வெங்காயத்தைப் பொடிபொடியாய் நறுக்கிக் கொண்டிருந்த சிந்துவின் கவனம் முழுவதும் மனோஹரியிடம்தான். விக்ரம் வருவதற்கு முன்புவரை அவளது முகம் சாதரணமாயிருந்தது. ஆனால், இப்போது வாடியிருப்பது போலொரு தோற்றத்தைக் கொடுக்க, இவருக்கு யோசனை பிறந்தது.
“ஏன் மனோ, இங்க சும்மா உட்கார்ந்து சுவத்தை வெறிச்சுப் பார்க்குறதுக்கு பேசாம அவங்களோட நீயும் போய்ருக்கலாம்ல?” என அவர் வினவ, மனோவிடம் ஆழ்ந்த அமைதி. அவரது பேச்சு பெண்ணின் சிந்தையில் பதியவே இல்லை. அவள் எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். சுருங்கியிருந்த நெற்றியும் லேசாய் சாய்ந்தமர்ந்திருந்த விதமும் அதைக் காண்பித்துக் கொடுத்தன.
“மனோ, என்ன யோசனை?” பெரியவர் இரண்டு முறை அழைத்தப் பின்புதான் நிகழ்காலத்திற்கு வந்தவள், “ஆங்… என்னத்தைக் கேட்டீங்க?” எனப் புரியாது வினவினாள்.
“சரியா போச்சு போ!” சிந்து அலுத்துக் கொண்டு புன்னகைத்தார். அவரது சிரித்த முகத்தை ஒரு நொடி ஆழப் பார்த்திருந்தவள், “அத்தை, உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா? எத்தனையோ நாள் பேசணும்னு நினைச்சுருக்கேன், ஒரு தயக்கம் தடுத்துடுச்சு. ஆனால், இப்போ தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப மனசு போட்டு அரிச்சுட்டே இருக்கு” என நிறுத்திவிட்டு அவர் முகத்தை ஏறிட்டாள்.
சிந்து அவளது பேச்சை அவதானித்தவர், மெலிதாய்ப் புன்னகைத்தார். மருமகள் பேச்சின் சாரம்சம் அவருக்கு புரியாமல் இல்லை. இருந்தும் அவள் வாய்வழியே கேட்கலாம் என தலையை சம்மதமாக அசைத்தார்.
“அது, ஷெண்பா அப்புறம் அவரோட அண்ணன் விக்ரம் ரெண்டு பேருக்குமே அவர் மேல அவ்வளோ அன்பு இருக்கு, உங்ககிட்ட பாசமா நடந்துக்குறாங்க. ஆனால், ஏன் இந்த பத்து வருஷமா பேசாம, சண்டை போட்டு பிரிஞ்சு இருந்தாங்க?” எனத் தயக்கமாய் வினவினாள். அவ்வப்போது சிந்து பேசும்போது மூவரைப் பற்றியும் விவரித்திருக்கிறார் தான். ஆனால், நடந்த எதையும் முழுதாக உரைத்தது இல்லை. இவளுக்கும் அப்போது தெரிந்து கொள்ள ஆர்வம் குறைவுதான். ஆனால், இன்று ஏனோ கேட்கத் தோன்றியதை கேட்டாள்.
ஒரு பெருமூச்சை வெளிவிட்டவர், “எல்லாம் சூழ்நிலைதான் மா காரணம். அவங்க, இவங்கன்னு யாரையும் குத்தமெல்லாம் சொல்ல முடியாது. அவங்கவங்க வாழ்க்கை, அவங்களுக்கு முக்கியம். அதைவிட எம்மகனுக்கு என்னோட மரியாதை முக்கியம்னு எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டான்!” என்றார் சாந்தமான முகத்துடன். ஏனோ ஒருவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற அப்பெண்மணிக்கு விருப்பமில்லை.
“மகனுக்காக வந்தீங்க சரித்தை, உங்களுக்கு…” என ஒரு நொடி தயங்கி நிறுத்தியவள், “உங்களுக்கு மாமாவைப் பிடிக்கலையா, அவர்கூட வாழ ஆசையில்லையா?
மகனுக்காக அவரை வேண்டாம்னு சொன்னாலும், உங்களுக்குத் தனிப்பட்ட விருப்பமும்னு ஒன்னு இருக்குமே அத்தை!” என்றவள் சிறிது யோசித்தாள்.
“இளமைல துணை இல்லைனாலும், முதுமைல நமக்கெல்லாம் துணை அவசியம் அத்தை. கீழே விழும்போது தூக்கிப் பிடிக்க முடியலைனாலும், ஆறுதல் சொல்ல அரவணைச்சுக்க ஒருத்தர் வேணும்னு மனசு கேட்கும். தனிமையை உணராம இருக்க, அப்பப்பா கடந்த காலத்தைப் பத்தி பேசி சிரிக்க, சண்டை போட, வாயசான காலத்து அன்பான ஒரு கை நம்மளை நோக்கி நீளன்னு எவ்வளவோ இருக்கே!
என்னதான் பையனா இருந்தாலும் உங்கப் பையன்கிட்ட மனசுல உள்ள எல்லாத்தையும் ஷேர் பண்ண முடியாதே!” என நிறுத்தினாள். சிந்து மருமகளை ஒரு நொடி அதிசயித்துப் பார்த்தார். தன்னைப் பற்றி மனோவின் சிந்தனை இந்தளவிற்கு இருக்குமென அவர் எண்ணியிருக்கவில்லை. மனம் ஒரு நொடி நெகிழ்ந்திருந்தது. பதில் பேசாதவரின் உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது.
“சிரிக்காதீங்க அத்தை, பதில் சொல்லுங்க!” அதட்டலாய்க் கேட்டவள், “என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எவ்வளோவோ சண்டை வந்திருக்கு. ஆனாலும் அவங்க பிரிஞ்சு போகணும்னு நினைச்சதே இல்ல! பிரிஞ்சு போறதுக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், சேர்ந்து
வாழ்றதுக்கு ஒரு சின்ன காரணம் போதும். ஒருத்தர் மேல ஒருத்தர் பரஸ்பர அன்போ பிடித்தமோ, புரிதலோ இருந்தாப் போதுமே அத்தை. உங்களுக்கும் மாமாவுக்கும் இடையில ஒரே ஒரு சின்ன பிடிப்புக் கூடவா இல்ல? மாமாவை உங்களுக்குப் பிடிக்காதா?” அமைதியாய் சிந்து மனோஹரியைப் பார்த்தார். அவளது ஒவ்வொரு கேள்வியும் அவரது கடந்த கால வாழ்க்கையை சப்தமின்றி தட்டியெழுப்பிக் கொண்டிருந்தது. எத்தனையோ நாட்கள் மனதிலிருப்பதை யாரிடமாவது கொட்டிவிட எண்ணியிருக்கிறார். ஆனால், அந்தளவிற்கு நெருக்கமான சொந்தமொன்று இன்றுவரை அவருக்கு கிட்டவில்லை. முதிர்ச்சி வந்தப் பின்னர் அனைத்தையும் தனக்குள்ளே போட்டு அழுத்திக் கொண்டார். தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது, தன் மகனுக்காகத்தான் மீதமிருக்கும் வாழ்க்கை என குமரனுக்காக சொற்ப வாழ்க்கையை அர்பணித்திருந்தார் பெரியவர். ஆம்! சிந்து என்ற பெண்ணின் அர்பணிப்புதான் அவர்கள் வாழும் வாழ்க்கை.
ஆனால், அவரைப் பொறுத்தவரை அதொன்றும் பெரிய தியாகமில்லை, அவரது எண்ணம் தன் மகனுடைய நியாமான ஆசைகளுக்குத் துணை நிற்பது, அவ்வளவுதான். சிந்துவுடைய சித்தாந்தம் இதுதான். ஆனால், கணவர், அவரைப் பண்ணி எண்ணாத நாளில்லைதான். ஆனாலும் குமரனை மீறிச்செல்ல விருப்பமில்லை. சொக்கநாதனுக்குத்தான் தன்னால் உண்மையாய் இருக்க முடியவில்லை. தன் மகனுக்காவது உண்மையாய் இருந்துவிட்டு எஞ்சிய காலத்தைக் கழித்துவிடலாம் என எண்ணித்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
“ஏன் அத்தை அமைதியா இருக்கீங்க? பதில் சொல்லுங்கத்தை… நானும் இந்த வீட்ல ஒரு ஆள்தானே. உங்களோட வாழ்க்கையில நடந்ததைத் தெரிஞ்சுக்க, உங்க மகனோட பாஸ்ட் லைஃபை பத்தி கேட்க எனக்கு உரிமை இருக்குன்னுதான் இதெல்லாம் கேட்குறேன். உங்களோட விருப்பம்தான் அத்தை!” கட்டாயப்படுத்த விருப்பமில்லை மனோஹரிக்கு. இருந்தும் நடந்தவற்றின் அடிநாதம் கூட அறியாதது மனதை உருத்தியது. அதைவிட இந்த மூவருக்கிடையே இருந்தப் பிணைப்புக் கூட அவளை அதிகம் யோசிக்க வைத்ததது; கேள்வி கேட்க வைத்திருந்தது.
தன்னை அலட்சியம் செய்துவிட்டு சென்ற குமரன் மீது ஏகக் கோபம் இருந்தப் போதும், அவனுடைய செயல் மனைவியை ஆழ சிந்திக்கத் தூண்டியது.
இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் நடந்ததை அறிந்து கொள்ள வாய்ப்புக் குறைவு என சிந்துவிடம் மனதிலிருக்கும் அனைத்தையும் கேட்டுவிட்டாள்.
நீண்ட நெடியதாய் தோன்றிய முதல் ஐந்து நிமிடங்களை மொளனம் அமிழ்த்தி சுருட்டிக் கொள்ள, சிந்து எதுவுமே உரைக்கவில்லை. அவருக்கு சொல்ல விருப்பமில்லை என எண்ணி மனோஹரி நகர விழைய, “எங்களோடது காதல் திருமணம் மா!” என்றவரின் பேச்சு அவளது நடையை நிதானப்படுத்தியிருக்க, முகம் முழுவதும் திகைப்புடன் அவரைப் பார்த்தாள். சர்வ நிச்சயமாக அவள் இப்படியான கோணத்தில் சிந்தித்திருக்கவில்லை. இது அவளுக்கு அதிர்ச்சியான செய்திதான்.
“என்ன சொல்றீங்க அத்தை, லவ் மேரேஜா, அப்புறம் எப்படி நீங்க மாமாவை விட்டுவிட்டு பிரிஞ்சு வந்தீங்க?” ஆச்சரியம் மேவிய குரலில் கேட்டவள் அவரருகே கால்களை மடக்கி வலதுகையை நிலத்தில் குற்றி கதைக் கேட்கும் பாவனையில் அமர்ந்தாள். முகம் சிந்துவின் பதிலுக்கான காத்திருப்பில் ஆர்வத்துடன் கனிந்திருந்தது. அவளது தலையைக் கலைத்துவிட்டார் சிந்து.
“எனக்கும் நடந்ததையெல்லாம் யார்கிட்டயாவது மனசுவிட்டு சொல்லணும்னு தோணும். ஆனாலும் அதுபோல ஒரு சந்தர்ப்பம் அமையலை. இப்போ உன்கிட்ட சொல்லணும்னு ஒரு எண்ணம். என் காலத்துக்குப் பின்னாடி என் புள்ளையோடதான் உன்னோட வாழ்க்கையும் நகரும். எனக்காக இல்லைனாலும், அவனுக்காகக் கண்டிப்பா சொல்றேன்!” என்றவரின் குரல் லேசாய் தடுமாற, “அத்தை, என்ன பண்ணுது… இல்ல, இல்ல நீங்க சொல்ல வேணாம்! விடுங்க!” என அவரது பிசிறு தட்டியக் குரலில் மனோஹரி கொஞ்சம் பதறி மாமியாரை சமாதானம் செய்தாள். தன்னுடைய கேள்வி அவரைக் காயப்படுத்திவிட்டதோ என்ற பாவனை முகத்தில்.
அவளது கரங்கள் மாமியாரின் கைகளைத் தன்னுள் பொதிந்து கொண்டது. தொட்டதைத் தொடர்ந்துவிடும் எண்ணத்தில் சிந்து நடந்தவற்றை விவரிக்கத் தொடங்கினார்.
தொன்றுதொட்டு திருச்சியை இருப்பிடமாகக் கொண்டவர் அருணாச்சலம். கண்ணுக்கு எட்டியவரை நிலபுலன்களும் சொத்துக்களும் வைத்திருந்தப் பரம்பரை செல்வந்தர்களில் அவரும் ஒருவர். கோழிப்பண்ணை தொழில்தான் அவருக்குப் பிரதானமான ஒன்று. தோட்டம், வயல்காடு என அனைத்திற்கும் ஆட்களை நியமித்துப் பராமரித்து வந்தார். மனைவி தங்கம்மாள் வீட்டைக் கவனித்துக் கொள்ள, மகன் சொக்கநாதனைப் பள்ளி படிப்போடு நிறுத்துவிட்டு தன்னுடன் தொழிலுக்கு அமர்த்திக் கொண்டார். சொக்கநாதனுக்கும் படிப்புக்கும் காத தூரமென்பதும் மற்றொரு காரணம்.
சொக்கநாதன் இயல்பிலே கொஞ்சம் இரக்கக் குணமும் நலலெண்ணமும் கொண்டவர். தந்தையை நகலெடுத்துப் பிறந்திருந்தார். அதனாலே அருணாச்சலத்திற்கு மகனைப் பற்றிய கவலை உண்டு. தன் காலத்திற்குப் பின்னர் மகன் எப்படி சொத்தைக் காப்பாற்ற போகிறான் என்ற எண்ணம் அவரை அரித்தது. அதனாலே தான் நன்றாய் இருக்கும் காலத்திலே மகனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொழில் நுணுக்கங்களைக் சொல்லிக் கொடுத்தார்.
சொக்கநாதனும் தாய், தந்தை சொல் தட்டாத பிள்ளைதான். இயல்பிலே அமைதியான சுபாவம் கொண்ட மனிதர், தந்தையிடம் அதீத அன்பும் மரியாதையும், தாயிடம் அதீத பயமும் கொண்டிருந்தார். அருணாச்சலத்திற்கு நேரெதிர் குணம் கொண்டவர் தங்கம்மாள். கணவருக்கு அடுத்து தான்தான் அனைத்திலும் முதன்மையாய் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே மகனைக் கூட எதையும் முன்னின்று செய்ய அனுமதிக்காது தானே செய்வார். அதில் அவருக்கொரு திருப்தியும் கர்வமும் உண்டு. பிறந்ததிலிருந்தே தங்கம்மாள் பணத்தில் புரளும் வகையில் சேர்த்தி. அதனோடு சேர்த்து கொஞ்சமல்ல அதிக திமிறும் கர்வமும் அவரிடமும் உண்டு.
அருணாச்சலத்தைப் பின்பற்றி சொக்கநாதன் தொழில் அனைத்தையும் திறம்பட செய்யக் கற்றுக் கொண்டார். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல சில வருடங்களிலே தொழிலின் நெளிவு சுழிவுகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த மகனுக்குத் திருமணம் முடிக்கலாம் என தந்தை எண்ணியிருந்தார். ஆனால், சொக்கநாதன் தோட்டவேலை செய்யும் சிந்துவின் மீது விருப்பம் கொண்டு காதல்வயப்பட்டு அவரைத் திருமணம் செய்து வந்து தந்தை முன்பு நிற்க, அருணாச்சலம் அவரின் செயலில் அதிர்ந்து போனார்.
மகனிடம் இப்படியொரு நடவடிக்கையை அவர் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. அத்தனை கோபம் அனைத்தையும் அவரிடம் காண்பித்து அடித்து வெளுக்க, சிந்து இடையில் நுழைந்தார்.
“போதும் மாமா, அவரை அடிச்சேக் கொன்னுடாதீங்க! நான் எவ்வளோ சொல்லியும் நான்தான் வேணும்னு நின்ன மனுஷரை உதறீட்டுப் போக விருப்பமில்லை. அதான் என்னவானாலும் பரவாயில்லைன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். உங்க மகன் உசுரு உங்களுக்கு முக்கியமா இல்லாம இருக்கலாம். ஆனால், என் புருஷன் உசுரு எனக்கு ரொம்ப முக்கியம். எங்களை விட்ருங்க, சொத்து சுகம் எதுவும் வேணாம். எங்கேயாவது போய்ப் பிழைச்சுக்குவோம்!” என்று சிந்து அப்போதும் நிமிர்வான குரலில் உரைக்க, சொக்கநாதன் ஒரு வார்த்தை தந்தையை எதிர்த்துப் பேசிவில்லை. அமைதியாய் தலையைக் குனிந்திருந்தார். திருமணம் செய்யும் போதிருந்தத தைரியமெல்லாம் தந்தையைக் கண்டதும் அமிழ்ந்திருந்தது. அதனாலே அமைதியாய் அவரின் கோபத்தைப் பெற்றுக் கொண்டான்.
அருணாச்சலம் சற்று நிதானித்தார். கடந்த ஐந்து வருடங்களாக சிந்து தோட்ட வேலையைக் கவனித்து வருகிறாள். தாயை இழந்து தந்தையும் மகளுமாக வேலைக்கு சேர்ந்திருக்க, இரண்டு வருடங்களுக்கு முன்பு தந்தையைப் பறிகொடுத்த இருந்தார். அதற்காக வீட்டிலே முடங்கிவிடாமல் அடுத்தடுத்து என்ன என வாழ்க்கையை அதன்போக்கிலே ஏற்றுக்கொண்டு தனியாளாக இந்த ஊரில் வசித்து வந்தார். ஒரு தனிமனுஷியாகப் பார்த்தால் சிந்துவின் பால் எந்தக் குற்றமும் காண முடியாது. குடும்பத்திற்கு ஏற்ற, அதைவிட சொக்கநாதனுக்கு ஏற்றப் பெண், குடும்பத்தை நிர்வகிக்கும் திறமையும் அவருக்கு உண்டு. சிந்துவிற்கு சொத்துக்களும் இல்லை, சொல்லிக் கொள்ளுமளவிற்கு சொந்தங்களும் இல்லை என்பதே உண்மை. பணம், அந்தஸ்து எல்லாம் அருணாச்சலத்திற்குப் ஒரு பொருட்டே இல்லை. சிந்துவின் ஜாதியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கீழ் ஜாதிக்கார பெண் தன் வீட்டு மருமகள் என்பதை அவரால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒற்றை மகனை அப்படியே விட்டுவிட முடியாதே! கொஞ்சம் யோசித்தார் மனிதர்.
நிமிர்ந்த பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்ட சிந்து மகனை நன்றாகப் பார்த்துக்கொள்ளக் கூடும் என தன்னிலையிலிருந்து இறங்கி வந்தார். மகன் கைமீறிவிட்ட நிலையில் அவருக்கு வேறு வழியும் இல்லாது போக, அவர்களை ஏற்றுக் கொண்டார். ஆனால், தங்கம்மாவால் எளிதாக சிந்துவை மருமகள் என்ற இடத்தில் பொருத்த முடியவில்லை.
அவர்களது ஜாதிக்கார்களைப் பார்த்ததும் கும்பிட்டுவிட்டு செல்லும் கீழான ஜாதிப் பெண் தனக்கு நிகராக வீட்டில் இருப்பதா என்ற எண்ணமும் காழ்ப்புணர்ச்சியையும் வாய்ப்பு வரும் நேரமெல்லாம் காண்பித்தார். மாமியார் என்ற எண்ணத்தில் சிந்துவை முடிந்தளவிற்கு வார்த்தைகளால் சாடினார்.
சிந்து ஆரம்ப காலத்தில் என்ன செய்வது எனத் தடுமாறினார். பின்னர் நாட்கள் நகர நகர தங்கம்மாளின் குணம் ஓரளவு பிடிபட்டதும் அவரிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டார். அப்படியும் மீறி வார்த்தைகள் நீண்டால், அவரது பார்வைக் கணவரைத் தேடும். ஆனால், சொக்கநாதன் எந்நிலையிலும் தாயை எதிர்த்து ஒருவார்த்தை பேச மாட்டார்.
இதே நிலைதான் எப்போதுமே நீடித்தது. தங்கம்மாளின் பேச்சு வரம்பு மீறிச் செல்லத் துவங்க, கணவர் கேட்பார் எனப் பொறுத்துப் போன சிந்து அவரின் பேச்சற்ற குணத்தில் வெறுத்துப் போனார். சொக்கநாதன் இயல்பிலே அமைதியான சுபாவம் என்று அறிந்திருந்தாலும் பேச வேண்டிய இடத்தில் கூட தனக்காக கணவர் நிற்கவில்லையே என்ற எண்ணம் ஆதங்கமாய் மனதில் உருமாற ஆரம்பித்திருந்தது.
தங்கம்மாளின் பேச்சிற்கு வலு சேர்ப்பது போல இரண்டு வருடங்கள் கழிந்தும் சிந்து கருத்தரிக்கவில்லை. வேறு எதைக்கொண்டு பேசினாலும் எதிர்த்துப் பேசும் சிந்துவால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பதில் கூற இயலவில்லை. ஆரம்பத்தில் மனைவியின் பேச்சுப் பிடிக்காது அருணாச்சலம் அவரை அதட்டினார். அவருக்கும் பேரக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச மனமெல்லாம் ஆசை நிரம்பி வழிந்தது. வெகு சீக்கிரம் இல்லையெனினும் கண்டிப்பாக கடவுள் தங்கள் மகனுக்கொரு குழந்தையை பரிசளிப்பார் என அவர் நம்பினார்.
ஆனால் வருடங்கள் கடந்ததே ஒழிய, சிந்து கர்ப்பம் தரிக்கவே இல்லை. அவரது கருவறையில் சூல் இல்லாது வெறுமையாகவே நாட்கள் கழிந்தன. கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் கடக்க, அருணாச்சலத்திற்கும் நம்பிக்கை அற்றுப் போனது. அதனாலே தங்கம்மாளின் பேச்சு வரம்பு மீறினாலும் அவர் அதை தட்டிக் கேட்க முனையவில்லை.
கணவரும் துணையின்றி, மாமனாரின் ஆதரவுமற்று சிந்து தனியாளாக உணர்ந்தார். ஒவ்வொரு நாளும் ஏனோ நரகமாய்க் கழிந்தது அந்தப் பெண்மணிக்கு.
நாட்கள் செல்ல செல்ல தங்கம்மாளின் பேச்சு வரைமுறையைக் கடந்தது. தனக்கென யாரும் இல்லாது அநாதையாக உணர ஆரம்பித்த சிந்து அதீத மன அழுத்தத்திற்கு ஆளானார். சொக்கநாதன் பெற்றவர்கள் முன்பு அமைதியாய் இருந்தாலும், அறைக்குள்ளே மனைவியிடம் அன்பு காட்டினார், அரவணைத்தார். ஆனால், சிந்துவால் அந்த அன்பை ஏற்க முடியவில்லை. முள்மேல் நிற்பது போலிருந்தது. எந்த அமைதியான சொக்கனை விரும்பினாரோ, அதே நபரை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தார். தனிமையை நாடி ஓடத் தொடங்கினார்.
அருணாச்சலம் பேரக் குழந்தை இல்லை என்ற ஏக்கத்திலே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழ, தங்கம்மாள் கொதித்துப் போனார். தன் கணவர் நன்றாகத் தேறி வரவேண்டுமென்றால் கண்டிப்பாக சிந்து இந்த வீட்டிற்கு ஒரு வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் ஆடி தீர்த்தார்.
மாமனார் ஒருபுறம் படுக்கையில் கிடக்க, மாமியாரின் சுடு சொற்களைக் கேட்டும் எந்த வித எதிர்வினையும் தனக்காகவென மெனக்கெடாத கணவரைப் பார்த்து வெற்றுப் புன்னகையை உதிர்த்தவர், ஒரு முடிவுக்கு வந்திருந்தார். தனக்காக இல்லையெனினும் மாமனாரின் உடல் நலத்தைப் பேண வேண்டுமென தன் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முன்வந்தார்.
தங்கம்மாளின் எண்ணம் நிறைவேறப் போவதில் அவர் சம்மதித்து அமைதியாய் இருந்துவிட, அருணாச்சலமும் ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காது போக, அவரது விருப்பமும் அதுதான் என உணர்ந்தார் சிந்து. பெற்றவர்கள் சம்மதம் தெரிவித்துவிட, மகன் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. பிடிவாதமாய் அவர் மறுக்க, சிந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசி கணவரை சம்மதம் சொல்ல வைத்திருந்தார்.
“சிந்து, நானா சொல்ற வரைக்கும் இந்த வீட்டைவிட்டு வெளிய போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு!” என்ற நிபந்தனையுடன்தான் சொக்கன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.
சிந்து அருணாச்சலத்தின் சொந்தத்திலே சுமதியை கணவருக்கு மனம் முடிக்க தேர்வு செய்தார். தங்கம்மாளுக்கும் சுமதியின் பின்புலமும் தங்கள் ஜாதி அவள் என்ற எண்ணமும் சம்மதத்தை உரைக்க வைத்திருந்தது. சிந்து தங்கள் வீட்டு வாரிசை சுமக்காதிருந்தில் அவருக்கு குரூர திருப்தி. கீழ் ஜாதிக்கார பெண்ணின் வயிற்றில் தங்கள் வாரிசா என ஏற்கனவே அவர் குமைந்திருக்க, அவரது எண்ணம் பழித்து விட்டதோ என்னவோ?
சுமதி இயல்பிலே கொஞ்சம் அமைதிபோலத்தான் தோற்றமளித்தார். அதனாலே சொக்கநாதனை திருமணம் முடித்ததும் அவர்கள் உறவு சுமூகமாக சென்றது. சிந்துவிடத்திலும் சுமதி அக்கா என்றொரு பாசத்தையும் மரியாதையும் வைத்திருந்தாள்.
மணம் முடிந்த ஆறு மாதத்திலே சுமதி கருவுற்றிருக்க, தங்கமாளைக் கையில் பிடிக்க முடியவில்லை. சுமதியை அக்கறையாய் கவனித்துக் கொண்டவர் சிந்துவை வார்த்தையால் சாடினார். அதையெல்லாம் சிந்து கண்டுகொள்ளவில்லை. சில சமயம் சுமதி அவருக்கு ஆதரவாக மாமியாரிடம் பேசுவாள்.
தங்கம்மாளுக்கு சுமதியும் சிந்துவும் ஒற்றுமையாய் இருப்பது அறவே பிடிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்துவின் மீதான தன்னுடைய வக்கிர எண்ணங்களுக்கு உவமையும் உருவகமும் கொடுத்து சுமதியின் மனதில் விதைத்தார்.
பத்து மாதத்திலே சுமதி அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்திருக்க, அருணாச்சலம் அகமகிழ்ந்து போனார். பேரனைக் கண்டுவிட்ட திருப்தியில் மனிதர் காலனடியில் சரணடைந்தார்.
குழந்தைப் பிறப்பிற்கு பிறகான சுமதியின் நடவடிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிய ஆரம்பித்திருந்தது. அமைதியாவன சுபாவம் என எண்ணியிருந்தவை எல்லாம் கானல் நீர் போலாகின.
வேலையாட்கள் அனைவரும் சிந்துவிற்கு அளிக்கும் மரியாதை தனக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததில் தங்கம்மாளுடன் சேர்ந்து அவரது பாட்டிற்கு தாளம் தட்ட ஆரம்பித்தார் சுமதி.
சிந்துவிற்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. இப்படி நடக்குமென ஏற்கனவே எண்ணியிருந்தவர், அதை பெரிதுபடுத்தவில்லை. தானாக அனைத்திலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார். தேவைக்கு அதிகமாக அறையிலிருந்து வெளிவரவில்லை பெண்மணி.
நடுகூடத்திலிருந்த அவரது அறை வாயிலை ஒட்டியிருந்த அறைக்கு மாற்றப்பட்டது. அனைத்தையும் கவனித்தாலும் தாயை எதிர்த்துப் பேச முடியாத சொக்கநாதன் சிந்துவிடம் தனிமையில் வருந்துவார். காயம்பட்ட மனதிற்கு அது ஆறுதலாக இருந்தாலும், இதை அவரது தாய் முன்னே இவர் பேசப் போவதில்லை என்ற உண்மை அவரை ஒவ்வொரு நாளும் சுட்டது. சொக்கநாதன் மட்டும் அப்படியொரு சத்தியம் வாங்கியிராவிட்டால் சிந்து என்றோ வீட்டைவிட்டு வெளியேறியிருப்பார். ஆனாலும் சொக்கநாதனின் அன்பை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. தைரியம் இல்லாத துணிவில்லாத மனிதர் என்றாலும் தன்மீதான அவரின் அன்பு அத்தனை தூய்மையென அவர் அறிந்ததே.
விக்ரம் பிறந்து இரண்டு வருடத்தில் சிந்து கருத்தரிக்க, சொக்கநாதன் இன்பமாய் அதிர்ந்தார். ஆனால், தங்கமாளுக்கும் சுமதிக்கும் அது அத்தனை உவப்பாய் இல்லை. அதிலும் தங்கம்மாள் தங்கள் வீட்டு வாரிசு அவளது வயிற்றில் வளரக் கூடாது என நாக்கில் நரம்பற்றுப் பேச, இத்தனை நாட்கள் தாயின் பேச்சைப் பொறுத்த சொக்கன் அன்று மொத்தத்தையும் வார்த்தையில் கவிழ்த்திருந்தார்.
“ம்மா, என்ன பேசுறீங்க? அவ என்னோட பொண்டாட்டி, அது என்னோட குழந்தை. உங்களுக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்கலைன்னா, நானும் அவளோட சேர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிட்றோம்!” மகனின் பேச்சில் தங்கம்மாளின் வாய் பூட்டுப்போட்டுக் கொண்டது. வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை.
சுமதிக்கு கணவன் பேச்சு அதிர்ச்சி. சிந்துவிற்காக தன்னையும் மகனையும் விட்டுவிட்டு சொல்லுமளவு தங்கள் முக்கியமற்றுப் போய்விட்டோமா என்று குமைந்தவரின் கோபமும் ஆற்றாமையும் சிந்துவின் புறம் திரும்பியது. அதற்குமுன் வரை சிந்துவிடம் பட்டும்படாமலும் பேசி விக்ரமை சிறிது நேரம் அவரிடம் கொடுத்து வந்தவர், இப்போது பேச்சை மொத்தமும் குறைத்திருந்தார். பார்க்கும் பார்வையில் கூட வெறுப்பை உமிழ்ந்தார். விக்ரமை சிந்துவிடம் அண்ட விடவில்லை.
ஏதும் பிடிபற்றிருந்த வாழ்க்கையில் சிந்துவின் வாழ்க்கைக்கு ஆதரமாக திருக்குமரன் பிறந்திருந்தான்.
சொக்கநாதன் மகிழ்ந்து போனார். சிந்துவிற்கு வார்த்தைகள் எல்லாம் வற்றிப் போனது. தன்னுடைய மகன் என்று குமரனைக் கொண்டாடி தீர்த்தார். விக்ரமும் ஏதுமறியா வயதில் தம்பி என குமரனைச் சுற்றிவர, சுமதி மகனைப் போட்டு அடி வெளுப்பார்.
‘குமரனைத் தொடக் கூடாது, பேசக் கூடாது! அவன் அசிங்கம்!’ தங்கம்மாள் பிஞ்சு விக்ரமின் மனதில் நஞ்சை விதைக்க, ஏனோ அவனுக்கு அதெல்லாம் சுத்தமாய்ப் புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. அவனுக்கு தன்னுடன் விளையாட மற்றொரு குழந்தை வந்ததில் ஏகக் குஷி. சின்னவன் மீது அத்தனைப் பிரியமாயிருந்தான். அதைவிட தன்னை ஒரு வார்த்தை திட்டியிராத, எப்போதும் பாசமாய்ப் பார்த்துக் கொள்ளும் சிந்துமாவின் மீது அலாதியான பிரியம்.
தாய் மற்றும் அப்பத்தாவிற்குத் தெரியாது அவர்களைப் பார்த்து வருவான். மேலும் சில வருடங்களிலே ஷெண்பா பிறந்துவிட, இருவர் மூவராகினர். சுமதியும் தங்கம்மாளும் எத்தனை முயற்சி செய்தும் பிள்ளைகளைப் பிரித்து வைக்க முடியவில்லை.
விக்ரம் ஷெண்பா குமரன் என அவர்கள் மூவருக்கு இடையேயான பிணைப்பு நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே போனது. சொக்கநாதனும் மூன்று பிள்ளைகளையும் ஒரே போல நடத்தினாலும் குமரன் மீது ஒரு துளி பாசம் கூடுதலாகிப் போகும். குமரனுக்கும் தந்தை மீது அத்தனைப் பிரியம். தாயைவிட தந்தை மீது அத்தனை நேசம் வைத்திருந்தான். அதைக் கண்டு சுமதி மேலும் கோபமாகிப் போனார். தன் பிள்ளைகள் தன்னைப் போல இரண்டாம் பட்சமாகப் போய்விட்டார்கள் என அவரது மனம் புழுங்கும்.
பிள்ளைகள் வளர ஆரம்பித்தனர். விக்ரமிற்கும் குமரனுக்குமான இடையில் ஷெண்பாவின் மீதான உரிமை போராட்டத்தில் இருவருக்கும் சண்டை வெடிக்கும். சின்னவள் தான் இருவரையும் சமாதானம் செய்து வைப்பாள். முதலில் இருவரும் முறுக்கிக்கொண்டு திரிந்தவர்கள், காலப்போக்கில் சமாதானக் கொடியைப் பறக்கவிட்டு சகோதரப் பாசத்தை நெய்து கொண்டனர். தங்களுக்கு இடையே எத்தனைப் பிணக்குகள் இருந்தப் போதும் பெரியவர்கள் பிரச்சனையை சின்னவர்கள் தங்களுக்கு இடையே வளரவிடவில்லை.
தங்கம்மாள் ஒருநாளும் குமரனின் பெயரை சொல்லி அழைத்தது இல்லை. அவனது ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அழைத்து, திட்டுவதுமாய் இருப்பார். சிறு வயதில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை எனினும் அவர் வார்த்தைகள் கொடுத்தக் காயத்தில் அழுது கொண்டே தந்தையிடம் முறையிட, அவனைத்தான் மனிதர் சமாதானம் செய்வாரொழிய தாயை எதிர்க்கமாட்டார். அந்த வயதில் அது அவனது கவனத்தில் பதியவில்லை.
மகனை சமாதானம் செய்ய வெளியே அழைத்துச் சென்று அவனுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பார். குமரனும் நடந்ததை மறந்து விடக் கூடிய பிராயத்தில் இருந்ததால், அதை அப்படியே விட்டுவிடுவான். தங்கம்மாளின் பேச்சு எல்லைக் கடந்தால், சிந்துதான் மகனுக்காக அவரிடம் பேசுவார். என்ன நடந்தது என்று புரியாவிடினும் விக்ரமும் ஷெண்பாவும் அவரது பக்கத்தில் சென்று ஒட்டிக் கொள்வார்.
குமரன் அழுவதைக் கண்டு தானும் அழுது உணவுண்ண மாட்டேன் என அடம்பிடிப்பார்கள். அந்த சமயத்தில் சிந்துவிற்கு கண்கள் கலங்கிவிடும். சுமதி குமரனை வேற்று ஆளாகப் பார்த்தாலும் இவர் ஒருபோதும் பிள்ளைகளிடம் பாரபட்சம் காண்பித்தது இல்லையே. அதனாலே மூவரும் சிந்துமா என அவரை சுற்றித்தான் வருவார்கள். அதைக் கண்டு சுமதி பிள்ளைகளை சில சமயம் அடித்து வெளுக்க, சொக்கநாதன் அவரை அதட்டுவார்.
இப்படி பொழுதொரு சண்டையும் சமாதானமுமாக நாட்கள் நகர நகர மூவரும் பெரியவர்களாக வளர ஆரம்பித்தனர். சிறு வயதில் புரியாதது எல்லாம் விக்ரமிற்கும் குமரனுக்கும் புரிய ஆரம்பித்தது.
தங்கம்மாள் குமரனை ஜாதியை வைத்துக் குறை கூறும்போது மீசை அரும்பிய வயதில் விக்ரம் அவனுக்கு ஆதரவாக சண்டையிட, ஷெண்பாவும் குமரனுக்காக அவரிடம் மல்லுக்கு நிற்பாள். குமரனும் கோபத்தில் சில சமயம் அவரிடம் சண்டையிட்டாலும், தனிமையில் தாயிடம் அழுத நாட்களும் உண்டு. சிந்து என்ன செய்வது எனத் தெரியாது தானும் கலங்கிப் போய் அமர்ந்த நேரங்களில் அவரது இரண்டு விழிகளையும் இரண்டு பிஞ்சுக் கரங்கள் துடைத்துவிடும். இந்த அன்பிற்காக, கணவனின் வார்த்தைக்காக கட்டுப்பட்டு சிந்துவும் குமரனும் அந்த வீட்டில் தங்கியிருந்தனர்.
ஆனால், அவர்கள் வீட்டைவிட்டு செல்லும் ஒரு நாளும் வந்தது. இளையவர்கள் இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பினர். விக்ரம் கல்லூரியில் பயின்று கொண்டிருக்க, குமரன் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்தான். ஷெண்பா ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது.
ஷெண்பாவின் தலையிலிருந்த பூவை சற்றே தட்டிவிட்டு சிரிப்புடன் குமரன் வீட்டிற்குள் ஓட, “குமரா…” என இவள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள்.
இருவரும் உள்ளே நுழைய, கூடத்தில் நின்றிருந்த தங்கம்மாள் பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தார். சுமதி முகத்தில் எரிச்சலைக் காட்டியவாறு நிற்க, அவர்கள் முன்னே கொதித்துப் போய் நின்றார் சிந்து.
“என்ன பேசுறீங்க அத்தை, கோவில் வரி கேட்க வந்தவங்களுக்குப் பணம் கொடுத்து அனுப்புனேன். அதுக்கு நீங்க வாய்க்கு வந்த மாதிரி பேசலாமா?” சிந்து குரலை உயர்த்த, சுமதி பல்லைக் கடித்தார். கோவிலிருந்து வந்தவர்கள் சுமதியைப் புறக்கணித்துவிட்டு சிந்துவிடம் பேசி வரியை வாங்கிவிட்டு சென்றதில் அவர் மாமியாரிடம் அதை முறையிட்டிருக்க, அது பெரிய பூதமாகக் கிளம்பியது .
“நான் என்னத்த இல்லாத பொல்லாததையா சொல்லிட்டேன். நீ அவனுங்ககிட்டே பல்லை இளிச்சிட்டுப் பேசவும்தானே உன்கிட்ட வந்து நின்னானுங்க. எத்தனை நாள் டி இந்தக் கூத்து நடக்குது!” மீண்டும் மீண்டும் தங்கம்மாள் வார்த்தைகளை திராவகம் போல வீச, சிந்துவின் உடல் கூசிப் போனது.
ஷெண்பாவும் குமரனும் நடப்பது புரியாது மலங்க மலங்க விழித்து நிற்க, அவர்கள் பின்னே விக்ரமும் வந்துவிட்டான். பிள்ளைகளின் முன்னே மாமியாரின் வார்த்தைகளில் சிந்து அருவருத்துப் போனார். முகம் கன்றி சிவந்தது.
“என்னடி பிள்ளைக… பிள்ளைகன்னுட்டு…” என நீட்டி முழக்கியவர், “இந்தா நிக்கிறானே, இவனை எம்மவனுக்குத்தான் பெத்தீயா நீ? வீட்டுக்கு ஓரமா ஒரு ரூம்ல இருந்துட்டு எப்பட்றியவ பிள்ளைய பெத்தெடுத்த!” தங்கம்மாளின் பேச்சில் சிந்து அதிர்ந்து போக, உடல் நடுங்கியது அவருக்கு. இதயம் திடுக்கிட, இப்படியொரு பேச்சைக் கேட்டு அவர் கல்லாய் சமைந்து நின்றார்.
“நிறுத்துங்க! இதுக்கு மேல என் அம்மாவை ஒரு வார்த்தைப் பேசுனீங்க, நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என குமரனின் குரல் வீடே அழறும் வகையில் கர்ஜித்தது. சிந்துவின் நிராதரவான நிலை இவனுக்கு கோபம் கட்டுக்கடங்காது பொங்கச் செய்தது. தங்கம்மாளின் பேச்சு எந்தளவிற்குத் தாயைக் காயப்படுத்தியிருக்கும் எனத் துடித்துப் போனான் குமரன்.
“சீ! வாயை மூடுறா *** ஜாதிக்கார நாயே! ஒழுக்கங்கெட்ட ஆத்தாளுக்கு நீ ஏத்துட்டு வரீயா?” என அவர் முகம் அசூசையாய் சுருங்க, சிந்து அதில் மரித்தே போனார்.
“அப்பத்தா, யாரைப் பார்த்து என்னப் பேசுற நீ… சிந்தும்மாவைப் பத்தி தப்பா ஒரு வார்த்தைப் பேசுன, வயசான கிழவின்னு கூடப் பார்க்க மாட்டேன்!” என விக்ரம் அவரை அடிக்க கை ஓங்க, சுமதி இடையில் வந்தார்.
“வாயை மூடு விக்ரம், அப்பத்தா பெரியவங்க… அவங்களை அடிக்கக் கை ஓங்குவீயா?” என மகனை அடக்க, ஷெண்பா அழுது கொண்டே சிந்துவை அணைத்தாள். அந்நொடி சுயநினைவைப் பெற்ற சிந்துவின் உடல் நடுங்கிப் போக, வாழ்க்கையே வெறுத்துப் போனது. மாமியாரின் பேச்சு அக்கம் பக்கத்தினரும் கேட்டு அனைவரும் வாயிலில் வந்து நிற்க, குமரன் விழிகளில் நீருடன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டான். அவனது மனம் தாயிற்காகத் துடித்து தவித்துப் போனது.
“அம்மா, அழாதீங்க… அந்தக் கிழவி சொன்னதுக்கெல்லாம் நீங்க அழுவீங்களா! அப்பா வந்ததும் அந்தக் கிழவியை வீட்டைவிட்டு தொரத்திடலாம்!” விக்ரம் சிந்துவின் அழுகைப் பொறுக்காது கூற, சிந்துவிடம் மாற்றமே இல்லை. அப்படியே நின்றிருந்தார்.
நடந்து அனைத்தையும் அறிந்து சொக்கநாதன் வீட்டிற்கு விரைந்தார். உள்ளே நுழைந்தவர் கண்டது உடல் வெடவெடக்க வெளுத்துப் போன முகத்துடன் அழுது கொண்டிருந்த சிந்துவைதான். பிள்ளைகள் மூவரும் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். வாயிலில் தெருக்காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர்.
“டேய் குமரா, என்னாச்சு டா?” என சொக்கநாதன் அவனது தோளில் கைவைக்க, அவரது கையைக் கோபமாகத் தட்டிவிட்டான் மகன். அது அந்தப் பெரியவரின் கவனத்தில் பதியவில்லை.
“சிந்து, என்னாச்சு, ஏன் இப்படி அழற?” என அவர் சிந்துவின் அருகே செல்ல விழைய, “தொடாதீங்க… என் அம்மாவை நீங்கத் தொடக் கூடாது!” என குமரன் பெருங்குரலெடுத்துக் கத்தி சொக்கநாதன் முன்பு வந்து நின்றான்.
அவர் மகனின் வார்த்தையில் செயலில் ஒரு நொடி ஸ்தம்பிக்க, “என்னாச்சு? என்னாச்சுன்னு என் அம்மாவைக் கேட்குறீங்களே, உங்க அம்மாவை கேளுங்க! போய் உங்கம்மாவை கேளுங்கப்பா, நான் உங்களுக்குப் பிறக்கலையாம், என் அம்மா நல்லவங்க இல்லையாம்!” என அவன் கத்த, அந்தப் பெரியவர் அதிர்ந்து போனார்.
“குமரா, நீ என் புள்ளை டா! என் இரத்தம் டா!” என அவனைத் தொட முயன்றவரை அருவருப்பாய்ப் பார்த்தவன், இரண்டடி பின்னே நகர்ந்திருந்தான். அவனது முகம் கோபத்தில் தகித்தது.
“இதை என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்க அம்மாகிட்ட சொல்லுங்க!” என்று கத்தியவன், அவரது சட்டையைப் பிடித்திருந்தான்.
“ஏன் என் அம்மாவைக் கல்யாணம் பண்ணீங்க, என்ன பாவம் பண்ணாங்க அவங்க? டெய்லி இந்த வீட்ல அவங்க அனுபவச்ச கஷ்டத்தைத் தவிர என்ன கொடுத்தீங்க நீங்க. என்னை ஏன் பெத்தீங்க? பெறாமலே இருந்திருக்கலாமே பா! இப்படி என்னைப் பெத்த அம்மா கேட்க கூடாத வார்த்தையெல்லாம் கேட்டு நிக்கிறதைப் பார்த்தும் உங்களை மாதிரியே நானும் கையாலாகாம நின்னுட்டு இருக்கேன்!” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான். இத்தனை நாட்கள் மனதில் வைத்திருந்தவை எல்லாம் அந்நொடி திரண்டு வார்த்தைகளாய் வெளியேறின. மனம் வலித்தது அவனுக்கு தன் தந்தையின் குணத்தை எண்ணி. இவர் தன் தாயிற்கு ஆதரவாகப் பேசி, நின்றிருந்தால் சிந்து இந்நிலைக்கு வந்திருக்க மாட்டாரே என மனம் குமைந்தது. மகனின் வார்த்தையில் சொக்கன் அதிர்ந்தார். அவமானத்தில் தலைத் தானாக கவிழ, அவரது விழிகள் கலங்கின. அவன் கூறுவது அனைத்தும் உண்மையே!
“டேய் குமரா, இப்படியெல்லாம் பேசாத டா!” என்று குரல் இடறப் பேசியவர், தன் தாயிடம் திரும்பினார்.
“ம்மா… ஏன் மா இப்படி பேசுறீங்க? அவ என் பொண்டாட்டி மா. இதோ நிக்கிறானே என் ரத்தம்மா! அவளைப் பார்த்து இப்படியொரு வார்த்தையைக் கேட்க எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு?” சொக்கநாதன் கோபத்தில் கத்தினார். சிந்துவின் தோற்றம் அவரைப் பேச வைத்திருந்தது.
“டேய் சொக்கா, நான் இல்லாததையா சொன்னேன்… இருக்கதை தான் சொன்னேன்!” என்றவரின் வார்த்தைகள் பொய்யென்று அங்கிருந்த அத்தனைப் பேருக்கும் தெரியும். ஏனென்றால் விக்ரமைவிட குமரனுக்கும் சொக்கனுக்கும் உருவ ஒற்றுமை அதிகம். பார்த்தாலே தந்தை மகன் என கண்டுபிடித்து விடலாம்.
“ம்மா…” என இவர் கத்த, “போதும்! நிறுத்துங்க… இந்த வீட்ல இத்தனை நாள் எங்கம்மா கஷ்டப்பட்டது போதும்!” என்ற குமரன், “ம்மா… எனக்கு இவரு வேணாம் மா. இவரை அப்பான்னு சொல்ல வாய்க் கூசுதுமா. இனிமேல் இந்த வீட்ல நம்ம இருக்க வேணாம். வெறெங்கையாவது போகலாம் மா!” எனக் குரல் அடைத்துப் போக, மன்றாடும் குரலில் சிந்துவின் கையைப் பிடித்து உலுக்கினான். சிந்து மகனைத் துடித்துப் போய்ப் பார்த்தார்.
“ம்மா… ஏன் மா அமைதியா இருக்கீங்க? பதில் சொல்லுங்க மா… உங்களுக்கு அவர் முக்கியமா? இல்லை நான் முக்கியமா? அவருதான் வேணும்னா, இங்கே இருங்க. ஆனால் உங்கப் புள்ளை உங்களுக்கு இல்ல! நான் முக்கியமான என்னை நம்பி என் கூட வாங்க!” என்றவனின் வார்த்தைகளில் சொக்கநாதன் அதிர்ந்து சிந்துவைப் பார்க்க, அவர் கணவர் முகத்தைப் பார்க்கவேயில்லை. அவருக்குமே இந்த போராட்டமான வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. தாய்க்குப் பயந்து பயந்து இந்த மனிதர் தன்னுடன் வாழும் இந்த வாழ்வு அவருக்கு கசந்திருந்தது. ஓய்ந்து போனார்.
இதற்கு மேலும் இது போல வார்த்தைகளைக் கேட்க மனதில் திராணியில்லை. சொக்கநாதன் ஒழுங்காய் இருந்திருந்தால், தங்கம்மாளை இத்தனை தூரம் பேசிவிட்டிருக்க மாட்டாரே. அவருடைய கோழைத்தனம்தான் தங்களை இந்த இடத்தில் நிற்க வைத்திருக்கிறது எனப் புரிய, கணவருக்குக் கொடுத்த சத்தியத்தை மீறி மகன் கைகளைப் பற்றினார் சிந்து. மனம் வலித்தது. அந்நேரம் கூட கணவனுக்காக மனதினோரம் ஈரம் கசியாமல் இல்லை. ஆனால், அழுது கொண்டே தனக்காகவென நிற்கும் மகனை தனியேவிட மனமில்லாது வெளியேற முனைந்தார். குமரன் உடல் இறுக முகம் கோபத்தில் தகிக்க, தங்கம்மாளை அனல்வீசும் பார்வைப் பார்த்தான். அவர் அதற்கெல்லாம் அசுருபவர் இல்லையே! இன்னுமே அப்படியே நின்றிருந்தார். அவர்களை வெளியே அனுப்பிய திருப்தியில் அவரது குரூர முகம் மிளிர்ந்தது.
“டேய் குமரா, நீ ஏன் வீட்டைவிட்டுப் போகணும். அப்பத்தாதான் போகணும்… அதுதான் சிந்துமாவைத் திட்டுனது! நீ போகாத அண்ணா!” ஷெண்பா அவர்கள் முன்னே மறைத்தவாறு நின்றாள். அவளுக்கு அழுதழுது முகம் சிவந்திருந்தது. நடந்தது கொஞ்சம் புரிந்தும் புரியாத நிலை. ஆனால், சிந்துவும் குமரனும் வீட்டைவிட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதை உணர்ந்து பதறிப் போனாள் சின்னவள். அவர்கள் இருவரையும் இறைஞ்சும் பார்வைப் பார்த்தாள்.
“குமரன் இல்லாத வீட்ல நானும் ஷெண்பாவும் இருக்க மாட்டோம்!” மீசை அரும்பத் தொடங்யிருந்த பதினெட்டு வயதேயான விக்ரம் வீம்பாய் உரைத்து ஷெண்பா கரத்தைப் பிடித்துக்கொண்டு குமரனோடு வெளியேற முனைந்திருந்தான். அந்த வார்த்தையில் அவர்களின் செயலில் குமரன் மொத்தமும் உடைந்திருந்தான். இந்த அகோர நேசத்தின் பிடியில் வாழ தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணம் அவனை மேலும் இறுக வைத்திருந்தது.
“குமரா, நான் சொல்றதை கேளுண்ணா. எங்களைவிட்டுப் போகாதண்ணா! நானும் விக்ரமும் உன்னையும் சிந்துமாவையும் பார்த்துக்கிறோம். நம்ம எல்லாரும் எப்பவும் போல ஒன்னாவே இருக்கலாம் குமரா!” என ஷெண்பா விழிகள் வழியும் நீருடன் தேம்பிக் கொண்டே கெஞ்ச, கெஞ்ச அவளது பிஞ்சு விரல்களைக் கனத்த இதயத்துடன் இறுகிய முகத்துடன் தட்டிவிட்டிருந்தான் குமரன்.
“நீங்க என் கூட வரக்கூடாது. அங்கேயும் வந்து என் உயிரை எடுக்கப் போறீங்களா? வராதீங்க நீங்க. உங்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. நீங்க ரெண்டு பேரும்தான் இதுக்குக் காரணம்!” மனம் வலிக்க பெருங்குரலெடுத்து குமரன் கத்திய போது ஷெண்பாவின் பிஞ்சு இதயம் ஸ்தம்பித்துப் போனது. உடல் நடுங்கிப் போனாள். அவளறிந்த குமரன் அவளிடம் கடிந்து ஒரு வார்த்தை ஒரு நொடி பேசியதாய் எங்குமே நினைவில் இல்லை.
விக்ரமும் அதிர்ந்து போனான். அவர்கள் இருவரையும் கோபமாய்ப் பார்த்த குமரன் சிந்துவுடன் விறுவிறுவென வெளியேறினான். சொக்கநாதன் கையாலாகாதத் தனத்துடன் இருவரையும் பார்த்து நிற்க, அவரது விழிகளில் திரண்ட நீர் கன்னத்தை நனைத்தன. மகன் கேட்ட கேள்வியில் மனிதர் மரித்துப் போயிருந்தார். அவன் கேட்ட அனைத்தும் அவரைக் குற்றக் குழியில் தள்ளியிருக்க, மொத்தமாய் உடைந்து போனார்.
ஷெண்பாவும் விக்ரமும் இன்னுமே குமரன் பேசிய பேச்சுகளிலிருந்து வெளிவரவில்லை. தேம்பிக் கொண்டே அவள் விக்ரமைப் பார்க்க, அவனது இமையோரம் நீர் தளும்பத் தொடங்க செல்லும் இருவரையும் வெறித்தான்.
ரோஷமாய்க் கூறி தாயை அழைத்து வந்துவிட்டாலும் பதினேழு வயதான குமரனுக்கு எதுவுமே தெரியவில்லை. எங்கு செல்வது, யாரைப் பார்ப்பது என எதுவும் அறியாத நிலைதான்.
திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போல நிராதரவாக நின்றிருந்தான்.
எங்கோ நிற்கதியில்லாது நடுவீதியில் நின்றிருந்தவன் மனம் மட்டும் இனிமே எனக்குத் தந்தை வேண்டாம் என ஜெபம் செய்து கொண்டிருந்தது. அந்நிலையில்தான் சொக்கன் மீதிருந்தக் கோபத்தில் ரங்கராஜனை சந்தித்து வேலைக் கேட்டு மனோஹரி வீட்டில் பணிபுரியத் தொடங்கியிருந்தது.
சிந்து நடந்ததை கனத்த மனதுடன் உரைத்து முடிக்க, மனோஹரி துடித்துப் போனாள். எதிரிலிருந்தப் பெண்மணி எப்படி இத்தனை வாதைகளை அனுபவித்து மீண்டு வந்திருக்கிறார் என நெஞ்சடைத்துப் போக, கட்டியவனை நினைத்து தவித்துப் போனாள்.
அப்படியொரு நிலையில் குமரன் அந்த வயதில் என்ன பெரிதாய் என்ன செய்திருக்கக் கூடும் என்ற கேள்வியில் அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று தொண்டை கவ்வியது. விழியோரம் குபுகுபுவென ஈரம் படரத் தொடங்க, “எப்படித்தை இத்தனையும் தாங்கி, இப்போ இப்படி இருக்கீங்க?” எனக் கேட்டு சிந்துவை இறுக அணைத்தாள் மனோ.
நடந்த நிகழ்வைக் கேட்டு அவள் உணர்ச்சி வயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவர், “ஷ்… மனோ, ஏன் அழுகை? இதெல்லாம் நடந்து பத்து வருஷத்துக்கு மேலாகுது மா! நீ கேட்டன்னு நான் சொன்னேன். நினைச்சு அழறதுக்கு இல்ல!” என அவளைத் தேற்றினாலும், மனோஹரியால் அத்தனை எளிதில் அதிலிருந்து மீள முடியவில்லை.
‘குமரன்… அவர் எப்படி துடித்திருப்பார்?’ என்ற எண்ணமே அவளை உடைக்கப் போதுமானதாய் இருந்தது.