“நெக்ஸ்ட் பேஷண்டை உள்ள வர சொல்லுங்க!” மனோ செவிலியரிடம் பணித்துவிட்டு கொஞ்சம் தளர்வாக காலை இழுத்து இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்தாள். கீழே நீண்ட நேரம் தொங்கவிட்டிருந்த கால்கள் மரத்துப் போனது போலொரு உணர்வு. கணவனைத் திட்டிக் கொண்டே வந்தவளை வேலை உள்ளிழுத்துக் கொள்ள, காலையில் நடந்ததை மறந்து போயிருந்தாள்.
‘கல்யாணம் அப்போ கூட முகத்தை எப்படி வச்சிருக்காரு இந்த மனுஷன்!’ என உதடுகள் கணவனை வஞ்சித்தாலும் விரல்கள் என்னவோ அவனது முகத்தை ஆசையாய் வருடின. இன்னுமே குமரன் கொடுத்த முத்தத்தின் குறுகுறுப்பு கழுத்தணியை மட்டுமல்ல அவளையும்விட்டு அகலாதது போன்ற எண்ணம். முதல் நெருக்கம், முதல் முத்தம் எப்போதோ நுகர்ந்த அவனின் நறுமணம் போல நாசியை இந்நொடியும் நிறைத்து தொலைத்தது. ஏனோ அவன் அருகே இருப்பது போலொரு உணர்வு உதட்டில் மென்னகையை படரச் செய்து.
‘அழகிடி நீ!’ செவியோரம் கிசுகிசுத்த குரலை இப்போது நினைத்தாலும் அடிவயிற்றிலிருந்து ஏதோ செய்து தொலைக்க, அறையிலிருந்த கண்ணாடியை எட்டித் தன்னைப் பார்த்துக் கொண்டாள். அதிசயமாய் இன்று காயம்பூ நிறத்தில் பருத்தி புடவை ஒன்றை அணிந்திருந்தாள். ஒரு முறை மடிப்பை நீவி சரிசெய்தாள். கணவன் முதன்முதலில் தன் புற்தோற்றத்தைப் பற்றிக் கூறியதும் மனம் நிறைந்து போயிருந்தது. வாழ்க்கையில் கடந்து சென்ற எத்தனையோ பேர் தன் புறத்தோற்றத்தைப் பற்றிக் கூறியிருந்தாலும், நேசம் கொண்டவன் உரைத்ததில் கொஞ்சமே கொஞ்சம் கர்வமும் வந்தமர்ந்து கொண்டது.
கைகள் கழுத்தணியிலிருந்த முருகன் படத்தைத் தடவின. திருக்குமரன் முருகனின் மறுபெயர் என்றுதானே அவரின் படமிட்ட கழுத்தணியை முதல்மாத சம்பளத்தில் வாங்கி அணிந்தாள். ஏனோ குமரனின் மூளை இத்தனை கூர்மையாய் இருக்க வேண்டாம் என மனம் கொஞ்சம் அவன் புத்திக் கூர்மையில் பொறாமைக் கொண்டது. அலைபேசியில் கைகள் அலைய, மனம் கொண்டவனைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தது.
குமரன் புதிதாய் கட்டும் கட்டிடத்தின் முதலாளி ஒருவரை சந்தித்துப் பேசிவிட்டு சூளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். யாரோ தன்னைத் தொடர்ந்து கொண்டிருப்பது போல எண்ணம் தோன்ற, பார்வையைச் சுற்றிலும். படரவிட்டான். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் நீண்ட நெடிய நேரமாய் அவன் பயணிக்கும் பாதையிலே சுற்றுவதாய் உள்மனம் எச்சரிக்கை செய்தது. அவர்கள் இருவரும் முகத்தை முழுதாய் மறைத்து தலைக்கவசம் அணிந்திருந்தனர்.
‘யாராய் இருக்கும் இவர்கள்?’ என்ற சிந்தனையுடன் வாகனத்தை இயக்கிய குமரன் அவர்கள் வலப்புறம் செல்வார்கள் என எண்ணி இடதுபுறம் ஒடித்து வாகனத்தைத் திருப்ப, வேண்டுமென்றே இவனது வாகனத்தின் மீது வேகமாய் வந்து அவர்கள் இடித்திருந்தனர். ஒரு நொடி குமரன் நிதானம் தப்பியிருக்க, கீழே விழுந்தவன் வலக்கையை ஊட்டியிருந்தான். கால் வேறு வாகனத்தின் அடியில் மாட்டியிருந்தது. கையிலிருந்த எலும்பு முறிந்து குருதி கொட்ட ஆரம்பிக்க, “ஏய்! யாருப்பா அது? சீக்கிரம் வந்து தூக்குங்க!” என சுற்றியிருப்பவர்கள் தன்னைத் தூக்கியதும் விழிகள் மங்கத் துவங்க, தலைக்கவசத்தை அவிழ்த்து நக்கலாய்க் குமரனைப் பார்த்தான் ஒரு வாலிபன்.
‘இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோம்!’ மூளை அந்நொடி கூட அலசி ஆராய, ‘கனியமுன், ஷெண்பாவின் தோழன்!’ என படபடவென நினைவுகள் அவனை அடித்த நாளை நோக்கி நகர, விழிகளை மெதுவாய் மூடினான் குமரன். சிறிது நேரத்திலே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். அவனுக்கு சிகிச்சை துரிதக் கதியில் ஆரம்பிக்கப்பட்டன. உடனடியாக குருதியைத் துடைத்து எலும்பு முறிவை சரிசெய்து கையில் கட்டிட ஆரம்பித்திருந்தனர்.
மருத்துவமனையில் குமரனை சேர்த்தவர்கள் சிந்துவிற்கு அழைத்து விஷயத்தைக் கூறினர். பின்னர் மனோஹரிக்கும் தகவல் பகிரப்பட்டது.
அலைபேசியில் கேட்ட செய்தியை உள்வாங்கிய மனோவின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தன. எந்த மருத்துவமனை என தெளிவாய்க் கேட்டவள், கைப்பையைத் தேடி எடுத்தாள். உடல் அவளையும் மீறி பதற்றத்தில் உதரத் தொடங்க, நெற்றியோரம் வியர்வைத் துளிகள் படர ஆரம்பித்தன. இத்தனை நேரம் சீராயிருந்த மூச்சு லேசாய் வாங்கத் துவங்க, சில நொடிகள் தன்னை நிதானப்படுத்த எடுத்துக் கொண்டாள். விபத்து என்றளவில்தான் செய்தி கூறப்பட்டது. அது எந்த அளவிற்கு என அவர்கள் உரைக்காததில். பயந்து போனாள் பெண்.
‘அவருக்கும் ஒன்னும் இல்ல மனோ!’ என ஒரு நொடி தன்னை நிதானப்படுத்தியவள், இருசக்கர வாகனத்தில் பறந்திருந்தாள். நொடியில் மனம் பலவித கற்பனைக் குதிரைகளை ஓட விட, முகத்தில் எதையும் காட்டாது சாலை ஒன்றே பிரதானம் என்ற வகையில் அதில் கவனத்தை செலுத்தினாள்.
குமரனின் கையிலிருந்த எலும்பு முறிவிற்கு கட்டுடிட்டு, காலிருந்த காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு முடிய, தனி அறைக்கு மாற்றப்பட்டான் அவன்.
சிந்து தானியில் வந்து இறங்க, மனோஹரியும் வந்திருந்தாள்.
“மனோ, குமரனுக்கு ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு மா… எப்படி இருக்கான்னு தெரியலை!” பெரியவரின் குரல் கலங்கி வெளிவர, அவரது முகம் வெளுத்துப் போயிருந்தது. மகனுக்கு ஒன்றென அழைப்பு வந்ததும் உயிர்வரை பயம் கவ்வியிருந்தது அவரை. எப்படி மருத்துவமனைக்கு வந்தார் என்ற பிர்கஞை கூட இல்லை சிந்துவுக்கு. மருமகள் முகத்தைப் பார்த்தவரின் கண்கள் நீரை உகுக்கத் தயாராகின. இவளுக்குமே உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது கட்டியவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணமும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் வந்திருந்தாள்.
“அத்தை, ஒன்னும் இல்ல. பெருசா அடிபட்டிருக்காது. வாங்க!” தனக்கும் அவருக்கும் சேர்த்தே ஆறுதல் கூறி குமரனிருக்கும் அறை எதுவென விசாரித்து இருவரும் நுழைந்திருந்தனர்.
“மிஸ்டர் திருகுமரன் பேஷண்டோட ரிலேட்டீவா நீங்க?” அவன் அறைக்கு வெளியிலிருந்த செவிலியர் வினவ, “ஆமா சிஸ்டர், அவருக்கு எப்படி இருக்கு இப்போ?” என படபடவென மனோவிடம் கேள்வி வந்து விழுந்தது.
“பயப்பட்ற அளவுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்ல, கைல போன் ப்ராக்சர் ஆகியிருக்கு. கால்ல லேசான அடிதான். டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது எல்லாத்தையும் டீடெய்லா சொல்லுவாரு. இப்போ நீங்க அவர்கூட உட்கார்ந்திருங்க!” என அவள் அகல, இருவரும் உள்ளே நுழைந்தனர்.
வலதுகையில் கட்டு கழுத்தோடு சேர்த்துப் போடப்பட்டிருக்க, இடது காலில் காயம் காய்ந்து கட்டிற்கு வெளியே இரத்தம் உறைந்திருப்பது நன்கு தெரிந்தது. குமரனுக்கு பெரிதாய் எதுவும் நிகழவில்லை என்றதும்தான் இரண்டு பெண்களுக்குமே உயிரே வந்தது.
சிந்து மகனருகே சென்றார். விழிகளை மூடிப் படுத்திருந்தான். சிறிது நிமிடங்களுக்கு முன்புதான் அவனுக்கு மயக்கமே தெளிந்திருந்தது. விழிகளை மூடியிருந்தவனின் மூளை விபத்து நடந்ததை ஒருமுறை மீட்டிப் பார்த்து என்னவென்று ஆராய்ந்து கொண்டிருக்க, சிந்துவின் கரம் அவனது அடிபட்ட கைகளை வருடியது. அந்த ஸ்பரிசத்தில் விழிகளைத் திறந்தான் குமரன். அவரது முகமே அகத்தைக் காண்பித்துக் கொடுத்தது.
தாய் மிகவும் பயந்திருக்கிறார் என்பது அவரது பாவனைகளை வைத்தே குமரனால் புரிந்து கொள்ள முடிந்தது. லேசாய் அவரது கண்களில் நீர் திரையிட்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்னரான மனதின் தவிப்பை தான் மட்டுமே அறிவார். ஒற்றை மகன்தான் உலகமென வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்மணியை சிறிது நேரத்தில் ஆட்டம் காண வைத்திருந்தான் இந்தக் குமரன். அவருடைய கண்ணீர் இவனை அசைத்துப் பார்த்தது. தந்தையை விட்டு வந்த தினத்தன்று தாயின் விழிகளில் நீரைப் பார்த்தான். அதற்குப் பின் இன்றுதான் அவர் அவனறிந்து கண்ணீர் சிந்துகிறார்.
“ம்மா… ஒன்னும் இல்லை மா எனக்கு!” என நன்றாய் எழுந்து அமர முயன்றவனின் முதுகுக்குப் பின்னே தலையணையை நிமிர்த்தி வைத்தாள் மனோஹரி. கணவன் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை அவள். அவன் நன்றாய் இருக்கிறான் என்ற வார்த்தையை அவள் உணர்ந்து உள்வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விழிகள் அவனது காலிலும் கையிலும் தொடர்ந்து படர்ந்து நலம் விசாரித்தன.
‘வலித்திருக்குமே இவருக்கு! எப்படி தாங்கியிருப்பார்?’ என்று அவன் மீதான கரிசனத்தில் கண்கள் கரித்தது பெண்ணுக்கு. எங்கே முகத்தைப் பார்த்தால் உடைந்து விடுவோம் என்றே தவிர்த்தாள்.
“ஏன் குமரா, வண்டி ஓட்டும் போது பார்த்து ஓட்ட மாட்டீயா? சின்ன காயம்னால சரியா போச்சு. பெருசா எதுவும் ஆகியிருந்தா, என்னாகுறது? எங்களைப் பத்தி யோசிக்க மாட்டீயா நீ?” ஆதங்கமும் வருத்தமுமாய்க் கேட்டவருக்கு உடல் லேசாய் குலுங்கியது. மகனுக்கு ஒன்னுமில்லை என மனதில் அழுந்தப் பதிய வைத்துக் கொண்டிருந்தவரின் கரத்தை தன் அடிபடாதக் கையால் பிடித்தான்
குமரன்.
“அம்மா, நான் நல்லா இருக்கேன். இது சின்ன அடிதான்!” என்றவனின் பாவனை இந்த விபத்து என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போலத்தான் இருந்தது. ‘கையிலிருக்கும் கட்டை எஞ்சிப் போனால் ஒரு மாதத்தில் அவிழ்த்துவிடலாம். நான் நன்றாக இருக்கிறேன்!’ என்ற எண்ணம் அகத்திலும் முகத்திலும் பிரதிபலித்தது. சிந்து அப்படியல்ல, குமரனைப் பார்த்ததும் அந்தப் பெண்மணியின் குரல் லேசாய் இடறிப் போனது.
“அத்தை, நீங்க முதல்ல உட்காருங்க. உங்கப் பையனுக்கு ஒன்னும் இல்ல… அழுது நீங்களே அவரை நோயாளியாக்கக் கூடாது. சின்ன அடிதான், பயப்பட ஒன்னும் இல்ல. பதறாம உட்காருங்க!” என மனோ அவரை அதட்டியபடி ஒரு இருக்கையை இழுத்துப்போட, சிந்து அமர்ந்தார். மருமகளின் அதட்டல் வேலை செய்தது போல. அவரது கண்ணீர் வற்றியிருக்க, உணர்ச்சிகளின் பிடியிலிருந்து வெளிவரவும், புறத்தூண்டல் உறைத்தது. நிதானத்திற்கு வந்தார் பெண்மணி.
“வலிக்குதா குமரா? கால்ல இன்னும் ரத்தம் வருது? நர்ஸ் பொண்ணு சொன்னா பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்லைன்னு. டாக்ரைப் பார்க்கலாமா?” எனக் கேட்டவர் குரலில் இப்போது தெளிவிருந்தது.
குமரன் பதில் இயம்பும் முன், “அத்தை, நான் போய் டாக்டரைப் பார்த்துப் பேசிட்டு வரேன்!” என அவ்விடத்தைவிட்டு அகன்ற மனோஹரியின் விழிகளில் இத்தனை நேரம் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்தன. கணவனுக்கு ஒன்றும் இல்லையென இத்தனை நேரம் துடித்துக் கொண்டிருந்த மனது அமைதியடைந்திருந்தது.
காலையில் தன்னிடம் வம்பிழுத்து, பேசி சிவக்கச் செய்து காதல் செய்து என கொள்ளை கொள்ளையாய்க் கொள்ளை கொண்டவன் கட்டிலில் ஓய்ந்து போய்ப்படுத்திருக்கவும் விழியோரம் ஈரம் துளிர்த்தது. தான் கலங்கினால் சிந்துவை யார் தேற்றுவது என்றெண்ணிதான் அதட்டி அவரை சரிசெய்திருந்தாள்.
‘இது எதிர்பாரது நிகழ்ந்த விபத்தா? இல்லை யாரேனும் திட்டமிட்டு செய்தார்களா?’ என்ற கேள்வி மூளையைக் குடைந்ததில் ஆங்காங்கே ஒட்டியிருந்த கொஞ்ச நிம்மதியும் எங்கோ பறந்திருந்தது.
‘அப்படி திட்டமிட்டு செய்திருந்தால், யாராய் இருக்கக் கூடும். கண்டிப்பாக தன் தந்தையிடம் வேலை பார்க்கும்போது சண்டையிட்ட, வஞ்சம் வளர்த்தவர்களாகத்தான் இருக்கக் கூடும்!’ என நினைத்தவளுக்கு பயம் நெஞ்சுக் குழிவரை கவ்வியது. அதுவும் குமரனின் எதையோ ஆழ்ந்து சிந்திப்பது போன்ற பாவனையை வைத்து, தன்னுடைய எண்ணம் சரியே என்ற முடிவிற்கு வந்தவளுக்கு, ஏனோ தந்தை மீது அத்தனைக் கோபம் வந்தது. இப்படியெல்லாம் எதாவது சூழ்நிலை வரக்கூடும் என்றுதானே ரங்காவிடமிருந்து குமரனைப் பிரித்திருந்தாள். இருந்தும் தந்தையும் அவர் சார்ந்த விஷயங்களும் இவனைத் துரத்துகிறதே? இது அவனை விட்டு விலகவே விலகாதா? வாழ்நாள் முழுவதும் துரத்துமா? என எண்ணமே குபுகுபுவென தொண்டையை அடைக்கச் செய்து, தளரச் செய்தது.
‘என்ன செய்து இதை சரிசெய்ய வேண்டும்?’ என மூளை அதிலே தேங்கி நின்றுவிட, மனதிலிருந்த உறுதியெல்லாம் மொத்தமாய் வடிந்துவிட்ட உணர்வு.
மருத்துவர் அறையை அடைந்ததும் மற்றைய எண்ணத்தைக் கிடப்பிலிட்டவள், “சிஸ்டர், டாக்டரைப் பார்க்கணும்!” என செவிலியரிடம் உரைத்தாள்.
“ரவுண்ட்ஸ் வரும்போது பார்க்கலாம் மேம்” அவள் பதில் இயம்ப, “இல்ல, அர்ஜெண்டா பார்க்கணும்!” என மனோ அழுத்திக் கூறினாள்.
“வெயிட் பண்ணுங்க, கேட்டுட்டு வரேன் மேம்!” என மருத்துவரிடம் அனுமதிப் பெற்று இவளை அனுப்பினாள்.
“யெஸ் சொல்லுங்க!” மருத்துவர் வினவ, அவர் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தவள், தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“வேற எதுவும் பெருசா இன்ஜூரி இருக்கா டாக்டர்?”
“டோன்ட் வொர்ரீ மனோஹரி, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. கைல பிராக்சர் மட்டும்தான். பட், ஒன் மந்த் கையை அசைக்கக் கூடாது. ஆப்டர் தட் ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு என்னென்னு டிசைட் பண்ணலாம். கால்ல இருக்க இன்ஜூரி இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்கத்தான் இன்ஜெக்சன், டேப்லெட் எல்லாம் கொடுத்துருக்கோம், அதை ரெகுலரா ஃபாலோ பண்ணா போதும். கைக்கு எந்த ஸ்ட்ரெஸூம் கொடுக்காதீங்க!” என்றவரிடம் மேலும் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டு நன்றியுரைத்து விடை பெற்றாள்.
உயிருக்கு ஆபத்தில்லை என புத்திக்கு உறைத்தாலும், மனம் என்னவோ மருத்துவரின் வாய்வழியாய்க் கேட்ட பின்புதான் சமாதானம் அடைந்தது.
மதிய உணவு நேரம் கடந்து மாலையாகிவிட்டதை உணர்ந்தவள் பணிமனைக்குச் சென்று தேநீர் ஒன்றைக் குடித்துவிட்டு அவர்கள் இருவருக்கும் உணவை வாங்கி வந்தாள்.
அறைக்குள் நுழையும் மனோவின் முகத்தையே சிந்து பார்க்க, “அத்தை, எந்த பிராப்ளமும் இல்ல. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க…” எனக் கூறி அவரை அமைதிப்படுத்தியவள், “டைமாகிடுச்சு, நீங்க சாப்பிடுங்க. அவருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்!” என உணவை அவர்முன்னே நீட்டினாள்.
“குமரா, நானே ஊட்டிவிட்றேன், நீ சாப்பிடு!” என்றவர் அவனுக்கு உணவை ஊட்டிவிட்டார். சின்ன தலையசைப்புடன் அவன் உண்ண, இடையிடையே மனோஹரிக்கும் அவர் ஊட்டிவிட, “அத்தை, இப்போதான் டீ குடிச்சுட்டு வந்தேன். வயிறு ஃபுல்லா இருக்கு!” என இவள் மறுத்தாள்.
“டீ எல்லாம் என்னதுக்கு காணும் மனோ. முதல்ல சாப்பிடு நீ!” என மருமகளை அதட்டியவரை இருவரும் புன்னகையுடன் பார்த்தனர். பழைய சிந்து மீண்டிருப்பது குரலிலே தெரிந்தது. அவரும் உண்டு முடித்தார்.
வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தைப் பேசாத, தன் முகத்தைக் கூட ஏறிடாத மனைவியைத்தான் குமரன் பார்த்திருந்தான். அவன் பார்வை உணர்ந்தாலும் அங்கேயிருந்த மருந்து மாத்திரைகளை கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனோ நிமிரவே இல்லை. அவள் என்ன நினைக்கிறாள் என கணவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோபமா, ஆற்றாமையா? அழுகையா என எதுவுமே அவளது முகம் பிரதிபலிக்காது போக, இவன் முகத்தில் சிந்தனைக் ரேகைகள் படர்ந்தன.
இத்தனை நேரம் மயக்க மருந்தின் உதவியால் வலி தெரியாதிருக்க, இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கைக்கு உணர்வு வரத் தொடங்கியிருந்தது. கை வலியில் முகத்தைச் சுளித்தான் குமரன்.
“என்ன குமரா, வலிக்குதா?” சிந்து அவன் முகத்தைப் பார்த்துப் பதற, அப்போதுதான் மனோஹரியும் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். ஏனோ அழுகை வரும் போலிருந்தது அவளுக்கு. கொஞ்சம் கோபமும் அதிக பயமும் அவளை அலைகழித்துக் கொண்டிருக்க, அதை உரியவனிடம் ஒப்படைக்கச் சொல்லி மனம் துடித்ததில், விழிகளில் மெதுவாய் நீர் நிரம்பத் துவங்கின. இத்தனை நேரமிருந்த உறுதி அவன் முகத்தைப் பார்த்து அமிழ்ந்து போவது போலொரு எண்ணம் வியாபித்தது.
மனம் சொல்ல எத்தனித்து மௌனித்துப்போன வார்த்தைகள் எல்லாம் தொண்டையை அடைக்க, அவனிடம் அழுதுவிடத் துடித்தது நேசம் கொண்ட நெஞ்சம். குமரன் அவள் முகத்தில் வந்து போன பாவனைகளைப் பார்த்திருந்தான். ஏனோ அத்தனை திமிறும் அலட்சியமும் தன்னம்பிக்கையும் நிரம்பியப் பெண், தான் என்ற வரையறைக்குள் மட்டும் ஏன் இப்படி உடைந்து போகிறாள் என எண்ணி அவளைப் பார்த்தான் குமரன்.
“அத்தை, அந்தத் தண்ணியை எடுங்க. சாப்பிட்டு இந்த மாத்திரையைப் போடணும். வலி தெரியாம இருக்கும்!” பார்வையை அவனிடமிருந்து பிரித்தவள் மாத்திரையைக் கணவனிடம் நீட்டினாள். எதுவும் பேசாது அதை விழுங்கினான் குமரன்.
“டேப்லெட் போட்டாச்சா மேம்? இந்த இன்ஜெக்சன் எல்லாம் வாங்கிட்டு வாங்க, டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது போடணும்!” என செவிலியர் உள்ளே நுழைந்து குமரனை ஒருமுறை சோதித்துவிட்டு கூறி அகன்றார்.
“நான் போய் வாங்கிட்டு வரேன் அத்தை!” என மனோ எழவும், திவாகர், ராதாமணி, ரங்கராஜன் அதேநேரம் சரியாய் மூவரும் உள்ளே நுழைந்தனர்.
“குமரா, என்னாச்சு, பார்த்து ட்ரைவ் பண்ணக் கூடாதா?” திவாகர் பதற்றத்துடன் அருகே வந்தான். மற்ற இருவர் முகத்திலும் அதே கேள்விதான். திருமணத்திற்குப் பிறகு ரங்கராஜன் இன்றுதான் அவனைக் காண்கிறார். என்னதான் பிடிக்காத மருமகனாக இருந்தாலும், அவர் ஒருகாலத்தில் அதிகம் நம்பிக்கை வைத்தவனாகிற்றே! அந்தப் பாசம் அவரை அழைத்து வந்திருந்தது.
“கவனமாதான் போனேன் திவாகர், டர்ன் ஆகும்போது ஸ்லிப் ஆகிடுச்சு!” என்றவனின் வார்த்தையைத் தந்தையும் மகனும் நம்பவில்லை. அத்தனை கவனக்குறைவானவன் குமரன் இல்லையென மனம் அடித்துக் கூறியது.
ரங்கராஜன் அவனருகே உள்ள இருக்கையில் அமர்ந்தார். இவனும் அவரைத்தான் பார்த்திருந்தான். “யாருன்னு தெரியுமா, நான் விசாரிக்க சொல்லவா?” என்றவரின் கேள்வியில் அவருக்குத் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தவன், “இல்ல, நான் பார்த்துக்குறேன். தெரியாம நடந்த ஆக்ஸிடென்ட் தான்!” என்ற குமரன் அந்தப் பேச்சைத் தொடர விரும்பவில்லை என்பது போலக் கத்தரித்தான்.
“மனோ, டாக்டரைப் பார்த்தீயா? என்ன சொன்னாங்க? பெரிசா ஒன்னும் இல்லைல?” ராதா மகளிடம் கேள்விக் கேட்கத் துவங்க, அவரது கேள்விக்குப் பதிலளித்தவளின் கவனம் குமரனிடம்தான். அவன் பதில் இவளுக்கு உவப்பாய் இல்லை. கண்டிப்பாக பொய்யுரைக்கிறான் என மனம் பதறியது.
சிறிது நேரம் ஆழ்ந்த மௌனம் கோலோச்சியது. சில நிமிடங்கள் அமர்ந்திருந்த ரங்கராஜன் விடைபெற எத்தனித்தவாறு மனைவியைப் பார்த்தார்.
“மனோ, நான் போய்ட்டு நைட்க்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் டி. மதியம் சாப்ட்டீங்களா?” என வினவினார்.
“கேண்டீன்ல வாங்கி சாப்ட்டோம் மா!” அவள் பதிலுரைக்க, “சரி, சரி டி. வெளிய வாங்கியே சாப்ட்டா உடம்பு சீக்கிரம் தேறாது. நான் சமைச்சு எடுத்துட்டு வரேன்!” என அவர்கள் இருவரும் விடை பெற்றனர். திவாகர் அங்கே அமர்ந்துவிட்டான். பெண்கள் இருவரும் எங்கேயும் தனியே சென்றுவர முடியாது. அதுவும் அல்லாது குமரனுக்கும் எதாவது உதவியென்றால் கண்டிப்பாக ஆண்துணை வேண்டுமென ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
“அத்தை, டீ, காபி வாங்கிட்டு வரவா? உங்களுக்கு வேணுமா?” என்றவளின் பார்வை கணவனிடம் திரும்பியது. வேண்டாம் என்பது போல அவனது தலை அசைய, “எனக்கெதுவும் வேணாம் மா!” என பெரியவர் பதிலளித்தார்.
விக்ரமின் கைகளில் திசைமாற்றியிருக்க, மகிழுந்து அத்தனை வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அவனது முகம் இறுகியிருக்க, அருகே அமர்ந்திருந்த ஷெண்பாவின் விழிகளில் உவர்நீர் வழிந்த வண்ணமிருந்தன. குமரனிற்கு விபத்து என அறிந்ததும் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கிளம்பியிருந்தனர்.
“விக்கி, குமரனுக்கு ஒன்னும் ஆகியிருக்காதில்ல. எனக்குப் பயமா இருக்கு!” என தேம்பியழுத ஷெண்பா பத்தாவது முறையாக இந்தக் கேள்வியைத் தொடுத்தாள்.
“அவனுக்கு ஒன்னும் ஆகியிக்காது!” என அத்தனை பொறுமையாய்க் கூறிய விக்ரம் மனதிலும் அவனுக்கு எதுவும் நிகழ்ந்திருக்கக் கூடாது என முதல்முறையாகக் கடவுளிடம் வேண்டுதல் வைத்தது.
ஷெண்பா சுத்தமாய் நிதானத்தை இழந்திருந்தாள். ‘குமரனுக்கு எதுவும் நிகழ்ந்திருக்கக் கூடாது. அவன் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு என்னுடைய அண்ணன் வேண்டும்!’ மனம் ஊமையாய் அழுது தொலைத்தது.
“விக்கி, குமரன் கூட இனிமே நம்ம சண்டை போட வேணாம். அவன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும். எனக்கு என் குமரன் வேணும், என் அண்ணன் வேணும் விக்கி… அவனுக்கு எதுவும் ஆச்சுன்னா, என்னாலயே என்னை மன்னிக்க முடியாது. சரியான ஈகோ எனக்கு. இத்தனை நாள் அவனைப் பிரிச்சு வச்சதுக்கு கடவுள்தான் பெருசா கொடுத்துட்டாரு போல. இப்போதான் எனக்குப் புரியுதுண்ணா!” என என்ன புலம்புகிறோம் என தெரியாது பிதற்றினாள். மனம் நிலையில்லாது தவிக்க, கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
நீ தானே எனக்கு என சிறுவயதிலிருந்தே அவனை நம்பிச் சுற்றி வந்தவளை திடீரென கையைத் தட்டிவிட்டு சென்ற குமரன் மேலிருந்த சிறுவயது கோபமெல்லாம் இப்போது கரைந்து போயின. அறியா வயதில் அவனுடன் சிரித்து, பேசி, மகிழ நினைத்து தவித்த நாட்களை யாரின் முன்னிலையிலும் வெளிப்படுத்த இயலாத ஏக்கங்களும் எச்சங்களும் ஏற்படுத்திய காயங்களால் இத்தனை நாட்கள் வீம்பாய் அவனை ஒதுக்கி வைத்து தவறிழைத்து விட்டோமே என விம்மித் துடித்துப் போனது ஷெண்பாவின் மனது. கண்டிப்பாக இனிமேலும் அவனைப் பிரிந்திருக்க இயலாது என மனம் ஆணியடித்துக் கூறியிருந்தது.
“ஷெண்பா, முதல்ல அழறதை நிறுத்து. அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது!” என விக்ரம் தங்கை அழப்பொறுக்காது அதட்டலிட்டான். இந்தப் பெண் அழுதே உடலிலிருக்கும் மொத்த சக்தியையும் இழந்துவிடுபவள் போல செய்து கொண்டிருந்தாள்.
அவன் அதட்டல் வேலை செய்ய, இப்போது அழுகை விசும்பலாய் மாறியிருந்தது.
சிறிது நேரத்திலே அவர்கள் மருத்துவமனையை அடைந்தனர். குமரன் பெயரைக் கூறி விசாரித்து அவனது அறை நோக்கிச் சென்றனர்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஷெண்பா அப்படியே நின்றுவிட்டாள். அழுகையை அடக்க உதட்டைக் கடித்தபடி நின்றவளுடன் விக்ரமும் உள்ளே நுழைந்தான். கையிலும் காலிலும் கட்டுப் போட்டு அமர்ந்திருந்த குமரனைப் பார்த்து ஷெண்பாவிற்கு மீண்டும் விழிகள் உடைப்பெடுத்தது. மௌனமாய் வறண்ட ஒரு புன்னகையை உதட்டில் தேக்கி அவனைப் பார்த்தாள் பெண்.
அவர்கள் இருவரையும் குமரன் எதிர்பார்க்கவில்லை என முகத்தின் பாவனைக் கூறியது.
தங்கையின் அழுது சிவந்திருந்த முகம் அவளது நிலையை எடுத்துரைக்க, “ஷெண்பா குட்டி…” என நீண்ட நெடிய காலங்கள் கழித்தான அவனது அழைப்பு கனிந்து போய் தங்கையிடம் விழ, விம்மலுடன் குமரனை தாவிச்சென்று அணைத்தாள். அவள் உடல் அழுகையில் குலுங்கியது. வார்த்தைகள் எல்லாம் வற்றிப் போக தேம்பல் மட்டுமே வெளிப்பட்டது. விக்ரம் அமைதியாய் அவர்களைப் பார்த்திருந்தான். அவனது விழிகளும் லேசாய் கலங்கிப் போயின.
மனோஹரி ஷெண்பாவை முறைத்துப் பார்த்தாள். எங்கே அடிபட்டக் கையை அவள் இடித்து விடுவாளோ என்ற பதைபதைப்பு அவளிடம். அது மட்டுமல்ல ஏனோ சிறிய பொறாமை கூட முகிழ்த்தது.
மருந்து வாங்கச் சென்ற திவாகர் அறைக்குள் நுழைந்தவன் அப்படியே நின்றுவிட்டான். ஷெண்பாவின் அழுதக் குரலும் சிவந்த முகமும்தான் அவனை வரவேற்றது. அவளைப் பார்த்தபடியே நின்றவனின் விழிகள் ஒரிரு திங்களுக்குப் பின்னான சந்திப்பில் அவளை தன்னில் சேர்த்துக்கொள்ள, அவளது அழுகை இவனை அந்த இடத்தில் நிற்கவிடவில்லை. அந்தக் குரல் இவனை அந்நொடி அமைதியாய் நிற்கவிடும் என நிச்சயமாய்த் தோன்றவில்லை. அவளது அழுகை இவனுக்குள் பரிதவிப்பை உண்டு செய்தது. வந்த வழியே விறுவிறுவென வெளியேறியிருந்தான்.