. முதன்முதலில் ரங்காவை எதிர்த்துப் பேசியிருந்தான் குமரன். அவனது குரலின் பேதத்தில் அவர் கூட அதிர்ந்து போனார். ரங்காவின் முகம் கோபத்தில் மாறியது.
“குமரா, நீ இடையில வராதே!” அவர் குரலை உயர்த்திப் பேசினார்.
“நான் வருவேன் சார், என்னை வச்சுதானே இந்தப் பேச்சு. அதை நானே தீர்க்குறேன். அவ மேல இனிமே நீங்க கையை வைக்கக் கூடாது!” என்றவன், மீறி மனோவின் மீது கை வைத்தால் எதற்கும் தான் பொறுப்பில்லை என்பது போல அழுத்தமாய்ப் பார்த்தான். இத்தனைநாள் மரியாதை ததும்ப பார்த்த விழிகளும் மனதும் அவரது பேச்சிலும் செய்கையிலும் ரங்காவை கீழிறக்கியிருந்தது. அவனறிந்து ராதாவைக் கூட மகளிடம் ஒரு வார்த்தைக் கடிந்து பேச விடாத மனிதர், இப்படி வார்த்தைகளாலும் செய்கையாலும் அவளைக் காயப்படுத்தியதை ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“குமரா, வாயை அடக்கிப் பேசு. எங்கப் பொண்ணு அவ. அவளை அடிக்க எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு!” ராதாமணி தன் கணவரைப் போயும் போயும் ஒரு வேலைக்காரன் எதிர்த்துப் பேசுவதா? எனக் கொதித்துப் போனார்.
‘எல்லாம் தான் பெத்தவளால் வந்தது!’ எனக் கோபம் இருமடங்காக உயர்ந்திருந்தது. அவரது பேச்சில் ஒரு நொடி ரௌத்திரமாய் அவரை உருத்து விழித்தவன், சடுதியில்
திரும்பி மனோஹரியின் கையைத் தரதரவென இழுத்துப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தான்.
“டேய்! என்ன டா பண்ற… கதவைத் தொற!” ராதாமணி பதற்றத்துடன் கதவைத் தட்டினார்.
“ராதா, அமைதியா இரு!” ரங்கராஜனுக்குத் தெரியும், குமரன் தன் வார்த்தைகளை மீற மாட்டான் என்று. அவன் மீது அந்த மனிதருக்கு இந்நொடி கூட நம்பிக்கை குறையவில்லை என்பதே உண்மை.
“குமரா!” திவாகர் கூட அவன் செயலில் அதிர்ந்து கோபத்தில் பல்லைக் கடித்தான்.
அறைக்குள் சென்று சினத்தில் மனோவை உதறித் தள்ளியிருந்தான் குமரன். அத்தனைக் கோபம்! ஏகக் கோபம், சினம், ரௌத்திரம். எதிரிலிருந்தவளின் மீது அவனால் காண்பிக்க முடியவில்லை. ஏற்கனவே பெற்றவர்களின் கோபத்தில் முகமெல்லாம் விரல்களின் அச்சுப் பதிந்து போயிருந்தது. உதட்டோரம் ரங்கராஜனின் செய்கையில் குருதி உறைந்துப் போயிருக்க, அவன் உதறலில் நிலைத் தடுமாறி சுவற்றில் கைப்பதித்து தன்னை நிலைப்படுத்தினாள்.
“ஏன் டி, ஏன் என் உசுரை வாங்குற? அதான் அவ்வளோ சொல்றாங்க இல்ல. வேற ஒருத்தனைக் கட்டீட்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே? அடி வாங்கி சாகப் போறீயா?” குமரனின் குரல் கர்ஜனையாய் வெளி வந்தது.
அவனது பேச்சிலும் அதன் சாரம்சத்திலும் வெகுண்டெழுந்த மனோ, “நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க சொல்ல வேணாம். எனக்குத் தெரியும்!” என்றாள் ரோஷக் குரலில். கேவி வந்த அழுகையை அடக்கி, துடித்த மனதின் தவிப்பை முகத்தில் காட்டிவிடாதவாறு தன் முன்னே நின்றவனை உருத்து விழித்தாள்.
“மனோ!” கோபத்தில் அவளை அறையச் சென்ற கரத்தைக் கட்டுப்படுத்தி பின்னகர்ந்தான் குமரன். ஒரு நொடி தாமதித்திருந்தாலும், அவனது மொத்தக் கோபமும் ஒரே அறையில் அவளது கன்னத்தில் இறங்கியிருக்கும். தாங்கியிருக்கமாட்டாளே என முதன் முதலாய் அவளுக்காக குமரன் மனம் தவித்துப் போனது.
“உனக்குப் புரியவே புரியாதா டி? கொஞ்ச நேரத்துக்கு முன்ன அந்தம்மா பார்த்துச்சே, அந்த. பார்வை மாதிரிதான் நம்ம கல்யாணம் பண்ணாலும் இருக்கும். பரவாயில்லையா?” இவன் பல்லிடுக்கில் வினவினான். குரலில் ஆற்றாமை நிரம்பி வழிந்தது.
“அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்றதுக்காக எல்லாம் என்னால வாழ முடியாது. என் வாழ்க்கை, என் இஷ்டம். உங்களைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்!” என்றுரைத்தவளின் குரலில் வெகு அழுத்தம்.
“எந்த ஜென்மத்துலயும் அது நடக்காது. நடக்காத ஒன்னுக்கு ஆசைப்பட்றதை மொத விடு மனோ. எனக்கு உன்னைப் பிடிக்கலை! எனக்கு நீ வேணாம்!” என்று கோபமாய் உரைத்தவனின் வார்த்தையில் இவள் மொத்தமாய் உடைந்துப் போனாள். வாழ்க்கையில் இரண்டாவது முறையாக தன்மீது நேசம் கொண்ட காரணத்திற்காக இன்னொரு பெண்ணை வார்த்தைகளால் வதைத்திருந்தான் குமரன்.
தன் காதலுக்கு, காதலனே எதிரியாய் மாறியதை நினைத்து மனோவின் மனம் ஊமையாய் அழுததது.
“ஓஹோ… பிடிக்கலையா?” அவன் வார்த்தைக் கொடுத்த வலியையும் கோபத்தையும் ஒருங்கே குரலில் தேக்கியவள், “பரவாயில்லை, நீங்க பிடிக்கலைன்னதும் நான் அழுகவெல்லாம் மாட்டேன். முதல்ல கிளம்புங்க!” என்றாள் சீறலாய். கைகளைக் கட்டி விழிகளில் கோபத்தைக் காண்பித்து முகத்தை வேறுபுறம் திருப்பி நின்றவளின் கண்களில் குபுகுபுவென நீர் வழிய, தொண்டை அடைத்துப் போனது.
அவளது தாடையை அழுத்தமாகப் பற்றி தன்புறம் திருப்பியவன், “அப்படியென்னத்தைதான் என்கிட்ட கண்ட டி? உன் பிடிவாதம் போகவே போகாதா?” இத்தனை நாட்கள் மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்த கேள்வியை குமரன் கொட்டிவிட, இவளது விழிகள் வேகவேகமாய் நனைந்தன.
அவனது கரத்தையும் சேர்த்து உவர்நீர் நனைக்க, அவன் கையைத் தட்டிவிட்ட மனோ, “கெட் லாஸ்ட் ஃப்ரம் மை ரூம்!” என குமரன் முன்பு கையைக் கோபத்துடன் நீட்டி வெளியே செல் என்பதைப் போல கட்டளை பிறபித்தாள்.
‘பிடிக்காது, முடியாது! என்ற உன்னிடம் மேலும் விவாதம் செய்து, காதலை யாசிக்க விருப்பமில்லை. போய் விடு!’ என்ற கோபம் அவள் முகத்தில்.
மனோவின் வதனத்தை, அதிலிருந்தப் பாவனையை உள்வாங்கியவன், “இந்தக் கல்யாணம், உன்னோட நினைப்பு எல்லாம் மணல் கோட்டை!” என வெகுவாய் நிதானத்திற்கு வந்திருந்தக் குமரன் அழுத்தி அவளது விழிகளைப் பார்த்து உச்சரித்தான். மனோவிடம் எந்த உணர்வும் இல்லை. உணர்விழந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.
‘போடா…போ. என் வாழ்க்கை நீ இல்லையென்றாலும் நின்றுவிடப் போவதில்லை. கணணெதிரே மீண்டும் வந்து விடாதே!’ கத்தி கூச்சல் போட்ட மனதின் ஆர்பரிப்புகளை எல்லாம் உதட்டில் தேக்கி விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தவளின் மனம் மொத்தமாய் சில்லு சில்லாக உடைந்திருக்க, குமரன் கதவைத் திறந்து யாரையும் காணாது வெளியேறியிருந்தான்.
‘நீ எனக்கு வேண்டாம்! திருமணம் செய்ய முடியாது!’ என வார்த்தைக்கு வார்த்தை உரைத்தவனை, ‘உங்கள் மகள்தான் வேண்டும்!’ என மறுநாளே கேட்க வைத்திருந்தாள் மனோஹரி. குமரனின் கையணைவில் வந்து நின்ற மனோஹரியிடம் மொத்தக் கோபத்தையும் காண்பித்திருந்தார் ராதாமணி.
தொடரும்…