குமரன் முகத்தை அனைவரும் நொடி நேரத்திற்கும் அதிகமாகப் பார்க்க, அவனிடம் பதிலில்லை. யாருக்கு வந்த விருந்தோ என்றொரு பாவனையில் நின்றிருந்தான். அதில் திவாகருக்கு சற்றே எரிச்சல் படர்ந்தது.
‘எல்லாம் சரியாய்க் கூடிவரும் நேரத்தில் இவன் கெடுத்து விடுவானோ?’ என எண்ணிக் குமரனைப் பார்த்தான்.
“என்ன குமரா, எதுவும் பதில் சொல்லமாட்ற. உன் விருப்பத்தை சொல்லு டா!” சிந்து மகனது புறங்கையைப் பிடித்துக் கேட்கவும், அவரை ஒரு நொடிகள் பார்த்துப் பின் பெருமூச்சை இழுத்துவிட்டான்.
“எனக்கு மனோ கூட கொஞ்சம் பேசணும் மா…” குமரன் கூறவும், “என்ன… என்ன பேசப் போற குமரா? அதான் ஏற்கனவே நிறைய பேசிட்டீங்களே!” ராதா குரலில் பதற்றம் அப்பிக் கிடந்தது.
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்கக் பார்க்கிறானே என்ற பதைபதைப்புடன் அவர் அவனைப் பார்க்க, “என்ன குமரா?” என திவாகர் அவனருகே விரைந்தான்.
“ஒன்னும் இல்ல திவா. நீங்க கல்யாண ஏற்பாட்டை பண்ணுங்க. நான் அவகிட்டே பெர்சனலா பேசணும்!” என்று குமரன் அழுத்திக் கூற, மற்றவர்களுக்கு அவன் சம்மததித்தே பெரிதாய் இருக்க, மற்றைய பேச்சை அப்படியே விட்டுவிட்டனர்.
“அதான் தம்பி சம்மதம் சொல்லியாச்சு. அடுத்து எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிக்கலாம் மாமா!” என்று கோவிந்தனிடம் பேசிய லோகேஷ், “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மா. ஆளும் பேரும் இவ்வளோ பேர் இருக்கோம். எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுடலாம்!” மூத்த மருமகனாய் அவன் பொறுப்பாய் உரைக்கவும், சிந்து தலையை அசைத்தார். பின்னர் அவர் அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுக்க, குடித்துவிட்டு வந்திருந்தவர்கள் விடைபெற்றனர்.
மனோஹரி காலையில் பெரியவர்கள் கிளம்பியதிலிருந்து வாயிலையேதான் பார்த்திருந்தாள். குமரனின் கோபம் அவளறிந்ததே. அவனுக்கு வேண்டாம் என்றால், கடைசிவரை வேண்டாம் என்னும் உறுதியானவன். அதற்கு சாட்சி தந்தையையும் அவரது குடும்பத்தையும் உதறிவிட்டு வந்ததே. அப்படிபட்டவன் அன்று அறையே எதிரொலிக்கும் வண்ணம் கோபத்தில் கத்திவிட்டு சென்றிருக்க, இன்றைய அவனின் பேச்சு எப்படியிருக்கும் என அவளால் யூகிக்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே குமரன் அவளுக்கொரு புதிர் பெட்டகம்தான். மனம் முழுவதும் பதட்டமிருந்தாலும் அதை வெளியே காண்பிக்காது ஹரியின் குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்து தட்டிக் கொடுத்தாள். அவன் உறங்குவேனா என்பது போல அக்கும் இங்கும் நெளிந்து எதையோ பேச முயன்று கொண்டிருந்தான்.
“அக்கா, எல்லாரும் சீக்கிரம் வந்துடுவாங்க. நீ ஏன் இவ்ளோ நெவர்ஸா இருக்க?” என அக்ஷயா அவளது பார்வைப் போகும் திசையறிந்து நெற்றியோரம் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டவாறே கூறினாள். பதிலில்லாத புன்னகை மட்டும் இவளிடம்.
சிறிது நேரத்திலே பெரியவர்கள் அனைவரும் வீடு திரும்பியிருந்தனர். அவர்களுக்குள்ளே ஆயிரம் சலசலப்பு. திருமணம் எங்கே வைப்பது, என்றைக்கு வைப்பது என பேச்சு அதையொட்டியே இருந்தது. அனைவரது முகத்திலிருந்த மகிழ்ச்சி அவளுக்குச் செய்தியை உரைத்தாலும் அங்கே என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள மனம் பரபரத்தது. யாரிடம் கேட்பது எனத் தெரியாது மனோ பெரியவர்களின் முகத்தையே பார்த்திருக்க, திவாகர் அவளருகே விரைந்தான்.
அவளது முகத்திலிருந்த பதட்டத்தைக் கண்டு கொண்டவனாக, “மனோ, ரிலாக்ஸ். அங்க எந்தப் பிராப்ளமும் இல்லை. எல்லாம் ஓகே, குமரன் உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னான். நாளைக்கு அவனே உன்னைப் பிக்கப் பண்ண வருவான்னு நினைக்கிறேன்!” என்று அவன் கூறவும், இவளது முகம் யோசனையாய் சுருங்கியது.
“என்ன பேசணுமாம்?” மனோ குழம்பியக் குரலில் வினவ, “நோ ஐடியா! எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் பொறுமையா பேசுங்க. இப்போதான் எல்லாம் சரியாகியிருக்கு. நீங்களே அதை கெடுத்துக்காதீங்க!” என்று எச்சரிக்கையான குரலில் கூறி அவன் அகல, மனோ சிந்தனையில் ஆழ்ந்து போனாள்.
ராதா அன்று மாலையே என்றைக்குத் திருமணம் வைக்கலாம் என தேதியைக் குறித்து, பத்திரிக்கைக்குப் பெயர் பட்டியல் வரை தயார் செய்துவிட்டார். கோவிந்தனும் வனிதாவும் இத்தனை விரைவில் முடித்து விட முடியுமா என்று சந்தேகமாகக் கேட்க, “அதெல்லாம் முடிச்சுடலாம் தம்பி. ஆளுக்கொரு வேலையா செஞ்சா போதும். அதான் ரெண்டு வாரம் இருக்குல்ல?” என்று ஊக்கிப் பேசவும், மற்றவர்களுக்கும் நல்லபடியாக திருமணம் முடியும் என்ற நம்பிக்கைப் பிறக்க, நாளையிலிருந்தே திருமண வேலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தனர்.
மறுநாள் காலை மனோஹரி மனதில் படர்ந்த யோசனையுடன் கிளம்பி நிற்க, திவாகர் கூறியது போல குமரன் அவளை அழைத்துச் செல்ல வந்துவிட்டான்.
“ம்மா, நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன் மா!” என்று இவள் கூற, “சரி மனோ, அடுத்த வாரத்துல இருந்து லீவு கேட்டு வச்சிடு. அப்படித் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னா, வேலையைவிட்ரு. கல்யாணம் முடிஞ்சு அப்புறம் பார்த்துக்கலாம்!” தாய் பேசிய பேச்சுக்களை செவி உணர்ந்தாலும் சிந்தையில் பதியவில்லை. தலையை மட்டும் அசைத்து மனோ குமரனுடைய வாகனத்தில் அமரவும் இருவரும் கிளம்பினர். அவளின் கை அவனது தோளில்தானிருந்தன. அன்றைய முறைப்பிற்கு பின்னே இந்தத் தொடுதல் இயல்பான ஒன்றாய் மாறிப்போயிருந்தது.
வயல்காட்டுப் பகுதியைக் கடந்து அந்த ஒற்றையடிப் பாதையில் குமரன் வாகனத்தை நிறுத்த, மனோ இறங்கி அவன் முகத்தைப் பார்த்தாள். அவனும் வண்டியை ஓரமாய் நிறுத்தி அவளைப் பார்த்தவாறே கைக்கட்டி நின்றான். சில நொடிகள் தன்னை அரித்தப் பார்வையில் புருவத்தை சுருக்கியவள், “என்ன பேசணும்?” என மொழிந்தாள்.
அவளிடமிருந்த பார்வையை அகற்றி சுற்றிலும் பார்வையை மெதுவாய் அலையவிட்டவனிடம் வெகுவாய் அலட்சியமிருந்ததோ என மனோ அவனைக் குறுகுறுவென பார்த்தாள். மூளை அவனது பாவனைகளை உள்வாங்க, சாவகாசமாக அவள்புறம் பார்வையை நகர்த்திய குமரன், “பைனலி உங்கப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாரு போல?” எனக் கேட்டவனின் குரலில் ஏக நக்கல்.
இத்தனை நேரம் என்னப் பேசப் போகிறான் இவன் என்ற முனைப்பிலிருந்த மனோவிற்கு குமரனுடைய இந்தப் பேச்சு சுருக்கென்று தைக்க, விழிகள் ஒரு நொடி கலங்கியது. அதை முகத்தில் காண்பிக்க விரும்பாதவளின் உடல் மொழி இறுக, அவனை நிமிர்ந்து முறைத்தாள்.
‘இதைக் கேட்கத்தான் என்னை அழைத்து வந்தாயா?’ என்ற கேள்வியை முகம் தாங்கி நிற்க, உன்னுடைய பேச்சு என்னைப் பாதிக்கவில்லை என்றொரு அலட்சிய பாவம் அவளிடம் வந்திருந்தது.
அதில் சீண்டப்பட்ட குமரன்,
“அதுக்கு மட்டுமில்ல. இப்போ உங்கப்பா ஒத்துக்கலைனாலும், கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு, அப்புறம் மேடையில வந்து வேணாம்னு சொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என எள்ளலாகக் கேட்டவனின் குரலில் அவனைத் தீப்பார்வை பார்த்தாள். குமரன் குரல் முழுவதும் கோபம்தான். அன்று அத்தனைக் கூறியும் தன்னுடன் வர மறுத்தவளின் மீதிருந்தக் கோபத்தை வார்த்தைகளில் கொட்டியவனை அனல் தெறிக்கப் பார்த்தாள் மனோ.
“உன்னைத்தான் கேட்குறேன் மனோ, பதில் சொல்லு!” இவன் அதட்டலாய்க் கேட்க,
“என்ன பதில் சொல்லணும்?” மனோ பல்லைக் கடித்தாள்.
“எந்த சிட்சுவேஷன்லயும் என்னைவிட்டுப் போக மாட்டேன்னு சொல்லு. உங்கப்பாவுக்காக என்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு சொல்லு! நான் வேணும்னு சொல்லு!” என்றவன் குரல், ‘இவளுக்கு வேண்டும் என்றால் நான் வேண்டும். இவளுக்கு வேண்டாம், இவள் அப்பன் சம்மதிக்கவில்லை என்றால் தூக்கியெறிந்து விடுவாளோ?’ என்ற கோபம் கனன்றது. எப்படி அன்று தன்னை வேண்டாம் என மனோஹரி நிராகரிக்கலாம் என்ற எண்ணம் இத்தனை நாட்கள் மனதில் வைத்து அழுத்தியதில் அவனை அத்தனைப் பாடுபடுத்தியிருக்க, அது கொடுத்த சினத்தில்தான் இவன் வார்த்தைகளை திராவகமாக வீசினான். பார்வையில் கூட கொஞ்சம் உஷ்ணமிருந்தன.
‘நீங்க வேணாம்! எனக்கு நீங்க வேணாம்!’ எனத் திக்கித் திணறி முகம் பார்க்காது கூறி தான் அழைத்தப் போது மாட்டேன் என மறுத்தவளின் மீதிருந்தக் கோபத்தை இப்போது குரலில் கொட்டினான்.
ஏனோ தந்தையைக் காரணம் காட்டி தன்னைவிட்டுக் கொடுத்தவளை அத்தனை எளிதாக மனம் மன்னிக்கத் தயாராக இல்லை.
குமரன் பேச்சில் பாவனையில் அவனை உருத்துவிழித்தவள், “என்னை இத்தனை வருஷம் பெத்து வளர்த்து இன்னைக்கு வரைக்கும் நல்லா பார்த்துக்குற அந்த மனுஷனை எப்படி தூக்கிப் போட்டுட்டு வர சொல்றீங்க? ஹம்ம்… அன்னைக்கு நான் சொன்னதுதான். என் அப்பாவுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும். அதுக்கு இடையில நீங்க வரக் கூடாது. நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியம்!” என்றாள் அழுத்தமாய்.
“என் அப்பாவைப் பத்தி உங்களுக்கென்ன தெரியும். ஒரு மகளா இன்னைக்கு வரைக்கும் என் விஷயத்துல எந்தக் குறையும் அவர் வச்சதில்லை. எல்லா அப்பாவும் உங்கப்பா மாதிரி இருக்க மாட்டாங்க! பெத்த புள்ளை பதினேழு வயசுல வெளியப் போய்க் கஷ்டப்பட்டதைப் பார்த்தும் சும்மா இருக்க!” என்றவளின் கன்னம் தீயாய் எரிய, ஒரு நொடி மனோஹரி ஸ்தம்பித்துப் போனாள். குமரன் கோபத்தைக் கட்டுப்படுத்தாது கைநீட்டியிருந்தான்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்துவிட்டாளே என்று கண்மண் தெரியாது கோபம் பிரவாகமாகப் பொங்க, இத்தனை நாட்கள் இழுத்துப் பிடித்த பொறுமை இன்று காற்றில் கரைந்திருந்தது. பொது வீதி என்றும் பாராது மனோவை அடித்துவிட்டான்.
அவன் அடித்த அடியிலே மனோஹரி சமைந்து போனாள். சில கணங்கள் பிடித்தது அவளுக்கு புறத்தூண்டல் உறைக்க. அவன் அடித்த அடியின் வீரியத்தில் புசுபுசுவென கன்னம் வீங்க, விழிகளில் நீர் உருண்டு திரண்டு நிற்க, அதை வெளியே வராது இமை சிமிட்டி அவனைப் பார்த்தவளின் பார்வையில் உஷ்ணம் பொங்கியது. ‘எப்படி நீ என்னைக் கைநீட்டி அடிக்கலாம்?’ என ஆதங்கமும் கோபமுமாய் அவனைப் பார்த்தாள்.
“ஏன் நீங்க என் அப்பாவைப் பத்தி பேசும்போது, நான் உங்கக் குடும்பத்தைப் பத்தி பேசக் கூடாதா? பேசுவேன்!” மனோஹரி அவன் கொடுத்த அடியிலிருந்து மீண்டு சீறினாள். எந்த எண்ணத்தில் இவன் என் மீது கைநீட்டினான் என்ற கோபம் தொண்டையை அடைத்தது.
“ச்சு… போடி!” என்றவன் கோபத்தைக் கட்டுப்படுத்தி தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு நகர, மனோ போகும் அவனை கோபமாய்ப் பார்த்தாள். இத்தனை நேரம் இமையைத் தொட்டுக் கொண்டிருந்த நீர் இப்போது கீழிமையில் படர்ந்து கன்னத்தை நனைக்க ஆரம்பித்தன.
பாதி தூரம் சென்ற குமரன் இப்போது நிதானத்திற்கு வந்திருந்தான். கோபத்தில் கை நீட்டியது தவறு எனப் புரிந்தாலும், அவள் பேசிய பேச்சுக்கள் இன்னுமே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘என்னைப் பற்றி என்ன தெரியும் இவளுக்கு? அத்தனை எளிதில் வார்த்தைகளை வீசிவிட்டாளே!’ என்ற கோபம் தணியவில்லை. ஆனாலும் அவளை அப்படியே சாலையில்விட்டுச் செல்ல மனமும் இல்லை. ஒற்றையடிப் பாதைவேறு. நிதானமனம் சூழ்நிலலயை எடுத்துரைக்க, புத்திக்கு கொஞ்சமாய் தன் செயலின் வீரியம் புரிந்தது.
‘இவளை விடவும் முடியாது அருகில் வைத்துக் கொள்ளவும் முடியாது போல!’ மனதிற்குள் பல்லைக் கடித்தவன் மீண்டும் மனோஹரியை நோக்கிச் செல்ல, அதே இடத்தில் அசையாது நின்றிருந்தாள்.
அவனைக் கண்டதும் ஏனோ இன்னும் விழி நீர் பொங்க, முகத்தை வேறுபுறம் திருப்பினாள் மனோ. குமரன் சில நொடிகள் அவளது வீங்கியிருந்த கன்னத்தை வெறித்தவன், “வண்டில ஏறுடி!” என்றான் அதட்டலாய்.
அந்தப் பேச்சு தன்னை அடையவில்லை என்பது போல அவள் நிற்க, “மனோ, உன்கிட்டதான் பேசுறேன்!” என்றான் குமரன். குரல் உயர்ந்திருந்தது.
“ஏன், மறுபடியும் கூட்டீட்டுப் போய் இந்தக் கன்னத்துலயும் அடிக்கிறதுக்கா?” இவள் குரல் சீறலாய் வந்தது. இன்னுமே அவன் அடித்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குமரன் எதுவும் பேசாது அவளை வெறிக்க,
“எந்த எண்ணத்துல நீங்க கைநீட்டி அடிச்சீங்க? நீங்கதான் வேணும்னு பின்னாடியே வர்றதால வந்த எளக்காரமா? இல்ல, என்னைப் பெத்த அப்பா, அம்மா உங்க முன்னாடியே என்னை அடிச்சதால வந்த அலட்சியமா? எவ்வளோ சொல்லியும் நீங்கதான் வேணும்னு நான் வந்தேன் இல்ல? அதுக்கு நீங்க கொடுத்தப் பரிசு ரொம்ப நல்லா இருக்கு!” என்ற மனோஹரியின் குரல் கமறிப் போனது. ஏனோ குமரன் கைநீட்டி அடித்ததை அவளால் இந்நொடி கூட நம்ப இயலவில்லை. கன்னத்தின் காயத்தை விட மனதில் அப்படியொரு வலி எழுந்தது.
‘ஆண் என்ற அகம்பாவத்தில் கை நீட்டி விட்டானா?’ என மூளை விழித்தெழுந்து கேள்வியெழுப்பியது. அந்த கசங்கிய முகத்தையும் பாவனையும் உளவாங்கிய குமரன், “நீ பேசுனது சரியா மனோ, என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசணும்…” குமரன் அழுத்திக் கூற, “ஓஹோ… அப்போ என் அப்பாவை நீங்கப் பேசுனப்போ நல்லா யோசிச்சுதானே பேசுனீங்க? நான்தான் தப்பா பேசிட்டேன் இல்ல?” எக்களிப்புடன் கேட்டாள்.
குமரன் அதில் அவளை முறைக்க,
‘போடா… போ!’ என்றொரு பார்வை பார்த்தவள், நடக்க ஆரம்பித்தாள். ஒற்றையடிப் பாதையைக் கடந்து பிரதான சாலையில் நுழைந்தவள், ஒரு தானியிலேறி மருத்துவமனைக்குச் சென்றாள். அவளையே பார்த்திருந்தவன் பெருமூச்செறிந்துவிட்டு கிளம்பிச் சென்றான்.
வேலைக்குச் செல்லும் மனநிலை முற்றிலும் இல்லையெனினும் இந்தக் காயத்தோடு வீடு சென்றால் என்ன ஆகிற்று என அத்தனைக் கேள்வி வரும். அதையெல்லாம் சமாளிக்க முடியாது. அதுவுமின்றி கோவிந்தனுக்கு ஆண்பிள்ளைகள் பெண்களின் மீது கைநீட்டுவது அறவே பிடிக்காது. ஹரி சிறுவயதில் இவளை அடித்தால் கூட, அவனை திட்டுவார். அப்படி இருக்கையில் கன்னத்தில் காயத்தோடு சென்று நின்றால், திருமணத்தை நிறுத்தக் கூட தயங்க மாட்டார் எனத் தோன்ற, வேறு வழியின்றி மருத்துவமனைக்கு விரைந்திருந்தாள்.
கன்னத்தில் இருந்த தடயத்தை பனிக்கட்டியை வைத்து ஓரளவிற்கு சரிசெய்து மாலை வீட்டிற்கு சென்றாள். கல்யாண பரபரப்பில் ஒருவரும் இவளைக் கண்டு கொள்ளாது விட்டுவிட, நிம்மதி பிறந்தது. அப்படியும் அக்ஷயா கவனித்துவிட்டு என்னவென வினவ, இவள் சமாளித்துவிட்டாள்.
ராதாமணி மகளின் திருமண ஏற்பாட்டில் அத்தனை முனைப்புடன் இருந்தார். பத்திரிக்கை அச்சடிக்க கொடுப்பது, உடை, அணிகலன்கள் எடுப்பது என நாட்கள் உருண்டோடின.
இருவீட்டினருக்கும் சேர்த்து ஒரே பத்திரிக்கை அடித்துவிட, திவாகர் சென்று சிந்துவிடம் பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு வந்தான்.
பின்னர் இருவீட்டினரும் திருமணத்திற்கு உறவுக்காரர்களை அழைக்கத் தொடங்கினர். கோவிந்தனும் வனிதாவும் ஒரு பக்க உறவினரை அழைக்க, ராதாவும் திவாகரும் மற்ற சாரரை அழைக்கச் சென்றனர்.
மைதிலியும் லோகேஷூம் திருமணத்திற்கு மண்டபம் பார்ப்பது, சமையலுக்கு ஆட்களை நியமிப்பது என தங்களுக்கென்று வேலையை ஒதுக்கிக் கொண்டனர். ஹரி திவாகருடன் இணைந்து அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தான். வேலையைப் பிரித்துக் கொண்டதில் ஓரளவிற்கு அது எளிமையாக இருக்க, அனைத்தும் சிறப்பாய் நடந்து கொண்டிருந்தன.
மனோஹரி மறுவாரத்திலிருந்து மருத்துவமனையில் விடுப்பைக் கேட்டு வாங்கியிருந்தாள். அவளது திருமண விஷயம் கேள்விப்பட்டு சக ஊழியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, புன்னகையுடன் நன்றி கூறி விடை பெற்றாள். திருமணம் முடிந்து வேலைக்கு வருவது போல பத்து நாட்களுக்கு மேலே விடுப்பைக் கேட்டு வாங்கியிருந்தாள். வீட்டில் மைதிலியின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, செபாவுடன் பேச என அவளுக்கும் நேரம் பறந்தது.
அன்றைய சந்திப்பிற்கு பிறகு இருவரும் பார்த்துக்கொள்ளவே இல்லை. அமைந்த சந்தர்பத்தை கூட இவளாகத் தட்டிவிட்டிருந்தாள். குமரன் அடித்த அடியின் காயம் மறைந்திருந்தாலும், மனதில் இன்னும் அதன் தாக்கம் கடுகளவு கூட குறையவில்லை.
அவன் அடித்ததை அவ்வளவு எளிதில் அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்போது மீண்டும் சந்திக்க நேர்ந்தால் வார்த்தைகளைக் கொட்டிவிடுவோம் எனப் புரிந்து, இந்த சூழ்நிலையில் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என அமைதியைக் கடைபிடித்தாள்.
இருந்தும் இதை அப்படியே விட்டுவிடும் எண்ணமில்லை. திருமணம் முடிந்து பார்த்துக் கொள்ளலாம் என தற்போதைய திருமண சூழ்நிலையில் லயித்துப் போனாள். ரங்கா எதிலும் தலையிடவில்லை என்ற குறையத் தவிர பெரிதாய் எந்தக் குறையும் திவாகர் வைக்கவில்லை. அவளுக்கு என்னென்ன வேண்டும் எனப் பார்த்து பார்த்து செய்தான். அவனது அன்பில் மனோஹரி திக்குமுக்காடிப் போனாள்.
ஏனோ தந்தையின் தலையீடு இல்லயென தங்கை எங்கும் வருந்திவிடக் கூடாது என திவா அவளது முகம் பார்த்து அனைத்தும் செய்ய, இவளுக்கு கண்கள் கலங்கிப் போனது. சிறு வயதிலிருந்தே திவாகருக்கு மனோ மீது அத்தனைப் பிரியம். ஆனால், அதையெல்லாம் பெரிதாய் வெளிப்படுத்த
மாட்டான். இப்போது இந்தக் அக்கறையில் இவளுக்கு நெஞ்சம் நனைந்து போனது.
ராதா முன்பே நிச்சயம் வேண்டாம் நேரடியாய் திருமணத்தை நடத்திவிடலாம் என சிந்துவிடம் பேச, அவரும் சரியென்றுவிட்டார். நிச்சயத்திற்கும் சேர்த்து திருமணத்தை சிறப்பாக செய்திட வேண்டும் என முடிவெடுத்து, அதன்படி அனைத்தையும் செய்தனர்.
ஊரிலுள்ள அத்தனைப் பேருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ராதா செல்லுமிடமெல்லாம் ரங்காவை முன்னிருத்திக் கேள்விகள் எழ, முதலில் தடுமாறியவர் பின் கணவருக்கு வேலைகள் அதிகம் இருப்பதால் அவரால் வர இயலாது போய்விட்டது, அதனாலே மகன் முன்னிருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்வதாக அனைவரிடமும் ஒரே மாதிரி உரைத்துவிட்டார்.
அடுத்ததாய் குமரனின் ஜாதிப் பற்றியும் அவனுடைய பொருளாதார நிலைப்பற்றியும், சொக்கநாதன் மகனுக்கு எப்படி ரங்கா பொண்ணைத் தர சம்மதித்தார்? என்பதைப் பற்றியும் ஒருவர் விடாது கேள்விகளால் துளைக்க, நிறைய இடங்களில் திக்குமுக்காடிப் போனார். பதில் சொல்லாது விடமாட்டார்கள் என்பது புரிய, மகளின் விருப்பமே எங்களுக்குப் பெரிது, அவள் நன்றாய் வாழ்ந்தால் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி என முடித்துவிட்டார். இன்னும் சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படாமல் இல்லை. அனைத்தையும் சமயோகிதமாய் பேசி சரிகட்டியிருந்தார் ராதா.
திருமணநாள் அத்தனை மகிழ்ச்சியாக விடிந்திருந்தது. காலையிலே மனோஹரி குளித்துமுடித்து பட்டு சேலை உடுத்தி கண்ணாடி முன்பு அமரவைக்கப்பட்டிருந்தாள். செபாவும் அக்ஷயாவும் அவளை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.
“அக்கா, ஏற்கனவே நீ அழகு. இப்போ மேக்கப் போட்டதும் ரொம்ப அழகா இருக்க!” அக்ஷயா இவளது கன்னத்தைக் கிள்ளவும், மனோ மெலிதாய்ப் புன்னகைத்தாள். மனம் தந்தையைச் சுற்றி வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னே தொழில் நிமித்தம் வெளியூர் செல்வதாகக் கூறி அவர் கிளம்ப, மனோ தந்தையை மறைத்தவாறு நின்றாள்.
“அப்பா, ப்ளீஸ் பா... எனக்காக ஒரு பத்து நிமிஷம் கல்யாணத்துல வந்து நின்னுட்டு கிளம்புங்கப்பா! உங்களோட ஆசிர்வாதம் எனக்கு வேணும் பா!” விழிகள் தளும்ப இறைஞ்சினாள்.
அவளை ஒரு பார்வைப் பாரத்த ரங்கா, “அதான் என் பேச்சை மீறணும்னு முடிவு பண்ணீட்டிங்க. அப்புறம் என்ன என்னோட ஆசிர்வாதம் வேணும் உனக்கு!” என முறைப்பாய்க் கூறியவரின் கைகள் ஒரு நொடி உயர்ந்து மகளின் தலையைத் தடவிப் போனது. குரலிலிருந்த கடுமை இல்லை அந்த ஸ்பரிசம் அவளை வருடிப் போனது.
“அப்பா…” என அவர் கையைப் பிடித்தாள் மகள்.
“எங்க இருந்தாலும் நல்லா இரு மனோ. என்னால அங்க வந்து நிக்க முடியாது!” என்றவர் வெளியேறிவிட்டர்.
“இருந்தாலும் இந்த மனுஷனுக்கு இவ்வளோ ஆகக் கூடாது. பெத்தப் புள்ளையைவிட வைராக்கியம் பெருசா போச்சுல்ல!” ராதாமணியின் வாய் ஓயாது கணவரை வசைபாடத் தவறவில்லை. மனோ நடந்ததை நினைத்துப் பார்க்க, “அக்கா! அக்கா… என்ன யோசிச்சுட்டு இருக்க?” என அக்ஷயா இருமுறை அழைத்தப் பின்பே அவளுக்கு புறத்தூண்டல் உறைத்தது.
“என்ன அக்ஷூ?” இவள் வினவ,
“தம்பி உன்கிட்ட வரேன்னு சொன்னான். நீ பார்க்கவேயில்லை!” சின்னவள் குறைபட, ஹரியின் மகன் இவளிடம் தாவ கையை நீட்டினான்.
“தேஜூ குட்டி!” எனக் குழந்தையை வாங்கி முத்தமிட்டாள்.
“மனோ, குழந்தையைத் தூக்காத. சேலை கசங்கிடும் டி! கல்யாணம் முடியிற வரை கொஞ்சம் மேக்கப் கலையாம இருந்தால்தான் நல்லா இருக்கும்…” என்ற மைதிலி குழந்தையை வாங்கிக்கொண்டு சென்று செபாவிடம் கொடுத்தாள்.
“நேரமாச்சு, எல்லாரும் கிளம்பலாம்!” என ராதா அனைவரையும் விரட்டினார்.
மகளின் முகத்தைப் பார்த்தவர், “மனோ, இது உன்னோட கல்யாணம். யாருக்கோன்ற மாதிரி முகத்தை வச்சிருக்க நீ. வைராக்கியம்தான் பெருசுன்னு போன மனுஷனுக்காக நீ இவ்ளோ படணும்னு ஒன்னும் அவசியம் இல்ல!” என அதட்டியபடி கதவைப் பூட்டினார்.
சிறிது நேரத்திலே அனைவரும் மண்டபத்தை அடைந்தனர். வெளியே வண்ண வண்ண பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்க, உறவினர்கள் வருகைத்தர ஆரம்பித்திருந்தனர்.
மனோவுடன் அக்ஷயாவும் மணப்பெண் அறையில் அமர்ந்து கொள்ள மற்றவர்கள் உறவினர்களைக் கவனிக்கவும் ஆரம்பித்தனர்.
ராதாமணி கணவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப படாதபாடுபட வேண்டியதாய் இருந்தது. வந்திருந்த உறவினர்கள் அனைவருமே ரங்காவை விசாரிக்க, “அவர் உள்ள இருக்காரு… சமையல் நல்லா இருக்கான்னுப் பார்க்க அங்கப் போய்ருக்காரு… இதோ இப்பதான் கடைக்குப் போனாரு!” என தற்காலிக பொய்யை உரைத்து சமாளித்தார். திவாகருக்கே தாயைப் பார்த்து பரிதாபம் மேலிட, தந்தையின் மீது கோபம் வந்தது.
“ம்மா, என்ன மா?” இவன் வினவ,
“விடு திவா, என்னைக் கட்டுன மனுஷன் சரியில்லை. அதுக்காக அவரை விட்டுக்கொடுக்கவும் முடியலை. போ, ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்றாங்க. நான் ஒரே ஒரு பொய்தானே சொல்றேன். விடு பார்த்துக்கலாம்…” என்றவரின் குரலில் கணவரின் மீதான அதிருப்தி தெறித்தது. இருந்தும் முகத்தை சிரித்தது போல வைத்துக்கொண்டு வருபவர்களை உபசரிக்க ஆரம்பித்தார்.
குமரனும் சிந்துவும் வந்துவிட, அவர்களுடன் உறவினர்கள் சிலரும் வந்திறங்கினர். திவாகர் சென்று அவர்களை வரவேற்று, குமரனை மணமகன் அறையில் அமரவைத்துவிட்டு வந்தான்.
நேரம் செல்ல ஐயர் மணமக்களை மேடையில் அமர வைத்து மந்திரங்களை ஓத ஆரம்பிக்க, அனைவரும் உள்ளே வந்துவிட்டிருந்தனர்.
குடும்பத்து உறவினர்கள் மேடையில் நிற்க, மற்றவர்கள் கீழே நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.
மனோ குமரனருகில் வந்து அமர்ந்ததிலிருந்து அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. தந்தை இல்லையென்ற வருத்தம் ஒருபுறமும் அவனின் மீதான கோபம் ஒருபுறமிருக்க, முகம் வாடியிருந்தது. குமரனும் முகத்தை இறுக்கமாகத்தான் வைத்திருந்தான்.
“இந்தாங்கோ, பொண்ணு கழுத்துல மாங்கல்யத்தைக் கட்டுங்க மாப்பிள்ளை!” என ஐயர் தாலியைக் குமரன் கையில் கொடுக்க, அதை வாங்கியவன் மனோஹரியின் முகத்தை அப்போதுதான் பார்த்தான். அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் பெண். அந்த முகத்தை மனதில் ஆழப்பதிந்தவாறு அவளது கழுத்தில் இரண்டு முடிச்சை இட்டவனின் மனம் வாழ்வின் எந்தக் கணத்திலும் அவளைக் கைவிட்டுவிடக் கூடாது என எண்ண, அவன் கையை ஓங்கித் தட்டிவிட்ட மற்றொரு ஜோடிக் கைகள் நாத்தனார் முடிச்சைப் போட்டன.
குமரன் எதிர்பார்ப்பாய் நிமிர, விழிகளில் மெல்லிய நீர்ப்படலத்துடன் அவனை முறைத்தவாறு மூன்றாவது முடிச்சையிட்டு நிமிர்ந்தாள் ஷெண்பா. இத்தனை நேரமிருந்த இறுக்கம் அவனிடம் விடை பெற்றிருக்க, அவளருகே யாருக்கு வந்த விருந்தோ என்பது போல விக்ரம் நின்னிருந்தான். குமரன் பார்வையை உணர்ந்தவன், முகத்தைத் திருப்பிக்கொள்ள இவனது இதழ்களில் புன்னகை. தனக்காகவென அனைத்தையும் மறந்து, மன்னித்து வந்திருந்த இந்த இரண்டு உள்ளங்கள் அவனை நிறைக்கப் போதுமாய் இருந்தன. முகத்தில் ஒரு நிறைவு தானாய் அமர்ந்தது.
தன் கழுத்திலேறிய மாங்கல்யத்தைப் பார்த்த மனோவுக்கு விழிகள் கலங்கின. ராதா குனிந்து மகளின் மாலையை சரிசெய்துவிட, குமரன் அவளது நெற்றியில் குங்குமத்தை இட்டான். அவனது விழிகளை ஆழப்பார்த்தவாறு மனோ பார்வையைத் திருப்ப, கூட்டத்தில் ரங்கா நின்றிருந்தார். தன் கற்பனையோ என எண்ணி இவள் விழிகளை சிமிட்டிவிட்டுப் பார்க்க, அவரது உருவம் மறையவே இல்லை என்றதும் நொடியில் இவளுக்கு விழிகள் வேகவேகமாய் நனைந்தன.