“மனோ, நீ குமரனைக் கல்யாணம் பண்ணிக்கோ…” என்று ரங்கா கூறவும் மனோஹரிக்கு அகம் முழுவதும் மகிழ்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. விழியோரம் நீர் துளிர்க்கப் பார்த்தது. ஆனால், அடுத்த தந்தை கூறிய வார்த்தைல் அவளது மகிழ்ச்சி நொடியில் முகத்திலிருந்து துடைத்து எடுக்கப்பட்டிருந்தது.
“அவனை நீ கல்யாணம் பண்ணிக்கோ, ஆனால் ஒரு அப்பாவா எந்த இடத்திலயும் நான் நிக்க மாட்டேன், வர மாட்டேன். இந்த ஊர்ல இருக்கக் கூடாது நீங்க. வேறெங்கையாவது கண்காணாத இடத்துக்குப் போய்டுங்க. என் கண் முன்னாடி வந்துடாதீங்க. என்னை அசிங்கப்படுத்திடாதீங்க!” என்றவர் குரலில் வெறுப்பும் கசப்பும் மண்டிகிடக்க, பேசும் விஷயத்தின் பிடித்தமின்மையை சுருங்கிய முகமும் புருவமும் பறைசாற்றின. அவரது பதிலில் மனோஹரிக்கு கோபம் சுறுசுறுவென வரத் துவங்கியது. அசிங்கம் என்ற வார்த்தை அவளது மனதை நெருஞ்சியாய்த் தைத்திருக்க, அது கொடுத்தக் கோபத்தை வார்த்தைகளில் கொட்டினாள்.
அப்படியெல்லாம் யாருக்கும் தெரியாம திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்லை. பெத்தவங்க நீங்கதான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்?” மனோஹரியின் வார்த்தைகள் பல்லிடுக்கில் வெளிவந்து விழுந்தன.
“என் கண்முன்னாடி நீங்க இருக்கக் கூடாது. அசிங்கம் எனக்குத்தான்!” என்றவரின் பதிலில் கொதித்துப் போனவள்,
“இல்ல, என்ன அசிங்கத்தை நீங்க கண்டீங்க? எனக்குப் புரியலை. எந்த எண்ணத்துல நீங்க எங்களை கண்காணாத இடத்துக்குப் போக சொன்னீங்க? இதுவரைக்கும் எங்கேயாவது ஒரு இடத்துல உங்களை அசிங்கபடுத்தியிருக்கேனா? இல்லை இறங்கவிட்டிருக்கேனா? செத்தா கூட உங்கப் பொண்ணா சாவேனே ஒழிய, அப்படியொன்னும் ஒளிஞ்சு மறைஞ்சு வாழ்ற வாழ்க்கை எனக்கு வேணாம்!” என்ற போது நெஞ்சே வெடித்துப் போனது மனோவுக்கு. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி, உக்கிரமாய் நின்றாள். சம்மதம் தருவது போலொரு பாவனையில் இப்படி நஞ்சை விதைக்கிறாதே இவர் என்ற எண்ணத்தில் மனம் துடித்துப் போக, விழிகளில் வழியே வலி கசியப் பார்த்தது. ரங்காவும் அவளைத்தான் பார்த்தார்.
‘நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை!’ என்றொரு பாவனை அவரது முகத்தில்.
‘எப்படி இவர் இது போல பேசலாம்? என்ன தவறு செய்தேன் நான்?’ என்ற எண்ணத்தில் நெஞ்சம் குமைய, விழிகளில் சரசரவென நீர் கோர்த்தது.
“முடியாது! கீழ் ஜாதிக்காரனோட ரத்தம் அசிங்கம், அவமானம். உனக்கும் அவனுக்கும் கல்யாணமானா குழந்தை பொறக்கும். அதை என்னால கையால கூடத் தொட முடியாது. அது அசிங்கம், அருவருப்பா இருக்கும்!” கசப்பை விழுங்கியது போன்ற அவரது பாவனையில், மனோவின் மனம் பொங்கிவிட்டது. அவளால் அவரது பேச்சை சத்தியமாய் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. தந்தை மீது நேசம் கொண்ட மனது அவரது கீழ்த்தரமான பேச்சிலும் ஜாதி வெறியிலும் ஸ்தம்பித்துப் போனது. இந்த மனிதருக்கு இப்படியொரு முகமா? என அதிர்ந்து ஒரு நொடி பேச்சிழந்து போனாள். ராதாமணியைப் போல தந்தையும் கோபத்தில் பேசுகிறார் என அவள் எண்ணியிருந்த எண்ணத்தை ரங்கா ஒரே வார்த்தையில் சுக்கு நூறாக்கிவிட்டிருந்தார்.
குழந்தையை அசிங்கம் எனக் கூற இவருக்கு எப்படி மனம் வந்தது என நினைப்பில் கோபம் கொண்ட நெஞ்சு விம்மதித் தணிந்தது. ஆத்திரமும் கோபமும் பொங்கி வழிய, அதை வார்த்தைகளில் பிரவாகமாகக் கொட்டிவிட்டாள்.
“வாயை மூடுங்க பா… சீ! எப்படி உங்களுக்கு இப்படி கேவலமா பேசத் தோணுது. ஜாதியைக் கட்டி அழுது, அழிஞ்சுப் போய்டாதீங்க பா. அசிங்மா? எனக்கும் அவனுக்கும் பொறக்கப் போற புள்ளை அசிங்கமா? அப்போ அவரைக் கல்யாணம் பண்ணிட்டா, நானும் அசிங்கமாகிடுவேனா பா? எப்படிப்பா இவ்வளவு கீழ்த்தரமா பேச முடிஞ்சது உங்களால? அப்போ இத்தனை நாள் அவரை வீட்டுக்குள்ள சேர்க்கும்போது இந்த எண்ணத்துலதான் சேர்த்தீங்களா? அந்த மனுஷனுக்கு மட்டும் இது தெரிஞ்சு இருந்தா, உடைஞ்சு போய்டுவாரு பா. உங்களை எந்த ஒரு இடத்துல வச்சிருக்காருன்னு தெரிஞ்சும், இப்படி பேசியிருக்கீகங்கன்னா, அப்போ உங்களோட எண்ணம்தான் அசிங்கம் பா. அவர் அசிங்கம் இல்லப்பா! அவர் அசிங்கம் இல்லை!” என ஆக்ரோஷமாய்க் கத்தியவளின் பேச்சு அந்தக் கூடத்தையே நிறைத்தது. கண்களில் குபுகுபுவென நீர் வழிய, மனம் முழுவதும் ஆற்றாமை பொங்கியது. ரங்கா பேசிய பேச்சுக்கள் காதில் எதிரொலித்த வண்ணமிருக்க, மெல்லிய உடல் அதிரக் கத்தினாள் மனோஹரி.
“இனிமே இப்படியெல்லாம் பேசுனீங்கன்னா, நான் மனுஷியா இருக்க மாட்டேன் பா!” எனக் கத்தியவள், “தினம் தினம் பேசி சாகடிக்கிறதுக்குப் பதிலா என்னை நீங்க ஓரேடியா சாவடிச்சுடுங்கப்பா… உங்க பொண்ணாவே உங்களோட ஜாதிக்கு எந்த கலங்கமும் அசிங்கமும் இல்லாம செத்துப் போயிட்றேன் பா!” எனத் தொண்டை அடைக்கக் கூறியவளின் மனது அந்நொடி மரித்துப் போனது. செத்திருந்தாள், ரங்காவின் மகளாகவே மொத்த உயிர்ப்பையும் அந்நொடி இழந்து போயிருந்தாள். உலகம் ஏனோ தலை கீழாகச் சுற்றுவது போலொரு உணர்வு. இத்தனை நாட்கள் தன்னிடம் பாச முகத்தை மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்த தந்தைக்குப் பின்னே இப்படியொரு அருவருக்கத்தக்க முகம் இருக்குமென கனவிலும் நினைத்திராத மனம் துடித்துப் போனது. இந்நொடி குமரன் அருகே வேண்டும் அவனிடம் அனைத்தையும் கூறி கதறி அழ வேண்டும் என்றொரு உந்துதல்.
“மனோ, அறிவுருக்கா டி… என்ன பேசுற நீ. சாவுறதுக்காடி இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கோம். இன்னொரு முறை இந்த மாதிரி பேசுன, அறைஞ்சுடுவேன்!” ராதாமணி அவள் பேசிய வார்த்தையில் தவித்துப் போனார்.
‘என்ன வார்த்தைப் பேசிவிட்டாள் இந்தப் பெண்? செத்துப் போவதுதான் அனைத்திற்கும் தீர்வா என்ன?’ எனப் பெற்ற உள்ளம் துடித்துப் போனது.
“ப்பா… நீங்க பேசுனதில்லாம் ரொம்ப அசிங்கமா இருக்கு பா! அவ என்ன சொல்றது, நானே சொல்றேன் பா. நாளைக்கு ஜாதி முக்கியமா, இல்ல நான் முக்கியமான்னு கேட்டா, என்னைக் கொன்னு போடக் கூடத் தயங்க மாட்டீங்க இல்ல நீங்க? ஜாதிதான் முக்கியம்னா, எங்களை எதுக்குப்பா பெத்தீங்க?” திவாகர் தந்தை பேச்சில் கொதித்துப் போனான். எப்படி இந்த மனிதரால் வார்த்தைகளை திராவகமாக வீசி எதிரிலிருப்பவர்களுக்கு ஆறாத காயத்தைக் கொடுக்க முடிகிறது.
“திவா, நீ வாயை மூடு. இது எனக்கும் என் பொண்ணுக்கும் இடையில இருக்கப் பிரச்சனை! நீ உள்ள வராத…” ரங்கா மகள் கூறிய வார்த்தையில் அது கொடுத்த வலியில் இறுகிப் போனார். மகளைவிட ஜாதி அவருக்கு உயர்வாய்ப் போய்விட்டது. இறங்கி வரவே முடியவில்லை.
“நான் ஏன் பேசக் கூடாது பா? நான் பேசுவேன். உங்களுக்கு அவ மகன்னா, எனக்கு அவ தங்கச்சி. அவளுக்கு சப்போர்ட் பண்ண, எல்லா உரிமையும் எனக்கிருக்கு. நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவளைவிட, என்னை அதிகமா காயப்படுத்தும்! எனக்கு வலிக்கிது பா! எனக்கு வலிக்கும்!” திவாகர் குரல் கலங்கி வர, மனோவை தோளோடு இறுக அணைத்தான். அவளுக்கு எதுவுமே புத்தியில் உரைக்கவில்லை. தந்தை பேசிய பேச்சுக்களின் வீரியம் உயிர் வரை அவளை ஆட்டம் காணச் செய்திருந்தது. இந்த அசிங்கம் என்ற வார்த்தையை மரித்தால் கூட அவளால் மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாதே!
‘ஏன் பா இப்படி பேசுனீங்க? ஏன் இப்படி பேசுனீங்க? அளவுக்கு அதிகமா நான் நேசிச்ச முதல் மனுஷன் நீங்க. இப்ப உங்களை நீங்களே வெறுக்க வச்சுட்டீங்களே பா!’ மனது அரற்ற, பித்துப் பிடித்தது போல திவாகர் தோளில் சாய்த்திருந்தாள்.
“திவா…” கோபமாய்ப் பேச வந்த ரங்காவை மனோவின் பேச்சு ஸ்தம்பிக்கச் செய்தது.
திவாகரிடமிருந்து பிரிந்தவள், “எனக்கு குமரன் வேணாம்!” என்றாள் பிதற்றலானக் குரலில். அது தெளிவில்லாமல் மற்ற மூவரின் செவியை அடைந்தது.
விழிகள் நீரால் தளும்ப, ரங்கா முன்பு கையைக் கூப்பினாள்.
“போதும் பா! நீங்க பேசுற பேச்சைக் கேட்க என் மனசுல தைரியம் இல்லை. நான் நேசிச்ச பாவத்துக்காக அந்த மனுஷனை இதுக்கும் மேல நீங்க ஒரு வார்த்தைப் பேசக் கூடாது.
நான் ஏற்கனவே செத்துப் போய்ட்டேன். அப்பா, அப்பான்னு உங்களை மட்டுமே சுத்தி வந்த என்னை, உங்களை நீங்களே வெறுக்க வச்சுட்டீங்களே! நீங்க பேசப் பேச, உங்களை நீங்களே கீழிறக்கிக்கிறீங்க. ஜாதி உங்களுக்கு முக்கியம்னு தெரியும். ஆனால், பெத்த மகளைவிட ஜாதிதான் முக்கியம்னு இன்னைக்கு என் புத்திக்கு நல்லா உறைச்சுடுச்சு. எனக்கு குமரன் வேணாம் பா! இந்த வார்த்தையை தானே நீங்க கேட்க ஆசைப்பட்டீங்க! அதை நானே சொல்றேன் பா. எனக்கு குமரன் வேணாம்!” என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது நேசம் கொண்ட நெஞ்சு நஞ்சை விழுங்கியது போலத் துடித்து பரிதவித்தது. எதுவுமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள் மனோஹரி.
“எனக்கு குமரன் வேணாம். முடியாதுன்றதை இவ்வளோ கேவலமா, கீழ்த்தரமா உங்களால் சொல்ல முடியும்னு இன்னைக்குத்தான் எனக்குத் தெரிஞ்சது பா. சாகுற வரைக்கும் நான் இந்த வீட்ல உங்களோட ஜாதிக்கு எந்த கலங்கமும் வராம இருந்துட்றேன். உங்க மக மனோ எப்போவோ செத்துட்டா. இப்போ ஜாதியைக் காப்பத்திட்டிருக்கது உங்க பொண்ணு இல்ல, வெறும் ஜடம்! இந்த ஜடத்துக்கு இன்னொரு கல்யாணம் பண்ணணும்னு வேற யாரையும் கூட்டீட்டு வந்து நிறுத்துனீங்கன்னா, இந்த ஜடமும் உங்களுக்கு இல்ல!” எனக் கூறியவளின் உடலும் மனதும் மரத்துப் போய் மறித்துப் போயிருந்தது. தொண்டை அடைக்கப் பேசியவளின் பேச்சில் சுற்றியிருந்த மூவரும் ஸ்தம்பித்துப் போயினர்.
நகர மாட்டேன் என அடம்பிடித்த கால்களை கடினப்பட்டு இழுத்து அறைக்குச் செல்ல முயன்றவளை திவாகர் குரல் தடுத்து நிறுத்தியது.
“ப்பா, இந்த ஊர்ல எல்லார் முன்னாடியும் மனோவுக்கும் குமரனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வப்பேன். உங்களால தடுக்க முடிஞ்சா தடுத்துக்கோங்க!” திவாகர் பொறுமையைக் கைவிட்டவனாக சீறினான். ஏனோ தந்தைக் கொடுத்த வார்த்தை மனோவை விட இவனை அதிகமாகக் காயப்படுத்தியிருந்தது.
திவாகர் குரலும் அதிலிருந்த தவிப்பும் இவளுக்கு மேலும் அழுகையைக் கூட்ட, அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை ஏதோவொரு உணர்வு பிறந்து மேலெழுந்தது. விழியோரம் அந்தக் கரிசனத்தில் அக்கறையில் அழுகைப் பொங்கப் பார்க்க, தமையனைத் திரும்பிப் பார்த்தவள், வேண்டாம் என்பது போல தலையை அசைத்தாள்.
“வேணாம் திவா! இந்த மனுஷன் இவ்வளோ பேசுனதுக்குப் பிறகும் எனக்கு குமரன் வேணாம். அவரைக் கல்யாணம் பண்ண முடியலனாலும், இத்தனை வருஷம் பாசமா என்னை வளர்த்த என் அப்பாவோட ஜாதியைக் காப்பாத்திட்டாவது போறேன். கேவலம் என் வாழ்க்கையை விட என் அப்பாவுக்கு அவரோட உயர்ந்த ஜாதி உசுரா போய்டுச்சு. விடு திவா! விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும். இதுக்கும் மேல அவர்கிட்ட போய் என் காதலுக்காகக் கெஞ்சவோ, கேட்கவோ என் மனசு ரெடியா இல்லை! என்னை விட்ருங்க, ப்ளீஸ்!” என்றவள், அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.
மனதும் உடலும் இதற்கு மேலும் போரடத் தெம்பில்லை என கடைசி சொட்டு நம்பிக்கையைக் கைவிட, இவள் மொத்தமாய் உடைந்து போனாள். முகத்தை உள்ளங்கையில் புதைத்தவளின் கண்ணீர் பிசுபிசுத்துப் போய் உடலையும் சேர்த்து நனைக்க, உள்ளம் தந்தையின் பேச்சில் மொத்தமாய் உறைந்துவிட்டிருந்தது.
இந்நொடி கூட நடந்த நிகழ்வு கனவாய் இருக்கக் கூடாதோ என்ற எண்ணம் தோன்றியதும், நெஞ்சம் விம்மியது. ஏனோ வாழ்வே வெறுத்த நிலை. வேண்டாம்! குமரன் எனக்கு வேண்டாம் என மூளை உருப்போட மனம் அந்த வார்த்தையில் அனலிடைப்பட்ட புழுவைப் போல துடித்துப் போனது.
விழிகளில் மீண்டும் மீண்டும் நீர் தளும்பி நிற்க, உவர் நீர் வெளியேறிக் கொண்டேயிருந்தது. கதவில் சாய்ந்து விழிகளை மூடினாள் மனோஹரி. அந்த விழிகளுக்குள் வந்து நின்றான் குமரன், திருக்குமரன். பதினேழு வயதில் வேலைக்கு வரும்போது அவனிடமிருந்த உறுதியும், உழைப்பும் அந்த வயதில் இவளை வியக்க வைத்திருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தும் நினைவை நிறைக்க, எந்தக் கணத்தில் அவன் மீதான பிடித்தம் இந்தளவிற்கு அவளை நிலைக்க வைத்தது என பெண்ணே அறியாள்.
அவளறிந்து வாழ்க்கையில் முதல்முறையாக இந்தளவிற்கு காயம்பட்டு நிற்கிறாள். ஏனோ நேசம் வைத்த மனிதனே அதை நெருப்பிலிட்டுப் பொசுக்கியதை மகளாக அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடல் அந்த நெருப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகித்துக் கொண்டிருந்தது.
“மனோ, கதவைத் திற டி!” ராதாமணியின் குரலில் பயம் அப்பிக்கிடந்தது. மகள் ஏதேனும் செய்து கொள்வாளோ எனப் பதைபதைப்புடன் அவர் வாயிலில் நின்றார். சில நிமிடங்கள் கடந்தும் அவளிடம் பதிலில்லை எனவும், தாய்க்கு வியர்க்க ஆரம்பித்தது.
“மனோ, எதுனாலும் பேசிக்கலாம் டி. அப்பாகிட்டே நான் பேசுறேன். கதவைத் தொறடி…” கலங்கியிருந்த அவரின் குரல் இவளுக்குப் புறத்தூண்டல் உறைக்கச் செய்தது.
“ம்மா… கவலைப்படாத. செத்துப் போற அளவுக்கு உன் பொண்ணு கோழையில்லை!” என சுவாதீனமாய் பேசினாள்.
“கதவைத் தொற டி நீ முதல்ல. உள்ள வந்து பேசிக்கலாம்!” அவர் பல்லைக் கடிக்க, “ப்ளிஸ் மா, அப்புறம் பேசலாம்!” என்றாள் அழுகையான குரலில். சில நிமிடங்கள் அமைதியாக கழிய, ராதாமணி கணவரிடம் பேசச் சென்றார்.
மகள் அழுத அழுகை ரங்காவை அசைத்திருந்தாலும், ஜாதி என்னும் களைக்க முடியாத களை அவரை ஆட்டுவித்திருந்தது. கல் போல சமைந்திருந்தார் மனிதர்.
“என்னங்க, ஏன்ங்க இப்படி பேசுறீங்க… அவ அழுதுட்டே ரூம்க்குள்ள உக்கார்ந்து இருக்கா. ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சுக்கிடப் போறாங்க. பயமா இருக்கு… வேண்டாங்க! பெத்த பொண்ணோட சாபத்தை சம்பாரிக்காதீங்க. ஒத்தப் பொண்ணுன்னு அவ்வளோ செல்லம் கொடுத்து வளர்த்தது இப்படி அவளைப் பார்க்கவா? என்னால அவ பேசுறதைக் காது கொடுத்துக் கேட்க முடியலைங்க. ஜாதியைப் பிடிச்சிட்டு தொங்கி, புள்ளையைப் பறிக்கொடுக்க வச்சுடாதீங்க. யார் என்ன பேசுனாலும், நம்ம பொண்ணு நமக்கு முக்கியம். பேசாம
அவளை அந்தப் பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்ங்க!” முதல் முறையாக ராதாமணி கணவர் முடிவை எதிர்த்திருந்தார். மகளின் அழுகையும் உடைந்த தோற்றமும் அந்தப் பெண்ணைத் துடித்துப் போகச் செய்திருந்தது. ராதாவை நிமிர்ந்து பார்த்த ரங்காவின் பார்வையில் கண்டனமிருந்தது. எதையும் அவர் பேசவில்லை. அறைக்குள் நுழைந்துவிட்டார்.
விரல்கள் நடுங்க அலைபேசியைக் கையில் வைத்திருந்தாள் மனோ. குமரன் இலக்கத்தை பத்து முறைக்கும் மேல் தட்டச்சு செய்து அழித்து என மனம் அந்நொடி செத்து செத்துப் பிழைத்துப் போக, அழைத்துவிட்டாள். ஒரே மனதாக அழைத்துவிட்டாள் குமரனுக்கு.
‘அழைப்பை ஏற்று விடாதே! நிமிடத்தில் எனக்கும் உனக்குமான தொடர்பு அறுந்து விழப் போகிறது!’ என உள்ளம் கத்தி இரைச்சலிட, உடையவனோ ஏற்றுவிட்டான் அழைப்பை. இவள் பேச்சிழந்து, செயலிழந்து போனாள்.
“சொல்லு!” குமரன் குரல் கேட்டதும் பொல பொலவென விழிகளில் நீர் சொட்டியது. குரல் அடைத்துப் போக, சத்தியமாய் நீ வேண்டாம் என சொல்லும் போது இவளது மனமும் அதனோடு இணைந்து இறந்திருக்கும் என்பது உறுதி. உதட்டைக் கடித்து கேவலைக் கட்டுப்படுத்த முயன்றாள். நடந்த அனைத்தையும் கொட்டி கவிழ்த்திவிடு என மனம் கதறியது.
“மனோ!” அவன் வாயிலிருந்து தன் பெயரைக் கேட்டதும் இவளிடம் மெல்லிய விசும்பல். அது குமரனை அடைந்ததும் அவன் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து நொடியில் எழுந்துவிட்டான். சிறிது சிறிதாக இவளது அழுகைப் பெரிதாகியது.
“மனோ, என்னாச்சு டி… எதுக்கு இப்போ அழற…” இவளது அழுகையில் அவன் பல்லைக் கடித்தான். மனம் பரிதவித்துப் போனது அந்த அழுகையிலும் விசும்பலிலும்.
“மனோ… அழாம என்ன நடந்ததுன்னு சொல்ற!” அதட்டலிட்டவனின் ஒரு கரம் அலைபேசியை செவிக்கும் தோள்பட்டைக்கும் இடையில் பொறுத்த, வலதுகை சாவியை வாகனத்தில் பொறுத்தியது. நொடியில் அதை உயிர்பித்து அவளது வீட்டை நோக்கிப் பறந்தான். இந்தப் பெண்ணின் அழுகை அவனை அதிகமாகப் பாதித்து தொலைத்தது.
அழுதுகொண்டிருந்தவள், திக்கித் திணறி, “எனக்கு நீங்க… நீங்க வேணாம்!” என்றிருந்தாள். அந்த வார்த்தையைக் கூறும் போதே பாதி செத்துவிட்டாள். குபுகுபுவென வழிந்த நீர் முகத்தை நனைத்தன. விசும்பியபடியே சரியாய் தெளிவில்லாதக் குரலில் கேட்ட மனோவின் குரலில் இவனுக்கு சர்வமும் ஆட்டம் கண்டது. அந்த வார்த்தையை விட, அதைக் கூறும்போது அவளது வலியும் வேதனையும் இவனறிந்ததும், கோபம் பொங்கியது.
“மனோ, முதல்ல அழுறதை நிறுத்திட்டு, என்ன நடந்ததுன்னு சொல்ற…” சொல்லியே ஆக வேண்டும் என்றொரு தொனி அது. இவளுக்குத் தொண்டை அடைத்துப் போக, “எனக்கு நீங்க வேணாம்! இந்தக் குமரன் வேணாம்! என்னை மன்னிச்சுடுங்க!” எனத் தேம்பியழுதவளின் கண்ணீர் இவனது நிம்மதியைப் பறித்திருந்தது. பாடாய் படுத்தினாள் இந்தப் பெண் மனோஹரி.
“வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்!” குமரன் பல்லிடுக்கில் வார்த்தை அவளை சமாதானம் செய்ய விழைய, “வராதீங்க… நீங்க இங்க வரக்கூடாது!” என அழுத்தமாய்க் கூறியபடி அழைப்பைத் துண்டித்தவள், அலைபேசியைத் தூக்கியெறிந்திருந்தாள். அது தூள் தூளாகத் சிதறிப் போக, அது போல நடந்த நிகழ்வுகள் சிதறிப் போகக் கூடாதா? என ஏங்கி அழ ஆரம்பித்தாள் மனோஹரி.
அவளின் செயலில் வார்த்தையில் இவனுக்கு கிறுகிறுத்துப் போக, நேரில் சென்று கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் என்ற ஆத்திரத்துடன் அவளை சந்திக்கச் சென்றான்.
பேசிவிட்டாள்! மனதில் இத்தனை நேரம் உருப்போட்டிருந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து பேசிவிட்டாள். வேண்டுமென்று இத்தனை நாட்கள் போராடியப் போராட்டத்தில் தோல்வியைத் தழுவியிருந்தவளின் ஊனும் உயிரும் அந்த வார்த்தையோடு உறைந்திருந்திருந்தது. என்ன செய்வது எனத் தெரியாது பித்துப் பிடித்ததைப் போல அமர்ந்திருந்தாள் மனோஹரி.
புறத்தூண்டல் உரைக்காது போனது. ரங்கராஜனின் பேச்சு, இவள் குமரனிடம் பேசிய பேச்சுக்கள் என அடுத்தடுத்து கண்முன்னே வந்து விழுந்தது. சிலை போல சமைந்து போன மனோவிற்கு, உலகம் காலுக்கு கீழே நழுவியிருந்தது. மனம் மட்டும் ஆயிரம் முறை குமரனிடம் மன்னிப்பை யாசிக்க, அவனே சில நிமிடங்களில் வந்து நின்றிருந்தான்.
வீட்டிற்குள்ளே நுழைந்தவன் யாரையும் கண்டு கொள்ளாது மனோ அறையின் கதவை ஓங்கித் தட்டினான்.
“மனோ, கதவைத் தொறடி!” வார்த்தையில் அனல் தெறித்தது. அந்தக் குரலில் இவளுக்குப் பயபந்து அடிவயிற்றிலிருந்து சுழன்றது. அவனை எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் நின்றிருந்த விழி நீர் மீண்டும் உடைப்பெடுக்க, உதட்டைக் கடித்து அதை அடக்கினாள்.
‘வருவான்! குமரன் வருவான்!’ என்று நம்பிக்கைக்கொண்ட மனதை ஏமாற்றாது அவளை சமீபித்திருந்தான் திருக்குமரன்.
“மனோ, இப்போ நீ கதவைத் தொறக்கலை, நானே உடைச்சு உள்ள வருவேன்!” இவனது குரலில் ராதாமணியும் திவாகரும் வெளியே வந்துவிட்டிருந்தனர். ரங்கராஜன் சற்றுமுன்னர்தான் வெளியே சென்றிருந்தார்.
“குமரா…” திவாகர் அருகே வந்துவிட்டான். ராதா என்னப் பேசுவது எனத் தெரியாது பார்வையாளராகிப் போனார்.
“மனோ…” இவன் பொறுமைக் கடக்க, எழுந்து வந்து கதவைத் திறந்த மனோஹரி அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏனோ அந்த முகத்தைப் பார்த்தால், தன் முடிவு தூள் தூளாவிடுமோ என்ற பயம் நெஞ்சைக் கவ்வியது. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி தலையைக் குனிந்து கொண்டாள்.
“திவாகர், நான் உங்க தங்கச்சிக்கிட்ட பேசிட்டு வரேன்!” உள்ளே நுழைய முற்பட்டவனை தடுத்து நிறுத்திய குமரன் அறைக்குள் சென்று கதவை அடைத்திருந்தான்.
“ஃபோன்ல சொன்னதை இப்போ சொல்லு டி!” அவன் பல்லிடுக்கில் வார்த்தைகள் வந்து விழுந்தன. அதில் உதட்டைக் கடித்த மனோஹரி அவன் முகத்தைப் பார்க்காது பக்கவாட்டில் பார்வையைப் பதித்தாள்.
“எனக்கு நீங்க வேணாம்!” குரல் அடைக்கக் கூறியவளின் விழிகளில் நீர் சரசரவென வழிந்தது.
“என் முகத்தை பார்த்து சொல்லு டி!” குமரன் கோபத்தில் இரைந்தான்.
“முடியாது! போங்க! வெளிய போங்க முதல்ல… உங்களை வர வேண்டாம்னு சொன்னேன் இல்ல. ஏன் வந்தீங்க? இது நீங்க வேலை பார்த்த முதலாளியோட வீடில்ல. இந்த மனோவோட அப்பா வீடு. வெளியே போங்க!” எனப் பலம் அனைத்தையும் திரட்டிக் கத்தியவளின் குரல் மொத்தமாய் உடைந்திருந்தது.
‘போடா! போ… என் கண்முன்னே வராதே! நீ வேணாம்!’ மனம் கூச்சலிட, கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின.
சற்று நேரம் முன்பு தான் பார்த்த பெண் இவள் தானா? என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு ஓய்ந்த தோற்றத்திலிருந்தவளைப் பார்த்து இவனுக்கு மனம் பிசைந்தது.
கோபத்தில் அவளது தாடையைப் பிடித்தழுத்தி முகம் பார்க்க வைத்தவனின் விழிகள் நீர் தளும்ப, தவிப்பாய்ப் பார்த்தாள். கடைசியாய் அவனைப் பார்ப்பது போலொரு பார்வையை மனோஹரி கொடுக்க, “என்னாச்சு? உங்கப்பா என்ன சொன்னாரு?” என அழுத்தமாய் வினவினான் குமரன்.
அவன் கையைத் தட்டிவிட முயன்றவள், “எனக்கு நீங்க வேணாம்!” என்றாள் கலங்கிப் போய் குரல் அடைக்க.
“என்னாச்சுன்னு உன்னைக் கேட்டேன்!” என்றவனுக்கு சத்தியமாய் இவளிடம் பதிலில்லை. தந்தை கூறியதை உரைத்தால் உடைந்து விடுவானே இந்தக் குமரன் என நினைத்தொருபுறம் அழுகை வர, அவனுக்காக மனம் தவித்தது. எந்தக் காலத்திலும் தந்தையின் பேச்சு இவனை எட்டிவிடக் கூடாது என எதிர்காலத்திற்கும் சேர்த்து இப்போதே கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.
“சொல்ல மாட்டல்ல டி நீ?” குமரன் கோபத்தில் பல்லைக் கடிக்க, ‘மாட்டேன்…’ என மனோ உறுதியாய் நின்றாள்.
“நான் வேணாமா உனக்கு?” என்றவன் விழிகளையும் முகத்தையும் பார்த்தவளுக்கு மீண்டுமொரு அந்த வார்த்தையை உரைக்க சத்தியமாய் திராணியில்லை. தவிப்பாய், அதைவிட பாவமாய் தன்னைப் பார்த்தவளை என்ன செய்தால் தகும் எனப் பார்த்தான் குமரன்.
அவளை உதறித் தள்ளியவன், “இப்போ இந்த நிமிஷம் நீ முடிவு பண்ற… உனக்கு உன் அப்பா வேணுமா? இல்லை நான் வேணுமான்னு. நான் வேணும்னா, என் கூட வந்துடு. அப்படியில்லை, நான் வேணாம்னா, எப்பவுமே நான் உனக்குக் கிடைக்க மாட்டேன்!” என்றவன் குரலில் என்ன பேச எனத் தெரியாது மனோஹரி ஸ்தம்பித்துப் போனாள்.
“சொல்லு டி!” கர்ஜனையாய் ஒலித்தக் குரலில், இவள் உதட்டைக் கடித்து, தலையை இடம் வலமாக முடியாது என்பது போல அசைத்தாள்.
‘ஏற்கனவே செத்துவிட்டேனடா! மறுபடியும் நீயும் என்னைக் கொன்றுவிடாதே!’ எனப் பார்த்தவளின் பார்வை அவனிடம் இறைஞ்சி மண்டியிட்டது.
‘சொல்லமாட்டேன். போய்விடு, இங்கிருந்து அகன்றுவிடு!’ என மனதில் ஜெபித்தவளின் வார்த்தைகள் எதிரிலிருந்தவனை அசைக்கவில்லை. உறுதியாய் நின்றவனைப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, அவனைத் துடித்துப் போய் பார்த்தாள் மனோ. பதில் சொல்லியே ஆக வேண்டும் என அழுத்தமாய் நின்றிருந்தான் குமரன்.