“எதுமா தேவையில்லாத வேலை, என் புருஷன் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குத் தேவையானதுதான். அதுவும் இல்லாம என் நாத்தனருக்கும் எனக்கும் இடையில ஆயிரம் இருக்கும். நாளைக்கே அவ என் புருஷனோட ராசியானா, அவகிட்ட நானும் பேசுவேன். சோ, நீ எதையும் மண்டையில ஏத்திக்காத!” அலட்டிக்காது மகள் அளித்த பதிலில் அவர் அசந்து போனார். தாயாய் அவருக்கு மகளின் குணம் தெரியுமே. சட்டுசட்டென வாயை விட்டுவிடுவாள். எதிரிலிருப்பவர் யார் எவெரன பிரித்தரிந்து யோசிக்காது, அவளுக்கென ஒரு நியாய அநியாய வரையறைகளை வகுத்து அதன்படியே செயல்படுவாள். அப்படி இருக்கையில் புகுந்த வீட்டில் எங்கணம் அவள் இணக்கமாக இருக்கக் கூடும் என்ற கவலை அவரை அரித்தது.
ஆனால், தற்போதைய அவள் பேச்சு, அந்தக் கவலைக்கெல்லாம் வேலையே இல்லை என்பது போலிருக்க, ராதா அசந்து போனார்.
இரவு கவிழத் துவங்க, மனோஹரி புகுந்த வீட்டிற்கு கிளம்பினாள். அவளை அங்கே விட்டுவிட்டு வருவதற்காக திவாகரும் உடன் சென்றான். பத்து நிமிடத்தில் அவர்கள் வீட்டை அடைந்தனர். மனோ மகிழுந்திலிருந்து இறங்காது தமையனை நோக்க, அவன் என்னவென்பதாய் அவளைப் பார்த்தான்.
“என்னாச்சு திவா, உன் முகமே சரியில்லை. அதிசயமா இன்னைக்கு என் மேல இருக்க கோபத்தை இழுத்துப் பிடிச்சு வச்சிருக்க?” என்றவளின் குரல் திவாகரை ஆழம் பார்த்தது. ஏதோ அவனிடம் சரியில்லை என உள்மனம் எச்சரித்தது.
“ச்சு… அப்படியெல்லாம் இல்லை. நீ உள்ள போ!” மனோவின் முகத்தைக் கூட அவன் காணவில்லை.
அவன்புறம் குனிந்து முகத்தை நிமிர்த்தியவள், “ஏன் டா, உன்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி நான் எதுவும் பண்ணிட்டேனா?” என்றவளின் விழிகள் திவாகரின் சோர்ந்திருந்த முகத்தில் அழுத்தமாய் பதிந்தது. தான்தான் அவனை காயப்படுத்திவிட்டோமோ என்ற எண்ணம் வியாபித்து அவள் மனதினோரம் வருத்தத்தைக் கொடுத்தது.
தங்கையின் குரலில், அதிலிருந்த பாவனையில் தெளிந்தான் திவா. ஷெண்பாவிற்கு முன்னே இவள் வந்து நிற்க, தன்னையே நிந்தித்தவன், மனோவின் தலையில் வலிக்காது தட்டினான்.
“ச்சு… ஒன்னும் இல்ல டி. எப்பவும் போல அப்பா, பிஸ்னஸ்னு அதைப் பத்தின டென்ஷன் தான். வேறெதுவும் இல்ல!”
“ஏன் திவா, தனியா எல்லாத்தையும் பார்த்துக்க கஷ்டமா இருக்கா? பழையபடி நான் ட்ரேடர்ஸல அக்கவுண்ட்ஸைப் பார்த்துக்கிறேன். உனக்குக் கொஞ்சம் வேலை குறையும் இல்லை!” என அவள் ஆறுதலாகப் புன்னகைத்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மேடம். நீங்க உங்கக் குடும்ப பஞ்சாயத்தைப் பாருங்க. அதுவே பெரிய வாரா இருக்கும் போல!” என தங்கையின் கன்னத்தில் தட்டியவன் முகத்தில் சிரிப்பு விரவியது.
“ம்க்கும்… நீ வேற டா. அண்ணனும் தங்கச்சியும் சரியான இம்சைங்க, நடந்தையே இன்னும் நினைச்சு அவரையும் போட்டுப் படுத்துதுங்க. அதான் இன்னைக்கு ஒரு வாங்கு வாங்கிவிட்டிருக்கேன். கண்டிப்பா நான் பேசுனதெல்லாம் யோசிச்சு குழப்பி தெளிவாகுவா தங்கச்சிகாரி… இவங்களை சேர்த்து வைக்கிறதுக்குள்ள எனக்குத்தான் டென்ஷன் ஏறுது!” என்றவளின் குரலில் திவாகர் முகம் நொடியில் மலர்ந்து போனது.
“சேர்த்து வைக்கத்தான் அப்படி பேசுனீயா மனோ… அப்புறம் ஏன் இனிமே குமரனைப் பார்க்கக் கூடாதன்னு சொன்ன?” இவன் குரலில் ஆர்வம் கொட்டிக் கிடக்க, அவனை சந்தேகமாய்ப் பார்த்த மனோ, “ஆமா திவா, நான் எது செய்யக் கூடாதுன்னு சொல்றனோ அதை வீம்புக்குன்னு செய்ற குணம் ஷெண்பாவுக்கு. அவங்க அண்ணன் மேல ரொம்ப பெசசீவ் அவ! அத்தை நிறைய கதை சொல்லி இருக்காங்க. சோ, அதை லைட்டா தட்டிவிட்டிருக்கேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம்!” என பெருமூச்சுவிட்டாள். திவாகருக்கு மனோவின் எண்ணத்தில் பெரிதொரு நிம்மதி மனதெங்கும் விரவியது. அவன் நினைத்தது போல தங்கை யாரையும் பிரிக்க நினைக்கவில்லை. உறவை ஒட்ட வைக்கத்தான் போராடுகிறாள் என்ற எண்ணம் இத்தனை நேரமிருந்த அலைப்புறதலை கரைத்தியிருந்தது.
“நல்லதா நடக்கும்… சரி நான் கிளம்புறேன்!” என புன்னகையுடன் விடை பெற்றவனை இவள் யோசனையாய் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
ஷெண்பா வீட்டிற்கு சென்றவள் அறைக்குள்ளே முடங்கிப் போனாள். ஏனோ மனோவின் பேச்சு அவளை அத்தனையாய் சுட்டது. அதிலிருந்த உண்மை உறைத்ததில் இவளுள் பெரிய குற்றவுணர்வு பெருகியது. மனோ கூறியது போல நடந்ததை ஏற்றுக்கொண்டு நிதர்சனத்தை ஏற்றிருக்கலாமோ? என மனம் தாமதமான அறிவுரையைக் வழங்கியது.
அன்றைய குமரனின் பேச்சு தங்களுக்காகவென பிராயம் முதிர்ந்தப் போது உணர்ந்தாலும், ஏனோ தன்முனைப்பும் கோபமும் கண்ணை மறைத்திருந்தது. ஒருவேளை மனோஹரி கூறியது போல குமரனது தவறை மன்னித்து அவன் மனதை புரிந்து கொண்டிருந்தால், அவனுடைய திருமணத்தில் மூன்றாம் மனிதராக எட்ட நின்று வாழ்த்த வேண்டிய துரதிஷ்ட நிலை வந்திருக்காதோ என தன் தவறை முதன்முதலில் உணர்ந்திருந்தாள் பெண்.
ஏன் எத்தனையோ கஷ்டக் காலங்களில் குமரனுக்கு தோள் கொடுத்து அவன் துவண்ட நேரத்தில் முன்னின்று தேற்றி இருக்கலாமோ? உப்புக்கும் பெறாத கோபமும் தன்முனைப்பும் அத்தனை அழகிய தருணங்களை தட்டிப் பறித்ததை மூளை இப்போது எடுத்துரைக்க, விழிகளில் சரசரவென நீர் வழிந்தது.
ஒவ்வொரு முறையும் குமரன் காயம்பட்டு நிற்கையில் அவளும்தானே வலியை சுமக்கிறாள். இப்படி அவனையும் கஷ்டப்படுத்தி தாங்களும் ஏன் அழுது கரைய வேண்டுமெனத் தோன்றித் தொலைக்க, ஏனோ தன் மீதே கோபம் வந்தது.
‘சொந்த மகன் திருமணத்தைக் காண முடியாது குமரன் திருமணத்தன்று வருத்தம் தொனித்தக் குரலில் சொக்கநாதன் பேசியது இப்போதும் செவியை அடைய அதிகமாக வலித்தது. அவன் வேண்டாம் என விட்டுச் சென்றாலும் தங்கள் அவனை விட்டிருக்கக் கூடாதோ? இழுத்துப் பிடித்திருக்கலாமோ? அருகே இல்லாதிருப்பினும் அவன் மீதான தன் நேசம் உண்மைதானே? தூரச் சென்றால் அனைத்தும் மாறிவிடுமா என்ன?’ மனம் சரம்மாரியாகக் கேள்வி எழுப்பியது.
இவள்தான் குமரன் மனோவின் திருமணத்தை புகைப்படங்களாககவும் காணொளியாகவும் காண்பித்திருக்க, சொக்கநாதன் கண்கலங்கிப் போனார். விக்ரமும் இவளும் சேர்ந்து அவரை அதட்டி சரிசெய்த கணங்கள் மனதை கனக்கச் செய்தன.
இரண்டு நாட்களாக முகத்தை சேகமாய் வைத்திருந்த தங்கையை விக்ரம் அதட்டி உண்மையை வாங்கிருந்தான். நடந்ததைக் கூறி மனதிலிருந்த எண்ணத்தையெல்லாம் அவனிடம் வார்த்தையால் வடித்து அழுதேவிட்டாள் ஷெண்பா.
“ஷெண்பா! இப்போ எதுக்காக நீ அழற?” விக்ரம் அதட்ட, “அவன் தப்பு பண்ணான்னு சொல்லி சொல்லி இத்தனை நாள் ஒதுக்கி வச்சு நம்மளும் தப்புப் பண்ணிட்டோம் விக்கி!” எனத் தேம்பியழுதவளைக் கனத்த மனதுடன் பார்த்தான் தமையன்.
“இப்போ என்ன பண்ணலாம்?” அவன் வினவ, அவளிடம் பதிலில்லை. தன் தோளில் சாய்த்திருந்தவளின் தலையை தடவியவன், “நீ ரொம்ப குழம்பியிருக்க. தெளிஞ்சதும் ஒரு முடிவை எடு. இப்போ எதையும் யோசிக்காத!” என அவன் கூற, தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டாள் அவள்.
விக்ரம் கூறியது போல ஷெண்பா ஒரு வாரமாய் யோசனையிலே அலைந்தாள். நடந்தது அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு இனிவரும் நாட்களாவது பழைய ஷெண்பாவாகவும், எப்போதும் போல இரண்டு தமையன்களுடனும் நாட்களைக் கடக்க வேண்டும் என மனம் விரும்பித் தொலைத்தது. தங்கையின் யோசனை முகத்தைதான் விக்ரம் கண்டது. ஷெண்பாவைப் போலவெல்லாம் அவனுக்கு சிந்தனை செல்லவேயில்லை. இன்னுமே அவன் கோபத்தில்தான் இருந்தான். அவனால் அத்தனை எளிதில் இறங்கிவர முடியும் எனத் தோன்றவில்லை.
ஒருவேளை ஷெண்பா குமரனுடன் சமாதான உடன்படிக்கை வாசித்தாலும் இவன் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தோடுதான் சுற்றினான்.
குமரனுக்கு எப்படியாவது சூளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதை போட்டு அழுத்தியதில் பல வங்கிகளில் அலைந்து திரிந்து, கடைசியாய் ஒரு வங்கி அவனுக்குத் தேவைப்படும் பணத்தைக் கொடுப்பதாக முன்வந்திருக்க, இத்தனை நாள் அலைந்த அலைச்சலுக்கு அன்று பலன் கிடைத்ததை எண்ணி ஆசுவாசம் கொண்டான்.
இன்னும் ஒரு மாதத்தில் பணம் கைக்கு வந்துவிடும் வகையில் அனைத்தையும் சரியாய் செய்து முடித்த குமரன், மலர்ந்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான். வெளியே சென்று வந்த களைப்பையும் மீறி மகன் முகத்திலிருந்த மகிழ்ச்சி தாயையும் தொற்றிக் கொண்டது போல.
“என்ன டா, லோன் கிடைச்சுடுச்சா?” சரியாய்க் கணித்து வினவியவரைப் பார்த்து இவன் சிரிப்புடன் தலையை அசைத்தான்.
இவன் நீள்விருக்கையில் கால்களை நீட்டி சட்டையிலிருந்த இரண்டு பொத்தான்களை அவிழ்த்துவிட்டு தளர்ந்து அமர்ந்தான். விழிகள் மனைவியைத் தேடின. ஏனோ தன் மகிழ்ச்சியை அவளிடமும் பகிர வேண்டும் என்ற அவா.
“மனோ வீட்ல இல்லை டா! அவங்க கடை வரைக்கும் போய்ருக்கா!” மகனின் பார்வை உணர்ந்து உரைத்த சிந்து, “காபி வேணாம் டா. பால் பாயசம் செய்யவா?” என வினவினார். அவர் குரலில் கொஞ்சம் துள்ளல். தன்னுடைய மகிழ்ச்சி துக்கம் கோபம் அனைத்தும் இந்தப் பெண்மணியைப் பாதிக்கிறது என உணர்ந்தவன் அவரது கரத்தை எடுத்து கன்னத்தில் வைத்து அழுத்தினான். அவரது உலகமே தான்தான் என்ற எண்ணம் உவகையை வாரி வழங்கியிருந்தது.
எத்தனை வருடங்கள் கழித்தான மகனின் புன்னகையில் தாய்க்கு உருகிவிட்டது. அவனது தலையைப் பாசமாய்க் கோதியவர், “பத்து நிமிஷத்துல வரேன் டா!” என சமையலறைக்குள் விரைந்தார். அவரை சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தான் குமரன்.
சிந்து பால்பாயசம் செய்துக்கொண்டு வெளியே வர, மனோஹரி உள்ளே நுழைந்தாள்.
செம்பவள நிறச் சுரிதார் அணிந்திருந்தவளின் ஒரு பக்கத் தோளில் துப்பட்டா வழிய, மறுபுறம் கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. வெளியே சென்றுவிட்டு வந்த அலுப்பு முகம் முழுவதும் அப்பிக் கிடந்ததது. குமரன் அவளை ஆசை பொங்கப் பார்த்தான்.
அவரை செல்லமாக முறைத்து அதை உண்டவள், “அத்தை, என்ன விசேஷம்?” என வினவினாள்.
“இவனுக்கு லோன் கிடைச்சுடுச்சு மா. அதான் பாயசம் செஞ்சேன்!” அவர் பதில் இயம்ப, நொடி நேரம் அவளது முகம் மலர்ந்து விரிந்தது. அவளது உதடுகள் மென்னகையில் விரிய, உதட்டிலேறிய சிரிப்புடன் மனையாளைத்தான் குறுகுறுவென பார்த்திருந்தான் கணவன். குமரனது பார்வை உணர்ந்தவள், திரும்பி அவனை முறைத்தாள்.
‘என்னுடைய பணத்தை நீ வாங்கவில்லை!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருக்க, இவன் அசட்டையாகத் தோளைக் குலுக்கினான்.
எதுவும் பேசாது மனோ அறைக்குள் நுழைய, சிந்து ஒரு குவளையில் மகனுக்குப் பாயசம் ஊற்றிக் கொடுக்க, அதை குடித்துவிட்டு தானும் அறைக்குள் நுழைந்தான்.
உடைமாற்றி வெளியே வந்து நீண்ட முடியை கொண்டையிட்டவளிடம்தான் அவனின் பார்வை. குறுகுறு பார்வைக் கொடுத்த உணர்வில், இவள் திரும்பிக் கணவனை முறைத்தாள். அவன் அதையெல்லாம் கண்டு கொள்வதாயில்லை. உதட்டிலிருந்த பார்வை அப்படியே அவளது முருகன் படம் பதிந்த கழுத்தணியில் நிலைத்தன. தனக்காகத்தான் அதை அணிந்திருக்கிறாள் என கண்டுபிடித்த தினத்திலிருந்து மனைவியோடு சேர்த்து அதுவுமே அவனை இம்சித்தது. ஒருமுறை அதை சேர்ந்துவிடு என உதடுகள் துடித்தன.
கணவனது பார்வைப் பதிந்த இடத்தைக் கண்டு விட்ட மனோஹரிக்கு குப்பென வியர்த்துவிட, அவனை முறைத்துவிட்டு வெளியேறச் சென்றவளின் கவனத்தை மேஜை மீதிருந்த பொருள் ஈர்த்தது.
‘என்ன இது?’ என யோசித்தவாறே அதை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தவளின் முகம் முழுவதும் முறைப்புதான். குமரன் வேலையாகத்தான் இருக்கக் கூடும் என உணர்ந்தவள் அவனைக் கடுப்புடன் ஏறிட, மனைவியின் முகத்தில் வந்து போகும் பாவனையை சன்னமான சிரிப்புடன் பார்த்திருந்தான் அவன். வங்கிக்கடன் கிடைத்துவிட்டதில் அப்படியொரு குஷியில் இருந்தவனுக்கு அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம் உதித்தது.
அதுதான் வரும் வழியில் ஒரு கடைக்குள் நுழைந்து பன்னிரெண்டு வண்ணத்தில் நகப்பூச்சுகளை வாங்கி வந்திருந்தான். அதை வாங்குவதற்குள் கடை ஊழியப் பெண்ணிடம் இவன் சங்கடமாகக் கேட்டு விழித்து, அந்தப் பெண் சிரித்துக்கொண்டே கொடுத்தாள்.
‘அப்படியென்ன அவசியம் வாங்க வேண்டும்? அவளைக் கோபம் கொள்ளச் செய்ய வேண்டும்?’ என மனதில் கேள்வி உதித்தாலும், அதை அசட்டை செய்து வந்திருந்தான்.
“என்னது இது?” மனோ பல்லைக் கடிக்க, “ஓ… தெரியலையா மனோ உனக்கு? அது பேர் நெயில் பாலிஷ். நகத்துல வச்சுக்கலாம்…” என இழுத்தவனிடம் ஏக நக்கல்.
‘கொழுப்பு…’ என முணுமுணுத்து நகர்ந்தவளிடம் இவனது பார்வை அத்தனை ரசனையாய் படிந்து மீண்டது. மனோஹரி வசீகரியாகிப் போனாள். இந்த சில நாட்களாக அவனது பார்வை முழுவதும் மனையாள்தான் நிறைந்து போயிருந்தாள்.
மறுநாள் காலையில் அவள் மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, சிந்துவின் குரல் பெண்ணைக் கலைத்தது.
“என்ன மனோ, ஸ்கூட்டீயை சரி பண்ணியாச்சா? வாசல்ல நிக்குது?” என அவர் வினவ, இவள் வாயிலில் சென்று பார்த்தாள். உடைந்த பாகங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு அவளது இருசக்கர வாகனம் மின்னியது. ஒரு நொடி விழிகள் விரிய அதிர்ந்தவள், பின்னர் வாகனத்தை கரங்களால் தடவிப் பார்த்தாள். முதன் முதலில் தனக்கென வாங்கிய வாகனம் என்பதால் ஏனோ மனதுக்கு நெருக்கமாகிப் போன ஒன்று அது. குமரன் அதை உடைத்துவிடவும் இவளுக்கு கோபம் கனன்றது. ஆனால், அந்தக் கோபம் இந்நொடி கொஞ்சமே கொஞ்சம் தணிந்திருந்தது என்னவோ உண்மை. சிந்து தன் முகத்தைதான் கேள்வியாகப் பார்க்கிறார் என்பதை உணர்ந்தவள்,
“ஆங்… ஆமா அத்தை. சரி பண்ணிட்டேன்!”எனக் கூறிவிட்டு விறுவிறுவென அறைக்குள் நுழைந்தாள்.
அன்று போல தான் இன்றும் வாகனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அமர்ந்திருந்தான் குமரன். சில நொடிகள் அவன் முன்னே நின்றவளை அவன் அலட்சியப்படுத்த, ‘போடா… நீதானே உடைச்ச. இப்போ சரி பண்ணிக் கொடுத்ததும் தேங்க்ஸ் சொல்லணுமோ?’ என சடைத்துக் கொண்டவள் தனது வாகனத்திலே மருத்துவமனைக் கிளம்பலாம் என எண்ணி ஆயத்தமானாள்.
வாகனத்தை இயக்கச் சென்றவளுக்கு சாவி அவனிடம்தான் இருக்கிறது என உறைக்க, “ஸ்கூட்டீ சாவி வேணும்!” என முகத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டு கணவனிடம் வினவினாள்.
நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் அலைபேசியில் கவனத்தை வைக்க, “எனக்கு ஸ்கூட்டீ சாவி வேணும்!” அழுத்தமாய்க் கேட்டவளின் பற்கள் நரநரவென அரைபட, பார்வை அவன் முகத்தில் படர்ந்தது.
“என்கிட்டயா கேட்ட… நான் ஏதோ சுவத்துக்கிட்ட பேசுறேன்னு நினைச்சேன் மனோ!” என்றவன் குரலில் நக்கல் தொனி.
“உங்ககிட்டே தான் கேட்டேன்!” மனைவி முறைக்க, “எதுக்கு?” என்ற கேள்வி அவனிடமிருந்து வந்து விழுந்தது.
அவன் பேச்சில் விழித்தவள், “நீங்களா அப்படி நினைச்சுக்கிட்டா நான் ஏதும் பண்ண முடியாது!” என்றாள் எரிச்சலான குரலில்.
“ஓஹோ! நீ என்னை ட்ரைவரா நினைக்கலை?”
“ஆமா! நினைக்கலை!”
“அப்போ உங்க வீட்ல இருந்தப்போவும் என்னை ட்ரைவரா நினைக்கலை. அதான் இந்த செயினை வாங்குனீயா?” எனக் கேட்டவனின் குரலில் என்ன இருந்ததென மனைவி உணரும் முன்னே அவனது விரல்கள் அந்த கழுத்தணியோடு அவளையும் சேர்த்திழுத்திருக்க, மனோ சுதாரிக்கும் முன்னே இருவருக்கும் இடையிலிருக்கும் இடைவெளி சுழியமானது போது மனைவியின் நெஞ்சுக் குழியில் மத்தளம் கொட்ட ஆரம்பித்திருந்தது.
“சொல்லு டி, என்னை நினைச்சுதானே முருகன் பட டாலர் செயின் வாங்குன?” விழிகள் மொத்தமும் மனோஹரியைச் சுருட்டிக் கொள்ள, அடர்ந்தக் குரலில் வினவினான் குமரன். இவளுக்கு குப்பென வியர்த்துப் போனது.
கண்டு கொண்டானே என்று ஆச்சர்யமும் அதுகொடுத்த வெட்கத்தில் கன்னம் லேசாய் சிவந்து தொலைத்தது.
குமரன் சாதரணமாகப் பேசினாலே இவளுக்குள் அத்தனை ரசாயன மாற்றங்கள் நிகழும். தன்னை மறைக்கத்தானே வீட்டில் வேலை செய்த போதும் அவனை முறைத்துக்கொண்டு அலட்சியப்டுத்தியும் சுற்றுவாள். இப்போது இந்த நெருக்கத்தில் பேச்சு வராது குரல் அடைத்துப் போனது.
“உண்மையை சொல்லு டி!” குமரன் குரலின் டெசிபல் உயர, கண்கள் மனைவியைவிட்டு அகலவில்லை. அவள் பதிலுக்காய் விழிகள் முழுவதும் ஆர்வத்துடன் நோக்கினான்.
“அது… அது அப்படியெல்லாம் இல்ல!” இவள் குரலில் ஏகத் திணறல்.
“பொய் சொல்லாத டி!” அதட்டலாய்க் கணவன் கேட்க,
“ஆமா… உங்களுக்காகத்தான் போட்டேன். போதுமா, செயினை விடுங்க!” என பின்னோக்கி நகர முயன்றவளால் முடியாது போனது.
‘இதை இப்போதுதான் கேட்க வேண்டுமா?’ என அவஸ்தையுடன் அவனைப் பார்த்து, “நாலு வருஷமா பிடிக்கும்!” என்றவளின் முகம் பக்கவாட்டில் திரும்பியது.
“ஆனால் எனக்கு அப்படித் தெரியலையே!” என்றவனை இவள் கேள்வியாகப் பார்க்க, “உனக்கு என் கூட வாழ இஷ்டம் இருக்க மாதிரி தெரியலையே! எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டுதானே டி சுத்துற!” என்றவனின் விரல்கள் அந்த கழுத்தணியை ஒரு சுற்று சுற்ற, மொத்தமாய் அவன் மீது சாய்ந்துவிட்டாள் மனோ.
அவன் பதிலில், “ஆமா, வாழ இஷ்டம் இல்லாமதான் கட்டுனா இவரைத்தான் கட்டுவேன்னு கல்யாணம் பண்ணி இருக்கேன்!” என பல்லைக் கடித்தவள் அவனிடமிருந்து நகர முயற்சிக்கவில்லை.
“நீ பண்றதை பார்த்தா அப்படியொன்னும் எனக்குத் தோணலையே டி…” என்ற குமரன் குரலின் அழுத்தம் இவளை அழுத்தப்படுத்தியது.
“என்ன பண்ண, எனக்குத்தானே என் புருஷனை பிடிச்சிருக்கு. அவருக்கு நான் பிடிக்காத பொண்டாட்டி தானே?” என்றவள் பேச்சின் காரத்தில் கையை கழுத்தணியிலிருந்து எடுத்தவனுக்கு எரிச்சல் படர்ந்தது.
“ஏய், அதை விடவே மாட்டீயா டி நீ?” இத்தனை நேரமிருந்த இலகு பாவம் மறைந்து குமரன் குரலில் கோபம் தெறித்தது.
“ச்சு… நீங்கதானே சொன்னீங்க. நானா கற்பனை ஒன்னும் பண்ணலை!” மனோ உதட்டை சுழிக்க, அதை தனது கையில் அடக்கியவன், “முறைச்சு, வெறிச்சுப் பார்த்தப்பவே இந்த மூஞ்சியை, அதுல இருக்க அலட்சியத்தை, திமிர அவ்வளோ பிடிக்கும் டி. நான்தான் வேணும்னு யாரு பேச்சையும் கேட்காம எனக்காக பட்டினி கிடந்து மயங்கி விழுந்தவளை எப்படி பிடிக்காம போகும். குமரன் குமரன்னு என் பின்னாடியே வந்த இந்தப் பொண்ணை அவ்வளோ பிடிக்கும் எனக்கு… இப்போன்னு இல்ல, எப்பவுமே!” என்றவன் ஒரு நொடி நிறுத்தி, “முறைச்சுட்டேனாலும் உன் பார்வை என் மேல இருக்கதை நான் எத்தனையோ தடவை உணர்ந்து இருக்கேன் டி. அப்போ எல்லாம் கூட நான்தான் தப்பா நினைக்கிறேன்னு நினைச்சேன். ஆனால் கேடி டி நீ!” என்றவன் குரல் இப்போது மனோவை சிவக்கச் செய்திருந்தது.
“ஆமா… பார்த்தேன், இனிமேலும் பார்ப்பேன். இந்த மூஞ்சியைதான் காலம் முழுக்க பார்த்துகிடக்கணும்னு தவம் பண்ணித்தான் கட்டிகிட்டு வந்திருக்கேன்!” உண்மையை ரோஷமாய் உரைத்து அவன் கையைத் தட்டிவிட்டு மறுபுறம் திரும்பி நின்றவளுக்கு லேசாய் மூச்சு வாங்கியது.
அந்தப் பதிலில் குமரன் முகத்தில் வசீகரப் புன்னகை. ஏனோ உன்னைத்தான் பிடித்திருக்கிறது நீ தான் வேண்டும் என மனைவி கூறியதும் இவனுக்கு ஏதோ போதையேறியது போலிருந்தது. இன்னும் எத்தனை முறை கூறினாலும் இந்த உணர்வு மாறாது எனத் தோன்றவும் கரங்கள் பின்னங்கழுத்தை வருடிப் போயின. உதடுகளில் புன்னகை மிளிர்ந்தன. இந்நொடி இந்தப் பெண்ணை அத்தனைப் பிடித்து தொலைத்தது.
அவனிடம் பேச்சில்லாது போனதில் மனோ திரும்பிப் பார்க்க, நொடியில் அவளை அருகே இழுத்த குமரனின் இதழ்கள் முருகன் படத்தோடு அவளது கழுத்தில் அழுத்தமாய் பதிய, மனைவி உறைந்து போனாள். இதயம் தொண்டைக் குழியில் வந்து துடிப்பதை உணர்ந்தவளின் கரங்களில் அத்தனை நடுக்கம். பிடித்த கணவன் என்றாலும் முதல் தொடுகையில் கூசி சிலிர்த்துப் போனது பெண்மை. அவனுக்கு அப்படியில்லை போல. நீண்ட நாட்களாய் தன்னை இம்சை செய்த கழுத்தணியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
பின் முகம் குளித்து அத்தனை வாசமாய் இருந்த மனைவியின் சுகந்தத்தை நுகர்ந்தது. “அழகி டி நீ!” ரசனையாய் ரசிகனாய் மாறி கிசுகிசுப்பாய் செவியில் கணவனின் குரல் ஒலித்ததில் உலகையே வென்ற திருப்தி திரண்டு மனோவின் நெஞ்சை அடைக்க, இத்தனை நாட்களிருந்த பிணக்குகள் எல்லாம் வெறும் கணக்குகளாகிப் போயின. இப்படியெல்லாம் இவன் பேசக் கூடுமோ என்ற ஆச்சர்யமும், பேசுவனா என்ற எதிர்பார்ப்பும் அவளை சுருட்டியதில் சுயம் மறந்தவளின் மொத்த உடலும் கணவனை முத்தமிட்டு உறவாடியது.
“காலங்காத்தால என்ன பண்றீங்க? நான் வேலைக்குப் போகணும்!” தொண்டை வரண்டு போக, கடினப்பட்டு பேசினாள். அவனிடமிருந்து பிரிய மனமில்லை பெண்ணுக்கு. உதடுகள் பொய்யைத் தழுவின.
“அப்போ, நைட் பண்ணா பரவாயில்லையா?” அடர்ந்த கரகரத்துப் போன குரல் செவியோரம் வசியம் செய்தது.
மனோ பேச்சு வராது அவனைப் பார்க்க, குமரனுக்கு சிவந்து நின்ற மனைவியை அள்ளி அணைக்க வேண்டும் என்ற உந்துதல். ஏனோ மனதிலிருப்பதை நேற்றே உரைக்கலாம் என்றிருந்தான். பின்னர் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு பேசலாம் என அவன் எண்ணியிருக்க, இந்தப் பெண் பேச வந்தவனை என்னென்னவோ செய்தாள்.
“மனோ… சாப்பிட வரலையா?” சிந்து குரல் கொடுக்க, குமரனைப் பிடித்து தள்ளிவிட்டு வெளியே ஓடிப் போனாள் மனோஹரி. அவளை முறைத்தவன், ‘நைட்டுப் பார்த்துக்கிறேன் டி உன்னை!’ என நினைத்துவிட்டு கிளம்பிவிட்டான். மறக்காது அவளது வாகனச் சாவியை வைத்துவிட்டே சென்றிருந்தான்.
தன்னைக் கடந்து செல்லும் கணவனை மனோஹரி நிமிர்ந்து பார்க்கவேயில்லை. இன்னுமே படபடப்பு அடங்காது அதிகம் சுரந்த அட்ரீனலின் அவளை சாதரணமாக இருக்கவிடவில்லை. அவன் சென்றதும் உண்டுவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.
திடீரென அவனின் செய்கையில் திகைத்துப் போனாள் மனோஹரி. தன்னைப் பிடிக்கும் எனக் கூறி சிவக்கச் செய்து என்னவெல்லாமோ பேசியவனின் உருவம்தான் மனதில். சிரிக்கத் தெரியாத துர்வாச முனிவர் என்ற ஸ்தானத்தில் அவனை வைத்திருக்க, தற்போதைய அவனின் பேச்சு மொத்தத்தையும் விழுங்கியிருந்தது. நடுங்கிய கரத்துடன்தான் சாலையில் பயணித்தாள் பெண்.