“சாரி குமரா, சாரிண்ணா! உன்கூட இனிமே பேசாம இருக்க மாட்டோம். நான் ரொம்ப ஈகோ பிடிச்சவ. அதான் கடவுள் எனக்கு சரியான பாடம் தந்துட்டாரு. உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு கேள்விபட்டதும் என் உயிரே போய்டுச்சு… எதுவும் ஆகிடக் கூடாதுன்னு சாமியை வேண்டிக்கிட்டே வந்தேன்!” கேவியத் தொண்டையை சரிசெய்து தேம்பலும் அழுகையுமாய் திக்கித் திணறிப் பேசியபடி குமரனது அடிப்பட்ட கையை வருடினாள் ஷெண்பா. குமரனுக்கு எதுவும் ஆகவில்லை என்ற சந்தோஷத்தை எப்படி வெளிபடுத்துவது எனத் தெரியவில்லை அவளுக்கு. செவி வழியாய் அவன் நலம் கேட்டு, விழி வழியாய் அவனை உணர்ந்து, தொடுகை மூலம் ஸ்பரிசித்து, வாய் வழியாய் நேத்தைப் பிதற்றினாள். ஐம்புலன்களும் அவனது நலம் நாடின. மீண்டும் அவனது இடதுபுற தோளில் முகத்தைப் புதைத்து கண்ணீரை உகுத்தவளை தமையன் பாசப்பார்வை பார்த்தான். அவனுக்குத் தெரியுமே ஷெண்பாவிற்கு தன்மீதான நேசத்தை. ஏதோ சந்தரப்ப சூழ்நிலையும் விதியும் அவர்களை பிரித்து வைத்திருந்தாலும் உறவுகளுக்கிடையே இருந்த பிணைப்பை ஒருவராலும் பிரிக்க முடியவில்லை. எப்போதும் அவளுக்கும் ஷெண்பாவிற்குமான நேசம் அலாதியானது.
அவளது தலையை மெதுவாகக் கோதி, “ஷெண்பா மா, எனக்கு ஒன்னும் இல்லை டா!” எனக் கூறியவனின் குரலில் கூட லேசான இடறல். எத்தனை வருடங்கள் கழித்தான இந்தப் பெண்ணின் நேசம் வெளிப்பட்டதில் அவன் நெகிழ்ந்து போயிருந்தான். உடல் அவளருகில் லேசாகிப் போன உணர்வு.
“கை ரொம்ப வலிக்குதா அண்ணா? எப்போ வீட்டுக்குப் போகலாம்னு டாக்டர் சொன்னாங்க?” என விழிகளில் வழியும் நீரைத் துடைத்தவாறு அவள் வினவ, “வலிக்கு மாத்திரை போட்டிருக்கான். ரெண்டு நாள்ல வீட்டுக்குப் போகலாம்னு டாக்டர் சொல்லி இருக்காரு ஷெண்பா குட்டி!” என அவளருகே வந்து சிந்து உரைக்க, அவரை இடையோடு அணைத்து வயிற்றில் முகம் புதைத்தவள், “சாரி சிந்து மா, இனிமே உங்கக் கூட சண்டை போட மாட்டேன். நம்ம எல்லாரும் எங்க இருந்தாலும், நல்லா இருந்தா அதுவே போதும் சிந்துமா!” என்றாள் மீண்டும் அழுகையுடன். நடந்த நிகழ்வு அத்தனையாய் அவளைக் கலவரப்படுத்தியிருந்தது.
குழந்தை பயந்திருக்கிறாள் என்றுணர்ந்தவர், “ஷெண்பா மா, அவனுக்குப் பெருசா அடி எதுவும் இல்ல. நீ பயப்படாத, அழுகையை நிறுத்து!” என அவளை சமாதானம் செய்ய, விக்ரம் இத்தனை பரபரப்புக்கும் பேச்சுக்கும் இடையிடாது குமரனை அழுத்தமாய்ப் பார்த்து முறைத்தான்.
அவனது பார்வையை உணர்ந்த குமரன், “விக்கி…” என எட்டி அவன் கையைப் பிடிக்க, “கையைவிட்றா நாயே!” என்ற விக்ரம் ஒருகாலை கட்டிலில் குற்றி ஏறி எக்கி அவனது சட்டையைப் பிடித்து, “பெரிய இவன்னு நினைப்பா டா! டூ வீலரை கூட ஒழுங்கா ஓட்டீட்டுப் போக மாட்டீயா?” எனக் கேட்டு அவனது முகத்தில் பட்டென அறைந்தான். கன்னம் திகுதிகுவென எரிந்து தொலைக்க, அடிவாங்கியவன் முகம் முழுவதும் சிரிப்புதான். பத்து வருடங்கள் கழித்து ஒருவழியாய் விக்ரம் பேசிவிட்டான் என்ற நினைப்பே குமரனுக்கு வலியை மறக்கடித்திருந்தது. மனம் நிறைந்து உதடுகள் விரிய முகம் மலரந்து அகம் கனிந்த சிரிப்பு அவன் வதனத்தில்.
“நான் கரெக்டா தான்டா போனேன்!” சிரிப்புடன் குமரன் உரைக்க, “கிழிச்ச… சரியா போயிருந்தா இப்படி அடிபட்டிருக்குமா?” என்றவன் குரலின் காரம் இத்தனை நேரத் தவிப்பை மட்டுப்படுத்தியது. ஷெண்பா அழுது கதறித் தன் பரிதவிப்பைக் கொட்டிவிட்டாள். ஆனால், இவனால் அப்படி செய்ய முடியவில்லை. அதனால்தான் இருந்தக் கோபத்தை எல்லாம் சேர்த்து வைத்துக் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
“சாரி டா!” குமரன் உதட்டிலேறிய புன்னகையுடன் அவன் கையை மீண்டும் பிடிக்க, “சிரிக்காத டா! வெறியாகுது!” என்றவன் ஏதோ கெட்ட வார்த்தையை உதட்டுக்குள் முணுமுணுத்தான். இன்னுமே அவனுக்குள் பரிதவிப்பும் பதட்டமும் அடங்கவில்லை. இவன் சிரிப்பு அதற்கு தூபம் போடுவது போலிருக்க, பெண்கள் இருக்கிறார்கள் என வாயைக் கட்டுப்படுத்தியவனால் கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
குமரனின் சிரிப்புத் தொடர, விக்ரம் மீண்டும் கையை ஓங்க, “என்னப் பண்றீங்க நீங்க?” என மனோ இடையில் வந்து அவனைத் தடுத்திருந்தாள். அவன் முன்பு அடித்த அடியிலே இவள் அத்தனை அனலை விழிகளில் கக்கியபடி அவனை எரித்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த அண்ணனும் தங்கையும்? அவளென்னவென்றால் அவனைக் கட்டிக்கொண்டு அடிபட்ட கையில் இடிக்கப் பார்க்கிறாள். இவன் என்னவென்றால் அடித்தேவிட்டான்!’ என்ற எரிச்சலில் நின்றவள் விக்ரம் மீண்டும் அடிக்கப்பாய பொங்கிவிட்டாள்.
“அவருக்கு அடிபட்டிருக்குன்னு பார்க்கதான் வந்திருக்கீங்க. அடிச்சு மேலும் காயப்பட வைக்க இல்ல!” இவள் குரல் அவனை மிரட்டும் தொனியில் வந்து விழ, விக்ரம் ஒரு நொடி திகைத்துப் போனான். ஷெண்பா கூறிய போது கூட அவன் நம்பவில்லை. ஆனால், இப்போது மனோஹரியின் தொனியே கூறியது அவளது இயல்பை.
“என் அண்ணன் அவன்! அவனை அடிப்போம், திட்டுவோம். எல்லா உரிமையும் எங்களுக்கு இருக்கு!” ஷெண்பா எழுந்து நின்று சண்டைக்கு வருவது போல பேச, குமரன் யார் பக்கம் பேசுவது எனத் தெரியாது விழித்தான்.
“மனோ, ஷெண்பா என்ன இது? சின்னப் பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டு…” சிந்து ஒரு அதட்டலிட்டாலும் இருவருமே தணிவது போல தெரியவில்லை.
இன்னுமே சண்டை போடும் கடுவன் பூனை போல முகத்தை வைத்திருந்தார்கள்.
“மனோ, நீ இங்க வா… அத்தைகிட்டே உட்காரு!” என மருமகளை தன்னருகே இருத்தினார் பெரியவர். அவரது கரத்திலிருந்து தன் கையைப் பிடித்திழுத்துக் கொண்டவள், “உங்க மக வந்ததும், மருமக ரெண்டாபட்சமா போய்ட்டேன் இல்ல அத்தை!” என இவள் ரோஷமாய்க் கேட்டு நகர்ந்து அமரவும், அவருக்கு உதட்டில் புன்னகை பூத்தது.
“மனோ…” என அவளது கன்னத்தைத் தட்டி அருகே இழுத்தமர வைத்தவர், “அப்படி இல்ல டா. சின்ன வயசுல இருந்தே அவங்க அப்படித்தான். அடிச்சுப்பாங்க, சேர்ந்துப்பாங்க. இடையில எதாவது கேட்டா, நம்மளை ஜோக்கராக்கிடுவாங்க டா. அதுவும் இல்லாம, ரொம்ப நாள் கழிச்சு விக்ரம் பேசவும், கோபப்பட்டு அடிச்சான்…” என விளக்கம் கொடுத்தவர், “எனக்கு நீயும் அவங்களும் வேற வேற இல்லை. நாலு பேருமே ஒன்னுதான் டா!” என்றார் பாசத்துடன்.
“நம்பிட்டேன் அத்தை, நம்பிட்டேன்…” என சடைத்தவள், “நான் போய் காஃபி வாங்கிட்டு வரேன். இவங்க பேசி, அடிச்சுக்கிறதைப் பார்த்து என்னால சும்மா இருக்க முடியாது!” என மனோஹரி வெளியேறிவிட, பெரியவர் சிரித்துவிட்டார்.
உரிமையுணர்வும் பொறாமையுணர்வும் தலைதூக்கியதில் ஷெண்பா குமரன் கட்டிலில் அவனுக்கு நெருங்கி அமர்ந்து கையைப் பிடித்துக்கொண்டாள். தனக்கு மட்டுமே தன் தமையன் என்ற பாவனை அவளது முகத்தில் தீவிரமாயிருந்தது. குமரனுக்கு அவளது சின்ன வயது செய்கை நினைவை நிறைக்க, உதட்டில் சிரிப்பு மலர்ந்தது.
“ஷெண்பா, சின்னப்புள்ளை மாதிரி ஏன் அவகிட்டே சண்டை போட்ற. அவ உன் அண்ணி, அதுக்குரிய மரியாதையை நீ கொடுக்கணும்!” தமையன் கூற, “ஆமா! ஆமா… பொல்லாத அண்ணி. எனக்கு இந்த அண்ணியைப் பிடிக்கலை குமரா!” என இவள் முணுமுணுப்பது தெளிவாக இரண்டு ஆண்மகன்களின் செவியிலும் விழத்தான் செய்தன.
“ஷெண்பா, என்ன பேச்சு இது?” விக்ரம் தங்கையை அதட்ட, “விடு விக்கி!” என குமரன் எப்போதும் போல அவளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட, இருவரையும் முறைத்தான் அவன்.
“இதை மட்டும் அவ கேட்டா, உன்னைக் கிழிச்சு தொங்க விட்ருவா!” குமரன் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி தங்கையிடம் கூறினான். என்னவோ கையிலிருந்த காயத்தின் வலி, சுற்றியிருக்கும் மருத்துவமனை என எதுவுமே அவனை அந்நொடி பாதிக்கவில்லை. அருகிலிருந்த இருவரின் இருப்பும், நீண்ட நாட்களுக்குப் பின்னான இயல்பான பேச்சிலும், சிரிப்பிலும் உரிமையுணர்விலும் நிறைந்து போயிருந்தது. அது முகத்திலும் பிரதிபலிக்க, காயம் கண்ட கைகளின் சுமை கூட இப்போது லேசான சுகமாய் இருந்தது.
“ஆமா, இல்லைன்னா மட்டும் உன் பொண்டாட்டி என்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிடுவாங்க… வாய் ரொம்ப நீளம் அவங்களுக்கு!” ஷெண்பா மனோவை நினைத்துப் பல்லைக் கடித்தாள்.
“அவ உங்களை என்னப் பண்ணா? எப்போ பார்த்துப் பேசுனீங்க?” குமரன் முகம் இப்போது யோசனையில் சுருங்கியது.
“பேசுனோம் இல்ல, பேசுனாங்க உன் பொண்டாட்டி, நான் கேட்டேன். அவ்வளோதான் நடந்துச்சு!” சின்னவள் சடைத்தாள்.
“எப்போ? எனக்குத் தெரியாதே!” அண்ணன் விழித்தான். ஷெண்பா அன்று தங்களுக்கு இடையே நடந்த உரையாடலை விவரித்தாள்.
“என்ன பேச்சு… ப்பா! இப்படி வாயாடி பொண்டாட்டி உனக்கு வேணுமா?” இவள் கோபமாய்க் கேட்க, குமரனுக்கு மனோவின் செய்கையின் சத்தியமாய் கோபம் வரவில்லை. தனக்காகத்தான் அவள் பேசியிருக்கிறாள், அவளது சண்டையின் சாரம்சம் தாங்களை சேர்த்து வைக்கத்தான் என உணர்ந்த நொடி மனதை வருடிப் போனாள் மனைவி. அதில் உதட்டோரம் புன்னகை நெளிய, “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, அவகிட்ட நீயே பேசு. உனக்குப் பிடிக்காத பொண்ணு எனக்கும் வேணாம்!” என்றவன் குரலில் நக்கல்தான்.
“ஆமா! ஆமா.. நான் பேசுறதை அவுங்க கேட்டுட்டாலும்!” அலுத்துப் போனக் குரலில் கூறிய ஷெண்பாவிற்கு மனோவின் மீது கோபமிருக்கும் அளவிற்கு அன்பும் வந்திருந்தது சமீப காலத்தில். தன் அண்ணனை திருமணம் செய்ய அவள் எத்தனை மெனக்கெட்டிருக்கிறாள் என தெரிய வந்தப்போது அவள் மீதான மரியாதையும் தானாய் ஓரடுக்கு உயரந்திருந்தது. தன் அண்ணனை அவள் நன்றாய்ப் பார்த்துக் கொள்வாள் என மனதோரம் குமரனைப் பற்றிய கவலை அகன்றிருந்தது. இருந்தும் தனக்கு மட்டுமே தன் தமையன் வேண்டும் என்ற உணர்வும் உரிமையும் அவளை அமைதியாய் இருக்க விடவில்லை. அதனாலே மனோஹரியிடம் சரிக்கு சரியாய் பேசிவிட்டாள்.
“உனக்கு ஏத்தப் பொண்ணாதான் டா பிடிச்சிருக்க. வாய் ரொம்ப நீளம் போல!” விக்ரம் கொஞ்சம் தணிந்து போயிருக்க, அண்ணன் தங்கையின் உரையாடலை அமைதியா கேட்ட வண்ணமிருந்தவன், இடை புகுந்தான்.
“நான் எங்கப் பிடிச்சேன். அவதான் என்னைப் பிடிச்சா?” குமரன் குறும்பாய்க் கூற, சிந்து சிரித்தபடியே பேசும் மகனை ஆசையாய்ப் பார்த்திருந்தார். விக்ரம், குமரன், ஷெண்பா என மூவரும் சிறுவயதில் பேசி, சிரித்து, விளையாடிய நாட்கள் கண்முன்னே வந்து போயின.
இத்தனைப் பேச்சு தன்னை வைத்து அவர்கள் பேசுவார்கள் என அறிந்திடாத மனோஹரி கையில் குளம்பியுடன் வந்தாள். திவாகர் வெளியேயிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, “ஏன் திவா உள்ள வராம வெளிய உக்கார்ந்து இருக்க?” என வினவினாள்.
“அது… சும்மாதான்!” என்ன செல்லுவான் திவாகர். ஷெண்பாவின் அழுகைப் பொறுக்க முடியாது உள்ளே வராமல் வெளியே அமர்ந்திருக்கிறேன் என கூறினால், மனோவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அவன் அறிந்ததே.
“ஆமா! நீ டேப்லெட் வாங்கிட்டு உள்ள வந்த தானே? அப்புறம் ஏன் வெளியே போய்ட்ட?” யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என திவாகர் எண்ணி வெளியேறியிருக்க, அந்தக் கலவரத்திலும் இவளது பார்வையில் நான் விழுந்துவிட்டேனா? என எண்ணி தங்கையைப் பார்த்து விழித்தான்.
“ஆமா! அண்ணனும் தங்கச்சியும் ஓட்ற பாசமலர் படத்தை பார்க்க முடியாம வெளிய ஓடி வந்துட்டீயா? ம்க்கூம்… நானும்தான் கேன்டீனுக்குப் போய்ட்டேன் திவா. என்னாலயும் பார்க்க முடியலை!” பொறாமையில் பொங்கி அவளாகப் பேசிய தங்கையிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தலையை மட்டும் அசைத்து வைத்தான் திவாகர்.
“சரி, உள்ள வா… இந்நேரம் படம் முடிஞ்சிருக்கும்!” என உள்ளே நுழைந்த மனோவின் பின்னே திவாகர் நடந்தான்.
வந்தவனின் பார்வை எத்தனைக் கட்டுப்படுத்தியும் ஷெண்பாவைத்தான் சுற்றி வந்தன. யாரேனும் பார்த்தால் தவறாக எண்ணக் கூடும் என சிந்தனை சென்றாலும் உள்ளம் கேட்காது அவளிடம் சமீபித்தது.
அழுகை நின்றிருக்க, முகத்தை சுருக்கி, முறைத்துப் பின் சிரித்து என பேசியவளின் வலக்கை உயர்ந்து நெற்றியோரம் கலைந்து வழிந்த முடியைப் பின்னே தள்ளிக் கொண்டிருந்தான. அழுது சிவந்திருந்த முகம் இப்போது பூவாய் மலர்ந்திருக்க, இவனுக்குள் ஒரு ஆசுவாசம். யாரையும் அறியாது மூச்சை இழுத்து உதட்டைக் குவித்து ஊதியவன் ஓரமாய் ஓரிருக்கையில் அமர்ந்தான். இந்தப் பெண் அவனை சும்மாவிடப் போவதில்லை என உள்மனம் அடித்துக் கூறியது.
நிறைவேறாத ஆசை எனத் தெரிந்தாலும் அவள்மீதான ஆசைப் பிரவாகமாகப் பொங்கித் தொலைத்தது. விழிகளைக் கட்டுப்படுத்தி மனதை அமைதிபடுத்தி அலைபேசியில் புகுந்தான்.
ஷெண்பாவிற்கு தன் தமையனிடம் பேச ஆயிரமிருந்தன. இடைப்பட்ட நாட்களில் அவளுக்குக் கிடைத்த நட்புகள், படித்த பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள், சுற்றிய இடங்கள், வாங்கிய உடைகள் என அனைத்தையும் அவனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். குமரன் சளைக்காது அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க, விக்ரமும் இடையிடையே பேச்சில் கலந்தான்.
மனோஹரி அவர்கள் மூவரையும் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தாள். சிந்துதான் மருமகளிடம் பேச்சை வளர்த்தார்.
“விக்கி, நேரமாச்சு… நீ இவளைக் கூட்டீட்டு கிளம்பு. வீட்ல சொல்லிட்டு வந்தீங்களா? தேடப் போறாங்க!” குமரன் கூற, தன் பேச்சு தடைபட்டதில் அவனை முறைத்தாள் சின்னவள்.
“நாளைக்குப் பேசலாம் ஷெண்பா. லேட் நைட் வீட்டுக்குப் போகக் கூடாது!” என அண்ணனாய் அதட்டலிட்டவன், விக்ரமைப் பார்த்தான். அவனும் தலையை அசைத்து விடைபெற எத்தனித்தவன் ஒரு நொடி தயங்கி குமரனை அணைக்கவும், அவன் திகைத்துப் போனான்.
“பத்திரமா இரு டா… இனிமே இப்படி கேர்லெஸ்ஸா இருக்காத. ரொம்ப பயந்துட்டோம்!” என்றவனின் குரல் இத்தனை நேரமிருந்த கோபமும் இறுமாப்புமில்லை. தம்பியின் மீதான அக்கறையில் லேசாய் கனிந்து உடைந்து போயிருக்க, குமரன் உடல் நிச்சயமாய் தளர்ந்து போனது. எத்தனை பயந்திருப்பான் விக்ரம் என புரிந்தவன், “சாரி விக்கி!” என்றான் வருத்தமான குரலில். அவன் வேண்டுமென எதையும் செய்யவில்லை. அதுவாய் நடந்துவிட்ட நிகழ்வு கைமீறி செல்லவும், ஒன்றும் செய்ய முடியாது போனது.
அவனிடமிருந்து பிரிந்த விக்ரம் தலையை அசைக்க, “கவனமா போ விக்கி…” என்ற சிந்துவின் குரலுடன் இருவரும் விடை பெற்றனர். இப்போது திவாகரின் பார்வை ஷெண்பாவிடம்தான். செல்லும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
சில நிமிடங்களில் செவிலியர் வந்து மனோவை அழைக்க, சிந்துவும் உடன் சென்றார். குமரனும் திவாகரும் அறையில் தனித்திருந்தனர்.
“உங்களோட பார்வையை நானும் பார்த்தேன்… ஷெண்பா… அவ குழந்தை, இது எந்த வகையிலுமே ஒத்துவராது. இனிமே பார்க்காதீங்க!” இடைவெளிவிட்டு பேசினாலுமே குமரன் குரலில் உறுதியிருந்தது. இதை நீ மீண்டும் செய்யக் கூடாது என்றொரு கட்டளை இருந்தது.
தன்னுடைய பார்வை அவனுக்குப் புரிந்துவிட்டது என உணர்ந்த திவாகர், ‘பார்க்கத் தானே செய்தேன்!’ என ஆயசமாய் அவனை நோக்கினான்.
“திவாகர், இது அவளுக்கு மட்டும் இல்ல, உங்களுக்கு முக்கியமா உங்கப்பா, அம்மாவுக்காகதான் சொல்றேன்!” என்றவன் முன்னே கைநீட்டி பேசவேண்டாம் எனக் சைகை செய்த திவாருக்கு அத்தனைக் கோபம்.
‘ஏன் இவன் தங்கையை நான் பார்க்கக் கூடாதா? இவன் என் தங்கையை திருமணம் செய்யலாம். அதெல்லாம் தவறு என்ற வரையறைக்குள் வராதா?’ என்ற கோபம் முனுக்கென வர, “ஆமா! நான் பார்த்தேன் குமரா… தப்புதான். பேச்சை விடு!” ரோஷமாய் உரைத்தவன் விறுவிறுவென வெளியேறினான். ஏனோ குமரனின் பேச்சு அத்தனை உவப்பாய் இல்லை திவாகருக்கு. அவன் பேசிய பிறகுதான் இன்னுமே ஷெண்பாவை பார்க்க, பழக, தெரிந்து கொள்ள வேண்டும் என்றொரு உந்துதல். தவறென மனதில் உருப்போட்டிருந்த விஷயத்தைக் குமரன் வாய்வழியாய்க் கேட்டதும் ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை.
‘ஆமா… பார்த்தேன். எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அதனால் பார்த்தேன். இனிமேலும் பார்ப்பேன்!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான். குமரன் அவன் போவதை அமைதியாய்ப் பார்த்திருந்தான். திவார் பேச்சு ஒரு வகையிலிருந்தாலும் அவனது செயல் வேறெதையோ உணர்த்த, இனிமேல் அவனைத் தன் பார்வை வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்தான்.
இரவுணவை சமைத்து எடுத்துக்கொண்டு மருத்துவமனை உள்ளே நுழைந்த ராதா மகனைக் கண்டுவிட்டார்.
“திவா, அதுக்குள்ளேயும் கிளம்பிட்டீயா? இருடா, சாப்பாட்டைக் கொடுத்துட்டு வந்துட்றேன். சேர்ந்தே போகலாம், வாடா!” என அவனை அழைத்தார்.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… கிளம்பப் போகும்போது கால் பண்ணு மா. பிக்கப் பண்ணிக்கிறேன்!” என அவர் முகத்தைப் பார்க்காது வெளியேறும் மகனை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம் ராதா, நாங்க இங்க வாங்கி சாப்பிட்டிருப்போம் இல்ல?” என சிந்து வினவ,
“நல்லா கேட்குறீங்க… நான் சமைச்சு எடுத்துட்டு வராம யார் எடுத்துட்டு வருவா. சாப்பிடுங்க நீங்க!” பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை ராதா.
சிந்துவும் மகனுக்கு உணவை ஊட்டியவாறு தானும் உண்டு முடிக்க, மனோவும் சாப்பிட்டாள்.
பாத்திரங்களை கழுவி பையில் நிரப்பிய ராதா, “உங்க அண்ணனுக்குப் ஃபோன் போடு மனோ. அவன் வந்து என்னைக் கூட்டீட்டுப் போவான்!” என்றார்.
அப்போதுதான் திவாகர் அறையில் இல்லாதது சிந்தனையில் உறைக்க, “அவனை எங்கம்மா காணோம்?” என்றவாறே அலைபேசியை எடுத்து திவாகருக்கு அழைத்தாள்.
“ஏதோ வேலை இருக்குன்னு கிளம்பிட்டான்!” பெரியவர் பதில் இயம்பினார். குமரன் எதுவும் பேசவில்லை. மனோவிடம் திவாகரைப் பற்றிக் கூறவும் தோன்றவில்லை.
அழைப்பு ஏற்கப்பட, “அண்ணா, அம்மாவைக் கூட்டீட்டுப் போக வா!” தங்கை அழைக்க, “நான் கீழே இருக்கேன். அவங்களை வர சொல்லு!” என்பதோடு அவன் அழைப்பைத் துண்டித்தான்.
“ம்மா, கீழே வெயிட் பண்றானாம். நீ போ…” என்றவள் ஒரு நொடி நிறுத்தி சிந்துவைப் பார்த்தாள்.
“அத்தை, தூங்கி எழுந்து நீங்ளும் காலைல வாங்க, இப்போ கிளம்புங்க!” மருமகள் கூற,
“இல்ல மனோ, வீட்டுக்குப் போனாலும் எனக்குத் தூக்கம் வராது. நான் இங்கேயே இருக்கேன்!” அவர் மறுத்தார்.
“ஏன் தூக்கம் வராது, அதெல்லாம் நல்லா வரும். இங்க சேர்லயே உக்கார்ந்திருந்தா, உங்களுக்கு கால் வீங்கிரும். அதுவுமில்லாம காலை சமைச்சு எடுத்துட்டு வருவீங்க நீங்க. ரெண்டு நாளும் அவருக்கு வெளியவே வாங்கிக் கொடுத்தா, ஒத்து வராது. அதனால கிளம்புங்க!” எனப் பேசி சரிசெய்து இரண்டு பெண்களையும் அனுப்பிவிட்டு வந்தாள் மனோஹரி. சிந்துவின் வயதை எண்ணி, அவரது உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு கட்டாயப்படுத்தி அவரை அனுப்பி வைத்திருந்தாள்.
அறை அத்தனை அமைதியாயிருக்க, மனோஹரியின் வளையல் சத்தம் மட்டும்தான் செவியை அடைந்தது. இரவு உண்டபின் என்னென்ன மாத்திரைகளை கணவனுக்குக் கொடுக்க வேண்டும் எனப் பார்த்து அதை தனியே பிரித்து எடுத்தவளின் மீது குமரனின் பார்வை படிந்தது. காலையிலிருந்து அத்தனை பேர் இருந்ததில் இந்த தனிமை வாய்க்கவில்லை. இப்போது அமைதியாய் அவளை அவதானித்தான். வந்ததிலிருந்து ஒரு வார்த்தை அவனைப் பார்த்து மனைவி பேசவில்லை என்ற உபரித் தகவலை மூளை வழங்கியது.
“இந்த டேப்லெடைப் போடுங்க!” என்றவளின் வளைக்கரம் அவன் முன்னே நீள, குமரன் எந்த எதிர்வினையுமாற்றாது அமர்ந்திருந்தான்.
அவன் வாங்கவில்லை என்றதும் வாயருகேகொண்டு சென்றவள், “டேப்லெட் எடுத்துகிட்டாதான் வலி தெரியாம இருக்கும். வம்பு பண்ணாம சாப்பிடுங்க!” என உதட்டுக்குள் திணித்தவளிடம் மறுக்கத் தோன்றாது நீரை வாங்கிப் பருகினான். அவ்வளவுதான் என அகலச் சென்றவளின் கரத்தைப் பிடித்திழுத்தான் குமரன்.
“என்ன… என்ன வேணும்?” என்றவள் கைகளை உருவப் போராடினாள். பேச்சில் கோபமோ அல்லது அந்நியத் தன்மையோ அப்பட்டமாய் விரவியிருந்தது.
ஆனால் அவனின் பிடி இறுக்கமாய் இருந்தன.
“என் முகத்தைப் பாரு டி!” அதட்டலாய் உரைத்தவனை முறைத்தவள், “ஆமா! இப்போ முகத்தைப் பாரு, மூஞ்சியைப் பாருன்னு வருவாரு! தங்கச்சி வந்தா நாங்க எல்லாம் கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!” என்று முணுமுணுத்தவளின் வார்த்தைகளில் அவனது அதரங்களில் புன்னகை.
“ஏய், சின்ன புள்ளை கூடப் போய் நீ சரிக்கு சரியா நிப்பியா டி?” என்றவன் கேள்வியில் கோபமாய் கரத்தை உதறினாள் மனோ. நொடியில் அவளது ஒருபக்க இடையை சுண்டி இழுத்து மனைவியின் இடையோடு கட்டிக்கொண்டு முகத்தைப் புதைத்திருந்தான் கணவன். ஏனோ காலையில் நடந்த விபத்தில் உடைந்திருந்தாலும், மற்றவர்களுக்காக என அத்தனையும் உள்ளுக்குள்ளே வைத்து அழுத்திக்கொண்டு இயல்பாய் முகத்தை வைத்திருந்தவளின் பாவனை
மனதில் அழுத்தமாய் பதிந்திருக்க, அதில் மனைவியின் அணைப்பு வேண்டுமென உடல் அனத்தியதில் அவளை இறுக கட்டிப்பிடித்திருந்தான் கணவன்.
மனோஹரி ஒரு நொடி திகைத்துப் போனாள். ஆனால், மறுகணம் அவளது கரங்கள் குமரனது தலையோடு தன் வயிற்றில் அழுத்தியது போல தானும் இறுக்கி அணைத்தாள். உடல் நடுங்கியது அவளுக்கு. விபத்து நடந்ததிலிருந்த நடந்தவை எல்லாம் அடுத்தடுத்து நினைவில் வர, “ஏன் இப்படி பண்ணீங்க, அறிவிருக்கா உங்களுக்கு?” கோபமாய் கேட்க முயன்றாலும் குரல் உடைந்திருந்தது பெண்ணுக்கு.
மெல்லிய விசும்பல் அவளிடம் தென்பட, “அழறீயா டி?” என குமரன் நிமிர்ந்து அவளின் முகத்தைப் பார்க்க, “நான் ஏன் அழப் போறேன், நான் அழலை!” ரோஷமாய் உரைத்தவளைப் பார்த்து கணவன் சிரிக்க, அவனை முறைத்தவளின் இதழ்கள் கணவன் நெற்றியில் அழுத்தமாய் பதிய அவன் உடல் தளர்ந்து போனது. அந்த முத்தத்தையும் அவளது உடல் வெப்பத்தையும் சுகித்தான் குமரன்.
“ஏன் இப்படி பண்ணீங்க? இதுக்குப் பயந்துதான் அடிதடி செய்யவிடக் கூடாதுன்னு அப்பாகிட்டே உங்களை வேலை பார்க்கவிடலை. உங்களுக்கு எதுவும் ஆகியிருந்தா, உங்களை மட்டுமே உலகமா நினைச்சிட்டிருக்க உங்கம்மா என்னவாகி இருப்பாங்கன்னு யோசிச்சீங்களா? நான்… எனக்கு… அது எப்படி இருப்பேன்னு உங்களுக்குத் தோணலை இல்ல?” கோபமாய் கேட்க முயன்று தோற்றவளின் குரல் ஆற்றாமை பொங்க, விழிகளில் குபுகுபுவென நீர் வழிந்தது. கட்டியவனுக்கு எதுவும் ஆகியிருக்குமோ என்ற துடித்துப் போன இதயம் இப்போது வேறெதுவும் பிரச்சனையாகி விடக்கூடாது என மீண்டும் பரிதவித்தது.
குமரன் மனைவியைப் பார்த்தான். அவளது ஆதங்கம் இவனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் அவனது தொழில் இதுவென்றானப் பிறகு வேறு என்ன செய்ய? பெரு மூச்சை வெளிவிட்டவன், அவளை தன்னருகே அமர வைத்தான்.
“சரி, அழாத மனோ. ட்ரை பண்றேன் டி. பட் இப்போ நடந்தது ஆக்ஸிடென்ட் தான்!” என்றவனை முறைத்துக் கண்ணீரைத் துடைத்தவள், “போய் சொல்லாதீங்க. எனக்குத் தெரியும், இது ஆக்ஸிடென்ட் இல்லன்னு…” கீழ் கண்ணால் முறைத்தவளை ஆசையாய் பார்த்தான். அவள் நம்பமாட்டாள் என்று தெரிந்துதானே பொய்யுரைத்தான். அழுகை நின்று அவனை முறைத்தக் கண்ணில் முத்தமிடும் வேகம். தனக்காகவென ஷெண்பாவிடம் சண்டையிட்ட இதழ்களுடன் தானும் முத்தச் சண்டையிட வேண்டும் என்ற உந்துதல். ஆசையாய் ஆர்வமாய் பார்வையிலே மனைவியை கபளீகரம் செய்தவன், “மனோ, உன் கழுத்துல என்னவோ இருக்கே!” என்றான்.
“என்ன? என்ன இருக்கு?” குனிந்து கழுத்தைப் பார்த்தவள், “ஒன்னும் இல்லையே…” என்றாள்.
“ச்சு… இங்க வா, நான் பார்க்குறேன்…” அவன் குரலின் பேதம் உணராதவள் குனியவும் அவளது கழுத்தணியோடு சேர்த்து மனைவிக்கும் ஒரு முத்தம் கொடுத்தான். அவனது செய்கையில் பதறி, திகைத்து, விழித்து, “என்ன பண்றீங்க, இது ஹாஸ்பிடல்!” என மிரட்டினாள் மனைவி. உடல் உதறியது அவளுக்கு.
“ஹக்கும்… என்ன என்ன பண்ணேன். இப்போதைக்கு என்னால வேறெதையும் பண்ண முடியாது!” ஏக்கமாய் கட்டையும் மனைவியையும் பார்த்தவன் பார்வையில் மனோஹரி மொத்தமாய் சிவந்து போனாள்.
“எல்லாம் நீங்களே இழுத்துவிட்டது தானே? பேசாம படுங்க!” என கட்டிலை காட்டினாள் மனைவி.
“எல்லாம் எந்நேரம் டி. இத்தனை நாள் கழிச்சு என் பிரம்மச்சாரிய வாழ்க்கைக்கு எண்ட் கார்ட் போடலாம்னு நினைச்சேன். முடியாமப் போச்சு, ஹக்கும்!” தொண்டையைக் கணைத்தவனின் பேச்சு போகும் திசையை உணர்ந்தவள், “என்ன… என்ன பேசுறீங்க!” என்று அதட்டினாள் இவள். இப்படியெல்லாம் இவன் பேசுகிறானே என்ற ஆச்சர்யத்தோடு வெட்கமும் சேர்ந்து கொண்டது.
“ஏன்டி, எதுவும் செய்ய முடியாமதான் பேசீட்டு இருக்கேன். பேச கூட விட மாட்டீயா?” குமரன் முறைக்க, “கடவுளே! போதுங்க. உங்க பேச்சே சரியில்லை!” கோபமாய் அதட்டி கருவிழிகளை உருட்டிய மனைவியை கலைத்து களைத்துப் போடும் எண்ணம் கணவனுக்கு. இத்தனை இணக்கமான பேச்சுக்கள் திருமணமான நாள் முதலாய் இன்றுதான் வாய்த்திருக்கிறது. ஆனாலும் கையில் கட்டோடு எதையும் செய்ய முடியாத நிலையை எண்ணி நொந்தவன், “ஸ்… கை வலிக்குது டி…” என்றான் திடீரென.
“என்னாச்சுங்க!” மனோ பதறி கட்டிலில் ஏறி மறுபுறம் எட்டிக் கையைப் பார்க்க, குமரன் சிரிப்புடன் மீண்டும் அவளது வயிற்றோடு அணைத்துக் கொண்டான். முன்பு போல் அல்லாது இப்போது சேலையை விலக்கி வெற்றியடையில் முகத்தைப் புரட்டியவனின் செய்கையில் அவளின் உடல் தூக்கிப் போட்டது.
“ஹாஸ்பிடல்ல வச்சு என்னங்க இது!” விலக்கவும் முடியாது அனுமதிக்கவும் முடியாத அவஸ்தையாய் நெளிந்தாள் பெண்.
“ச்சு… நான் என்னடி பண்ண? காலையிலே சேலையைக் கட்டி மனுஷனை டெம்ப் பண்ணது நீதான்!” என்றவன் முகத்தை அவளது வயிற்றில் வைத்து தேய்த்தான். பெண்களின் வாசனை புதிது. அதிலும் மனைவி வாசனை மயக்கியது. விட முடியும் எனத் தோன்றவில்லை. என்னென்னவோ, ஏதேதோ கற்பனைகள் காலையில் சிந்தையை நிறைத்திருக்க, இப்படி விபத்து ஏற்படும் என நினைக்கவில்லை. மூளை போதுமென நிறுத்தச் சொல்ல, ஆனாலும் முடியவில்லை.
பாவமாய் அவளை நிமிர்ந்து பார்த்தான் குமரன். மனோஹரியும் அந்த முகத்தைதான் பார்த்தாள். அவளுக்குமே கணவன் அருகாமை வேண்டுமெனத் தோன்றியது.
“போடி… போய் படு!” என்றவன் அவளிடமிருந்து பிரிந்து தலையணையில் கோபமாய் முகம் புதைக்க, அவனின் செய்கையில் இவளுக்கு சிரிப்பு
வந்து விட்டது.
“சிரிக்காத டி!” குமரன் அதட்ட, மனோ பொங்கிச் சிரித்தாள். அவளை ஆசை பொங்கப் பார்த்திருந்தான் கணவன். இந்த இணக்கம், பேச்சு, மகிழ்ச்சி, புரிதல் இன்னும் எத்தனையோ வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என மனம் நினைத்தது. மனைவியும் மனம் நிறைந்தாள்.